kovai bharathiyar vc

பள்ளிக் கல்வியும், உயர்கல்வியும் தரமற்றதாகிவிட்ட இன்றைய சூழலில் கல்வியாளர்களும், மாணவர்களும் நம்பிக்கை வைத்திருந்தது பல்கலைக்கழகங்கள் மீதுதான். அதிலும் புற்றீசல் போல பெருகியுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பணம் வாங்கிக் கொண்டு பட்டம் வழங்கும் வியாபார நிறுவனங்களைப் போல செயல்படுவதால் அரசு பல்கலைக்கழகங்கள் மீதே மாணவர்களின் ஆர்வம் இருந்து வந்தது. அங்கே சேர்ந்து கல்வி கற்பது ஒரு பெருமையாகவும், அதே நேரத்தில் சிறந்த, தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் மூலம் பயிற்றுவிப்பதால் கற்றலின் தரமும் சிறப்பாக இருப்பதாக நம்பப்பட்டு வருகின்றது.

ஆனால் சமீபகாலங்களில் அரசு பல்கலைக்கழகங்கள் பற்றி செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் வரும் செய்திகள் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதாக இல்லை. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி, தகுதியின் அடிப்படையில் அல்லாமல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்டு வருவது அதிகரித்துள்ளது அப்பட்டமாகத் தெரிகின்றது. விளைவு பல்கலைக்கழக நிர்வாகங்களில் ஊழல் மலிந்து வருகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது முறைகேடு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது நினைவிருக்கலாம். பிறகு சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், தகுதியின் அடிப்படையில் செய்யப்படவில்லை என்று புகார் எழுந்தது. கடந்த ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் ஆளும்கட்சி ஆதரவுடன் பதவி பெற்ற துணைவேந்தர் செய்த மோசடிகளை பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவிலேயே துறைத்தலைவர் ஒருவர் எதிர்த்ததும், அவரை விதிகளை மீறி பதவிநீக்கம் செய்ததும், மாணவர்கள் துணைவேந்தரை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதும் அப்போது செய்தித்தாள்களில் இடம்பெற்றது.

இப்போது கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பணி நியமனங்களுக்காக இலஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளது, கல்வித்துறையையே வெட்கி தலைகுனியச் செய்துள்ளது. துணைவேந்தராக பொறுப்பேற்றதில் இருந்து எண்பதுக்கும் மேற்பட்ட பணி நியமனங்கள் தகுதியினை மீறி நடந்துள்ளது. தகுதியான மாணவர் ஒருவருக்கு ஆராய்ச்சிப் படிப்பிற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தை அணுகி, வாய்ப்பு வழங்க உத்தரவிட்டபோதும் மீண்டும் மறுக்கப்பட்டுள்ளது. இதே துணைவேந்தர் மீது சென்ற வருடம் ஏப்ரல் மாதம் முறைகேடாக பணி நியமன உத்தரவுகளை வழங்கி, அதற்கு ஆட்சிமன்றக் குழுவின் ஒப்புதலையும் பெற்றதாகவும், வேலை நேரத்திற்குப் பிறகு பணியானை வழங்கப்பட்டதாகவும் ஊழல் புகார்கள் வந்ததால் மாநில அரசு புலனாய்வு செய்ய உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் ராஜினாமா செய்துள்ளார். ஆனாலும் கூட தொடர்ச்சியாக முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது வலுவான அரசியல், அதிகாரப் பின்னணியுடன்தான் அவர் செயல்பட்டுள்ளதை உணர்த்துகின்றது. சென்ற வருடமே பதவி இடைநீக்கம் செய்து உரிய விசாரணை நடத்தப்பட்டிருந்தால் இப்போது கல்வித்துறையையே களங்கப்படுத்திய அசிங்கம் அரங்கேறியிருக்காமல் தடுத்திருக்கலாம்.

சமீப காலங்களில் தகுதியை விட பணமே யார் துணைவேந்தராக வருவது என்பதை முடிவு செய்து வருகின்றது. அப்படி வருபவர்கள் தாங்கள் செலவழித்த பணத்தை திரும்பப் பெறும் வழிகளைத் தேட ஆரம்பித்து முறைகேடான நியமனங்கள், எல்லாத்துறைகளிலும் இலஞ்சம் என்று நிர்வாகத்தையே சீர்குலைத்து விடுகின்றனர். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பதவியைப் பிடிப்பவர்கள் அரசியல்வாதிகளுக்கு சாதகமாக நடந்து கொள்கின்றனர். இன்னும் பல அரசு கல்லூரி, பல்கலைக்கழகங்களில் முறைகேடுகள் நடந்து கொண்டுதான் உள்ளன. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து தகுதியற்ற பலர் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் நூலகர், ஆய்வாளர் போன்ற பணியிடங்களுக்கும் தகுதியற்ற நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு இவையெல்லாம் தெரிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு கிட்டத்தட்ட மாவட்ட ஆட்சியரை விடவும் அதிக அதிகாரப் பரவல் கொண்டது. அதனைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களின் கல்லூரிகளை நிர்வகிக்கக் கூடியது. உறுப்புக் கல்லூரிகளின் நிர்வாகம், கல்வித்தரம் அனைத்தையும் பாதுகாக்க வேண்டியது பல்கலைக்கழக துணைவேந்தரின் அதிகாரத்திற்குட்பட்டது. துணைவேந்தர் சரியாக செயல்படவில்லை என்றால் ஒரு சங்கிலித்தொடராக பல மோசமான பின்விளைவுகளை கல்வித்துறை முழுவதிலும் ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. மேலும் பேராசிரியர், உதவிப் பேராசிரியர்கள், பல நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கக் கூடியவர்கள். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டி, சிறந்த கண்டுபிடிப்புகளை தேசத்தின் அறிவுப் பெட்டகத்திற்கு வழங்க ஊன்றுகோலாக இருக்க வேண்டியவர்கள்.

ஒரு தேசத்தின் மேன்மை அந்த தேசத்தின் ஆராய்ச்சித் துறையில் காணக் கிடைக்கும் புத்துருவாக்கங்களாலும், கண்டுபிடிப்புகளாலுமே அளவிடப்படும். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மேதகு அப்துல் கலாம் ஆகியோர் அவர்கள் செல்லும் இடங்களில் அதிகம் இவற்றைக் குறித்து பேசுபவராக இருந்தார்கள். மேலை நாடுகளில் ஆராய்ச்சிப் படிப்புக்கு அதிக முக்கியத்துவமும், கவனமும் செலுத்தப்படுகின்றது. அங்கே புத்துருவாக்கங்களும், கண்டுபிடிப்புகளும் அதிகமாக உருவாகின்றன. ஆனால் நம் தேசத்தில் கல்வித்துறையில் புற்றீசல் போல பெருகிவரும் ஊழல்கள் ஆராய்ச்சித் துறையிலும் பெருகி உண்மையான ஆராய்ச்சிகள் நடைபெறாமல் அங்கேயும் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. ஆராய்ச்சிப் படிப்பிற்கான சேர்க்கை முதல் இறுதி வரை மலிந்து கிடக்கும் ஊழல்களால் உண்மையாக ஆராய்ச்சிப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களும் கூட பாதிப்படைகின்றனர் என்பது வேதனை கலந்த உண்மை. இந்த நேரத்தில் மின்னஞ்சலை உலகிற்கு அறிமுகப்படுத்திய சிவா அய்யாத்துரை இந்தியாவில் தனது ஆராய்ச்சியை செய்ய விரும்பியபோது எப்படி அவமானப்படுத்தப்பட்டார் என்று வேதனையுடன் கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஒரு தேசம் வல்லரசாக கல்வி, ஆராய்ச்சியில் தன்னிறைவு அடைய வேண்டும். அனைவருக்கும் பாரபட்சமற்ற முறையில் கல்வி பெறும் உரிமை வழங்கப்பட வேண்டும். கல்வித்துறை களங்கமற்றதாக இருக்க வேண்டும். நாட்டின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் மிகப் பெரிய இலட்சியத்துடனும், கனவுகளுடனும் பல்கலைக்கழக மானியக் குழு, இந்திய அறிவியல் கழகம் போன்ற எண்ணற்ற கல்வி நிறுவனங்களை உருவாக்கினார். அறிவியல் மேதை டாக்டர் அப்துல் கலாம் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் அதிக நேரம் செலவழித்து, அவர்கள் மத்தியிலேயே உயிரையும் விட்டது கல்வித்துறை மீதிருந்த அதீத அக்கறையின் வெளிப்பாட்டில்தான். இப்படி பல முன்னோடிகள் பற்பல கனவுகளுடனும், உன்னத நோக்கங்களுடனும் உருவாக்கி, பேணிப் பாதுகாத்த கல்வித்துறையை அரசியல், ஊழல் என்னும் கரையான்கள் அரித்து நாசமாக்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. உங்கள் காலத்தில் தானே கல்வித்துறை கறைபடிந்தது என்று நாளைய சமுதாயத்தினர் நம்மை ஏளனமாக கேட்டுவிடக் கூடாது. உடனடியாக செயல்பட்டு கல்வித்துறையை காப்பாற்றுவதற்கான முயற்சியில் அரசுகளும், கல்வி ஆர்வலர்களும், மாணவ, ஆசிரிய சமுதாயத்தினரும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கல்வித்துறை காப்பாற்றப்பட வேண்டும்.

- அபுல் ஹசன்

Pin It