பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது பெரிய கேள்விக்குறி. ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்திற்கு முந்தைய தினத்தன்று பாரத் ரத்னா விருதும் மற்ற விருதுகளும் கொண்ட கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. பெருமை மிக்க பாரத ரத்னா விருதிற்கு பல துறைகளிலிருந்து சாதனை புரிந்த நபர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வருடம் எத்தனையோ சாதனையாளர்களின் பெயர்கள் அடிப்பட்டாலும் முக்கியமாக பா.ஜ.கவின் தலைவர் அத்வானி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை தேர்வு செய்து அனுப்பியுள்ளார். இது போதாதென்று இடதுசாரி கட்சியின் மூத்த தலைவரான ஜோதிபாசுவின் பெயரும் அனுப்பப்பட்டுள்ளது.

அரசாங்கமும் இதற்காக நியமிக்கப்பட்ட குழுவும் இவ்விரு மூத்த தலைவர்களின் ஆட்சியில் நடைபெற்ற நல்லவைகளும் கெட்டவைகளும் கலந்து பேசி ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவதென்பது மாபெரும் மலையை குடைந்தெடுப்பது போல உள்ளது. அத்வானி சாதுர்யமாக வாஜ்பாயின் பெயரை தேர்வு செய்து முன்வைத்துள்ளார். பாரத ரத்னா விருது வாஜ்பாயிக்கு வழங்க மறுத்துவிட்டால் இப்போதைய பிரதமரின் நிலைமை பொது இடங்களிலும் பாராளுமன்றத்திலும் வீண் சர்ச்சைக்கு இடமாகி விடுகிறது.

அத்வானி இதனால் இரண்டு பலன்களை பெறுகிறhர். ஒன்று அத்வானி வாஜ்பாயின் பெயரை முன்வைத்ததால், இருவருக்குமிடையே நிலவி வரும் விரிசலான உறவு சுமூகமான வழியில் பலப்படுத்தப்படுகிறது. மற்றொன்று அண்மையில் நடக்கப்போகும் பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சியின் நிலையையும் பலப்படுத்த சாதகமாக அமைந்துள்ளது. இது அத்வாணி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களுக்கு குறி வைத்துள்ளார் என்று சொல்லலாம்.

வாஜ்பாயிக்கு பாரத் ரத்னா விருது வழங்கினால் அத்வானி தன்னால்தான் இந்த விருது அவருக்கு கிடைத்தது என்று மார்தட்டிக் கொள்ளும் கண்காட்சியை விரைவில் பார்க்கலாம். மறுபக்கம் வாஜ்பாயிக்கு வழங்கப்படவில்லையென்றhல் அத்வானி இதனையே செய்தித்தாளில் முக்கிய செய்தியாக கொட்டை எழுத்தில் போடவும் தயங்கமாட்டார். இப்போது அரசின் சுழ்நிலை முள்ளில் மாட்டிய சேலையைப் போல தோன்றுகிறது.

விருதிற்கு வாஜ்பாயயின் பெயரை முன்வைத்த்தால் அவருடைய தகுதியை பற்றி தேவையில்லாத வாதம் விவாதம் பேச்சிற்கு பொது இடங்களில் பேசப்படுகின்றன. சும்மா இருக்கும் சங்கை ஆண்டி ஊதிக் கெடுத்தானாம் என்ற போக்கில் அத்வானி செய்த காரியம் தெரிய வருகிறது. பாரத ரத்னா விருது வாஜ்பாயிக்கு வழங்கப்பட்டால் இடது சாரி கட்சியின் அபிப்ராயத்தை எதிர்ப்பது போல தோன்றுகிறது. அது போல ஜோதிபாஸிற்கு வழங்கப்பட்டால் பாராளுமன்ற மூத்த தலைவரான வாஜ்பாயை புறக்கணித்து விட்டதாக தோன்றுகிறது.

வாஜ்பாயிக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறதோ இல்லையோ அத்வானிக்கு பாகிஸ்தானின் சிறந்த விருது நிஷனே பாகிஸ்தான் கொடுக்கப்பட வேண்டும். சமீபத்தில் அத்வானி மறைந்த பாகிஸ்தான் தலைவரான முகமது அலி ஜின்னாவை பற்றி புகழ்ந்து பேசினார். அத்வானியின் இந்தப் போக்கு சங்பரிவாரத்தை ஆச்சர்யத்துக்குள்ளாகியது. ஆனால் அத்வானி மிகவும் சூச்சுமமாக சங் பரிவாரத்தின் சந்தேகங்களை தீர்த்து வைத்தது மட்டுமில்லாமல் அவர் கட்சியின் சார்பாக அடுத்த பிரதமர் வேட்பாளர் பதவிக்கு சங் பரிவாத்தின் ஒப்புதலையும் பெற்றுக் கொண்டார். பா.ஜ. கட்சியை பலப்படுத்த முஸ்லீம் ஓட்டுக்களையும் சேகரித்துக் கொண்டார். இதுவல்லவா அத்வானி கையாண்ட அரசியல் தந்திரம்.

வாஜ்பாய்யிக்கு வழங்காமல் தகுதியில்லாதவர்க்கு வழங்கப்பட்டால் இதுவே பாரத்ரத்னாவின் மதிப்பை குறைத்து விடுகிறது. மூத்த பாராளுமன்ற உறுப்பினரான வாஜ்பாய்ய் சிறந்த கவிஞர், மிதமான போக்கை கொண்டவர், விவேகமான மனிதர் என்று சொல்லலாம்.

ஆனால் அவர் ஆட்சி காலத்தில் கார்கில் போர் நடைபெற்றது. கந்தகார் விமானக் கடத்தல், ஆக்ரா பேச்சுவார்தை தோல்வி, பாராளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் குண்டு வீசுதல் போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. அப்போது அத்வானி உள்துறை அமைச்சராக இருந்தார்.

நல்லதையும் கெட்டதையும் மாறிமாறி அலசிப் பார்த்து முடிவெடுப்பது மிகவும் கஷ்டமான காரியம். மேலும் தேவையில்லாத சர்ச்சைக்கு வாஜ்பாய்யின் பெயர் அடிபடுவது அவ்வளவு நன்றhகயில்லை. பாரத்ரத்னா கொடுப்பதற்கு முன்பே அரசாங்கம் இவ்வளவ சர்ச்சைகள், விவாதங்கள் என்று சந்திக்க நேரிடுகிறது. முள்ளின் மேல் விழுந்த ஆடையை மெல்லமாக எடுப்பதற்கு அரசாங்கம் ஏதாவது யுத்தியை கையாளுவது இத்தருணத்தில் மிகவும் நல்லது என்று சொல்லலாம்.

- சந்தியா கிரிதர், புது தில்லி

Pin It