ஐயாயிரம் கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவருக்கு கடன் கொடுத்த வங்கிகாரனுங்க எவனும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அந்த கடனைக் கொடுக்கச் சொன்ன நிதியமைச்சரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும் எங்கள் ஏழை உழவன் சில ஆயிரம் கடனை திருப்பிக்கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஏனென்றால் இவனுக்கு மானம் தான் பெரிது என்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

farmerசிவகார்த்திகேயன் மேடையில் கண்ணீர் சிந்தியவுடன் அவரை அழைத்து பேட்டி எடுத்தன நடுநிலை ஊடகங்கள். சுவாதி என்ற பார்ப்பனப் பெண் கொலை செய்யப்பட்ட போது கோவப்பட்ட நீதிபதிகள், விசாரணையில் தொய்வு ஏற்பட்டிருப்பதற்காக கடும் கண்டனம் தெரிவித்துவிட்டு, அதன்பிறகும் விசாரணையில் தொய்வு இருந்தால் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் எச்சரித்தனர். ஆனால் இதுவரைக்கும் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தகவல்கள் வந்தும் ஜனநாயகத்தைக் காக்கும் இந்தத் தூண்கள் கள்ள மௌனம் காக்கின்றன.

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் போதிய அளவு இல்லாமல் போனதால், காவிரி கடைமடைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொள்ளும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்துள்ள பரங்கிநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயபால் தனது மகன் திருமணத்துக்காக வைத்திருந்த பணத்தை வைத்து சம்பா சாகுபடி செய்திருக்கிறார். போதுமான தண்ணீர் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் வந்து படுத்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கிறார்.

சென்ற காங்கிரஸ் ஆட்சில் "விவசாயிகள் விவ​சாயத்தை​விட்டு வெளி​யேறி வேறு தொழில்களில் வேலைவாய்ப்பைத் தேட வேண்டும்" என்று ஒரு நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் கூறினார். "விவசாயிகள் பசி மற்றும் வேலையின்மையால் மட்டுமே தற்கொலை செய்யவில்லை. அவர்கள் தற்கொலை செய்வது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. விவசாயிகள் தற்கொலை செய்வதால் மாநில அரசுகள் நிதி அளிக்கிறது. அதனால்தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்" என்று கிண்டல் செய்தார் பாஜக எம்.பி. கோபால் ஷெட்டி.

"விவசாயிகளின் தற்கொலை சாவுகளுக்கு காரணம் ​கடன் சுமையோ, விவசாயப் பிரச்சனையோ காரணமல்ல. காதல் விவகாரம், குடும்பப் பிரச்சனைகள், நோய்கள், ஆண்மையின்மை, போதை மருந்து, குடிப்பழக்கம், வரதட்சணை போன்ற தனிப்பட்ட விசயங்கள் தான் காரணம்" என்று வாய் கூசாமல் சொன்னவர்தான் தற்போதைய மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்.

சென்ற ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சம்பாப் பயிர் கருகியதால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தர வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், விவசாயிகள் எவரும் பயிர் கருகியதால் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனக் கூறி, ஏற்கனவே மனம் நொந்து தவிக்கும் டெல்டா மாவட்டத்து விவசாயிகளுக்குப் பேரிடியைத் தந்தனர்.

"விவசாயிகள் பைனான்ஸ் கம்பெனி நடத்திகிறார்கள், வங்கிகளில் பணத்தை முதலீடு செய்துள்ளனர், கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ளதோடு பல தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடத்துவது தேவையற்ற போராட்டம்" என்று பேசி கொந்தளிப்பை ஏற்படுத்தினர் அதிமுக அமைச்சர் கருப்பண்ணன்.

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் தற்கொலை சம்பவங்களை அலட்சியப்படுத்தக் கூடாது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் கேட்டுக் கொண்டுள்ளார். விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் “காவிரியில் தண்ணீர் இல்லாமல் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்வது தொடர்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழக அரசு இனியும் மவுனமாக இருக்கக்கூடாது. விவசாயிகளின் தற்கொலையைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்ய வேண்டும். டெல்லிக்கு அமைச்சர்கள் கொண்ட குழுவை அனுப்பி வைக்க வேண்டும். அவசரமாக சட்டப்பேரவை கூட்ட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

ஒரு காலத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த தஞ்சை இப்படி தற்கொலைக் களமாக மாறி இருப்பது காலத்தின் கொடுமை. விவசாயம்தான் நரமாமிசத்திலிருந்து மனிதனை நாகரிகத்திற்கு அழைத்து வந்தது. வேளாண்மை தோற்று, உணவு அரிதாகுமிடத்து மீண்டும் நரமாமிசம் என்ற அநாகரிகம் மனித குலத்தை ஆட்கொள்ளலாம். எதுவும் நிகழாது என்று மறுக்க முடியாது. எரியும் மூங்கில் காட்டில் சிறகு கருகும் ஒரு பட்டாம் பூச்சியை எந்தப் பறவைதான் விசாரிக்கும்?

- த.சத்தியமூர்த்தி

Pin It