இந்தியா வல்லரசாகிக் கொண்டிருக்கிறது(!) பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சி என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நம் நாட்டின் பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்களின் (15 - 16 வயது) வாசித்தறியும் திறன், கணித அறிவு மற்றும் அறிவியல் அறிவு உலக நாடுகளோடு ஒப்பிடும்போது கடைசிக்கு முந்திய இடத்தில் இருக்கிறது என்ற ஒரு புள்ளிவிவரம் நம் அனைவரின் முகத்திலும் ஓங்கி அறைந்து பெரிய மாற்றங்களின் தேவையை உணர்த்தி நிற்கிறது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் (OECD - Organisation for Economic Cooperation and Development) சார்பில் பன்னாட்டு மாணவர் மதிப்பீட்டுத் திட்டத்தின் (PISA - Programme for International Students Assessment) அடிப்படையில் 15 - 16 வயதுக்குட்பட்ட (10-வது வகுப்பு, அடிப்படைக் கல்வி பெற்றிருக்கக்கூடியவர்கள்) பன்னாட்டு மாணவர்கள் 1) வாசித்தறியும் திறன், 2) கணித அறிவு மற்றும் 3) அறிவியல் அறிவு ஆகியவற்றில் எந்தளவுக்குத் தேறியிருக்கிறார்கள் என்பது மதிப்பீடு செய்யப்பட்டது. வளர்ச்சியடைந்த பல உலக நாடுகளை உள்ளடக்கிய இந்த OECD அமைப்பு தங்கள் நாடுகளில் உள்ள மாணவர்களின் கல்வித்தரத்தை அறிந்துகொள்ளவும் அவற்றை மேம்படுத்த எவ்வாறு முனையலாம் என்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டதே இந்த PISA மதிப்பீடு. மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த மதிப்பீட்டில் விருப்பப்படும் நாடுகள் கலந்து கொள்ளலாம். கடந்த 2011-ல் நடந்த மதிப்பீட்டில் முதன்முறையாக கலந்துகொண்ட இந்தியாவையும் சேர்த்து மொத்தம் 74 நாடுகள் கலந்துகொண்டன.
 
இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக தமிழ்நாட்டிலும் இமாச்சல பிரதேசத்திலும் உள்ள 400 பள்ளிகளில் பயிலும் சுமார் 16,000 மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். இந்த மதிப்பீட்டின்படி உருப்போட்டுப் படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், ஒரு பகுதியை வாசித்து அதை தெளிவாக அறிந்து கொண்டு அதைச் சார்ந்த கருத்துக்களையும் சேர்த்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒரு மாணவர் எப்படி புரிய வைக்கிறார் என்பதன் அடிப்படையிலேயே கேள்விகள் அமைந்திருந்தன. மதிப்பீட்டுப் பகுதிகளும் கேள்விகளும் தாய் மொழி (தமிழ் மற்றும் ஹிந்தி) மற்றும் ஆங்கிலத்திலும் இருந்தன. இதைச் சோதிக்க 8 மட்டங்களில் (1a> 1b> 2> 3> 4> 5> 6> 7) கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 1a முதல் 7 வரை செல்ல செல்ல கேள்விகள் கடினமாகிக் கொண்டே செல்லும்; கூடுதலான சிந்தனாசக்தி தேவைப்படும்.

ஒரு மாணவர் தான் வாசித்தறிந்த கருத்துக்களை மற்றவரிடம் ஓரளவாவது விளக்கிச் சொல்ல அவர் 2வது மட்டம் வரைக்கும் தேர்ச்சியாகியிருக்க வேண்டும். இந்த அடிப்படைத் தகுதியை தமிழ்நாட்டு மாணவர்களில் வெறும் 17% மட்டுமே (72வது இடம்) பெற்றிருந்தார்கள். தமிழ்நாட்டிற்குக் கீழே இமாச்சலப் பிரதேசமும் கிர்கிஸ்தானும் இருக்கின்றன. ஒரு மாணவரால் ஒரு பகுதியைப் புரிந்து கொள்ளமுடியாமலேயே இருக்கும்போது பின்வரும் கணிதம் மற்றும் அறிவியல் கேள்விகளுக்குப் பதில் கொடுக்க முடியாது என்ற உண்மை பின்வரும் பத்திகளில் பிரதிபலித்திருக்கிறது என்பதைப் பார்க்கத்தான் போகிறோம்.

அன்றாட வாழ்வில் எவ்வாறு ஏட்டில் எழுதிவைத்து விடைகாணும் அளவில் நேரடியாக பிரச்சினைகள் வராதோ அதேபோல்தான் கணித அறிவு சோதிக்கப்படும் பகுதியிலும் நேரடியாக எந்தக் கேள்விகளும் கேட்கப்படவில்லை. மாறாக ஒரு சிக்கலுடன் கூடிய ஒரு சூழ்நிலை கொடுக்கப்படும். இதை நன்கு உள்வாங்கிக்கொண்டு இந்தச் சூழ்நிலைக்குத் தகுந்த கணிதப்பகுதி எது என்று கண்டறிந்து, அதற்குத் தீர்வு கண்டு, அந்தத் தீர்வைப் பயன்படுத்தி எப்படிச் சிக்கலைத் தீர்க்கலாம் என்று அணுக வேண்டும். இதிலும் ஒரு மாணவர் தன் அன்றாட வாழ்வில் வரும் கணிதச் சிக்கல்களுக்கு தீர்வு காண அடிப்படை நிலையான 2வது மட்டம் வரைக்கும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தத் தகுதியைப் பெற்றிருக்கும் தமிழக மாணவர்கள் வெறும் 15% மட்டுமே (72வது இடம்). 

கிடைத்திருக்கும் தகவல்களைப் பயன்படுத்தி கணித உதவியுடன் முரண்பாடில்லாமல் ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்திச் சிந்திப்பதே அறிவியல் அறிவாகும். அறிவியல் அறிவுப் பகுதியிலும் அன்றாடம் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்தியே கேள்விகள் அமைந்திருந்தன. இதிலும் வெறும் 15% தமிழக மாணவர்களே அடிப்படைத் தகுதியாகிய 2வது மட்டம் வரைக்கும் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். 60% தமிழக மாணவர்களால் 1வது மட்டத்தையே தாண்ட முடியவில்லை. இதிலும் தமிழகத்தை அடுத்து கிர்கிஸ்தானும் (73வது இடம்) இமாச்சலப் பிரதேசமும் (74வது இடம் கடைசி) இடம்பிடித்திருந்தன.

இந்த மூன்று தேர்விலும் முதலிடம் பிடித்த நாடு நம் எதிர்பார்ப்புகளையும் மீறி சீனாவாக இருக்கிறது. வாசித்தறியும் திறனில் சீனாவை அடுத்து கொரியாவும், கணித அறிவில் சீனாவை அடுத்து சிங்கப்பூரும், அறிவியல் அறிவில் சீனாவை அடுத்து பின்லாந்தும் இடம்பிடித்திருக்கின்றன. மொத்தமாகச் சேர்த்து பார்க்கும்போது கிடைக்கும் ஒரு வருந்தத்தக்க விடயம் என்னவென்றால் சீனாவில் கடைக்கோடி மாணவன் தமிழகத்தின் தலைசிறந்த மாணவனைவிட 3 மடங்கு அறிவுள்ளவனாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறான். ஆங்கிலத்தையே தாய்மொழியாகக் கொண்டவையும் பெரும்பாலான இந்திய மக்களால் (அறிவு தாட்சண்யமின்றி) 'ஆ"வென வாய்பொளந்து அண்ணாந்தே பார்க்கப்படும் நாடுகளான இங்கிலாந்தும் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் வரிசைப்பட்டியலில் முறையே 25 மற்றும் 15வது இடத்திலும் (வாசித்திறியும் திறன்), 28 மற்றும் 31வது இடத்திலும் (கணித அறிவு), 16 மற்றும் 23வது இடத்திலேயும் (அறிவியல் அறிவு) இருக்கிறார்கள்.

சிங்கப்பூரைத் தவிர அனைத்திலும் முதல் 5 இடங்களை ஆங்கிலத்தைத் தாய்மொழியாகப் பெறாத பின்லாந்து, கொரியா போன்ற நாடுகளே பெற்றுள்ளன. சிங்கப்பூரில் ஆங்கிலவழிக் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. தாய்மொழி வழியிலும் அல்லாமல் ஆங்கில வழியிலும் அல்லாமல் நாம் ரெண்டுங்கெட்டான்களாகவே இருக்கிறோம் என்ற உண்மை உரக்கச் சொல்லப்பட்டிருக்கிறது. இதை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருந்தால் நம் கல்வி நிறுவனங்களிலிருந்து சிந்தனையாளர்கள் உருவாகமாட்டார்கள் என்பது திண்ணம்.

PISA மேலும் பல தகவல்களையும் கொடுத்துள்ளது. அவையென்னவென்றால்

1) பெற்றோர்களின் பொருளாதாரத்தைக் கணக்கிலெடுத்துக்கொண்டபின், தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் இடையே பெரிய வித்தியாசமில்லை

2) மாணவர்களின் பள்ளிப்பருவ துவக்க நாட்களில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்ட பெற்றோர்களையுடைய மாணவர்கள் கணிசமான தேர்ச்சியை பெற்றிருக்கிறார்கள்

3) மாணவர்களுக்கு கூடவேயிருந்து வாசிக்கக் கற்றுக்கொடுத்த பெற்றோர்களையுடைய மாணவர்கள், ஏழைகளாயிருந்தாலும், நல்ல தேர்ச்சியை பெற்றிருக்கிறார்கள்

4) பெற்றோரோடு அந்நியோன்யமாக பழகும் மாணவர்களும் நல்லத் தேர்ச்சியைப் பெற்றிருக்கிறார்கள்

5) மகிழ்ச்சிக்காக ஆர்வத்தோடு தினமும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நல்ல தேர்ச்சியை பெற்றிருக்கிறார்கள் (பொதுவாக பெண்களும் வசதிவாய்ப்புகளுள்ள ஆண்களும் மகிழ்ச்சிக்காக புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களாயிருக்கிறார்கள்)

6) பள்ளிகளைப் பொறுத்தவரை, வெளிப்படைத்தன்மை கொண்ட, கற்பிப்பதிலும் மாணவனை மதிப்பீடு செய்வதிலும் சுய அதிகாரம் கொண்ட பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நல்ல தேர்ச்சியைப் பெற்றிருக்கிறார்கள்.

'இந்தியாவின் சூழ்நிலைகளை உள்வாங்கிக்கொள்ளாமல் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. எந்த வகையான பள்ளிகளை மாதிரிகளாக எடுத்துக்கொண்டார்கள் என்ற முழுவிவரம் தெரியவில்லை. அடுத்த மதிப்பீட்டில் (2013-ல்) கலந்துகொள்ளப் போவதில்லை" என்பதுதான் இதற்கு எதிர்வினையாக அரசு தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. மேலும் சிலர் இந்திய மாணவர்களின் திறனை வெளிநாட்டு அமைப்புகள் மதிப்பீடு செய்து கொள்ளமுடியாது என்றும் எதிர்வினை புரிந்துள்ளனர். இந்த கருத்துக்கள், கெட்ட செய்தியை தூதாகக் கொண்டு வந்த புறாவை வறட்டிச் சாப்பிடுவதுற்கொத்ததும், துக்க செய்தி கொண்டு வந்த தபால் காரரை அடித்து விரட்டுவதற்கும் சமமானது. இதை மேற்கத்தைய, கிழக்கத்தைய நாடுகளுக்கிடையேயான வேறுபாடாகக் கருத வாய்ப்பில்லை ஏனெனில் ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர்த்த பெரும்பாலான நாடுகள் இந்த மதிப்பீட்டில் கலந்துகொண்டிருக்கின்றன. சரி, PISA அறிக்கையை வெளிநாட்டு மதிப்பீடு என்று புறந்தள்ளினாலும் நம்முடைய நாட்டில் நடத்தப்படும் ASER (வருடாந்திர கிராமப்புறக் கல்வித்தகுநிலை அறிக்கை - 2012) அறிக்கையை எளிதாக நிராகரித்துவிட முடியாது. அந்த அறிக்கையின் சாராம்சம் என்னவெனில்,

1) 5வது வகுப்பு படிக்கும் பாதி பேர்தான் 3வது வகுப்பில் கற்றுக் கொடுத்தப் பாடத்தை வாசிக்கமுடிந்தது

2) 5வது வகுப்பில் படிக்கும் பாதி பேர்தான் கடன் வாங்கிக் கழிக்கும் கணிதத்திறனைப் பெற்றிருந்தனர்

3) 5வது வகுப்பில் படிக்கும் கால்வாசி பேர்தான் வகுத்தல் கணக்கைத் தெரிந்திருந்தனர்.

மேலும் கடந்த ஆண்டுகளை வைத்துப் பார்க்கும்போது நிலைமை மோசமாகிக்கொண்டே வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கல்வியறிவு பெறுவது ஒவ்வொரு இந்தியனின் உரிமை என சொல்லப்படும் இந்நாட்களில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு மாணவர்கள் தங்களின் ஆரம்பக்கல்வி உரிமைக்காகக் கட்டணம் (பெற்றோரின் தகுதியினடிப்படையில்) செலுத்துகிறார்கள் என்ற வருத்தமான செய்தியையும் அவ்வறிக்கைத் தாங்கிவருகிறது. இந்த விழுக்காட்டின் அளவு வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் தெரிவிக்கிறது. இவ்வாறு கட்டணம் செலுத்தியும் தரமான கல்வி மாணவர்களுக்குக் கிடைக்காததை, கிராமம் கிராமமாகத் தங்கள் கடைகளைத் திறந்திருக்கும் கல்வி வள்ளல்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் செய்யும் துரோகமாகவே பார்க்கவேண்டியிருக்கிறது.

நம்முடைய இந்த மோசமான நிலையை நேர்மறையாக அணுகி, இதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்று அலசி ஆராய்ந்து அதைச் சரிசெய்து நம் கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்வதே இப்போதைக்கு நம் முன் இருக்கும் அவசரத் தேவை. இல்லையென்றால் முதல் கோணல் முற்றும் கோணலாகிப் போகும். குறிப்பாக எந்த மொழியில் கல்விக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும், அரசின் பங்கு, பெற்றோர் - மாணவர் உறவின் முக்கியத்துவம் போன்றவை இப்போது முன்னிறுத்தப்பட்டு தீர்வு காணப்படவேண்டிய தலையாய கேள்விகள். அந்த ஒரே நோக்கத்திற்காகத்தான் இந்த மதிப்பீட்டையே OECD நாடுகள் செய்கின்றன, எந்த ஒரு உண்மையையும் இப்படியாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்.

- பா.மொர்தெகாய் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

12 comments

12
சாணக்கியன்
//// நம்முடைய இந்த மோசமான நிலையை நேர்மறையாக அணுகி, இதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்று அலசி ஆராய்ந்து அதைச் சரிசெய்து நம் கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்வதே /// ------- 80 கோடி அரை நிர்வாணப்பக்கிரிகளை இதற்கு மேலும் இந்தியா எனும் மாட்டுக்கொட்டகையில் அடைத்துவைத்தால், ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடமென்று ஏழு விதமான உள்நாட்டுக்கலவரங்கள் வெடிக்கும். சுருட்டிய பணத்தையெல்லாம் பஞ்சப்பரதேசிகள் சூறையாடிவிடுவார்கள். லிபியா அதிபர் கடாபியை தெருவில் அடித்து சாகடித்தது போல் இங்கேயிருக்கும் கடாபிக்களுக்கும் நடக்கும். அதற்கு முன்னால், தமிழ்த்தேசத்தை உருவாக்கி ஒதுங்கிவிடுதல் நலம்.
Periyasamy
ஆங்கில வழியோ தமிழ் வழியோ எதுவாக இருந்தாலும் பாடத்திட்டம் தரமானதாகவும் கற்பிக்கும் ஆசிரியர்கள் தரமானவர்களாகவும் பணிப்பண்பாடு கொண்டவர்களாகவும் இருந்தால் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். மற்ற குறைகள் பாதிப்பை ஏற்படுத்தா. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழகத்தில் இரண்டுமே மோசம். வாழும் வள்ளுவத்துடைய ஆட்சியில் அன்பழகன் என்னும் அரசியல்வாதி கல்வி அமைச்சராக இருந்த போது மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி என்று சொல்லி வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் வேலை கொடுக்கப்பட்டது. அதற்கு "சமூக நீதி" என்று சால்ஜாப்பு சொல்லப்பட்டது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் சமுதாயத்தில் பின் தங்கியவர்களின் பிள்ளைகள் தான். அவர்களுக்கு தரமான கல்வியையும் தரமான ஆசிரியர்களையும் உறுதிப்படுத்துவது "சமூக நீதி" இல்லையா? ”சமுதாய நலன்” ”சமூக நீதி” என்ற பெயரில் பல லட்சம் ஏழை மாணவர்களின் எதிர்காலம் இப்படி தான் பல வகைகளில் பாழாக்கப்படுகிறது. ஆட்சியாளர்களுக்கு ஏழை மாணவர்களின் நலன் மற்றும் அறிவு வளர்ச்சி ஆகியன சமுதாய நலனாகவும் சமூக நீதியாகவும் தெரியாமல் போனது விந்தை தான். மத்திய அரசின் கீழ் வரும் சி.பி.எஸ்.சி பள்ளிப்பாடத்திட்டம் தரமான பாடத்திட்டம். இந்த பாடத்திட்டதுக்கு உலகளவில் அங்கீகாரம் உண்டு. இந்த பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட என்.சி.இ.ஆர்.ற்றி பாடப்புத்தகங்கள் சர்வதேச தரம் கொண்டவை. தில்லியில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளிகளில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் தான் உள்ளது. ஆனால் ஹிந்தி மீடியத்தில். மத்திய அரசின் கீழ் வரும் பள்ளிக்கூடங்களுக்கு (குறிப்பாக கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளிகள், நவோதய வித்யாலயா ஆகியவை) ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு தரக்கட்டுப்பாடு மிகவும் கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. திராவிட கட்சிகளின் தலைவர்களின் வழித்தோன்றல்கள் உயர்தர ஆங்கில மீடியம் பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். தமிழ் வழிக்கல்வி எல்லாம் ஊருக்கு தான் உபதேசம். ஆங்கிலம் சரியாக தெரியாததால் பெரும்பாலான தமிழக மக்கள் கிணற்று தவளைகளாக வெளியுலகம் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். தமிழக எல்லைக்கு அப்பால் உள்ள உலக நிலவரம் பற்றி பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவுமே தெரியாது. அரசியல்வாதிகள் தமிழ் நாட்டை எளிதாக சூறையாடுவதற்கு இது தோதான சூழ்நிலையாக இருந்து வருகிறது. திராவிட இயக்கத்தால் தமிழர்கள் வளர்ந்தார்களா அல்லது பார்ப்பனர்கள் தேய்ந்தார்களா என்பது மிகப்பெரிய விவாதத்துக்குரிய விடயம். இப்போது தமிழகத்தில் இருக்கும் அறிவுஜீவிகள் பெரும்பாலும் பார்ப்பன அல்லது கம்யூனிச பின்புலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு சில அறிவுஜீவிகள் மலையாள பின்புலம் கொண்டவர்கள். தமிழ் பின்புலம் கொண்ட அறிவுஜீவிகள் தமிழ் நாட்டிலேயே மிகவும் குறைவு. இதற்கு காரணம் தமிழகம் கல்வித்துறையில் தேங்கிய குட்டையாக இருப்பது தான். இங்கு இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் திராவிட அரசியல்வாதிகளின் எடுபிடிகளும் கைத்தடிகளும் தான் நிறைந்திருக்கிறார்கள். அதனால் தான் இங்கு கல்வி சூழ்நிலை (பள்ளிக்கல்வி ஆனாலும் உயர்கல்வி ஆனாலும்) தரமற்றதாகவே இருக்கிறது. இந்த தரமற்ற கல்வி சூழ்நிலையின் காரணமாக இந்திய அளவிலும் உலகளவிலும் போட்டி போடக்கூடிய மாணவர்களும் அறிஞர்களும் தமிழகத்தில் உருவாகவே இல்லை. தேசிய அளவிலான IIT, IIM, AIIMS போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்ப் பின்புலம் கொண்ட மாணவர்கள் மிகவும் சொற்பம். IAS அதிகாரி போன்ற பதவிகளிலும் இதே நிலை தான். மத்திய அரசு நிறுவனங்களில் (அவை தமிழகத்தில் இருந்தாலும்) இதே லட்சணம் தான். இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தார்களாம்!. மருத்துவ மற்றும் இஞ்சினியரிங் பட்டதாரிகள் வேண்டுமானால் வதவதவென்று கறிக்கோழிகளை போல் உருவாக்கப்பட்டு வெளியே வருகிறார்கள். இந்த இட ஒதுக்கீட்டு அரசியல் காரணமாக துறை சார்ந்த நுண்ணறிவு, அந்த துறையில் வேலை செய்ய தேவைப்படும் தகுதி ஆகியன பின் தள்ளப்பட்டு ””என் சாதியினர் இத்தனை சதவீதம் இருக்கிறார்கள். அதனால் இத்தனை சதவீதம் ஒதுக்கீடு செய்”” என்று வெட்கமே இல்லாமல் கேட்கும் நிலை தான் தமிழகத்தில் உள்ளது. உலக அளவில் பேர் சொல்லும்படியான ஒரு அறிஞர் கூட இந்த இடஒதுக்கீட்டு அரசியலால் உருவாகவில்லை. இன்றைய உலகம் அறிவு சார்ந்த சமூகமாக மாறிவிட்டது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் மேற்கொண்ட கண்டுபிடிப்புகளை விட பல மடங்கு அதிக கண்டுபிடிப்புகளை கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் மனித இனம் செய்துள்ளது. இன்றைய உலகில் அறிவு சார்ந்த துறைகளுக்கு பங்களிப்பு செய்யும் சமூகங்கள் மட்டும் புகழ் பெற முடியும். பிழைத்திருக்கவும் தழைக்கவும் முடியும். உலக அளவில் யூதர்கள் இத்தகைய மேம்பட்ட சமூகம் ஆவார்கள். இந்திய அளவில் அநாதி காலம் தொட்டு இன்றைக்கு வரை பார்ப்பனர்கள் தான் அறிவு சார்ந்த துறைகளுக்கு பங்களிப்பு செய்து வருகிறார்கள் (அதுவும் மற்ற சாதிகளை முடிந்த வரை ஓரம் கட்டிவிட்டு!). ஓரளவுக்கு இப்போது உயர் சாதி வட இந்தியர்களும் மலையாளிகளும் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழர்கள்! தமிழகத்தின் மாநில அரசு உயர் கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை பார்த்தாலே லட்சணம் தெரிந்துவிடும். இட ஒதுக்கீட்டின் மூலமோ அல்லது லஞ்ச லாவன்யத்தின் மூலமோ பதவிக்கு வருவது. பின்னர் கணக்கு வழக்கில்லாமல் ஊழலிலும் அதிகார துஷ்பிரயோகத்திலும் திளைப்பது. தான் சார்ந்த அறிவுத்துறைக்கு பங்களிப்பு செய்யவேண்டும் என முயற்சி செய்பவர்கள் வெகு சிலர் தான்.
ஷாலி
சீனா மாணவர்கள் முதல் இடத்தில் இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.சீனாவின் தேசிய மொழியான மாண்டரின் 40% மக்களுக்குத் தெரியாது.அவர்கள் வட்டார தாய் மொழியிலேயே முழுவதும் பயிலுகிறார்கள். புதுப்புது பொருள்களை உற்பத்தி செய்து உலக நாடுகள் முழுவதும் மலிவான விலையில் ஏற்றுமதி செய்கிறார்கள். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு போர் துளையிடும் இயந்திரம் கூட நாம் சீனாக்காரனிடம் வாங்கவேண்டிய நிலைமை.தாய்ப்பால் குடித்து வளர்ந்த சீனப்பிள்ளைகளிடம் பரங்கியர் பால் குடித்து வளர்ந்த தமிழ் பிள்ளை எப்படி போட்டி போடா முடியும்?உருப்போட்டு,உருப்போட்டு உருப்படாமல் போன கல்வியில் என்ன சாதிக்க முடியும்.நம்மை ஆளுவதற்க்கே தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க தெரியாமல் சினிமா கொட்டகையில் தேடிப் பொறுக்குகிறோம்.வசனத்தை உருப்போட்டு நடிக்கிறவர்கள் நாடாளும்போது என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது.மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி.ஆகவே சர்ச் பார்க் கல்வி சகலருக்கும் கிடைக்க சட்டம் போடப்படுகிறது.தாய் மொழிக் கல்வியை இனிமேல் பட்ட மேற்ப்படிப்புகளில் சொல்லிக்கொடுப்பார்கள்.பொதுவாக இந்தியக் கல்வியின் தரம் என்றும் நிரந்தரம்.உயர்நிலைக்கு போவதற்கு வாய்ப்பு இல்லை.நமது குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி போகின்ற இடமெல்லாம் அழுது வடிக்கிற செய்தி இதுதான்.உலகத்தின் தலைசிறந்த பல்கலைகழகங்களில் முதல் 200 ல் ஒன்றுகூட இந்தியாவில் இல்லை. நாம் ஆய்..ஊய்..என்று அலட்டுகிற ஐஐடி,என்ஐடி எல்லாம் காமெடி பீஸாக போய்விட்டது.பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய கண்டுபிடிப்புகளோ ஆய்வு கட்டுரைகளோ எதுவும் இல்லை.இவையெல்லாம் நவீன குருகுல மடங்களாக மாற்றப்பட்டு விட்டன. நம்ம ஐஐடிகளே அசிங்கப்பட்டு நிற்கும்போது பத்தாவது படிக்கும் பையனிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? இனி கல்விக் கடவுள் சரஸ்வதி தான் இவர்கள் கண்ணை திறக்கனும். சரஸ்வதி சபதம் பாட்டு “கல்வியா? செல்வமா? வீரமா? இம்மூன்றும் இப்ப சீனாக்காரனிடம் தான் இருக்கிற மாதிரி தெரிகிறது.
Periyasamy
அப்ப தமிழ் மீடியத்தில் கடந்த அறுபது ஆண்டுகளாக படித்த பல லட்சக்கணக்கான மாணவர்கள் என்ன பெரியதாக கிழித்துவிட்டார்கள். ஆங்கில வழி கல்வியை குறை சொல்ல? சிங்கப்பூரில் எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் தான் கற்பிக்கிறார்கள். அவர்களின் அறிவியல் முன்னேறவில்லையா? ஆடத்தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்!. இன்றைக்கு நோபெல் பரிசு வாங்கிய வெங்கடராமன் ராமகிருஷ்னன் ஆங்கில வழியில் தான் பள்ளிப்படிப்பையே கற்றார். அவர் சாதிக்கவில்லையா?
V.Ramasami
பத்தாம் வகுப்பிற்கான வாசித்தல், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான 2011, மற் றும் முந்தைய ஆண்டுகளுக்கான கேள்விகள் எங்கு கிடைக்கும்? அவற்றைப் பலரும் அறியச்செய்தால், இனியாவது ஆசியர்கள், முழுக்கவனத்துடன் மாணாக்கர்களைத் தேற்றுவரே
P. Morthekai
ASER கேள்விகள்: http://www.asercentre.org/p/50.html PISA கேள்விகள்: http://www.oecd.org/pisa/pisaproducts/pisa2006/41943106.pdf http://www.oecd.org/pisa/pisafaq/#tests_and_questionnaires ஆங்கிலத்தில் மட்டும். தமிழில் கேட்டிருக்கிறேன், வந்தவுடன் தருகிறேன்.
Natarajan
இந்த தேர்வில் இந்தியா சார்பில் சி பீ எஸ் ஈ மாணவர்கள் தான் பங்கேற்றனர். இமச்சலமும் தமிழ் நாடும் கலந்து கொண்டன. மத்திய அரசு தான் இந்த இரண்டு மாநிலங்களைத் தேர்வு செய்தது. இவை இரண்டும் கல்வியில் மிக முன்னேறிய மாநிலம் என்ற கணிப்பில். -௨009 ஆம் ஆண்டு நடந்த பிசா தேர்வில் கணிதத்தில் சீனா 600/600 பெற்றபோது நம் மாணவர்கள் தமிழ்நாடு 351 இமாசலம் 338; அறிவியல் - சீனா 575/600 த நா 348 இமா 331; வாசித்தறிதல் சீனா 556 த நா 325 இமா 317. இடைவெளி மிக அதிகம். நல்ல வேளை 74 நாடுகள் தான் கலந்து கொண்டன. 200 நாடுகளும் கலந்து கொண்டிருந்தால் பெருத்த அவமானமாக இருந்திருக்கும். எத்தனைப் பாடத் திட்டங்கள் எத்தனை ஆங்கில வழிக் கல்வி நிலையங்கள் அப்பப்பா ! நோபல் பரிசுகளைப் பெற்று குவித்து விட்டனர் நம் ஆங்கில வழிக் கல்வி மாணவர்கள். நோபல் பரிசு பெற்ற வெங்கடராமன் ராமகிரிஷ்ணனுக்கு ஐ ஐ டி ல் படிக்க இடம் கிடைக்கவில்லை. வேலூர் சி எம் சி ல் படிக்க இடம் கிடைக்க வில்லை. லண்டன் சென்றார் நோபல் கிடைத்தது. எத்தனைப் பேருக்கு இந்த வாய்ப்பு. அவர் இந்தியாவிலேயே தொடர்ந்திருந்தால் நோபல் கிடைத்திருக்குமா? -- இந்தியாவிலேயே படித்து இந்தியாவிலேயே ஆராய்ச்சி செய்து எத்தனை பேருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது ? மேலும் வெளிநாடு சென்ற இந்தியர்களின் நோபல் பரிசின் எண்ணிக்கை ஒற்றைப் படை எண்ணைத் தாண்டவில்லையே.? தாய் மொழி வழிக் கல்வி ஆங்கில வழிக் கல்வியை விட அறிவூட்டுவது மற்றும் சிந்தனா சக்தியை மேம்படுத்தும்.-தாய் மொழி தமிழோ மராத்தியோ ஒரியாவோ மலையாளமோ கன்னடமோ எதுவாகவும் இருக்கலாம். தமிழ் நாட்டை எடுத்துக் கொள்வோம். அறிவியலில் சிறந்து விளங்கும் சில பேர். 1. அப்துல் கலாம் பள்ளிக் கல்வி தமிழ் வழிக் கற்றவர். 2. மயில்சாமி அண்ணாதுரை (சந்திராயன்) தமிழ் வழிக் கற்றவர். 3 சிவதாணு பிள்ளை - பிரம்மோஸ் - தமிழ் வழிக் கற்றவர். இவர்கள் ஆங்கிலத்தை தேவையான அளவு கற்றுக் கொண்டுள்ளனர். இது போன்று பலர் உள்ளனர் --நோபல் பரிசு பெறவில்லை ஆனாலும் மாணவர்களுக்கு ஒரு ரோல் மாடல் இவர்களே.-. கடந்த ஆண்டு ஐ ஐ டி நுழைவுத் தேர்வில் முதல் மாணவனாக வந்த மாணவன் மராத்தி மொழி வழியாக பள்ளிப் படிப்பை முடித்தவர். ஆங்கிலேயன் இந்தியாவில் கல்வி அறிமுகப் படுத்திய போது பார்ப்பனர்களே கற்று வந்தனர். சர் சி வீ ராமனைத் தவிர யாரும் பெரிதாக சாதிக்கவில்லை. இன்றும் ஒன்றும் இல்லை.-- ஹிட்லரின் ஆரியக் கோட்பாடுகளை தகர்த்தெறிந்தவர்கள் யூதர்கள். நோபல் பரிசுகளில் 40% பெறுகின்றனர். அவர்கள் அறிவுக்கு இணையாக இந்தியாவில் எவரும் இல்லை. நம் கல்வி முறையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே சிறந்த அறிவியலார்களை உருவாக்க முடியும் தற்போது உருப்போடும் மாணவர்களை மட்டுமே உருவாக்கி வருகிறோம்.
Periysamy
யாரோ நான்கு பேர் தமிழ் மீடியத்திலும் படித்து உயர்ந்து விட்டார்களாம். அதை சாக்காக வைத்து தமிழ் மீடிய தண்டங்களை நியாயப்படுத்த வேண்டியதில்லை. சீன மீடியத்திலும் ஹிந்தி மீடியத்திலும் படித்தவர்கள் சாதிப்பதில் வியப்பு இல்லை. ஆனால் தமிழ் மீடியத்தில், அதுவும் அரசு பள்ளியில், அதுவும் இப்போதைய சமச்சீர் கல்வி முறையில் படித்தால் மடிப்பிச்சை தான் எதிர்காலத்தில் எடுக்க வேண்டி வரும். அதுவும் தமிழ்நாட்டில் கிணற்று தவளைகளாக இருந்து கொண்டு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு மடிப்பிச்சை எடுக்க வேண்டியது தான்!. தமிழக மக்கள் விழித்துக்கொண்டால் நல்லது. இந்த சமச்சீர் கல்வி என்பதே சோம்பேறிகளாக இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை மேலும் சோம்பேறிகளாக ஆக்குவதற்கு வாழும் வள்ளுவம், தென்னாட்டு முஜிபுர் ரஹ்மான், தானைத்தலைவர் கொண்டு வந்த திட்டம். இவருடைய பேரன் பேத்திகள் அனைவரும் உலகத்தரமான ஆங்கில வழிக்கல்விக்கூடங்களில் தான் படிக்கிறார்கள். பத்மா சேஷாத்திரி என்னும் தனியார் ஆங்கில மீடிய பள்ளியில் இவர் பேரனுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதால் இவரும் இவர் பிள்ளைகளும் எவ்வளவு ஆதங்கம் அடைந்தார்கள் என்பது தெரியுமா? தங்கள் பிள்ளைகளையும் பேரன் பேத்திகளையும் ஆங்கில வழி பள்ளிகளில் சேர்க்க துடிக்கும் தமிழக அரசியல்வாதிகள் என்ன விவரம் தெரியாத முட்டாள்களா? இப்போதைய ஜெயலலிதா ஆட்சியில் சாதாரண மக்களும் இவர்களின் பிள்ளைகளும் கொஞ்சம் பிழைத்து போகட்டும் என்னும் எண்ணத்தில் இந்த சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை கொஞ்சம் சீர்திருத்தி உள்ளார்கள். ஆங்கில மீடியம் கல்வியை தொடங்கி உள்ளார்கள். கல்வியாளர்கள் என்னும் பெயரில் இவற்றுக்கெதிராக பெரும் கூப்பாடு! இந்தியாவின் ஐ.ஐ.டி க்களும் சி.பி.எஸ்.ஸி உலக தரப்பட்டியலில் இடம் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக உலக அளவிலான போட்டிக்கு கருதப்படக்கூடிய தரம் கொண்டவை. ஆனால் தமிழகத்தின் பள்ளி மற்றும் உயர்கல்வியின் தரம் இவற்றை விட பல மடங்கு மோசமானவை. ஒப்பிடுவதற்கு கூட தகுதி இல்லாதவை. தாய் மொழி மீடிய கல்வியை இந்திய சூழ்நிலை ஐந்தாம் வகுப்பு முடிய கட்டாயப்படுத்தலாம். அதற்கு மேல் அனைத்தும் ஆங்கிலத்தில் தான் கற்று தரப்பட வேண்டும். ஐந்தாம் வகுப்புக்கு மேல் தாய்மொழி ஒரு மொழிப்படமாக இருந்தால் போதும். அப்போது தான் நிறைய தமிழக மாணவர்கள் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் முன்னேற முடியம்.
Natarajan
யாரோ நாலு பேர். யாருக்குமே தெரியாத பேர். பரவாயில்லை. மலையாளத்தில் சொல்வார்கள் மூக்கில்லாதவர்கள் ஊரில் முறி மூக்கன் ராஜா. நான்கு முறி மூக்கன்களாவது உள்ளார்களே. அம்மணமாய் திரிபவர்களில் நான்கு பேருக்காவது கோவணம் உள்ளதே. . சி பீ எஸ் ஈ மாணவர்கள் எழுதிய தேர்வில் ஏன் 73 ஆம் இடமும் 74 ஆம் இடமும் ? .74 நாடுகள் தானே பங்கேற்றன. சி பீ எஸ் ஈ ஏன் முதலிடத்துக்கு வரவில்லை. ஆனால் 150 ஆவது இடத்துக்கு வந்திருப்பார்கள் எப்பொழுது 151 நாடுகள் அந்த தேர்வில் கலந்து கொண்டால். சரி, ஐ ஐ டீக்கு வருவோம். எண்ணிலடங்கா நோபல் பரிசை வருடா வருடம் இந்தியாவுக்கு கொண்டு வருபவர்கள். அடுத்தது உலக பல்கலைகழகங்கள் வரிசை இதோ.-- 1. எம் ஐ டி. 2.ஹார்வர்ட் 3.கேம்ப்ரிடஜ் 222. டில்லி ஐ ஐ டி. 233 ஆவது இடம் மும்பை ஐ ஐ டி.312 ஆவது சென்னை ஐ ஐ டி. ஆசியாவில் முதல் மூன்று இடங்கள் 1 ஆங்காங் 2.சிங்கப்பூர் 3 தென் கொரியா சீயோல் . பிசா தேர்வில் இந்தி மாநிலம் இமாசலமும் கலந்து கொண்டு 73 ஆவது இடத்தைதான் பிடித்தது. இந்த விவாதம் மொழி பற்றியதே அல்ல. இந்தியா முழுவதும் கல்வித்தரம் சொல்லும்படியாக இல்லை.வாந்திக் கல்வி தான்.. கல்விக்கான ஒதுக்கீடும் குறைவே. சீனாவில் சிறந்த ஆசிரியர்களை பணிக்கமர்த்துவது கல்வித் தரம் குறைவாக உள்ள பள்ளிகளில். கிராமங்களில் மிகச் சிறந்தக் கட்டிடம் பள்ளிக் கூடமே. சீனர்கள் கணக்கு பாடத்தில் அதிவேகம்.. கிராமப் புற மாணவர்களுக்கும் நகரப் புற மாணவர்களுக்கும் கல்வி கற்பதிலும் தேர்விலும் வேறுபாடே இல்லை. நம் கிராமங்களுக்கு சென்று பாருங்கள். ஐந்து வகுப்புகளுக்கு இரண்டு ஆசிரியர். -- 250 மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் எதனைக் கற்றுக் கொடுக்க இயலும்? கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத நாடு முன்னேற முடியாது . எல்லா மாணவர்களுக்கும் தரமான கல்வி அளிக்கப் பட வேண்டும். இதில் வேற்றுமை காண்பிக்கக் கூடாது. கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப் பட வேண்டும். பெருநகரங்களில் சிறந்த பள்ளிகள் என்று சொல்லிக் கொள்ளும் பள்ளிகளில் கூட கல்வித்தரம் கீழ் தான் ,அதனைத் தான் பிசா தேர்வு கூறியுள்ளது. இந்த பிசா தேர்வின் முடிவை, அறிக்கையை அமெரிக்க அதிபர் ஒபாமா கையில் எடுத்துள்ளார். அமெரிக்க மாணவர்களின் தரம் குறைந்துள்ளதே அதனை மேம்படுத்த வேண்டும் என்ற அக்கறை அவருக்கு. இந்திய அரசு " எங்கள் மாணவர்கள் 2012 மற்றும் 2015 பிசா தேர்வில் பங்கேற்க மாட்டார்கள் ' என்கிறது. பிசா தேர்வின் தலைவர் ச்லீசேர் ஒரு செர்மானியர். அவரும் அங்கலாய்க்கிறார். எங்கள் நாடும் சிறிது பின் தங்கி உள்ளதே என்று. இந்த விவாதம் நாம் ஒருவரை ஒருவர் குறை கூறுவதற்கல்ல. இந்த சமூகத்தில் நாமும் அங்கத்தினர்களே.- அரசுடன் இணைந்து நம் இளைஞர்களின் கல்வியை நம்மால் எவ்வாறு மேம்படுத்த இயலும் என்ற பார்வைக்காகவே.
Periyasamy
சிங்கப்பூரில் ஆங்கில மீடியத்தில் தான் கற்று கொடுக்கிறார்கள். அங்கெல்லாம் கல்வி தரம் நன்றாக இருக்கிறதே! தமிழகத்தில் இருந்து இன்றைக்கு தேசிய அளவிலான எந்த தேர்விலும் மாணவர்கள் மிக சொற்ப அளவில் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். உலக அளவை பற்றி சொல்ல வேண்டியதில்லை. எப்போதெல்லாம் தி.மு.க ஆட்சி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் கல்வித்தரம் ஏதாவது ஒரு வகையில் கெடுக்கப்படுகிறது. இவர்களின் வழித்தோன்றல்களை மட்டும் சர்வதேச தரம் வாய்ந்த ஆங்கில மீடிய பள்ளிகளில் மிகுந்த பொருட்செலவில் படிக்க வைக்கிறார்கள். ஊருக்குத்தான் தாய் மொழி வழிக்கல்வி என்னும் உபதேசம். ஆகையால் சாதாரண மக்களும் தங்கள் பிள்ளைகளை ஆங்கில மீடியத்தில் படிக்க வைக்கிறார்கள்.
Natarajan
இமாசலப் பிரதேசத்தில் தி மு க ஆட்சி இல்லை ஆனால் அவர்கள் கடேசியாக வந்துள்ளனர். பிசா மதீபீட்டுக்கும் தி மு க ஆட்சிக்கோ அல்லது ஆ தி மு க ஆட்சிக்கோ அல்லது காங்கிரஸ் ஆட்சிக்கோ சம்பந்தமில்லை. இதைப் போட்டு குழப்பத் தேவையில்லை. பிசா மதீப்பீடு சொல்வது என்னவென்றால் -- இந்த மதிப்பீடு ஒரு நாடு கல்வித் துறையில் எவ்வாறு செயல் படுகின்றது என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமென்பது தான். பிசா மதிப்பீட்டில் அரசியலோ கட்சிகளோ தனி நபர்களோ தேவை இல்லை. எதிர்கால இளைஞர்கள் எவ்வாறு உருவாக வேண்டும் என்பதைத்தான் கூறுகிறது. பிசா தேர்வு 2003,2006,2009 மற்றும் 2012ல் நடை பெற்றது 2012 முடிவு அடுத்த மாதம் வருகிறது. அரசியல் கலக்காமல் தனி நபர் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் விமர்சனம் செய்வது நன்று. பிசா தேர்வு பற்றிய அறிக்கை ஒவ்வொரு நாடும் தன் முன்னேற்றத்துக்கு பயன் படுத்த வேண்டும்.
ஷாலி
நண்பர் திரு.நடராசன் அவர்கள் சொல்வதுபோல் இதில் அரசியலை கலக்க வேண்டியதில்லை.பிற நாட்டு மாணவர்களை விட நம் மாணவர்கள் கடைசி தரத்தில் இருக்கும் காரணம் என்ன? என்பதை ஆய்வு செய்யவேண்டும்.இத்தேர்வில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று கூறுவது பந்தயத்தில் ஓடுவதற்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொல்வதற்க்கு சமம். உடனடியாக சிறந்த கல்வியாளர் குழுவை சீனாவுக்கு அனுப்பி அங்கு நடைமுறைப்படுத்தும் பாட திட்டங்களின் வழி காட்டுதலை அறிந்து அதை இந்தியச் சூழல்களுக்கு தகுந்தாற்போல் தகுதி ஏற்றி மாணவர்களுக்கு போதிக்க வேண்டும்.இன்று இல்லாவிட்டாலும் இன்னும் பத்தாண்டுகளில் முன் நிலைக்கு வர நிச்சயம் முடியும்.ஆனால் இதற்கெல்லாம் ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை. இங்கு கட கட மனனமே கடைசி வரைக்கும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.