இந்த இணையதளம் இவ்வளவு பெரிய இணையதளமாக மாறும் என்றோ, பத்தாண்டுகள் கடந்து இயங்கும் என்றோ நிச்சயம் 24/07/2005 அன்று காலை கீற்றினை வெளிக்கொணர்ந்தபோது நாங்கள் (நான், பாஸ்கர், எனது தம்பி சுரேஷ்) நினைக்கவில்லை. தினமும் 4 படைப்புகளை வெளியிட்டால் போதும் என்றே நினைத்திருந்தோம். ஆனால், மாற்று அரசியலை, இலக்கியத்தை விரும்பும் செயல்பாட்டாளர்களும், படைப்பாளிகளும் கீற்றினை இன்றைய நிலைக்கு வளர்த்து விட்டீர்கள். கடந்த பத்தாண்டுகளில் கீற்று அடைந்த அத்தனை வளர்ச்சியும், பெயரும் நீங்கள் அதற்கு அளித்த ஆதரவினால் மட்டுமே.

இன்றுடன் பத்தாண்டை நிறைவு செய்து, பதினோராவது ஆண்டில் நுழைகிறது கீற்று. இன்னொரு வகையில் பார்த்தேன் என்றால், இது கீற்றிற்கு மட்டும் பிறந்த நாள் அல்ல… எனக்கும்தான். பிறந்தோம், வாழ்ந்தோம் என்று சென்று கொண்டிருந்த எனது வாழ்க்கைக்கு ஓரளவேனும் அர்த்தம் சேர்ந்தது கீற்று உதயமான பின்புதான். இரமேஷ் மறைந்து, இச்சமூகத்திற்கு ஒரளவேனும் பயன் செய்ய முயலும் கீற்று நந்தனாக நான் பிறப்பெடுத்தது 24/07/2005 அன்றுதான். கீற்றுடன் சேர்ந்துதான் எனது அரசியல் அறிவும், சமூகப் பார்வையும் வளர்ந்தது. எனவே, என் வயதும் பத்துதான். கீற்றின் நிறை, குறைகளை மதிப்பிடுபவர்கள், இதை நடத்துபவன் பத்து வயது சின்னப் பையன் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

ஒரு நாளைக்கு குறைந்தது 4 மணி நேரம், ஆண்டிற்கு 1460 மணி நேரங்கள், பத்தாண்டுகளில் 14600 மணி நேரங்கள் - நாட்களில் குறிப்பிட வேண்டுமெனில், என் வாழ்க்கையின் 608 முழு நாட்களை கீற்று விழுங்கி வளர்ந்திருக்கிறது. சொந்த பந்தங்களுடனும், பால்ய நண்பர்களுடனுமான எனது தொடர்புகளை பல மடங்கு சுருக்கி விட்டது. மேலும், பொருளாதாரத் தேவைக்கு நான் பார்த்துக் கொண்டிருந்த வேலைகளில் சில இலட்சங்கள் ஊதிய உயர்வையும், ஓரிரு பதவி உயர்வுகளையும் காவு வாங்கிக் கொண்டது.

கீற்றின் மூலம் நான் இழந்தது இவற்றை. ஆனால், பெற்றவைகளைக் கணக்கிடும்போது, இழந்தவை சொற்பமே. எந்த ஊர் சென்றாலும், தோழமையுடன் கைகுலுக்குவதற்கு நண்பர்களை அள்ளித் தந்திருக்கிறது. பாஸ்கர், பிரபாகரன்,முத்துக்குட்டி, நரேந்திரன், சண்முகசுந்தரம் என அற்புதமான நண்பர்களை கீற்றுதான் தந்தது. (இதில் பாஸ்கர், எனது தம்பி சுரேஷின் உழைப்பை கீற்றிற்காக நான் சுரண்டியது அதிகம். அப்போது மூவரும் ஒரே வீட்டில் இருந்தோம். திருமணம் ஆகி, பாஸ்கர் தப்பித்தார்; சுரேஷ் வெளிநாட்டு வேலை கிடைத்து தப்பித்தார். இந்த அறுவரும் பொருளாதார ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் இன்றுவரை கீற்றிற்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.)

எனது தொடர்பு வட்டத்தில் இருக்கும் பல தோழர்களை நான் இதுவரை நேரில் சந்தித்ததில்லை. முகமறியா இத்தகைய நட்பையும், இதேபோலான பகையையும் கீற்று தந்திருக்கிறது. வெறும் நாத்திகனாக மட்டும் இருந்தவனுக்கு, பல்வேறு முகாம்களின் சித்தாந்தங்களைப் பரிச்சயப்படுத்தியது. நான் பெற்றிருக்கும் கொஞ்ச நஞ்ச அறிவும் கீற்றின் மூலமே. இவை அனைத்திற்கும் மேலாக, சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் எனக்குக் கிடைத்திருக்கும் மதிப்பான ஓர் இருக்கை. அவரவர்கள் தங்கள் சொத்துக்களை இழந்து, குடும்பத்துடன் செலவழிக்க நேரமின்றி, ஊர் ஊராக அலைந்து, போராடி, சிறைக்குச் சென்று, உடலை வருத்தி, உண்மையாக உழைத்து, ‘மாற்று அரசியல் செயற்பாட்டாளர்’ என்று பெற்ற நற்பெயரை, நோகாமல் நொங்கு தின்று, பெற்றிருக்கிறேன். இவர்களுடன் ஒப்பிடும்போது, இவர்களுக்குச் சமமான ஓர் இருக்கையில் அமர்வதற்கு நான் ஒன்றுமே செய்யவில்லை. அலுவலக வேலையும் பார்த்துக் கொண்டு, அதன் மூலம் நல்ல ஒரு சம்பளத்தையும் பெற்றுக் கொண்டு, காலையிலும், மாலையிலும் ஓய்வான நேரங்களில் வீட்டில் சொகுசாக கணினி முன் உட்கார்ந்து கொண்டு, சில மணி நேரங்களைச் செலவழித்து விட்டு, நானும் ஒரு மாற்று அரசியல் செயற்பாட்டாளனாக மதிக்கப்பட்டுள்ளேன். எவ்வளவு பெரிய திருட்டுத்தனம் இது! இன்னொரு வகையில் பார்த்தேனென்றால், இந்த சொகுசான ‘அரசியல் செயற்பாட்டாளன்’ பெயருக்காகவே கீற்றினை இத்தனை ஆண்டுகள் விடாமல் நடத்தி வந்துள்ளேன் என்றும் சொல்லலாம். எனது உழைப்புக்கும், தகுதிக்கும் மீறிய இடத்தை கீற்று எனக்கு அளித்திருக்கிறது.

கீற்று இந்த பத்தாண்டுகளில் என்னவாக வளர்ந்திருக்கிறது என்று பார்த்தால், அதன் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாகவே உள்ளது. இதையும் எனது தனிப்பட்ட அனுபவ அடிப்படையில் சொல்கிறேனே தவிர, வெளியுலகப் பார்வையிலிருந்து அல்ல… கீற்று தொடங்கப்பட்ட நாளில் அதிலிருந்த கட்டுரைகள் 50 இருக்கலாம். அதற்குத் தெரிந்த படைப்பாளிகள் ஒரு 10 பேர். அதற்கான செலவு ஆண்டுக்கு 2500 ரூபாய். இன்று ஆயிரக்கணக்கான கட்டுரைகள், நூற்றுக்கணக்கான படைப்பாளிகளை தன்னகத்தே கொண்டு, தனது செலவையும் மாதத்திற்கு 5000 ரூபாயாக உயர்த்திக் கொண்டுள்ளது.

மாற்று அரசியல் பத்திரிக்கைகளை படிப்பதற்கான, அத்தகைய அரசியலை விவாதிப்பதற்கான தளமாக கீற்று உள்ளது. புதிதாக எழுத வருபவர்களை வளர்த்தெடுக்கும் இடமாக கீற்று இருந்து வருகிறது. கீற்றில் எழுத ஆரம்பித்து, இன்று குறிப்பிடும்படியான படைப்புகளைத் தந்தவர்கள் எனக் குறைந்தது 100 பேரையாவது சொல்ல முடியும் என்று கருதுகிறேன்.

படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள், பேச்சாளர்கள் பலருக்குத் தகவல்களை அளிக்கும் தளமாக கீற்று இருப்பதை அவர்கள் சொல்லக் கேட்க முடிகிறது. சமூக வலைத்தளங்களில் கீற்று படைப்புகளைக் குறிப்பிட்டு ஆயிரக்கணக்கானோர் விவாதிப்பதைப் பார்க்க முடிகிறது. பல மாணவர்கள் கீற்றில் தகவல்களைத் தேடி, பயன்படுத்துவதை அவர்களுடனான தனிப்பட்ட சந்திப்புகளில் அறிய முடிகிறது.

ஒரு மென்பொருள் வல்லுனராக கீற்றின் physical growth-யைப் பார்க்கும்போது, ஒரு மெல்லிய இறகைப் போல் பறந்து கொண்டிருந்த கீற்று, இன்று தனது வயதுக்கு மீறி, தனது உடலை தானே தூக்கிச் செல்ல முடியாத அளவுக்குப் பருத்துக் காணப்படுகிறது. இந்த உடல் வீக்கமே அதற்கான செலவையும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கீற்றிற்குத் தேவைப்படும் server திறன் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கீற்றின் இந்த வளர்ச்சி அனைத்தும் இதில் தங்களது பத்திரிக்கைகளை, படைப்புகளை வெளியிட்ட அரசியல் செயல்பாட்டாளர்கள் மற்றும் அதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்திய வாசகர்கள் மூலமாகவே சாத்தியப்பட்டிருக்கிறது. நீங்கள் தான் இத்தளத்தினைப் பின்னிருந்து இயக்குகிறீர்கள். இத்தளத்தின் வெற்றி உங்களுடைய வெற்றியே. வெறுமனே இதில் பேர் வாங்கிக் கொண்டிருப்பவன் என்ற வகையில் உங்களிடம் திருப்பிச் செலுத்த முடியாத அளவிற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்பதை இந்தக் கணத்தில் உணர்கிறேன். தொடர்ந்து கீற்றை தொய்வின்றி நடத்துவதன்மூலம் அந்தக் கடனில் கொஞ்சத்தையாவது திருப்பிச் செலுத்த முடியுமா என்று பார்க்கிறேன்.

குடும்பத்துடன் செலவிட வேண்டிய காலை, மாலை நேரங்களில் கீற்றுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதைப் பொறுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தானும் கீற்றில் பங்கெடுத்து, எனது வேலைப்பளுவை சரிபாதியாக பகிர்ந்து கொள்ளும் எனது வாழ்விணையர் ஹேமாவிற்கு, கீற்று பிறந்த நாளில் அன்பாக சில முத்தங்களையும், இதேவிதமான வாழ்க்கைதான் இனியும் தொடரும் என்ற கொடுமையான செய்தியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்! உங்களால்தான் இந்த வெற்றிப் பயணம் சாத்தியமானது!!

- கீற்று நந்தன்

Comments

30 comments

30
செ.கார்கி
தோழர் கீற்று நந்தன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.தங்களுடைய கருத்துக்களை சமூக வெளியில் பகிர்ந்துகொள்ள விரும்பும் பல எழுத்தாளர்களுக்கு நீங்கள் களம் அமைத்துக்கொடுத்து இருக்கின்றீர்கள். உங்களுடைய சமூக பணி எப்போதும் தொடரவேண்டும்
நந்தகுமார்
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்!
ஆ.இளஞ்செழியன்
வாழ்த்துகள்
செ.நடேசன்
’கீற்று’ க்குப் பதினொன்றாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!பத்து ஆண்டுகளில் நீங்கள் சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் உங்கள் பதிவுகளை மிக அழுத்தமாகவே பதித்துள்ளீர்கள். தங்களுக்கும், தங்கள் தொல்லைகளை சகித்துக்கொண்டு, உதவியும் வரும் தங்கள் இணையர்.ஹேமா அவர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!
சுகுமாரன்
11 அகவை காணும் கீற்று இன்னும் பல்லாண்டுகள் தன் பணியை சிறப்பாக செய்திட வாழ்த்துகள்!
Dr.G.Johnson
பதினோராம் ஆண்டை அடைந்துள்ள " கீற்று " இணைய இதழின் சமுதாயப் புரட்சிப் பணி, இலக்கியப் பணிகள் காலந்தோறும் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் ....அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.
Paari Sa Ka
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்!
அ.ஜோசப்
வாழ்த்துக்கள்!
துரை.அனந்தகிரி
நன்றியும், வாழ்த்துக்களும்!
Judeson
வாழ்த்துக்கள்
சந்திர மோகன்
தங்கள்/கீற்றின் பத்தாண்டு பணி சிறப்பானது. மாற்று அரசியலை/ மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பவர்கவளுக்கு நம்பிக்கை ஊட்டுவதும் ஆகும். தங்களுடைய தன்னடக்கம் முகமறியாத /அறிமுகமேயில்லாத தங்கள் மீது மதிப்பை உயர்த்துகிறது.
து.சேகர் அண்ணாத்துரை
வளமான அரசியல் மற்றும் இலக்கிய கட்டுரைகளை வாரி வழங்கும் கொடைத் தளம் தான் "கீற்று" வலைத்தளம்! பதினோறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் "கீற்றுக்கு"எம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
உலகநாதன்
நன்றியும் வாழ்த்துகளும்! என்றென்றும் வளர்க !
பாவலர் கருமலைத்தமிழாழன்
அன்புடன் வணக்கம். உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
வேலிறையன்
அன்பின் தோழருக்கு, வணக்கம்;வாழ்த்துகள்! உறுதி அளித்தபடி கீற்றுக்குத் தொடர்ந்து எழுத முடியாமல் போய்விட்டது. ஊர் திரும்பியதிலிருந்து சில புறநிலை அழுத்தங்கள். அவற்றைக் கடந்து விட்டேன். விரைவில் எழுத்தின் வழியாகக் கீற்றுக்கு என்னால் இயன்ற பங்களிப்பைச் செய்வேன். நன்றி
Ramu Palaniappan
'சொகுசான சமூகப்போராளி' வித்தியாசமான பட்டம். ஆனால் உங்களுக்கு பொருந்தாத பட்டம். வாழ்வாதாரமான ஒரு பிழைப்பை துறந்து சிறை சென்று சமூக மேன்மைக்கு பாடுபடுவது ஒரு வகை என்றால், தற்போதைய மெய் நிகர் உலகு வாழ் இளைஞர்களுக்கு உணர்வூட்டும் பணியை செய்வது மற்றுமொரு வகை. கீற்று அதை செவ்வனே செய்கிறது வாழ்த்துக்கள் தோழர், உங்கள் சேவை தொடரட்டும்....
வெ.வெங்கடாசலம்
வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும் கீற்று. பாராட்டுகள் 11 ஆண்டு சாதனைக்கு. வாழ்த்துகள் நிகழ்த்தப்போகும் சாதனைகளுக்கு. நன்றிகள் என் கவிதைகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டதற்கு.
nizhalvannan
உளமார்ந்த வாழ்த்துக்கள்!
டாக்டர்.ச. சீனிவாசன் ,புது தில்லி
கீற்றின் server திறன் அதிகரிக்க வாழ்த்துக்கள். எனது இரண்டு கட்டுரைகளை வெளியிட்டு உதவியமைக்கு மிக்க நன்றி !
துரை இளமுருகு
கீற்று போல் ஒரு இணையதளம் நாம் எங்கும் கண்டதில்லை. சமூக செய்திகளை மக்கள் பார்வையில் ஆய்வு செய்யும் கீற்று இன்னும் பல ஆண்டுகள் தனது ப்ணியினைத் தொடர வேண்டும். வாழ்த்துகள். துரை இளமுருகு
பழனி ஷஹான்
கீற்றிற்கு எனது வாழ்த்துக்கள்..! ”மாற்று அரசியல் செயற்பாட்டாளர்” என அறைக்குள் அமர்ந்தபடியே பெயர் பெற்றுவிட்டேன் என்கிற அர்தத்தில் ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளார் தோழர் நந்தன். ஆனால் அவரின் இந்த மனக்குறைவு, அவரின் தவறான மனநிலை என்றுதான் நான் குறிப்பிடுவேன். சமகாலத்தில் நடக்கும் அநீதிகளைக் கண்டு கொதிப்படையும் மனநிலை வாய்த்த எவரும் போற்றுதலுக்குரியவர்களே. அதே சமயம், அந்த கொதிப்பலையை மனதிற்குள்ளேயே வைத்து புதைத்துக் கொண்டிருக்காமல், தம்மால் சாத்தியப்படும் அளவிற்கு அதற்கு செயல் வடிவம் அளிப்பவர், வரலாற்றால் போற்றுதலுக்குரியவர்களாக பதிவு செய்யப்படுவர். இங்கு தோழர் நந்தன் வரலாற்றால் போற்றுதலைப் பெற்றிருக்கிறார். தான் எதுவுமே செய்யாமல் பெயர் பெற்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ள அவரேதான், கீற்றிற்காக தன் வாழ்வின் 608 நாட்களை செலவிட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரம் எவ்வளவு செலவழித்திருந்தாலும் ஈட்டி விடலாம். ஆனால் காலத்தை ஈட்ட முடியுமா? சம காலத்தின் பிரச்சனைகளை கண்டும் காணாமல் கடப்பவர்களின் மத்தியில், நம்மால் சாத்தியப்படும் எல்லைவரை நாம் களமாடுவோம் என்கிற எண்ணம் ஒன்றே, விலை மதிப்பற்றது. கீற்று இந்த அளவிற்கு உயரத்தைத் தொட்டிருப்பதற்கு, தோழர் நந்தனின் அர்ப்பணிப்புகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது அவரின் பரந்துபட்ட பார்வை. எந்த ஒரு விவாதத்திற்கும், கருத்திற்கும் இடமளிக்கும் ஒரே தளமாக நானறிந்து கீற்று தளம்தான் இருக்கிறது என்பேன். சிறுபான்மையினரின் பிரச்சனைகளை மதக் கண்ணோட்டோத்தோடு பார்த்து ஒதுக்கும் தளங்களாக பல இணைய தளங்களும், அச்சு ஊடகங்களும் இருக்கின்ற காலத்தில்தான், கீற்று அந்த வரையறைகளை உடைத்து மாறுபட்டு நிற்கிறது. யார் ஒருவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதனை கீற்று தொடர்ச்சியாய் நிரூபித்துக் கொண்டே உள்ளது. சிறுபான்மையினரின் பிரச்சனைகளைப் பற்றி எழுதுபவர்களை, மதக் கண்ணோட்டத்தோடு கீற்று பார்ப்பதில்லை. அந்த பரந்த பார்வைதான், கீற்றில் எழுதுபவர்களில் நானும் ஒருவனாக உருவாக முடிந்தது. எந்தக் கருத்திற்கும், எதிர் விவாதத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் அதன் ஆரோக்கியமான அணுகுமுறைதான், என் கருத்துக்களை உள்ளது உள்ளபடியே முன்வைக்க உதவியது. இது என் போன்ற பலருக்கும் பொருந்தும். இன்னும் வேறு பலவற்றிலும், கீற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இன்று வளர்ச்சி அடைந்து நிற்கின்றது. அதன் வளர்ச்சி இதுபோல் இன்னும் பல மடங்கு வளர வேண்டும். இதற்கு உறுதுணையாக இருக்கும் தோழர் நந்தன் உட்பட, ஏனைய அனைவருக்கும் எனது வீர வாழ்த்துக்கள்..! கீற்றில் எழுதத் துவங்கிய நான், இன்று குறிப்பிடும்படியாக சில அச்சு ஊடகங்களில் எழுதும் எல்லையைத் தொட்டிருக்கிறேன். எழுத்தாளன் என்கிற அடையாளத்தைப் பெற்றிருக்கிறேன். இதன் முகவரி கீற்றிற்கே உரியது. இதுவும் எனக்கு மட்டுமல்ல, என் போன்ற வேறு பலருக்கும் பொருந்தும் என்று நான் எண்ணுகிறேன். தோழமையுடன் பழனி ஷஹான்
புவிமைந்தன்
சமூகத்தில் நிலவி வரும் பல்வேறு கருத்துக்களும் வெளிப்பட கீற்று மிகச் சிறப்பான மேடை அமைத்துத் தந்துள்ளது. அதன் பணி மிகச் சிறப்பானது. மதிப்பிடற்கறியது. கீற்றுக்காக உங்களின் அர்ப்பணிப்பு மெச்சத்தக்கது. உங்கள் பணி தொடர எனது வாழ்த்துகள்!
கிருஷ்.இராமதாஸ், துபாய்
Krish Ramadas வாழ்த்துக்கள். கீற்று ஏன் சிற்றிதழ்களை புறக்கணித்து விட்டது. எங்கே போனாலும் சிற்றிதழ்கள் என்றால் கீற்று என்ற பெயர் அங்குதானாக வருகின்றது. ஆனால் வருடக் கணக்கில் சிற்றிதழ்கள் குறித்த பதிவுகள் இல்லை. மீண்டும் தொடர வேண்டுகின்றேன்.
இரா.சந்தோஷ் குமார்.
மகிழ்ச்சி தோழர். கீற்று வளரும்.. வளரட்டும்.. வளரவேண்டும். இந்த இணையத்தளத்தில் எனது ஒரு படைப்பு வந்தால் எனக்கு மிகப்பெரிய உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.. ஆம் ..அந்த அளவிற்கு மிகச்சிறந்ததாக தேர்வு செய்து படைப்புகளை வெளியிடும் கீற்றில் தொடர்ந்து எழுத விரும்புகிறேன். வாழ்த்துகள், மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
மெய்யன் நடராஜ்
பதினோராம் ஆண்டில் தடம்பதிக்கும் கீற்று பலநூறு காலம் தொடர்ந்து நடைபயில வாழ்த்துகிறேன் வாழ்க வளர்ந்து!
திருப்பூர் குணா
வாழ்த்துகள் தோழர். கீற்று எங்களுக்கும் பெரும்துணையாக உள்ளது. ஆரோக்கியமான அரசியல் விவாதங்களையும், கருத்துகளையும் கொண்டு செல்வதற்கு கீற்று பெரும்துணை. அதற்கு பதிலாக நாங்கள் உங்களுக்கு ஊராரின் வசவுகளைத்தான் திருப்பிக் கொடுக்க முடிந்திருக்கிறது. ஆனாலும் நீங்கள் ரொம்ப நல்லவரு... எவ்வளவு அடிச்சாலும் தாங்குறீங்க....
டேனியல்
எவ்வளவு வேகமாக கடந்துள்ளது காலம். வாழ்த்துக்கள் சார்.
nishi
பின்நவினத்துவம் மறுப்பு பற்றிய கட்டுரைகள் எதாவது உள்ளதா
TAMILNESAN
தோழர் கீற்று நந்தன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.த ங்களுடைய கருத்துக்களை சமூக வெளியில் பகிர்ந்துகொள்ள விரும்பும் பல எழுத்தாளர்களுக்கு நீங்கள் களம் அமைத்துக்கொடுத் து இருக்கின்றீர்கள.உங்களுடைய சமூக பணி எப்போதும் தொடரவேண்டும்
அகரன்
11ம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் கீற்றுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழர் கண்ணோட்டம் போன்ற பல சிற்றிதழ்களுக்கும் , எழுத்தாளர்களுக்கும் ஒரு சம வெளியை தொடர்ந்து உண்டாக்கி வரும் கீற்று, தொடர்ந்து செயல் பட வேண்டும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.