"பிறர்கென வாழ்ந்து மடிவது மலையை விட கடினமானது; தனக்கென வாழ்ந்து மடிவது இறகை விட லேசானது" என்பார் மகத்தான மக்கள் தலைவர் தோழர் மாசேதுங்.

கடந்த 27-07-2015 அன்று இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் மரணமடைந்து விட்டார். அதையொட்டி இந்திய அரசு 7 நாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. தமிழக அரசோ அவரது அடக்கம் நடக்கும் நாளான 30-07-2015 அன்று அரசு விடுமுறை என அறிவித்துள்ளது. இந்திய நாடே கண்ணீரில் மிதப்பதாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. பாஜக, காங்கிரசு, அஇஅதிமுக, திமுக, உட்பட அனைத்துக் கட்சிகளும் அவருக்காக ஓயாமல் கண்ணீர் வடிக்கின்றன. நேற்றுவரை அவரைக் கடுமையாக விமர்சித்தவர்கள் கூட, இன்று அவருக்காக அழுவது போல் நடிக்கிறார்கள்.

kalam rajapakse

அப்துல் கலாம் அவர்களின் மரணத்திற்க்கு கண்ணீர் விடாதவர்கள் அனைவரும் தேசத் துரோகிகள் என முத்திரை குத்தி விடும் அளவுக்கு ஊடகப் பிரச்சாரமும், அரசின் நடவடிக்கையும், அரசியல் கட்சிகளின் அறிக்கையும் உள்ளன. ஊடகப் பிரச்சாரத்தினால் ஊழல் கிரிக்கெட்டில் இந்தியாவை முன்நிறுத்தி ’இந்திய தேசபக்தியை’ பீறிட்டுக் கிளம்ப வைப்புது போல், இன்று அப்துல் கலாம் அவர்களை முன் நிறுத்தி ஒரு மிகப்பெரிய பிம்பம் அரசு - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மூலம் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டு மக்கள் தலையில் திணிக்கப்படுகிறது. இதற்குப் பலியாகி நாடெங்கும் உள்ள பலரும் அப்துல் கலாம் அவர்களுக்கு தெருக்களில் ஒரு பிளக்ஸ் போர்டாவது வைத்தால்தான் தனது விசுவாசம் அங்கீகரிக்கப்படும் என்பது போல் இயங்கி வருகிறார்கள்.

ஒருவர் இறந்து போய்விட்டாலே அவர் அப்பழுக்கற்ற புனிதமானவராக மாறி விடுகிறாரா? அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராகி விடுகிறாரா? இறந்தவரை இறந்த பின்பு விமர்சிக்கலாமா? அவர் அடக்கம் நடைபெறாத நிலையில் அவரைப் பற்றி மாற்று கருத்து சொல்லலாமா? இது அறமா? இறந்தவரை விமர்சிப்பவர்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? என்பது போல், அப்துல் கலாம் அவர்களின் மக்கள் விரோத, தமிழர் விரோத நடவடிக்கையைப் பேசும், எழுதும் பலரையும், தற்போது பலரும் கேள்வியும், விமர்சனமும் செய்கின்றனர்.

நமக்குதான் மிகுந்த வியப்பாக உள்ளது, ஒரு மனிதர் எப்படி அனைவருக்கும் நல்லவராக இருக்க முடியும்? முற்போக்கு பேசும் அமைப்புகள் பலவும்கூட அவரைக் கொண்டாடுகின்றார்கள், பிற்போக்குவாதிகளும் அவரைக் கொண்டாடுகின்றார்கள். இது இந்த நாட்டில் எப்படி சாத்தியமானது?.

ஒருவர் இறக்கும் போது அவரைப் பற்றிய உண்மையான மதிப்பீட்டிற்கு அளவிடும் அளவுகோல் எது? ஒருவரின் வாழ்ந்த காலத்தில் அவரது செயல்பாடு நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் நலனை உள்ளடக்கி இருந்ததா? அல்லது சிறுபான்மை கூட்டத்தின் நலனுக்காக இருந்ததா? என்பதே அது. அப்துல் கலாம் அவர்கள் வாழ்நாள் முழுக்க யாரின் நலனுக்காக இயங்கி வந்தார் என்பதுதான் நம்முன் இருக்கும் கேள்வி.

1990 ஆம் ஆண்டுகளில் இந்திய நிலை: 1990 ஆம் ஆண்டுக்குப் பின் காட் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்ட இந்திய அரசின் உலகமயமாக்கல் - தனியார்மயமாக்கல் - தாராளமயமாக்கல் கொள்கையினால் நாடு முழுக்க உள்நாட்டு தொழில், விவசாயம், மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிப்புக்கும், நெருக்கடிக்கும் உள்ளானது. இந்தியாவில் தொடர்ந்து வந்த அனைத்து அரசுகளும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, அனைத்து அரசியல்கட்சிகளின் ஊழல் செயல்பாடுகளின் மேல் மக்கள் வெறுப்பு, தொடர்ந்து நிறைந்து நின்ற காலம் அது.

மக்கள் எப்பொழுதெல்லாம் இந்த ஆளும் அரசுகள், அரசியல் கட்சிகள், நிலவும் அதிகார வர்க்க, பாராளுமன்ற அமைப்புமுறை மீது வெறுப்புற்று நிற்கிறார்களோ, அப்போதெல்லாம் ஆளும் வர்க்கங்கள் யாராவது ஒரு தனிநபரை மீட்பர் போல் மக்கள் முன்காட்டி இவர் வந்தால் நிலைமையில் அனைத்தும் மாறிவிடும் என மக்களின் எதிர்மனநிலையை தன்பக்கமே திருப்பி வைத்துக் கொள்வார்கள். அப்படித்தான் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவரான தேர்தல் ஆணையர் சேசன், காவல் துறை அதிகாரி கிரண்பேடி, உலக வங்கியிலே பணியாற்றிய மன்மோகன் சிங் போன்றோரையும், அரசியல்வாதிகளில் மிஸ்டர் பரிசுத்தம்(கிளீன்) எனக் காட்டப்பட்ட ராசீவ் காந்தி, நிர்வாகத் திறன்மிக்கவர் - வளர்ச்சி நாயகன் மோடி என்பது போலவும் காட்டி முன்நிறுத்தினர். அதே போல் சமூக செயல்பாட்டாளர் அண்ணா ஹசாரே அவர்களும் ஒரு கட்டத்தில் ஆளும்வர்க்கங்களால் முன்னிறுத்திக் காட்டப்பட்டார்.

எதுவுமே செய்யாமல், எப்படியாவது நாட்டில் ஒரு மாற்றம் நடந்து விட வேண்டும் என விரும்பும் மிடில் கிளாஸ் என அழைக்கப்படும் நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் முகமாக முன்நிறுத்தப்பட்டவர் அப்துல் கலாம் அவர்கள். இந்திய நாட்டின் மீதும், அரசு நிர்வாகம் –நிலவும் அரசியல் அதிகாரம் மீதும் மக்களின் நம்பிக்கையை எழுப்புவதற்கு தேவைப்பட்ட ஒரு முகமாக, அப்துல் கலாம் அவர்கள் 1990களின் பிற்பகுதியில் ஆளும்வர்க்கத்தால் முன்னிறுத்தப்பட்டார்.

பொறியியல் துறை சார்ந்தவராக இருந்த அப்துல் கலாம் அவர்கள், ஆளும் அரசால் விஞ்ஞானியாக காட்டப்பட்டார். அவர் எளிமையானவர், கல்வியாளர், அறிவியலாளர், தமிழ்வழியில் படித்து வானூர்தியியல்/ விண்ணூர்தியியல்/ ஏவுகணைப் பொறியியல் வல்லுநராகியவர், சொத்து சேர்க்காதவர், ஒரு கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து நாட்டின் முதல் குடிமகனாகியவர், நாட்டுக்காக திருமணம் கூட செய்யாதவர், இந்திய நாட்டுக்காக எண்ணற்ற சாதனைகள் (அது என்ன என்பது இப்போது வரை நமக்குத் தெரியவில்லை) செய்தவர் எனக்காட்டி ஆளும் வர்க்கத்தால் பூதாகரமாக முன் நிறுத்தப்பட்டவர் அப்துல் கலாம்.

அப்துல் கலாம் செய்தது என்ன?

குஜராத் படுகொலை:

இந்திய அரசில் பணியாற்றிய அப்துல் கலாம் அவர்கள், ஜுலை- 2002 ஆம் ஆண்டு பாஜக கட்சியினால் இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆக்கப்பட்டார். அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆக்கப்பட்ட காலத்தில்தான் குஜராத்தில் ஆளும் பாஜக அரசால், முசுலீம் மக்கள் மீது அவர்கள் யாருமே உயிரோடு இருக்கக் கூடாது என்ற வகையில் மத சுத்திகரிப்பு நடத்தப்பட்டு இருந்தது. உலகம் முழுக்க பல்வேறு நாட்டு மக்களாலும், இந்திய அரசின் நடத்தை பற்றி கேள்வி எழுப்பப்பட்டு, பதில் சொல்ல முடியாமல் தலைக்கு முக்காடு போட்டுக் கொண்டு, இனப்படுகொலையை பாஜக அரசு மூடி மறைக்க முயன்று கொண்டு இருந்த காலம் அது.

கோத்ரா ரயில் எரிப்பைக் காரணம் காட்டி, குஜராத் முழுக்க சிறுபான்மை முசுலீம் மக்களின் வீடுகள், கடைகள் அரசின் துணையோடு பாஜக ரவுடிகளால் பட்டியல் எடுக்கப்பட்டு, அரசின் பாதுகாப்போடு குறி வைத்து தாக்கப்பட்டன. முசுலீம் மக்கள் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டும், தீ வைத்தும் எரிக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் அகதிகளாக்கப் பட்டனர். ஆனால் அப்துல் கலாம் அவர்கள் இதைப் பற்றி தான் இறக்கும் காலம் வரை வாய்திறந்து ஒரு வார்த்தைகூட பேசியதில்லை. தான் ஒரு முசுலீம் மதத்தில் பிறந்திருந்தும், இந்தியாவின் முதல்குடிமகனாக இருந்தும் அம்மக்களுக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி பேசவில்லை. தனக்குக் கிடைத்த இந்த குடியரசுத் தலைவர் பதவி என்பது, முசுலீம் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலையை உலகின் முன் மறைப்பதற்கான ஒரு திரைதான், என்பதை நன்கு உணர்ந்து அதன்படியே செயல்பட்டவர்.

சுயசார்புக் கொள்கை:

அப்துல் கலாம் அவர்கள் பல நேரங்களில் இந்த நாட்டின் சுயசார்பைப் பற்றி மாணவர்களிடம் வலியுறுத்திப் பேசினார். ஆனால் இவர் இப்படி ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் நம் நாட்டை பல நாடுகள் கொள்ளையடிக்கவும், கனிம வளங்களைச் சுரண்டவும், உள்நாட்டுத் தொழிலை அழிக்கும் வகையில் பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கவும் இருந்த தடைகள் அனைத்தும் ஆளும் அரசால் நீக்கப்பட்டது. அதற்கு ஒப்புதல் கொடுப்பவராக இவர் இருந்து வந்தார். அமெரிக்காவுடன் 123 அணு ஒப்பந்தம் பற்றிப் பேசவும் அரசால் அப்துல் கலாம் பயன்படுத்தப்பட்டார், இவரும் அதற்கு உடன்பட்டு செயல்பட்டார்.

அப்துல் கலாம் அவர்கள் எந்த ஒரு இடத்திலும், அவரால் முன்மொழியப்பட்ட தற்சார்பு உற்பத்தி - தொழில்நுட்பக் கொள்கை ஆளும் அரசால் அழிக்கப்படுவதை எதிர்த்து குரல் எழுப்பவில்லை என்பது மட்டும் அல்ல முணுமுணுக்கக் கூட தயாராக இல்லை. அந்த அளவு அரசின் விசுவாசியாக மட்டும் அல்ல, கைப்பாவையாகவே செயல்பட்டார். தேசபக்தி வேடம் போட்டு, கவர்ச்சியாகப் பேசுவதற்கு மட்டுமே அவரது 'தற்சார்பு உற்பத்தி' என்பது அப்துல் கலாம் அவர்களுக்குப் பயன்பட்டது.

அணுசக்தி

ஏவுகணைப் பொறியியல் வல்லுநராகிய அப்துல் கலாம், தனது பதவி உயர்வால் பாதுகாப்புத் துறை அதிகாரியாகியவர். உலகமே ஜப்பானில் நடந்த ஹிரோசிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சுக்குப் பின் அணுகுண்டை எதிர்த்து வந்தது. காந்தியின் சீடராக, அகிம்சையின் முகமாக, சைவ உணவு உண்பவராக தன்னைக் காட்டிக்கொண்டே, மனிதகுலத்தை அழிக்கத் தயாரிக்கப்பட்ட அணுகுண்டு சோதனையை பொக்ரைனில் நடத்தியவர் அப்துல் கலாம் அவர்கள். இதற்கு ஆளும்வர்க்கங்களும், ஊடகமும் மாபெரும் 'தேசபக்தி' முத்திரை குத்தி, அப்துல்கலாமை மிகப்பெரிய தேசபக்த நாயகனாக மக்கள் முன் நிறுத்திக் காட்டியது.

கூடங்குளம் அணு உலை

தமிழ் மக்கள் அப்துல் கலாம் மீது வைத்திருந்த மதிப்பை, மாறா அன்பை, ஆளும்வர்கத்திற்கு ஆதரவாக மடைமாற்றி விடும் தந்திரமாக, 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் எண்ணற்ற அடக்குமுறைகளையும், நெருக்கடிகளையும் சந்தித்து தொடர்ந்து போராடி வந்த நிலையில், போராட்டத்தை சீர்குலைக்கவும், போராட்டம் நியாயமற்றது என மக்களிடம் பொதுப்புத்தியை உருவாக்கவும் ஆளும் அரசால் இறக்கிவிடப்பட்ட துருப்புசீட்டுதான் அப்துல் கலாம் அவர்களின் கூடங்குளம் வருகை. கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பானது என அணு உலை வளாகத்தை 6.11.2011 அன்று வெறும் சிலமணி நேரம் மட்டுமே சுற்றிப் பார்த்து உடனே நற்சான்று கொடுத்து, தமிழ்மக்களை ஏமாற்றி, அடுத்தமுறை ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு துண்டைப் போட்டு உறுதி செய்து வைத்துக் கொண்டவர் இவர். இதை விடக் கொடுமை கூடங்குளம் அணு உலையை சுற்றிப் பார்க்கும் முன்பே 'அணு உலை பாதுகாப்பு' என்று THE HINDU ஆங்கில நாளிதழில் அணு உலை நிர்வாகம் எழுதிக் கொடுத்ததை, முழுப் பக்க கட்டுரையாக எழுதி விட்டு வந்தவர். இப்படிப்பட்ட 'யோக்கிய சிகாமணி'தான் அப்துல் கலாம் அவர்கள்.

அப்துல் கலாம் என்ற ஆளும் அரசால் இறக்கிவிடப்பட்ட துருப்புச் சீட்டு சிலகாலம் நன்கு வேலை செய்தது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் பற்றி, அணுசக்தி வல்லுநராக இல்லாமலேயே அணுசக்தி விஞ்ஞானியாக ஆளும் அரசால் மாற்றப்பட்ட அப்துல் கலாம் சொன்ன 'பாதுகாப்பானது' என்ற செய்தி மக்களை போலியாக மயக்கியது. அவர் அணுவிஞ்ஞானி இல்லையெனும் போதிலும் அப்துல்கலாமின் வார்த்தைகளை அணு விஞ்ஞானியின் வாக்குமூலமாகவே கருதியது அப்பாவி சுயநல நடுத்தரவர்க்கம். சில காலம் தமிழகத்தில் கூடங்குளம் போரட்டக்காரர்களை பலரும் “தேவையற்ற போராட்டம்” என பரிகசிக்கும் நிலையே இருந்தது.

ஆனால் கூடங்குளம் அணு உலை தரமற்ற உதிரிப் பாகங்களை கொண்டு அமைக்கப்பட்டது, உதிரிப் பாகங்களை தயார் செய்து இங்கு அனுப்பிய நிறுவன உரிமையாளர்களே, தரமற்ற பொருளைத் தயார் செய்தாக பல ஊழல் குற்றச்சாட்டில் அவர்களது நாட்டில் கைது செய்து வைக்கப்பட்டு உள்ளனர் என்று பல்வேறு சான்றுகளோடு உச்சநீதி மன்றத்தில் பல்வேறு ஆதாரங்களை முன் வைத்த போதும்; அணு உலை இயங்கத் தொடங்கி ஒன்னரை ஆண்டில் 30க்கும் மேற்பட்ட முறை பழுதாகி நின்ற போதும்; கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டு கொதிகலன்கள் வெடித்து 6 பேர் உயிருக்குப் போராடிய நிலையிலும்; அணு உலைக்கு எதற்காக எனக் கூறாமலேயே ஆறு மாதத்தில் 35 கோடி ருபாய்க்கு டீசல் வாங்கப்பட்ட போதும்; அணு உலையைச் சுற்றி 30 கிலோ மீட்டர் தூரத்தில் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில் அவர்களுக்கு அணு உலையில் விபத்து நடந்தால் உடனே எப்படி தப்பிப்பது என்ற பேரிடர் மேலாண்மை இதுவரை அரசால் பயிற்சி கொடுக்கப்படாதபோதும்; 48000 வருட அணுக்கதிர்வீச்சை வெளியிடும் அணுக் கழிவை எங்கு வைத்து பாதுகாக்கப் போகிறோம் என்பதை உச்சநீதிமன்றதில் கூட சொல்ல முடியாமல், இன்று வரை இந்திய அரசு திணறி வருகின்றபோதும்; பாதுகாப்பு எனச் சொன்னோமே, எதார்த்தத்தில் அப்படி கூடங்குளம் அணுஉலை இல்லையே என்பதைப் பற்றி வாய்மூடி பேசாமல் மவுனியாகவே இருந்தவர் அப்துல் கலாம் அவர்கள். தான் சொன்னற்கு கூட நேர்மையாக இல்லாதவர்தான் அப்துல் கலாம் அவர்கள்.

அணுசக்தி வல்லுநராக இல்லாமலேயே, இந்திய அரசின் கூடங்குளம் அணு உலையை மட்டும் அல்ல, தற்போது தேனி நியூட்ரினோ உட்பட சகல அணுசக்தித் திட்டங்களையும் நியாயப்படுத்திப் பிரச்சாரம் செய்ததன் மூலம், இந்திய அரசுக்கும் அதன் மக்கள் விரோதமான அறிவியல் கொள்கைக்கும் தனது இறுதிமூச்சுவரை அருஞ்சேவை செய்தவர்தான் அப்துல் கலாம் அவர்கள்.

கனவு காணும் கல்வி

எப்போதும் மாணவர்களை எதார்த்தத்தை விட்டுவிட்டு, கனவு காணச் சொல்லும் அப்துல் கலாம் அவர்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொழிற்நுட்ப அடிமைகளை உற்பத்தி செய்ய கட்டமைக்கப்பட்ட தனியார்மயப்படுத்தப்பட்ட கல்வியை, ஆங்கில வழிக் கல்வியை, சுயசார்பற்ற கல்வியை, கல்வித்துறையில் ஜனநாயகமற்று இருப்பதை எந்தவிதத்திலும் எங்கும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை.

கல்வியில் தனியார்மயக் கொள்ளையை கண்டித்தோ, விமர்சித்தோ, இந்த நிலை மாற வேண்டும் என்பதை மறந்தும் எங்கும் பேசியதில்லை. மேலும் தனது கனவுகளை அவர் ஓடியோடி விற்ற இடங்கள் எல்லாம் இந்த தனியார் தொழிற்நுட்ப கல்லூரி வளாகங்களே. தமிழ்மொழியில் படித்து உன்னத நிலைக்கு வந்ததாக சொல்லிக் கொள்ளும் இவர், எந்த ஒரு இடத்திலும் தமிழ்வழியில் கல்வி கற்கும் மாணவர்களை சந்திப்பதை முதன்மையாக வைத்துக் கொண்டதில்லை. இராமேசுவரம் மீனவர் சமூகத்திடம் வாழ்ந்தவராக சொல்லப்படும் இவர், போராட்டக் களத்தில் இருந்த, போராடும் ஊரில் இருந்த மீனவ சமூக குழந்தைகளிடம் கூட பேச மனம் இல்லாதவராகவே இருந்தார். 10,000 காவலர்களை ஊரைச் சுற்றி வளைத்து நிறுத்தி மார்ச்-19, 2012 முதல் அரச பயங்கரவாதத்தால் இடிந்தகரை குழந்தைகளுக்கு பால்-தண்ணீர் கூட கொண்ட செல்ல விடாமல் வாரக் கணக்கில் தடுத்து நிறுத்தப்பட்ட போதும் அதை வாய் திறந்தும் கண்டிக்காத மீனவ கிராமத்தைச் சேர்ந்த ’குழந்தை நேசர்’தான் அப்துல் கலாம்.

அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்கள் முன்னேற வேண்டுமென்றும், வாழ்க்கையில்-வேலையில் முன்னேறி சாதனை பல செய்ய வேண்டுமென்று ஓயாமல் போகும் இடமெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தார். எதிர்காலத்தைப் பற்றி கனவு காணுங்கள் என்று மாணவர்களிடம் சொன்ன அவர், எந்த ஒரு நிலையிலும் இதற்குத் தடையாக இருக்கும், எங்கும் நீக்கமற நிறைந்துள்ள லஞ்ச ஊழலை, நேர்மையற்ற அரசியலை, சமத்துவம் அற்ற சுரண்டல் சமூக அமைப்பை, மனிதருக்குள் ஏற்றதாழ்வை கற்பிக்கும் சாதியப் படிநிலை கொண்ட கட்டமைப்பை, ஒவ்வொரு தேசிய இனமும் டெல்லியால் அடிமைப்படுத்தப்பட்டு அரசு உரிமை அற்று இருப்பதை, பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலை எதிர்த்து, 'போராட்டக் களம் காணுங்கள்' என்றோ மட்டும் எழுப்பவே இல்லை. மாணவர்களை- இளைஞர்களை உற்சாகப்படுத்தினாரே ஒழிய, பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறைகளைப் பற்றி மறந்தும் பேசவில்லை என்பது மட்டும் அல்ல, அதை உணரவே தடையாக இருந்து ஒரு போலியான மயக்கத்தையே இளைஞர்களிடம் ஏற்படுத்தினார்.

தமிழக மீனவப் படுகொலைகள்

அப்துல் கலாம் அவர்கள், சிங்கள ராணுவத்தால் அவரது ஊரைச் சேர்ந்த 700 மீனவர்கள் படுகொலைகள் செய்யப்பட்ட போதும், எண்ணற்றோர் சிறைபடுத்தப்பட்ட போதும், பலர் ஊனப்படுத்தப்பட்ட போதும் கூட பேச முடியாமல் போனதற்குக் காரணம் என்ன என இதுவரை அவர் சொன்னதில்லை, சொல்லவும் முடியாது. எந்த ஒரு நிலையிலும் ஆளும் வகுப்பின் கையாளாக மட்டுமே தன்னைக் காட்டி, உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டவர் அப்துல் கலாம் அவர்கள்.

ஈழத்தமிழர் படுகொலைகள்

ஈழத்தில் ஒன்னரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது கண்ணை மூடிக் கொண்டு பேசாமல் அமைதி காத்தவர். இனப்படுகொலை பற்றி உலகம் முழுக்க பல்வேறு விவாதங்கள் வந்த போதும் பேசாமல் அமைதி காத்து இருந்தவர். சிங்கள இராணுவத்திடம் சரண் அடைந்த, அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த சிறுவன் பாலசந்திரன் படுகொலை செய்தி அம்பலம் ஆகி தமிழகமே கொதித்துக் கிடந்த போதும், இசைப்பிரியா படுகொலை அம்பலமாகிய போதும் கூட வாய் பேசாத மவுனி இவர். ஆனால், இலங்கைக்கு ஓடோடிச் சென்று, 'அங்கு தமிழர்கள் எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறர்கள், இலங்கை தற்போது சரியான பாதையில் பயணிக்கிறது' எனக் கூறி, ஒன்னரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு நற்சான்றிதழ் கொடுத்து வந்தவர் இவர்.

யாருக்காக பேசினார் அப்துல் கலாம்?

ஈழத்தில் நடந்த இரக்கமற்ற ஒன்னரை லட்சம் தமிழர் படுகொலைகள், அவரது ஊரைச் சார்ந்த மீனவர் படுகொலைகள், குஜராத் முசுலீம் படுகொலைகள் என எதுவும் அவரை மனரீதியாக எப்போதும் துன்புறுத்தியது கிடையாது. ஒரு சாதாரண மனிதன் என்ற முறையில் தெருவில் ஒரு நாயை அடித்துக் கொன்றால் கூட ஏன் எனக் கேட்கும் சமூகத்தில் இருக்கும் அப்துல் கலாம் அவர்கள், இந்த நாட்டின் முதல்குடிமகனாக இருந்து கொண்டு பல்லாயிரக்கணக்கானோர் படுகொலையைப் பற்றி பேசவே மறுத்தவர். பேசினால் எங்கே தனது ஆளும்வகுப்பு விசுவாசம் கேள்விக்கு உள்ளாக்கப்படும் என பேசாமல் இருந்தவர்.

kalam modi

அணு உலைக்காகவும், நியூட்ரினோவிற்காகவும் மட்டும் வாய் திறந்த அப்துல் கலாமின் குரல், அப்பாவி உழைக்கும் மக்களுக்காக எப்போதும் எழுப்பப்பட்டதே இல்லை. விவசாயத்தை அழிக்கும் பி.டி விதைகளை எப்போதும் ஆதரித்து உரக்கப் பேசி நின்றவர். சில்லறை வர்த்தகத்தை அழிக்கும் வால்மார்ட் போன்ற அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக இருந்தவர்.

பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக, தமிழகத்தை அழிக்கும் திட்டங்களான மீத்தேன், கெயில், கனிமவளக் கொள்ளைகள், ஆறுகள் அழிப்பு, நீர்நிலைகள் அழிப்பு, மலைகள் அழிப்பு, கடல்-கடற்கரை அழிப்பு, சுற்றுசூழல் மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், குடிநீர் விற்பனை பண்டமாக்கப்படுதல், நீராதாரத்தை அழித்து கோக், பெப்சிக்கு விற்கப்படுவது என எதைப் பற்றியும் பேசாமல் அமைதியாக இருந்தவர். மக்களை அழிக்கும் மதுவை விற்கும் அரச கொடுமையை வாய்திறந்தும் பேச மறுத்தவர். உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கூட மதிக்காமல் காவிரி, முல்லைப் பெரியார் பிரச்சினைகளில் அண்டை தேசிய இனங்கள் இனவெறிப் போக்கோடு நடந்த போதும் அதைப் பற்றி ஏறெடுத்தும் பார்க்காதவர் இவர். சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட, போராடும் மக்கள் மீது ஏவப்பட்ட அனைத்து அரச பயங்கரவாதத்தையும் கண்மூடி ஆதரித்து நின்ற அரச விசுவாசி.

இந்திய அரசின் அனைத்து நாசகார திட்டங்களுக்கும் ஓடிஓடி வந்து நற்சான்றிதழ் கொடுக்கும் ஒரே இந்திய குடிமகன், அரசின் பிராண்டு அம்பாசிஸ்டர் இந்தியாவிலேயே இவர் மட்டும்தான். கூடங்குளத்தில் அணு உலைப்பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்றவர் அப்துல் கலாம். ஆனால் வாழ்வாதாரத்திற்க்காக போராடும் போராட்டக்காரர்களான எங்களை, போராடும் மீனவ-விவசாய மக்களை எப்போதும் சந்திப்பதில்லை என்றே வாழ்ந்தவர்.

இவரை முன்நிறுத்தி வைத்து செயல்பட்ட ஆளும்வகுப்பின் அரசியலை எல்லாம் கேள்விக்குள்ளாக்கும் பண்பு கொண்டவரல்ல அப்துல் கலாம் அவர்கள். அப்படியான நிலையில் அவர் இருந்திருந்தால் இந்தியாவின் ஏதாவது ஒரு ஆராய்ச்சி நிலையத்தில் அதிகாரியாகவே காலம் எல்லாம் கழித்திருக்கவேண்டும். அப்துல் கலாம் அவர்கள் எந்த இடத்திலும், அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக நெருக்கடி ஏற்படும் வகையில் நடந்து கொள்ளாத அரசின் தீவிர அடிமை விசுவாசி.

தமிழ் செழிக்க வழி:

தமிழர்களின் கல்வி, வேளாண்மை, வணிகம், கலை, தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல், மின்னியல், கணிதம், நீதி, வங்கித்துறை செயல்பாடுகள், அரசியல், திரைப்படம், ஊடகங்கள் என அனைத்திலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்தி, அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால் மட்டுமே, தமிழ் மென்மேலும் செழித்து வளரும் என்பது அப்துல் கலாம் சொல்லும் தமிழ் செழிக்கும் வழியாகும்.

இது சரிதான். ஆனால் அப்துல் கலாம் அவர்களால் சொல்லப்படும் வழி இங்கு நடைமுறைப்படுத்த என்ன தடை என்பதையும், தடை நீக்கும் வழியையும் அவர் கூறியுள்ளாரா என்றால் அதுதான் இல்லை. இவர் சொல்வது போன்ற நடைமுறைகள் உலகில் தமிழக அளவே உள்ள நாடுகளான அய்ரோப்பாவைச் சேர்ந்த ஜெர்மன், இத்தாலி, பிரஞ்சு உட்பட பல நாடுகளில் உள்ளது. அங்கு அந்த நாடுகள் அனைத்தும் தனக்கென்ற சுய அதிகாரம் பெற்ற நாடுகள். ஆனால் தமிழகமோ இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அடிமை தேசம். இங்கு அனைத்தையும் தீர்மானிப்பதாக இந்திய அரசு மட்டுமே உள்ளது. தமிழகம் டெல்லியின் பிடியில் இருந்து விடுதலை ஆகாமல் இதை இங்கு நடைமுறைப்படுத்த முடியுமா என்றால் அதற்கான சாத்தியமே இல்லை. தமிழ் செழிக்கும் வழி சொல்லும் அப்துல் கலாம் அவர்கள் தமிழகம் இந்தநிலை அடைய உள்ள தடையையும், அதை உடைக்கும் வழியையும் கூறாமல் பொதுவாகப் பேசுவது என்பது, 'போகாத ஊருக்கு வழி சொல்வது போல'. இது தமிழ் மேல் அக்கறை கொண்டவர் எனக் காட்ட உதவுமே அன்றி நிலைமையை மாற்ற உதவாது.

மரணம் அடைந்த பின்பு விமர்சிக்கலாமா?

அப்துல் கலாமின் தவறுகள் எதுவும் ஏதோ அறியாமல் செய்த தவறுகள் அல்ல. அது குறிப்பாக திட்டமிடப்பட்டு, அது நியாயப்படுத்தும் வகையில் படிப்படியாக நடைமுறைப்படுத்தப் பட்டது.

தோழர் பெரியார் சொல்லுவதைப் போல…

“எல்லா சாவுக்கும் நாம் வருந்துவதில்லை... வருத்தத்தின் அளவு நட்டத்தின் அளவைப் பொருத்து மாறும்”

அப்துல் கலாமின் இறப்பு மூலம் உழைக்கும் தமிழர்களுக்கு எவ்வித நட்டமும் இருப்பதாய்த் தெரியவில்லை. அவர் காலம் முழுக்க ”கனவு காணுங்கள்” என்ற மாய வார்த்தைகளை மட்டுமே உதிர்த்து ஆளும்வர்க்கத்தால் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டவர். இந்திய அரசுக்கு நல்ல கைக்கூலியாக நின்று, பன்னாட்டு நிறுவனங்கள் இந்த நாட்டை கொள்ளை அடிக்க அனைத்து வழிகளிலும் வர உதவியவர். அதற்கு அவரைச் சுற்றி இருந்த ஆளும்வர்கத்தால் கட்டப்பட்ட போலியான பிம்பம் பயன்பட்டது.

அப்துல் கலாம் அவர்களை முன்வைத்து ஆளும் அரசு - அரசியல்வாதிகள்- ஊடகங்களால் காட்டப்பட்ட, எளிமை, நேர்மை, கனவுகள் எல்லாம் நம்மை அரசியலற்ற வகையில் மாற்றி, இந்திய அரசின் பிடியில் மேலும் மேலும் சிக்க வைக்கவும், பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக நமது தமிழகம் மாற்றப்பட மட்டுமே பயன்பட்டது.

அப்துல் கலாம் நல்லவராகயிருந்தால் அது அவருக்கு மட்டுமே சிறப்பு. உண்மையில் அப்துல் கலாமின் அறிவும், உழைப்பும், நேர்மையும் இந்த நாட்டின் சராசரி ஏழை மக்களுக்கு எவ்வித பயனும் அற்றதாகவே இருந்தது. அவர் மக்களுக்கான விஞ்ஞானம் என்பது பற்றி எப்போதும் யோசித்ததே இல்லை. மேலும், மக்களுக்காக ஆட்சி என்பதை மறைத்து, 'ஆளும் அரசின் சுரண்டல் கொள்கைகளுக்காகவே, கொள்ளைக்காகவே மக்கள்' என்பதான நிலைமையை ஏற்படுத்த தன் வாழ்நாள் முழுக்க ஓயாமல் உழைத்தார். இளைஞர்களை சமூக செயல்பாட்டுக்கு வர விடாமலும், போராடாமலும் தடுத்து நிறுத்தி, 'தனி மனித முன்னேற்றமே சமூக முன்னேற்றம் போல்' காட்ட அவரது கனவு காணுங்கள் எனும் கோட்பாடு பயன்பட்டது.

ஏற்கனவே இந்த பதவியில் ஆளும் காங்கிரசு அரசு அரசால் பதவியில் அமர்த்தப்பட்ட கே.ஆர்.நாராயணன், அரசின் பல தவறுகளை சுட்டிக் காட்டி நிலைமைகளை மாற்றியுள்ளார். ஆனால், அதிகாரமுள்ள பதவி இருந்தும், தன் அதிகாரங்களை எளிய மக்களுக்காக எப்போதும் பயன்படுத்தாத, மௌனமாக அனைத்து அரசின் குற்றங்களுக்கும், கொள்ளைக்கும் அங்கீகாரம் வழங்கிய அப்துல் கலாம் அவர்கள், வரலாற்றில் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட வேண்டிவர் என்பதாக அல்லாமல் வேறெப்படியும் அடையாளப்படுத்த முடியாதவர்.

இறந்தவுடன் ஒருவரை நல்லவர்களாக காட்டும் மனோபாவத்தை விரட்டுவோம்… ஒருவரின் மரணம் என்பது அவரின் அனைத்து தவறுகளையும் மன்னிப்பதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியல்ல. மரணம் ஒருவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக ஆக்குவதுமில்லை. மரணம் பற்றீிய நமது அடிமனதில் பதிய வைக்கப்பட்டுள்ள நம்பிக்கை தான் ஒருவரை இறந்தவுடன் விமர்சிக்கக் கூடாது என்று பலரையும் கூற வைக்கிறது.

இன்று சமூகத்தின் 'கூட்டுமனசாட்சி'யாக ஆளும்வர்க்கத்தால் காட்டப்பட்டுக் கொண்டு இருக்கும் அப்துல் கலாம் அவர்களை, வாழ்க்கை முழுவதும் சுரண்டல் - ஆதிக்க கூட்டத்தின் நலனுக்காக மட்டுமே அவர் இருந்தார் என்பதை உணராமல், அரசியலற்ற நிலையில் மாபெரும் பிம்பமாக தூக்கி சுமந்து கொண்டிருக்கும் நம் மக்களின் தவறான கண்ணோட்டத்தை மாற்ற, அவரது மக்கள் விரோத அரசியலை, மக்கள் விரோத செயல்பாட்டை நாம் தொடர்ந்து விமர்சித்து, விவாதித்து மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்.

அப்படி இல்லாமல், 'அப்துல் கலாம் தவறு செய்துள்ளார்தான். ஆனால் அவர் செய்த தவறெல்லாம் அவர் மக்கள் மீது கொண்ட பற்றே காரணம்; அறியாமையில் செய்தது; அவர் அரசியல்வாதி அல்ல, அறிவியலாளர்; எனவே தெரியவில்லை எனக் கூறி சமாதானப்படுத்திக் கொண்டு அவர் எளிமையானவர், கல்வியாளர், அறிவியலாளர், தமிழ்வழியில் படித்து ஏவுகணைப் பொறியியல் வல்லுநராகியவர், சொத்து சேர்க்காதவர், ஒரு கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து நாட்டின் முதல் குடிமகனாகியவர், நாட்டுக்காக திருமணம் கூட செய்யாதவர், இந்திய நாட்டுக்காக எண்ணற்ற சாதனைகள் செய்தவர், நல்லவர், வல்லவர், இளைஞர்களின் விடிவெள்ளி எனக் கூறுவது எல்லாம் மக்களை அரசியலற்ற நிலையில் வைத்துப் பிழைக்கும் பிழைப்புவாத போக்காகும்.

அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை என்பது இந்திய அரசின் சுரண்டல் கொள்கையைப் பாதுகாத்து, அதை நடைமுறைப்படுத்த உழைத்த ஒரு அறிவியல் அடியாளின் அற்ப வாழ்கையாகும். பார்ப்பனிய இந்திய அரசு எவரையும் பயன்படுத்தி தனது ஆதிக்கத்தை தக்க வைக்கும்; இந்திய பார்ப்பனியத்திற்கு உதவும் ஒருவரை சாதிமத வேறுபாடின்றி ஏற்றுக்கொள்ளும் என்பதை நமக்கு அப்துல் கலாம் வாழ்க்கை படிப்பினையாக உணர்த்துகிறது.

- முகிலன்

Comments

22 comments

22
கிறிஸ்டோபர் ராஜ்குமார்
தங்களது நிலைப்பாடு மிகவும் நியாயமானதே, உண்மையானதும்கூட. இந்த இறப்பிறக்கான சோகம் ஊடகங்கள் உருவாக்கியதே. இவர் பதவியை ஒருபோதும் நீதிக்காகவும், நியாயத்தை நிலைநிறுத்தவும் பயன்படுத்தியதே கிடையாது. ஒரு கவுன்சிலர் கூட பல சூழல்களில் பதவியை மக்களுக்காக பயன்படுத்தும்போது, இந்த மாமனிதர், இத்தனை அப்பாவிகள் கொலைசெய்யப்பட்டபோது மவுனித்திருந்ததை நியாயம் என எவராவது கூறினால் அது ? அவரை போற்றுவதும் நியாயமா? என்னைப் பொறுத்தவரை இந்த துக்கமும் அழுகையும் செயற்கையே
Surya Kaliappan
very nice article Mr. Mugilan.
யோனா
கலாமை, நீங்கள் ஒரு போராளியாக, களம் இறங்கி வேலை செய்யும் கள பணியாளராக எதிர் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் அவர் ஒரு விஞ்ஞானி/பொறியியலாளர்/ஜனாதிபதி. அவர் பணியை அவர் திறம் படவே செய்தார். அவரது இறப்பு கொஞ்சம் அதிகமாகவே பெரிது படுத்த பட்டது என்றால், அது social media களின் தாக்கமே. என்னை பொறுத்த வரை அவர் குப்பையில் எறிய பட வேண்டியவரில்லை. எதிர் மறை எண்ணங்களை விடுத்து, பின்பற்ற பட வேண்டியவர். உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தால், நான் அவர் செய்யவில்லை என்று கருதிய காரியங்களை செய்ய முயற்சிப்பேன ஒழிய, குறை கூறி கொண்டிருந்திருக்க மாட்டேன். தோழரே, களம் இறங்கி வேலையை ஆரம்பியுங்கள். அடுத்தவரின் குறைகளை காண உங்களுக்கு நேரமிருக்காது....
thangavel
Shocking News: Before tht incident in iim in shillong. Before 10 days abdul kalam had came to know tht he is going to meet god. so he called his whole family and spent day with them. He went to 7 states in ten days for giving lecture to students. To our knowledge this not first attack for kalam. Doctor's had advised him not to travel But For those students he went there.And in shillong iim is a high place. During walking stairs he missed his balance due to less oxygen Everyone said come sir let fix meeting any other day Than but he went to Lecture for students. " For our Generation He is our father of Nation" plz share this if u agree "Miss Ü $ïR "
thangavel
" கண்ணீர் அஞ்சலி "
கருப்பசாமி
சாதிவைத்து பிைழப்பை நடத்திவரும் இவா்கள் நிராகரிக்கப்படவேண்டியவா்கள். யாகூப்மேனனுக்கு வருத்தப்படுபவா்கள். கலாம் இறப்பிற்கு வருத்தம் தெரிவிக்காதவா்கள் தேசத்துரோகிகள் அல்ல. ஆனால் பிற உயிர்கள் பலியாக காரணமானவா்களை மத அடிப்படையில் சாதி அடிப்படையில் விடுவிக்க கோருபவா்கள் தேசத்துரோகிகளே. ஏனெனில் இவா்கள் எதிர்க்கவில்லையெனில் சாதிவியாபாரம் மதவியாபாரம் என எதுவும் இருக்காதே. சிலா் உைழத்து உண்பா். சிலா் அடுத்தவா்களை கெடுத்து உண்பா். அதுபோலவே சிலா் சாதி சாதி என வெறிபிடித்து, ஆனால் பிறரை சாதிவெறியர் என அழதை்து பிைழப்பு நடத்துவா். இவா்கள் கலாம் பற்றி கூறுவதனால் அவருடைய புகழுக்கு ஒன்றும் இல்லை. சூரியனைப்பார்த்து நாய் குலைத்தால் நாய்க்கு மட்டுமே வாய்வலிக்கும்.
raju
Mr Mugilan you can ask now Mr N Modi pm about all this thing Because still he is in his post and alive too so you can gget clarification.
ramesh
An article boldly and truly written. It is shame on our society to always overlook reality and boast some one based on hero worship. I do not bather whether Kalaam is good or bad. My worry is what was his relevance to the society, including his own?. What was his idea about the complex Indian Society?. What was his concern about the downtrodden, women, marginalized and the filthy corrupt politicians?. Did he ever spelt his views on all these important issues?. He was a flawed thinker which is bereft of reality. He lived in an illusionary world surrounded by fake people who boast about bogus concept of nation building with the help of nuclear power.
anand
mr.mukilan it seems u didnt knw anything about him and even u didnt hear r read the speeches of him . . the things u r record here is seems that u did it for ur fame. I have to say a sample of his speech in the parliament of uk he spk about his nation and he uses the lines of purananuru. . . it not need to use the line of puranauru bt he did in to make them know of that book. . . so dont write anything as u wish
Karthikeyan
இப்படி நல்ல மனிதர்களை இகழ்ந்து தூற்றியதால் தான் தமிழ்நாடு அரசியலில் இவ்வளவு ஊழல், நேர்மையின்மை. நீங்கள் சாகளவும் திருந்த மாட்டீர்கள். உண்மையில் நீங்கள் இப்படி இருப்பதற்கு காமராஜர் விட்டுச் சென்ற சாபம் தான். அவரையே தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிய புண்ணியவான்கள் தானே நீங்கள் எல்லாம். நடிகைகளுக்குக் கோயில் கட்டிய நாசமத்த மனிதப் பரம்பரைதான் நீங்கள். ஒரு நல்லவன் வாழ்ந்திடக் கூடாதே.... அப்துல் கலாமை விமர்சிப்பதற்கு எந்த ஒரு மனித விலங்க்குக்கும் அருகதை கிடையாது.... இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் சென்று வருங்கால சந்ததிகள் எல்லாம் தெளிவு பெற்று அரசியலைச் சுத்தம் செய்தால் தான் தமிழ்நாடு சுத்தமாகும். முகிலன் போன்ற எழுத்தாளர்களின் இந்த விதமான கருத்து வாந்திகள் எல்லாம் சுத்தம் செய்யப் படவேண்டியிருக்கிறது... அது நம் வெட்கக் கேடு.... தயவு செய்து அப்துல் கலாமைப் பற்றியெல்லாம் விமர்சனம் என்ற பெயரில் வாந்தி எடுக்காதீர்கள் நாசமாப் போனவனுகளா....
Karthikeyan
ஐயா அப்துல் கலாம் அதுக்கு குரல் கொடுக்கவில்லை, இதுக்கு குரல் கொடுக்கவில்லை என்று கூவிக்கொண்டு..... அவரு எதுக்கு குரல் கொடுக்க வேண்டும்? அவரையும் உங்களைப் போன்று நாலாந்தர அரசியல்வாதிகளுக்கு கைதட்ட சொல்கிறீர்களா அல்லது நாலாந்தர அரசியல்வாதியாக மாறி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அவரு சாதரண மக்களுக்கு ஒண்ணுமே பன்னுலையாம்? நீங்க ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த வெண்ணைகள் என்னத்த செய்துவிட்டார்கள் அவர் செய்ய? யாரிடம் கேள்வி கேட்க வேண்டுமோ அவர்களிடம் கேள்வி கேட்க துப்பில்லை, வந்துவிட்டார்கள் அப்துல்கலாம் அவர்களை குற்றம் சொல்லிக்கொண்டு. இந்த கம்முநிஷ்ட்டுகள் என்ற போர்வையில் சிலர் அடிக்கும் கூத்துகள் தாங்கவில்லை. தனியார் பள்ளி முதல்வர்கள் அவரை அழைத்து பேச வைத்தார்கள், அவராக சென்று பேசவில்லை. ஏன் அரசுப்பள்ளி முதல்வர்களும் அவரை அழைத்து மாணவர்களுடன் கலந்துரையாட செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? பார்பனியத்தால் அடிமைப் படுத்தப்பட்டு, கிடந்த பிராமிணர் அல்லாத அனைத்து மக்களுக்கும் ஆயிரம் தலைமுறைகளுக்கு ஆறுதலாய் இருக்கும் ஆளானப்பட்ட பாபாசாஹேப் அம்பேத்காரையே "தலித்துகளின் தலைவர் " "தாழ்த்தபட்டவர்" என்று சொல்லும் கூட்டம் நீங்கள், அவரைப்பற்றி அடுத்த அடுத்த தலைமுறைக்கு ஒழுங்காக எடுத்து சொல்லக்கூடாது என்பதில் தெளிவாய் இருக்கும் கூட்டம் நீங்கள், பாடப் புத்தகங்களில் கூட அவரைப்பற்றி ஒழுங்காக பதிவிடாத கூட்டம் நீங்கள். அப்படி இருக்கும் போது ஒரு தலைமுறைக்கே ஆறுதலாய் இருந்த அப்துல்கலாம் அவர்கள் எம்மாத்திரம் உங்களுக்கு? ஒரு விஞ்ஞானியாக ,குடியரசுத் தலைவராக இந்த நாட்டுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நன்றாகவே செய்துவிட்டு சென்று இருக்கிறார்.. அதனால, போங்க, போய் உங்கள் உங்க புள்ள குட்டிங்க ஒழுங்கா படிக்குதா அல்லது ஜாதி மத சங்கத்தில் சங்கமிக்கிறதா என்று பாருங்கள்
Sivakumar
The above allegation on Mr.Kalam is 100% correct and all those has been put on that time, when he is alive. So many example we can say, like Tamil issue in Srilanka, Koodankulam issue or Tamil fisherman issue, Kalam had no any suggestion till his death. Every time he simply say "Kanau Kaanungal". After that our student will join any one MNC company and again ....
Srinivasan G
Dear Sir. This is truly unnecessary & worst post. It shows limited knowledge. and poor attitude of MR.Mugilan. In beginning he quoted words of Mao Tse Tung, who was a known killer. If you are able to praise Mao, then surely it shows ur sided knowledge. If you don't know about his contribution, please don't talk about him. Defense reasearch, Missiles & atomic power are not as simple as you think. India should posses such technologies.
Manithan
யாராவது யாரையாவது குறை கூறினாலே போதும், உங்கள் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது யாராவது யாரையாவது புகழ்ந்து பேசினால், உங்களுக்கு துக்கம் மேலிடுகிறது இது எதனால் மற்றவர்களின் குறைபாட்டைக் கேட்கும்போதெல்லாம் உன் உள்ளத்திலேஒரு அகங்காரம் தோன்றுகிறது'' நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல:? .. .. நாம் அவனை விட மேலானவர்தான்'' என்ற எண்ணம் ஏற்படுகிறது யாராவது பாராட்டப்படும்போது உங்களுக்குத் தோன்றுகிறது,''நம்மை விட அவனை மேலானவனாக இருக்கிறானே!'' எனவே உங்களுக்கு வேதனை ஏற்படுகிறது. நம்மைவிட சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாதல்லவா!ஆகவே நீங்கள் பிறர் மீதுள்ள நிந்தனையை எவ்வித தடையுமின்றி உடனே ஏற்றுக் கொள்கிறீர்கள்.ஆனால் பாராட்டப்படும்போது விவாதம் புரிகிறீர்கள். 'இவன் ஒரு பாவி,' என்றுயாரையாவது சொன்னால் நீங்கள் ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்றுகாரணம் எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதில்லை. உடனே அந்த செய்தியை இயன்றவரை அடுத்த காதுகளுக்கு தெரியப் படுத்தி விடுகிறீர்கள். அதில் கொஞ்சம் சொந்த சரக்கை சேர்த்துக் கொள்ளவும் தயங்குவதில்லை. நீங்கள் அறிந்ததைவிடஅதிகமாகவேவெளிப்படுத்தி விடுகிறீர்கள். யாரும் அதனை ஆட்சேபிப்பதில்லை.இவர் ஒரு நல்லவர் என்று யாராவதுகுறிப்பிடப்பட்டால், நீங்கள் பலவிதக் கேள்விகளால் துளைத்து விடுகிறீர்கள். செய்தி உண்மையானது என்றாலும், ஏதோ எங்கோ தவறு நிகழ்ந்துள்ளது என்று சந்தேகம்கொள்கிறீர்கள்.உங்கள் கண்களுக்கு உங்களைத்தவிர எல்லோரும் பாவிகள்தான். யாராவது மகானாகத் தென்பட்டாலும் உங்கள் கண்களுக்கு அவரும் பின்னணியிலேஒரு பாவியாகத்தான் தென்படுவார். அவர் முகமூடி அணிந்திருப்பதாகவும், என்றாவதுஒரு நாள் அந்த முகமூடி கிழியப் போகிறது என்றும் சொல்வீர்கள்இத்தகைய உபாயத்தால் தான் உங்களுடைய அகங்காரம் நிலை பெற்றிருக்கும் எல்லோரையும் சிறுமைப் படுத்துவீர்கள்:.. எல்லோரையும் நிந்திப்பீர்கள்உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லோருமே நல்லவர்கள் எனும்போது உங்களுக்கு துன்பம்ஏற்படுகிறது
JEYARAMAN KANAGAMANI NADAR
1998 - "OPERATION SHAKTHI"-POKHRAN - 2 ஏ.கே.கான் அவர்கள் எழுதிய இந்த உண்மை கட்டுரை ஒன் இந்தியா வில் போன வருடம் வெளியாகியிருந்த இது மிகவும் .சுவாரசியமானது.இந்த சம்பவத்திற்கு பிறகு தான் இந்தியாவுடன் அமெரிக்கா நெருங்கி வர தொடங்கியது. அப்துல் கலாமை இழந்து நிற்கும் நாம் இந்த தருணத்தில் அவர் என்ன சாதித்தார் என்பதற்கு இது அவருடைய அறிவை "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"என்பதாக விளக்கும் . "போக்ரான்... அப்துல் கலாம் தனது விஞ்ஞானிகள் குழுவுடன் தீவிர ஆலோசனையில் இருக்க அங்கு வருகிறார் இந்திய அணு சக்திக் கழகத்தி்ன் தலைவர் டாக்டர் ஆர். சிதம்பரம். 'கலோனல் பிருத்விராஜ்'... என சிதம்ரம் அழைக்க, கலாம் திரும்பிப் பார்க்கவி்ல்லை.. யாரையோ கூப்பிடுகிறார் என நினைத்து தனது 'ஸ்கெட்களில்' ஆழ்ந்திருக்கிறார். மீண்டும் 'கலோனல் பிருத்விராஜ்' என சிதம்பரம் அழைக்க, கலாம் சட்டென திரும்பி ''ஆமா.. அது நான் தான் இல்ல, சொல்லுங்க கலோனல் நட்ராஜ்'' என்கிறார் சிதம்பரத்திடம். அணு குண்டு சோதனையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து மறைக்கும் யுத்தி தொடங்கியது இந்த பெயர்கள் மாற்றத்தில் இருந்து தான் . இந்த முழு சோதனையையும் மகா ரகசியமாக வைக்க திட்டமிட்ட கலாம்-சிதம்பரம்- இந்திய அணு ஆயுத பிரிவின் தலைவரான டாக்டர் கே.சந்தானம்- பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அனில் ககோட்கர் டீம் முதலில் தங்களுக்கு புதிய பெயர்களை சூட்டிக் கொண்டனர். அந்த வகையில் பிருத்வி ஏவுகணையின் பெயரை சேர்த்து கலாமுக்கு பிருத்விராஜ் என பெயர் சூட்டினார் சிதம்பரம். பதிலுக்கு சிதம்பரத்துக்கு நட்ராஜ் என பெயரிட்டார் கலாம். அதே போல சந்தானம், 'கலோனல் சீனிவாசன்' ஆனார். ககோட்கருக்கு மட்டும் ஜாலியாக 'மாமாஜி' என பெயர் சூட்டினர். பாலைவனப் பகுதியில் தாங்கள் நடத்தப் போகும் அணு குண்டு சோதனைக்கு 'சக்தி' என பெயர் சூட்டினர். இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது உளவாளிகள் கொண்டும் தொடர்ந்து கண்காணித்து வரும் நாடுகள், தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் நாடுகளுக்கு இந்த 'கலோனல்கள்' போக்ரானில் ஏதோ ராணுவ பயிற்சி நடத்துகிறார்கள் என்று தான் தோன்றியிருக்க வேண்டும். கலாம்-ஆர்.சிதம்பரம்- ககோட்கர்- சந்தானம் ஆகியோர் போக்ரான் பக்கம் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் வெளியானால், சந்தேகப் பொறி கிளம்பிவிடும் என்பதால் தங்கள் ரகசிய திட்டத்தை பெயர் மாற்றத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த டீம். மேலும் இவர்களது உடைகளும் மாறின. ராணுவ கலோனல்களின் உடைகளை அணிந்து தான் அந்தப் பகுதியில் நடமாடினர். ஏப்ரல் 10ம் தேதி தான் இந்த டீமை அழைத்து குண்டைப் போடச் சொன்னார் பிரதமர் வாஜ்பாய். அவர்கள் கோரியது ஒரே மாத அவகாசம் தான். சட்டென களத்தில் குதித்த இவர்கள் 120 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை உருவாக்கினர். ராணுவத்தின் Corps of Engineers பிரிவில் இருந்து 1,000 வீரர்களை தேர்ந்தெடுத்தனர். விஞ்ஞானிகள்- பொறியாளர்கள் என அனைவருக்கும் ராணுவ உடைகள் தான். அடுத்ததாக கலாம் அமெரி்க்க உளவு செயற்கைக் கோள்களின் நடமாட்டத்தை (satellite hours) வைத்து ஒரு 'டைம் டேபிள்' போட்டார். இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை வேலை பார்க்கலாம்.. இந்த நேரத்தில் யாரும் வெளியில் தலை காட்டக் கூடாது.. இந்த நேரத்தில் தான் அணுக் கருவிகள் தாங்கிய ராணுவ வாகனம் புறப்பட வேண்டும்.. இந்த நிமிடத்தில் தான் அது போக்ரானுக்குள் நுழைய வேண்டும்.. அங்கு நடப்பது ராணுவ பயிற்சி மாதிரி தெரிய வேண்டும், இதனால் ஹெவி மெஷின் கன்கள், மார்ட்டர்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை ஒரு பக்கம் வெடித்து புகையை கிளப்பட்டும்.. என பல்வேறு உளவு-ராணுவ யுத்திகளை ஒருங்கிணைத்தார் கலாம். கலாமின் இந்த டைம் டேபிளின்படி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பெரும்பாலும் மிஞ்சியது இரவு நேரம் தான். இதனால் இந்தியாவின் அணு குண்டு சோதனைக்கான பெரும்பாலான பணிகள் இரவில் தான் நடந்தன. கிட்டத்தட்ட ஒரு மாத தூக்கமில்லா இரவுகள்.. மே மாதத்து 107 டிகிரி பாலைவன வெயில், கடும் உழைப்பு.. மே 10ம் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் தந்தார் கலாம், 'நாங்க ரெடி'.. வாஜ்பாயும் நீங்கள் நினைக்கும் எந்த நேரத்திலும் சோதனையை நடத்தலாம் என சுதந்திர தர, மே 11ம் தேதி பிற்பகலில் ஜெய்சால்மீர் பாலைவனத்தின் நிலத்தின் மிக ஆழத்தில் பூமி அடுத்தடுத்து 3 முறை குலுங்கியது. உலகின் பல நாடுகளில் உள்ள சீஸ்மோகிராப் கருவிகள் இந்த சோதனையை உடனடியாக ரெக்கார்ட் செய்ய, உலக நாடுகள் முழுவதும் தெர்மோ நியூக்ளியார் ஷாக்...!. இந்தியா சோதனையிட்டது அணு இணைப்பு (fission) மூலம் வெடிக்கும் 'தெர்மோ-நியூக்ளியார்' பாம். இந்தியா மீது போடப்பட்ட 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சித் தடைகளையும் அந்த குண்டு முழுவதுமாய் சிதறடித்தது. உங்கள் தடைகளால் நாங்கள் முடங்கிப் போய்விடவில்லை என உலகத்திடம் கர்ஜித்தது அந்த குண்டு. அடுத்த 30 நிமிடத்தில் பிரதமர் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.. ''இனி நாமும் அணு ஆயுத நாடு தான், இதை மற்றவர்கள் ஏற்றாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி''. இந்த சோதனை மூலம் இந்தியா 3 முக்கிய தகவல்களை 'அணு' உலகுக்கு சொன்னது. 1. யுரேனியத்திலிருந்து புளுட்டோனியத்தை பிரித்தெடுப்பதில் தன்னிறைவை பெற்று விட்டோம். 2. இனி அணு இணைப்பு மூலமான ஹைட்ஜன் பாமும் எங்களுக்கு சாத்தியம் தான். 3. ஹெவி வாட்டரி்ல் இருந்து டிரிடியத்தை பிரித்தெடுக்கவும் எங்களுக்குத் தெரியும். (அணுக்கள் இணைப்பு மூலமாக செயல்படும் அணு குண்டுகளில் முக்கிய பங்கு வகிப்பது tritium. இது ஒரு isotope.. அதற்குள் ரொம்ப போக வேண்டாம்.. அப்புறம் Element, Mass, Nuclei, Neutron என நாம் 'சண்டை' போட வேண்டி வரும்) இந்த குண்டு, அணு ஆராய்ச்சி குறித்து இந்தியா மீதான பார்வையை மாற்றியது.. தடைகள் போட்டு என்ன சாதித்தோம்.. இந்தத் தடைகளால் என்ன பயன் ஏற்பட்டுவிட்டது? என விவாதத்தி்ல் இறங்கின நாடுகள்.. குறிப்பாக அமெரிக்கா! ஆனால், அந்த விவாதங்களாலும் இந்தியாவுக்கு பலன் கிடைக்கவில்லை. மேலும் தடைகளைத் தான் போட்டார்களே தவிர உருப்படியாய் ஏதும் நடக்கவில்லை. இந் நிலையில் தான் வந்தது செப்டம்பர் 11 தாக்குதல். உலக நாடுகள் குறித்த அமெரிக்காவின் ஒட்டுமொத்த பார்வையையும் மாற்றிய தினம் அது. நம் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என அமெரிக்காவை சிந்திக்க வைத்த தினம். தீவிரவாதம் குறித்த அதன் பார்வை மாறிய தினம். அதுவரையில் தீவிரவாதம் என்றால், தாக்குதல் நடந்த நாட்டில் உள்ள தனது தூதரகம் மூலம் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுவிட்டு அமைதியாகிவிடுவதே அமெரிக்காவின் ஸ்டைல் ஆக இருந்தது. தீவிரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்தியா, அது குறித்து கொடுத்த அபாயக் குரல் அதுவரை அமெரிக்காவின் காதுகளை எட்டியதே இல்லை. இந் நிலையில் நியூயார்க் தாக்குதல், அந் நாட்டின் 'strategic planners'-களை சில குறிப்பிட்ட நாடுகள் பக்கமாய் திருப்பியது. எதிர்கால உலகின் பாதுகாப்பில் முக்கிய இடம் வகிக்கப் போகும் நாடாக, இந்தியாவைப் பார்த்தது அமெரிக்கா. இந்தியாவை நாம் ஏன் இத்தனை காலம் புறக்கணித்தோம் என அமெரிக்காவை வருத்தத்திலும் ஆழ்த்தியது. அடுத்து வந்தது தான் 'சடசட' மாற்றங்கள். இந்தியாவுடன் கூட்டு ராணுவ பயிற்சிகள், இந்திய விமானப் படையுடன் கூட்டு பயிற்சி என நெருங்கி வந்தது அமெரிக்கா. இந்தியாவுக்கு எப்-16 ரக விமானங்களைத் தரவும் முன் வந்தது. இந்திய-அமெரிக்க உறவில் இப்படியோடு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்-அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் டால்போட் ஆகியோர் நடத்திய 'மாராதான்' பேச்சுவார்த்தைகள் தான். இருவரும் மாறி மாறி அமெரிக்கா, இந்தியாவுக்கு பயணித்து பல சுற்றுப் பேச்சு நடத்தினர். இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட சந்தேகங்களை (ஓரளவுக்காவது) போக்கிக் கொண்டதும் அந்த சந்தர்ப்பங்களில் தான். ஜஸ்வந்த் சிங்கை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கே வந்து காலை 'ஜாகிங்' செய்ய கூட்டிச் செல்லும் அளவுக்கு நெருக்கமானார் டால்போட். கிட்டத்தட்ட 9 முறை இருவரும் அதிகாரிகள் மட்டத்திலும் தனியாகவும் பேச்சு நடத்தி பல துறைகளிலும் இரு நாடுகளை பிரித்து 'சுவர்களை' படிப்படியாக இடித்தனர். இதற்கு அதிபர் கிளின்டன்- பிரதமர் வாஜ்பாயின் முழு ஆதரவும் கிடைக்கவே, நிஜமாகவே நல்லுறவு பிறந்தது. அணு சக்தி ஆராய்ச்சியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்ற விஷயத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதும் அப்போது தான். Comprehensive test ban treaty (CTBT)-ல் (இனிமேல் அணு குண்டு சோதனை நடத்துவதில்லை என்ற ஒப்பந்தத்தில்) மட்டும் கையெழுத்து போடு்ங்கள், நாங்களும் உங்களை NPT-ல் (Nuclear Non-Proliferation Treaty- அணு ஆயுத பரவல் தடை சட்டம்) கையெழுத்து போடுமாறு இனியும் நிர்பந்திக்க மாட்டோம் என இறங்கி வந்தது அமெரிக்கா. NPT விஷயத்தில் அமெரிக்காவின் சிந்தனை மாற்றத்தின் மூலம் இந்தியா அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் நிலை மாறியது. ஆனாலும், CTBTயில் கையெழுத்திட முடியாது என இந்தியா மறுத்துவிட்டது. எங்கள் நாடு எப்போதும் அநாவசியமான அணு குண்டு சோதனைகள் நடத்தியதில்லை. எனவே, அதில் கையெழுத்திட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது இந்தியா. அதே போல அணு ஆயுத பரவல் தடை சட்டம் (NPT) இந்தியாவுக்கு பொறுந்தவே பொறுந்தாது. நாங்கள் ஒரு பொறுப்பான தேசம் என்பதை எப்போதும் நிரூபித்து வந்திருக்கிறோம்.. யாருக்கும் எங்கள் தொழில்நுட்பத்தை விற்றதில்லை, எனவே எங்களை அதில் கையெழுத்திடச் சொல்வது சரியல்ல என விளக்கியது இந்தியா. இந்தியாவின் நியாயங்கள் அமெரிக்காவுக்கு புரிய ஆரம்பித்த நிலையில் ஆட்சி மாற்றம். வந்தார் மன்மோகன் சி்ங். அமெரிக்கா-மேலைநாடுகளின் 'மார்க்கெட் எகானமி' மாடல் தான் நம் நாட்டை வறுமையிலிருந்து மீட்க உதவும் என்பதில் தீராத நம்பிக்கை கொண்டவர் சிங். சோசலிஷ-கம்யூனிஸ பொருளாதார கொள்கைகளால் பயனில்லை என்பவர். 1990களில் அவர் ஆரம்பித்த economic restructuring எனப்படும் பொருளாதார சீ்ர்திருத்தங்களின் பலனைத்தான் இந்தியா இப்போது அனுபவித்து வருகிறது (கடந்த 4 மாத 'சோகக் கதையை' மறந்துவிட்டுப் பார்த்தால்). சந்திரசேகர் பிரதமராக இருந்தோது பெட்ரோலியம் (ஆஹா, பெட்ரோலா!!) வாங்க அன்னிய செலாவணி கூட இல்லாமல் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்து அங்கு வங்கியில் அடமானம் வைத்தவர்கள் தான் நாம். ஆனால், இன்று நம்மிடம் 312.5 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்பு. இன்று நாம் பார்க்கும் தகவல் தொடர்பு புரட்சி, தகவல் தொழில்நுட்ப சாதனைகள், தனியார் பங்களிப்புடன் 8 லேன் நெடுஞ்சாலைகள்.. என எல்லாம் சாத்தியமானது இந்த புதிய பொருளாதாரக் கொள்கைகளால் தான். 'ரெட் டேப்' சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து நம்மை 'மீட்டு' (இடதுசாரிகள் 'மாட்டி' விட்டது என்பார்கள்) மார்க்கெட் பொருளாதாரம் பக்கமாய் திருப்பிவிட்டது மன்மோகன் சிங் தான். இதனால் இயல்பாகவே அமெரிக்காவுக்கு சிங் மீது அதீத மரியாதை உண்டு. .... (கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)
Ravivarman
குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்
இ.பு.ஞானப்பிரகாசன்
அருமை!... அருமை! உச்சக்கட்டத் துணிவும், தெளிவும் கொண்ட அரியதொரு படைப்பு! தமிழினப் படுகொலை, குசராத் இனப்படுகொலை ஆகியவற்றில் அப்துல் காலம் அமைதி காத்ததும், கூடங்குளம் அணு உலை, தமிழ் மீனவர் தாக்கப்படுதல் ஆகியவற்றில் தவறான வழிகாட்டுதல்களை அறிவித்ததும் எனக்கும் மிகுந்த சீற்றத்தையும், எந்நாளும் அவர் மீது மாறா வெறுப்பையும் ஏற்படுத்தியவைதாம். "தமிழ் மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுப்பதற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் மீன்பிடிக்க இலங்கை மீனவர்களோடு ஒப்பந்தம் இட்டுக் கொள்ளலாம்" என்று அவர் தவறாக வழிகாட்டியபொழுது அதைக் கண்டித்து எழுதியவன்தான் நான். ஆனால், அவர் இறந்த பின்பு அவரைப் பற்றி விமரிசிப்பது அறமாகுமா என்கிற தயக்கத்தில் நான் அவர் பற்றி எதுவுமே எழுதாமல் விட்டுவிட்டேன். ஆனால், "ஒருவரின் மரணம் என்பது அவரின் அனைத்து தவறுகளையும் மன்னிப்பதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியல்ல" என்கிற உங்கள் வரிகள் எனக்கு நல்ல பாடத்தை ஊட்டியுள்ளன. அதற்காக உளமார்ந்த நன்றி முகிலன் அவர்களே! ஒருவேளை, மேற்படி தயக்கம் இல்லாமல் அப்துல் கலாமை விமரிசித்து நான் எழுதி இருந்தாலும் உங்கள் அளவுக்கு இவ்வளவு தகவல்களோடும் கருத்து நுட்பத்தோடும் கண்டிப்பாக என்னால் எழுதியிருக்க முடியாது. நான் செய்யத் தவறியதைத் தாங்கள் என்னை விடப் பன்மடங்கு சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறீர்கள்! அதற்காக மீண்டும் என் நன்றிகள்! இதை நான் முடிந்த வரை பரப்புவேன்!
paul
Apj sir avargal tamil makkalukaga kural kudupathu irukatum 1st nee nan pondra naam tamil makkal etharkaga kural kuduthargala naam seiyum kutraithai maraipatharkaga matravargalain kutrathai suti katum kutam than naam ipo thu naam makkal pala per ethai patri ellan maranthu kuda poirupargal nd finally mr mugilan ne india dhesathukum tamil makkalukum ethu varai enna seithai intha neyam ilatha katurai ai vitutu natirku samuthayathirkum ethanum sei nd mudhalil ne communists endra poorvaiyil irunthu veli aeru avargalai koccha padutha the ipadiku un nanban tamil makkalin nanban
JEYARAMAN KANAGAMANI NADAR
This website is untrustworthy. This site is publishing the status of me entirely twisted by someone, which are literally other way around of my entries. SHAME TO YOU.
Raghav
அப்டுல் கலாம் அதை செய்யவில்லை, இதை செய்யவில்லை, அதற்கு குரல் கொடுக்கவில்லை, இதற்கு குரல் கொடுக்கவில்லை என்று கூறும் நீங்கள். அவர் என்ன செய்தார் அவர் எதற்கு குரல் கொடுத்தார் என்று எண்ணி பாருங்கள். ஜெய்ஹிந்த்
கார்த்திக்
அவர் நேர்மறை சிந்தனைவாதி...நீங்கள் எதிர் மறை சிந்தனை உடையவர்.
prakash
ஆமா இந்திய அடிவருடி. தமிழ் இன துரோகி . பல லட்சம் தமிழரை கொன்ற சாத்தான் கூப்பிடா நீ ஏன் போர . இவ உண்மையான தமிழனாகவும் இல்லை முஸ்லீமாகவும் இல்லை . மனிதனே இல்லை . போலி

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.