வரலாறு, பண்பாடு போன்றவை பற்றியெல்லாம் நாட்டில் யார்தான் பேசுவது என வர வர வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. அதுவும் தமிழர்களுடையவை என வந்துவிட்டால் யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம். காரணம், போயும் போயும் தமிழர்கள்தானே! என்ன செய்துவிட முடியும்? அட, ஒன்றரை லட்சம் பேர் கண்ணெதிரே கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று குவிக்கப்பட்டபொழுதே ஒன்றும் கிழிக்க முடியாதவர்கள்தானே?

jallaikattuஅந்த வகையில், தமிழர் பண்பாட்டு அடையாளம் ஒன்றைப் பற்றி அண்மையில் திருவாய் மலர்ந்திருப்பவர், தமிழினத்தை ஒழிப்பதற்காகவே கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் குடும்பத்தைச் சேர்ந்தவரான மேனகா காந்தி அவர்கள்!

“ஜல்லிக்கட்டு என்பது மேற்கத்திய பண்பாடு. அதில் மாடுகள் மட்டுமல்லாமல் மனிதர்களும் கொல்லப்படுகிறார்கள். பா.ஜ.க ஒருபோதும் இதை ஏற்றுக் கொள்ளாது” என்று இவர் பேசியிருப்பது தங்கள் பாரம்பரிய விளையாட்டைத் தடை செய்துவிட்டார்களே என ஏற்கெனவே வெந்து போயிருக்கும் தமிழ் நெஞ்சங்களில் வேண்டுமென்றே வேல் பாய்ச்சும் வேலை!

நேற்று வரை விலங்கு நல ஆர்வலராக மட்டுமே அறியப்பட்ட மேனகா காந்தி எப்பொழுது முதல் வரலாற்று ஆசிரியரானார்? இவர் கூறுவது எந்த அளவுக்கு உண்மை? இதோ, சில வரிகளில்...

“பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகத்திலும் 'ஏறு தழுவல்' நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து கி.மு 2000 ஆண்டு அளவிலேயே 'ஏறு தழுவல்' வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.”

- இஃது ‘ஏறுதழுவல்’ எனும் தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையின் பகுதி. மேற்கண்ட கருத்துக்கான சான்றுகளும் அந்தக் கட்டுரையின் அடியில் காட்டப்பட்டுள்ளன.

இதே கட்டுரையில் அடுத்து, சங்க காலத்திலேயே ‘ஏறு தழுவல்’ இருந்திருக்கிறது என்பதற்கான சான்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்”

எனும் அந்த வரியின் பொருள், “கொல்ல வரும் காளையின் கொம்புக்கு அஞ்சுபவனைத் தமிழ்ப் பெண் மறுபிறப்பில் கூட மணக்க விரும்ப மாட்டாள்” என்பது. சிந்துவெளி நாகரிகம் மட்டுமில்லை, சங்க காலம் என்பதும் கிறித்து பிறப்பதற்கு முன்புதான் என்பது இங்கு நாம் உணர வேண்டியது. (சான்று: Tamil classical period - சங்க காலம் பற்றிய ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரை).

இவை இரண்டு மட்டுமல்ல, ‘ஏறு தழுவல்’ தமிழர் பண்பாடுதான் என்பதற்கு இன்னும் இன்னும் ஏராளமான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஆக, கிறித்து பிறப்பதற்கு முன்பே - இன்னும் சொல்லப் போனால், மேலை நாடுகளில் நாகரிகம் வளர்வதற்கு முன்பே – இங்கு தமிழர்களால் ஆடப்பட்டு வந்த ஒரு விளையாட்டு எப்படி மேற்கத்திய பண்பாடு ஆகும்? ஊடகங்கள் தன் முன்னால் ஒலிவாங்கியை (mic) நீட்டிக் காத்திருக்கும் மட்டத்தில் இருக்கிறோம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவதா?

ஏறு தழுவல் பற்றி மட்டுமில்லை, சங்க காலம் பற்றியும், தமிழர்களின் இன்ன பிற விழுமியங்கள் பற்றியும் யார் வேண்டுமானாலும் பார்க்கக்கூடிய வகையில் விக்கிப்பீடியாவில் ஆங்கிலத்திலேயே நிறையக் கட்டுரைகள் உள்ளன. இவற்றையெல்லாம் மேனகா காந்தி பார்த்தது கூடக் கிடையாதா?...

பல ஆண்டுகளாகத் தான் வாழ்ந்து வருகிற பகுதியில் (புது தில்லி) உள்ள வரலாற்று அருங்காட்சியகத்தில் இருக்கும் வரலாற்றுச் சின்னத்தைக் கூட மேனகா காந்தி பார்த்ததில்லையா?...

ஆம் எனில், அப்படி மேலெழுந்தவாரியாகக் கூட அறியாமல் (அல்லது அறிந்தே), ஓர் இனத்தின் பழம்பெரும் அடையாளம் ஒன்றினைப் பற்றித் தவறுதலாக, சிறுமைப்படுத்தும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர் – அதுவும் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசலாமா? அதிலும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிற கட்சியின் நிலைப்பாடே அதுதான் எனச் சொல்லலாமா?

“சரி, ஏதோ தெரியாமல் பேசிவிட்டார். அவர் என்ன தமிழரா? அல்லது, தமிழ்நாட்டு மக்களுடனோ தமிழ்நாட்டு அரசியல் புள்ளிகளுடனோ நெருக்கமான தொடர்பில் உள்ளவரா, இவை தெரிந்திருக்க? விடுங்களேன்” எனப் பலரும் நினைக்கலாம். ஆனால், அது தவறு!

விலங்கு நலப் போராளியாகப் பல ஆண்டுகளாகக் களத்திலிருப்பவர் மேனகா காந்தி. அப்படிப்பட்டவருக்கு, விலங்குகளுக்கு ஊறு விளைவிக்கும் விளையாட்டு எனப் பல ஆண்டுகளாகத் தவறாகப் பேசப்பட்டு வரும் இந்த விவகாரத்தில் தமிழர்கள் தரப்பில் எடுத்து வைக்கப்பட்டு வரும் இந்த முதன்மையான கருத்துப் பற்றி – அதாவது, இது தங்கள் பல்லாண்டு காலப் பாரம்பரிய விளையாட்டு என்பதால் தடை செய்யக்கூடாது என வலியுறுத்தப்படுவது பற்றித் தெரியாதா?

ஒவ்வொரு முறை இப்படித் தடை போடப்படும்பொழுதும் தமிழ்நாட்டு அரசு தம் அறிக்கைகளிலும் நடுவணரசுக்கான கடிதங்களிலும் தமிழர் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று என இதைக் குறிப்பிட்டுத் தடை விலக்குக் கோருவது இத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருப்பவருக்குத் தெரியாது என்றால் அது நம்பக்கூடியதா?

ஆக, வட இந்தியப் பண்பாடுதான் இந்தியப் பண்பாடு, வட இந்திய வரலாறுதான் இந்திய வரலாறு, உணவு, உடை, நாகரிகம், பழக்க வழக்கங்கள் என எல்லா வகைகளிலும் வட இந்தியர்களுடைவைதான் ஒட்டுமொத்த இந்தியாவின் அடையாளங்கள் என மீண்டும் மீண்டும் நிறுவி வரும் இந்திய அரசியலாளர்களுடைய போக்கின் ஒரு நீட்சியாகத்தானே இது தென்படுகிறது? அத்தகைய மனப்பான்மையிலிருந்து எழும் சொற்களாகத்தானே இந்தக் கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது?

ஒருவேளை, மேனகா காந்தி அறியாமல், தெரியாமல் இப்படிப் பேசியதாகவே இருந்தாலும், அப்படியும் நமக்கு இது தொடர்பாக வேறு சில கேள்விகள் எழுகின்றன தவிர்க்க முடியாமல்.

இதே போல, இந்தியாவின் வேறு எந்தப் பண்பாட்டைப் பற்றியாவது இப்படி ஒரு தெரியாத்தனமான கருத்தை, வாய்க்கு வந்தபடி அவரால் உதிர்க்க முடியுமா?

ஏறு தழுவலால் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவதாக இவர் கூறுவதை உண்மை என்பதாகவே வைத்துக் கொண்டாலும், இந்த ஒரு விளையாட்டில் மட்டும்தான் இது நடக்கிறதா? இஃது ஒன்றைத் தவிர, இந்தியாவின் மற்ற பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்துமே யாருக்கும் எதற்கும் தீங்கு நேராத வகையில்தான் நடத்தப்படுகின்றனவா?

அப்படி இல்லை எனில், அவற்றையெல்லாம் விட்டுவிட்டுத் தமிழர் பாரம்பரிய விளையாட்டைத் தடை செய்ய மட்டும் இவ்வளவு ஆர்வம் எதற்காக? தமிழ் மக்கள் மீது அந்த அளவுக்கா அக்கறை பொங்கி வழிகிறது உங்களுக்கு?

இதே போல, ஏறு தழுவல் மேலைநாட்டுப் பண்பாடு என்ற இவருடைய வரலாற்றுச் சிறப்பு மிக்க கூற்றையும் ஒரு பேச்சுக்காக உண்மை எனவே ஒப்புக் கொண்டாலும், இந்திய விளையாட்டுக்களிலேயே இஃது ஒன்றுதான் மேலைநாட்டுப் பாரம்பரியமா? குதிரைப் பந்தயம், மகிழுந்துப் (car) பந்தயம், ஈருருளிப் (bike) பந்தயம் முதலியவையெல்லாம் என்ன, பகவத் கீதையில் பரிந்துரைக்கப்பட்ட பாரம்பரிய விளையாட்டுக்களா?

இப்படியெல்லாம் சிந்திக்கப் போனால், நமக்குக் கடைசியில், ‘சின்ன கவுண்டர்’ படத்தில் கவுண்டமணி அவர்கள் சொல்லும் ஒரு துணுக்குதான் நினைவுக்கு வருகிறது. இதோ, நையாண்டிப் படமாக (meme) அஃது உங்கள் பார்வைக்கு!

menaka gandhi- இ.பு.ஞானப்பிரகாசன்

Pin It