மதிப்பிற்குரிய போராட்டக்குழுவிற்கு வணக்கம். மீண்டும் பொதுத்தளத்தின் வாயிலாகத்தான் உங்களிடம் உரையாட முயல்கிறேன்.

                இடிந்தகரை போராட்டக்குழு செய்ய வேண்டியது என்ன? என்ற கட்டுரையின் மூலம் இதற்கு முன்பும் உங்களிடம் பேச முயன்றேன். இப்படி பொதுத்தளத்தில் போராட்டக்குழுவோடு விவாதிக்க வேண்டாமெனத் தோழர். பொன். சந்திரன் (கோவை) கூறினார். நான் நேரடி வாய்ப்பை ஏற்படுத்தி தரும்படி கோரினேன்.

                வாய்ப்பில்லாத நிலையில் மீண்டும் பொதுத்தளத்தின் மூலம் பேசுவதை போராட்டக்குழுவினரும், தோழர். பொன். சந்திரனும் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

                போராட்டக்குழு, இடிந்தகரையை விட்டு வெளியேறி கைதாவதா? ஆம் ஆத்மி கட்சியில் இணைவதா? போராட்டக்குழுவே வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலில் போட்டியிடுவதா? என மூன்று முக்கிய கேள்விகளுக்கு வரும் 26 (சன)- ஆம் தேதி முடிவை அறிவிக்க இருப்பதாக செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளது. மிக முக்கியமான இச்சிக்கல்களில் முடிவெடுப்பதற்கு எங்களது கருத்துகளும் துணையாக இருக்கும். தயவு செய்து பரிசீலியுங்கள்.

1. போராட்டக்குழு வெளியேறி கைதாவது தொடர்பாக :

                தயவுசெய்து வெளியேறுவதாகவோ, கைதாவதாகவோ முடிவெடுத்து விடாதீர்கள்.

                இன்றைய நிலையில் தற்போதைய போராட்டக்குழுவை தவிர வேறொரு தலைமை உருவாகி விடவில்லையென நம்புகிறோம். உங்களது தனித்தன்மையின் காரணமாகவும், மீனவ மக்களின் தனித்தன்மையை உள்வாங்கிக் கொள்ளாததன் காரணமாகவும் மாற்று இயக்கங்களும் அங்கு செல்வாக்குப் பெறாமல் உள்ளதெனவும் நம்புகிறோம்.

                இவ்வேளையில் போராட்டக்குழு வெளியேறினால் அரசுதான் அங்கு செல்வாக்கு செலுத்தும். தன்னார்வக்குழுக்கள் மிக தாராளமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறச் சூழலில் இது எளிதாக நடக்கும்.

                அரசின் கைக்கூலிகள் இப்போதே அங்கு சதிச்செயல்களில் ஈடுபட்டு சீர்குலைவுகளை நிகழ்த்தி வருவதை தனியாக விளக்க வேண்டியதில்லை.

                ஆகவே, தற்போதைய போராட்டக்குழு வெளியேறவோ அல்லது வெளியேறி கைதாகவோ கூடுமானல் அரசின் கைக்கூலி தலைமைகள் என எண்ணற்ற நபர்கள் முளைப்பர். குழுக்களும், அணிகளும் பெருகும். மக்கள் ஒற்றுமை சீர்குலைக்கப்படும். மக்கள் இழப்புகளையும், இறப்புகளையும் சந்திப்பர்.

                எனவே, தயவு செய்து போராட்டக்குழு வெளியேறுவதாகவோ அல்லது வெளியேறி கைதாவதாகவோ முடிவெடுக்க வேண்டாமென மீண்டும், மீண்டும் கோருகிறோம்.

2. ஆம் ஆத்மி கட்சியில் இணைவது தொடர்பாக :

                ஆம் ஆத்மி கட்சி தவிர்க்க முடியாததாக இன்று வரலாற்றில் எழுந்து நிற்கிறது.

                ஏகாதிபத்தியங்களுக்கிடையிலும், முதலாளிகளுக்கிடையிலும் நடைபெறுகிற போட்டிகளானது சமூகத்தில் அனைத்து சீரழிவுகளையும் வளர்த்துக் கொண்டிருக்கிறது. கொள்ளையடிப்பதில் இவர்களுக்கிடையிலான வெறிப் பிடித்த போட்டியில் லஞ்சம், பாலியல் வக்கிரம், போதை, கொலை, ஆக்கிரமிப்பு, அபகரிப்பு என அனைத்து மனித விரோத நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. அரசின் அனைத்துப் பிரிவுகளிலும், தனியார் துறைகளிலும் இப்போக்குகள் தலைவிரித்தாடுகின்றன.

                இதனால் சமூகத்தின் மிக உயர்குலத்தவர் தவிர ஏனைய அனைவரும் நேரடியாக பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதில் நடுத்தர வர்க்கம் கடுமையாக நிலைகுலைந்து கிடக்கிறது.

                ஆளும்வர்க்கத்தின் சேவைப் பிரிவினராகிய நடுத்தரவர்க்கம். தன்னை எப்போதும் ஆளும்வர்க்கத்தின் அங்கமாகவே கருதிக் கொள்கிறது. ஆனால் ஆளும்வர்க்கம் நடுத்தரவர்க்கத்தை மிக கேவலமாகப் பயன்படுத்தி தூக்கியெறிகிறது.

                ஆளும்வர்க்கத்துக்கு சேவை செய்வதன் மூலம் நல்ல ஊதியத்தைப் பெறுகிற நடுத்தரவர்க்கம் இயல்பாகவே நுகர்வு வெறிக்கு தள்ளப்படுகிறது. கடன் வாழ்க்கை முறை இதன் தவிர்க்க முடியாத தலைவிதியாகிறது. கூடவே வேலை பறிப்புக்கும், கூடுதல் நேர உழைப்புக்கும் உள்ளாக்கப்பட்டு அமைதியற்ற வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறது. இதனால் உத்தரவாதமில்லாத வாழ்க்கைமுறைக்கு உள்ளாகும் நடுத்தரவர்க்கம் குடும்ப நெருக்கடி, சமூக நெருக்கடி என துன்பங்களை அனுபவிக்கிறது. தீவிரமான மனச்சோர்வு, விரக்தி ஆகியவைகளுக்கு ஆளாகிற இவ்வர்க்கமே எளிதில் போதை மற்றும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிறது.

                அன்றாடம் மானம், மரியாதை இழந்து கொடுமைப்படுகிற இவ்வர்க்கம் அதற்கான அரசியல் தீர்வுகளைத் தேடி அமைப்பாவது சரிதான். அப்படித்தான் ஆம் ஆத்மி கட்சியும் உருவாகியுள்ளது. ஆனால் இத்தனை கொடுமைகளுக்கும் காரணமான ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கான தேவையை உணராத வரைக்கும் இவர்களால் எதையும் செய்ய முடியாது. அதே நேரத்தில் இவர்களின் கட்சிகள் ஆளும் வர்க்கத்துக்கே பயன்படும்.

                ஏற்கனவே ஆம் ஆத்மியின் முதாதையர்களான அன்னா ஹசாரேக்களும், பாபா ராம்தேவ்களும் ஆளும்வர்க்கத்துக்கே பயன்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்போது ஆம் ஆத்மியினரும் பயன்படத் தொடங்கி விட்டனர். ஆம் ஆத்மியை காங்கிரசு பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

                இந்தியாவின் சுரண்டல் வரலாற்றில் காங்கிரசும், அதன் முதலாளிகளும் தேர்ந்த அனுபவமிக்கவர்கள். அந்த திறமையில்தான் இன்றுவரை அதிகாரத்தில் நீடிக்கிறார்கள். அவர்களுக்கு பா.ஜ.க ஒரு சவாலாக மாறிக் கொண்டிருந்தது. ஆம் ஆத்மியின் மூதாதையர்களான அன்னாஹசாரே, பாபாராம்தேவ் போன்றவர்களைப் பயன்படுத்தி பா.ஜ.க வளர நினைத்தது. ஊழல் எதிர்ப்பையும், நிர்வாக சீர்குலைவையும் கையிலெடுத்து பா.ஜ.க. முற்போக்கு வேடமணிந்து மோடியை ஒரு மாற்றாக முன் நிறுத்தியது.

                மோடி வெறும் பா.ஜ.க-வால் மட்டும் முன்னிறுத்தப்படவில்லை. காங்கிரசு அல்லாத கார்ப்பரேட் முதலாளிகளாலும், அமெரிக்கா உள்ளிட்ட சில அந்நிய நாடுகளாலும் முன்னிருத்தப்படுகிறார். இந்தியத் துணைக்கண்டத்தில் தற்போது நீடிக்கும் மொழிவழி தேசிய (பிராந்திய) கட்சிகளின் ஆட்சியானது கார்ப்பரேட்டுகளது கொள்ளைக்கு தடையாக உள்ளது. ஆளாளுக்கு பேரம், மாநில வாரியான நடைமுறை வேறுபாடுகள் எல்லாம் கார்ப்ரேட்டுகளின் ஒருங்கிணைந்த கொள்ளைக்கு தடையாக உள்ளது. ஆகவே இந்தியா முழுவதுமுள்ள வளங்களை கொள்ளையடிப்பதற்கு ஒரு கட்சி அதிகாரம், அதுவும் இரும்பு கரங்களின் அதிகாரம் வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் மோடியை முன்னிறுத்தினர்.

                இதில் காங்கிரசு கொஞ்சம் திண்டாடித்தான் போனது. வேறு வழியே இல்லை. தனது பலமான எதிரியை வீழ்த்த பலவீனமான எதிரியைப் பயன்படுத்துவதென தீர்மானித்தது. ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்து விட்டது. கெஜ்ரிவால் முதலமைச்சராக ஆக்கப்பட்டார். கெஜ்ரிவால் இந்தியா எங்கும் பேசும் பொருளாக்கப்பட்டார். இப்போது மோடி அலை வடிந்து காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.          பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்-ம் நிலை குலைந்து ஆலோசனைகள் மேல் ஆலோசனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

                இதனால் ஆம் ஆத்மிக்கு எந்த லாபமும் இல்லை. கார்ப்பரேட் முதலாளிகளின் பொருளாதாரக் கொள்கையை அசைக்க முடியாத, கார்ப்பரேட்டுகளின் அரசு இயந்திரத்தை மாற்ற முடியாத ஆம் ஆத்மியால் பெரிதாக சாதிப்பதற்கு ஒன்றுமே இல்லை. ஆதலால் ஆம் ஆத்மி எளிதில் பரபரப்பு அடங்கிய சராசரியாக மாறிவிடும். ஆனால் காங்கிரசு தவிர்க்க முடியாததாக ஆளும்வர்க்கத்தின் பெரும்பான்மை பலத்தோடு மீண்டும் எழும். எனவே ஆம் ஆத்மி கட்சியில் நீங்கள் இணைவதை பரிசீலியுங்கள். அதே நேரத்தில் இந்த நேரம் வரை சீரழிந்து விடாத ஆம் ஆத்மி கட்சியோடு ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க கடும் முயற்சியை மேற்கொள்ளுங்கள்.        

3. போராட்டக்குழுவே வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலில் போட்டியிடுவது குறித்து :

                ஆம் ஆத்மி கட்சி இல்லையென்றால் நீங்கள் தனித்து இயங்குவது தவிர வேறு வழியில்லை என்ற தமிழ்நாட்டு அரசியல் நிலைமை வருத்தத்துக்குரியதுதான். அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஆம் ஆத்மி எதுவும் பெரிதாக செய்து விடவில்லை. ஆனால் தமிழ்நாட்டின் புரட்சிகர இயக்கங்களின் பங்கு மிகப் பெரியது. அதிலும் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்கிற இயக்கங்கள் சில உண்டு. அவை எதுவும் உங்கள் கவனத்தை கவர முடியாமல் போனது வியப்புக்குரியது.

                தேர்தலைப் பயன்படுத்துவது என்ற கொள்கையின் படி தமிழ்நாட்டுச் சூழலை சரியாக கையாண்டு ஈழ விடுதலைக்காக காங்கிரசு எதிர்ப்பியக்கம் கண்டு அதில் வெற்றியும் பெற்ற எங்களைப் போன்ற இயக்கங்கள் கூட உங்களை ஈர்க்காமல் போய்விட்டோம். உங்களை அணுகுவதில் ஆம் ஆத்மிக்கு இருந்த துணிச்சல் எங்களுக்கு இல்லாமல் போனதென்பது வெட்கக்கேடானதுதான். போகட்டும்.

                நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் பயன்படுத்தத் துணிந்தது சரியானதே. இடிந்தகரை போராட்டக்குழு செய்ய வேண்டியது என்ன? என்ற கட்டுரையில் நான் இதை வலியுறுத்தியிருந்தேன்.

                இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடுவதானால் அது மீனவர் சமுதாயத்தின் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலேயாகும். ஆனால் நமது தொகுதிகள் எதுவும் மீனவர் மக்களை மட்டுமே கொண்டதில்லை. ஆதலால் வெற்றியைத் தீர்மானிப்பதில் மீனவரல்லாதோர் பெரும் பங்கு வகிப்பர். இந்நிலையில் நமது வெற்றி உத்தரவாதமானல்ல.

                அப்படியானால் இத்தேர்தலில் பங்கு பெறுவதன் மூலம் நாம் சாதிக்க கூடியது ஒன்றே ஒன்றுதான். அது மத்திய - மாநில அரசுகளுக்கு நமது மீனவர் சமுதாயத்தின் முழு எதிர்ப்பையும் வெளிப்படுத்துவதேயாகும்.

                இந்த எதிர்ப்பை நாம் ஓட்டு வாங்கி வெளிப்படுத்தப் போகிறோமோ? அல்லது யாருக்கும் ஓட்டு இல்லை என்ற 49-ஓ- க்கு வாக்களித்து வெளிப்படுத்தப் போகிறோமா? என நன்றாக விவாதித்து முடிவெடுக்கலாம். என்னவாக இருந்தாலும் வேட்பாளர்களை நிறுத்தியே ஆக வேண்டும். அதுதான் சட்டப்பூர்வமான அனைத்து பரப்புரை வழிகளுக்கும் உதவியாக இருக்கும். எனவே தேர்தலில் பங்கு பெறுவதென்பதை உறுதி செய்யுங்கள்.          

மீனவர் தொகுதி - மீனவர் சமுதாயத்துக்கு அரசியல் பிரதிநிதித்துவம் என சாத்தியமானதை சாதிப்பதற்கு இத்தேர்தல் பயன்படும்.

                இன்றைய நிலையில் நாம் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றியடைவோம் என்ற எண்ணம் வேண்டாம். ஏனென்றால் நாம் மீனவர் சமுதாயத்தின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ளோம். ஆனால் தற்போதைய நிலையில் மீனவர்கள் மட்டுமே வெற்றி - தோல்வியை தீர்மானிக்கிற வகையில் தொகுதிகள் இல்லை.

                ஒரு வேளை வெற்றிப் பெற்றால் கூட அதன் மூலம் மீனவர் வாழ்வுரிமைகளை - குறிப்பாக அணு உலை ஒழிப்பை - சாதிக்க முடியுமா? என்பது சந்தேகமே. காரணம், ஆளும்வர்க்கம் நமது தொகுதியிலுள்ள மீனவரல்லாத மக்களையும், அவர்களிடம் செயல்படும் கைக்கூலி பிரதிநிதிகளையும் கொண்டு நமக்கு எதிரானப் போராட்டங்களில் ஈடுபடும். ஏதோ ஒரு வகையில் நம்மை செயல்பட விடாமல் முடக்கி செல்லாக் காசாக்கும்.

                ஆதலால் இந்த பிற்போக்கு அதிகாரத்தில் நாம் பேரளவுக்காவது சாதிக்க வேண்டுமென்றால் அதற்கு நமக்கான தனிப்பிரதிநிதித்துவம் வேண்டும்.

மீனவர் சமுதாயத்துக்கான தனித் தொகுதிகளின் தேவை

                ஒட்டு மொத்த சமூகத்தில் பல்வேறுப் பிரிவினரை வகைப்படுத்துவதும், அவர்களுக்கான தொகுதிகளை - அரசியல் பிரதிநிதிகளை உருவாக்குவதும் புரட்சிகர கண்டுபிடிப்பல்ல. அது முதலாளித்துவம் வழங்கியதுதான். பல்வேறு மக்கள் பிரிவினரின் பிரதிநிதித்துவத்தையும் கொண்டது என்ற வகையில்தான் முதலாளித்துவம் தனது ஆட்சிமுறையை மக்களாட்சி என பிரகடனப்படுத்துகிறது. ஆனால் எல்லாப் பிரதிநிதிகளையும் தம் கைக்கூலிகளாக வைத்துக் கொள்வதன் மூலம் முதலாளித்துவம் தனது சர்வாதிகாரத்துக்கானதாக ஆக்கி கொள்கிறது.

                ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் பிரதிநிதித்துவம் என்பது அந்தந்த நாட்டின் வளர்ச்சி நிலையோடு வகைப்படுத்தப்படுகிறது. அய்ரோப்பா மாதிரியான வளர்ந்த நாடுகளில் தொழிலாளர், விவசாயி, பெண்கள், கலைஞர்கள் என மேற்கொள்ளப்படுகிறது. இப்பிரிவினரின் நலனுக்கான தனித்தனி கட்சிகள் கூட உண்டு.

                இந்தியா - தமிழ்நாட்டில் இது சாதி, மதம், இனம், பாலினம், பழங்குடி என்ற வகையிலே உள்ளது. தமிழ்நாட்டில் கூட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது பிரதிநிதித்துவத்தை குறைந்த காலம் பெற்றிருந்தனர். இவர்கள் தங்களின் பிரதிநிதிகளை தாங்களே தேர்ந்தெடுத்தனர். இவ்வாறான சிறப்பு பிரதிநிதிகளை கொண்ட மேல்சபை என்கிற முறை இருந்தது.

                ஆக வேலை மற்றும் சமூகத்தன்மையின் தேவையில் இருந்து மக்கள் பிரிவினர் வகைப்படுத்தப்படுவதும், அவர்கள் அரசியல் அதிகாரத்தில் தங்களின் பிரதிநிதித்துவத்தை அடைவதுமே மக்களாட்சி முறையாகும்.

                மீனவர் சமுதாயத்தின் சமூகத்தன்மை என்பது அவர்களுக்கேயான அரசியல் ஞாயங்களைக் கொண்டிருக்கிறது. கடல் மற்றும் இயற்கை சார்ந்த அவர்களது வாழ்க்கைமுறையானது அதற்கான ஒழுங்கமைவை கோருகிறது. அவர்களது வாழ்வில் எந்த ஒரு தலையீடும் அவர்களின் ஒப்புதலோடுதான் நடக்க வேண்டும். ஏனெனில் அந்த தலையீட்டினால் ஏற்படும் சாதக, பாதகங்களை அவர்களைத் தவிர பிறரால் உணர முடியாது.

                ஒரு ஒருங்கிணைந்தப் பொருளாதார வாழ்வில் மீனவர்களோடு மற்றவர்களும், மற்றவர்களோடு  மீனவர்களும் ஈடுபடும் போது இத்தகைய தலையீடுகள் ஏற்படவேச் செய்யும். ஆனால் அது சரியா? தவறா? என கலந்தாலோசிப்பதற்கு அரசில் மீனவர் பிரதிநிதிகள் வேண்டும்.

                இதை இதுவரை அரசும் உணரவில்லை. மீனவர் சமுதாயமும் உணரவில்லை. அணு உலை ஆபத்துதான் மீனவ மக்களுக்கு இதை உணர்த்தியிருக்கிறது. கூடவே தாதுமணல் கொள்ளை, சேது சமுத்திரதிட்டம், பெரும் மீன்பிடிக் கப்பல்கள், பெருந்தொழில் சுற்றுலா மையங்கள், இறால் பண்ணைகள், கடற்கரைப் பண்ணை விடுதிகள், கடற்கரை மேலாண்மைச் சட்டங்கள், கடற்கரை வளர்ச்சித் திட்டங்கங்கள், சிங்கள கடற்படையின் தொடர் தாக்குல் ஆகியவையும் சேர்ந்து மீனவர் வாழ்வுக்கான அதிகாரத்தை கோரத் தொடங்கியுள்ளன. எனவே நாம் அரசியல் அதிகாரத்தில் மீனவர் பிரதிநிதித்துவம், அதற்கான தனித்தொகுதிகள் என்பதை முன்வைக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் இருக்கிறோம்.

                மக்களாட்சி என்பது உண்மையிலேயே மக்களின் கைகளில் இருந்தால் அது மக்களின் உரிமைகளை நிலைநாட்டும். மாறாக முதலாளிகளின் கைகளில் இருந்தால் மக்கள் சலுகைகள், சீர்த்திருத்தம் பெறவும், உரிமைகளுக்காக பேரம் பேசவும் மட்டுமே உதவும்.

                உண்மையான மக்களாட்சி வருவதற்கு முயற்சிப்போம். ஆனால் அதனை அடைவதற்கும், அற்காகப் போராடுவதற்கும் மீனவர் சமுதாயம் அழியாமல் இருக்க வேண்டும். ஆகவே இடைக்காலத் தீர்வாக பேரம் பேசுவதற்கான அரசியல் உரிமை - அதற்கான மீனவர் பிரதிநிதித்துவம் - அற்கான மீனவர் தனித்தொகுதிகள் எனப் போராடுவோம். அதனை தேர்தல் களத்தில் வலுவாக பரப்புரை செய்வோம். மத்திய - மாநில அரசுகளை கலங்கடிப்போம்.

- திருப்பூர் குணா (gunarpf@gmail.com)

Pin It