கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

1947 அதிகார மாற்றத்திற்குப்பின் அமைந்த நேருவின் காங்கிரசு அரசாங்கம் முதலில் அமெரிக்க, சோவியத் நாடுகளின் முரண்பாடுகளை பயன்படுத்தியது. பின்னர் பெருமுதலாளிகளின் கோரிக்கையாக அரசே உள்கட்டுமானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கேற்ப பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியது. அரசு நிதி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இப்போக்கு இந்திராகாந்தி ஆட்சியிலும் தொடர்ந்தது.

பெருமுதலாளிகள் பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்து அரசு நிதி நிறுவனங்களைச் சார்ந்து தங்களை பலமாக வளர்த்துக் கொண்டனர். வளர்ந்த பிறகு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கோரினர்.

இதனால் இராஜீவ்காந்தி ஆட்சியில் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் முன்வைக்கப்பட்டன. நரசிம்மராவ் காங்கிரசு ஆட்சியில் உலக வணிக அமைப்புடன் (WTO) ஒப்பந்தம் இடப்பட்டு உலகமயமாக்கம் என்று விரிவுபடுத்தப்பட்டது.

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் மிகத்தீவிரமாக கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் மிகவேகமாக 10% முதல் 40% வரை தனியார் முதலீடுகள் அனுமதிக்கப்படுகின்றன. இந்த வேகத்தின் நோக்கம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதுதான்.

முதலில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில்தான் தனியார் மூலதனம் அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இதற்கு மாறாக லாபமாக இயங்கும் துறைகளில்தான் தனியார் மூலதனங்கள் குவிகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரிவழங்கி சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. இவை எந்த சட்டங்களும் செல்லாத காலனிய பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

இதனால் வரிஏய்ப்பு செய்தது மட்டுமல்லாமல் கொள்ளை இலாபம் சம்பாதித்துவிட்டு ‘நோக்கியா’ போன்ற கம்பெனிகள் மிகச்சாதாரணமாக மூடிவிட்டுச் சென்றுவிட்டன. தொழிலாளர் சட்டங்கள் இங்கு செல்லாது.

தொழிற்சங்கங்களுக்கு அனுமதி இல்லை. தொழிலாளர்கள் பெரும்பாலும் ஒப்பந்த தொழிலாளர்களாக அமைப்பாக்கப்படாத தொழிலாளர்களாகவே உள்ளனர். எந்த நிமிடமும் வீதியில் தூக்கியெறியக்கூடிய உத்தரவாதமற்ற நிலையே தொழிலாளர்கள் நிலையாகும்.

பெண்கள் நவீன உற்பத்தியில் பெருமளவு ஈடுபடுத்தப்படுகின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டுமல்லாமல் மலிவு உழைப்பிற்காக அனைத்துத் தொழில்களிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். எந்தவித உரிமையுமற்று கடுமையாக ஆடு மாடுகள் போல் சுரண்டப்படுகின்றனர்.

நரேந்திர மோடி அரசு நிலப்பறிப்பு மசோதாக்கள் மூலம் விவசாயிகளை நிரந்தரமாக நிலங்களைவிட்டு வெளியேற்றுகிறது. 2013 சட்டத்தில் விவசாயிகளின் 70% பேரின் கருத்து கேட்பு என்றிருந்த வரியை நீக்கி விவசாயிகளின் ஒப்புதல் தேவை இல்லை என்று ஒரு பாசிச சட்டத்தைக் கொண்டு வருகிறது.

ஒருபக்கம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்குகிறது. மறுபக்கம் விவசாயத்திற்கு அனைத்து மானியங்களையும் இரத்து செய்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காட்டு வளங்கள் முழுமையாக தாரைவார்க்கப்படுகின்றன. பழங்குடிகள் வனங்களை விட்டு விரட்டப்படுகின்றனர்.

கடல் வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் இடப்பட்டு மீனவர்களை கடலில் இருந்து வெளியேற்றுகின்றனர்.

கல்வியும் சுகாதாரமும் வணிகமயமானதன் விளைவால் உழைக்கும் மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியும் சுகாதாரமும் எட்டாக்கனியாகி விட்டன.

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் கடந்த முப்பதாண்டுகளில் அனைத்து தளங்களிலும் பரவி விரவி இருக்கிறது. இதுவே இன்று அடிப்படைச் சிக்கலாக முன்வந்துள்ளது.

எனவே இச்சிக்கலை தீர்ப்பது முக்கியமாகிறது. தனியார் மயம், தாராளமயம், உலக மயத்திற்கெதிராக தமிழ்த்தேசிய பொருளாதாரம் கட்டியமைக்கப்படவேண்டும். இது கூட்டுறவு, பொதுத்துறை கூட்டுப் பண்ணைகள், தமிழ்த்தேசிய சந்தையை அடிப்படையாகக் கொண்ட தனியார் மூலதனத்தையும் கொண்டிருக்கும். இதுவே மாற்று பொருளாதாரக் கொள்கையாக விளங்கும்.

- துரை.சிங்கவேல்