முன்னால் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மாவோயிஸ்டுகளை உள்நாட்டு அச்சுறுத்தல் என்றார். முதலீட்டுக்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றால் காடுகளுக்குள் ஒளிந்திருக்கும் மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதைத் தவிர இந்திய ஜனநாயகத்திற்கு வேறு வழியே இல்லை என்று சொல்லி பசுமை வேட்டையைத் துவக்கி வைத்தார். இதன்மூலம் இரண்டு காரியங்கள் சாதிக்கப்பட்டன. ஒன்று பல மாவோயிஸ்ட் தோழர்கள் நேரடியாகவும், நம்பிக்கைத் துரோகத்தின் மூலமும் படுகொலை செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான பழங்குடியின மக்கள் அவர்களது சொந்த இடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்நாட்டுக்குள்ளேயே அகதிகள் ஆக்கப்பட்டனர். எதிர்த்து நின்றவர்கள் இந்திய ராணுவத்தின் ஆண்குறிகளுக்கும், துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் பலியாக்கப்பட்டனர். மற்றொன்று தங்களின் எஜமானர்களின் கரங்களில் அவர்கள் நினைத்ததைவிட எளிமையாகவும், விரைவாகவும் பழங்குடியின மக்களின் ரத்தம் தோய்ந்த வளமான மண் காணிக்கையாக கொடுக்கப்பட்டது.
காடுகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் கம்யூனிச பூதத்தை வெளியே கொண்டுவர காங்கிரஸ் கட்சிக்குப் பசுமை வேட்டை என்ற முகமூடி தேவைப்பட்டது. ஆனால் காடுகளுக்கு வெளியே உள்ள கம்யூனிஸ்டுகளை ஒழித்துக்கட்ட இந்தியாவின் வரலாற்று காலம் தொட்டே வன்முறையை மட்டுமே பயன்படுத்தி தனக்கு எதிரான சிந்தனைகளை ஒழித்த பார்ப்பனியத்துக்கு அப்படி எந்த முகமூடியும் தேவைப்படவில்லை. புத்தர் காலம் தொட்டு ரோகித்வெமுலா காலம் வரை அது எப்போதுமே தனது கோரமுகத்தை மறைத்துக் கொண்டது கிடையாது. ஆனால் வரலாற்றில் பார்ப்பனியத்துக்கு இந்த நூற்றாண்டு போல மிக மோசமான நூற்றாண்டு வேறு இருந்திருக்காது. அது இப்படி ஒரு எதிர்ப்பை இதற்கு முன் சந்தித்திருக்காது என்றே சொல்லலாம். பெரியார், அம்பேத்கார், மற்றும் இடதுசாரி தோழர்கள் என ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட எதிர்ப்பை இதற்கு முன் அது வரலாற்றில் எப்போதும் பார்த்ததே இல்லை.
தன்னுடைய நயவஞ்சகத்தாலும், பார்ப்பன சூழ்ச்சியாலும், வன்முறையாலும் வெல்லமுடியாத பட்டை தீட்டப்பட்ட போர்வாளாக பெரியாரிய, அம்பேத்காரிய, மார்க்சிய இயக்கங்கள் இன்று இந்தியா முழுவதும் பரந்து விரிந்து இருக்கின்றன. இதை எப்படி வெல்வது என்று தெரியாத பயந்தாங்கொள்ளி பார்ப்பனியம் தற்போது தனக்குக் கிடைத்திருக்கும் அளப்பரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அவைகளை ஒழித்துக் கட்டப் பார்க்கின்றது.
நரேந்திர தபோல்கரையும், கோவிந்த் பான்சாரேவையும், கல்புர்கியையும் ஒரே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இந்த காவி பயங்கரவாதிகள் ரோகித் வெமுலாவை பொருளாதார ரீதியாக முடக்கி தானாகவே தற்கொலை செய்துகொள்ள வைத்தார்கள். தொடர்ச்சியாக ரத்தத்தை ருசிகண்ட இந்த மிருகம் அடுத்து தனது இலக்காக கண்ணையாகுமாரை தேர்ந்தெடுத்து இருக்கின்றது. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்கத் தலைவரான அவரை அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் என்ற பி.ஜே.பியின் பொறுக்கி மாணவர் அமைப்பின் தூண்டுதலின் பேரில் டெல்லி போலீஸ் கண்ணையாகுமார் உட்பட 7 பேரை தேசதுரோக வழக்கில் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளிடம் அவருக்கு தொடர்பிருப்பதாகவும் திட்டமிட்டு பொய்ப்பரப்புரை செய்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கண்ணையாகுமாருக்கு லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத்தவ்லா போன்ற அமைப்பின் புரவலரான ஹபீஸ்சையத் ஆதரவு தெரிவித்து எழுதியதாக சில டுவிட்டர் பதிவுகளை செய்தியாளர்களிடம் காட்டினார். ஆனால் அவை போலியானவை என தற்போது டெல்லி காவல் துறையால் நிருபிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் 19/02/ 2016 அன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கண்ணையாகுமார் அழைத்து வரப்பட்டபோது ஏபிவிபி பொறுக்கிகளால் கண்னையாகுமார் மற்றும் அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் மீது மிகக்கடுமையாக தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. ஆர். எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவாரங்கள் இந்திய நீதிமன்றம், காவல்துறை போன்றவற்றை எல்லாம் மலம் துடைக்கும் காகிதத்துக்குச் சமமாக கூட மதிப்பதில்லை என்று மீண்டும் நிருபித்துள்ளது.
டெல்லி போலிசாரின் துணையுடனேயே இந்தத் தாக்குதல் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்து இருக்கின்றது. ஆனாலும் சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டெல்லி காவல்துறை முழுவதும் காவி பயங்கரவாதிகளின் பிடியில் இருப்பதையே இது காட்டுகின்றது.
மோடி அரசு பதவியேற்ற பின்பு தன்னுடைய பொறுக்கித்தனத்தை அதன் கடைசி எல்லைக்கே எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றது ஏபிவிபி. அலாகபாத் பல்கலைக்கழகத்துக்குப் பேச வந்த இந்து பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் சித்தார்த் வரதராஜனை பேசவிடாமல் தடுத்தனர். அவருக்குப் பதிலாக சாந்தனு மகராஜ் எனும் சாமியரை வைத்து பேச வைத்தனர். ஐதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலாவுக்கு எதிராக தனது சக பாசிச வானரங்களான ஸ்மிருதி ராணி மற்றும் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோருடன் சேர்ந்து சதிசெய்து அவரின் கல்வி உதவித் தொகையை நிறுத்தி வைத்து அவரை தற்கொலை செய்துகொள்ள வைத்தனர். மாட்டிறைச்சி குறித்து விவாதம் செய்த காரணத்திற்காக புவனேஸ்வரம் அய்.அய்.டியின் வருகை பேராசிரியர் சந்தீப் பாண்டே ஏபிவிபி கொடுத்த அழுத்தத்தால் அப்பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
காஸ்மீர் மாநில மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு நிதி உதவி வழங்குமாறு கோரிக்கை வைத்ததற்காக விக்ரம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சபர்வால் ஏபிவிபியினரால் தாக்கப்பட்டார். மேலும் 2011 ஆம் ஆண்டு கவிஞர் ஏ.கே. இராமானுஜம் எழுதிய 300 இராமாயணங்கள் என்ற கட்டுரை பி.ஏ பட்டப்படிப்பில் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. ஏபிவிபி-இன் எதிர்ப்பால் அந்தக் கட்டுரை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது. டிசம்பர் 2015இல் எஸ்.கே கல்லூரியில் கட்டண உயர்வைக் கண்டித்துப் போராடிய இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுபாஷ் ஜகார் மீது கொலைவெறித் தாக்குதல் தொடுக்கப்பட்டது. நவம்பர் 2015 இல் டி.அய்.எஸ்.எஸ் டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தில் உணவில் ஜாதி என்ற ஆவணப்படத்தை திரையிடுவது ஏபிவிபி குண்டர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. மே 2015 இல் சென்னை அய்.அய்.டி யில் இயங்கி வந்த அம்பேத்கார்-பெரியார் வாசகர் வட்டம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் காரணமின்றி தடை செய்யப்பட்டது (நன்றி விடுதலை).
ஒட்டுமொத்த இந்திய மாணவர் சமுதாயத்தின் மனங்களையும் நஞ்சாக்கும் விச பிரச்சாரத்தை 1948 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக ஏபிவிபி செய்து வருகின்றது. ஆர்.எஸ்.எஸ் யின் மாணவர் பிரிவாக செயல்பட்டு வரும் அதன் கொள்கை பன்மை கலாச்சாரங்களை கொண்ட ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒற்றை கலாச்சாரத்தின் கீழ் கொண்டுவருவதாகும். அதற்காக பல்வேறு மாறுபட்ட பெயர்களில் பல்வேறு அமைப்புகளை அது நடத்தி வருகின்றது. உலக மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பு(WOSY), மாணவர்களுக்கான வளர்ச்சி அமைப்பு (SFD) மற்றும் மாநிலங்களுக்கிடையே மாணவர்களின் அனுபவ வாழ்க்கை(SEIL) போன்றவை. நீங்கள் ஏபிவிபி ஒரு மதவாத அமைப்பு அதில் சேரக்கூடாது என்று நினைத்தீர்கள் என்றால் உங்களை ஏமாற்றுவதற்காகவே வெவ்வேறு பெயர்களில் அமைப்புகளை வைத்திருக்கின்றார்கள். ஆர்.எஸ்.எஸ் மட்டும் ஏறக்குறைய ஐம்பதற்கும் மேற்பட்ட துணை அமைப்புகளை வைத்து இயக்குகின்றது என்றால் அதன் மோசடித்தனத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் இருக்கும் தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலவரங்களைத் தூண்டி விடுவது மற்றும் முன்நின்று நடத்துவதே இவ்வமைப்புகளின் முக்கிய பணியாகும். ஏபிவிபி தலையிடும் அனைத்துப் பிரச்சினைகளும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் கல்விக்கட்டணத்துக்கு எதிராகவோ, அல்லது மாணவர்களின் அடிப்படை பிரச்சினையை ஓட்டியதாவோ ஒரு போதும் இருந்தது கிடையாது. ரோகித் வெமுலாக்கு எதிராக ஏபிவிபி பொறுக்கிகள் ஒன்று திரண்டதற்கு காரணம் முசாபர் நகர் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட்டதற்காகவும், யாகூப் மேமனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுத்ததுமே ஆகும். இப்போது கண்ணையா குமாருக்கு எதிராக ஒன்று திரண்டிருப்பதற்கும் காரணம் அவர் அப்சல் குருவின் நினைவுநாளை துக்க நாளாக கடைபிடித்ததும், தூக்கு தண்டணைக்கு எதிராக கருத்தரங்கம் நடத்தியதுமே ஆகும். இவை எல்லாம் காவி பயங்கரவாதிகளின் முகத்திரையைத் கிழித்தெறியும் செயலாகும். எங்கே தான் அம்பலப்பட்டு போய்விடுவோமே என்ற பயமே அவர்களை வன்முறையில் இறங்கத் தூண்டுகின்றது.
முன்காலத்தில் நடந்த ஆரிய படையெடுப்பைத் தடுத்து நிறுத்த நம்முடைய மூதாதையர்களால் முடியாமல் போய்விட்டது. ஆனால் இன்று நம் கண்முன்னால் நடந்தேறிக்கொண்டு இருக்கும் மறு ஆரிய படையெடுப்பைத் தடுத்து நிறுத்த நம்மிடம் அம்பேத்கார், பெரியார், மார்க்ஸ் போன்றவர்கள் உருவாக்கிக் கொடுத்த ஆயுதங்களும், அந்த ஆயுத்தை ஏந்திய போர்வீரர்களும் கோடிக்கணக்கில் உள்ளனர். இன்று இதைத் தடுக்க நம்மால் கண்டிப்பாக முடியும். எதிர்கொண்டுவரும் பார்ப்பன பாசிசத்தை வீழ்த்தாமல் விடுவோமானால் நாம் சாதிய ரீதியாக மட்டும் அடிமையாகாமல், பொருளாதார ரீதியாகவும் பார்ப்பன- பனியா சக்திகளுக்கு அடிமையாகி விடுவோம். எனவே தோழர்கள் பொது வெளியில் மட்டும் அல்லாமல் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தி பார்ப்பன பாசிசத்திற்கு எதிரான கடுமையான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு மட்டும் அல்ல நமக்கும் ‘பதிலடி’ கொடுக்கத் தெரியும் என்பதை நிருபிக்க வேண்டும்.
- செ.கார்கி