உலகம் முழுவதும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற போக்கு பெருமளவில் அதிகரித்து இருக்கின்றது. ஆளும் வர்க்க கருத்தியலை எதிர்த்து குரல் எழுப்புபவர்களின் குரல்வளை நசுக்கப்படுகின்றது. உலகை இன்று பெருமளவில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அசமத்துவப் போக்கும், முதலாளித்துவ கட்டமைப்பு நெருக்கடியும் பல நாடுகளின் அரசுகளை அரைப் பாசிசம் என்ற நிலையில் இருந்து முழுப் பாசிசம் என்ற நிலைக்குத் தள்ளியிருக்கின்றது. பெருமுதலாளிகளைக் காப்பதற்காக மக்கள் நலத்திட்டங்களை முற்றிலும் புறக்கணிக்கும் அரசுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும், ஆப்ரிக்க நாடுகளிலும், வளைகுடா நாடுகளிலும் பெரும் மக்கள் திரள் போராட்டங்கள் அவ்வப்போது வெடித்து கிளர்ந்தெழுந்து கொண்டு இருக்கின்றன. நிதி மூலதனத்தின் சேவகர்கள் இதைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
மக்கள் போராட்டங்களை ஆயுத பலத்தின் மூலம் ஒடுக்குவதைக் காட்டிலும் மக்களிடம் ஆளும்வர்க்கத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்பும் அறிவுஜீவிகளை வேட்டையாடுவது மிக எளிதானதாக ஆளும்வர்க்கத்துக்கு இருக்கின்றது. துப்பாக்கிகளை அழித்துவிட்டால் தோட்டாக்கள் இயற்கையாகவே மெளனித்துவிடும் என அவை நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றன. இந்த அடிப்படையில் இருந்துதான் உலகம் முழுவதும் பத்திரிகை துறையைச் சேர்ந்த அறிவுஜீவிகள் பெருமளவில் கொல்லப்படுகின்றார்கள்.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அப்படித்தான் சவுதி அரசால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். அவருக்கு வயது 58. அல்-வடான் நாளிதழின் முன்னாள் ஆசிரியராக இருந்த இவர், சில சவுதி தொலைக்காட்சிகளிலும் பணியாற்றி உள்ளார். முதலில் சவுதி அரச குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட்ட ஜமால் சவுதி, இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அவருக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து எழுதி வந்திருக்கின்றார். இதனால் அவருக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வரவே 2017 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று குடியேறினார். அங்கு வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் தொடர்ச்சியாக சவுதி அரசையும், முகமது பின் சல்மானையும் அம்பலப்படுத்தி கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். இதனால் ஜமாலுக்கும் சவுதிக்குமான முரண்பாடுகள் கூர்மையடைந்து வந்திருக்கின்றன.
ஜமால் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஹெயிஸ் செங்குஸ் என்ற பெண்ணை காதலித்து வந்திருக்கின்றார். ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ஜமால், ஹெயிஸ் செங்குஸை திருமணம் செய்ய துருக்கி சட்டப்படி சில ஆவணங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. அதை வாங்குவதற்கு துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்துக்கு செப்டம்பர் 28 ஆம் தேதி சென்றிருக்கின்றார். ஆனால் அன்று அவருக்கு ஆவணங்களை கொடுக்காமல் அக்டோபர் 2 தேதி வரச்சொல்லி இருக்கின்றார்கள். இந்த இடைப்பட்ட நாளில் தான் ஜமாலை கொலை செய்வதற்கான திட்டம் சவுதி அரசால் திட்டமிடப்பட்டிருக்கின்றது. இதன்படி தூதரகத்துக்கு அக்டோபர் 2 தேதி மதியம் 1 மணியளவில் வந்த ஜமாலிடம் இருந்து அவரது கைப்பேசியை வாங்கிக் கொண்டு உள்ளே அனுமதித்து இருக்கின்றார்கள். ஆனால் உள்ளே சென்ற ஜமால் திரும்ப வரவே இல்லை. ஜமாலை சவுதி அரசு திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டதாக துருக்கி, அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. ஆனால் இதை சவுதி மறுத்து வந்தது. துருக்கியைச் சேர்ந்த ஊடகங்கள் ஜமால் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கான ஆடியோவை வெளியிட்டு, சவுதி அரசின் பாசிச கொலை முகத்தை அம்பலப்படுத்திய பின்னால், கொலை நடந்து 18 நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 20 ஆம் தேதி சவுதி அரசு ஜமால் கொலை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டு இருக்கின்றது.
ஜமாலை கொலை செய்வதற்காக சவுதி அரசே தன்னுடைய ஏஜென்டுகளை அனுப்பி இருக்கின்றது. தூதரகத்திற்கு உள்ளேயே அவரை கொடூரமாகக் கொன்ற சவுதி ஏஜென்டுகள் அவரின் கை விரல்களை துண்டித்ததோடு, அவரின் தலையையும் வெட்டியுள்ளனர். ஜமாலின் கருத்துக்கள் எந்த அளவிற்கு சவுதி அரசை ஆட்டிப் படைத்திருந்தால் இப்படி கொடூரமாக அவரைக் கொன்றிருப்பார்கள்!? ஜனநாயகம் பேசக்கூடிய நாடுகள், சமூக ஜனநாயகம் பேசக்கூடிய நாடுகள், சரியத் சட்டத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள் என அனைத்துமே தனக்கு எதிராக கருத்துப் பிரச்சாரம் செய்பவர்களை இப்படித்தான் கொன்று குவிக்கின்றது. ஜமாலின் கொலைக்கு சவுதியை முதலில் விமர்சித்த டிரம்ப் அரசாங்கம் இப்போது கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சவுதி அரசிடம் இருந்து 700 கோடி ரூபாயை சிரியாவில் தான் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்காக பெற்றிருக்கின்றது. இதுதான் உலக நாடுகளுக்கு அமெரிக்கா எப்போதுமே போதித்து வரும் ஜனநாயகம். வளைகுடா நாடுகளில் அமெரிக்காவுக்கு நல்ல அடியாளாக இருக்கும் சவுதியை ஒருபோதும் அமெரிக்காவால் பகைத்துக் கொள்ள முடியாது. மனித உரிமை மீறல் என்ற சொல்லுக்கெல்லாம் என்ன அர்த்தம் என்று டிரம்புக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அமெரிக்க அதிகார வர்க்கத்துக்குமே தெரியாது.
உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் வேட்டையாடப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. 2016 ஆம் ஆண்டு மட்டும் 122 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இவர்களின் 93 பேர் குறிவைத்து கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதே போல 2017 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 112 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 32 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவைப் பொறுத்தவரை 2016 ஆம் ஆண்டு ஐந்து பேரும், 2017 ஆம் ஆண்டு ஐந்து பேரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவைச் சார்ந்த சர்வதேச பத்திரிகை நிறுவனம் (INTERNATION PRESS INSTITUTE), உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு, 'டெத் வாட்ச்' என்ற இறப்புப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றது. அதில் ஒவ்வொரு ஆண்டும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை வெளியிடப்படும். கடந்த ஆண்டின் புள்ளி விவரங்களின்படி மோதல் நடைபெறும் இடங்களில் ஏற்படும் இறப்புகளைவிட, ஊழல் தொடர்பான விசயங்களை வெளியிடும் பணியில் ஈடுபடும்போதே அதிக மரணங்கள் ஏற்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையின்படி மாதந்தோறும் சராசரியாக எட்டு மரணங்கள் ஏற்படுகின்றன. ஐ.பி.ஐயின் அறிக்கையின்படி லத்தீன் அமெரிக்காவில்தான் அதிக அளவிலான பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். லத்தீன் அமெரிக்காவில் மாதம் ஒன்றுக்கு 12க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள், அதிலும் அதிகபட்ச கொலைகள் மைக்ஸியில் நடைபெறுகிறது. பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக ஆப்கானிஸ்தான் விளங்குகின்றது. அங்கு பத்திரிகையாளர்கள் இலக்கு வைத்துக் கொல்லப்படுகின்றனர். 1997 முதல் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுவது தொடர்பாக ஐ.பி.ஐ பணியாற்றி வருகிறது. 1997ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 1801 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக ‘டெத் வாட்ச்’ அறிக்கை கூறுகிறது.(நன்றி:பிபிசி)
பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுவது என்பது ஒரு நாடு மிக மோசமான பாசிசத்தை நோக்கி போய்க் கொண்டு இருக்கின்றது என்பதைத்தான் காட்டுகின்றது. எப்போதெல்லாம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தீவிர வலதுசாரிகளும், முதலாளித்துவக் கைக்கூலிகளும், சாதிய மதவாத பிற்போக்கு கும்பல்களும் கைப்பற்றுகின்றனவோ, அப்போதெல்லாம் அது செய்யும் முதல் வேலை தனது கருத்தியலுக்கு எதிர்க்கருத்தியல் கொண்டவர்களை எல்லாம் வேட்டையாடுவதுதான். ஊழலிலும், அதிகார முறைகேட்டிலும் ஊறித்திளைக்கும் கும்பல்கள் அதை அம்பலப்படுத்தும் யாரையும் நிச்சயமாக உயிரோடு விட்டுவைப்பதில்லை. இதற்கெல்லாம் தீர்வு, எங்கெல்லாம் பிற்போக்கு சித்தாந்தம் கோலோச்ச முயற்சிக்கின்றதோ, அங்கு அதற்கு எதிரான முற்போக்கு சிந்தாந்தத்தை தீவிரமாகக் கட்டமைத்து அதன் மூலம் ஜனநாயகத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதுதான். நாம் உலகம் முழுவதும் கவனித்தால் எந்தெந்த நாடுகளில் முற்போக்கின் ஆணிவேர் ஆழமாக ஊடுருவியுள்ளதோ அங்கெல்லாம் இது போன்ற படுகொலைகள் நடைபெறவில்லை என்பதை அவதானிக்க முடியும்.
ஜமாலின் மரணத்தை ஏதோ எங்கோ நடந்த ஒரு படுகொலையாக நினைத்து நாம் கடந்து போகாமல் அதற்கு எதிராக பத்திரிகையாளர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். மோடி போன்ற பாசிஸ்டுகள் ஆட்சி செய்யும் நாட்டில் வாழும் நாம், இன்னொரு பாசிச நாட்டால் கொல்லப்பட்ட பத்திரிகையாளருக்கு நீதி கிடைக்க குரல் கொடுப்பது தார்மீகக் கடமை ஆகும்.
- செ.கார்கி