அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்பட்டது. தென் தமிழகத்தின் வாசலைக்கூட தொட முடியாது என்றிருந்த ஒரு கட்சி இன்று தனிப் பெரும்பான்மையாக முன்னிலை வகிக்கிறது.
இயல்பாகவே கர்நாடக மக்கள் தன் மாநிலத்துக்கு முன்னுரிமை கொடுப்பார்களே தவிர்த்து, மதத்தை பின்னுக்குத் தள்ள மாட்டார்கள். மேடைப் பிரச்சாரங்களில் வேண்டுமானால் வளர்ச்சியை முன்னிறுத்தி பா.ஜ.க. பிரச்சாரம் செய்யலாம். ஆனால், அவர்கள் மக்களின் ஆழ் மனதில் கொள்கையை கட்டமைக்கிறார்கள்.
சுதந்திரத்திற்குப் பின் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று சொல்ல வைத்ததற்கு முக்கிய காரணம், அவர்களது வரம்பை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட கடுமையான சட்டங்கள்.அதுதான் தன்னுடைய மதத்திணிப்பை அடுத்தவர்கள்மீது அவர்கள் திணிக்காமல் இருக்கக் காரணம். மற்றப்படி நாட்டுப்பற்றைத் தாண்டி மதப்பற்று அவர்களிடத்தில் எள்ளளவும் குறையவில்லை.
பி.ஜே.பி.யின் எந்தவொரு தேர்தல் வியூகம், பிரச்சாரங்களும் தனிமனிதனிடம் இந்து தேசம் என்கிற கொள்கையை சேர்க்காமல் இல்லை.
உலகளவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்களுக்கென்று தனி நாடு இருக்கும்போது, உச்சபட்ச வளங்களைக் கொண்ட இந்திய நாடு இந்து ராஷ்ட்ராவாக உலகளவில் தலையோங்கி நிற்கும் என்கிற பிரச்சாரம் கார்ப்பரேட் கம்பெனிகளின் முதலாளி முதல் சில்லரை கடை வியாபாரி வரை சர்வ சாதாரணமாக செலுத்திவிட்டார்கள்.
இவர்களின் வெற்றி எப்படி சாத்தியமாகிறது? என்கிற கேள்விக்கு விடை காண்பது மிகவும் எளிது. உதாரணத்திற்கு தமிழகத்தில் கிருஷ்ணசாமி வாயிலிருந்து இட ஒதுக்கீடு வேண்டாமென்று சொல்ல வைத்தது. ஆட்சி மாற்றம் வேண்டுமென்று சொல்லாமல் திராவிடக் கட்சிகளின் ஆட்சி மாற வேண்டும் என நவீன தலைமுறை இளைஞர்களைப் பேச வைத்தது. தலித் மக்களுக்கு ஆதரவான அரசியலை பி.ஜே.பி. பேசுவது, தி.மு.க கொள்கையை அழிக்க கமலை பயன்படுத்துவதும், எம்.ஜீ.ஆர்-ஜெ ரசிகர்களை கைப்பற்ற ரஜினியை பயன்படுத்துவதும் பீ.ஜே.பி.யின் தந்திர அரசியல்.
அதுமட்டுமல்லாமல் இந்தியா நாட்டின் வளர்ச்சி, பரிணாமம், விவசாயப் புரட்சி, தொழிற் புரட்சி, தகவல் தொழில்நுட்பப் புரட்சி என்று மாறியுள்ள நிலையில் எப்படி தொழிற்புரட்சிக்கு ஏற்ற அரசியலை செய்து கம்யூனிஸ்ட் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றதோ, பி.ஜே.பி தகவல் தொழில்நுட்ப புரட்சியைக் கொண்டு தன்னை எல்லா வகையிலும் மாபெரும் சக்தியாக நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றது. அதுதான் மனசாட்சி இல்லாமல் இந்த ஆட்சி நான்கு ஆண்டுகளில் விளம்பரத்திற்கு மட்டும் செலவு செய்த 4783 கோடி.
ஒரு கட்சியின் தகவல் தொழிநுட்பப் பிரிவையே இந்துத்வா கொள்கை கொண்டவனாக நியமிப்பதன் மூலம் ஒரு பட்டதாரி இளைஞன் கை நிறைய சம்பளம், பதவி கொடுக்கும்போது தன் மொத்த திறமையை அமித்ஷா போன்றோருக்கு காட்டி சபாஷ் பெற வேண்டுமென்று தான் நினைப்பான். அந்தளவிற்கு சொல்வதை செய்வது மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்பத்தில் தன் கட்சிக்கென்று ஒரு தனி சக்தியை உருவாக்குவார்கள் என்பதில் ஐயமில்லை.
அம்பானி, அதானி-ஜியோ, பே-டி-எம் என்று ஒட்டுமொத்த கார்ப்பரேட் தலைவனும் தன் கையில் அவர்கள் இலக்கு வைக்கும் மக்களும் தன் கையில் என்று ஆறாத விஷத்தைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றனர்.
மோடி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பக்கை சந்திப்பதும்,அவர் இந்தியா வந்தால் மோடியை சந்திப்பதும், பேஸ்புக் நிறுவனத்திற்கு மோடி டூர் செல்வதும், சிகப்பு கம்பளம் விரித்து ஆட்சிமன்றங்களை மார்க்கிற்கு சுற்றிக் காட்டுவதும் இரண்டு ராஜாங்கத்தின் பிரம்மாண்டத்தைப் பரிமாறிக்கொள்ளும் மறைமுக ஒப்பந்தம்.
நாடு வளர்ந்துவிட்டது என்றும், மக்கள் தெளிவாகிவிட்டனர் என்றும் தென் இந்தியா பகுதிகளை சொல்லலாம். ஆனால், வட இந்தியா முழுவதும் சோற்றுக்கு வழியில்லாமல், கைப்பேசி, டி.வி.க்கூட பார்க்க முடியாமல் உள்ளர். இங்கு நான் கைபேசி, டி.வி என்று குறிப்பிடுவதற்குக் காரணம் ஒரு நாட்டின் வளர்ச்சி எதையொட்டி உள்ளதோ தனிநபரின் வளர்ச்சியும் அதை நோக்கித்தான் உள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை அரசு பணி எழுத அனுமதி கொடுத்தது, மிக முக்கிய காரணங்களில் ஒன்று. உச்சநீதிமன்ற நீதிபதி முதல் உள்ளூர் காவல் ஆய்வாளர் வரை இந்த திட்ட செயல்பாடுகள் நீண்டு கொண்டு செல்கிறது. ஆட்சி மட்டுமல்ல அதிகார வர்க்கத்திலும் நம்மவர்கள் ஊடுருவினாலே நினைத்தததை சாதிக்க முடியுமென்று 21 மாநிலங்களில் இந்துத்வா கொள்கைக் கொண்டவர்களை ஆளுநராக நியமித்தது, கண் முன் நம் மாநில ஆளுநர் நடத்தும் சங்கதிகள் எல்லாம் பாமர மக்கள் புரிந்துக் கொள்ள முடியாத உண்மை.
வறுமை, மதப் பெரும்பான்மை, சிறு குழுக்களை ஒருங்கிணைத்தல், ஆளுமை கொண்ட தலைவர்களுக்கு அளவில்லாத வெகுமதிகளைக் கொடுத்து தன்னகப்படுத்துதல், அடங்க மறுப்பவர்களை ரெய்டு, கைது, குண்டாஸ், ஊழல் என்று சிக்கவைத்தல் என்று அசாதாரணமாக கையாள்கிறது பி.ஜே.பி.
தற்போது உள்ள சூழலில் பி.ஜே.பி கட்டமைத்துள்ள சிறு குழுக்கள், ஜாதிய அரசியல்வாதிகளை ஒருங்கிணைத்தல், விகிதாசார வாக்கு தேர்தல் முறை கோரிக்கையை கை விடுவது தான் சிறந்ததாக இருக்கும்.
தெரிந்தும், தெரியாமலும் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் பணி காங்கிரஸுக்கு உண்டு என்றாலும் தேசிய தலைமையில் சீனியர்களுக்கும், ஜீனியர்களுக்கும் உள்ள கருத்து வேருபாடு களைந்திருக்கிறதே தவிர பல மாநிலங்களில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளது. வெற்றியே பெற்றாலும் அத்வானியை மோடிக்கு கீழ் கட்டுப்படுத்தி அமர்த்தியது மோடி அல்ல, அவர்கள் கொண்டுள்ள நச்சுக் கொள்கை. இதுபோல் மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்டு காங்கிரஸ் தன் முன் உள்ள பல்வேறு சவால்களில் வெற்றிப் பெற்றாக வேண்டும்...
இங்கு விளம்பரத்திற்கு முக்கியம் பணம், திறமை, ஊடகம். இவையனைத்தும் பி.ஜே.பி.யிடம் உள்ளது.
இதைத்தாண்டி இந்த நாட்டை மதச்சார்பற்ற நாடாக பாதுகாக்க ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் பணியை கெஜ்ரிவால், மம்தா, அகிலேஷ் யாதவ், பிரகாஷ்காரத் இல்லாத கம்யூனிஸ்ட் நினைத்தால் சாத்தியப்படுத்தலாம்.
இவர்களது செயல்திட்டங்கள், செலவுகள், கொள்கைகள், தேர்தல் அறிக்கைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு நாட்டின் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் அப்பழுக்கற்ற கடமை என்று செயல்பட்டால் இந்திய ஒன்றியம் நிச்சயம் பாதுகாக்கப்படும்.
- அ.முஹம்மது அஸாருதீன்