கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட ‘குழந்தைத் தொழிலாளர் திருத்தச் சட்டம்- 2016’ முற்றிலுமாக அடித்தட்டு மக்களையும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த குழந்தைகளையே பெரிதும் பாதிக்கின்றது.

இந்த நாடு சுதந்திரம் அடைந்தாக சொல்லப்பட்ட நாள் முதலே சிறார் தொழிலாளர் முறையைக் கட்டுப்படுத்தப் பல சட்டங்கள் இயற்றப்பட்டன. இவை ஓரளவு சிறார்களின் கல்வி நலன் சார்ந்தாக இருந்தன. அவற்றில் கட்டாய கல்வி முக்கியத்துவமாக்கப்பட்டது, குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள குழந்தைத் தொழிலாளர் சட்டம் கட்டாய கல்வி மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் செய்துவிடுகிறது. இதனால் பாதிப்படையப் போவது ஏகாதிபத்திய முதலாளிகளின் குழந்தைகள் அல்ல, ஆளும் வர்க்கத்தில் உள்ளவர்களின் குழந்தைகள் அல்ல, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இன அடித்தட்டு வர்க்கங்கக்ச் சேர்ந்தவர்களின் குழந்தைகள்.

தற்போதைய நிலையை விட இந்திய துணைக்கண்டத்தில் புதிய சிறார் தொழிலாளர் சட்டத்தினால் குழந்தைகளின் உடல் நலன் மற்றும் கல்வியில் நேரிடக்கூடிய சீரழிவானது அடித்தட்டு மக்களின் எதிர்காலத்தில் மிகப் பெரிய பின்னடைவாக மாற்றும் கருவியாக இத்திட்டம் செயல்படும். இதனால் இந்திய துணைக்கண்டம் முழுதும் உள்ள 80% மக்களின் எதிர்காலம் பெரும் மாற்றத்தைச் சந்திக்க நேரிடலாம். காரணம் புதிய கல்விக் கொள்கை போன்ற மக்கள் விரோத திட்டங்கள் தொடர்ந்து மக்கள் மீது அரசு திட்டமிட்டு திணிக்க முயல்வதால்.

யுனிசெஃப் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 3.3 கோடிச் சிறார் தொழிலாளர்கள் இருக்கின்றனர். யுனிசெஃப் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அவர்களில் 80% பட்டியல் இனத்தவர், 20% பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தால் இந்தச் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் தொடர்ந்து தங்களுடைய குலத் தொழிலையே ஈடுபடுட நேரிடும். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு தன்னுடைய நாட்டிலே ஒரு பிரிவு மக்கள் அகதிகளாக வாழும் நிலை நீடிக்கச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.

பாசிச மோடி அரசு திட்டமிட்டு அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் நடவடிகையில் இறங்கியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மத்திய நிதிநிலை அறிக்கையின்போது கல்விக்கான ஒதுக்கீட்டில் 28%, மகளிர் - குழந்தைகள் நலனுக்கான ஒதுக்கீட்டில் 50% வெட்டப்பட்டது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கான நேரடி முதலீடு போன்றவற்றில் பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு வழிவகை செய்வது போன்றவற்றில் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இது போன்ற நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 42,000 பள்ளிக்கூடங்கள் நாடு முழுக்க மூடப்பட்டுள்ளன. அனைவருக்குமான கல்வித் திட்டம், கல்வியில் மகளிருக்குச் சம உரிமைத் திட்டம் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகளும் குறைக்கப்பட்டன. இதன் பின்விளைவாக ஒடிஷா, ஜார்க்கண்ட் போன்ற பழங்குடி மாநிலங்களிலிருந்து ஏராளமான பழங்குடி, சிறுபான்மைச் சமூக சிறார்களின் வாழ்க்கையை அரசு கேள்விக் குறியாக மாற்றியுள்ளது. பெண் குழந்தைகளை வேலைக்காகவும் வேறு நோக்கங்களுக்காகவும் கடத்துவது அதிகரித்திருக்கிறது. இந்த அரசுதான் மக்களுக்கான அரசா..?

இந்த அரசு ஏகாதிபத்திய முதலாளிகளின் நலன்களை மட்டும் மையப்படுத்தியதாக உள்ளது என்றால் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இத்தகைய அரசும் அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் மக்களின் நலன்களுக்கானது என்றால் நாம் நம்பித்தான் ஆகவேண்டும், இதை எதிர்த்து கேள்வி கேட்டாலோ, இது போன்ற மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்த்துப் போராடினாலோ நீங்கள் தேசத் துரோகிகள் என முத்திரை குத்தப்படுவீர்கள்.

கல்வி முழுதும் முதலாளித்துவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பிடுங்கப்பட்டு, கல்வி என்பது பொதுவுடைமை என்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமான ஒன்று என்ற நிலையை மாற்ற நாம் போராடாத வரை அரசின் இது போன்ற மக்கள் விரோதத் திட்டங்கள் தொடரவே செய்யும்.

- உமா கார்க்கி