போரில் வீரர்கள் எதிரியைக் குறி வைப்பார்கள். எப்போதும் பக்கத்தில் நிற்கும் அந்த நல்லவன் நமது அல்லையைக் குறி வைக்கிறான். அவனே அதிகமாகவும் பேசுகிறான். சத்தமும் இரைச்சலும் திசை திருப்பிவிடும் என்பது அவனது நம்பிக்கை (அவன் என்ற உரிச்சொல் கதை நிமித்தம்).

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன் கீற்று இணையத்தில் கிரேக்க கதை சொல்லி, ‘கதை அல்ல நிஜம்’ பேசி இருக்கிறார். தமிழ்நாட்டில் வாழும் ஒருவர், இந்திய அரசின் வல்லாண்மைக்கு கட்டுப்பட்டு வாழும் ஒருவருக்கு கிரேக்க கதைகளை உருவகப்படுத்தித்தான் தமிழகத்தில் அரசியல் சண்டை புரிய முடிகிறது. இது தற்செயல் அல்ல. இந்த விவாத முறைக்கும் மே பதினேழு இயக்கத்தின் தொடர் போராட்ட முறைகளுக்கும் ஒரு தர்க்கத் தொடர்ச்சி இருக்கவே செய்கிறது. அன்பான மே பதினேழு இயக்கத் தலைமையே.. தாழ்மையுடன் உங்களுக்கு சில நினைவுபடுத்தல்கள்... நாம் தமிழ்நாடு என்ற ஒரு மாநில அரசின் கீழ் வாழ்கிறோம். இந்தியா என்ற ஒரு வல்லாதிக்க கட்டமைவின் கீழ் வாழ்கிறோம். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஐ.நா சபை, காமன்வெல்த் அவை அனைத்தும் நமக்கு வெகு தூரத்தில் உள்ளன. நிலத்தில் மட்டுமல்ல அதிகாரத்திலும் நமக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்திலும் வெகு தூரத்தில் உள்ளன. படிப்பது கிரேக்க ‘வீரயுக’க் கதை... கத்தி வீசுவதோ காற்றில்...

அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தை எதிர்த்த போராட்டக் களத்தில் இந்தியாவை அம்பலப்படுத்தி நடந்த போராட்டத்தை, மடை மாற்றியது மே பதினேழு செய்த அருந்தொண்டு. அமெரிக்க எதிர்ப்பு, அமெரிக்க பொருட்கள் புறக்கணிப்புப் போராட்டமாக மாற்றி இழுத்துச் சென்ற மே பதினேழு இயக்க தலைமையைத் தான் ட்ரோஜான் கதையின் ‘சினான்’ என்று சொலல் பொருத்தம். தமிழ்நாட்டின் மாணவர் போராட்டக் களத்தை அமெரிக்க எதிர்ப்பில் மடை மாற்றி அவர்களை தவறான திசையில் கொண்டு சென்று, அமெரிக்கப் பொருள் புறக்கணிப்பு என்ற ட்ரோஜான் குதிரையின் முன் நிறுத்தியது மே பதினேழு இயக்கத் தலைமை தானே?! தேசிய விடுதலை எதிர்ப்பில் இந்திய அரசின் வஞ்சினத்தை மறைக்க அந்த மடை மாற்றம் உதவியது. மாணவன் அமெரிக்க மோசடியை மட்டும் கண்டித்து விட்டு தனது பாரத இருக்கையில் மீண்டும் அமர்ந்து கொண்டான்.
 
மான் பக்கமா இல்ல நரி பக்கமா?

அமெரிக்க தீர்மானத்தைப் புறக்கணித்த மே பதினேழு இயக்கத்தை வரவேற்கிறோம். பந்து எடுத்து போடுபவர்கள் அனைவரும் பந்தாளர்கள் (பவுலர்கள்) இல்லை. ஒரு முடிவைப் பேசியதனாலேயே அதற்கு சரியான வழிமுறையில் வந்து சேர்ந்தோம் என்று பொருளல்ல. ஒரே முடிவுக்கு ஒருவர் ஒன்று வழியாகவும் வருகிறார்; ஒருவர் பத்து வழியாகவும் வருகிறார்; ஒருவர் பூஜ்ஜியம் வழியாகவும் வருகிறார். தங்களின் முடிவு பூஜ்ஜிய வழிப்பட்டதுதான் என்ற சந்தேகம் எமக்குண்டு.

அமெரிக்கத் தீர்மானத்தை ராஜபக்சேவும் எதிர்த்தார்.. இந்தியாவும் எதிர்த்தது.. இந்த எதிர்ப்புகளில் இருந்து மே பதினேழு எந்த இடத்தில வேறுபட்டது என்ற சந்தேகத்தை தெளிவுபடுத்தினால் நல்லது. எந்த வழியாக நீங்கள் அந்த முடிவுக்கு வந்தீர்கள் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டியது. ஏனெனில் அப்போதும் இந்தியாவை நோக்கி கோரிக்கை வைக்கக் கூடாது என்று லாவகம் காட்டினீர்கள்.
 
கார்ப்பரேட் அரசியலின் ராஜதந்திரம்

மாணவர் போராட்டங்களால் நிரம்பி வழிந்த சாலைகள் இன்று வெறிச்சோடி விட்டதற்கு காரணம்.. அமெரிக்க எதிர்ப்பை நோக்கி திசை திருப்பி, இந்திய அரசைக் காப்பாற்றிய அரசியல் தான். இதை மிக சாதுரியமாக முதலாளிகளுக்கே உரிய ராஜதந்திரங்களைக் கொண்டு மே பதினேழு இயக்கத் தலைமை செய்தது. முழக்கங்களை காசைக் கொட்டி அடித்து வைத்துக் கொள்வது... எந்தப் போராட்டம் நடந்தாலும் ஓரிருவரை அனுப்பி, கலந்து கொள்வோர் கரங்களில் அட்டையைச் சேர்த்து விடுவது.. அட்டையடி வித்தை இது தானோ. அரசியல் இயக்க வரலாற்றில் இதுவரை இல்லாத முதல் முறையாக, மே பதினேழுவின் வியாபார உத்தி... இதில் கருத்துரிமை, ஜனநாயகப் பண்பு எல்லாம் மே பதினேழு தலைமைக்கு கெட்ட வார்த்தைகள்..

“தோழர்களே அரசியல் இயக்கங்களையும் கட்சிகளையும் எதிலும் அனுமதிக்காதீர்கள்; அவர்கள் கொடுக்கும் துண்டறிக்கைகளை கிழித்து எறியுங்கள்.." இது மே பதினேழு தலைமை அக்கம் பக்கம் பார்த்து விட்டு அவ்வப்போது வைக்கும் முழக்கம்.. உண்மையில் மே பதினேழு ‘அரசியல் இயக்கமா’ அல்லது.. அம்பாசடர் இயக்கமா?

இப்போது காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்ற முழக்கத்தை இந்தியாவிடம் வைக்கக் கூடாது என்கிறார்கள். சரி அதை அமெரிக்காவிடம் வைப்பதா? அல்லது அண்டார்டிக்காவிடம் வைப்பதா? நமக்கு பதில் சொல்ல வேண்டியது யார்? நமது முதல் பொறுப்பாளி யார்? தலைமீது நின்று நமது கொள்கைகளை தீர்மானிப்பது யார்? இந்தக் கேள்விகளை ஒவ்வொரு பிரச்சனையின் போதும் எளிதாக கடந்து விடுபவர்கள் யார்? இந்தியாவிற்கு ஏற்கனவே அம்பலப்பட்ட ஏஜெண்டுகள் தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் உள்ளனர். அந்தப் பட்டியலில் மே பதினேழு இயக்கம் சுயேட்சையாக போட்டியிடுவது நம்மை வருத்தம் கொள்ள வைக்கிறது.

காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை யாரிடம் வைக்கிறீர்கள்? காற்றிலா? கனடாவிடமா? காமன்வெல்த்தின் பொதுச் செயலாளரான இந்தியாவின் கமலேஷ் ஷர்மாவிடமா? காமன்வெல்த் நாடுகளுக்கு சுற்றறிக்கை கூட அனுப்பக்கூடாது என்று நேரடியாக தடுத்த அவரை இயக்கியது ஆப்பிரிக்காவா? அல்லது இங்கிலாந்து ராணியா?

அல்லது உலக மக்களுக்கு வெறும் பிரச்சாரம் செய்தோம் என்று மழுப்பப் போகிறீர்களா? எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்வி இடியாப்பம் பிழிவதில் கூட முக்கியமானது நண்பர்களே.

காமன்வெல்த் எதிர்ப்பில் மட்டுமல்ல எல்லாப் போராட்டங்களிலும் உச்சபட்ச கோரிக்கையை மட்டும் வைத்து விட்டால் எல்லாம் தானாக நடந்து விடும் என்பது மே பதினேழு இயக்கத்தின் சுருக்கவாதம். போராட்டத்தின் அத்தனை கோணங்களிலும் தனது உறுதியை நிறுவ வேண்டிய கடமை கார்பரேட் கம்பெனி ஜென்டில்மேன் அரசியலுக்கு தேவைப்படாது தான். ஆனால் அர்ப்பணிப்பான போராட்டத்திற்கு அது அவசியம்.

ஈழம் என்ற உச்சபட்ச கோரிக்கையை உறுதியாக பற்றிக்கொண்ட விடுதலைப் புலிகள், திம்பு பேச்சுவார்த்தை தொட்டு, பல்வேறு இடைக்கால கோரிக்கைகளை முன்வைத்ததை முடிந்தால் புரட்டிப் பார்க்க. போர், போர் என்று முரசறைந்து விட்டு வீட்டுக்கு கிளம்பிவிட முடியாது. ஒவ்வொரு படைவீரனையும் உரிய இடத்தில உரிய முறையில் எதிர்கொண்டே முன்னேற வேண்டி இருக்கிறது.

'காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது' என்பதும் 'காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது' என்பதும், 'காமன்வெல்த் அமைப்பில் இருந்தே இலங்கையை நீக்க வேண்டும்' என்பதும் வரிசைக்கிரமமான கோரிக்கைகள்... இதில் ஏதொன்றும் விடுபடமுடியாது; விடுபடக் கூடாது.

இது மட்டுமல்ல இனி வரப்போகும் காலங்களிலும் இந்திய அரசின் இனப்படுகொலை பாத்திரத்தையும் அதன் துரோகத்தையும் ஒவ்வொரு அரசியல் நகர்விலும் அம்பலப்படுத்தாத எந்த அரசியல் கட்சியையும் அம்பலப்படுத்தும் கடமையை எமது கட்சி தீவிரமாக செய்யும் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறோம்.
 
மே பதினேழு இயக்கம் வலது சாரி அரசியலுக்குள் சென்று விடக் கூடாது என்று எண்ணுகிறோம். ஆகவே கீழ்காணும் கேள்விகளை கேட்க விரும்புகிறோம்.

· தமிழகத்தில் பெரியாரிய மார்க்சிய அம்பேத்கரிய சிந்தனைப் போக்குகள் சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் குறியீடுகளாக போற்றப்படுகின்றன. மே பதினேழு இயக்கத்திற்கு என்ன கருத்தியல் பார்வை உள்ளது?

· தேசிய ஜனநாயகம்.. - எதிர் - தமிழ்ச்சாதி என்ற பெயரில் சாதிய தேசியம் இதில் மே பதினேழு எந்தப் பக்கம்.?

· வைகுண்ட ராஜன்களின் தமிழ்த் தேசியம் - எதிர் - உழைக்கும்- ஏழை –நடுத்தர மக்களின் தமிழ்த் தேசியம் ... இதில் மே பதினேழு எந்தப் பக்கம்?
 
· தமிழகத்தைப் பற்றிய புரிதலும் எதிர்கால லட்சியமும் என்ன?
 
- தமிழ்நாடு மக்கள் கட்சி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., 9080535115)

Comments

11 comments

11
Senthooran
இரண்டு கட்டுரைகளையும் படித்தபின்பு, தமிழநாடு மக்கள் கட்சியிடம் காழ்ப்புணர்ச்சி மட்டுமே இருக்கிறது, அரசியல் அறிவு அறவே இல்லை என்பதும் தெரிகிறது. அம்பை மட்டும் அடித்தால் போதும் என்கிறது த.ம.க. எய்தவனையும் சேர்த்து அடி என்கிறது மே17. இதுதானே சரி. இதற்காக மே17ஐ இந்திய ஏஜெண்ட் என்பது அயோக்கியத்தனம்.
Karthik
மாநாடு நடக்கக் கூடாது, அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் எனும் கோரிக்கைகளை யாரிடம் தமிழ்நாடு மக்கள் கட்சி தோழர்கள் வைக்கிறீர்கள்? அவர்களிடம் தான் எங்களின் கோரிக்கையும் வைக்கப்படுகிறது.

ஆக நீங்கள் ஒரு முன்முடிவில் இருக்கிறீர்கள், மாநாடு நடக்கும் என்று. பின்ன எதற்கு அந்தக் கோரிக்கைகள்?

மீறி நடந்தால் இந்தியா செல்லக் கூடாது!!! என்ன ஒரு அழுத்தம் தரும் கோரிக்கை!!!!
மீறி இந்தியா சென்றால் அங்கே மிக்ஸர் சாப்பிடக் கூடாதுனு கோரிக்கை வைப்பீர்களா?

மார்க்சிய சிந்தனை உள்ள தங்களுக்கு அமெரிக்காவை எதிர்த்தால் ஏன் கோவம் வருகிறது? ஏகாதிபதியம், முதலாளித்துவம் என முழங்கும் தங்களுக்கு, அமெரிக்க வணிக நிறுவனங்களை எதிர்ப்பது அவர்களின் ளொப்ப்ய்யை உடைப்பது போன்றது என்பது புரியவில்லையா?

டேஸோவின் நாடக அரசியல் உங்களுக்கு பிடித்தால் அதற்கு நாங்கள் என்ன செய்வது?

ஐநா வுக்கும் நமக்கும் "டிச்டன்செ தான் காரணம்" நு வடிவேலு மாதிரி சொல்லி பொது வாக்கெடுப்பு போன்ற கோரிக்கைகளை சும்மா பெயரளாவில் தான் வைக்கிறீர்களா?

ஈழப் போரில் அமெரிக்காவின் பங்கு என்ன என்பது தெரியாமல் அமெரிக்காவிற்க்கு சொம்பு தூக்குவது எப்படி விடுதலையைப் பெற்றுத்தரும்?

மாநாடு நடக்கும் பட்சத்தில், "காமன்வெல்த் நாடுகளே இலங்கையை இனப்படுகொலை நாடாக நினைக்கவில்லை" எனச் சொல்லி ஐநாவும் இலங்கையை இறுதி வரை காப்பாற்றும்.

மாநாடு நடக்கக் கூடாது என்பது தான் மக்களுக்கு தீர்வு தரும் என மே17 சொல்கிறது. நீங்கள் ஒரு வேற்றுக் கோரிக்கையை ஆயிரம் முறை திரும்ப திரும்ப சொல்லி இது தான் மக்கள் நினைக்கிறார்கள் என சொல்கிறீர்கள். விட்டால், இப்போ தான் வடக்கு மாகாண தேர்தல்ல மக்கள் வோட்டு போட்டு இருக்காங்க.. கொஞ்ச வருசம் கழிச்சு பொது வாக்கெடுப்பு வைச்சுக்லாம்னு சொல்லுவீங்களா??

தீர்வு தேவையில்லை, தீர்வு மாதிரி ஒன்றே போதும் என இருக்கும் தங்களுக்கு கடேசியாக ஒரு செய்தி,

விடுதலைப் போராட்டம் படிப்படியாகத் தான் நடக்க வேண்டும் என ஸ்ய்ச்டெமடிச் ஆ வேலை செய்ய நம் எதிரி ஒருவர் இருவர் அல்ல. ஆகவே விடுதலைக் கோரிக்கையை சமரசம் செய்யாமல் வைக்கும் குறைந்தபட்ச துணிவு கூட நம்மிடம் இல்லை என்றால் விடுதலை பெரும் தகுதியை நாம் இழப்போம்.

மாநாடு நடக்க விடாமல் தடு என இந்தியாவை கேட்பது அழுத்தமா இல்லை, போகாம இருப்பானு சொல்லுவது அழுத்தமா?

வெற்றி பெறக் கூடிய கோரிக்கைனு ஒன்றை நீங்கள் தூக்கிப் பிடிக்கும் போதே தெரிகிறது... யார் அரசிடம் நெருக்கமாக உள்ளார்கள் என்பது.

டேஸோ கேட்கும் பொது வாக்கெடுப்பு கோரிக்கை என்பது, காங்கிரஸ் அரசு இந்தியாவில் 60ஆண்டாக வறுமையை ஒழிக்கும் செயல் போன்றது.. அதை வைத்து அரசியல் தான் செய்வார்கள்.

இன்றைய பிரச்னை பற்றி நான் விளக்கி உள்ளேன். இதற்கு பதில் சொல்லுங்கள்.. உங்களின் கடேசி மூன்று கேள்விகளுக்கு பிற தோழர்கள் பதில் சொல்வார்கள்.
Sankar
கடைசி வரைக்கும் 'திமுக கோரிக்கையையே நீங்களும் வழிமொழிவது' ஏன் அப்படின்னு கடைசி வரைக்கும் சொல்லலியே அப்பு?
குமரன்
தமிழீழப் பிரச்சினை பற்றி மட்டும் தங்கள் நடவடிக்கைகளை சுருக்கிக் கொண்டு, தங்களுக்குள் மோதிக் கொண்டிருக்கும் இயக்கங்கள் எப்பொழுதுதான் தமிழ் நாட்டு மக்களைப் பற்றிச் சிந்திக்கும்? தமிழ் நாட்டில் வாழும் மக்களுக்குப் பிரச்சினைகளே இல்லையா? அல்லது அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு மக்கள் இங்கு சுகமாக வாழ்கிறார்களா? விலைவாசி ஏற்றம், வேலையில்லாத்திண்டாட்டம், மருத்துவ வசதியின்மை, சிறந்த கல்வி கிடைக்காமை, சுற்றுச்சூழல் அழிவு, இன்ன பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டனவா? உங்கள் பார்வை எப்பொழுது இவர்கள் பக்கம் திரும்பும்?
Muthu
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு துட்டுக்கு எட்டுன்னானாம். அதுபோல், திமுகவோடு கோரிக்கைகளில் உடன்படுவதும், திமுகவை மாற்று இயக்கங்களின் மத்தியில் அழைத்து வருவதும் குறித்து கேள்வி கேட்டால், வேறு ஏதெதோ பேசி இருக்கின்றீர்களே தவிர அந்தக் கேள்விகளை அப்படியே விட்டுவிட்டீர்கள். தேர்வில் சில கேள்விகளை சாய்சில் விடுவது போல், தியாகுவின் முதல் கோரிக்கையை சாய்சில் விட்டது போல், இப்பொழுதும் அந்தக் கேள்விகளை சாய்சில் விட்டுவிட்டீர்களா?
observer
மே 17 இயக்கம் எந்த அடிப்படையில் அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கிறது என்பதை 2012 மார்ச் மாதத்திலேயே கீற்று தளத்திலேயே கட்டுரை வெளியிட்டுள்ளது. அதனை படித்தால், மே 17ன் நிலைப்பாடு தெரியும். ஆனால் தமிழ்நாடு மக்கள் கட்சியின் அமெரிக்க தீர்மான நிலைப்பாடு குறித்து கேள்வி எழுகின்றது. திமுக அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து வள்ளுவர் கோட்டத்தில் இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் நடத்தியது. பிறகு அப்படியே பல்டி அடித்து தீர்மானத்தில் திருத்தங்கள் கோரியது. தமிழ்நாடு மக்க்ள் கட்சியும் மாணவர் போராட்டங்கள் தொடங்கிய பின்பு, வருமான் வரி அலுவலகத்தை முற்றுகை இட்டு அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கக்கோரியது. பின்பு, திடீரென பல்டி அடித்து அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்தது. 2 பல்டி நேஷனல் கம்பெனிகளுக்கும் இன்னொரு ஒற்றுமை உண்டு. லயோலா மாணவர்கள் போராட்டம் தொடங்கிய முதல் நாள் வெள்ளியன்று அங்கு வந்த தமிழ்நாடு மக்க்ள் கட்சியின் குழு உண்ணாவிரத்தை கைவிட சொல்லி குழப்பம் விளைவித்தது. அடுத்த நாள் சனியன்று கருணாநிதியும் உண்ணாவிரதத்தை கைவிட சொல்லி அறிக்கை வெளியிட்டார். மாணவர்கள் உண்ணாவிரதம் இருப்பதால் இரண்டு பல்டி நேஷனல் கம்பெனிகளுக்கும் என்ன சிக்கல்? அமெரிக்க தீர்மானத்தை முதலில் ஆதரித்துவிட்டு, அனைவரும் எதிர்க்கின்றனர் என்று தெரிந்தவுடன் பல்டி அடிக்கும் த.ம.க. விற்கு இருக்கும் அடிப்படை புரிதல் இவ்வளவுதானா? ஒரு கோரிக்கையினை கூட ஒழுங்காக சிந்திக்கும் அளவிற்கு புரிதல் இல்லாதவர்களா அல்ல்து திமுகவின் அல்லக்கைகளா இந்த த.ம.க.?
vinothkumar vp
தாமதத்துக்கு மன்னிக்கவும்.... தோழர் கார்த்திக் மாக்ஸியம் பற்றி பேசுவது மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை புரியாமலே பேசுவது சிறிது வருத்தமளிக்கிறது. விடயத்துக்கு வருவோம். த.ம.க. வின் காமன்வெல்த் தொடர்பான கோரிக்கைகள். 1.இனக்கொலை இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பைலிருந்து வெளியேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். 2.இனக்கொலை இலங்கையில் மாநாடு நடத்தப்படக் கூடாது. 3.மீறி நடந்தால் இந்தியா பங்கேற்க கூடாது. என்பவைதான். இதே 3 விடயங்களும்தான் தோழர் தியாகுவின் பட்டினி போராட்டத்தில் வைக்கப்பட்டது. போராட்டம் ஆரம்பிக்கும் 2 மாதங்களுக்கு முன்பே துண்டறிக்கைகள் வினியோகிக்கப்பட்டது. இந்த 3 கோரிக்கைகளில் மே17 க்கு உடன்பாடு இல்லையெனில் இதை ஏன் முன்னறே அறிவிக்கவில்லை. 8ஆம் நாள் பட்டினி போராட்டத்தில் கலந்துக்கொண்டது ஏன்? அப்போதே கூறாதது ஏன்?.. 11ஆம் தேதி அனைத்து கட்சி ஆர்பாட்டத்தில் பேசும்போதும் இதை கூற வில்லையே ஏன். அப்போது தெரியாத சமரச கோரிக்கை பற்றிய ஞானம் திடீரென உதயமானது எப்படி? {இது சமரசம கோரிக்கையா இல்லையா என்பது வேறு விடயம் }
vinothkumar vp
அடுத்த விடயம் நாங்களும் இந்தியாவுக்கு தான் கோரிக்கையை வைக்கிறோம் என்கிறீர்கள். மகிழ்ச்சி தான். ஆனால் மார்க்& ஸ்பென்ஸரை அல்லவா முற்றுகையிடுகிறீர்கள். கொக்ககோலா பாட்டிலிடமும், கேஃப்சி கோழியிடமும் வீர சமர் புரிவதுதான் இந்திர அரசுக்கு நெருக்கடி ஏர்ப்படுத்துமா.... இதுவரை காம்ன்வெல்த் தொடர்பாக இந்திய அரசுக்கு எதிராக அவர்களை மையப்படுத்தி ஒரு போராட்டம் நடத்தி இருக்கிறதா மே17.. இதில் சமரசமற்ற போர்... நாங்கள் டெசோ... என வீர வசன‌ம் வேறு..
//...அமெரிக்க வணிக நிறுவனங்களை எதிர்ப்பது அவர்களின் ளொப்ப்ய்யை உடைப்பது போன்றது என்பது புரியவில்லையா?..// கொக்க கோலா எதிர்த்தால் அந்த இடத்துக்கு பெப்சி வரும்.. கேஃப்சி எதிர்த்தால் மெக் டொனால்ட் வரும்... ஏர்டெல் எதிர்க்க ஏர்செல் வரும்... ஒரு முதலாளியை எதிர்ப்பது அடுத்தவனுக்குதான் ஆதாயம். முதலாளித்துவ அரச கட்டமைப்பை உடைப்பதுதான் மர்க்சியம்... தோழரே...
Guest
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்றூ யார் சொன்னாலும் அது டெசோ குரூப் என்று நினைத்துக் கொள்வீரோ ?
Sankar
இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றம் என்று 2011 ல் கருத்து நிலவியது. மே 17 இயக்கம் அதனை இனப்படுகொலை என்றே கூறவென்டும் என்று கூறியது. சோ கால்ட் புரட்சியாளர்கள் மே 17 இயக்கத்தை ராஜபக்சேவின் கைக்கூலி என்று கூறினார்கள். தற்பொழுது இனப்படுகொலை என்னும் கருத்தின் நியாயம் அறிந்து, அனைவரும் இனப்படுகொலை என்றே கூறுகின்றனர். 2012 ல் அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக வும் அவர்களது கைக்கூலிகளும் கூறினர். அமெரிக்கத் தீர்மானம் எதிர்க்கப்பட வேண்டியது; பொது வாக்கெடுப்பு, சர்வதேச விசாரணைகளை உள்ளடக்கிய தீர்மானமே நாம் வேண்டுவது என்று மே 17, 2012 ல் கூறியது. அப்பொழுதும், ராஜபக்செ எதிர்க்கும் தீர்மானத்தை மே 17ம் எதிர்க்கிறது; இவர்கள் ராஜபக்சேவின் ஆட்கள் என்று இதே 'புரட்சியாளர்கள்' 2012 லும் கூறினார்கள். ஆனால் 2013 ல் அமெரிக்கத் தீர்மானத்தை அனைவ்ரும் எதிர்த்தனர். தற்பொழுது, இந்தியப் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துக் கொள்ளக் கூடாது என்று டெசோ மக்கள் கட்சி கூறுகின்றது. மாநாடே இலங்கையில் நடக்கக் கூடாது என்று மே 17 கூறுகின்றது. இப்பொழுதும் மே 17 மீது அதே அவதூறு வைக்கப்படுகின்றது. வழக்கம்போல் இன்னும் சில மாதங்கள் கழித்து, மே 17 வைக்கும் கோரிக்கையின் நியாயம் இவர்களுக்கு புரியக்கூடும். இன்னும் வளரணும் தம்பிகளா!
computer care
We are not just a local politician to oppose india..we are international politicians..only america canada..china..by panguni 16 iyakkam..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.