கோட்டாவால் நூறுசதம் பயனடைந்தவர்களை இனி கோட்டான்கள் என்றே கூப்பிடலாம். ஆனால் ஒரு பறவை இனத்தை அவமதிக்க வேண்டுமா என்பதை யோசியுங்கள்.

மனுநீதியால் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டது மட்டும்தான் இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது. இந்த இடஒதுக்கீட்டிலிருந்து போராடிப் போராடி மற்றவர்கள் பெற்றதற்கு பெயர் மறு ஒதுக்கீடு. எங்கே எல்லோரும் ஒருமுறை உரக்கச் சொல்லுங்கள்...‘ பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டது இடஒதுக்கீடு. மற்றவர்கள் கேட்பது மறுஒதுக்கீடு..’

மறுஒதுக்கீட்டுக்கு எதிராக கோட்டா சாதி மாணவர்கள் காவாலித்தனத்தில் இறங்கிய கணத்திலிருந்தே அவர்களை இந்தநாட்டின் விடுதலைப் போராளிகளைப் போல காட்டிக்கொண்டிருக்கின்றன ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள். நவீன தொழில்நுட்பத்தை கையில் வைத்துக்கொண்டு என்னதான் முற்போக்கான வேடத்தோடு நுனிநாக்கு ஆங்கிலம் பேசினாலும் இந்த நடுநிலைச் செய்தியாளர்களால் தங்களது ஆதிக்கசாதிக் கொழுப்பை மறைத்துக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொருவரின் உடம்பிலும் நரம்பே பூணூலாய் புடைத்துக்கொண்டு அவர்களை கிளப்பிவிட்டுள்ளது தெருவுக்கு.

ஒவ்வொரு பெருநகரத்திலும் மறுஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துடைய கோட்டான்களை பெரும்பான்மையாகவும் ஆதரவு கருத்துள்ளவர்களை சிறுபான்மையாகவும் கூட்டிவைத்து விவாத அரங்குகளை நடத்துகின்றன ஆங்கில தொலைக்காட்சிகளான என்டிடிவியும் சிஎன்என்-ஐபின்னும். இந்த விவாதங்களில் மறுஒதுக்கீட்டிற்கு எதிராக பேசுகிறவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கிவிட்டு ஆதரவு கருத்துக்களை கூறுவோருக்கு அவகாசம் தராத பாரபட்சத்தை வெளிப்படையாய் அவை கையாள்கின்றன. வசதிபடைத்த மேட்டுக்குடி ஆதிக்கசாதியினரின் எஸ்எம்எஸ், ஈமெயில் பிரச்சாரத்தினால் இந்த நாடு முழுவதும் மறுஒதுக்கீட்டுக்கு எதிராக இருப்பதைப்போன்ற மாயையை உருவாக்குவதற்கும் இத்தொலைக்காட்சிகள் தவறவில்லை.

எவ்வளவு பெரிய தலைவர்களாயிருந்தாலும் அவர்களை தங்களது ஸ்டுடியோவுக்கு அழைத்துவந்து எடக்குமடக்கான கேள்விகளைக் கேட்டு திணறடிக்கும் சாதுர்யமிக்க இந்த செய்தியாளர்கள், யூத் •பார் ஈக்வாலிட்டி என்று பெயர் வைத்திருப்பவர்களைப் பார்த்து, இதுவரை சமூகத்தில் நிலவும் எந்தெந்த ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துக் போராடி சமத்துவத்தை நிலைநாட்டியிருக்கிறீர்கள் என்று தவறியும் கேட்கவேயில்லை. ‘ரிசர்வேஷன் என்பது ரயிலுக்காவது இருக்கலாமா அல்லது தகுதியும் திறமையும் உடல்பலமும் இருப்பவர்கள் ஏறிக்கொள்ளட்டும், மற்றவர்கள் அங்கங்கே- அவா அவா ஆத்துக்குள்ளேயே கிடந்து சாகட்டுமா’ என்றாவது குறைந்தபட்சம் கேட்டிருக்கலாம். இப்போதிருக்கும் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும்... இனியும் தாங்கிக்கொள்ள முடியாது என்கிறவர்களையோ அல்லது நடப்பிலிருக்கும் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யும் காலம் வந்துவிட்டது என்று சொல்கிற அத்வானியையோ அழைத்து ‘ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கிவைத்த உங்களுக்கு அறுபதாண்டுகள் என்பது சகித்துக் கொள்ள முடியாத நெடுங்காலமாக தோன்றுகிறதா?’ என்றாவது கேட்டார்களா என்றால் அதுவுமில்லை.

கோட்டா என்ற வார்த்தையைக் கேட்டதும் கொந்தளிக்கிற இந்த கோட்டான்கள் என்.ஆர்.ஐ கோட்டா பற்றி மட்டும் ஏன் வாய் திறப்பதில்லை? பதில் தெளிவானது. அதாவது அவர்கள் எல்லோரும் ஒண்ணுக்குள் ஒண்ணு. மத்தவங்க வாயில மண்ணு. இந்த நாட்டு மக்களின் உழைப்பிலும் வரிப்பணத்திலும் இயங்குகிற உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கிற இந்த கோட்டான்கள் படித்துமுடித்ததும் •பாரினுக்கு ஓடிவிடுவார்கள். அங்கே தங்களது தகுதி திறமையை நிரூபித்து அங்கேயே படித்து முடிக்க கையாலாகாத தங்களது பிள்ளைகளை மீண்டும் இங்கே இளிச்சவாயர் தேசமான இந்தியாவுக்கு அனுப்பி படிக்க வைத்துக் கொள்ள இந்த என்.ஆர்.ஐ கோட்டா தேவைப்படுகிறது. அதனால் அந்த விசயத்தில் இந்த கோட்டான்களுக்கு செலக்டிவ் அம்னீசியா வந்துவிடுகிறது.

மனிதவுரிமை மீறல்களைப் பற்றியும், அவமதிப்புகளைப் பற்றியும் ரகசிய கேமராக்கள் மூலம் அம்பலப்படுத்துவதாக அலட்டிக் கொள்ளும் இத்தொலைக்காட்சிகள், ‘கோட்டா வந்துவிட்டால் உயர்வாதி மாணவர்களாகிய நாங்களெல்லாம் இந்த வேலைகளைத் தான் செய்ய வேண்டியிருக்கும்’ என்று ஷ ¨ பாலிஷ் போடுவதையும் தெருக்கூட்டுவதையும் செருப்புதைப்பதையும் சவரம் செய்வதையும் படம்பிடித்து காட்டுகின்றனர். அதாவது கேவலமான இந்தத் தொழில்களையெல்லாம் இனி நாங்கள் செய்ய வேண்டிவரும் என்று சித்தரிக்கின்றனராம். இந்த செயல், காலங்காலமாக இத்தூய்மைப்பணிகளை செய்து வருவோரை அவமதிக்கிற அப்பட்டமான வன்கொடுமைச் செயலாகும். இத்தனைக்காலமும் நாங்கள் செய்தோம், இனி கொஞ்சகாலத்திற்கு இந்த வேலைகளை நீங்கள் செய்யுங்கடா என்று நாம் சொல்லத் தயங்குவதால்தான் அவர்கள் இவ்வளவு கொழுப்பெடுத்து அலைகின்றனர் என்பதை சமூகநீதி அக்கறையாளர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் அப்படி எதுவும் எந்த ஊடகத்திலும் பதிவாகவேயில்லை.

இந்தநாட்டில் எவ்வளவு நியாயமான கோரிக்கைகளுக்காக யார் போராடினாலும் அதனால் ஏற்படுகிற பொருளாதார இழப்புகள், உயிரிழப்புகள், சமூகத்திற்கு ஏற்படுகின்ற அசௌகரியங்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைக்கும் இவ்வூடகங்கள் கோட்டாசாதியினரின் இந்த வெறியாட்டத்தின் பாதிப்புகளைப் பற்றி தவறியும் வாய் திறக்கவில்லை. போண்டாவில் உப்பில்லை என்றாலும் புண்ணாக்கில் சத்தில்லை என்றாலும் பொதுநல வழக்கு தொடுக்கும் சமூக அக்கறையாளர்கள் யாரும் இந்த காலித்தனத்திற்கு எதிராக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை.

பிரச்னையை ஊதி தி பெரிதாக்கிய பிறகு இப்போது மிகவும் நடுநிலையார்களைப் போல ‘கோட்டா பிரச்னையில் ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதா?’ என்று விவாதம் நடத்துகிறது சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி(29.05.06). இதில் இந்திய மக்கள் எல்லோரும் எஸ்எம்எஸ் வாக்கெடுப்பில் கலந்து கொண்டதைப்போல ‘மீடியாக்கள் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்ளவில்லை’ என்று பெரும்பான்மையோர் வாக்களித்திருப்பதாக தன்னைத்தானே பாராட்டிக் கொண்டது இந்த டிவி. இதில் அவர்களாலும் மறைக்கமுடியாமல் வெளிப்பட்டது என்னவென்றால், கோட்டான்களின் இந்த சாதிவெறியாட்டத்திற்கு பல தனியார் நிறுவனங்கள் நிதியுதவி செய்கின்றன என்கிற விசயம். அடுத்து, மறுஒதுக்கீட்டுக்கு ஆதரவான போராட்டங்களைப் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்துவிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, அப்படி ஏதேனும் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் இருக்கும் பட்சத்தில் அதை தங்களுக்கு அனுப்பிவைக்குமாறும், அதை வெளியிடுவதாகவும் அறிவித்தனர். இங்கே கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், எதிர்க்கிறவர்கள் இருமுவதையும் செருமுவதையும் கூட இந்த சேனல்கள் பதிவு செய்து ஆவணப்படுத்தி தயாராக வைத்துள்ளன என்பதும், மாற்றுக்கருத்துக்களை பதிவு செய்வதற்கு அவை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதும் தான். அதனால் அப்படி ஏதேனும் இருந்தால் எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்கின்றன. இது பெருந்தன்மை இல்லை. அப்பட்டமான பாரபட்சம்.

ஒரு நகரத்தில் மருத்துவர்கள், கோட்டான்களின் எண்ணிக்கை மிகமிக சொற்பமாகத்தான் இருக்கும். ஆனால் எந்த தைரியத்தில் டெல்லி பந்த்துக்கு அவர்களால் அழைப்பு விட முடிகிறது? டெல்லி முழுவதும் அவர்களது அழைப்பை ஏற்று முழுஅடைப்பு நடந்துவிடுமா? இல்லை. அவர்களது பலம் அந்தளவிற்கு கிடையாது. அப்படியானால், முழுஅடைப்பு என்கிற அவர்களது அறிவிப்பை ஏற்று செயல்படுத்த பணபலமும் ஆள்பலமும் கொண்ட வேறு சமூகவிரோத சக்திகள் அவர்களுக்கு பின்னிருந்து இயக்குகின்றனர் என்பதும் கூட தெளிவாகிறது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் பந்த் அறைகூவல் விடுத்த போதெல்லாம் வெகுவாக அலட்டிக்கொண்டு முந்திரிக்கொட்டைகளாக அபிப்ராயம் சொல்லும் நீதியின் காவலர்கள் இப்போது மௌனம் காப்பது எதனால்?

துப்பாக்கிச்சூட்டிலும் தடியடியிலும் இதுவரை தொழிலாளி வர்க்கம் எத்தனையோ இழப்புகளை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் ஒரு விசாரணைக்குழுவை நியமித்து ஊத்தி மூடுகிற நமது ஆட்சியாளர்கள், இந்த கோட்டான்களின் வெறியாட்டத்தை ஏன் இன்னும் சகித்துக் கொண்டு மென்மையான அணுகுமுறையை கையாள்கின்றனர்? மக்களின் உயிரைக் காக்கும் தங்களது பொறுப்பை தட்டிக் கழித்துவிட்ட மக்கள் விரோதிகளான இந்த குற்றவாளிகள் என்னவொரு அகம்பாவத்தோடு இந்தநாட்டின் குடியரசுத்தலைவரையே சந்திக்கின்றனர்? அவர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் இருக்காது என்று தாஜா பண்ணுகிற அளவுக்கு அரசாங்கம் கீழிறங்கிப் போவதற்கு காரணம் என்ன? இப்படி எழுகிற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை ஒன்றுதான்: ஆதிக்கசாதிக்காரன் கலவரத்தில் ஈடுபடும்போது இந்த நாட்டின் சட்டம் ஆட்சி அதிகாரம் ஊடகம் எல்லாவற்றிலும் ஊடுருவி இருக்கும் மனுநீதிக்காரர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதைப் போல சமூகநீதி செயல்பாட்டாளர்கள் செயலாற்றவில்லை என்பதுதான்.

உழைப்பாளி மக்களின் எந்தப் பிரிவு போராடினாலும் பாய்ந்து பிடுங்கும் அத்தியாவசிய பணி பராமரிப்புச்சட்டம், தேசிய பாதுகாப்புச்சட்டம் என்பதெல்லாம் இப்போது மட்டும் ஏன் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கின்றன? மக்களது உயிரை பணயம் வைத்து ஆதிக்கசாதியினர் நடத்தும் இந்த வெறியாட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவித்து இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்ற கோரிக்கையோடு தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களும் பிற்பட்டோரும் களமிறங்கினால் தான் இதற்கு தீர்வு வருமென்றால் அதற்கான வேலையைச் செய்வதுதான் இப்போது சமூகநீதி ஆர்வலர்களின் உடனடி கடமையாக இருக்கமுடியும்.

அறுபது வருசம் இழந்தவனுக்கு இத்தனை ஆத்திரம் வருகிறதென்றால் ஆயிரமாயிரம் வருசங்களாக அடக்கப்பட்டவனுக்கு எவ்வளவு ஆவேசம் வரும் என்பதைக் காட்ட வேண்டிய தருணம் இதுதான். மனுநீதிக்கும் சமூகநீதிக்கும் இடையே நடக்கிற போராட்டத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் ஏதேனும் ஒரு பக்கம்தான் நிற்க முடியும். இருதரப்புக்கும் பஞ்சாயத்து பண்ணுகிற கமிஷன் மண்டி புரோக்கர் வேலைகளை மறுஒதுக்கீடு பிரச்னையில் யாரும் கையாளக்கூடாது என்ற தெளிவோடு உழைக்கும் மக்களாகிய தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் ஓரணியாய் திரளவில்லையானால் துரோணனின் பிணம் எழுந்து வந்து கேட்கும் எஞ்சியிருக்கும் நமது இன்னொரு கட்டை விரலையும். 

- ஆதவன் தீட்சண்யா

Pin It