அரசர்கள் தான் வாழும் நாளுடன் சேர்ந்து புலவர்கள், சான்றோர்கள் நாட்டு மக்களும் வாழவேண்டும் என நினைத்து வாழ்ந்த மன்னர்களின் வாழ்வியல் பதிவுகளை எடுத்துக் கூறும் நூல் புறநானூறு ஆகும். வரலாற்று நிகழ்வுகளைக் கூறும் புறநானூறு வாழ்வியல் விழுமியங்களை எதார்த்தமுடன் பதிவு செய்கின்றதைக் காண முடிகின்றது.

வேடனும் தலைவியின் கொடையும்: வேட்டைக்காகக் காட்டிற்குச் சென்ற கணவன் முள்ளம் பன்றி ஒன்றினைக் கொன்று வீட்டிற்கு வந்து தலைவியிடம் கொடுத்தான். தலைவி அப்பன்றியினை அறுத்து பல கூறுகள் செய்து அதனோடு காட்டுக் கிழங்குகளையும் சேர்த்து தனது சிற்றூரில் வாழும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தாள். இதனை, “ கானவன் செய்த முளவு மான் கொழுங்குறை தேங்கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு காந்தளஞ் சிறுகுடி பகுக்கும்” (நற்றிணை) என்ற நற்றிணைப் பாடல் மூலம் அறியலாம்.

மேலும் “பிணர்ச்சுவல் பன்றி தோல் முலைப்பிணவொடு கணைக்கால் ஒனல் கைம்மிகக் கவர்தலின் கல்லதர் அரும்புழை அல்கி, கானவன் வில்லின் தந்த வெண்கோட்டு ஒற்றைப் புனையிருங் கதுப்பின் மனையோள் கெண்டி குடிமுறை பகுக்கும்” (நற்றிணை) காட்டில் வாழ்ந்த வேட்டுவன் ஒருவன் தன் சிறு குடிசைக்குப் பக்கத்தில் உள்ள நிலத்தினை சமன் செய்து தினையினை விதைத்திருந்தான். நன்கு வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் தினைக்கதிர்களை ஆண்பன்றியும் பெண்பன்றியும் மேய்ந்து கொண்டிருந்தன. அதனைக் கண்ட வேட்டுவன் சினம் கொண்டு ஆண்பன்றியை வில்லால் எறிந்து கொன்றான். அதை எடுத்து வந்து தன் மனைவியிடம் கொடுத்தான். அவள் அதனை அறுத்து சிறுகுடியில் உள்ள அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தாள் என்பதை இப்பாடல் மூலம் அறியலாம். தலைவனின் வறுமையும் கொடைத் தன்மையும்: முல்லை நிலத்துத் தலைவன் தன் நிலத்தில் தினை விதைத்திருந்தான். தினைப்பயிர்கள் முறையாக வளராத நிலையில் அறுவடை செய்து ஏவலர்கள் முலம் காலால் மிதித்து தினையினை உதிர்த்து வைத்திருந்தான்.

தலைவன் தினையினை அறுவடை செய்திருந்ததை அறிந்து முன்னர் தலைவனுக்கு கடனாக கொடுத்திருந்தவர்கள் தாம் கொடுத்த அளவு தினையைத் திரும்ப பெற்றுச் சென்றனர். மீதமிருந்த சிறிதளவு தினையையும் தன்னை நாடி வந்த பாணர்க்குக் கொடுத்து மகிழ்ந்தான். இந்த சூழலில் தலைவன் தனது சுற்றத்தாரைக் காக்கும் பொருட்டு முன்பு தினை கடன் பெற்றவர்களிடமே சென்று மீண்டும் தினையினைப் பெற்று வந்த தனது சுற்றத்தாரைப் பாதுகாத்தான். இதனை, “ எருது காலுறா அதிளைஞர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் பசித்த பாணர் உண்டு கடைதப்பலின் ஒக்கல் ஒற்கஞ் சொலியத் தன்னூர் சிறு புல்லாளர் முகத்தளவை கூறி வரகுக் கடனிறுக்கும் நெடுந்தகை” (-புறம் 327-) என்ற புறநானூற்று வரிகள் மூலம் அறியலாம்;. வேளாண்மையும் விருந்தோம்பலும்: இனக்குழுவாக வாழ்ந்த மக்கள் வேளாண்மையையும் வேட்டையாடுதலையும் தொழிலாக மேற்கொண்டனர். இந்த சூழலில் நிலமும்,ஆநிரைகளும் சமூகம் முழுவதிற்கும் பொதுவாய் இருந்தன பகுத்துண்ணும் வாழ்க்கை இவர்களது பண்பாடாகவே இருந்தது. இதன் காரணமாகவே கானவர் வேட்டையாடிவந்த முள்ளம் பன்றியையும் காட்டுக் கிழங்குகளையும் தலைவியர் ஊரார் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

நிலங்களை செப்பணிட்டு வேளாண்மையை மேற்கொண்டான்.வரகு,தினை முதலிய வற்றைப் பயிரிட்டான். இத்தினைகளை விலங்குகளும்,பறவைகளும் அழித்து விடாமல் பாதுகாத்தான்.பாதுகாப்பதில் ஆண்களும்,பெண்களும் இணைந்து செயல்பட்டனர். பகலில் பறவைகள் அழித்துவிடாமல் பெண்களும்,இரவில் பரண்கள் அமைத்து கொடிய காட்டு விலங்குகளிடமிருந்து தினைகளை ஆண்களும் பாதுகாத்தனர்.

விருந்தோம்பலின் பொருட்டு தன்னிடம் இல்லாத சூழலில் பிறரிடமிருந்து தினையும், வரகும் கடனாகப் பெறப்பட்டது.விருந்தோம்பல் என்பது சங்ககால மக்களின் உயர்ந்த பண்பாடாக இருந்தது.இதற்கு சங்க இலக்கியப் பாடல்கள் சான்றாக அமைகின்றன.

பாணரை உபசரித்து உணவளிக்க வேண்டிய கடமை இருப்பதால் தலைவன் தன்னுடைய ‘வாளினைப்’ பணயமாக வைத்துத் தினையைக் கடனாகப் பெற்றுச் சென்று உணவளித்துப் பசிப்போக்கிப் பாணரை உபசரித்தான். தலைவனது இந்த செயலினை,

“நெருநை வந்தவிருந்திற்கு மற்றுத்தன் இரும்புடைப் பழவாள் வைத்தான்” (-புறம் 316-) என்ற வென்ணாகனாரின் புறனானூற்றுப் பாடல் வழி அறியலாம். தலைவியின் விருந்தோம்பல்: முல்லை நிலத்தில் வாழும் தலைவி விருந்தோம்பலில் சிறந்து விளங்கினாள். தன்னை நாடி வந்த பாணர்,கூத்தர் என அனைவருக்கும் மனம் நோகாமல் வரவேற்று உபசரித்து உணவளித்துப் போற்றினாள். 

தான் விளைவித்திருந்த தினையையும்,வரகினையும் அனைவருக்கும் வழங்கினாள் அதனால் “வரகும் தினையும் உள்ளவையெல்லாம் இரவல் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன” என்று புலவர்கள் வருந்திப் பாடும் நிலை ஏற்பட்டது. இதனால் தினையும் வரகும் தீர்ந்தன.

இந்த நிலையில் தலைவியை காண்பதற்கு பாணர் கூட்டம் வந்தது. அவர்களை வரவேற்று உபசரிப்பது தனது கடமை என்பதை உணர்ந்த தலைவி தன்னிடம் தினையும் வரகும் இல்லாத சூழலில் வருந்தாமல் இல்லத்தில் விதைக்காக வைத்திருந்த தினைக்கதிர்களை எடுத்து காலால் மிதித்து தினையினைப் பிரித்து உரலில் இட்டு சமைத்து பசிபோக உணவளித்துப் பாணர்களை உபசரித்து மகிழ்ந்தாள் தலைவி என்பதை,

“ தங்கினிர் சென்மோ புலவீர்நன்றும் சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி வரகும் தினையும் உள்ளவை எல்லாம் குறித்து மாறெதிர்ப்பைப் பெறாது மையிற் குரலுணங்கு விதைத் தினை உரல் வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன் நோவிலள்” (புறம் 333-7-13)  என்ற புறநானூற்றுப் பாடல் முலம் தலைவி விருந்தோம்பல் பண்பில் உயர்ந்து நிற்பதை உணரலாம்.

“வித்தட்டு உண்டல் விரகின்மையாம்” என்பதனை தலைவி நன்கு அறிவாள். ஆயினும் “விருந்தோம்பல் ஒம்பா மடைமையினும் வித்திட்டு அவர்களை உணபித்தல் குற்ற மன்று” என்பதையும் நன்கு அறிந்தவள் எனவேதான் விதைத்தினையைக் குற்றிச் சமைத்துப் பாணரை உபசரித்து மகிழ்ந்தாள்.

வேட்டையாடியும் நிரை மேய்த்தும் பொதுவுடைமைச் சமுதாயமாக வாழ்ந்த காலகட்டத்தில் மனிதன் தனக்குக் கிடைத்தது எதுவாக இருந்தாலும் அதனை அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தான். கொடுத்ததைத் திரும்பக் கேட்கவில்லை. அனைவருக்கும் பொது என்ற கொள்கையில் மன்னன் மட்டுமல்ல சாதாரண போர் வீரனும் விருந்தும், கொடையும் கொடுத்து மகிழ்ந்தவர்கள் சங்ககால இனக்குழு மக்கள் என்பதை புறநானூற்றுப் பாடல் வழி அறியலாம்.

- ப.மணிகண்டன், உதவிப் பேராசிரியர், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோவை-28

Pin It