Poor People

முந்தைய பகுதி

ஒன்று


ஆடு மேய்ப்பவனான ராமுலு நாள் முழுவதும்
பாடிக் கொண்டே இருப்பான்
பாட்டில் வேறுபாடில்லை.

இன்று கிருஷ்ணன் பாடலைப் பாடினால்
நாளை சினிமாப் பாடலைப் பாடுவான்.

அவனது ஆத்மா காற்றைப் போல்
சுதந்திரமாகத் திரிந்தது.
மனம், பறவை போல் பாடிக் கொண்டிருந்தது.
அவன் எதுவும் தெரியாத அப்பாவி!
அவனுக்கு வயல் தெரியும்; நதி தெரியும்.

பாடல்தான் அவன் வாழ்க்கை;
வாழ்க்கைதான் பாடல்.
ஓர் அந்தி வேளையில் -
அவன் பாடினான்.
அந்தப் பாடல்
தடை செய்யப்பட்ட செங்கொடிப் பாடல்!
ஆயிரம் விவசாயிகளை
ஆர்ப்பரிக்கச் செய்த ஊர்வல கீதம்!

அதை அவன் அறியான்.
போலீசார் கேட்டனர்.
அவன் கைதியானான்.
வழக்கு மன்றத்தில் அவன் குற்றவாளி என்று
தண்டிக்கப்பட்டான்.
எப்படி?
கடவுளுக்குத் தான் தெரியும்.
அவனுக்குத்தான் எப்படித் தெரியும்?

ஒரு மனிதனை ஒழித்துக் கட்ட சர்க்கார் முடிவு
செய்துவிடும் போது,
சத்தியம், தலை அசைத்து விடுகிறது;
நீதி கண்ணயர்ந்து போகிறது.


இரண்டு

எந்தப் பொருளையும் விவசாயி தனக்கென்று
சொந்தமாக வைத்துக் கொள்ள முடிவதில்லை.

அவனது ஆடு, மாடுகள் எல்லாம் நிலப்பிரபுவின்
தேவையைப் பூர்த்தி செய்யவே
நிர்ப்பந்திக்கப்பட்டன.

ஆணும், பெண்ணும் கூட நிலப்பிரபுவின்
தனிச் சொத்துக்களாகக் கருதப்பட்டனர்.

அவரின் மாளிகை கட்டப்பட்டது
செங்கல்லால் அல்ல.
விவசாயிகளின் உடைப்பட்ட
இதயத் துண்டுகளால்.

எத்தனை ஆயிரம் கன்னிப் பெண்களின் புனிதம்
இந்த நிலப்பிரபுவினால் சூறையாடப் பட்டது!

திருமணமானாலும் முதல் இரவை
நிலப்பிரபுவின் மாளிகையில்தான்
விவசாயப் பெண் கழிக்க வேண்டும்!

தன் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அவமானத்தை
விவசாயி நினைத்துப் பார்த்தான்.
புரட்சிக் குரல் கொடுத்தான்.
குற்றம் சொல்ல முடியுமா?

Communistsபழைய மரத்தடியின் கீழ்,
விவசாயிகள் ஒன்று கூடினர்.
கடுமையாக முடிவெடுத்தனர்.
சாவுமணியின் ஓலத்தை
நிலப்பிரபு கேட்டான்.

கிராமத்தின் வளைந்த முதுகு
நிமிர்ந்து நேராகியது.


மூன்று

பரம்பரை பரம்பரையாக
நிரப்பிரபுவுக்கு உழைத்து வந்தவர்
வேலை நிறுத்தம் செய்தனர்.
தோட்டி, செம்மான், தண்ணீர் சுமப்பவன்,
தையல்காரன், க்ஷவரத் தொழிலாளி
எல்லோரும் இதில் பங்கு கொண்டனர்.

“எங்கள் வியர்வையில் மண் செழித்தது.
எங்கள் உழைப்பில் அவன் கொழுத்தான்.’’
என்றனர் தண்ணீர் சுமப்போர்.
“க்ஷவரம் செய்ய வேண்டுமா?
சரி, ஒரே மொத்தமாக’’ என்றனர்
க்ஷவரம் தொழிலாளிகள்.

“அவனது மனச் சாட்சியைப் போலவே
ஆடைகள் கறைபட்டுக் கிடக்கின்றன.
நாங்கள் துவைத்துச் சுத்தப் படுத்த மாட்டோம்.’’
என்றனர் சலவைத் தொழிலாளிகள்.

கொடிய நாட்கள் மறைகின்றன.
கொடுங்கோலர்கள் ஒருவர் பின்
ஒருவராகச் சாய்கிறார்கள்.

நான்கு

அந்த விதவைத் தாய்க்கு அவன் ஒரே மகன்.
ஒரு பௌர்ணமி இரவில்
அவனுக்குத் திருமணம் நடந்தது.
முதல் இரவில்
அவன் மனைவியிடம் சொன்னான்:
“நீ ஒரு கம்யூனிஸ்டின் மனைவி
என்பதை மறக்காதே.
எதிர்காலத்தில் நமக்கு விலங்குகளே
இல்லாத விதத்தில் நாம் உழைப்போம்.’’

திருமணமாகி ஐந்தாவது நாள் இரவு...
போலீஸ் லாரி அவன் குடிசை முன்
வந்து நின்றது.
துப்பாக்கி முனையில்
கதவு இடித்துத் தள்ளப்பட்டது.

வெறி பிடித்த போலீசார்
கேலியாகச் சிரித்தனர்.

“ஓஹோ..! மணமகன் இளம் மனைவியுடன்
துயில் கொள்கிறாரோ?...’’

இரக்கமற்ற போலீஸ் அதிகாரி கூறினான்.
“புது மனைவி தரும் அந்தரங்க சுகத்தின்
இனிய உறக்கத்தை இப்பொழுது காண்பாய்...’’

துப்பாக்கி புகைந்தது.
அவன் கீழே சாய்ந்தான்.

“இப்பொழுது நீ கம்யூனிஸ்ட் அல்ல. வெறும் பிணம்.’’

போலீசார் பிணத்தை விட்டு விட்டுச் சென்றனர்

அந்த இளம் வீரனுக்கு
ஒவ்வொரு இதயமும் கல்லறையானது.

மரத்தடியில் அவன் புதைக்கப் பட்டான்.
செங்கொடி ஒன்று அங்கே ஊன்றப்பட்டது.
அவன் நினைவைச் சொல்லி அது பறந்தது.
ஆகாயத்தில் ரத்தச் சிவப்பு
முத்திரையாகத் தெரிகிறது.


ஐந்து

கிராமத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது
இளைஞன் குமரையா சொன்னான்:
“இந்த வயல்கள் ஈரமாய் இருப்பது நமது ரத்தத்தால்,
வியர்வையால், ஆனால்...’’
அவன் மேலும் சொன்னான்:
“பசி நம்மை எரிக்கிறது.
நமது வாழ்வில், சவப் பெட்டியின்
ஆணிகளை அறைகிறது.’’

நிலப்பிரபுவுக்கு அவன் கடிதம் எழுதினான்:
“தானியத்தைக் கடனாகத் தாருங்கள்.
அறுவடைக் காலத்தில் திருப்பித் தந்துவிடுகிறோம்.’’

பதில் இல்லை.
பசித் தீ எரித்தது.

கடைசியில்...

‘நிலப் பிரபுவின் களஞ்சியத்திலிருந்து
தானியத்தை எடுப்பது’
என முடிவு செய்தனர்.
அப்படியே செய்யப்பட்டது.

தானியங்கள் சமமாகப் பங்கிடப் பட்டன.
கிராமத்து ஜனங்கள் சொல்லிக் கொண்டனர்.
“இவற்றை விளைவித்தது நாமே.
இருந்தும் இவற்றைக் கடனாகவே
ஏற்றுக் கொள்கிறோம்.’’

நிலப் பிரபுவை மமதை பிடித்து ஆட்டியது
போலீசுக்குத் தகவல் தரப்பட்டது.

இளம் கம்யூனிஸ்ட்டான குமரையா நெளியவில்லை;
துணிவுடன் நின்றான்.
துப்பாக்கிக் குண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக
அவன் நெஞ்சைத் துளைத்தன.
மக்கள் சொல்லிக் கொண்டனர்.

“தெலுங்கானாவின் எல்லாக் கொடிகளும் இன்று
இவனது ரத்தத்தில் நனைத்துக் கொள்கின்றன.’’

கடைசியாகக் குமரையா சொன்ன வார்த்தைகள்;
“தோழர்களே! போராடுங்கள்... மக்களின்
லட்சியத்திற்காகத் தொடர்ந்து வீரத்துடன் போரிடுங்கள்...’’

ஆறு

அவரைத் தேடினர்; கண்டனர்.
இழுத்து வந்தனர்; சுட்டனர்.
அதன்பின் அவர்கள் கத்தினார்கள்;

“`இந்தக் கம்யூனிஸ்ட் தலைவனின் மனைவி எங்கே?
அந்தக் கம்யூனிஸ்ட் வேசி எங்கே?’’

தமது தலைவரின் மனைவியைக் காட்டிக் கொடுக்க
எவரும் விரும்பவில்லை.
பலரைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு
இழுத்துச் சென்று சித்திரவதை செய்தனர்.

ஒருவன் நினைத்துக் கொண்டான்;
“வதையுங்கள்... வதைக்க வதைக்கத்தான்
புரட்சித் தோட்டத்தில்
பழங்கள் மேலும் மேலும்
நன்றாகக் கனிகின்றன; சிவப்பாகின்றன;
நெருப்பாகின்றன.’’

ஏழை முஸ்லீம் குடும்பம் ஒன்று
அவளுக்கு அடைக்கலம் தந்து காப்பாற்றியது.
ஒரு நாள் -
அவர்கள் நடத்திய மனித வேட்டையில்
மூவர் கொல்லப்பட்டனர்.
அவர்களுள் ஒருத்தி...
யாரென்று அவர்களுக்குத் தெரியாது
அவள்...
ஆமாம் ;
அவளேதான்!

இரவு ஊர்ந்து வந்தது.
லக்ஷ்மம்மாவின் குடிசையில்
பழைய காடா விளக்கு
மங்கலாக எரிந்து கொண்டிருந்தது.
அந்த ஆறு பேர்களும்
இப்பொழுது தலைமறைவாகி விட்டார்கள்
குடிசைக் கதவு தட்டப்பட்டது.
போலீசார் வெளியில் நின்றனர்.
“அவர்கள் எங்கே?’’

லக்ஷ்மம்மா கேட்டாள் :
“யார்?’’

“அவர்கள் தான் கிழவியே!
அவர்களை நீ மறைத்து வைத்திருக்கிறாயா?’’

அவள் நிதானமாகச் சொன்னாள்:
“நான் மறைத்து வைத்திருப்பது உங்களையும்,
உங்கள் சர்க்காரையும் பற்றிய வெறுப்பு
ஒன்றைத்தான். வேறு எதையும் இல்லை.’’

மரணக் கிடங்கிற்கு அவள்
இழுத்துச் செல்லப்பட்டாள்.
ஆமாம்; போலீஸ் ஸ்டேஷனுக்கு.

திரும்பத் திரும்ப அவளிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
தொடர்ந்து அவள் மௌனமாகவே இருந்தாள்

கடைசியாக ஒருவன் கேட்டான்:
“அந்தக் கொள்ளைக்காரர்கள் எங்கே?’’

இப்பொழுது அவள் பேசினாள்:
“கொள்ளைக் காரர்கள் அவர்கள் அல்ல.
நீங்கள்தான்!’’ ஆவேச உணர்ச்சி
அவளை ஆட்கொண்டது.

நெஞ்சு புகைந்து குமுறியது :
“சித்திரவதை சதைகளையே
துன்புறுத்தும், உணர்ச்சியை அல்ல!
துப்பாக்கிக் குண்டுகள் உடலையே துளைக்கும்;
ஆத்மாவை அல்ல!
நீங்கள் மனிதர்களையே கொல்ல முடியும்;
இலட்சியங்களை அல்ல.
ஒரு வீரன் நித்திய மானவன்.
மக்கள் நெஞ்சில் காலாகாலங்களுக்கும்
அவன் வாழ்வான்.’’

அவளது இரு தொடைகளும்
கீறிக் கிழிக்கப் பட்டன.
அட்டைகள் அவற்றில் விடப்பட்டன.

அவள் சொன்னாள்:
“இந்த அற்ப ஜீவன்கள்
என் ரத்தத்தை உறிஞ்சட்டும்.
ஈனப் பன்றிகளே! உங்களுக்கு என்
ரத்தத்தைத் தரமாட்டேன்’’

அதிகாரி உறுமினான் :
“அவர்கள் எங்கே? பேசமாட்டாயா?’’

அவள் பேசவில்லை.
நிரந்தரமாகவே பேசமாட்டாள்.
இரு கண்களும் மேலேறின.
உலகின் தூய திரைகள் நகர்ந்து மூடின.
மரியாதைக்குரிய இரகசியங்கள்.
விலை மதிப்பற்ற புதையல்
கடைசி வரையில் காட்டிக் கொடுக்கப்படவே இல்லை.

- தமிழில் என்.ஆர். தாஸன்

Pin It