கிராமப்புறத்தில், ஒரு குடும்பத்திலேயே; ஒரே பெயர் திரும்பத் திரும்ப வரலாம். அதாவது ஒரே பெயர் மூன்று நான்கு நபர்களுக்கு வைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக தாத்தாவின் பெயரையே பேரன்மார்களுக்கு வைத்திருப்பார்கள்.

ஒரு கிராமத்தை எடுத்துக்கொண்டால், ஒரே பெயரில் குறைந்தது பத்து பேராவது இருப்பார்கள். இந்த நிலையில், ஒரே மாதிரி பெயரைக்கொண்ட பல நபர்களில், ஒரு நபரை மட்டும் அடையாளப்படுத்தி அவரைப் பற்றி பேசுவதற்கும், அவரை அழைப்பதற்கும் ஏதேனும் செய்தாக வேண்டும். இந்த இடத்தில்தான் பட்டப்பெயர் தேவைப்படுகிறது.

ஒவ்வொரு பட்டப்பெயரின் பின்னாலும் மூன்று விசயங்கள் இருக்கின்றன. அவை, பெயர் சூட்டுபவர் யாரென்று தெரியாமல் இருப்பது, நகைச்சுவை உணர்வுடன் சொல்வது சகிப்புத் தன்மையோடு ஏற்றுக்கொள்வது எனச் சொல்லலாம்.

1. நாட்டுப்புறப் பாடல்களில் இன்னார்தான் பாடினார் என்று பாடியவர் பற்றிய செய்தி தெரியாது. யார் வேண்டுமானாலும் அதைப் பாடிக்கொள்ளலாம். அதே போன்றுதான், ஊரே ஒருவருக்குப் பெயர் வைத்து அழைத்துக் கொண்டிருக்கும். ஆனால் பட்டப்பெயர் வைத்தவர் மட்டும் யாரென்று தெரியாது.

2. பெயர் வைக்கப்படும்போது, நகைச்சுவை உணர்வானது அவர்களையும் அறியாமல் வெளிப்படுகிறது. பட்டப்பெயர் வைக்கப்பட்டவன், தனக்கு ஏன் அப்படி ஒரு பட்டப்பெயர் வைத்து அழைக்கிறார்கள் என்று, வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கெல்லாம் போகமாட்டான். காரண காரியம் கேட்காமல் ஏற்றுக்கொள்வான்.

ஒவ்வொரு நபருக்கும் பெயர் வைக்கப்படும் போது, அவரின் உடலமைப்பு, செய்யும் வேலை, சிறப்பான தன்மைகள், குறைகள் இவற்றைக்கொண்டு பட்டப்பெயர் வைக்கப்படும். இப்பெயர் வைப்புமுறை கிராமத்தானுக்குக் கைவந்த கலை. அவ்வளவு சீக்கிரத்தில் பெயர் வைத்துவிட மாட்டான். அவரின் உடலமைப்பு செய்யும் வேலை, சிறப்பான தன்மைகள், குறைகள் இவற்றைக்கொண்டும் ஆரம்பகாலம் முதற்கொண்டு ஒரு நபரின் நடை, உடை, பாவனைகள் அலசப்பட்டு அதில் தென்படும் தனித்தன்மைகள் கொண்டு பெயர் வைக்கப்படுகிறது. அப்படி வைக்கப்பட்டப் பெயர்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம். குச்சிக்கால், மொட்டச்சி, கப்பக்கால், பெலாபுட்டி, ஓட்டக்குண்டி, குட்லாய்னா, மலையங்குளம், பூஜேரி, சாவட்டை, மோட்டாசீனி, ஏட்டாய்னா, சேவு சீனி, சக்கட்டி, கிராம்ஸ், எர்நாலசீன, கொழாய்ஜெலா, பொட்டப்ப வாத்தரு, ராஸ்கோல், பட்டாளம்.

மேற்சொன்னவையெல்லாம் பெயர்கள் என்றால் நம்பமுடிகிறதா? தெரியாத பாஷையில் யாரையோ திட்டுவது போல் தெரியும். இவைகள் யாவும் பெயர்கள்தான்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலூகாவில் உள்ளது மல்லிப்புதூர் கிராமம். இங்கு குறைந்தது நூறுவீடுகளாவது இருக்கும். ஜனத்தொகையென்று பார்த்தால் குறைந்தது ஐந்நூறுபேராவது இருப்பார்கள். முக்கால்வாசிப் பேர் தெலுங்கு பேசுகின்றவர்கள்தான். இவர்கள் வைத்திருக்கும் பெயர்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம். பெயர்வைப்பு முறைகள் சமயோஜிதபுத்தியையும், நகைச் உணர்வையும் காட்டுவதாக அமைந்திருக்கின்றன.

குச்சிக்கால் சுப்புராம்: உடல்வாகுக்கேற்றவாறு கால்கள் இல்லாமல், குச்சி குச்சியாக நிற்கும். உடம்பையும், கால்களையும் தனித்தனியாக எடுத்து ஒட்டவைத்தது போல் இருந்ததால் இப்பெயர் பெற்றார்.

மொட்டச்சி சுப்புராம்: முப்பது வயதிலேயே முடி முழுவதும் போய் மொட்டையாகிவிட்டதால் இப்பெயர் பெற்றார்.

கப்பக்கால் சீனி: தெலுங்கில் ‘கப்ப’ என்றால் தவளை என்று அர்த்தம். அவர் நடக்கும்போது நேராக இல்லாமல் எதிரெதிர் திசையில் போகும், காலை, அகல வரித்து நடப்பார்.

பெலாபுட்டி சீனி: நல்லது கெட்டதுக்கு வெத்தலை வைக்கப் பயன்படும் பித்தளைப் பாத்திரத்தைத் தெலுங்கில் பெலாபுட்டி என்பார்கள். மேல் பக்கம் வட்டமான அகன்ற வாயுடனும், கீழ்ப்பக்கம் குறுகலாகவும் இருக்கும். சீனி நாயக்கரின் வாய் கொஞ்சம் பெரியதாக இருக்கும். எனவே இப்பெயர் பெற்றார்.

ஓட்டக்குண்டி: சின்ன வயதில் வயித்தால் (லூஸ் மோசன்) போய் கொண்டேயிருக்கும். அதோடு ஓடி ஆடி விளையாடக்கூடியவராம்.

குட்லாய்னா: தெலுங்கில் குட்லு என்றால் ‘முட்டை’ என்று அர்த்தம். அவருடைய முகத்தில் இரண்டு முட்டைகளை எடுத்து ஒட்டவைத்தது போல் கண்கள் பெரிது பெரிதாக இருக்கும்.

மலையங்குளம்: மலையங்குளம் என்ற ஊரிலிருந்து பிழைப்புக்காக வந்தவர். நிஜப்பெயர் என்னவென்று பாதி பேருக்குத் தெரியாமல் போய்விட்டது.

பூஜேரி சீனி: காலம் காலமாக கோயிலுக்கும் பூஜை வைப்பதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய குடும்பம். குடும்பத்திற்கே பூஜேரி (பூசாரி) குடும்பம் என்று ஆகிவந்தது.

சாவட்டை: சரியில்லாத (பயனில்லாத) கருவாட்டை தெலுங்கில் சாவட்டை என்பார்கள். அவர் மனைவி பேசச் சொன்னால்தான் பேசுவார். நடக்க சொன்னால்தான் நடப்பார். தானாக எதுவும் செய்யமாட்டார்.

மோட்டா சீனி: மிலிட்டரியில் இருந்து திரும்பியவர். ஆஜானுபாகுவாய் இருப்பார். ‘மோட்டா’ என்றால் பெரிய்ய என்று அர்த்தம். ஹிந்திக்காரர் ஒருவர் வைத்தப் பெயராம்.

ஏட்டய்னா : ஊரிலேயே முதன்முதலாக, காவல் துறையில் ஏட்டாகப் பணிபுரிந்தவர்.

சேவு சீனி: காரச் சேவு, இனிப்புச் சேவு என்று வகை வகையாக சேவு போட்டு, கடையில் விற்றதால் கிடைத்த பெயர்.

அங்கடி சீதாளு: நீண்ட நாட்களாகக் கடைவைத்திருந்த பெண்

சக்கட்டி வாத்தியார்: வாத்தியாராக வேலை பார்த்தவர். சக்கட்டி என்றால் களி என்று அர்த்தம். வாத்தியாரான அவருக்கு மிகவும் பிடித்தமான உணவு அது. வீட்டில் களி தயாரிக்கும்போது முதல் ஆளாகப் போய் தட்டு எடுத்துக்கொண்டு வந்து நிற்பார்.

கிராம்ஸ் பாலப்பா: கிராம அதிகாரியாகப் பணியாற்றியவர்.

எர்நால சீனி: எர்ந என்றால் சிவப்பு, நேல என்றால் நிலம். கரிசக்காட்டுப் பகுதியில், கொஞ்சமாய் இருந்த சிவப்பு நிலத்தில் பூச்செடி வைத்து பயிர் செய்தவர்.

கொழாய் ஜெலா: லட்சுமி வெடிக்கு, மருந்து உள்ளே வைப்பதற்கு முன்பு குழாய் போன்றது வேண்டும். பேப்பரைக் கம்பி வைத்து உருட்டி, பசையால் தடவி மூடிவிடுவதற்கு குழாய் உருட்டுதல் என்று பெயர். உள்ளூரில் குழாய் உருட்டுகின்றவர்களுக்கும், அதை வாங்கிக்கொள்ளவரும் சிவகாசி முதலாளிகளுக்கும் ஏஜென்ட்டாக இருந்ததால் கொழாய் ஜெலாவாக ஆனார்.

பொட்டப்ப வாத்தரு: வாத்தரு என்றால் வாத்தியார். பொட்ட என்றால் வயிறு. அவரைவிட்டு அவர் தொந்தி மட்டும் தனியாகத் தெரியும்.

ராஸ்கோல் பாப்பையா: மனைவி உட்பட யாரை அழைப்பதாக இருந்தாலும், திட்டுவதாக இருந்தாலும், அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை இதுதான். ராஸ்கல்தான் ராஸ்கோல் ஆனது.

பட்டாளம் ஜெயராம்: மிலிட்டரியில் வேலை பார்த்திருக்கிறார். ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் மிலிட்டரி அனுபவத்தைச் சொல்லாமல் விடமாட்டார்.

ஒவ்வொரு கிராமத்திலும் இத்தகைய பெயர்வைப்பு முறையும் பட்டப் பெயர்களும் இருக்கின்றன. அவைகளின் பின்னால் பல சுவராசியமான தகவல்கள் அடங்கியிருக்கலாம்.

நன்றி: கதைசொல்லி

Pin It