(காலத்தின் தேவையறிந்து பேராசிரியர் சுப.வீ அவர்கள் எழுதிய ‘பெரியாரின் இடது சாரித் தமிழ்த் தேசியம்' நூலின் அறிமுகக் கூட்டம் ஈரோடு ராணா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. உணர்வுள்ள தமிழர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதத்தில் அரங்கம் நிறைந்திருந்த அந்த நிகழ்வில் பொறி பறந்த உரை நெருப்புகளிலிருந்து....)

2000 ரூபாய்க்காக
மிதிபட்டுச் சாகிற
அவல வாழ்வு கொண்டது
நம் தேசம்!
பணம் வருமென்று
காத்திருந்த குடும்பத்திற்கு
வந்து சேர்ந்தது
அவரவர் பிணம்!

எனத் தமிழகத்தின் அவல உண்மையைக் கவிதை வரிகளாய்க் கவிஞர் பச்சியப்பன் வழங்க, அந்த அப்பாவி மக்களுக்கான மவுன அஞ்சலியுடன் விழா தொடங்கியது. வரவேற்புரையை ம.தி.மு.க.வின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் நிகழ்த்த, நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க வேண்டிய பழ. நெடுமாறன் அய்யா பங்கேற்க இயலாததாலும் அவருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டிருப்பதாலும் ம.தி.மு.க.வின் ஈரோடு மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தி தலைமையேற்றார்.

வைகோ:

புரட்சி என்றால் எரிமலை, புரட்சி என்றால் பூகம்பம், புரட்சி என்றால் தலைகீழ் மாற்றம். இப்படித்தான் நான் படித்திருந்தேன். ஆனால், சிரில் மாத்யூ என்கின்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தினுடைய பேராசிரியர், புரட்சி என்பதற்கு ஒரு விளக்கம் தருகிறார். அயர்ந்து போனேன் அந்த விளக்கத்தைக் கேட்டு.

புரட்சி என்றால் என்ன? தமிழ்நாட்டிலே ஈரோட்டிலே பிறந்த ஈ.வே.ராமசாமி அவர்களுடைய வாழ்க்கை வரலாறுதான் புரட்சி. சொல்லுபவன் யார்? ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தினுடைய பேராசிரியர். விருப்பு வெறுப்பின்றி உலகச் சிந்தனையாளர்கள் பற்றிய புத்தகங்களையெல்லாம் ஆய்வு செய்துவிட்டு அவன் சொல்லுகிறான். அப்படிப்பட்ட பெரியார் பிறந்த மண்ணில் அண்ணன் பழ. நெடுமாறன் பேச முடியவில்லை. தமிழ் முழக்கம் சாகுல் முழங்க முடியவில்லை. பேராசிரியர் சுப.வீ. பேசமுடியவில்லை. அவர்கள் பேசமுடியாத ஒவ்வொரு நாளும் இந்த மண்ணுக்குப் பூட்டப்பட்ட விலங்காகவே நான் கருதுகிறேன். இந்த விலங்குகள் உடைக்கப் படவேண்டும் என விரும்புகிறேன்.

Vaikoபிரிட்டிஷ் அரசின் தாசர்களாக கருஞ்சட்டைக்காரர்கள் இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டு, பெரியார் காலத்திலே எழுந்தபோது, குடியரசு இதழிலே அவர் எழுதுகிறார். "யார் பிரிட்டிஷ்காரர்களுக்கு அடி வருடிகள்? ஜாலியன் வாலாபாக்கிலே ரத்தக் களரி. டயர் சுட்டான். அந்தக் கொடுமைகளை கண்டிப்பதற்காக எங்கள் பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு மாளிகையிலிருந்து வெளியே வந்து கட்டை வண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலும் ஊர் ஊராகச் சென்று மக்களைத் திரட்டுகிற காரியத்தில் நாங்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில், என்ன நடந்தது?

பஞ்சாப்காரன் செங்கல்லால் அடித்தான். பிரிட்டிஷ்காரன் பதிலுக்கு ஈயக்குண்டால் அடித்தான். இதில் படுகொலை என்ன வேண்டிக் கிடக்கிறது என்று விளக்கம் கொடுத்தாரே அன்னிபெசன்ட், அவர் சொல்வதுதான் சரி என்று அவரது தாழ்வாரத்திலே அடிமைகளாகப் போய்க் கிடந்தார்களே சீனிவாச அய்யங்கார்கள். இந்தக் கூட்டமா எங்களைப் பார்த்து பேசுவது?'' என்று குடியரசிலே அவர் கூறுகிறார்.

இதை நான் குறிப்பிடக் காரணம், பாஞ்சாலத்திலே நடந்த நிகழ்ச்சி கண்டு கொதித்தெழுந்து போன தந்தை பெரியார்தான் வீதிக்கு வருகிறார். அதைத்தான் 1921லிலே யங் ஈந்தியா பத்திரிகையிலே மகாத்மா காந்தி எழுதும்போது, வங்கத்திலே இளைஞர்கள் போல் தென்னகத்திலே தீரர்கள், திராவிடர்கள் தயாராகிவிட்டார்கள் என்கிறார். திராவிடர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்திவிட்டு, பெரியாரின் துணைவியாரும் பெரியாரின் சகோதரியாரும் களத்திலே நிற்பதை சுட்டிக்காட்டுகிறார்.

ஈரோட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில், மார்க்சும் ஏங்கெல்சும் வழங்கிய கம்யூனிஸ்ட் மேனிபெஸ்ட்டோவைத் தமிழில் வெளியிட்டு, அதைக் குடியரசு ஏட்டிலே அறிவித்தவர் தந்தை பெரியார். அந்த மாநாட்டிலேதான் சமதர்மக் கொள்கைகளை வெளியிடுகிறார். மதத்தைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் மூடநம்பிக்கைகளைப் பற்றியும் அதனைப் பின்பற்றுகின்ற பண்டிதர்களைக் கண்டித்தும், அவற்றை ஒழிப்பதற்காகக் குரல் கொடுக்கிற ஒரு வேலையை மட்டும் இந்தக் கட்சி செய்து கொண்டிருக்கும் என்று எவரும் கருத வேண்டாம். இவையெல்லாம் ஒழிக்கப்பட வேண்டியதுதான். இவை ஒழிக்கப்பட்டதோடு இந்த இயக்கத்தின் வேலை நின்றுவிடாது.

ஒருவன் உழைத்து உழைத்து வேதனையில் வாடவும், இன்னொருவன் உண்டு கொழுக்கவுமான நிலை இருக்கின்ற வரையில், அந்த நாள்வரையில், ஒருவன் ஒருவேளை சோற்றுக்கு வழியின்றி பசியால் துடித்துச் சாகவும், இன்னொருவன் 5 வேளை சாப்பிட்டுவிட்டு, சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து வயிற்றைத் தடவிக் கொண்டிருக்கவுமான நிலை இருக்கின்ற வரையில், ஒருவன் உடுப்புக்குக் கீழே மானத்தை மறைப்பதற்கு ஒரு வேட்டி கிடைக்காமல் திண்டாடவும், இன்னொருவன் ஒரு நாளைக்கு 3 உடைகள் மாற்றிக்கொண்டு உல்லாசமாகக் கொண்டாடவுமான நிலைமை இருக்கின்ற வரையில், செல்வந்தர்கள் தங்களுக்குக் கிடைத்திருக்கின்ற சுகபோகங்கள் எல்லாம் அனுபவிப்பதற்கே என்கிற அக்கிரமம் நீடிக்கும் வரை இந்த இயக்கத்தின் வேலை இருக்கும் என்று அறிவித்தவர் தந்தை பெரியார்.

வாழ்வில் பள்ளத்தாக்குகளும் பீடபூமிகளும் இல்லாத சமமான சமுதாயம் அமைய வேண்டும் என்று மார்க்ஸ் சொன்ன பிறகுதான் பெரியார் ஐரோப்பிய மண்டலத்திற்குச் (சோவியத் யூனியன் உள்ளிட்ட நாடுகளுக்குப்) பயணம் போனார்.

உலக நாடுகளின் வரலாறுகளைப் பாருங்கள். கிழக்குத் தைமூர் பிறந்திருக்கிறதே! உலகத்தில் புதுப்புது நாடுகளின் கொடிகளெல்லாம் ஐ.நா. மன்றத்திற்கு முன்னால் அணி வகுக்கின்றனவே! இதற்கான காரணங்கள் ஈழத்தமிழர்களுக்குப் பொருந்தாதா? அதனால்தான் திருச்சியிலே நாங்கள் சொன்னோம், தனித் தமிழீழம் ஒன்றுதான் தீர்வு என்று. இன்றளவிலும் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. ஈரோட்டிலே நடத்திய பொதுக்குழுவிலே நாங்கள் நிறைவேற்றிய தீர்மானம் பொடா நீதிமன்றத்தின் குற்றப் பத்திரிகையிலே இடம்பெற்றிருக்கிறது. சந்தோஷப் படுகிறேன். வருங்கால வாலிப உலகம் அதைப் படிக்கட்டும். ஆயுதப் போராட்டத்தால் துன்பப்பட்டார்கள் என்றால், ஆயுதப் போராட்டம் நடத்தாத நாடு எது? வெள்ளைக்காரன் ஆட்சி செய்தான். ராட்டையை காட்டினீர்கள். அடுத்த ஜெர்மனிக்காரன் வந்திருந்தால் உங்க கதை என்னவாகியிருக்கும்? காலத்திற்குத் தகுந்த, இடத்திற்குத் தகுந்த போராட்டம் ஈழத்திலே நடைபெறுகிறது. மக்கள் அவர்களோடு இருக்கிறார்கள்.

நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். பெரியார் சொன்னார், "அந்தச் சிங்கள தேசத்திலே தமிழன் நாயா அவதிப்படுறான் உனக்குத் தெரியுமா? உனக்கு ரத்தச் சொந்தம் இருந்தா, உணர்ச்சி இருந்தா நீ அதை நினைப்பே... உனக்கு உணர்ச்சி இருக்கா' என்று அப்போதே கேட்டார். பெரியார் இன்று இருந்தால் எத்தகைய கருத்துக்களைச் சொல்லியிருப்பார் என்று எண்ணிப் பார்க்கிறேன். காலம் இப்படியே இருக்காது. எந்த உரிமைக்காக ஈழத்திலே போராடுகிறார்களோ அந்த உரிமையைப் பெறுவார்கள்.

பெரியார் ஊட்டிய தன்மான உணர்வின் அடிப்படையில் பேசுகிறோம். எங்கள் சகோதரர்களுக்காக எங்கள் தொப்புள் கொடி உறவில் பிறந்த சகோதரிகளுக்காகப் பேசுகிறோம். பேசுவோம்.

இயக்குநர் மணிவண்ணன்:

குஷ்பு ஏதாவது பேசிட்டுப் போயிடுது. அதுக்கு நாம பதில் சொல்லி வக்கீலாக வேண்டியிருக்கு. அப்புறம் மக்களே அதை மறந்திடுறாங்க. ஆனா, சுகாசினி மாதிரி இருக்கிற பொம்பளைங்க சும்மா இருக்கிறதில்லை. அவங்களுக்கு விவசாயத்தைப் பத்திக் கவலையா? தண்ணி வந்தா என்ன! வராட்டி என்ன! மணிரத்னத்திற்குப் பணம் வந்தா ஹேப்பி! அதனால, தமிழனுக்குக் கொம்பு இருக்கான்னு கிளப்பி விட்டுடுறாங்க. கொம்பு இருந்தா அவன் மனுசன் கிடையாது. அவங்க படிச்ச அர்த்த சாஸ்திரத்துல, புராணங்களிலே கொம்புள்ள மனிதர்களைப் பற்றிப் படிச்சிருப்பாங்க. அவங்க கொம்பைப் பத்தி ஞாபகப்படுத்திவிட்டுப் போயிட்டா அதுக்கு நாம பதில் சொல்ல வேண்டியிருக்கு. சினிமாவுல இருக்கிறதால இப்படிப் பல பிரச்சினைகள்.

திடீர்னு ஒருத்தர் கட்சி அரம்பிச்சிருக்காரு. அவரு எப்பவோ ஒரு நடிகை தொப்புளில் பம்பரம் விட்டதுக்கு என்னை இப்பக் கேட்குறாங்க. அதுக்கு நான் என்ன பண்ணுறது? பம்பரம் விட்டவனை சீப் மினிஸ்டர் ஆக்குறதுக்கு நீங்க தயாராயிட்டீங்க. எல்லாக் கட்சி பேருலேயும் திராவிடம் இருக்கு. இவர் கட்சி பேருலேயும் திராவிடம் இருக்கு. அந்தக் கட்சிக்கு பேரு வச்சவனே ஜோசியக்காரன். கடைசி இரண்டு நாள் வரைக்கும் கட்சிக்குப் பேர் சொல்லவே மாட்டேங்குறான். இந்த மாதிரி ஒரு விநோதம் உலகத்துல எந்தக் கட்சிக்கும் கிடையாது. ஹிட்லர் கூட இப்படியெல்லாம் அயோக்கியத்தனம் பண்ணலை.

Manivannanகட்சித் தலைவரைப் போய், ‘உங்க கட்சிக்கு பேரு என்ன?'ன்னு கேட்குறாங்க. அவரு, யோசிச்சிட்டிருக்கேங்குறாரு. இன்னும் 2 நாள்தான் இருக்கு. உன்னை நம்பி தமிழ்நாட்டுலேயிருந்து லட்சக்கணக்கான பேர் திரண்டு வந்து, என்ன சொல்றேன்னு வாயைத் திறந்து பார்க்கப் போறான். வாயைத் திறந்து பார்க்குறது எங்களுக்கு பழகிப் போச்சு. டெண்ட்டு கொட்டாயில பார்த்தோம். ஏ.சி. தியேட்டர்ல பார்த்தோம், இப்ப சின்னத் திரையில பார்க்குறோம். எவனாவது எங்களுக்குச் சீப் மினிஸ்ட்டரா கிடைப்பானான்னு.

ஏமாறுறது எங்களுக்கு பழக்கமாயிடிச்சி. ஆனா, நீ ஏமாத்துறியே அதையாவது புத்திசாலித்தனமா செய்யக்கூடாதா? கட்சிக்கு பேர் கேட்டா இல்லை, கொள்கை என்னன்னு கேட்டா "எல்லோருக்கும் கொள்கையா இருக்கு?ன்னு கேள்வி. அப்படிப்பட்ட கட்சியோட மாநாட்டுல அய்யா பெரியாரோட படத்தை வைக்கிறாங்க. இப்படியே போச்சுன்னா அய்யாவுக்குச் சின்ன பூணூலை வரைஞ்சுவுட்டுடுவாங்க. நாமளும் வாயைத் திறந்துட்டு பார்ப்போம். நம்ம முருகனுக்கு பூணூல் போட்டான்ல! கேள்வி கேட்டோமா? ஏத்துக்கிட்டோம்ல. இந்த மாதிரி சூழ்நிலையிலதான் நாம் பெரியாரோட கொள்கையைப் பரப்புவதில் தீவிரமா இருக்கணும்.

அய்யா அவர்கள் தலித்துக்காக எதுவும் பண்ணலைங்கிற கேள்வியை எழுப்புவதில்கூட எனக்கு ஒரு சந்தோஷம். அவங்க கருத்து ரீதியாகத்தான் நம்மகிட்டே மோதுறாங்க. நம்ம கிட்ட ஒரு கருத்து இருக்கு. அதனால அவங்க மோதுறதில நமக்கு சந்தோஷம். அவங்க நமக்கு எதிரியில்லை. நமக்கு உண்மையான எதிரி யாருன்னா, பெரியாரைப் போஸ்டரில் போட்டு ஏமாத்துற ஆளுங்கதான். அவங்ககிட்ட நாம ஜாக்கிரதையா இருக்கணும். அதற்கான இயக்கத்தை நாம முன்னெடுத்துச் செல்லணும்.

நாம உண்மையைச் சொன்னா பிரிவினை வாதிம்பான். ஈரோட்டிலும் கோவை மாவட்டத்திலும் உள்ள தொழிலதிபர்களுக்கு உண்மை தெரியும். இன்றைக்கு எத்தனை பஞ்சாலைகள் நம்ம தமிழன் கையில் இருக்கு? 25 ஆண்டுகளுக்கு முன் நம் கையில் இருந்த பஞ்சாலைகள் தொழில் நிறுவனங்கள் இன்னைக்கு யார் கையில் இருக்கு? பணத்தை உருவாக்கக்கூடிய சொத்துக்களெல்லாம் இன்னைக்கு வடநாட்டான் கையில் இருக்கு. இது மறுக்க முடியாத உண்மை. அவனுக்கெல்லாம் அப்பன் பில்கேட்ஸ் கோபாலபுரத்துக்கு வந்து தலைவரைப் பார்த்துக் கை கொடுத்துப் பேசிட்டுப் போறான். திருக்குறளைப் பத்தி வேற அவனுக்கு சந்தேகம். பில்கேட்ஸ் நம்ம நாட்டைத் தேடி வர்றான்னு பெருமையாக சொல்றாங்க.

நானும் என் சம்சாரமும் சன் டி.வி. பார்த்து கிட்டிருந்தோம். தலைவர் உட்கார்ந்திட்டிருக்காரு. அந்தப் பக்கம் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உட்கார்ந்துட்டிருக்காரு. இந்தப் பக்கம் பில்கேட்ஸ் ரொம்ப பவ்யமா உட்கார்ந்துகிட்டு கேள்வி கேட்டுக்கிட்டிருக்காரு. என்ன இருந்தாலும் என் சம்சாரம் தி.மு.க. குடும்பமாச்சே, "பார்த்தீங்களா தலைவரை.. பிச்சிட்டாரு. உலகத்திலேயே பெரிய கோடீஸ்வரன். கம்ப்யூட்டரை கசக்கிப் பிழிந்து கோவணத்தில் கட்டி வச்சிருக்கான். அப்படிப்பட்டவனை கோபாலபுரத்துக்குக் கூட்டிக்கிட்டு வந்து நாய்க்குட்டி மாதிரி உட்கார வச்சிருக்காரு. அவருதாங்க தலைவரு''ன்னு சொன்னாங்க.

கரெக்ட்டுதாம்மா... வாஸ்கோடகாமான்னு ஒருத்தன் வந்தான். கேரளா எல்லையில வந்து இறங்கினான். அப்ப இருந்த மகாராஜாவும் இப்படித்தான் நினைச்சான். பார்த்தியா வெள்ளைக்காரன் வந்துட்டான். பிராந்திங்கிறான், விஸ்கிங்கிறான், ஒயினுங்குறான். நம்ம சரக்கைவிட இது நல்லா இருக்குன்னு பெருமைப்பட்டான். வந்தவன், இப்படி ஒரமா கடை வச்சிருக்குறேங்கன்னான். நம்மிள் பொருள் நீங்க வாங்குறான். நிம்மிள் பொருள் நாம வாங்குறான்னான். இவனும் விட்டுட்டான். அப்புறம், இங்க போலீஸ் நல்லா இல்லே. சண்டை போடத் தெரியலே. நம்மள் போலீஸ் வையுன்னான். கடைசியில் பார்த்தா நாம எல்லாம் பிரிட்டிஷ் குடிமக்களாயிட்டோம். வந்தவன் கிளம்ப மாட்டேங்குறான். 200 வருஷம் போராடினோம். யோசித்துப்பாருங்க.

இவன் இந்த ஊர்க்காரன் என்பதற்கு அடையாளம் நாம் பேசுகிற மொழி. இந்த தேசத்தையும் இந்த மொழியையும் எவ்வளவுக்கெவ்வளவு நேசிக்க ஆரம்பிக்கிறோமோ அப்பதான் இது தமிழ்நாடாக இருக்கும் இல்லேன்னா தமிழ்நாடு மார்வாடிகளின் நாடாயிடும். இங்கே ஒரு புதுத் தலைவர் பேசுனாரு. "இந்தி படிக்காம எப்படி வேலை கிடைக்கும்? நீங்க எல்லோரையும் கெடுத்துப் போட்டீங்க! தமிழ் தமிழ்னு படிச்சீங்க. அலையுங்க''ன்னு சொன்னார்.

எனக்கு குழப்பம். இந்தி படிச்சா வேலை கிடைக்கும்னா, அப்ப சோன்பப்டி விக்கிறவன்லாம் யாரு? பேல் பூரி விக்கிறவன்லாம் இந்திக்காரன் தானே. அவன் ஏன் வேலையில்லாம இங்கே வர்றான். இதையெல்லாம் மக்களுக்கு சொல்லித் தர, பெரியார் தேவைப்படுகிறார்.

(நன்றி: தாகம் ஜனவரி 2006)

Pin It