தமிழக அரசியல் களம் இதுவரை சந்தித்திராத அச்சத்திலும், பீதியிலும் உறைந்து கிடக்கின்றது. அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் கூட, அதிபரின் புதிய புஹா..ஹா..ஹா...க்கு பயந்து தங்களது பல அரசியல் கூட்டங்களை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கின்றனர். ஏன் தனியாக சிறுநீர் கழிக்கச் சென்றால் எங்கே அதிபரின் தம்பிகளால் தாங்கள் சிரிப்பு மூட்டி கொலை செய்யப்பட்டு விடுவோமோ எனப் பயந்து நடுங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் சில தொடைநடுங்கி அரசியல்வாதிகள் அதிபரின் புஹா...ஹா...ஹா பேச்சின் தாக்கத்தில் இருந்து மீளாமல், உறக்கத்திலேயே சிரித்துக் கொண்டே படுக்கையில் சிறுநீர் கழித்து விடுவதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன.

seeman 330இப்படி ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் தெறிக்கவிடும் அளவிற்கு அதிபர் அப்படி என்ன சொன்னார் என்று அதிபரின் புஹா..ஹா...ஹா பேச்சைக் கேட்காதவர்கள் குழம்பிப் போகலாம். “நாம் தமிழர்கள் மீது வழக்கு போடுபவர்கள், நாம் தமிழர் போஸ்டர்களை கிழிப்பவர்களுடைய பெயர்ப் பட்டியலை நான் தயார் செய்து வைத்திருக்கின்றேன், அவர்கள் எல்லோரும் நான் ஆட்சிக்கு வருவதற்குள் இறந்து விடுங்கள். அப்படி இல்லையென்றால் கொன்று விடுவேன்” என ஸ்டாண்டப் காமெடி செய்துள்ளார். (நாம் தமிழர் கட்சி போஸ்டரை யாரும் கிழிக்கவில்லை என்பதும், அதைக் கழுதைகளும், மாடுகளும் தின்று விட்டதாக இந்தக் கட்டுரையை அடித்துக் கொண்டிருக்கும் போதுதான் அதிகாரப் பூர்வ வட்டாரத்தில் இருந்து தகவல் வந்தது ).

இதிலே நீங்கள் நுட்பமாக விளங்கிக் கொள்ள வேண்டியது என்னவென்றால் அதிபரின் பேச்சை ஆமோதித்தி அவரது தம்பிகள் கைதட்டி ஆராவரித்து அதிபரை மேலும் மேலும் உச்சஸ்தாயில் புளுக ஊக்கப்படுத்தியதுதான். அதிபர் மட்டுமே புஹா...ஹா...ஹா என்று புன்னகை சிந்தி கெக்கலிப்பவர் அல்ல, அவரது தம்பிகளும் புஹா...ஹா..ஹா வகையாறக்கள்தன். காரணம் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் துனுக்கு நகைச்சுவைகளைப் பார்த்துப் பார்த்து அலுத்துப்போன இளைஞர்கள் கூட்டம் இரண்டுமணி நேரம் சலிக்காமல் ஸ்டாண்டப் காமெடி செய்யும் அதிபரின் புதிய விசிறிகளாக தற்போது மாறி இருக்கின்றார்கள். அதிபர் எங்கே கூட்டம் போட்டாலும் குடும்பம் சகிதமாக இப்பொழுதெல்லாம் மக்கள் ஆஜராகி விடுகின்றார்கள்.

அதிபர் அண்ணன் ஸ்டாண்டப் காமெடி செய்யும் உத்தியே மிக அலாதியானது. ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை புஹா...ஹா..ஹா என்று புன்னகைக்கும் போதே அந்தக் கூட்டத்தில் இருக்கும் மனித ஜீவராசிகள் மட்டுமல்லாமல் காக்கைகள், குருவிகள், நாய்கள் ஏன் எறும்புகள் கூட புஹா..ஹா…ஹா என்று கெக்கலிப்பு இடுகின்றன. அனைத்து உயிர்களுக்குமான அரசியல் என்றால் சும்மாவா?

சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக படத்தில் பல லாஜிக் மீறல்கள் வைத்திருந்தாலும், பொழுதுபோக்குக்காக படம் பார்க்கச் செல்லுபவர்கள் யாரும் அதை விமர்சன ரீதியாக அணுகாமல் மனம்விட்டு, வாய்விட்டு சிரித்தால் போதும் என்று ஒரு நல்ல நகைச்சுவை படத்தை பார்க்கச் செல்வார்கள். அதிபர் அண்ணனின் பேச்சுக்கள் கூட அப்படித்தான்... பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் கூட ரசிக்கப்படுகின்றது. அண்ணன் பொட்டு அம்மன் வீட்டில் இட்டிலி சாப்பிட்டதாக சொன்னாலும், ஆமைக்கறியை தின்றுவிட்டு அரிசி கப்பலை சுட்டு சுட்டு விளையாண்டதாக சொன்னாலும், ஈழப் போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என அரிச்சுவடியை பிரபாகரனுக்கு தான்தான் கற்றுத் தந்ததாக கதைத்தாலும், ஏன் நோட்டாவைவிட கீழே ஓட்டு வாங்கிக் கொண்டு “கருணாநிதி முதல்வர் பதவியில் இருந்து உயிர் விடக் கூடாது, அதற்காக கடுமையாக உழைத்தேன், தேர்தல் பணிகளை செய்தேன், கடைசியில் நான் அதில் வெற்றியும் பெற்றேன்” என்று சொன்னாலும், அதை எல்லாம் அவரின் தம்பிப் பிள்ளைகள் உட்பட யாருமே ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம் அண்ணன் இதை எல்லாம் புஹா..ஹா...ஹா..வுக்காக சொல்கின்றார் என்று அனைவருக்கும் தெரியும்.

கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களைப் போன்றோ, இல்லை பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கத் தோழர்களைப் போலவோ மைக்கைப் பிடித்து மணிக்கணக்கில் மிக சீரியசாகப் பேசினால் கேட்பதற்கு அதிபரை நம்பி உட்கார்ந்திருக்கும் கூட்டம் ஒன்றும் சித்தாந்த ரீதியாக உந்தப்பட்டு கோட்பாட்டு அறிவை வளர்த்துக் கொள்ள உட்கார்ந்திருக்கும் கூட்டமல்ல. அது எந்தவித அரசியல் அறிவுமற்ற லும்பன்களாலும், உண்மை எது, பொய் எது என்று பிரித்தறியும் திறனற்றவர்களாலும், அண்ணனைப் போலவே வாயில் மட்டுமே வடை சுடும் புளுகர்களாலும் நிறைந்தது. அதனால்தான் அண்ணன் ஒவ்வொரு முறையும் புதுப் புது அயிட்டங்களாக வீசிக் கொண்டே இருக்கின்றார். ‘கேட்பவன் கேனப்பயலாக இருந்தால் எருமை ஏரோப்பிளேன் ஓட்டுது' என்ற பழமொழியை நம்ம ஊரில் சொல்வார்கள். நிச்சயமாக சீமானின் கூட்டத்தில் உட்கார்ந்திருக்கும் அனைவருமே அத்தகையவர்கள் என்பதும், அவர்கள் சீமான் வீசும் புதுப் புது அயிட்டங்களை எந்தவித கூச்சமும் இல்லாமல் வாங்கிக் கொள்கின்றார்கள் என்பதும்தான் உண்மை

ஆனாலும் என்றாவது அண்ணன் அதிபராவார், தமக்கு ஏதாவது பதவி கிடைக்கும் என்று நினைத்தவர்கள் எல்லாம் அண்ணனின் புஹா..ஹா...ஹா பேச்சைக் கேட்டு கொஞ்சம் கலக்கத்தில்தான் தற்போது இருப்பார்கள். எந்தத் தொகுதியில் போட்டி இட்டாலும் இரண்டாயிரம், மூவாயிரம் ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்து, அண்ணனை நம்பி நின்றவர்கள் கட்டுத் தொகையை இழப்பதால், வரும் காலங்களில் அண்ணன் யாரையாவது தேர்தலில் போட்டியிடச் சொன்னால் “உனக்கென்னப்பா நீ புஹா..ஹா..ஹா ன்னு சிரிச்சுட்டு போய்டுவ, நான் தானே நடுத்தெருவில் நிற்க வேண்டும்” என நிச்சயம் பின்வாங்கி விடுவார்கள். ஏற்கெனவே அண்ணனை நம்பி பொண்டாட்டியின் நகைகளை எல்லாம் அடமானம் வைத்து, நகைகளை மட்டுமல்லாமல் பொண்டாட்டியே சாகக் கொடுத்த கதை எல்லாம் உள்ளதால் அவ்வளவு எளிதில் யாரும் அண்ணனை நம்பி அரசியல் களமாட மாட்டார்கள் என்றே நம்புகின்றோம். இருந்தாலும் நாட்டில் 'அறிவாளி'களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் புஹா..ஹா..ஹா-க்கு யாரும் மயங்க மாட்டர்கள் என்றும் நம்மால் உறுதியாகச் சொல்லிவிட முடியாது.

அண்ணன் தற்போது அரசியல் களத்தில் முழு நேர ஸ்டாண்டப் கமெடியனாக மாறியுள்ளதால் இனி 24X7 நகைச்சுவைக் காட்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் இனி அதிபரின் நகைச்சுவை சரவெடிகளையும் கொளுத்திப் போடலாம். அண்ணன் சிரித்தார், அவரைத் தொடர்ந்து அவரது தம்பிப் பிள்ளைகள் சிரித்தார்கள், இனிமேல் ஊரே சிரிக்கட்டும் புஹா..ஹா..ஹா, புஹா...ஹா..ஹா என்று.

- செ.கார்கி

Pin It