ஒவ்வொரு நகர்ப்புற சாலையும் வலுக்கட்டாயமாக ஏழைகளிடம் இருந்து பிடுங்கப்படுகின்றது. அந்தச் சாலைகள் இப்பொழுது அவர்களுக்கானதாக இல்லை. அது பணக்காரர்களின் அசுரத்தனமாக செல்லும் வாகனங்கள் மட்டுமே செல்லும் ரேஸ் சாலைகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சாலைகளில் இரு மருங்கிலும் ஏழைகள் இளைப்பாறுவதற்காக முன் காலத்தில் நடப்பட்ட மரங்கள் இன்று வேறோடு மண்ணாக வெட்டி வீழ்த்தப்பட்டுவிட்டன. இனி தங்களது பயணக்களைப்புத் தீர அங்கே ஓய்வெடுத்துக்கொள்ள மனிதர்களுக்கும் இடமில்லை பாவம் அந்தப் பறவைகளுக்கும் இடமில்லை. இப்பொழுதெல்லாம் அவை மரங்களுக்குப் பதில் மின்சாரக் கம்பிகளிலேயே ஓவ்வெடுத்துக்கொள்கின்றன. ஆனால் மனிதர்கள் என்ன செய்வது?

 சாலைகளில் மின்னல் வேகத்தில் செல்லும் சொகுசு கார்களின் சொந்தக்காரர்கள் விரிந்துகிடக்கும் சாலை முழுவதையும் தங்களுக்கானதாகவே நினைக்கின்றார்கள். முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட , அலுங்காமல் குலுங்காமல் அசுரவேகத்தில் செல்லும் அந்தக் கார்கள் பாதசாரிகளையும், சைக்கிளில் செல்லுபவர்களையும் அர்ப்பபிறவிகளாக நினைத்து கடந்து போகின்றது. பணக்கார போதையுடன் மது போதையும் சேர்ந்துவிட்டதென்றால் அந்தப் பணக்கார நாய்களுக்கு இந்த உலகமே தங்களுக்கான வேட்டைக்காடாக காட்சியளிக்கின்றது. காட்டில் மான்களையும், யானைகளையும் வேட்டையாடிய பண்ணையார்கள் இன்று நவீன கார்களில் மனிதர்களை வேட்டையாட கிளம்பி இருக்கின்றார்கள்.

 தன்னுடைய ஆடம்பரத்தையும், பகட்டையும் காட்டுவதற்காக அந்தப் பணக்கார வக்கிரம் பிடித்த நாய்கள் தங்களுடைய அதி நவீன ஆடம்பர கார்களைச் சாலையில் பறக்கவிடுகின்றார்கள். ஏழைகள் அதைப்பார்த்து ஆச்சரியப்படவேண்டும் என்பது மட்டும் அவர்களின் நோக்கம் அல்ல, அவர்கள் இந்தச் சாலையில் தனக்கான இடம் எதுவென்று தெரிந்துகொள்வதின் மூலம் இந்த உலகத்திலும் தனக்கான இடம் எதுவென்று அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதும்தாம். நீங்கள் அந்த எஜமானர்கள், தர்மகர்த்தாக்கள் சாலைகளில் பவனி வரும் போது ஒன்று ஒதுங்கிச்செல்ல வேண்டும் இல்லை என்றால் அவர்களின் கார் சக்கரங்களைப் பூரி ஜெகன்நாதர் கோயில் தேர் சக்கரமாக நினைத்து விழுந்து சாகவேண்டும். உங்களுக்கு இந்த இரண்டு வாய்ப்புதான் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஒழுங்காக ஓரமாக போகப்போகின்றீர்களா? இல்லை உயிரை விட்டுவிட போகின்றீர்களா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

 திருவான்மியூர் காமராஜ் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி முனுசாமி(45) 02/07/2016 அன்று அதிகாலை வேலைக்குச் செல்வதற்காக தரமணி ராஜீவ்காந்தி சாலையைக் கடந்து செல்வதற்காக சாலையோரம் நின்றுகொண்டு இருந்த போது அந்த வழியாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த ஒரு ஆடம்பர சொகுசு கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். முனுசாமி மீது காரை மோதி அவரை பழியாக்கிய பின் காரை விட்டு கீழே இறங்கி அவர் என்ன ஆனார் என்று கூட பார்க்காமல் அங்கிருந்து நிற்காமல் அந்தக் கார் சென்றுள்ளது. அதை ஒருவர் துரத்திச்சென்று பிடித்துள்ளார். அந்தக்காரில் மூன்று பெண்கள் குடி போதையில் இருந்துள்ளார்கள். அனைவரும் கம்யூட்டர் நிறுவனத்தில் பொறியாளர்களாக பணிபுரிபவர்களாம். அதில் காரை அதிவேகமாக ஓட்டிவந்த ஐஸ்வர்யா என்பவர் தொழிலதிபரின் மகளாம்.

 பண போதையிலும் மது போதையிலும் காரை ஓட்டிசென்று விபத்தை ஏற்படுத்தும் பல மேட்டுக்குடி சீமான்களும், சீமாட்டிகளும் அடிபட்டவரை எப்போதும் ஒரு பொருட்டாக கூட கருதுவதில்லை. முடிந்தவரை தப்பித்துவிடுவது என்பதுதான் இந்தப் பணக்கார பொறுக்கிகள் எப்போதும் கடைபிடிக்கும் வழிமுறை. அப்படி யாராவது வண்டியின் பதிவு எண்ணைப் பார்த்துத் தப்பித்தவறி மாட்டிக்கொண்டால் கையில் இருக்கும் காசை விட்டெறிந்து தனது அடிமைகளில் யாரையாவது ஒருவரை தாம் தான் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக ஒப்புக்கொள்ள வைப்பார்கள். பணம் என்பது இங்கே குற்றவாளிகளை தப்புவிக்கவும் பயன்படும் குற்றவாளிகளை புதிதாக உருவாக்கவும் பயன்படும்.

 ராஜஸ்தான் மாநிலம் சிகார் தொகுதி எம்.எல்.ஏ வின் மகனான சித்தார்த் மஹரியா என்பவன் 2/07/2016 அன்று ஜெய்பூர் அருகே உள்ள சி-ஸ்கீம் என்ற இடத்தில் மதுபோதையில் காரை ஓட்டிச்சென்று ஆட்டோவில் மோதி மூன்று பேரை சாகடித்து இருக்கின்றான். இவனது கார் மோதியதில் ஆட்டோ 200 அடி தூரம் தூக்கி வீசப்பட்டிருக்கின்றது என்றால் இந்த பொறுக்கி என்ன வேகத்தில் காரை ஓட்டி வந்திருப்பான் என்று பார்த்துக்கொள்ளுங்கள். வழக்கம் போலவே இந்தக் காரை தான் ஓட்ட வில்லை என்று இந்தப் பொறுக்கியும் மறுத்துள்ளான்.

 பொதுவாக இது போன்ற வழக்குகளில் பணம் இருந்தால் தப்பித்துக்கொள்ளலாம் என்பதுதான் யதார்த்தமான உண்மை. நீங்கள் சல்மான் கான் வழக்கை எடுத்துக்கொள்ளுங்கள். குடிபோதையில் கார் ஓட்டி சாலையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை மும்பை கீழமை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. ஆனால் மும்பை உயர்நீதி மன்றம் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி சல்மான்கானை விடுதலை செய்தது. இந்தியாவில் கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை பணம் இருந்தால் நீங்கள் விடுதலையையோ அல்லது ஜாமீனோ பெறுவது என்பது ஒரு பொருட்டே அல்ல என்பதற்கு நூற்றுக்கணக்கான வழக்குகளை நம்மால் உதாரணமாக காட்டமுடியும்.

 குப்பை போல குவித்து வைக்கப்பட்டிருக்கும் பணத்தில் இருந்து அதிகாரம், ஆணவம், அகம்பாவம் என அனைத்தும் பிறக்கின்றது. அது ஏழைகளை நாய்களை விட கீழாக பார்க்கும் வக்கிரப் பார்வையைத் தருகின்றது. ஏழைகளின் உழைப்பை ஒட்டசுரண்டி தன்னை நவீன உயர்தர மனிதர்களாக மாற்றிக்கொண்ட அந்த பன்றிகள் இந்த உலகத்தில் தனக்கு மட்டும் எல்லாவிதமான சிறப்புச்சலுகைகளும் உள்ளதாக நினைத்துக்கொள்கின்றன. அந்த நினைப்புதான் அவர்களை ஆடம்பரமான கார்களை வாங்கவும், அதை மது போதையில் அதிவேகமாக ஓட்டிச்சென்று அப்பாவி மக்களை கொல்லவும் தூண்டுகின்றது.

 இங்கே எல்லாவற்றையும் பணக்காரர்கள் ஏழைகளிடம் இருந்து பறித்து விடுகின்றார்கள். தனி மனித சுதந்திரம் என்பதெல்லாம் பணக்காரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட சிறப்புச்சலுகையாகவே உள்ளது. அரசு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டமும் ஏழைகளை துரத்தி அடிக்கின்றன. கிராமங்களில் இருந்து, சேரிகளில் இருந்து, நகர்புற சாலைகளில் இருந்து, அவர்களை விரட்டிக்கொண்டே இருக்கின்றன. அவர்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றார்கள். மரங்கள் அற்ற, வெப்பம் தகிக்கும், வழு வழு என நீண்டுச்செல்லும் அந்த மலைப்பாம்பு சாலைகளில் அந்த ஏதுமற்ற மக்கள் வயிறுகள் பசியால் சுண்டி இழுத்துச் செல்லும் திசை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கின்றார்கள். பணக்காரர்களின் ஆடம்பர சொகுசு கார்கள் அவர்களை கடந்து பறந்து செல்கின்றன. ஒவ்வொரு காரையும் பார்க்கும் அந்த ஏழை மக்கள் இதில் ஏதாவது ஒரு கார் நாளை அவர்களின் உயிரை குடிக்கும் எனபதை அறியாமல் பெருமூச்சோடு சாலையில் செல்கின்றார்கள்.

 அரசு எல்லாவற்றையும் அமைதியாக பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் மதுவால் வாகனம் ஓட்டிச்சென்று ஏற்படும் விபத்துக்களில் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் குடிபோதையால் வாகனம் ஓட்டி 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளார்கள். ஒரு பூகம்பத்தாலோ, மிகப்பெரிய இயற்கை சீற்றத்தாலோ உயிர் இழப்பவர்கள் விட இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

 முனுசாமியின் குழந்தைகள் அப்பா இல்லாத அந்த இருண்ட வாழ்க்கையை நினைத்து மிரட்சியுடன் அழுதுகொண்டிருக்கும். அவரது மனைவி இரண்டு குழந்தைகளின் வயிரையாவது நம்மால் நிரப்ப முடியுமா என நினைத்து பெருமிக்கொண்டு இருப்பார். விபத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா சகல வசதிகளுடன் சிறையில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருப்பார். அவரது தந்தையான தொழில் அதிபர் காரை தனது மகள் ஓட்டிச்செல்லவில்லை என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க ஆதாரங்களை! தேடிக்கொண்டிருப்பார். காவல் துறைக்கும், நீதிமன்றத்துக்கும் இது ஒரு நல்ல வருமானம் உள்ள வழக்கு. இங்கே எப்போது சாமானிய மக்களுக்கான அரசு அமைகின்றதோ அப்போதுதான் சாலைகள் மட்டும் அல்ல அவர்களது உயிரும் கூட அவர்களுக்கு சொந்தமானதாக இருக்கும்.

- செ.கார்கி

Pin It