"என் கணவர் ஆரூண் பாஷா ஒரு அப்பாவி. அவரை 18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலடைத்து எங்கள் வாழ்க்கையையே அழித்துவிட்டது அரசு. என் கணவரை மீட்டுத்தாருங்கள்" என கதறுகிறார் சகோதரி முன்னி.

ஆம் உண்மைதான். ஆருண்பாஷாவை அறிந்த எல்லோரும் அவர் அப்பாவிதான் என உறுதி கூறுகிறார்கள். அப்பாவியான அவரை ஏன் கைது செய்தார்கள்? அவர் அப்பாவியாக இருந்தார் என்பதற்காக அல்ல, அவர் இசுலாமியராக இருந்தார் என்பதால்தான். ஆம், ஆருண் பாஷா இல்லையென்றால் தமீமுன் அன்சாரி அவ்வளவே. அரசு நினைத்ததை சாதித்துள்ளது. இசுலாமியன் என்றால் குண்டு வைப்பான், தேசத்திற்கு எதிராக சதி செய்வான், அவன் தீவிரவாதி, பயங்கரவாதி என்பது பொதுபுத்தியாக ஆவதற்கு ஆளும்வர்க்கத்திற்கு சில அப்பாவி இசுலாமியர்கள் தேவைப்பட்டார்கள். அதற்கு ஆருண்பாஷா போன்ற அப்பாவிகள் காவு வாங்கப்பட்டிருக்கிறார்கள்.

இதன் அரசியல் ஆழத்தை புரிந்து கொள்ளும் முன் ஒரு உண்மையை உரசிப் பார்ப்போம்.

ஆருண்பாஷாவும், அவர் மனைவி முன்னியும் கிட்டத்தட்ட அனாதைகள். ஆருண்பாஷாவை குழந்தையில்லாத ஒரு தாய் வளர்த்து ஆளாக்கினார். முன்னியை அவரது தாத்தா, பாட்டி வளர்த்தார்கள். ஒரு அனாதையின் கஷ்டம் இன்னொரு அனாதைக்குத்தானே தெரியும் என்று  புரிந்துகொண்டு இவர்களின் திருமணம் நடந்துள்ளது. ஆருண்பாஷா கோவை சிவானந்தா காலனிக்கருகில் ஒரு கறிக் கடை நடத்தி வந்திருக்கிறார். பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதைப்போல் அவரது இக்கட்டான வாழ்வில் மேலும் ஒரு இக்கட்டாக அவரது மூத்த மகனின் நோய் இருந்துள்ளது. மூத்தமகன் சான்பாஷாவுக்கு  முடக்குவாதம், ஒரு வயதில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு கைகால்கள் செயலிழந்து விட்டது.

குழந்தையின் மருத்துவச்செலவு, தங்களோடு இணைந்த தாத்தா, பாட்டிகள் நலம் என கஷ்டத்தோடு குடும்பம் நடத்தியவருக்கு இரண்டாவது மகன் சவுக்கத் அலி பிறந்ததும், அவன் ஆரோக்கியமாக இருந்ததும் ஒன்றே மகிழ்ச்சி.

இரண்டாவது மகனுக்கு 9 மாதமே ஆகியிருந்த நிலையில்தான் ஒருநாள் ஆருண்பாஷா காணாமல் போனார்.

"1997-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாசம் ஒருநாள் என் கணவர் ஆரூண் பாஷா கறி கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இரண்டு குழந்தைகள். மூத்தமகன் சான்பாஷாவுக்கு  முடக்குவாதம், இரண்டாவது மகன் சவுக்கத் அலி பிறந்து 9 மாதம்தான் ஆகியிருந்துச்சி. அப்பத்தான் அவர் காணாமல் போனார்.

இரண்டு நாட்கள் தேடியப்பிறகுதான் போலீஸ்காரர்கள் பிடிச்சுட்டு போனதே தெரியும்.

எங்களுக்கு வீடு இல்லையா? அட்ரஸ் இல்லையா? ஏன் சொல்லல? போலீஸ் புடிச்சிட்டாங்கன்னுதான் தெரிஞ்சுது, எந்த ஸ்டேசன்னு தெரியாது. எத்தனை ஸ்டேசன்ல ஏறி இறங்கினோம் தெரியுமா? மூளை பாதித்த குழந்தையையும்,  கைக்குழந்தையையும் உட்டுட்டுப் போக முடியுமா? இரண்டையும் தூக்கிக்கிட்டு நான் பட்டபாடு கொஞ்சமா?

ஒருமாதம் கழித்துதான் என் கணவர் கோவை ஜெயிலில் இருப்பது தெரிந்தது. சிறைக்கு சென்று பார்த்தேன். என் கணவர மிரட்டி வரவழைச்சு கைது பண்ணியிருக்காங்க. தீக்காராம் என்ற மார்வாடி இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார். அந்த கொலை வழக்கில் (கு.எண் 1548/1997 B1 கடைவீதி காவல்நிலையம்) என் கணவரையும், சலாவுதீன் என்ற சிறுவனையும் பிடித்து பொய் வழக்கு போட்டுவிட்டார்கள். டேய் பாயி... ஒழுங்கா ஒத்துக்கிட்டு உள்ள போ. இல்லைன்னா எதுவும் மிஞ்சாதுன்னு மிரட்டி ஜெயில் அடைத்துவிட்டார்கள்" சொல்லும்போதே முன்னி வெடித்து கதறுகிறார்.

எதுவும் மிஞ்சாது என்கிற மிரட்டலுக்குள் எல்லாம் அடங்குகிறது. எதுவும் என்பது நமது உயிர், நம்மை சார்ந்த மனைவி, பிள்ளை, அம்மா, அப்பா, உடன்பிறந்தவர், சொந்தபந்தம், சொத்து சுகம்... எல்லாமும்தான்.

இப்படி மொத்தமும் அழிவதற்கு மாறாக ஒருத்தர் பலியாவது பரவாயில்லை என்ற பலியாடுகள் மனநிலை இசுலாமியர்களிடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வளவு காலம் திட்டமிட்டு, எப்படி உருவாக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், இன்று சிறையிலிருக்கிற 49 இசுலாமிர்களில் பலபேர் பயந்துபோய் கைதாகியிருக்கிறார்கள்.

அப்பாவியான முன்னியின் கணவர் ஆருண்பாஷா பயந்துதான் காவல் நிலையம் சென்றார். ஒருமுறை மட்டுமல்ல இரண்டுமுறை அப்படி போயிருக்கிறார். ஆனால் அதிகாரத்தில் இருந்தவர்கள் அவரின் பயத்தை எப்படி பயன்படுத்தி அவரை சிறையில் 18 ஆண்டுகள் வைத்திருக்கிறார்கள் என்பதை சகோதரி முன்னியே சொல்கிறார்-

"மூன்று மாதம் கழித்து என் கணவரை ஜாமீனில் எடுத்தோம். கோயம்புத்தூரில் பிரச்சனை ஆகிறது என்பதால் சேலத்துக்கு வந்துவிட்டோம். என் பாட்டி வீட்டிலேயே தங்கினோம். என் கணவர் என் தாத்தாவிற்கு தெரிந்த லாரி வேலைக்கு சென்று வந்தார். அவர் வழக்கு வாய்தாவுக்கு மட்டும் கோயம்புத்தூர் சென்று கோர்டில் ஆஜராகி வந்தார்.

1998 பிப்14-இல் கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஒருமாதம் கழித்து மார்ச் மாதம் கோயம்புத்தூரில் இருந்து போலீசார் என் கணவரை விசாரிக்க வேண்டும் என வந்தார்கள். லாரிக்கு சென்றிருப்பதால் திரும்பி வந்தவுடன் கூட்டி வருவதாக சொன்னோம். இரண்டு நாளில் வந்த என் கணவரை சொன்னதுபோல் அழைத்துக்கொண்டு கோவை பி 5 சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேசனில் சென்றோம்.

தப்பு செய்தவன் யாராவது போலீஸ் ஸ்டேசனுக்கு வருவானா?

என் கணவரை அழைத்துக் கொண்டு சென்றோம். விசாரித்துவிட்டு அனுப்புவதாக சொன்னார்கள். ஆனால் தடை செய்யப்பட்ட அல்-உம்மா அமைப்புக்கு வசூல் செய்து கொடுத்ததாக ஒரு பொய் வழக்கு (17 CLA Act) போட்டு ஜெயிலுக்கு அனுப்பி விட்டார்கள்.

ஜாமீனுக்கு பணம் புரட்ட அலைந்தேன். இதற்குள் என் கணவரின் முதல் வழக்கிற்கான வாய்தா வந்திருக்கிறது. யாருக்கும் தெரியவில்லை. கொஞ்சம் பணம் கிடைத்தது. ஜாமினுக்கு போய் நின்றால் முதல் வழக்கின் வாய்தாவுக்கு செல்லவில்லையென்று வாரண்ட் போட்டிருக்கிறார்களாம். அதனால் இனிமேல் ஜாமீனே கிடையாது என்றுவிட்டார்கள்.

வாய்தா காலத்தில் சிறையில் இருந்த என் கணவர் தலைமறைவு குற்றவாளியா? பிடித்து உள்ளே போட்டவர்கள் வாய்தாவை சிறைக்கு அனுப்ப வேண்டியதுதானே?

இது திட்டமிட்ட சதி.

இவையெல்லாம் தாண்டி ஒரு நீதிபதி என்ன செய்தார் தெரியுமா? 1999-ஆம் ஆண்டு கோவை சிஜெஎம் கோர்ட்டில் வழக்கு நடந்துவந்தது. பதினைந்து நாள் வாய்தா போட்டிருந்தார்கள். வழக்கை நடத்திவந்த நீதிபதிக்கு இடமாற்றம் உத்தரவு வருகிறது. உடனே நீதிபதி பதினைந்து நாள் வாய்தாவை ஒருவாரம் முன்னதாக மாற்றினார். வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுவதாக அறிவித்தார்.

யாரும் வழக்குரைஞர் ஏற்பாடு செய்யவில்லை. வழக்குரைஞர் ஏற்பாடு செய்வதற்கோ, வேறு உதவிகள் பெறுவதற்கோ யாரையும் அணுக முடியாத வகையில் நாங்கள் தனிமைப்பட்டிருந்த காலமது. வழக்குரைஞர் ஏற்பாட்டுக்கு கால அவகாசம் கேட்டோம். அரசு இலவச வக்கீலை நியமிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அவசர அவசரமாக வெறும் நான்கே நாளில் வழக்கை நடத்தி முடித்தார். ஆயுள் தண்டனை வழங்கி விட்டார். நாங்கள் நிலைகுலைந்து போனோம்.

இவ்வளவு அவசரமாக வழக்கை நடத்தி முடிப்பதில் என்ன நிர்பந்தம்? இதில் ஏதாவது ஞாயம் இருக்கிறதா? இதுகுறித்து வாய் திறப்பதற்கு எங்களுக்கு துணிவில்லை. வேறு நாதியும் இல்லை.

1999-இல் ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட கையோடு என் கணவரை திருச்சி சிறைக்கு மாற்றி விட்டார்கள். கஷ்டஜீவனத்தில் இருந்த என்னால் திருச்சி ஜெயிலுக்கு சென்று என் கணவரைப் பார்க்க முடியவில்லை. சுமார் எட்டு வருடங்களுக்குப்பிறகு மறுபடியும் என் கணவரை கோவை சிறைக்கு மாற்றிய பிறகுதான் பார்த்தேன்.

என்னையும் சிறையில் அடைத்திருந்தால் என் கணவரை பார்க்கும் பாக்கியமாவது கிடைத்திருக்கும்!

இதற்குள் எனக்கு ஒரே ஆதரவாக இருந்த என் தாத்தாவும், பாட்டியும் இறந்து விட்டார்கள். உறவுகள் யாருமின்றி பிழைக்க வழிதேடி மறுபடியும் கோவை வந்து வீடுகளில் சட்டிபாத்திரம் கழுவி ஜீவனம் செய்தேன்.

2013-இல் என் மூத்தமகன் சான் பாஷா இறந்துவிட்டான். நோயாளியாக கிடந்த மகனை கவனிக்கக்கூட வாய்ப்பில்லாத என் கணவருக்கு அவன் இறந்த பிறகு கட்டியழவும்கூட வழியில்லை. நான்கு மணிநேரம் பரோலில் கொண்டுவந்த போலீஸ் பட்டாளம் அவரை அசையவிடாமல் சுற்றி நின்றது. மீண்டும் கொண்டுபோய் சிறையில் அடைத்துவிட்டது.

நாங்கள் எதுவும் கேட்க முடியாது. கேட்டால் சிறையில்கூட என் கணவர் உயிரோடு இருக்க முடியாது" சொல்லி முடிக்கும் முன்பே அழுகையில் வெடிக்கிறார் ஆதரவற்ற முன்னி.

"இரக்க மனம் படைச்சோரே! என் கணவரை காப்பாத்துங்கைய்யா....!" என்ற அவரின் கதறல் நம்மை உலுக்கியெடுக்கிறது.

எந்த வகையான குற்றங்களிலும் சம்பந்தமில்லாத ஒரு அப்பாவியை குற்றவாளியாக மாற்றுவதற்கு சட்டம், காவல், நீதி அனைத்தும் எவ்வளவு தூரம் செயல்பட்டுள்ளது பாருங்கள். அதேநேரத்தில் ஆதாரத்தோடு குற்றம் செய்தவர்கள் எப்படி விடுவிக்கப்பட்டார்கள் என்பதையும் பாருங்கள்.

கோவையில் 1997-இல் பாபர் மசூதி நினைவு தினம் தொடர்பாக இந்து, முஸ்லிம் இயக்கங்களுக்கிடையே ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவிவந்த நேரம். நவம்பர் 29-ஆம் தேதி இரவு டிராபிக் போலீஸ்காரர் செல்வராஜ் கொல்லப்பட்டார்.

அடுத்த நாளான நவம்பர் 30 அன்று காலை BI காவல்நிலைய போலீசார் பணிக்கு திரும்பாமல் காவல்நிலையம் அருகில் இருந்த கார் ஸ்டேன்ட் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

அர்ஜூன் சம்பத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறியல் நடைபெறும் இடத்துக்கு வந்தனர். அப்பொழுது அங்கு வந்த கோவை டெபுட்டி போலீஸ் கமிஷனர் லாலா சங்கா போலீசாரை கலைந்துபோக சொன்னபோது, அர்ஜூன் சம்பத் போலீஸ் கமிஷனரைத் திட்டினார்.

பின்பு போலீசாரும், அர்ஜூன் சம்பத் தலைமையிலானவர்களும் அங்கிருந்து டிராபிக் போலீஸ்காரர் செல்வராஜின் உடல் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனைக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது அர்ஜூன் சம்பத் தலைமையிலானவர்கள் வழியில் இருந்த முஸ்லிம்களின் கடைகளை அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தியதோடு, கண்ணில்கண்ட முஸ்லிம்களை சரமாரியாக வெட்டினர்.

அவர்கள் செல்வராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்த மருத்துவமனைக்கு வந்த அன்றைய திமுக எம்.எல்.ஏ-வான மறைந்த சி.டி.தண்டபாணியையும், அவர் மகனையும் ஓடஓட விரட்டி உருட்டுக்கட்டையால் சரமாரி தாக்கினார்கள். அவர்களின் கார்களையும் தீயிட்டு கொளுத்தினார்கள். இது தொடர்பான புகைப்படத்துடன் கூடிய செய்தி 1997 டிசம்பரில் வெளிவந்த நக்கீரன், ஜூனியர் விகடன் இதழ்களில் வெளிவந்துள்ளது .

அர்ஜூன் சம்பத் தலைமையிலானவர்கள் அதோடு நிற்கவில்லை. அன்று போலீசாரின் துப்பாக்கி சூட்டிலும் மற்றும் சங்பரிவார் அமைப்பினரின் கத்திக்குத்திலும் காயமடைந்த 1.ஹபீப் ரஹ்மான் 2.லியாகத் அலி 3.ஹாரிஸ் ஆகியோரை அவர்களது உறவினர்கள் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அர்ஜூன் சம்பத் தலைமையிலானவர்கள் காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களை வண்டியில் இருந்து இழுத்துப்போட்டு, நூற்றுக்கணக்கான போலீசார் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வேடிக்கை பார்க்க உருட்டுக்கட்டையாலும் கல்லாலும் அடித்தும்; கத்தியால் குத்தியும் படுகொலை செய்தனர். இதில் ஹாரிஸ் என்பவர் கொலையுயிரும், குற்றுயிமாக இருந்தபோது,  ஒரு போலீஸ்காரரே போலீஸ் வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்துவந்து ஊற்ற மற்றவர்கள் நெருப்புவைத்து ஹாரிசை உயிரோடு எரித்துக்கொன்றனர். மருத்துவமனையில் உள்ள தன் அண்ணன் அய்யூபை பார்க்க வந்த ஆரிப் என்ற இளைஞரை அடித்து பிறப்புறுப்பை சிதைத்துக்கொன்றனர்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் FRONTLINE,  நக்கீரன், ஜூனியர் விகடன் மற்றும் PUCL அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஆகியவற்றில் விரிவாக உள்ளது.

பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையிலேயே நடைபெற்ற இந்த குற்றங்கள் அனைத்தும் எப்படி பதிவு செய்யப்பட்டன? அடையாளம் தெரியாத கும்பலால் இந்த இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவ்வளவுதான்!

எம்.எல்.ஏ சி.டி.தண்டபாணி அவர்களை தாக்கிய வழக்கில் மட்டும் அர்ஜூன் சம்பத்தும், அவரது ஆதரவாளர்கள் சிலரும் ஒப்புக்கு கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கவும் பட்டனர்.

பட்டப்பகலில் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் படுகொலை செய்த அர்ஜூன் சம்பத்தை கைது செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் போராடியதன் காரணமாக வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. அர்ஜூன் சம்பத் ஒரு வருடம் கழித்து மீண்டும் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்படாமல் அர்ஜூன் சம்பத் விடுதலை செய்யவும்பட்டார். சிலருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டபோதும் மேல்முறையீட்டில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஏன் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்? இசுலாமியர்கள் ஏன் தண்டிக்கப்பட்டனர்? அதுதான் ஆளும்வர்க்கம் நிறுவியுள்ள அரசியல். இசுலாமியன் என்றால் குற்றவாளி, சமூக விரோதி, தீவிரவாதி, பயங்கரவாதி என்று நிறுவியுள்ள பொதுபுத்தி அரசியல்.

இந்த பொதுபுத்தி அரசியல்தான் இன்று இந்து பயங்கரவாதமாக வளர்ந்து நிற்கிறது. "நீ இசுலாமியன்தானே?" என்ற கேள்வியையும், "அப்படியானால் நீ குற்றவாளிதான் என்ற தீர்ப்பையும்" உருவாகியிருக்கிறது. அதனால் இசுலாமியர்கள் எவர் ஒருவரையும் அவர் இசுலாமியர் என்ற ஒரே காரணத்திற்காக எவர் வேண்டுமானாலும் தண்டிக்கலாம், கொல்லவும் செய்யலாம் என்று ஞாயப்படுத்தியிருக்கிறது.

இப்போது இசுலாமியர்களை அவர்கள் குண்டு வைத்தார்கள், சதி செய்தார்கள் என்று பெரிய விசயங்களுக்காக தண்டிக்க வேண்டியதில்லை. அவர்கள் மாட்டுக்கறி வைத்திருந்தார்கள், தின்றார்கள் என்றுகூட கொன்று விடலாம். அதையும் சட்டத்தின்முன் காவல்துறை மூலமாக செய்ய வேண்டியதில்லை. அதை இந்துத்துவ இயக்கங்களோ, அவற்றின் ஆதரவைப்பெற்ற சராசரி மனிதர்களோகூட செய்து கொள்ளலாம்.

அப்படித்தான் இன்றைக்கு இந்தியா முழுவதும் தனி மனிதர்களாகவும், கும்பலாகவும் இசுலாமியர்கள் கொல்லப்படுகிறார்கள்.

இந்த இசுலாமிய சமூகத்தையே குற்றவாளிகளாக பார்க்கிற பொதுபுத்தியும், அதன்மூலமான தாக்குதல்களும்தான் சனநாயக சக்திகளையும், போராளிகளையும் பலிவாங்குகிறது. இசுலாமியர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்று "கோவிந்த் பன்சாரேக்களையும், ரோகித் வெமுலாக்களையும்" கொலை செய்கிறது.

இப்போது சொல்லுங்கள், சிறையிலிருக்கும் 49 இசுலாமியத்தமிழ் கைதிகள் சராசரி குற்றவாளிகளா? அல்லது இசுலாமிய சமூகத்தை பலிகடாவாக மாற்றுவதற்காக சிக்கவைக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளா? இது வெறும் இசுலாமியர் அடையாளப் பிரச்சினையா? ஒட்டுமொத்த சமூகத்தின் மீதான தாக்குதல்களா? இயக்கங்கள் இதற்கு விடை காணாமல் இந்துத்துவ பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியாது. 

- திருப்பூர் குணா

Pin It