"Asuran maranam" என்ற தகவல் குறுஞ் செய்தியை விழிப்புணர்வு காமராஜ் அனுப்பிய போது அதை எப்படி எதிர் கொள்வதென்று எனக்குத் தெரியவில்லை.இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு நான் அசுரனுக்கு தொலைபேசிய போது இன்னும் பத்து நிமிடத்தில் நானே அழைக்கிறேன் என்றார்.இப்போதான் டயாலிஸிஸ் முடித்து வந்தேன் குளித்து விட்டு வருகிறேன் என்றார். வந்ததும் அழைத்தார். திருவனந்த புறத்தில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அசுரனிடம் அப்போது பேசிய போது அவரது குரல் உடைந்திருந்தது அவர் சோர்ந்திருப்பதாக தெரிந்தது. ஆமாம் சோர்ந்து போவதும் நியாயம் தானே கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக இரண்டு சிறுநீரகங்களும் முற்றிலுமாக செயலிழந்து சித்த வைத்திய மருத்துவமனையில் நிரந்தரமாக தங்கியிருக்கிற வேதனையை அனுபவித்தாம் மனதாலும் உடலாலும் சோர்ந்து போகாமல் இருக்க முடியுமா?
ஆனால் கடைசியாகப் பேசிய மூன்று நாட்களுக்கு முன்பு நான் பேசிய போது அசுரனிடம் பழைய கலகலப்பு தெரிந்தது காரணம். கோவையிலிருந்து டாக்டர் ரமேஷ் திருவனந்தபுறத்திற்கு வந்தார் என்னை பார்த்தார் பின்னர் மருத்துவர்களை பார்த்தார். என்னை அதிக நாள் மருத்துவமனையில் வைத்திருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் கூறினார். இன்னும் சில நாட்களில் உடலில் உள்ள உப்புச் சத்துக்களை மேலும் குறைத்துக் கொண்டு நான் வீட்டுக்கு வந்து விடுவேன். கொஞ்சம் எழுத வேண்டிய வேலைகள் இருக்கிறது என்றார். நான் அவரிடம் சில விஷயங்களைச் சொன்னேன். நான் சொன்னைவைகளை அவர் எப்படி எடுத்துக் கொண்டார் எனத் தெரியவில்லை. காரணம் நான் என் தாய் இருபதாண்டுகாலம் படுக்கையில் இருந்த போதும் அம்மாவுக்கும் நான் அதைதான் சொன்னேன்.
அவர் மரித்துப் போக போகிறார் எனத் தெரிந்ததும். என் அம்மாவுக்கு நல்ல மீன் குழம்பு சமைத்துக் கொடுத்தேன். ஆனால் மருத்துவர் அபபடி கொடுக்கக் கூடாது என்றார். எனது தாயின் மரணத்தில் எனக்கு இன்னும் உறுத்தலாக இருக்கிற விஷயம் மரணிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவரின் தலை முடியை மொத்தமாக மழித்து விட்டார்கள். நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் அதை நிச்சயமாக அனுமதித்திருக்க மாட்டேன். ஏனென்றால் என்றைக்கு அவரது தலை முடியை சுத்தமாக மொட்டை அடித்தார்களோ அப்போதே தான் மரணத்தின் வாசலில் வந்து நிற்பதாக அவர் நினைதிருக்கக் கூடும். அம்மாவுக்கு கொடுத்த சில டானிக்குகள் அவரது படுக்கையில் கொட்டியதை நான் கவனிக்கவில்லை.
தற்செயலாக புரண்டு படுத்த போது மொத்தமாக எரும்புகள் அம்மாவின் முதுகை பற்றியிருந்தது. அம்மாவுக்கு வலிக்கவில்லை. என்னை அறியாமலேயே எனது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அம்மா மரித்துக் கொண்டிருக்கிறார்.
என் அம்மா மரணத்தின் வாசலில் நின்ற போது அவருக்கு நான் என்ன சொன்னேனோ அதைத்தான் எடிசன் அண்ணனுக்கும் சொன்னேன். எடிசனுக்கு நான் என்ன சொன்னேனோ அதைத்தான் அசுரனுக்கும் சொன்னேன். ஏனென்றால் அதே வாசலில் அடியெடுத்து வைக்கும் நாள் எனக்கும் வெகு தொலைவில் இல்லை.
நண்பர்களே அசுரன் ஒரு மனித உரிமைப் போராளி அரசு அதிகார வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் அவர் எந்த பணக்கார முதலைகளோடும் சமரசம் செய்து கொண்டதில்லை.
இடைவிடாது உடல் நலம் பாதிக்கப்பட்ட பின்பும் தீராது அவருடைய போராட்டம் தொடர்ந்தது. வீதிக்கு வர முடியாத நாட்களில் அசுரன் எழுதித் தீர்த்தார். கூடன் குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் முதலில் கூடன் குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்த பலரும் பின்னர் அணு மின் நிலையத்துக்கு மண் அள்ளிக் கொடுக்கும் மாமா வேலை பார்த்து காசு சம்பாதிக்கும் கூட்டமாகிப் போனார்கள் என சிலரை சொன்னார். எந்த வடிவிலும் அணு உலைக்கு எதிராகவே அவர் இருந்தார். அணு சக்திக்கான மாற்று வழி குறித்த தீர்க்மான பார்வையும் அசுரனிடம் இருந்தது. சமூக நோய்களை தீர்த்து விட்டால் நக்சலைட்டுகளை ஒழித்துவிடலாம் என்ற வியாபாரிகளின் கருத்துக்கு எதிராக "சோற்றால் அடித்தால் விழுகிற பிண்டங்கள் அல்ல நக்சல் பாரிகள்"என்று சொன்னார். பணக்காரனுக்கு எதிராக சுரண்டல் சிஸ்டத்துக்கு எதிராக ஈழத் தமிழரின் விடுதலைப் போருக்கு ஆதரவாக என அசுரனை எனக்கு பிடிக்க பல காரணங்கள் இருந்தது.அசுரன் கோவை மருத்துவர் ரமேஷைப் பற்றி என்னிடம் அடிக்கடி கூறுவார் ரமேஷின் நட்பு அவரை உற்சாகப்படுத்தியே வந்திருக்கிறது. அசுரன் அவரது நண்பர்களுக்கு நம்பிக்கையை வழங்கியே வந்திருக்கிறார்.
தந்தை பெரியார் மனித வாழ்வு குறித்து இவ்விதம் சொல்வார். "மனிதப் பிறவி மிருகங்களை விட இழிவானது. பிறப்பிற்கு எப்படி எவ்வித காரணங்களும் இல்லையோ அது போலவே மரணிப்பதற்கும் காரணங்கள் இல்லை" என்பார். ஆமாம் அசுரனின் மரணத்திற்கு காரணங்கள் இல்லை.மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு என்ன சாட்சி என்றால் அதிலும் ஏராளமான தத்துவக் கோளாருகள் இருக்கிறது. ஆனாலும் நான் அசுரனை நேசிக்கிறேன் ஏன் தெரியுமா?அவர் ஒரு சமூக மனித உரிமை போராளி. அவர் எனக்காக பேசினார் என ஜனங்களுக்காக பேசினார். ஏராளமான பணிகளை நமக்காக அவர் விட்டுச் சென்றுள்ளார் அதை நாம் அசுரனின் பெயரால் முன்னெடுக்க வேண்டும்.
மரணம் நித்திய இளைப்பாறுதல் என திருவிவிலியம் சொல்கிறது. அசுரனுக்கு மரணம் இளைப்பாறுதல் இல்லை.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அசுரன் என்ற போராளியின் மரணம்
- விவரங்கள்
- டி.அருள் எழிலன்
- பிரிவு: கட்டுரைகள்