தொடர் வண்டித் துறையின் 2014 - 15 வரவு செலவுத் திட்டத்தில் மைய அரசு ஏறுமுகக் கட்டணத் திட்டம் (dynamic pricing policy) என்றொரு திட்டத்தை அறிமுகப் படுத்தி உள்ளது. இத்திட்டத்தின்படி அவசரப் பிரயாணத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் பாதியை ஏறுமுகக் கட்டணத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப் பட்டு உள்ளது. இத்திட்டத்தின் படி பயணக் கட்டணம் மூன்று முதல் நான்கு மடங்கு வரை, கூட்ட நெரிசலைப் பொறுத்து ஏற்றப்படும்.
இவ்வறிவிப்பு வந்த பின் பொது மக்களும், தொழிற் சங்கங்களும் இதைக் கடுமையாக எதிர்த்து உள்ளனர். தீபாவளிக்குப் பிரயாணம் செய்யப் பயணச் சீட்டை முன் பதிவு செய்ய முயன்ற மக்களில் பலர் பயணக் கட்டணம் மூன்று மடங்கில் இருந்து முதல் நான்கு மடங்கு வரை உயர்ந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 3.10.2014 அன்று இதைப் பற்றிக் கருத்து கூறிய சிலர் "போருந்தில் பயணம் செய்வதில் சிரமம் உள்ளது என்பதால் தான் தொடர் வண்டியில் பயணம் செய்வதாகவும், ஆனால் இந்தப் புதிய கட்டணத்தைக் கண்டால், சிரமத்தைப் பொறுத்துப் கொண்டு, பேருந்துலேயே பயணம் செய்ய முடிவு செய்து விட்டதாகவும் கூறினர். ஆனால் ஒரு முதலாளித்துவவாதி, ஒரு பொருள் அல்லது சேவையின் விலை உயர்வதை எப்போதும் குறை கூறிக் கொண்டு இருக்கக் கூடாது என்றும், குறைந்த விலையிலேயே அனைத்தும் கிடைக்க வேண்டும் எனும் மனப்பான்மை முதலில் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். இத்திட்டத்தைப் பற்றி தொழிற் சங்கத்தினர் கருத்து கூறுகையில் தொடர் வண்டித் துறை அரசுத் துறை என்றும், இது தனியார் துறையைப் போல் மக்களைக் கசக்கிப் பிழிய முயல்வது பெரும் தவறாகும் என்றும் கூறி உள்ளனர்.
ஆனால் பொது மக்களின், தொழிற் சங்கங்களின் கருத்தை எல்லாம் புறக்கணித்து விட்டு, ஏறுமுகக் கட்டணத் திட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று மைய அரசு 15.10.2014 அன்று தெரிவித்து உள்ளது. தொடர் வண்டிப் பாதையையும் தொடர் வண்டிகளின் எண்ணிக்கையையும் ஒப்பிடும் பொழுது பயணிகளின் எண்ணிக்கை மிக மிக அதிகமாக உள்ளதாகவும், அனைவருக்கும் இடம் அளிக்க முடியாத நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த ஏறுமுகக் கட்டணத் திட்டத்தை அறிமுகப் படுத்தி உள்ளதாகவும் அரசு கூறி உள்ளது. வரத்து (supply) கிராக்கி (demand) விலை (price) பற்றிய எளிமையான பொருளாதார அடிப்படை விதிகளைப் புரிந்து கொண்டாலே, அரசின் நடவடிக்கையில் எந்த விதத் தவறும் இல்லை என்று எளிதாகப் புரியும் என்றும் அரசு கூறி உள்ளது.
வரத்து (supply) கிராக்கியை (demand) விடக் குறைவாக இருக்கும் போது விலை (price) அதிகரிக்கும் என்பது எளிமையான பொருளாதார விதி என்பது சரி தான். ஆனால் கிராக்கி (demand) அதிகமாகும் பொழுது, வரத்தை (supply) அதிகப் படுத்தலாம் என்று அரசுக்கு ஏன் தோன்றவில்லை?
"வளர்ச்சி" "வளர்ச்சி" என்று கூறிக் கொண்டு இருக்கிறார்களே! விரைவுத் தொடர் வண்டிகள் (express trains) இரு திசைகளிலும் போய் வருவதற்கு என இரண்டு இருப்புப் பாதைகளும், சாதாரணப் பயணிகள் வண்டிகள் (passenger trains) மற்றும் சரக்கு வண்டிகள் (goods train) இரு திசைகளிலும் போய் வருவதற்கு என இரண்டு இருப்புப் பாதைகளும் நாடு முழுமைக்கும் அமைத்து விட்டால் கிராக்கியை (demand) விட அதிகமான தொடர் வண்டிகளை விட முடியுமே? கூட்ட நெரிசலைப் பொறுத்து, போதுமான தொடர் வண்டிகளை விட்டால், முன் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாமலேயே மக்கள் அனைவரும் தங்கள் பயணங்களை மேற்கொள்ள முடியுமே? இதனால் மக்கள் பயணம் செய்வதற்காக, இப்பொழுது தேவை இல்லாமல் மேற்கொள்ள வேண்டி இருக்கும் மன உளைச்சலில் இருந்து விடுபட்டு வேறு ஆக்க பூர்வமான வேலைகளில் மனதைச் செலுத்தி நாட்டு முன்னேற்றத்திற்கு உதவ முடியுமே?
மக்களுக்கும் நாட்டிற்கும் இவ்வளவு நன்மைகளைப் பயக்கும்படி நடந்து கொள்ள அரசு ஏன் மறுத்து வருகிறது?
ஏனெனில் இது மக்கள் நல அரசு அல்ல; இது முதலாளிகளின் அரசு. முதலாளிகளின் மூலதனத்திற்கு அதிக இலாபம் கிடைக்கிறதா என்று பார்ப்பதை விட வேறு எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாத அரசு.
போதிய எண்ணிக்கையில் தொடர் வண்டிகளை விட்டால் மக்கள் மன உளைச்சல் இல்லாமல் பயணம் செய்யலாம். அதனால் பேருந்துகளின் தேவை குறைந்து, சுற்றுச் சூழல் மாசு படுவதும் குறையலாம். ஆனால் பேருந்து தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு உள்ள முதலாளிகளின் கதி என்னவாகும்? பொருளாதார நெருக்கடி நெருக்கிக் கொண்டு இருக்கும் பொழுது மூலதனத்தை வேறு தொழில்களில் அதிக இலாபம் கிடைக்கும் படி ஈடுபடுத்தவும் வழி கிடைக்காதே? முதலாளிகளுக்கு இப்படி ஒரு சிரமம் வரலாமா? மக்களின் நலம் முக்கியமா? முதலாளிகளின் நலம் முக்கியமா? அரசுக்கு முதலாளிகளின் நலம் தான் முக்கியம்.
சுற்றுச் சூழல் தூய்மை முக்கியமா? முதலாளிகளின் நலம் முக்கியமா? அரசுக்கு முதலாளிகளின் நலம் தான் முக்கியம். ஆகவே மக்கள் எக்கேடு கெட்டும் போகட்டும்; சுற்றுச் சூழல் எக்கேடு கெட்டும் போகட்டும். முதலாளிகளின் நலன்கள் தான் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாய் இருக்கிறது.
சரி! அரசு அப்படி இருக்கட்டும். மக்கள் இது போன்ற அரசு தொடர்வதை அனுமதிக்க வேண்டுமா? இதை எதிர்த்து உழைக்கும் மக்களின் நலன்களை மட்டும் முன்னெடுக்கும் சோஷலிச அரசை அமைப்பதற்குத் தங்களை அணியமாக்கிக் கொள்ள வேண்டாமா?
இராமியா
(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.11.2014 இதழில் வெளி வந்துள்ளது).
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
மோடி அரசு - முதலாளிகளின் அரசு
- விவரங்கள்
- இராமியா
- பிரிவு: கட்டுரைகள்