தந்தைப் பெரியார் என்னும் அறிவாயுதத்தைப் பயன்படுத்தி சமூக விடுதலைக்காகப் போராட வேண்டியதன் அவசியம் இன்று அதிகரித்து வருகிறது.

சமூக நல்லிணக்கம் நிலைபெற்றிருந்த தமிழர்களிடம் அவர்கள் கைகொண்ட வேலைப் பிரிவினையையே சாதிப் பிரிவினையாக்கி சமூகப் படுகொலையைச் செய்தவர்கள்ஆரியர்கள். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட திரிபுவாத, பேதவாத, வேத வாழ்வை முன்னிருத்திய ஆரியக் கூட்டத்தைக் குலைநடுங்கச் செய்து தமிழர்தம்பெருமையை மீட்பதில் பெரும்பங்காற்றியவர் தந்தைப் பெரியார்.

periyar 343ஆரியக் கூட்டத்தின் கொள்ளைகளால் மதி மயங்கிய தமிழர் கூட்டம் சாதியாக, மதமாக மாறி தங்கள் பெருமையை இழந்து நின்றபோதெல்லாம் ஐயா வைகுண்டர், நாராயணகுரு, வள்ளலார் போன்ற பல்வேறு புரட்சியாளர்கள் தோன்றி சமூக மீட்புக்காக தொண்டாற்றியுள்ளார்கள். தந்தைப் பெரியாரோ மனித நேயத்திற்காக ஒரு இயக்கத்தையே நடத்திக்காட்டினார். சாதியின் பெயரிலும், மதத்தின் பெயரிலும், ஆண்-பெண் பிறப்பின் அடிப்படையிலும் நடந்து வரும் சமூக அவலங்களை சமூக ஒடுக்குமுறைகளை எதிர்க்கத் துணிந்தார். பிறர் நமக்குத்தரவேண்டும் என்று சிந்திக்கிற சுயமரியாதையை அடுத்தவருக்கு நாம் தர வேண்டாமா என்று கேள்வி எழுப்பினார். தந்தைப் பெரியார் மூட்டிய தீயினால் வேத மரபுச் சிந்தனைகள் எரிந்துசாம்பலானது.

இன்ன இனத்தவர்தான் படிக்க வேண்டும், பெண்கள் படிக்கக்கூடாது, வயது வேறுபாடு இன்றி கணவனை இழந்த பெண்கள் மொட்டையடித்துக்கொண்டு காவி உடைஉடுத்திக்கொண்டுதான் இருக்க வேண்டும், வேதம் படித்தவர்களே மருத்துவம் படிக்க வேண்டும் என்றெல்லாம் இருந்த சமூகப் பழக்கங்களை தனது சுயமரியாதைக் கொள்கைகளைக்கொண்டு துடைத்தெரிந்தார். இன்று கணவனை இழந்த பார்ப்பனியப் பெண்கள் வேத மரபுப்படி மொட்டையடித்துக்கொண்டு இருப்பதில்லை. மருத்துவம் படிக்க சமற்கிருதம் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. எல்லா இனத்தவரும் கல்வி கற்று உயர் பதிவிகளை அடையமுடியும். இவையெல்லாம் வேத-மநு தர்மத்திற்கு எதிரானது.

பாட்டாளி மக்கள் கட்டிய கோவிலுக்குள் பாட்டாளிகள் செல்லக்கூடாது என்ற விதியை மாற்றி கோவில் கருவறை வரைக்கும் யாரும் செல்லலாம் என்ற தற்போதையசட்டங்களுக்கெல்லாம் ஆதாரமாக இருந்தவர் தந்தைப் பெரியார். வேத மரபு பழக்க வழக்கங்கள் மக்களிடம் பெருமளவு குறைந்துவிட்ட இந்த காலத்தில், மலட்டு வேதாந்தச் சிந்தனைகளைகடைபிடிப்பதிலிருந்து விலகி வரத்தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில், காரணமற்ற சடங்குகளுக்கு பெரும் செலவு செய்யும் தமிழர்களின் மனப் போக்கு மாறியுள்ள இந்த காலத்தில்-இன்றும் மதத்தின் அடிப்படைவாதம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. சாதியின் பெயரை தனது பெயருக்குப்பின் போட்டுக்கொள்ள வெட்கப்பட்டச் சமூகம் சாதிய அடையாளங்களை மீட்கத்தொடங்கியுள்ளது. சாதியின் வேரைத் தேடி தமிழ்தேசியம் பேசுவது தற்கால நாகரீகமாக மாறிவருகிறது. தமிழ் தேசியமும், மதவாதமும் கைகோர்த்துக்கொண்டு சாதியத்தை வளர்த்துவருகிறது. இந்நிலையில் பெரியார் முன்னிலும் அதிக வீரியத்தோடு தேவைப்படுகிறார்.

காவிச் சிந்தனை. . .

பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததற்கு பின் காவிப் பயங்கரவாதம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. வட மாநிலங்களில் பார்ப்பனிய வேத மரபுப்படிதாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. ஒருவர் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை சட்டமாக்கும் அளவுக்கு காவிச்சிந்தனை வளர்ந்துள்ளது. நாடு முழுவதும்கல்வித்துறையில் சாதியத்தையும், அர்த்தமற்ற சடங்குகளையும் கல்வித்து​றைக்குள் புகுத்திவருகிறார்கள். பொருளற்ற பார்ப்பனிய பழக்கவழங்கங்களுக்கு புதிய பொருள்கற்பிக்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தல் ஆட்சியாளர்கள் வரும்போது தாழ்த்தப்பட்ட மக்கள் குளித்துவிட்டு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சமற்கிருத மொழியைஎல்லாப் பள்ளிகளிலும் திணிக்க வேண்டும் என்று கூறிவருகிறார்கள். மனோன்மணியம் சுந்தரம் அவர்களால் வழக்கொழிந்த மொழியாக அறிவிக்கப்பட்ட சமற்கிருத மொழியை உயிர்பிக்கபல கோடிகள் செலவிடப்படுகிறது. இன்னும் பலகோடிகளைச் செலவு செய்தாலும் சமற்கிருத மொழி மக்களின் வழக்கு மொழியாக மாறாது என்பது தெரிந்தும் மக்கள் மொழிகளைப்புறந்தள்ளி - பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவேண்டும் என்பதற்காக இதுபோன்ற பொருளற்ற வேலைகளை பா. ச. கட்சி ஆட்சி செய்து வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடைய மோதலை உருவாக்கி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளைப் பறிக்கும் வேலையை காவிச் சிந்தனையாளர்கள் ஊடகங்கள் மூலம் பரப்பிவருகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களை உயர் பதிவிகளின் அமர்த்தி தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறித்திட திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இடஒதுக்கீடு மூலம்வேலைவாய்ப்பைப் பெறுவதை இழிவானதாகச் சித்தரிக்கும் பொதுப் புத்தியை ஊடகங்கள் மூலம் திணித்து வருகிறார்கள். பெரும்பாண்மைச் சமூகமான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டமக்களின் உரிமைதான் இடஒதுக்கீடு என்பதை மாற்றி தகுதியற்ற நிலைதான் இடஒதுக்கீடு என்று சிந்திக்கத் தூண்டுகிறார்கள்.

பெண்ணடிமைத்தனம்

பெண்கள் ஆண்களின் அடிமைகளாகவே எல்லா மதங்களும் கூறி வருகிறது. குறிப்பாக இந்துமதம் தமிழர்களின் சிந்தனைக்கு மாறுபட்டு பெண்கள் ஆண்களின் தேவைக்காகமட்டுமே உள்ளார்கள். ஆண்களுக்கு சேவை செய்வதே பெண்களின் கடமை. முதலில் தந்தைக்கும், கணவனுக்கும் கடைசியில் பெற்ற மகனுக்கும் அடிபணிந்து வாழவேண்டியதுபெண்களின் நிலையாக உள்ளது. பெண்கள் படித்து அரசுப்பதவிகளில் அமர்ந்தாலும் குடும்பத்திற்கு கட்டுப்பட்டு சுய சிந்தனை அற்றவர்ளாக இருக்க வேண்டும் என்பதுதான் இன்றும்பெரும்பான்மையாக உள்ள நிலை. உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளில் உள்ள பெண்கள் இன்றும் தங்கள் வீட்டு ஆண்களின் கட்டுப்பாடுகளுடனேயே செயல்பட்டு வருகிறார்கள் என்பதேஎதார்த்தமாக உள்ளது. மனித குலத்தில் சம பங்கு உள்ள பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்குக்கூட இந்திய ஆளும் வர்க்கம் முரண்பட்டு நிற்கிறது. பெண்கள் சுயமாகசிந்தித்து சுயமாக தங்களுக்கான துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இன்றும் மறுக்கப்பட்டே வருகிறது.

சாதிய ஏற்றத்தாழ்வுகள்

பார்ப்பனியக் கொடுமைகளை அகற்றிட பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம் கண்ட தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் அல்லாதார் இயக்கத்தைக் கட்டியமைக்கத் துடிக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பிற சாதி பெண்களை மணந்தால் கொலை செய்துவிடும் அளவுக்கு சாதியத் தீண்டாமை இன்றும் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்பினைப் பெற்றுநகர்பகுதிக்குள் குடியேறும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் சாதியைச் சொல்லி வீடு பிடிக்க முடியாத நிலைதான் இன்றும் கட்டமைக்கப்படுகிறது. வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டின்படி 69இல் 18 விழுக்காடு மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த இடஒதுக்கீடும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் விதைக்கப்படுகிறது. இந்தியச் சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பிரிவினைவாதம்தூண்டிவிடப்படுகிறது. இடஒதுக்கீட்டு முறையை அகற்றி ஒட்டுமொத்த பலனையும் பார்ப்பனியமே அனுபவிக்கத் துடிக்கிறது.

தமிழ் மொழி உரிமை

உலக மொழிகளுல் செம்மொழியாக அறியப்பட்டுள்ள ஆறு மொழிகளுல் தலையாய மொழியான தமிழ் மொழி இன்று தன்னிலை இழந்து இந்திய பார்ப்பனிய ஆட்சியாளர்களிடம்உரிமைகேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. விடுதலையடைந்து 70 ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதும் இந்தி மொழியே இந்தியாவில் இன்றும் நிர்வாக மொழியாக உள்ளது. டிஜிட்டல் இந்தியா, வளர்ச்சி இந்தியா என்று பெயரளவுக்கு உள்ள இந்திய ஆட்சி முறையில் மத்திய அரசின் இணையதளங்களில் தமிழுக்கு இடமில்லை. மத்திய அரசின் பணியாளர் தேர்வுமுறைகளில் தமிழ் இல்லை. தமிழ்நாட்டில் தமிழ்நாடு உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காட உரிமையில்லை. மெட்ராஸ் உயர்நீதி மன்றம் என்ற பெயரையே தமிழ்நாடு உயர்நீதி மன்றம்என்று மாற்ற முடியவில்லை. தமிழ்நாடு அரசால் கட்டப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் தமிழ் மாணவர்கள் சேர்ந்து படிக்க மத்திய அரசின் பாடத்திட்டத்தின்படி போட்டித் தேர்வு எழுதவேண்டிய கட்டாயம் உள்ளது. எங்கும், எதிலும் தமிழ் மணம் பரவவேண்டும் என்ற வார்த்தைகள் வெற்று வாதங்களாகிப்போயுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில்பெரும்பாலும் தமிழ் படிவங்கள், விண்ணப்பங்கள் வழங்கப்படுவதில்லை. தமிழ்ப் பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது.

இடஒதுக்கீடு – உரிமைப்பங்கீடு

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் சட்டத்திருத்தமே பெரியார் கொண்டுவந்த இடஒதுக்கீடு தொடர்பான சட்டத்திருத்தம்தான். ஆனால் இன்றுபா. ஜ. கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு இடஒதுக்கீட்டின் கூறுகள் மழுங்கடிக்கப்பட்டு வருகிறது. பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. அரசுத்துறை நிறுவனங்களை அழித்துஇடஒதுக்கீட்டையும் அதோடு சேர்த்து அழிக்கப் பார்க்கிறது ஆளும் அரசு. போட்டித் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் என்று பல்வேறு முகமூடியணிந்து இடஒதுக்கீட்டைக் களவாடும்பார்ப்பனியம் வளர்ந்து வருகிறது

தமிழ்நாட்டு உரிமைகள்

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்திற்கு பா. ஜ. க. தொடர்ந்து சிக்கலை உண்டாக்கி வருகிறது. நில உரிமை, நிலம் பறிப்புச் சட்டத்தின் மூலம்பிடிங்கிக்கொண்டது. கல்வித் துறையில் மாநில அரசின் தனித்துவத்தை இழக்கச் செய்யும் வகையில் இந்தியா முழுவதும் ஒரே போட்டித் தேர்வை உருவாக்கி அப்போட்டித்தேர்வுகள்அனைத்தும் மத்திய அரசின் பாடத்திட்டத்தின்படியே நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் காவிரி உரிமையை இந்திய அரசு மதிக்காமல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல் காவிரிஒழுங்காற்றுக் குழுவை இன்னமும் அமைக்காமல் உள்ளது. தமிழக வேளாண் நிலங்களையெல்லாம் தரிசு நிலமாக்கும் முகமாக காவிரிநீர் உரிமையில் மத்திய அரசு தமிழ்நாட்டைவஞ்சிக்கிறது. தமிழக வேளாண் நிலங்களில் எல்லாம் மீத்தேன் போன்ற கொடிய திட்டங்களைத் தீட்ட அணியமாக உள்ளது.

இந்நிலையில் தந்தைப் பெரியாரின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு அவரின் அறிவாயுதம் ஏந்தியத் தோழர்களாய் களப் போராட்டம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. தமிழ் சமூகக் கட்டமைப்பில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இளைஞர்களே அணிதிரள்வீர். ​பெரியாரியம் தாங்கி தமிழகம் காப்​போம்…

- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர்

Pin It