தோழர் க.அருணபாரதி அவர்களுக்கு, உங்களைப் போலவே நானும், தோழர். பெ. மணியரசன் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நமது மரியாதைக்குரியவர்கள் தவறிழைக்கும் போதுதான் அதை மறுக்க வேண்டியிருக்கிறது.
உய்குர், திபெத், செசன்யா, ஜார்ஜியா ஆகிய தேசங்கள் குறித்து நீங்கள் எடுத்து வைக்கும் வாத முறையானது அடிப்படையிலேயே தவறானதாகும். மேற்கூறிய தேசங்கள் ஏற்கனவே வர்க்க வேறுபாடற்ற சோசலிச கட்டுமானத்தின் கீழ் இருந்து வந்தது போலவும், அங்கு வர்க்க ஒடுக்குமுறைகள் எதுவும் இல்லாதது போலவும், அங்கெல்லாம் ஆண்டைகள் மற்றும் முதலாளித்துவ கொடுமைகள் இல்லாதது போலவும், மக்கள் யாரும் எவ்வித கொடுமைகளுக்கு எதிராகவும் போராட வேண்டிய தேவைகள் இல்லாதது போலவும், ஒட்டு மொத்த தேசமும் ஒரே குரலில் பேசியதைப் போலவும் காட்டுகிறீர்கள். எவ்வித வேறுபாடுகளும், மோதல்களும் இல்லாமல் இருந்த தேசங்களை கம்யூனிஸ்டுகள் ஆக்கிரமித்து சீரழித்தார்கள் என்கிற முதலாளித்துவ அவதூறுகளையே நீங்களும் பரப்புகிறீர்கள்.
ஆனால் உண்மை உங்களுக்கு எதிரானது. உய்குரும், திபெத்தும், செசன்யாவும், ஜார்ஜியாவும் கம்யூனிச ஒருங்கிணைப்பின் கீழ் வருகிற வரையிலும் அவை சோசலிச கட்டுமானங்களாக இருக்கவில்லை. மாறாக கடுமையான நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ கொடுமைகளின் கீழ் நசுக்கப்பட்டு கிடந்தன. இத்தேசங்களிலுள்ள மக்கள் தத்தமது சொந்த தேசங்களின் ஆளும் வர்க்கமான ஆண்டைகள் மற்றும் செல்வந்தர்களுக்கு எதிராகப் போராடியதோடு, ஆளும் வர்க்கங்களுக்குப் பின்னணியில் இருந்து நசுக்கிய ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருந்தனர். அது ஒரு வகையில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த காலகட்டமாகும்.
இந்த உள்நாட்டுப் போரானது இரண்டு வகை தீர்வுகளுக்கு இடையேயான மோதலாகும். ஒன்று உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி சித்திரவதை செய்து, அவர்களின் வாழ்வாதாரங்களை சுரண்டி ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்து கொழுத்து திரிவதற்கான பிற்போக்கு தேசிய அதிகாரத்தை நிறுவ வேண்டுமென்ற முதலாளித்துவ தேசியவாத தீர்வு. மற்றொன்று, பிற்போக்கு நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ கொடுமைகளுக்கும், அவர்களது எசமானர்களான ஏகாதிபத்தியங்களுக்கும் முடிவு கட்டி சோசலிசத்தை நோக்கிய தேசிய தன்னுரிமைக்கான தீர்வு.
உய்குரிலும், திபெத்திலும், ஜார்ஜியாவிலும் பிற்போக்கு சக்திகளான ஆளும் வர்க்கங்கள் தங்களது முதலாளித்துவ தேசிய கோரிக்கைக்காக அத்தேசங்களுக்குள் ஏகாதிபத்தியங்களை, பாசிச சக்திகளை, மக்கள் விரோதிகளை வரவழைத்தார்கள். அதே நேரத்தில் உழைக்கும் மக்கள் தங்களது சோசலிசத்தை நோக்கிய தன்னுரிமைக்கான தேசம் அமைக்க ஆதரவாக சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தோடு இணைந்து போராடினார்கள். .
இதை மறுத்து, தேசிய கோரிக்கைக்கு எதிராக வர்க்கப் போராட்டம் இருப்பது போல் காட்டும் உங்களது வாதமானது கம்யூனிச எதிர்ப்புக்கு துணைப் போவதேயாகும்.
கம்யூனிச எதிர்ப்பாளர்கள் ஏன் தோழர்.ஸ்டாலினை குறி வைத்து தாக்கினார்கள் தெரியுமா? பின்தங்கிய நாடுகள் அனைத்தின் வளர்ச்சிப் போக்கும் நிலவுடைமையை அழித்து நவீன தேசங்களாக அமைகின்ற நிகழ்ச்சிப் போக்கைக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு நவீன தேசங்களாக அமையவிருக்கின்ற ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் சொந்த அரசை அமைத்துக் கொள்வதற்கான சுயநிர்ணயக் கோட்பாடும், அதை வளர்த்தெடுத்த தோழர். ஸ்டாலினுமே அசைக்க முடியாத ஆயுதங்களாகும்.
இது அடிப்படையிலேயே ஏகாதிபத்தியங்களின் நவீன காலனியாக்கத்துக்கு எதிரானதாகும். ஆகவே தேசிய இனங்களின் சுயநிர்ணயக் கோட்பாடும், தோழர் ஸ்டாலினும் ஒழிக்கப்பட வேண்டிய அம்சங்களாக ஏகாதிபத்தியங்களுக்கு இருந்தன. ஆகவேதான் தோழர். ஸ்டாலின் குறி வைத்து தாக்கப்பட்டார். தோழர்கள் - ஸ்டாலின், மாவோ ஆகியோரைப் பழித்துரைப்பதற்கு, கம்யூனிசத்தை எதிர்க்கின்ற அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவப் பயங்கரவாதிகள் இட்டுகட்டிப் பரப்பியுள்ள பொய்யான தரவுகள் உங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன். இவைகளை தோழர்கள் - ஸ்டாலின், மாவோ காலத்து கட்சி மற்றும் அரசுகளின் ஆவணக் குறிப்புகள் வெளி வந்து முறியடித்துக் கொண்டிருக்கின்றன.
கம்யூனிசத் துரோகி குருசேவ் அதிகாரத்துக்கு வந்ததும் முதலாளித்துவப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தோழர். ஸ்டாலின் மீது 1956 பிப்ரவரி 5ஆம் தேதி நடந்த சோவியத் பொதுவுடமைக் கட்சியின் 20வது மாநாட்டில் சுமார் 61 குற்றச்சாட்டுகளைச் சுமத்தினான். நீங்கள் சுமத்துகிற குற்றச்சாட்டுகளும் இன்னும் பலவும் இங்கிருந்து கிளம்பியவைதான். ஏற்கனவே உலகம் முழுவதுமிருந்த ஏகாதிபத்தியவாதிகள் பரப்பிவந்த பொய்களோடு சோவியத் யூனியனிலிருந்தே வந்த இந்தக் குற்றச்சாட்டுகள் உலகம் முழுவதுமிருந்த கம்யூனிஸ்டுகளுக்கு பேரிடியாக இருந்தன. ஒருவிதத்தில் உலகின் வரலாற்றை மாற்றியது இந்தப் பேச்சு. ஏராளமான பொதுவுடமைக் கட்சிகளைத் திருத்தல்வாதத்தில் முழ்கடிக்க அச்சாரம் போட்டது இந்த உரை.
இப்போது இந்த உரையை அணுவணுவாக பத்தாண்டுகாலம் ஆய்வு செய்த குரோவர் பர் என்ற அமெரிக்கர் குருசேவ் லைய்டு அதாவது குருசேவ் பொய் சொன்னார் என்று ஒரு நூல் எழுதியுள்ளார். அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது இது. ஸ்டாலினுக்கு எதிராகச் சொல்லப்பட்ட ஒவ்வொரு பொய்யையும் ஆதாரங்களுடன் அம்மபலப்படுத்தியுள்ளார் குரோவர் பர்.
செம்படையில் இருந்த 3 லட்சம் அதிகாரிகளை தோழர். ஸ்டாலின் படுகொலை செய்ததாகவும்; 36,898 அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ததாகவும் குருசேவ் அபாண்டமாக பொய் சொன்னான். அதனால் இரண்டாம் உலகப்போரில் இரசியா அளவற்ற இன்னலுக்கும், இழப்புகளுக்கும் ஆளானது என்று நீலிக்கண்ணீர் வடித்தான். ஆனால் அக்கால கட்டத்தில் செம்படையில் இருந்த மொத்த அதிகாரிகளின் எண்ணிக்கையே 1,40,000 பேர்தான் என்பதையும், தோழர். ஸ்டாலின் யாரையும் டிஸ்மிஸ் செய்யவில்லை; வயோதிகம் காரணமாகவும், சொந்த விருப்பத்தின் பேரிலும் ஓய்வு பெற்றதைத்தான் குருசேவ் தவறாகக் காட்டுவதாகவும் உண்மையான ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன. அதே போல் ஓய்வு பெற்றவர்களில் 75% பேர் இரண்டாம் உலகப்போரில் தாமாக முன்வந்து மீண்டும் செம்படையில் பணியாற்றியதை போதிய ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.
இவ்வகையில் தோழர்.ஸ்டாலின் மீது இலட்சக்கணக்காணவர்களைக் கொன்றதாகவும், நாடு கடத்தியதாகவும் உள்ள கட்டுக்கதைகள் ஏராளம். முதலாளித்துவப் பயங்கரவாதிகள் புனைந்த அப்பட்டியலின் கூட்டுத் தொகையைப் பார்த்தால் அன்றைய இரசியாவின் மக்கள் தொகையை அவைத் தாண்டி விடும்.
தோழர்களே, ஜார்ஜியாவுக்குள் இரண்டு வர்க்கப்பிரிவினர், இரண்டு வகை தேசங்கள் அமைக்கப் போராடிக் கொண்டிருந்ததை குறித்த வர்க்க கண்ணோட்டமில்லாமல் எழுதுகிறீர்கள். "ஜார்ஜியாவில் பிறந்த ஜார்ஜிய இனத்தவரான ஸ்டாலின் இரசியாவைப் பெருந்தேசிய இனக் குடியரசாக கட்டமைக்க வேண்டுமென நினைத்தார்." என எழுதுகிறீர்கள். இதைவிட அப்பட்டமானப் பொய் வேறு ஏதாவது இருக்க முடியுமா?
ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் சொந்த தேசிய அரசுகளை அமைத்து அவைகளின் கூட்டரசைக் கொண்டதுதான் சோவியத் ஒன்றியம் என்கிற அடிப்படையான விபரம் உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு தேசிய அரசும் தம் தேசிய உரிமைகளை வளர்த்தெடுத்தது என்று உங்களுக்குத் தெரியுமா?
அவ்வாறான தேசிய உரிமைகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு தேசிய - பழங்குடி இனங்களின் மொழி, கலை, இலக்கியம், கல்வி, வேலை வாய்ப்பு, சமூக வளர்ச்சி எனத் திட்டமிட்டு சோவியத் செயல்பட்டது என நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இவை எல்லாவற்றிலும் தோழர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி வந்ததை நீங்கள் படித்துண்டா?
"... ஆனால், ஜார்ஜியாவில் ஜார்ஜிய தேசியவாதம் குறித்து 'தேசிய சோசலிஸ்டுகள்' என்பவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். 1922 பிப்ரவரியில் ஜார்ஜியாவில் சோவியத் ஆட்சி நிலைநிறுத்தப்பட்ட பின்னர், 'தேசிய சோசலிஸ்டுகள்' மீது அப்பொழுது கட்சியின் பொதுச்செயலராக இருந்த தோழர். ஸ்டாலின் மற்றும் செம்படைத் தளபதியான ஓர்ஜினிகீட்சே ஆகியோர் தலைமையிலான செம்படையினர் கடுமையான தாக்குதலை ஏவி அவர்களை ஒடுக்கினர்." என்று பட்டியலிடுகிறீர்கள்.
நல்லது. ஜார்ஜியாவில் ஜார்ஜிய தேசியவாதம் குறித்து 'தேசிய சோசலிஸ்டுகள்' பேசிக் கொண்டிருந்தனர் என்பதை எழுதுகிறீர்கள். கூடவே ஜார்ஜியாவில் போல்சுவிக் கட்சி என்று ஒன்று இருந்ததையும், அது சோசலிச தேசத்துக்காகப் போராடிக் கொண்டிருந்ததையும் சொல்ல வேண்டாமா? தேசிய சோஷலிஸ்டுகள் யார் என்பதையும் சொல்ல வேண்டாமா? ஜார்ஜிய இனத்தவரான ஸ்டாலின், ஓர்ஜினிகீட்சே என எழுதும் போது இவர்கள் ஜார்ஜிய போல்சுவிக் கட்சியை கட்டி வளர்த்தவர்கள் என்றும், இவர்களால் வளர்க்கப்பட்ட பலமான போல்சுவிக் கட்சி ஜார்ஜியாவில் இருந்ததையும் சொல்ல வேண்டாமா? தேசிய சோஷலிஸ்டுகள் என்பவர்கள் போல்ஷிவிக்குகள் போலவே ருஷ்ய சாம்ராஜ்ஜியம் முழுவதிலுமிருந்த மென்ஷிவிக்குகள் என்பது எப்படி உங்களுக்குத் தெரியாமல் போனது? ஜார்ஜிய போல்சுவிக்குகளுக்கும், முதலாளித்துவ தேசியவாதிகளுக்கும் தேசிய சோஷலிஸ்டுகளுக்கும் நோக்கத்தில் வேறுபாடு இருந்ததை சொல்ல வேண்டாமா? இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகள் என்பது எதிரெதிர் நலமுடைய இருவேறு வர்க்கங்களின் நலனை அடிப்படையாகக் கொண்டது என்றும், இவ்விரு வர்க்க நலன்களில் எது சரியானது என்றும் வாய்த்திறக்க மாட்டீர்களோ?
தோழர். ஸ்டாலினைப் போலவே தோழர். ஓர்ஜினிகீட்சேவும் ஜார்ஜியர்தான். தோழர். ஓர்ஜினிகீட்சே 1886 அக்டோபரில் பிறந்தார். 1903-ல் அதாவது தனது 17வது வயதில் கட்சியின் உறுப்பினரானார். தன்னலமற்ற புரட்சிகரப் பணியால் இவர் பலமுறை நாடு கடத்தப்பட்டார்.
தோழர்கள் ஸ்டாலின், ஓர்ஜினிகீட்சே போன்ற பல தலைவர்களின் அளவற்ற தியாகத்தால் ஜார்ஜியாவில் பாட்டாளி வர்க்கம் போல்சுவிக் கட்சியை உருவாக்கி வளர்த்தெடுத்திருந்தது. அதன் கீழ் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இதனால்தான் இரண்டாம் உலகப்போரில் 7 லட்சம் ஜார்ஜியர்கள் சோவியத் படையில் இணைந்து சோவியத் இரசியாவின் பல பகுதிகளுக்கும் சென்று போரிட்டு தியாகங்கள் செய்தார்கள். மனித குலத்தை பாசிச ஜெர்மன் மற்றும் முதலாளித்துவப் பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாத்தார்கள். இவர்கள் யாரும் ஜார்ஜியாவை இரசியப் பெருந்தேசியத்தில் கரைத்துவிட ஒரு போதும் நினைத்ததில்லை.
ஜார்ஜியாவின் விவகாரம் வெறும் போல்சுவிக்களைக் கொண்டது மட்டுமல்ல. அங்கு மென்சுவிக்களும் இருந்தார்கள். மேலும் கிருத்துவ அடிப்படைவாதத்தை உடைய இலியா சவ்சவாட்சே என்ற பிற்போக்குவாதியின் வாரிசுகளும் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நோக்கங்கள் இருந்தன.
ஜார்ஜியாவில் 1919-ல் அதிகாரத்துக்கு வந்தவர்கள் மென்சுவிக்குகளேயாவர். அதாவது தேசிய சோஷலிஸ்டுகள். அவர்கள் நோக்கமும் நீங்கள் சொல்வது போல சுத்த சுயம்புவான ஜியார்ஜியாவை உருவாக்குவது அல்ல. ருஷ்ய சாம்ராஜ்ஜியம் முழுவதும் மென்ஷிவிக் அரசை உருவாக்குவதே ஆகும். அது சாதியமில்லாத நிலை ஏற்பட்டதும் ஜியார்ஜியாவில தங்கள் ஆட்சியிலிருந்த பகுதியைத் தக்க வைத்துக் கொள்ள அதை தனிநாடாக அறிவித்தனர். போல்ஷிவிக்குகளில் பாட்டாளிவர்க்க அரசுக்கு எதிராக பிரிட்டன், துருக்கி போன்ற முதலாளித்துவ சக்திகளோடு கூடிக் குலாவினர். அவர்கள் பாட்டாளிவர்க்க நலனுக்கு எதிராக முதலாளித்துவப் பேரழிவையே முன்வைத்தனர். 1919-ல் கூட பிரிட்டனின் அதிகார பலத்தோடுதான் மென்சுவிக்குகள் தேர்தலை நடத்தினார்கள். பிரிட்டன் படைகளின் பலத்தில்தான் மென்சுவிக்குகள் தேர்தலில் வென்றனர்.
மென்சுவிக்குகளின் ஜார்ஜிய அரசு நிலச்சீர்த்திருத்தம் செய்ய மறுத்தது. போல்சுவிக்குகளின் தலைமையில் விவசாயிகள் மாபெரும் கலகம் செய்தனர். அதன் பிறகும் அரைகுறை நிலச்சீர்த்திருத்தமே செய்யப்பட்டது. நிலச்சீர்த்திருத்தத்தை செய்ய மறுத்த அரசு தலைநகர் டிபிஸ்லியில் ஜியார்ஜிய ஆர்த்தோடாக்ஸ் சர்ச்சுக்கு புத்துயிர் அளித்தது. முன்னாள் பிரபுவம்சத்தைச் சேர்ந்தவர்களும் புரட்சியினால் தங்கள் சொத்தை அதிகாரத்தை இழக்கக் கூடியவர்களுமான பிற்போக்குவாதிகளோடு சேர்ந்து ஜியார்ஜிய விவசாயிகள் தொழிலாளர்கள் அரசு அமைவதைத் தடுத்தது. போல்சுவிக்குகளின் தலைமையில் விவசாயிகள் வீரமிக்க போராட்டங்களை நடத்திதான் சர்ச்சுகளின் மேலாண்மை முறியடிக்கப்பட்டது. 1922-க்கும் 1923-க்கும் இடையில் 1500 சர்ச்சுகள் பள்ளிகளாகவும், கல்லூரிகளாகவும் மாற்றப்பட்டன. ஜார்ஜிய மொழி, கலை, அறிவியல் வளர்ச்சிக்கு இவை பயன்பட்டது. ஜார்ஜிய தேசிய உரிமைகளை போல்சுவிக்குகளே போராடிப் பெற்று பாதுகாத்தனர். யாரை ஜியார்ஜிய மக்களின் தோழர்கள் என்று சொல்கிறீகள்?
ஆனால் மென்சுவிக்குகள் தாங்கள் ஆட்சியிலிருந்த போது ஜார்ஜிய வளங்களை ஏகாதிபத்தியங்களுக்கு தாரைவார்த்தனர். ஜார்ஜியாவின் மெக்னிஷியத் தொழிற்சாலைகள் அய்ரோப்பாவின் 70% தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்தன. 1918-ல் அதிகாரத்தில் இருந்த மென்சுவிக்குகள் ஜார்ஜியாவை பிரிட்டன், பிரான்ஸ், சப்பான், ஜெர்மன், துருக்கி என பல நாடுகளுக்கு தாரைவார்த்துக் கொண்டிருந்தனர். ஜார்ஜியாவை ஜெர்மன் பாதுகாப்பில் அடகு வைத்தனர். 1918-ல் ஜுன் 4-ல் செய்யப்பட்ட பார்ட்டும் உடன்படிக்கையின் படி ஜார்ஜிய இசுலாமியப் பகுதிகள் துருக்கிக்கு தாரைவார்க்கப்பட்டது. 1918-டிச 25-ல் தலைநகர் டிபிஸ்லியை பிரிட்டன் படைகள் ஆக்கிரமித்தன. தமிழன் இழந்த நிலங்கள் பற்றி பேசுகின்ற நீங்கள் இத்தகைய துரோகங்கள் ஜியார்ஜிய தேசிய இனத்துக்கு எத்தகைய இழப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதைப் பார்க்க மறுப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ஆக ஜார்ஜியாவில் இருவேறு வர்க்கங்கள் போரிட்டுக்கொண்டிருந்தன. தோழர். அருணபாரதி அவர்களே, நீங்களும், தோழர். பெ.ம வும் கூறுவது போல் ஜார்ஜிய தேசியவாதம் குறித்து 'ஜார்ஜிய தேசியவாதிகள்' பேசிக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் பிரிட்டன், பிரான்ஸ், சப்பான், துருக்கி மற்றும் ஜெர்மனுடன் கூடி சதி செய்து கொண்டிருந்தார்கள். ஜார்ஜியாவை ஏகாதிபத்தியங்களுக்கு தாரைவார்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்காக ஜார்ஜியப் பிற்போக்குப் படைகள் உலகை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஜெர்மன் படைகள், பிரிட்டன் படைகள், பிரான்ஸ் படைகள், சப்பான் படைகள் அனைத்துடனும் கூடி ஜார்ஜிய மக்கள் மீது சொல்லொண்ணா கொடுமைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தன. நீங்கள் கூறுவது போல் பேசிக் கொண்டிருக்கவில்லை. ஜியார்ஜிய விவசாயிகளுக்கு பண்ணையடிமைத்தனத்திலிருந்து விடுதலை அளிக்கவில்லை. பதினான்கு மணிநேரம் வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கு உரிமைகள் அளிக்கவில்லை. ஜியார்ஜிய மண்ணைப் பாதுகாக்கவில்லை.
இந்த கொடுமைகளுக்கு எதிராகப் போராடி தாயகத்தைக் காக்க உண்மையான ஜார்ஜியர்களான மக்கள் போல்சுவிக் கட்சியின் தலைமையில் வெகுண்டெழுந்தனர். தாயகமே பறிபோகும் கொடுமைகளுக்கு எதிராக போராடிய இவர்கள் வாயால் மட்டும் பேசிக் கொண்டிருக்க முடியாதல்லவா? அதனால் போர்தான் செய்தனர். அடித்தவர்களை அடித்தனர். வெட்டியவர்களை வெட்டினர். சுட்டவர்களை சுட்டனர். அதுதான் போர்.
ஜார்ஜியாவை ஏகாதிபத்தியங்களுக்கு தாரைவார்ப்பதா? சோவியத் ஒன்றியத்தின் மூலம் பாதுகாப்பதா? என்றப் போராட்டத்தில் தோழர்கள் ஸ்டாலினும், ஓர்ஜினிகீட்சேவும் ஜார்ஜினியாவை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்தது உண்மை. அதில் வரம்பு மீறல்கள் இருந்ததாக தோழர் லெனின் கண்டித்ததும் உண்மை.
ஆனால் தோழர். லெனினின் கண்டனம் என்பது அப்பாவிகளையோ, ஞாயவான்களையோ தாக்கி விட்டதாக இல்லை. தோழர்கள் ஸ்டாலினும், ஓர்ஜினிகீட்சேவும் நடவடிக்கை எடுக்கக் கூடாதென்பல்ல. நடவடிக்கையில் சில அத்துமீறல்கள் இருந்தது என்பதேயாகும். அதனை தோழர்கள் ஸ்டாலினும், ஓர்ஜினிகீட்சேவும் ஏற்றுக் கொண்டனர்.
இதைத்தான் ஜார்ஜியாவின் தேசிய உரிமைகள் நசுக்கப்பட்டதாக சொல்கிறீர்களா? ஜியார்ஜிய விவசாயியும் தொழிலாளியும் கிருத்துவ பழமைவாத சர்ச்சின் பிடியில் இருந்திருக்க வேண்டும் என்கிறீர்களா? நிலப்பிரபுக்கள் கோமான்களுடன் இணைந்து போரிட்டு பிரிட்டன் பாதுகாப்பில் போலி தேசிய அரசு அமைத்திருக்க வேண்டும் என்கிறீர்களா?
தோழர்கள் அருணபாரதியையும், பெ.ம வையும் நாம் கேட்பது என்னவென்றால், நீங்கள் தயவு செய்து தேசிய உரிமை என்ற புனிதப் போர்வையை எல்லோருக்கும் அணிவிக்காதீர்கள். திபெத்தில், உய்குரில், செசன்யாவில், ஜார்ஜியாவில் உங்களது தேசிய உரிமை செயல்பாட்டாளர்களின் வரலாற்றோடும், அவர்களின் வர்க்கப் பின்புலத்தோடும் எழுதுங்கள். அதே நேரத்தில் அங்கெல்லாம் உங்களது வெற்று தேசிய உரிமைகளுக்கு எதிராக, உண்மையான தேசப் பக்தர்கள் போராடிக் கொண்டிருந்ததையும் பாருங்கள் என்பதேயாகும். திபெத்தில் நடந்த வர்க்கப்போராட்டங்களை தவிர்த்துவிட்டு தவறான வகையில் தோழர் பெ.ம. வரலாற்றைப் பதிவு செய்தார். திபெத்துக்குள் செம்படை நுழையும் 1950 வரை அங்கு சட்டப்பூர்வ அடிமை முறை இருந்தது. மக்கள் அறியாமையால் புத்தப்பிக்குகளை கண்டு அஞ்சி நடுங்கினர். சர்வசக்தி படைத்தவர்கள் புத்தப்பிக்குகள் என்றும், அவர்கள் தங்களை அழித்து விடுவார்கள் என்றும் நடுங்கிக் கிடந்தனர். சீனப் புரட்சி திபெத்திய மக்களுக்கு நம்பிக்கை அளித்தது. செஞ்சீனப் படையை வரவேற்றது.
தலாய்லாமாவை திபெத்தின் பிரதிநிதியாக அங்கீகரித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. நிலச்சீர்த்திருத்தத்தைக் கோரியது. அடிமை முறையை ஒழிக்க வற்புறுத்தியது. ஆனால் திபெத்தின் பிரபுவம்சம் ஒப்புக்கொள்வதைத்தான் செய்ய முடியும் என தலாய்லாமா கைவிரித்தார்.
மக்களின் கோபம் அதிகரித்தது. திபெத்தியர்கள் என்பது இரண்டு வகை மக்கள் சமூகங்கள் என்பதும், இரண்டும் எதிரெதிர் பகை வர்க்கங்கள் என்பதும் வெட்ட வெளிச்சமாகியது. பெரும்பான்மை உழைக்கும் மக்கள் சீன செம்படையுடன் இணைந்து சிறுபான்மையினரான பிரவு வம்சத்தவர்களையும், அவர்களது கூலிப் படைகளையும், தலாய்லாமாவையும் எதிர்க்கத் துணிந்தனர். தலாய்லாமா சொந்த மக்களிடமிருந்து தப்பித்து வெளியேறினார். செம்படை அதை அனுமதித்தது.
இந்த வர்க்கப் பிரச்சினைகள் குறித்து கவலைப்படாமல், திபெத்தில் இரு வேறு வர்க்கங்கள் மோதிக் கொண்டிருந்தது உணராமல் தோழர். பெ.ம எழுதுகிறார்."1950-ல் முதல் வேலையாக சீனப் புரட்சிப் படை சிறுபான்மைத் தேசிய இன நாடான திபெத்தை ஆக்கிரமித்துக் கைப்பற்றியது. தொடர்ந்து திபெத்திய மக்கள் தங்கள் விடுதலைக்கோரி வந்தனர். அதனால் அவர்களின் மத ஆட்சித் தலைவரான தலாய்லாமாவை சிறைப்பிடிக்க சீனக் கம்யூனிஸ்ட் ஆட்சி ஏற்பாடு செய்தது. இதை அறிந்த தலாய்லாமா 1959 மார்ச் 30 ஆம் நாள் திபெத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்." என்று தலாய்லாமாவுக்கு நற்சான்று வழங்குகிறார்.
இந்த பொய்யை எப்படி பொறுத்துக் கொள்ள முடியுமென்று சொல்லுங்கள் தோழர். அருணபாரதி? பெரும்பான்மை மக்களை அடிமையாக வைத்திருந்த தலாய்லாமாவின் திபெத்துதான் உங்களது பார்வைக்கு தன்னுரிமை தேசமோ! நீங்கள் சொல்லும் விடுதலை யாருக்கானது?
திபெத்தில் தலாய்லாமா ஆட்சியில் பண்ணையடிமையாக இருந்தவர்கள் அவர் சொற்களில் பரம்பரை கடன்களால் பாதிக்கப்பட்டவர்கள் சுதந்திரமனிதர்களாக மாறிவிட்டார்களே அதைப் பற்றி ஏன் மணியரசன் பேசுவதில்லை? அந்த மக்கள் தலாய் லாமாவை தங்கள் மத ஆட்சித் தலைவராக எப்படி ஏற்றுக் கொண்டிருக்க முடியும்?
திபெத்தில் தலாய்லாமாவின் ஆட்சியில் அடிமைத்தனம் இருந்தது என்பதற்காக செஞ்சீனா தலையிட்டது சரியா என்ற கேள்வியை அருணபாரதி எழுப்பியுள்ளார். முற்றிலும் சரி என்பதே பொதுவுடமைவாதிகளின் பதிலாக இருக்க முடியும். கொடுமைக்கார அரசுகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அதை எதிர்த்துப் போரிடுவதே உண்மையான பொதுவுடமைவாதிகளின் பாரம்பரியமாக இருந்து வந்திருக்கிறது. ஸ்பெய்னுக்குப் போரிடச் சென்ற தோழர்களிலிருந்து, சே குவாரா, இன்று சட்டிஸ்கரிலும், ஜார்கண்டிலும் பழங்குடி மக்களோடு போரிட்டுவரும் ஆந்திர, வங்காளத் தோழர்கள் வரை இதற்கு ஏராளமான உதாரணங்கள் காட்ட முடியும். தமிழகத்தில் பொதுவுடமை இயக்கத்தைக் கட்டியமைத்ததில் தோழர் சர்தார் கானுக்கு உள்ள பங்கை யாராவது மறுக்க முடியுமா? சவுக்கடியும் சாணிப்பாலும் வழக்கமாக இருந்த தஞ்சை மண்ணில் தமிழ் உழைக்கும் மக்களோடு இணைந்து தமிழ் பேசும் பெரும் பண்ணைகளை எதிர்த்துப் போராடிய தோழர் சீனிவாச ராவ் தமிழர் அல்ல.(தெலுங்கு பேசும் பண்ணையார்களும் தஞ்சையில் இருந்தாலும், வெளியேற்றப்பட வேண்டியவர்களுக்கான பெ.ம. லிஸ்டில் அவர்கள் வரமாட்டார்கள். ஏனென்றால் 1956க்கு முன் வந்தவர்கள்).
பொதுவுடமைப் போராளிகள் மட்டுமல்ல ஏகாதிபத்திய எதிர்ப்புப் இஸ்லாமியப் போராளிகளும், சில தேசிய இனப்போராளிகளும் கூட தேச எல்லைகள் கடந்து சென்றிருக்கின்றனர். வெல்ல முடியாததாக இருந்த இஸ்ரேலை வென்று காட்டிய லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தைக் கட்டியமைத்தவர்கள் லெபனானியர்கள் அல்ல. ஈரானியப் புரட்சி உருவாக்கிய வீர இளைஞர்கள்தான். அண்மைக்காலம் வரை மாலியின் டூரக் தேசிய இனப் போராளிகள் கடாபியின் லிபியப் படைகளில் பங்குபெற்றனர். பல்வேறு தேசிய இனப் போராட்டங்களில் பாலஸ்தீனப் போராளிகளின் பங்கு உலகம் அறிந்தது.
மாவோ மீது எங்களுக்கு உள்ள விமர்சனம் ஒன்றே ஒன்றுதான். 1951ல் திபெத்தில் நுழைந்த செம்படைகள் 59 வரை தலாய்லாமாவை உட்கார வைத்துப் பேசிக்கொண்டிருந்ததும், அவரும் ஏனைய புத்தமத வெறியர்களும் செய்த கொடுமைகளுக்குத் தண்டனை அனுபவிக்காமல் தப்பிச் செல்வதை அனுமதித்ததும்தான்.
வரலாறு என்பது வர்க்கப்போராட்டங்களின் வரலாறு என்பதும், வர்க்கப்போராட்டங்கள் சமூகத்தில் பல மாற்றங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதும் குறித்து கவலையே இல்லாமல் எழுதுகிறீர்கள்.
"மா.சே.துங் தலைமையிலான மக்கள் சீனம், திபெத், உய்குர் இனத்தின் தாயகங்களை இன்றுவரை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது." என்று கூச்சமில்லாமல் புளுகுகிறீர்கள். தோழர் மாவோவின் சீனமும், இன்றைய சீனமும் ஒன்றா? எனக் கேள்வியே உங்களுக்குள் எழுவதில்லை.
உய்குர் இன்றைக்கு தேசிய உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. ரபையா கடீர் என்ற பன்னாட்டு நிறுவனங்களின் பங்குதாரரும், பெரும் ரியல் எஸ்டேட் அதிபருமான பெண்மணி அதற்கு தலைமை தாங்குகிறார். அவரது கணவர் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பணி புரிகிறவர். இன்னொருபுறம் அல்கைதாவும் போராடி வருகிறது.
தோழர் மாவோக்குப் பிந்தைய திருத்தல்வாதச் சீனம் சொந்த மக்களையே கடுமையாக சுரண்டி நசுக்கிக் கொண்டிருக்கும் வேளையில் முதலாளித்துவப் பாதையில் வேகமாக முன்னேறிவரும் நேரத்தில் ரபையா கடீர் போன்ற முதலாளித்துவ சீர்த்திருத்தவாதிகளின் தலைமையில் உய்குர் மக்கள் அணி திரள்வதில் வியப்பில்லை. அதே போல் இன்றைய சீனப் பெரும்தேசியவாதத்தின் எதிர்வினையால் உய்குர் மக்களிடம் இசுலாமிய மத அடிப்படைவாதம் பலம் பெற்றிருப்பதும் அதிசயமல்ல.
ஆனால் செஞ்சீனத்தோடு இணைந்த உய்குரின் நிலைமை வேறு. சீனாவில் புரட்சிகர அரசாங்கம் உருவாவதற்கு முன்புவரை அங்கிருந்த மங்கோலியப் பேரரசும், குயிங் பேரரசும், கோமிண்டாங் அரசாங்கமும் உய்குர் மக்களை கடுமையாக அடக்கி நசுக்கி கொண்டிருந்தன. அக்கால சீன இசுலாமியர் கூட உய்குர் மக்களை இசுலாமியர் என்ற சம மரியாதையோடு நடத்தவில்லை. இழிவுப்படுத்துவதும், படுகொலைகள் நடத்துவதும் அடிக்கடி நடந்தன.
ஆதலால் உய்குர் மக்கள் இசுலாமியர்களாக இருந்த போதும் அவர்களுக்கு மத உரிமைகளைவிட தேசிய உரிமைகளே பெரிதாக இருந்தது. அவர்கள் "அகண்ட துருக்கி ஜட்டிஸ்ட் இயக்கம்" என்பதை 1920-ல் கட்டினார்கள். அவ்வியக்கம் அன்றைய பிற்போக்கு சீனத்திற்கு எதிராகப் போராடியது. இவர்களின் போராட்டத்திற்கு அன்றைய சோவியத் இரசியா துணையாக நின்றது.
1921-ல் ஜட்டிஸ்ட் இயக்கத்தவர் சைபுதீன் அசிசி என்பவர் தலைமையில் சோவியத் யூனியன் சென்று முக்கியத் தலைவர்களைச் சந்தித்தனர். இதன்மூலம் புரட்சிக்கர உய்குர் யூனியன் பார்ட்டி என்ற கட்சி உருவானது. சிதறிக்கிடந்த துருக்கியப் பழங்குடியினங்களை ஒன்றிணைத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் உருவாக்கியிருந்த உய்குர் என்ற அரசின் பெயரை அந்த மக்களுக்கு வழங்கியதும், தாங்கள் ஒரு தேசிய இனம் என்ற அடையாளத்தை வழங்கியதும் சோவியத் யூனியன் ஆகும்.
புரட்சிகர உய்குர் யூனியன் கட்சி தொடர் செயல்பாட்டுக்குப் பின் 1933-ல் உய்குர் மாகாணத்தை கிழக்கு துருக்கிஸ்தான் குடியரசு என்று பிரகடனம் செய்தது. கோமிண்டாங்கின் பிற்போக்கு சீன அரசாங்கம் சீன இசுலாமிய மக்களைத் துண்டிவிட்டு பெரும் கலகம் செய்து அக்குடியரசை வீழ்த்தியது.
சோர்ந்து விடாத புரட்சிகர உய்குர் யூனியன் கட்சி நீண்டப் போராட்டத்தின் பின் 1944-ல் மீண்டும் கிழக்கு துருக்கிஸ்தான் குடியரசை நிறுவியது. இப்போது நிலைமை சாதகமாக இருந்தது. சீனாவில் வெற்றி பெற்றுக்கொண்டிருந்த புரட்சிகர நிலைமைகள் கோமிண்டாங் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி இருந்ததால் உய்குர் பாதுகாக்கப்பட்டது. உய்குரின் கிழக்கு துருக்கிஸ்தான் குடியரசானது புரட்சிகர இரசியாவின் ஆதரவு நாடென தன்னை வெளிப்படையாக அறிவித்தது. கோமிண்டாங் அரசாங்கத்தாலே அங்கீகரிக்கப்பட்ட உய்குரின் கவர்னர் டெங்ஷிகாய் என்பவர், உய்குரை சோவியத் குடியரசுகளின் 18-வது குடியரசாக அங்கீகரிக்கும்படி கோரினார். உய்குரின் நிலைமை அந்த அளவுக்கு சோவியத் ஆதரவாக இருந்தது.
உய்குரை கிழக்கு துருக்கிஸ்தான் குடியரசு என அறிவித்த புரட்சிகர உய்குர் யூனியன் கட்சி, உய்குரில் எஞ்சியிருந்த சீன அதிகாரத்தை வீழ்த்த கடுமையாகப் போராடியது. 1944-ல் அக்டோபர் 8-ல் மூன்று மாவட்டப் புரட்சி எனும் மாபெரும் எழுச்சி நடந்தது. உய்குர் தேசிய உரிமை, பழங்குடி உரிமை, சீன எதிர்ப்பு, சோவியத் ஆதரவு என்ற முழக்கங்களுடன் நடந்த அந்த எழுச்சியில் கிட்டத்தட்ட 3,25,000 பேர் கொண்ட புரட்சிகர மக்கள் படை பங்கேற்றுள்ளது.
இந்த நிலையில் சீனாவில் தோழர் மாவோவின் தலைமையில் சிவப்பதிகாரம் நிறுவப்பட்டது. இதுவரையில் புரட்சிகர உய்குர் யூனியன் கட்சியை உருவாக்கிய சைபுதீன் அசிசி உட்பட முக்கியத் தலைவர்கள் சோவியத் இரசியாவின் போல்சுவிக் கட்சி உறுப்பினர்களாகவும் இருந்தனர். சீனப் புரட்சி வெற்றிப் பெற்றதும் இத்தலைவர்களை மக்கள் சீனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சோவியத் யூனியன் வழிகாட்டியது. சைபுதீன் அசிசி தவிர்த்த வேறு சில தலைவர்கள் சீனத்துக்குப் புறப்பட்டனர்.
கெடுவாய்ப்பாக இவர்கள் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி தலைவர்கள் இறந்தனர். ஆனாலும் அடுத்த கட்டமாக சைபுதீன் அசிசி உட்பட மற்றவர்கள் சீனம் சென்றனர். மக்கள் சீனத்துக்கும், உய்குரின் கிழக்கு துருக்கிஸ்தான் குடியரசுக்கும் இடையில் உடன்படிக்கை உண்டானது. கிழக்கு துருக்கிஸ்தான் குடியரசு மக்கள் சீனத்தின் குடியரசுகளில் ஒன்றாக இணைந்துள்ளது. சைபுதீன் அசிசி உட்பட தலைவர்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.
சைபுதீன் அசிசி புரட்சிகர சீன அரசாங்கத்தில் தேசிய இனங்கள் மற்றும் அரசியல் சட்ட விவகாரங்கள் துறை அமைச்சரானார். உய்குரின் நிலைமைகள் மாறி மாறி வந்திருப்பதை தோழர்கள் பெ.ம மற்றும் அருணபாரதியால் உணர முடியவில்லை. பாட்டளி வர்க்கக் கண்ணோட்டமில்லாமல் அதை உணரவும் முடியாது. உங்களுக்கு சோவியத் ஆதரவு கிழக்கு துருக்கிஸ்தான் குடியரசு என்ற உய்குரும், பின்னர் அது செஞ்சீன ஒன்றியத்தில் இணைந்த உய்குராகவும் இருந்தது தேசமாக தெரியவில்லை போலும். பெரும்பான்மை மக்களுடைய இந்த உய்குரை எதிர்த்து வேறு யாருடைய உய்குருக்காக வாதாடுகிறீர்கள்?
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் செசன்யாவில் எதிரெதிர் நலமுடைய இரண்டுவகை மக்கள் பிரிவினர் இருந்தனர். சோவியத் இரசியக் கூட்டரசில் பங்கு பெறுவதன்மூலம் சோசலிசத்தை இலக்காகக் கொண்டவர்கள் ஒரு பிரிவினர். இவர்கள் போல்சுவிக் கட்சியை உயிராகப் போற்றியவர்கள். இவர்களில் இருந்தே இரண்டாம் உலகப்போருக்கு 40,000 செசன்ய வீரர்கள் செம்படையில் செயலாற்றினர். இவர்களில் 50பேர் சோவியத்துகளின் ஹீரோ எனப் பட்டமளித்து கொண்டாடப்பட்டதை ஆவணங்கள் சாட்சியமளிக்கின்றன.
இன்னொரு வகை மக்களும் செசன்யாவில் இருந்தார்கள். அவர்கள் சுரண்டலை ஆதரித்தார்கள். மனிதகுல எதிரியான செர்மன் பாசிசத்தை ஊக்குவித்தார்கள். அவர்களுக்கு கஸான் இஸ்ரைலோவ் என்ற சோவியத் எதிர்ப்பாளன் தலைமை தாங்கினான். ப்ரொவிசியல் பாப்புலர் ரெவல்யூசனரி கவர்ன்மெண்ட் ஆப் செச்சினோ இங்குஸ் சேத்தியா என்ற படையமைப்பை இவன் நடத்தி வந்தான். இவனது படையில் சுமார் 5000 கொரில்லா வீரர்கள் இருந்தனர்.
செசன்யாவில் இருந்து தனது வலையை ஆர்மீனியா, ஜார்ஜியாவுக்கும் விரிவுபடுத்த நினைத்த இஸ்ரைலோவுக்கு மெயர்பெக்ஷெரிபௌ என்ற கம்யூனிச எதிர்ப்பாளன் துணை நின்றான். இவர்கள் இணைந்து டாகிஸ்தான் என்ற விரிந்த பகுதியை ஆக்கிரமித்ததோடு ஜெர்மனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டனர். ஜெர்மன் படைத்தளபதிகள் இவர்களுக்கு வெளிப்படையான பயிற்சிகளை அளித்தனர். இதன் பிறகு இவர்களது சோவியத் எதிர்ப்புப் படைகள் 62,000 பேர்களாகப் பெருகியது.
இஸ்ரைலோவ் மற்றும் மெயர்பெக்ஷெரிபௌ ஆகியோரின் துணையால் ஜெர்மன், செசன்யா மற்றும் அருகிலிருந்த எண்ணெய் வளங்களை விழுங்கியது. நாட்டின் வளங்களை ஜெர்மனுக்கு தாரைவார்த்த கஸான்இஸ்ரைலோவ் கைமாறாக செசன்யாவை தனிநாடாக ஜெர்மன் அங்கீகரிக்க வேண்டும் என்றும், தன்னை அதன் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டினான். செச்சின்யா மட்டுமல்ல அண்டைக் குடியரசுகளும் மக்களும் இந்த துரோகத்தால் பேரழிவுக்கு உள்ளாக இருந்தனர்.
சோவியத் படைகள் ஐரோப்பியப் பகுதிகளுக்கு முன்னேறிச் செல்லும் போது பின்புறமிருந்து துருக்கியால் தாக்கப்படும் அபாயம் இருந்தது. இந்த நிலையிலேயே 400000 செச்சின்யர்கள் யுத்த அபாயம் இல்லாத வேறிடங்களில் குடியமர்த்தப்பட்டனர். பெரிய அளவிற்கு நாஜிகளோடு இணைந்து போரிட்டவர்களைப் பிரிப்பது என்பது இனத்தை அழிப்பதில் முடியும். பதிலாக இனம் ஒன்றாக வைக்கப்பட்டிருந்தது; வளர்ச்சியடைந்தது எண்ணிக்கையிலும் பண்பாட்டிலும் என்கிறார் குரோவர் பர். லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் கட்டுக் கதைகளைப் பொருத்தவரை என்கேவிடியின் ஆவணங்களை ஆய்வு செய்து 50 பேர் கொல்லப்பட்டனர்; 1,272 பேர் பயணத்தில் இறந்தனர்; உலகம் காணாத கடுமையான போரின் நடுவே இது நடந்தது என்கிறார் குரோவர் பர்.
செச்சின்யாவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாதபோது என்று நீங்கள் கூறுவது, அப்படியே 1956ல் குருஷேவ் நிகழ்த்திய உரையில் உச்சரிக்கப்பட்ட வாசகங்களாகும்.
முதலாளித்துவவாதிகள் தரும் காலாவதியாகிப்போன போலியான விவரங்களை மட்டும் வைத்துக் கொண்டு மிகவும் மேலோட்டமாக பார்த்துவிட்டுதான் தோழர். பெ.ம, கம்யூனிஸ்டுகள் தேசியப் பிரச்சினையை சரியாக கையாளவில்லை என்றும், மாபெரும் சனநாயகவாதியான லெனின் மட்டுமே விதிவிலக்காக நிற்கிறார் என்றும் கூறுகிறார். தோழர்-லெனின் மட்டுமே விதிவிலக்கு என்பதால், கம்யூனிஸ்டுகளின் விதி என்பது தேசிய ஒடுக்குமுறைதான் என்பதே அவரது வாதம். ஆதலால்தான் "முதலாளிய சனநாயகமும், கம்யூனிஸ்டுகளின் சர்வாதிகாரமும்" என தலைப்பை தேர்ந்தெடுத்து வைத்தார். இது எப்படி கம்யூனிஸ்டுகளாக நின்று சுயவிமர்சனம் செய்வதாகும்? மாறாக இது முதலாளித்துவ அவதூறேயாகும்.
முதலாளித்துவவாதிகள் அயோக்கியர்கள், பிரஞ்சுக்காரர்களுக்கு வாக்கெடுப்பு நடத்தியவர்கள், செவ்விந்தியப் பழங்குடிகளை அழித்து ஒழித்தவர்கள், ஸ்காட்லாந்துக்கு வாக்கெடுப்பு நடத்தியவர்கள், தமிழர்களை மலேசியாவுக்கும் , பீஜிக்கும், மோரிஷியசுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் கொண்டு சென்று பலி கொடுத்தவர்கள் என்றால் என்ன செய்வது? அவர்கள் ஒரு தேர்தல் நடத்திவிட்டார்களே என்கிறீர்கள். சரி அந்தத் தேர்தலால் என்ன நடந்தது? பிரஞ்சு மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைத்துவிட்டதா என்றால் இதுதான் அந்த இன்னொரு வாழைப்பழம் என்கிறீர்கள்.
தேர்தல்தான் அடிப்படை என்றால் இது போன்ற நூறு தேர்தல்களை இந்தியா வடகிழக்கிலும் காஷ்மீரிலும் மத்திய இந்தியாவிலும் நடத்தியுள்ளது. இங்கு தேசிய இன உரிமைகளுக்கு எதிரான காங்கிரஸூம் பிஜேபியும் வென்று விட்டதால் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டுவிட்டது என்று கொள்ளலாமா? ஊழலிலும் அடக்குமுறைகளிலும் ஊறிப்போன முதலாளித்துவ அரசுகளோடு நொண்டி ரேஸில் கூட தேசிய இனவாதிகளால் ஓட முடியாது என்பது ஏன் உங்களுக்குத் தெரியவில்லை தோழர்களே? தோழர் அருணபாரதி அவர்களே, முதலாளித்துவ கனடாவும், பிரிட்டனும் ஏற்றுக் கொண்ட பொதுவாக்கெடுப்பை விமர்சனமில்லாமல் ஆதரிக்க கம்யூனிஸ்டுகளால் முடியாது. கம்யூனிச விமர்சன பார்வையில்தான் நாங்கள் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பை கனடாவும், பிரிட்டனும் ஏன் முன்மொழியவில்லை எனக் கேள்வி எழுப்புகிறோம். கியுபெக் ப்ரெஞ்ச் மக்களின் ஏகாதிபத்தியப் பின்புலத்தோடு கனடாவின் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் சமரசம் செய்து கொள்வதையும், அதனால் கனடா, கியுபெக்கின் பொதுவாக்கெடுப்பை அங்கீகரிப்பதையும் உலகின் முன் அம்பலப்படுத்துகிறோம். கியுபெக்கில் ப்ரெஞ்சு மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக கனடா பொதுவாக்கெடுப்பை நடத்தத் துணியும் போது கியுபெக்கில் உள்ள பூர்வகுடிகளான எண்ணற்ற பழங்குடிகளின் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கும்படி கோருகிறோம். மாறாக கியுபெக் ப்ரெஞ்சு சமூகமும், கனடா ஆங்கில ஆதிக்கமும் அங்குள்ள பழங்குடி மக்களை இன்னமும் நசுக்கி அழிப்பதை வனமையாக கண்டிக்கிறோம்.
தோழர் அருணபாரதி, கம்யூனிஸ்டுகளின் இந்த ஒருங்கிணைந்த பார்வை உங்களுக்குப் பிடிக்கவில்லை. அதை தேவையற்ற விபரம் என்று ஒதுக்குகிறீர்கள். ஈழ மக்களின் மீதான இனப்படுகொலையின் வலியை உணர்ந்தவர்கள் நீங்கள். ஆனால் குசராத் இசுலாமிய மக்கள் மீதான இனப்படுகொலையை உணர முடியாதவர்களாக இருக்கிறீர்கள். ஆதலால் இசுலாமியர்களை இனப்படுகொலை செய்தவர்களோடு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கூடிக்குலவுகிறீர்கள். இந்த மாதிரி சந்தர்ப்பவாத அணுகுமுறையோடு விடயங்களை அணுகுவதால்தான் மற்ற சிக்கல்களிலும் ஒருங்கிணைந்த பார்வையோடு உங்களால் அணுக முடிவதில்லை.
கூடுதலாக, தோழர் அருணபாரதி அவர்களே! உங்களது வாதத்தை நியாயப்படுத்த "தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் திட்டம், தமது இலக்கான இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசை நிகரமையை நோக்கி முன்னேறிச் செல்லும் அரசாக அது அமையும் எனத் தெளிவாக குறிப்பிடுகிறது." என்று சான்று காட்டியிருக்கிறீர்கள்.
உங்களின் இந்த முன்வைப்பு சரி. ஆனால் அதை அடைவதற்கான உங்களது அணுகுமுறை சரியில்லையே. உங்களது 'வெளியாரை வெவியேற்றுவோம்' என்ற முழக்கம் எல்லாவற்றையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறதே. 1956- நவ 1-க்குப் பிறகு இன்று வரை தமிழ்நாட்டுக்கு வந்த அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்கிற உங்களது கோரிக்கை எவ்வளவு ஆபத்தானது எனத் தெரியுமா?
இந்தியாவில் இந்தியர் என்ற பேரில் இரண்டு வகை உரிமைகள் உள்ளன. ஒன்று இந்தியப் பணக்காரர்கள் இந்தியர் என்ற பேரில் இத்துணைக் கண்டம் முழுவதிலும் சென்று கொள்ளையடிக்கும் உரிமை. இன்னொன்று உழைக்கும் மக்களை ஊர் ஊராக விரட்டியடித்து பிழைப்பு தேட வைக்கும் கொடுமை. இதனைப் புரிந்து கொண்டு ஆளும்வர்க்கத்தை தனியாகவும், உழைக்கும் மக்களைத் தனியாகவும் கையாள வேண்டும் என்ற துன்பமெல்லாம் உங்களுக்கு வேண்டாம். அதற்காக தமிழ்நாட்டு உழைக்கும் மக்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள பிற தேசிய உழைக்கும் மக்களுக்கும் தேவையான முழக்கங்களை முன்வைத்து முன்னேறுகிற சிரமமும் வேண்டாம். இவையெல்லாம் கம்யூனிஸ்டுகளின் தலையில் வீழட்டும்.
ஆனால், தமிழ் தேசக் குடியரசு அமைக்கப் போராடுகிற யாராக இருந்தாலும் அவர்கள் மிகவும் பலம் வாய்ந்த இந்திய அதிகார வர்க்கத்தை வீழ்த்தியாக வேண்டும். அவ்வாறு இந்திய அதிகாரத்தை வீழ்த்துவதற்காகப் போராடுகிற தமிழ்த் தேச மக்களுக்கு பிற தேசிய இனங்களின் ஆதரவும் வேண்டும். ஆதலால் தமிழ்த்தேசப் போராளிகள் பிற தேசிய இனப் போராளிகளோடும், இந்திய அதிகார வர்க்கத்துக்கு எதிராகப் போராடும் அனைத்து இயக்கங்களோடும் ஒற்றுமையைக் கட்டி பலப்படுத்த வேண்டும்.
அது மட்டுமில்லாமல் தமிழ்த்தேசக் குடியரசுக்காகப் போராடுகிறவர்கள் இந்திய அதிகார வர்க்கத்தை வீழ்த்தும் படை கட்டியாக வேண்டும். படை நடவடிக்கைகளில் கொரில்லாக் குழுக்களாக இருந்தாலும், மரபு வகைப் படைகளானாலும் பின் வாங்குவதும், பின்வாங்கும் பகுதியின் பாதுகாப்பும் முக்கியமாகும். தமிழ் நாட்டில் பின்வாங்குவதற்கான இயற்கை சார்ந்த பகுதிகள் நமது எல்லையோரங்களாகவே உள்ளன. நமது எல்லையோரங்களில் மலையாளிகள், கன்னடர், தெலுங்கர் என பிற தேசிய இன மக்கள் வாழுகின்றனர். ஆக தமிழ்த்தேசக் குடியரசை அமைப்பதற்கான அரசியல் அணி சேர்க்கைக்கும், படை நடவடிக்கைகளுக்கும் நாம் அண்டை தேசிய இனங்களோடும், அனைத்து மக்களோடும் இணக்கமான அணுகுமுறையைக் கொள்ள வேண்டுமே. முக்கியமாக தமிழ்த்தேசக் குடியரசை அமைப்பதை இலக்காக கொண்ட நீங்களும் இதை செய்ய வேண்டுமே. ஆனால் நீங்கள் இதைச் செய்யவில்லையே. மக்களிடம் இணக்கமே உருவாகி விடக்கூடாதென்றும், பகையை உருவாக்கவும் பாடுபடுகிறீர்களே.
அதே நேரம் தமிழ் உழைக்கும் மக்களின் ஜென்மப் பகைவர்களான சசிகலா நடராசன், ராமதாஸ், மகாலிங்கம் மற்றும் இந்துத்துவவாதிகளோடு கூடிக் குலாவுகிறீகள். தமிழ்ச்சாதிகள் ஐக்கியம் என்று ரத்தம் குடிக்கும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஆலை முதலாளிகளையும், ரத்தம் சுண்ட உழைக்கும் கேம்ப்கூலித் தமிழ்ப் பெண்களையும் ஒரே தட்டில் வைக்க முயல்கிறீர்கள். தஞ்சைப் பெரிய கோவிலுக்கு தமிழரை பொறுப்பாளராக்க வேண்டும் என்று கூறும் நீங்கள் தஞ்சைக் கோவிலின் நிலங்களை நிலமற்ற தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்று பேசுவதில்லை. ஆனால் தமிழகத்திற்காக உழைத்துவரும் வட மாநிலத் தொழிலாளர்களைத் தமிழ் மக்களுக்கு எதிரிகளாகக் காட்டுகிறீர்கள். உள்நாட்டில் நீங்கள் கடைப்பிடித்துவரும் இந்த நிலைபாட்டைத்தான் சர்வதேச அளவிலும் கடைப்பிடிக்கிறீர்கள்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இல்லாத சோஷலிசம் வர்க்க சமரசம் ஆகும். உங்கள் நிலைபாட்டிலிருந்து நேபாள மாவோயிஸ்ட் கட்சி தேர்தல் அரசியலில் நடத்திக் காட்டிய சாதனைகளை எங்களுக்குக் கொஞ்சம் விளக்குங்கள்; கேட்டுக் கொள்கிறோம். இது தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பதற்கான வழிமுறை இல்லை; இந்திய அதிகார வர்க்கத்தை வீழ்த்துவதற்கான அணுகுமுறையும் இல்லை. மாறாக மக்களுக்கிடையே சண்டைகளை உருவாக்கி அதில் இந்திய ஆளும் வர்க்கத்தை குளிர் காய வைக்கக் கூடிய அணுகுமுறை. பிறகெப்படி தமிழ்த் தேசக் குடியரசு அமையும்? அது நிகரமயத்தை நோக்கி முன்னேறும்?
இதை உணர வேண்டுமென்றால் தமிழ்நாட்டிலும், இத்துணைக் கண்டம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டங்களை உணர வேண்டும். அவ்வாறு இல்லாமல் நீங்கள் தமிழ்த்தேசக் குடியரசை அமைக்கவிருக்கிறோம் என்றால் அது கருணாநிதி தானும் கம்யூனிஸ்டுதான் என்பது போலாகிவிடும்.
முதலில் ஒடுக்கும் தமிழர்கள், ஏகாதிபத்தியத்தோடு உறவு பூண்டவர்கள், சக தமிழர்களை வதைத்து வருபவர்கள் இவர்கள் பற்றிய உங்கள் நிலைபாட்டை முன் வையுங்கள். பின்பு உங்கள் நிகரமைக் கோட்பாட்டில் உண்மை இருக்கிறதா என்று மக்கள் முடிவு செய்வார்கள்.
- திருப்பூர் குணா (