இந்தியா உலகில் மிகப் பெரிய ராணுவ வலிமையைக் கொண்ட நாடு.  இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பகுதி ராணுவத்திற்கென்றே செலவிடப்படுகின்றது. இதன் மூலம் இந்தியாவை வெளிநாட்டு, உள்நாட்டு தீவிரவாதிகளிடம் இருந்தும், இந்தியாவின் வளங்களை கொள்ளையிட விரும்பும் பெருமுதலாளிகளிடம் இருந்தும் இந்திய மக்களை அவர்கள் தான் காப்பாற்றுகின்றார்கள். அது மட்டும் அல்லாமல் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்டுவரும் பிரிவினைவாத தேசவிரோதிகளிடம் இருந்தும், ஒருவேளை சோற்றுக்கு வக்கில்லை என்றாலும் கூட ஆயுதத்தை தூக்கிக் கொண்டு திரியும் மாவோயிஸ்ட்களிடம் இருந்தும் இன்னும் இத்தியாதி இத்தியாதி பிரச்சினைகளிடம் இருந்தும் அவர்கள் தான் இந்த தாய் திருநாட்டை காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் நிம்மதியாக தூங்க முடிகின்றது என்று சொன்னால் அதற்கு அந்த இராணுவ வீரர்கள் தான் காரணம்!.

 அப்படிப்பட்ட நல் ஒழுக்கம் நிறைந்த இந்திய இராணுவம் சில வருடங்களாக இந்தியாவில் ஊழல் அதிகம் நடைபெறும் துறையாக சீரழிந்து வருகின்றது. இது தேசபக்தர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இப்படியே போனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் ஏ.கே 47 துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளால் சண்டை போடுவது போய் தீபாவளி துப்பாக்கிகள் மற்றும் வெங்காய வெடிகளை பயன்படுத்தி சண்டை போடும் துர்பாக்கிய நிலைமை வந்துவிடும் என அவர்கள் அஞ்சுகின்றார்கள். என்ன செய்வது தேசபக்தி என்பதே  பொறுக்கிகள், புறம்போக்குகள், கழிசடைகள் போன்றவர்களை குறிக்கப் பயன்படும் பொது சொல்லாக தற்போது மாற்றப்பட்டு விட்டதே. அதனால் அதன் பேரில் இயங்கும் அந்த நல்ல மனிதர்கள் இந்திய இராணுவத்திலும், அரசியல்வாதிகள் மட்டத்திலும் நிரம்பி வழிகின்றார்கள். இவர்கள் தான் இந்தியாவின் பாதுகாப்பிற்குப் பொறுப்பானவர்கள். ஆனால் இது போன்றவர்களை நம்பி தான் மக்கள் வாக்களிக்கின்றார்கள். சரி போகட்டும், நாம் பிரச்சினைக்கு வருவோம்.

 இந்திய விமானப் படைக்குத் தேவையான என்ஜின்களைச் சப்ளை செய்யும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வெளிநாட்டில் வாழும் இந்திய முகவரான சுதிர் சவுத்திரிக்கு  லஞ்சம் கொடுத்த விவகாரம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான ரகசிய ஆவணங்கள் பிபிசி மற்றும் தி கார்டியன் பத்திரிக்கைகளுக்குக் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சுதிர் சவுத்திரியின் நிறுவனங்கள் மற்றும்  அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக்கணக்கில் கடந்த 12 மாதங்களில் மட்டும் சுமார் ரூ. 730 கோடி பணம் பரிமாற்றம் நடந்துள்ளது. இந்தத் தொகையை ஒரு  ரஷிய நிறுவனமும், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் செலுத்தியுள்ளது.  இந்த சுதிர் சவுத்திரி மீது ஏற்கனவே பலமுறை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பல அரசாங்க ஒப்பந்தங்களில் முறைகேடுகள் செய்துள்ளதாக இவர் மீது புகார் உள்ளது.  கடந்த 2014-ம் ஆண்டு சவுத்திரி மற்றும் அவரது மகன் பானு ஆகியோர் ரோல்ஸ் ராய்ஸ் விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் நடந்த விசாரணையில் அவர்கள் மீது குற்றம் எதும் இல்லை என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

 பிபிசி தகவல்கள் படி பானு சவுத்திரி, ஓர் ஆயுத தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி பீட்டர் ஜிஞ்சரும் 2007 –ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்து சென்றுள்ளனர். அந்த பயணத்தில் ஜிஞ்சர் பெரும் தொகையை ரகசிய வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார். இந்தியா வாங்கிய ஹாக் ரக போர் விமானத்துக்கு ஜிஞ்சரின் பங்கு முக்கியமானது. இந்த விமானங்களில் ரோல்ஸ் ராய்ஸ் இன்ஜின் உள்ளது. இந்த ஒப்பந்த மதிப்பு 40 கோடி பவுண்ட்கள் ஆகும்.  ரகசிய ஆவணங்கள் படி சவுத்திரி குடும்பத்துக்குச் சொந்தமான பெலினா சர்வீஸ் நிறுவனம் 3.92 கோடி யூரோ பெற்றுள்ளது.( அக்டோபர் 2007 முதல்  அக்டோபர் 2008 வரை ). இதே காலத்தில் காட்டேஜ் கன்சல்டன்ஸ் நிறுவனம் 3.28 கோடி யூரோ பெற்றுள்ளது. கார்டர் கன்சல்டன்ஸ் நிறுவனம் 2.3 கோடி யூரோ பெற்றுள்ளது. ஸ்விஸ் தனியார் வங்கியான கிளாரிடன் லியூ, சவுத்திரி குடும்பத்தினர் வசம் 200 கோடி டாலருக்கு மேல் சொத்து இருக்கும் என கூறியிருக்கின்றது.( நன்றி: தி இந்து)

  ஆனால் லஞ்சம் பெற்றதை சவுத்திரியின் வழக்கறிஞர் மறுத்திருக்கிறார். அது போல ஜிஞ்சரும் தான் லஞ்சம் எதையும் கொடுக்கவில்லை என பிபிசியிடம் தெரிவித்திருக்கின்றார்.  திருடர்கள் எப்போதுமே தங்களை திருடர்கள் என்று ஒப்புக் கொள்வதில்லை என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும் என்பதால் இந்தக் களவானிகளின் பேச்சை நாம் நம்பத் தேவையில்லை. ஆனால் பிரச்சினை என்னவென்றால் ஒரு ஆயுத முகவருக்கே 730 கோடி லஞ்சம் தரப்படுகின்றது என்றால் அந்த முகவரின் மூலம் ஆயூதங்களை வாங்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டிருக்கும் என்பதுதான்.

 இந்தியாவில் ராணுவதளவாடங்கள் கொள்முதல் செய்வது என்பது கடந்த பல ஆண்டுகளாகவே பணம் கொழிக்கும் ஒரு தொழிலாக மாறியுள்ளது. போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல், போலி ஆயுத பேர ஊழல், தாத்ரா வெக்டரா நிறுவனத்திடம் இருந்து இராணுவத்திற்கு 7000 ட்ரக்குகள் வாங்கியதில் ஊழல், அமெரிக்காவிடம் இருந்து ரூ 3000 கோடி மதிப்பிலான எம் 777 ரக ஹோவிட்சர் ரக பீரங்கிகள் வாங்கியதில் ஊழல், பிரேசில் நாட்டை சேர்ந்த எம்ப்ரேயர் நிறுவனத்திடம் இருந்து 1391 கோடி மதிப்பிலான மூன்று இஎம்பி-145  ரக ஜெட் விமானங்கள் வாங்கியதில் ஊழல் என பல ஊழல்கள் நடந்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக 1991 ஆம் ஆண்டு தேசபக்தர்கள் நிறைந்த முன்னால் பிரதமர் ‘பாரத ரத்னா’ வாஜ்பாயின் பி.ஜே.பி ஆட்சியில் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அமெரிக்காவில் இருந்து சவப்பெட்டிகள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றது.

 தெஹல்கா நடத்திய போலி ராணுவபேர ஊழல் வழக்கில் பராதிய ஜனதா கட்சியின் முன்னால் தலைவர் பங்காரு லட்சுமணனுக்கு தில்லி சி.பி.ஐ நீதிமன்றம் 4 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. முன்னால் இராணுவத்தளபதி வி.கே. சிங் இராணுவத்திற்குத் தரம்குறைந்த வாகனங்கள் வாங்க ஒப்புக்கொண்டால் தனக்கு 14 கோடி ரூபாய் லஞ்சம் தர ஒரு தரகர் தன்னை அணுகியதாகவும் அதுமட்டும் அல்லாமல் தனக்கு முன்பிருந்தவர்கள் தனக்குப் பிறகு பதவிக்கு வரப்போகின்றவர்கள் அனைவரும் பணம் பெற்றுக்கொள்வார்கள் என்று அந்த தரகர் கூறியதாகவும் சொன்னார். இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரிகளும், ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளும் கூட்டுக்கொள்ளையில் ஈடுபடுவதற்கு இதைவிட நமக்கு வேறு சான்றுகள் தேவையில்லை.

 பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் மட்டும் அல்லாமல் காங்கிரஸ் கும்பலும் பேசும் தேசபக்தி என்பதெல்லாம் அதை வைத்து பொறுக்கித் தின்பதற்கான வழிகளே அல்லாமல் வேறல்ல. இவர்கள் திட்டமிட்டு தேசபக்த வெறியை இந்தியா முழுவதும் தனது அடிமைகளை பயன்படுத்தி கிளப்புகின்றார்கள். அதற்காக காஷ்மீர் மக்களையும், வடகிழக்கு மாநிலங்களின் விடுதலைக்காக போராடும் குழுக்களையும், பழங்குடியின மக்களுக்காக ஆயுதம் ஏந்தும் மாவோயிஸ்ட்களையும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகின்றார்கள். அவர்களை அழிப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது என தனது ஊடகங்கள் மூலம் பொய் பிரச்சாரம் செய்கின்றார்கள். லட்சக்கணக்கான கோடி இந்திய சாமானிய மக்களின் வரிப்பணத்தில் இராணுவத்திற்குத் தளவாடங்களை வாங்குகின்றார்கள் இறுதியாக தாங்கள் நினைத்தது போலவே அதில் இருந்து ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடிக்கின்றார்கள். இதில் அநியாயமாக சாவது அப்பாவி பொதுமக்களும், இராணுவ வீரர்களும் தான்.

 ஆயுத வியாபாரிகளும், ஆயுத விற்பனை தரகர்களும், இராணுவ உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மனித உயிர்களை தேசபக்தி நெருப்பிலே கொளுத்தி அதில் குளிர்காய்கின்றார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பார்ப்பன அடிமைத்தனத்தில் முட்டாள்களாக , பிற்போக்குவாதிகளாக வளர்த்தெடுக்கப்பட்ட கூட்டம் இந்த உண்மையை புரிந்துகொள்ள திராணியற்று மனிதகுல விரோதிகளின் பின்னால் அணிதிரண்டு ‘பாரத மாத கி ஜெய்’ ( இந்திய அன்னைக்கு வெற்றி) என்று கோசம் போட்டுக்கொண்டு செல்கின்றது.

Pin It