"ஆணவம் என்பது உண்மையை மறுப்பதும், பிறரை இழிவாக எண்ணுவதும்" - நபிகள் நாயகம்

ஒரு திருமணத்தில் முஸ்லிம் பெரியவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவரருகில் ஒருவர் வந்து அமருகிறார். திடீரென்று எழும்பிய ஒரு சப்தம். எல்லோரது கவனத்தையும் அங்கு குவித்தது. "யாருய்யா பரிமாறுவது. ஒரு தராதரம் வேணாமா? எப்படிய்யா இவன இங்க உட்கார வைக்கலாம்" என கொந்தளித்து எழுகிறார். உடனே கூனிக் குறுகியவராக வெளியேறுகிறார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெரியவர். இது சிறு உதாரணம்தான். இதுபோல் எத்தனையோ சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

"முஸ்லிம்களும் ஆண்டான்-அடிமை என்கிற முறையில்தான் எங்களைப் பார்க்கிறார்கள். எங்களை இழிவாகப் பார்ப்பதில் இந்துக்களுக்கு, முஸ்லிம்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல" என சிலர் பேசுவதை செவிமடுத்திருக்கிறேன். இந்துக்களைப் போல் முஸ்லிம்களிடத்தில் சாதியப் பார்வை இருந்து வருவது பல இடங்களில் உணர்ந்திருக்கிறேன். அது துரதிர்ஷ்டமானது.

muslim youth 600இஸ்லாம் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவும், சமத்துவத்தை மலரச் செய்யவும் பிறந்ததே. இஸ்லாம் வளர்ந்த எல்லா இடங்களிலும் ஏற்றத்தாழ்வுகளை, பாகுபாடுகளை அடித்து துரத்தி சமத்துவத்தை கட்டியணைத்துக் கொண்டது. அதனால்தான் சாதி, இன வேற்றுமைகளால் சிக்கித் திணறிய மக்கள் இஸ்லாத்தின் வரவை மகிழ்வுடன் வரவேற்று உடனே தழுவியும் கொண்டனர்.

"முஸ்லிம்களுக்கிடையே இன பேதங்கள் தலையெடுக்க விடாமல் செய்ததே இஸ்லாத்தின் மகத்தான சாதனையாகும். நவீன உலகில் இன்னும்கூட இந்த இஸ்லாமியப் பண்பு மிக அதிகம் தேவைப்படுகிறது" என்கிறார் உலக வரலாற்றாசிரியர் டாயின்பீ.

இந்த 21 ம் நூற்றாண்டிலும் சாதி, இனப் பாகுபாடுகளால் மக்கள் ஒடுக்கப்படுவதும், ஒழிக்கப்படுவதும் சற்றும் குறையவில்லை. அது அதிகரித்துதான் வருகிறது. அருந்ததிய சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண் பள்ளிக்கூடத்தில் சமைக்கிறார் என்பதற்காக அவரை மாற்ற வேண்டும், இல்லையென்றால் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று சாதியவாதிகள் சொல்கிற அளவில் சாதி உக்கிரமாக இருக்கிறது.

இது இன்னும் இஸ்லாத்தின் தேவையை நன்கு உணர்த்துகிறது. இஸ்லாம் மனிதர்களை எப்படி பார்க்கிறது. அவர்களை எப்படி பிரிக்கிறது என்பதற்கு கீழுள்ள அல்குர்ஆன் வசனங்களே சாட்சியாகும். "கருப்பனைவிட வெள்ளையனோ, வெள்ளையனைவிட கருப்பனோ சிறந்தவரல்லர். அரேபியரைவிட மற்றவரோ, மற்றவரைவிட அரேபியரோ சிறந்தவரல்லர். உங்களின் எவரிடத்தில் இறையச்சம் இருக்கிறதோ அவர்தாம் உங்களில் சிறந்தவர்".

மனிதர்களிடத்தில் உயர்வானவர்கள், தாழ்வானவர்கள் என யாருமில்லை. இறையச்சம் உடைய, ஒழுக்கம் உடைய மனிதர்தாம் மனிதர்களில் சிறந்தவர் என இஸ்லாம் வரையறுக்கிறது. அராபிய தேசத்தில் கறுப்பர்கள் அடிமைகளாக ஒடுக்கப்பட்ட காலங்களில் அவர்களுக்கு ஆதரவாக நின்றது இஸ்லாம் மட்டுமே. வெள்ளையர்-கருப்பர் இனப்பாகுபாடு உச்சத்தில் இருந்த சமயத்தில் இஸ்லாத்தின் மீள்வருகை கருப்பர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. மகிழ்ச்சியை அள்ளித் தெளித்தது. சாரை சாரையாக இஸ்லாத்தில் இணைந்து தங்களை இன கொடுமைகளிலிருந்து விடுவித்துக் கொண்டனர்.

"கருத்த நிறமுடைய, தடித்த உதடுடைய, சுருட்டை முடியுடன் ஒரு கருப்பர் உங்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டாலும் நீங்கள் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும்" என்று கட்டளை பிறப்பித்தார்கள் நபிகள் நாயகம்.

அவர்களின் வழியில் நடந்த முஸ்லிம்கள் இன வேற்றுமைகளைத் தூக்கி எறிந்தனர். அதுவரை இல்லாத வகையில் கருப்பர்கள் தலைவர்களாக உருவெடுத்தனர். அவர்களுக்கு கீழாக வெள்ளையர்கள் முழுமனதுடன் பணியாற்றினார்கள். இன வேற்றுமை மறைந்து சகோதரர்களாக இணைந்துக்கொண்டனர். இதுதான் இஸ்லாத்தின் வெற்றி, நபிகள் நாயகத்தின் வெற்றி. இந்த மாற்றமெல்லாம் மிக இலகுவாக சாத்தியமானது. ஏழைகள்-பணக்காரர்கள், கருப்பர்கள்-வெள்ளையர்கள் என இருந்த பாகுபாடு குறைந்த காலத்திலேயே நீங்கப்பெற்றது.

அதுதான் உலகம் முழுவதும் இஸ்லாத்தை நோக்கி மக்களை அணிதிரளச் செய்தது. இந்தியாவிலும் காலம்காலமாக அடிபட்டு பல்வேறு ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் இஸ்லாத்தின் சமத்துவக் கொள்கையை ஏற்று இஸ்லாத்தைத் தழுவினார். இந்தியாவில் இஸ்லாம் பரவியதற்கு வாள்தான் காரணம் என்று சில விஷமிகள் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். உண்மையில் ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களே விரும்பி இஸ்லாத்தை ஏற்று தங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துக் கொண்டனர். அதைத்தான் சுவாமி விவேகானந்தரும் இப்படி கூறுகிறார்.

"இந்தியாவில் முஸ்லிம்களிடையே ஏழை எளிய மக்கள் அதிகம் இருக்கக் காரணம் என்ன? வாள் கொண்டு மதமாற்றம் செய்தார்கள் என்பது அறியாமையாகும். புரோகிதர்களிடமிருந்தும், பண்ணையார்களிடமிருந்தும் விடுதலை கிடைக்கும் பொருட்டே ஏழை எளிய மக்கள் இஸ்லாத்தைத் தழுவியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. இனத்தையும், மதத்தையும் கடந்து முஸ்லிம்கள் காட்டுகிற, கடைபிடிக்கிற முழுமையான சமத்துவத்திலேதான் இவர்களின் சிறப்பு இருக்கின்றது" என்று 'கிழக்கும்-மேற்கும்' என்ற தனது நூலில் குறிப்பிடுகின்றார் சுவாமி விவேகானந்தர்.

சாதியப் பாகுபாடு இஸ்லாத்தில் இல்லை, அறவே இல்லை என்பதே எள்ளளவும் சந்தேகம் இல்லாத உண்மையாகும். அதே நேரம் முஸ்லிம்களிடத்தில் சாதியப் பாகுபாடு பார்வை இன்னும் சிலரிடம் இருப்பதாகத்தான் தெரிகிறது. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு இஸ்லாமியர்களாக வாழும் சில ஆதிக்க எண்ணம் கொண்டவர்கள் இஸ்லாத்தை முழுமையாக புரிந்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

குறிப்பாக தலித் சமூக மக்களை இந்துக்கள் பார்ப்பதைப் போல் ஒதுக்கி வைக்கும் பார்வையையே தங்களிடமும் கொண்டுள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அது ஒருவித ஆதிக்க மனப்பான்மையாகும். பெரியார் பிராமணியத்தைவிட அதை உருவாக்கிய பிராமணர்களை கடுமையாக எதிர்த்தார். ஆனால் அம்பேத்கர் பிராமணனைவிட பிராமணியத்தை வேறுபடுத்தி எதிர்த்தார். ஏனென்றால் எல்லா சமூகங்களிலும் பிராமணிய சிந்தனை இருக்கிறது என்பது அவரது உறுதியான எண்ணமாகும்.

"பிராமணியம் என்பது எல்லாச் சமுதாயங்களிலும் இருக்கிறது. நான் பிராமணியம் என்று சொல்வது பிராமண சமுதாயத்தைச் சொல்லவில்லை. யாரிடமெல்லாம் இந்த ஆதிக்க மனப்பான்மை இருக்கிறதோ, அடக்குமுறை மனப்பான்மை இருக்கிறதோ அவர்களிடமெல்லாம் பிராமணியம் இருக்கிறது" என்கிறார் அம்பேத்கர்.

இந்தப் போக்கு முஸ்லிம்களில் சிலரிடமும் இருப்பது வருத்தத்திற்குரியது மட்டுமல்ல கண்டிக்கப்பட வேண்டியதும், மாற்றப்பட வேண்டியதும்கூட. ஆதிக்க எண்ணமும், ஆணவமும் முஸ்லிம்களிடத்தில் இருக்கக்கூடாத பண்பாகும். நபிகள் நாயகம் இது குறித்து பல இடங்களில் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

இஸ்லாம் என்பது மனிதனை மனிதனாக பார்ப்பது. சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் கடைபிடிப்பது. இதை முஸ்லிம்கள் முழுமையாக உணர்ந்து கடைபிடிக்க வேண்டும். இறைவனே ஒடுக்கப்படும் சமூகத்தைத்தான் மிகவும் விரும்புகிறான். அவர்கள்தான் இந்த பூமிக்கு தலைமை தாங்க தகுதியானவர்கள் என்றும் கூறுகிறான். "இந்த பூமியில் எந்த மக்கள் ஒடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களை இந்த பூமியின் தலைவர்களாக ஆக்கவும் இந்த பூமியின் வாரிசுகளாக ஆக்கவும் நாம் நாடியிருக்கிறோம்" (அல் குர்ஆன் 25:6)

பறையர், சக்கிலியர், படையாட்சி, வன்னியர், தேவர், நாடார், பிராமணர் இன்னும் இதுபோன்ற பெயர்களை வைத்து மக்களை பிரித்தாளுவது கயமைத்தனமாகும். மனித சமூகம் தங்களுக்குள் செய்துகொள்ளும் அநீதியாகும். இதுபோன்ற பார்வை இந்துக்களிடம் இருப்பதையே எதிர்க்கும் தருணத்தில் முஸ்லிம்களிடம் இருக்கலாமா? தாழ்த்தப்பட்டவன் என்பதாலோ, ஏழைகள் என்பதாலோ ஒருவனை ஒருவனுக்குக் கீழாக வைத்துப் பார்ப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. சக மனிதர்களை சமமான மனிதர்களாக மதித்திடல் வேண்டும். ஆணவ, ஆதிக்க எண்ணத்தை விட்டொழித்திடல் வேண்டும். இதுவே சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப உதவும்.

- வி.களத்தூர் எம்.பாரூக்

Pin It