நண்பர் ஒருவர் "வேலை ரொம்ப கடுமையா இருக்கு... அதனால துபை'ய விட்டுட்டு ஊருக்கு வந்துடுறேன்... ஏதாவது செஞ்சு பொழச்சுக்கலாம்..." என்று மனைவியிடம் சொல்லி இருக்கிறார்.

அதற்கு மனைவி "நீங்க ஊருக்கு வந்துட்டா எனக்கு சாடின் பிஷ் (sardine fish) டின்'லாம் யாரு வாங்கித் தருவா..." என்று கேட்டிருக்கிறார்.

பாவம் மனுஷன் நொந்துவிட்டார்.

shopping mall in indiaஇதை அவர் சொன்ன போது "தனது தேவைகளை ஒரு மனிதன் எப்படி முடிவு செய்து கொள்கிறான் என்பதில் தான் அவனது வாழ்க்கை துவங்குகிறது" என்ற எழுத்தாளர் எஸ்.ரா' வின் வரிகள் தான் நினைவுக்கு வந்தது. எவ்வளவு உண்மையான வரி!

சந்தைக்குப் போய் பொருள் வாங்கிய காலமெல்லாம் மலையேறி, உலக சந்தையே உள்ளங்கைக்குள் வந்துவிட்ட இந்த காலத்தில், அனாவசியத்திற்கும் அத்தியாவசியத்துக்கும் இடையில் உள்ள கோடு மெல்ல மெல்ல அழிந்து கொண்டே வருகிறது.

தேவைகளை உருவாக்கிக் கொள்வது மிக எளிதானது. ஆனால் அதைக் கைவிடுவது மிகக் கடினம். இதை விளங்காமல் தான், நுகர்வு போதையில் ஷாப்பிங் மாலே சரணாகதி என்று கிடக்கின்றோம்.

"Save 20%" என்ற விளம்பர வார்த்தையை நம்பி, கடனட்டையில் பொருள் வாங்கிவிட்டு, காசை சேமித்து விட்டதாக பெருமைப் பட்டுக் கொண்டு கடனாளியாக நிற்கிறோம்.

இதைப் பற்றி ஓர் அரேபியக் கதை கூட உண்டு.

கெய்ரோ நகர சந்தையில் ஒரு முதியவர் பழங்களை விற்றுக் கொண்டிருந்தார். ஒரு தீனாருக்கு 5 பழங்கள் என கூவிக் கூவி விற்றும் அவரிடம் யாரும் பழம் வாங்க வரவே இல்லை.

ஆனால் அவர் அருகிலேயே இன்னொரு இளைஞன் ஒரு தீனாருக்கு ஆறு பழங்கள் என விற்றான். சில நிமிடங்களிலேயே அவன் பழக்கூடை காலியானது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் முதியவரிடம் வந்து "உங்களுக்கு வியாபார சூட்சமம் தெரியவே இல்லை. அதோ அந்த இளைஞனிடம் கற்றுக் கொள்ளுங்கள்" என்று அறிவுரை கூறினார்.

இதனால் கடுப்பான அந்த முதியவர் "அந்த இளைஞன் என் மகன் தான். நான் தான் அவனை அப்படி ஒரு தீனாருக்கு ஆறு பழங்களை விற்கும்படி கூறினேன். எப்போதும் போட்டி இருந்தால்தான் விற்பனை சூடுபிடிக்கும். யாரோ ஒருவன் நம்மோடு போட்டி போடுவதற்கு பதில் நாமே பொய்யாக ஒரு போட்டியை உருவாக்கி விடலாம் என நாடகம் நடத்தினேன்" என கெத்தாக பதில் தந்தார்.

இப்போதும் சந்தைகள் இப்படித்தான் செயல்படுகிறது. ஒரே நிறுவனம் ஒரே பொருளை வெவ்வேறு பெயர்களில் தயார் செய்து விலையேற்றி நம் தலையில் கட்டி விடுகின்றது. நாமும் சலுகை விலையில் பொருள் வாங்கி விட்டோம் என்று சந்தோஷப்படுகிறோம். ஆனால் உண்மையில் ஏமாற்றப்படுகிறோம்.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் மட்டுமல்லாது மிகப்பெரும் நாடுகள் கூட சந்தை சாதுரியத்தில் ஏமாந்து போகின்றன.

குறிப்பாக இந்தியா போன்ற இரண்டாம் தர நாடுகளை "வளர்ச்சி" என்ற பெயரில் மீளமுடியாத கடனில் நாட்டை ஆழ்த்திவிட்டு, நாட்டின் வளங்களை மொத்தமாக கொள்ளையடிக்கின்றன இந்த சந்தை திமிங்கிலங்கள்.

இப்படிப்பட்ட சந்தை திமிங்கிலங்களின் வாயில் சிக்காமல் இருப்பதற்கான ஒரே வழி சரியான திட்டமிடல் மட்டும்தான்.

"ஊசி வாங்கப் போய் உலகத்தையே வாங்கி வந்தான்" என்ற பழமொழி போல் ஆகி விடாமல், ஷாப்பிங் செய்யச் செல்லும் முன் ஒரு பட்டியலை தயார் செய்து கொள்வது சிறந்தது.

எதை வாங்குவதாக இருந்தாலும் அதனால் நிகழப்போகும் ஆக்கப்பூர்வமான மாற்றம் என்ன..? உண்மையில் இது நமக்குத் தேவைதானா..? என்பதை மனதில் வைத்து அந்தப் பொருளை உங்கள் பட்டியலில் சேருங்கள். அப்படி உருவாக்கப்பட்ட சரியான பட்டியல் மகிழ்ச்சியான உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கான தரமான பாதையாக அமையும்.

- சே.ச‌.அனீஃப் முஸ்லிமின்

Pin It