அரசுப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் 3200 தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் முதல் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் ஆங்கில மொழியை பயிற்று மொழியாக கொண்ட வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசுகையில் மக்கள் விரும்பினால் அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழி பயிற்று வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.

                தமிழ் மொழி ஆர்வலர்கள், பற்றாளர்கள், பல்வேறு தமிழ் அமைப்புகள், கல்வியாளர்கள், மொழியியல் அறிஞர்கள், சில அரசியல் கட்சிகள் என பலரும் இதை எதிர்க்கிறோம். ஆனால் பொது மக்கள் பெரும்பாலும் இதை ஆதரிக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலக் வழி கல்வி கொடுப்பது அறிவியல் பூர்வமானதா? அவர்களை முன்னேற்றுமா? இது அவசியமா? என்பதை எல்லாம் விவாதிக்கும்முன் அவர்களில் இருந்தே துவங்குவோம். அரசும், ஆங்கில வழிக் கல்வியை ஆதரிப்பவர்களும் அதற்கு கூறும் காரணங்களை நாம் விரிவாகப் பார்ப்போம்.

பொது மக்களும் சரி, அவர்களுக்காகவே இதை செய்வதாக சொல்லும் அரசும் சரி இதற்கு என்ன என்ன காரணம் சொல்கிறார்கள் என்றால்,

1.  தமிழ் வழிப் பள்ளிகளில் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு போதுமான அளவு இல்லை.

2.  அதனால் அவர்கள் உயர் கல்வியில் சரியாக படிக்க முடியவில்லை.

3. வேலை பணியிடங்களிலும் சிறப்பாக செயல் பட முடியவில்லை.

4. அவ்வளவு ஏன் பள்ளியில் மிக நன்றாக படித்து மருத்துவம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பல மாணவர்கள் ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்தால் படிப்பை பாதியிலேயே கைவிடுவதும், தேர்ச்சிபெறாமல் இருப்பதும், சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்வதும் தொடர் நிகழ்வாகியுள்ள இந்த சூழலில் ஆங்கில வழி கல்விமுறை சிறப்பான திட்டம் தானே… என பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள்.

இந்த திட்டத்தை ஆதரிக்கும் அறிவுஜீவிகள், அல்லது அறிவுஜீவிகளாக தன்னை நினைத்துக் கொள்பவர்கள் எல்லாம் ஒருபடி மேலே போய் மொழிப் பற்று காரணமாக இதை எதிர்ப்பவர்கள் அவர்களை அறியாமல் ஏழை மாண‌வர்களின் வளர்ச்சியைத் தடுக்கிறார்கள். அரசு ஏழை மாணவர்கள் மேல் எவ்வளவு அக்கறையுடன், அவர்களும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக ஆங்கில அறிவு பெற்று, அதன் மூலம் அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்த்த முற்படுவதைத் தடுக்கிறார்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு போதுமான ஆங்கில அறிவு இல்லை, வேலை வாய்ப்பில் பிரச்சனை என இவர்கள் கூறும் காரணம் எல்லாம் முற்றிலும் உண்மையே. ஆனால் இதற்கு தீர்வாக ஆங்கில வழிக் கல்வியை கூறுவது அறியாமையால் அல்லது அயோக்கியதனத்தால். எப்படி என்பதைக் காண்போம்

ஆங்கில வழிக் கல்வியில் படித்தால்தான் ஆங்கிலம் வருமா?

அப்படி எனில், அரசு இத்தனை ஆண்டுகளாக ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாவது வகுப்பு வரை (ஏன் கல்லூரி வரை) ஆங்கில மொழிப் பாடம் வைத்திருப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

இன்றைக்கு ஒரு 3 மாதம் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு (course) போனாலே ஆங்கிலத்தை நன்றாக கற்றுத் தருகிறார்கள். அப்படியிருக்க ஆங்கில அறிவுக்கு ஆங்கில வழிக் கல்விதான் ஒரே வழி என்பது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை.

3 மாதப் பயிற்சியில் மிகச் சிறப்பாக செய்ய முடிகிற ஒரு பணியை 12 ஆண்டு பள்ளி படிப்பில் ஆங்கிலப் பாடம் கற்றுக்கொடுத்தும் முடியாமல் போனதற்கு யார் காரணம்?

நாமெல்லாம் பல இடங்களில் பார்த்திருப்போம். வயசானவங்க பல பேர் அதிகம் படிச்சிருக்கமாட்டாங்க… ஆனா அருமையாக ஆங்கிலம் பேசுவாங்க. கேட்டால் அந்த காலத்து SSLC… அந்த காலத்து PUC ன் வாங்க…. அப்படியெனில், அந்த காலத்தில் அரசு தமிழ் வழிப் பள்ளிகளில் SSLC, PUC படிச்சவங்களாலேயே நல்லபடியாக ஆங்கிலம் படிக்க பேச முடிந்திருக்கிறது. இத்தனைக்கும் அப்போதெல்லாம் 6ஆம் வகுப்பிலிருந்துதான் ஆங்கிலப் பாடம் வரும். ஆனால் இப்போது அதைவிட நல்ல பாடத் திட்டம் இருந்தும் ஒண்ணாவதிலிருந்து பட்டப் படிப்பு வரைக்கும் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவரால் கூட ஆங்கிலம் சரியாக, பேசவோ, எழுதவோ முடியவில்லை. இன்றைக்கும் பல கல்லூரி மாணவர்கள் கல்யாணத்துக்கு விடுப்பு எடுக்க கூட as I am suffering from fever னுதான் எழுகிறார்கள். அது ஏன் ஆங்கிலத்தில் எழுத வேண்டும்? தமிழில் எழுதக் கூடாதா, அதற்காக போராட வேண்டாமா என்பதெல்லாம் வேறு விடயம். 12 ஆண்டு கால பள்ளிக் கல்வி கொடுக்கத் தவறியதுதான் இங்கே முக்கியம். ஏனெனில் இதுதான் இன்று ஆங்கில வழிக் கல்வி என்ற அயோக்கிய அரசியல் செய்ய அரசுக்கு வாய்ப்பளித்துள்ளது. இதுக்கெல்லாம் யார் காரணம்? படிக்காதவனால் முடியவில்லை என்றால் அவனை குற்ற‌ம் சொல்லலாம். முதல் மதிப்பெண் எடுப்பவனாலேயே முடியவில்லை என்றால்…. மருத்துவ, பொறியியல் படிப்புக்கு இடம் கிடைத்த பையன்கள் ஆங்கிலம் தெரியவில்லை என்று தற்கொலை செய்கிறார்கள் என்றால் யார் காரணம்?

3 மாதப் பயிற்சியில் (course) செய்யமுடிவதை 12 ஆண்டுகளாக செய்ய முடியாமைக்கு காரணம் சரியான ஆசிரியர்கள் இல்லாததும் அப்படி இருந்தாலும் சரியாக செயல் படாததும் தான்.

பெரும்பான்மையான அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பாடத்தை கணிதம், அறிவியல், வரலாறு, பொருளியல் என பிற பாடங்களில் பட்டம் படித்த ஆசிரியர்கள்தான் நடத்துகிறார்கள். அந்த ஆசிரியர்களைப் பொருத்தவரை தங்கள் பள்ளிப் படிப்பை அரசுப் பள்ளியில் படித்தவர்கள். கல்லூரியிலும் தமிழிலேயோ அல்லது அரை குறை ஆங்கிலத்திலோ படித்தவர்கள்தான். அவர்கள் தாங்கள் படித்த அறிவியல், கணக்கு பாடங்களையே சரியாக நடத்தாத இன்றைய சூழலில் தங்களுக்கு முழுமையாகத் தெரியாத ஆங்கிலப் பாடத்தை எப்படி நடத்துவார்கள் என யோசித்துப் பார்த்தாலே தெரியும். அதனால்தான் வெளியே ஒரு தனியார் ஆங்கிலப் பயிற்சி நிலையத்தில் 3 மாதத்தில் மிகச் சரியாக செய்யும் ஒரு வேலையை ஒண்ணாம் வகுப்பு முதல் கல்லூரி வரை ஆங்கிலம் நடத்தியும் செய்யமுடியவில்லை. அப்படியே ஆங்கிலம் பட்டம் பெற்ற ஆசிரியர் இருந்தாலும் அவரும் சரியாக பாடம் நடத்துவதில்லை. இதை ஒழுங்குப்படுத்தினாலே ஆங்கில அறிவுப் பிரச்சனையைத் தீர்க்கலாம்.

இது புரியாமல் மக்கள் இதை ஆதரிப்பது அறியாமையால். ஆனால் சில அறிவு ஜீவிகளுக்கும் அரசுக்கும் இது தெரியாததல்ல. அவர்கள் இதை செய்வது அயோக்கியத்தனமாகும்.

அரசு அடுத்து கூறுவது,

ஆங்கில வழிக் கல்வியாக்குவதால் தனியார் பள்ளிகளில் படிப்பவர்களைப் போன்ற ஆங்கில அறிவு ஏழை மாணவர்களுக்கும் கிடைக்கும்; இதனால் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மேம்படும் என்பது. இது உண்மையா?

இதில் 2 விடயம்,

தனியார் ஆங்கில வழிப் பள்ளியில் படிப்பவர்கள் அனைவருக்கும் ஆங்கில அறிவு முழுமையாக உள்ளதா எனில் இல்லை என்பதே நிதர்சனமாகும். அவர்கள் வெறும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்கள்ளாகவே இருக்கிறார்கள் என்பதே உண்மை. அவர்களில் பலர் அதிக மதிப்பெண் எடுத்தாலும் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் ஆழ்ந்த சிந்தனையும், அறிவும் அற்றவர்களாக உள்ளார்கள் என பல ஆய்வுகள் நிருபித்துள்ளன.

அடுத்து, ஆங்கில பாடத் திட்டம் வந்தால் உடனே அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலப் புலமை பெற்றுவிடுவார்களா?.

ஆங்கில பாடத் திட்டம் வந்தாலும் பாடம் எடுப்பவர்கள் அதே ஆசிரியர்கள்தான். இந்த ஆங்கில வழி பாடத் திட்டம் மூலம் இனி கணக்கு, அறிவியல், வரலாறு, பொருளியல் பாடங்களை நேற்று தமிழில் எடுத்த ஆசிரியர்கள் இனி ஆங்கிலத்தில் நடத்துவர். ஏற்கனவே சொன்னது போல் தமிழ்வழியில் படித்த இவர்கள், ஆங்கிலப் பாடத்தை எடுத்த நிலைமைதான் இன்றைக்கு ஆங்கில வழிக் கல்வி தேவையை உருவாக்கியுள்ளது. இவர்கள் இனி கணக்கையும் அறிவியலையும் ஆங்கிலத்தில் எடுத்தால், கல்வித் தரம் எப்படியிருக்கும்?

இன்றைக்கு கொஞ்சம் நஞ்சம் மருத்துவ, பொறியியல் படிப்புக்கு செல்லும் கிராமப்புற ஏழை, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறையும்.

ஆசிரியர் சரியாக நடத்தாத போதும் ஏதோ தமிழில் என்பதால் சுயமாகவே படித்து மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதால் அந்த வாய்ப்பும் பறிபோகும் நிலை ஏற்படும்.

பல்வேறு மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் நிலை அதிகமாகும். மொத்தத்தில், அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் இப்போது இருப்பதை விட கண்டிப்பாக குறையும்.

அடுத்து அரசு கூறுவது,

இன்றைக்கு மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி செல்வதை தடுத்து நிறுத்தும் என்பது. தடுத்து நிறுத்துமா?

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் குறையும் போது தனியார் பள்ளிகளில் படிப்பவர்களை அரசுப் பள்ளியை நோக்கி இழுக்குமா அல்லது அரசுப் பள்ளியில் படிக்கும் மீதி மாண‌வர்களையும் தனியார் பள்ளியை நோக்கி ஓட வைக்குமா?

ஏழை, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாண‌வர்களின் நலனுக்கு என்ற போர்வையில் கொண்டுவரப்பட்ட இந்த ஆங்கில வழிக் கல்வி மூலம், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஆங்கில வழி கற்பித்தலுக்கு அஞ்சி மீதம் உள்ள மாணவர்களையும் தனியார் பள்ளியை நோக்கி தெரித்து ஓடச்செய்யும் அரசின் உள்நோக்கம் மிக அருமை.

கம்பும் உடையாமல் பாம்பும் சாவாமல் என்பது போல ஒருபுறம் ஆங்கில வழிக் கல்வி என்ற கலர் படம் காட்டி மக்களுக்கு நன்மை செய்வது போல் மக்களிடம் நல்ல பேர் எடுப்பதும், மறு புறம் அதே ஆங்கில வழிக் கல்வி மூலம் அரசுப் பள்ளியில் மீதம் உள்ள மாணவர்களையும் தனியாரை நோக்கி ஓடவைத்து தங்களுக்கு படியளக்கும் கல்விக் கொள்ளையர்களுக்கு சேவகம் செய்வதும் என அரசு ஒரே கல்லில் 2 மாங்காய்களையும் சரியாக அடித்துள்ளது.

சம்ச்சீர் கல்வி வந்தபோது தங்கள் கல்லா பெட்டிக்கு ஆபத்து வந்து விடுமோ என அஞ்சி அதற்கு எதிராக போராடிய கல்வித் தந்தைகள் இதற்கு மௌனம் சாதிப்பதிலிருந்தே நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?

உண்மையில் அரசு சொல்வதுபோல் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அரசுப் பள்ளியை நோக்கி வருவதாக இருந்தால் இவர்கள்தான் இதை முதலில் எதிர்ப்பார்கள்.

ஒரு புறம் கல்வி கட்டாயச் சட்டம், 100% கல்வி என கூறிக்கொண்டே இந்த ஆங்கில வழிக் கல்வி மூலம் பள்ளியை விட்டே தெரித்து ஓடச்செய்யும் ஜெ.அரசின் உள்நோக்கம் மிக அருமை.

ஆனால் இந்த கல்வி முறையில் ஒரே ஒரு நன்மை தான். இனி எந்த அரசு பள்ளி மாணவரும் கல்லூரியில் ஆங்கிலம் தெரியாததால் தற்கொலை வரை செல்லமாட்டான். கல்லூரி வரை போனால்தானே தற்கொலை எல்லாம்.

உண்மைகள் இப்படி இருக்க, கோத்தாரி கமிஷன் போன்று கல்வி சம்பந்தமாக அரசு அமைத்த பல்வேறு குழுக்களின், தாய்மொழி வழிக் கல்வி, பொதுப் பள்ளி, அருகாமை பள்ளி போன்ற பல பரிந்துரைகளும், கல்வி தனியார் மயம், கல்விக்கொள்ளை என கல்வி சம்பந்தமாக தீர்க்கப்படாமல் உள்ள பல விடயங்கள் அப்படியே கிடப்பில் கிடக்க அவசர அவசரமாக ஆங்கில வழிக் கல்விக்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்ன?

முதன்மையாக இரண்டு விடயங்கள்….

1.ஆங்கில வழிக் கல்வி மூலம் அரசுப் பள்ளிகளின் தரம் குறையச் செய்து தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களை ஓடச் செய்வதன் மூலம் அரசுப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கையை மேலும் குறைத்து, அதன் மூலம் ஆசிரியர் எண்ணிக்கையை குறைத்து கடைசியில் தங்கள் எஜமானர்களாகிய ஏகாதிபத்தியங்கள், அதற்கு ஏவல் செய்யும் உலக வங்கி ஆகியவற்றின் பரிந்துரைப்படி கல்வியை முழுமையாக தனியாருக்கு தாரை வார்ப்பது என்பதற்காகவும்,

2.பல்வேறு மொழி பேசும் பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும், ஒற்றை மொழி, ஒற்றைப் பண்பாடு, ஒரே தேசம் என உருவாக்கத் துடிக்கும் இந்திய பேரரசின் கொள்கையை நிறைவேற்றுவதற்காகவும்தான்.

ஏற்கனவே இந்திய பேரரசு இந்தியை திணிக்க இருமுறை முயன்றபோது தமிழ்நாடு மிக வலிமையாக இந்தி எதிர்ப்பு மொழிபோர் (மொழிப்போர் I - 1937, மொழிப்போர் II - 1964) நடத்தி இந்தியைத் தடுத்தது. ஆனால் அந்த இரண்டு முறையும் நாம் அடைந்தது முழுமையான வெற்றியல்ல.

எப்படியெனில் இந்திய அரசின் இந்தி திணிப்பு 2 கூறுகளைக் கொண்டது. 1. இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய மொழிகளை அழிப்பது. 2. இந்தியை ஒற்றை மொழியாக்குவது (அதன் மூலம் சமஸ்கிருதத்தை இந்திக்கு பதிலீடு செய்வது இறுதி லட்சியம்)

தமிழ்நாட்டின் 1965 இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போரின் மூலம் ஆங்கிலம் இந்திய துணை கண்டத்தின் துணை ஆட்சி மொழியாக நீட்டிக்கப்பட்டது. இதில் இரண்டாவது கூறான இந்தியை எதிர்ப்பதில் வெற்றி பெற்றோம். ஆனால் அதன் அடி நாதமான மற்ற மொழிகளை அழிப்பது என்பதில் தோற்றோம். இந்தி செய்ய வேண்டிய வேலையை இன்று ஆங்கிலம் செய்கிறது. இதற்கு முக்கிய காரணம் அப்போதைய திமுகவின் தவறான மொழிக் கொள்கையே ஆகும். அவர்கள் அப்போது தூக்கிப் பிடித்தது இரு மொழிக் கொள்கை. அவர்களின் முழக்கம் hindi never, English ever என்பதாகும். அதன் விளைவே இன்றைய ஆங்கில ஆதிக்கம். அந்த இரு மொழிக் கொள்கையை ஒரு மொழிக் கொள்கையாக அதையும் ஆங்கில மொழிக்கொள்கையாக கொண்டு அனைத்தும் ஆங்கிலமயமாக்க (Tamil Never English Ever ஆக்க) இன்றைய ஜெ.அரசு துடிக்கிறது. காரணம், கல்வி கொள்ளை அடிக்கும் கல்வித்தந்தைகளின் கல்லாப்பெட்டியின் நலனுக்காகவும், அன்று ஆங்கிலேயர்களுக்கு ஏவல் பணி தேவையை ஈடு செய்ய கொண்டு வரப்பட்ட மெக்காலே கல்விமுறையின் தொடர்ச்சியாக இன்று பன்னாட்டு நிறுவனங்களில் பணி செய்யத் தேவையான நவீன கூலிகளை உருவாக்கவும் கொண்டுவரப் பட்டதுதானே தவிர, இதில் மக்கள் நலன் சிறிதும் இல்லை.

தெளிவாக சொல்ல வேண்டுமானால் கல்வி வளர்ச்சிக்கு தாய்மொழி வழிக் கல்வியே ஒரே தீர்வு ஆகும்.

இந்த ஆங்கில வழிக் கல்வி என்பது…. நம்மீது தொடுக்கப்பட்டுள்ள மொழிப் போர்:

 மூன்றாம் கட்ட மொழிப்போர் துவங்க வேண்டிய தருண‌ம் இது. இதில் நம்முடைய அரசியல் இந்தியையோ, ஆங்கிலத்தையோ அல்லது தாய் மொழி தவிர்த்து அரசால் திணிக்கப்படும் எந்த ஒரு மொழியையும் முழுமையாக மறுப்பதுடன் எதிர்ப்பதுடன் முடிந்து போக முடியாது. ஆரம்பக் கல்வி முதல் வேலை வாய்ப்பு வரை அனைத்தும் முழுமையாக தாய் மொழியிலேயே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுதான் பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக விளங்கும் இந்த நாட்டில், மூத்த தேசிய இனமாக கருதப்படும் தமிழர்களாகிய நமக்கு, நம் தாய் மொழியைக் காக்க நான்காம் கட்ட மொழிப்போர் உருவாவதைத் தவிர்க்க பயன்படும்.

இப்படி கல்வி முதல் வேலை வரை அனைத்தும் தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என கூறும்போது இயல்பாகவே நமக்கு சில கேள்விகள் எழும்.

கல்வி முழுவதும் எனும்போது மருத்துவம், பொறியியல், கணிணி என அனைத்தும் தாய் மொழியில் இருப்பது சாத்தியமா? இதற்கெல்லாம் ஆங்கிலம் தேவையே இல்லையா?

கண்டிப்பாக. அனைத்தும் தாய் மொழியில் இருப்பதும், படிப்பதும் சாத்தியமானதாகும் என்பதோடு அதுவே அதில் அந்தப் பாடங்களில் முழுமையான அறிவு பெறுவதற்கு சரியான அறிவியல் பூர்வமான வழியாகும்.

வளர்ந்த நாடுகள் அனைத்திலும் அனைத்து கல்வியும் முழுமையாக தாய் மொழியில் தான் கற்றுத் தரப்படுகிறது. பெரும்பான்மையான உலக நாடுகளில் இதே நிலைதான். ஜப்பானில் அனைத்தும் ஜப்பானிய மொழியிலும், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, சீனா, இஸ்ரேல்….. என பெரும்பான்மையான நாடுகளில் அனைத்துக் கல்வியும் தாய் மொழியில் தான் கற்று தரப்படுகிறது. தாய் மொழியில் படித்த கியூப மருத்துவர்கள்தான் உலகின் மிகச் சிறந்த மருத்துவர்களாக இருப்பதுடன் உலகின் எந்த பகுதியில் மருத்துவ உதவி தேவைப்பட்டாலும் முதலாக உதவிக்கு நிற்கிறார்கள்.

அப்படியானால் தமிழ் நாட்டில் தமிழிலேயே அனைத்தையும் கற்றுத் தரலாமா? அது சரியானதா?

கண்டிப்பாக செய்யலாம். செய்ய வேண்டும். அதுதான் சரியானது. தாய் மொழியில் படிப்பதுதான் அறிவியல் பூர்வமானது. அனைவரும் சிந்திப்பது அவரவர் தாய் மொழியில்தான். அதே தாய் மொழியில் கற்பதுதான் நம் சிந்தனையை, கற்பனை வளத்தை வளர்க்கும் என்பதோடு அதுதான் முழுமயாக புரிந்து கொள்ள உதவும். இது ஏதோ தமிழ் மொழி மீதான பற்றின் காரணமாக கூறுவதாக பார்க்கக்கூடாது. இது மொழிப் பிரச்சனை மட்டுமல்ல. இது கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சனை. சரியான கல்வி என்பது தாய் மொழியில் தான் இருக்க வேண்டும். இது உலகில் பல்வேறு ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் கல்வி சம்பந்தமாக அமைக்கப்பட்ட கோத்தாரி கமிஷன் போன்ற பல்வேறு குழுக்களின் பரிந்துரைகளும் இதுதான். உலகின் அனைத்து மொழியியல் அறிஞர்களும் வலியுறுத்துவது இதைத்தான்.

அப்படியானால் ஆங்கிலம்தான் அறிவியல் மொழி என்று கூறுகிறார்களே?

சுத்தப் பொய். தனியார் பள்ளிகளின் வியாபார வேட்டைக்காக கூறப்பட்ட பொய். உலகின் பெரும்பான்மையான அறிவியல் கண்டுபிடிப்புக்கள் பிற மொழி அறிஞர்கள் கண்டுபிடித்ததுதாம். அவர்களில் பெரும்பாலோர்க்கு ஆங்கிலமே தெரியாது. அவர்கள் அனைவரும் தங்கள் தாய் மொழியில் படித்தவர்கள்தான். அது மட்டும் அல்ல ஆங்கிலம் என்பது ஒரு மொழி. அதைத் தெரிந்திருப்பது மொழி அறிவு (ஆங்கில அறிவு) மட்டும்தான். அதுவே அறிவாகிவிடாது. அமெரிக்காவில் பிச்சை எடுப்பவன் கூட ஆங்கிலத்தில் பேசுகிறான். அவனுக்கு அறிவியல் அறிவு இருப்பதாக அமெரிக்க நிறுவனங்கள் ஏன் வேலை கொடுப்பதில்லை? ஆங்கிலம் தெரிந்தால்தான் அறிவாளி என்பதெல்லாம் 300 ஆண்டுகால ஆங்கிலேயர் ஆட்சியால் வந்த வினை. அவன் நம்மை ஆண்டதால் அவனை அறிவாளியாகப் பார்த்தோம். அவன் வசதிக்காக ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு வேலை கொடுக்க, அவர்களையும் அறிவாளியாக பார்த்தோம். அதன் தொடர்ச்சியைத்தான் இன்றும் பார்கிறோம். இதில் கொடுமை என்னவென்றால் இன்றைக்கு அரைகுறை ஆங்கிலம் தெரிந்தவர்கள் கூட தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ள, ஆங்கிலம் தெரியாத அடித்தட்டு மக்களிடம் ஆங்கிலத்தில் பேசி புளகாங்கிதம் அடைகிறார்கள்.

வேலை என்றதும் நினைவுக்கு வருகிறது. இன்றைய உலக மய சூழலில் ஆங்கிலம் தெரியாமல் எப்படி நல்லவேலைக்கு போவது? அதுவும் இன்றைக்கு உச்சத்தில் இருக்கும் கணிணி துறைக்கு குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆங்கிலம் இல்லாமல் எப்படி?

வளர்ந்த நாடுகள் அனைத்திலும் அனைத்து வேலை வாய்ப்புகளும் தாய்மொழியில்தான் உள்ளது, கணிணி துறை உட்பட. ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளின் கணிணி துறையில் கூட தாய் மொழியில்தான் வேலை செய்கிறார்கள். உடன் பணி செய்பவர்களிடம் தாய் மொழியில்தான் பேசுகிறார்கள். ஜெர்மனி, ஸ்வீடன் என அனைத்து வளர்ந்த நாடுகளிலும் பல வளரும் நாடுகளிலும் இதே நிலைதான். ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் பணி செய்பவர் பிரான்ஸ் மொழியில் பணி செய்கிறார். உடன் பணி செய்பவரிடம் பிரான்ஸ் மொழியில் பேசுகிறார். அதே பன்னாட்டு நிறுவன ஜப்பானிய கிளையில் அனைத்தும் ஜப்பானிய மொழியில் நடக்கிறது. அங்கெல்லாம் தவிர்க முடியாத தேவைகளுக்கு மட்டுமே ஆங்கிலம். ஆனால் அதே பன்னாட்டு நிறுவன தமிழ்நாட்டுக் கிளையில் கணிணியில் ஆங்கிலத்தில்தான் பணி செய்கிறார்கள், உடன் பணிபுரிபவர்களிடம் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். அனைத்தும் ஆங்கிலமே.

பிறகு தமிழ்நாட்டில் ஏன் ஆங்கிலத்தை பிடித்து இப்படி தொங்குகிறார்கள்?

இதுதான் தமிழினத் தலைவர்களும், தமிழின தலைவிகளும் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்த தொண்டு. செம்மொழி பாடல் எழுதுவர். வள்ளுவனுக்கும் தமிழ்த் தாய்க்கும் கோடிக்கணக்கில் செலவழித்து சிலை வைப்பர். தமிழுக்கு உலை வைப்பர்.

உலகின் மூத்த மொழி… உயர் தானி செம் மொழி… என்றெல்லாம் பெருமை பேசுவர். அதே தமிழ் நாட்டில்தான் ஆங்கிலம் படித்தால்தான் வேலை வாய்ப்பு என்ற நிலைக்கு நம்மைத் தள்ளி வேடிக்கை பார்ப்பர். இந்த அரசுகள் தான் இன்று ஆங்கிலத்தை பயிற்று மொழி ஆக்கி அதுதான் தேவை என்ற சூழலுக்கு மக்களை தள்ளி தமிழ் மொழியின் தேவையை அருகச் செய்து, மாணவர்களுக்கு அது ஒரு தேவையற்ற பாட சுமையாகி அழிக்கும் சூழலுக்கு கொண்டுவந்து நிறுத்தத் திட்டமிட்டுள்ளன.

தமிழ்த் தாய்க்கு சிலை வைப்பதை விட… ஜப்பான், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி… என ஆங்கிலத்தைப் புறக்கணித்து தன் தாய் மொழிக் கல்வியால் தாய் மொழியிலேயே வேலை வாய்ப்புகளை கணிணி வரை உருவாக்கி… வளர்ச்சியடைந்த உதாரணங்களைப்போல எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலைமையை தமிழ்நாட்டில் உருவாக்க மக்களை அணி திரட்டுவோம்.

1.அனைத்து மக்களுக்கும் பள்ளிக் கல்வி முதல் பல்கலை கழகம் வரை அனைத்து கல்வியையும் தாய்மொழி வழி பெற உறுதி செய்ய வேண்டும்…

2.தமிழ் நாட்டில் அனைத்து அரசு (தமிழக, மத்திய), நீதி மன்றங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழை அலுவல் மொழியாக்கவும் ஆவண செய்ய வேண்டும்.

3. தமிழ் நாட்டு மக்கள் தமிழ் நாட்டுக்கு வெளியே இந்திய அரசுடன் அனைத்து தொடர்புகளும் தமிழிலேயே இருக்க வேண்டும். அனைத்து மொழி பேசும் மக்களும் தம் தாய் மொழியிலேயே இந்திய அரசுடனான தொடர்பு கொள்ளும் உரிமையை உறுதிசெய்ய வேண்டும்.

தமிழே தெரியாத பிரதமர் நம்மை ஆளும்போது தமிழ் மட்டுமே தெரிந்த ஒருவர் ஏன் ஆளக்கூடாது? உச்ச நீதி மன்றத்தில் தமிழே தெரியாத நீதிபதி என்னை விசாரிக்கும்போது. தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் ஏன் தமிழிலேயே தங்கள் மனுக்களை தாக்கல் செய்யக்கூடாது? போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழும்புமாறு பரப்புரை செய்ய வேண்டும். தீர்வுகள் எட்டப்படவேண்டும்.

அனைவருக்கும் அனைத்தும் தாய்மொழி வழியிலேயே கிடைக்க ஆவண செய்யப்போகும் மூன்றாம் கட்ட மொழிப் போர் வெல்லட்டும்.

- வெ.பி.வினோத்குமார், தேசிய பொதுக்குழு உறிப்பினர், தமிழ்நாடு மக்கள் கட்சி. 9994262666. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

5 comments

5
Hari
Good message na.,and the article is Super na.,
காசி மனோகரன்
இன்றுள்ள அரசு யாருடைய ஆலோசனை தேவை இல்லை என்ற முடிவுடன் உள்ளது. கல்வியாளர்கள் கருத்துகளை மதிப்பதில்லை. ஆங்கில வழி கலவி என்பது கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போல் ஆகும்
Periyasamy
இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றதாக சொல்லப்படுகிறது. 1950க்கு பின்னர் வட இந்தியாவில் “Angrezi Hatao” (ஆங்கில மொழியை அகற்றுக) என்னும் இயக்கம் ஹிந்தி வெறியர்களால் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்த இயக்கத்தவரின் நோக்கம் பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள், வரலாறுகள் ஆகியன காலங்காலமாக புழங்கும் இந்த பரந்து விரிந்த இந்தியாவில் அடி முதல் முடி வரை அனைத்து செயல்பாடுகளிலும் ஹிந்தியை புகுத்த வேண்டும் என்பது தான். அதாவது சமஸ்கிருத மயமான தேவநாகரி லிபியில் எழுதப்படும் ஹிந்தியை!. பன்முக தன்மை வாய்ந்த இந்தியாவை ஒற்றை தன்மை வாய்ந்த நாடாக மாற்ற முயலும் முயற்சிகள் ஒன்றின் பின்னணியில் உள்ள அடிப்படை அரசியல் நோக்கம் என்ன என்பதை சொல்ல தேவையில்லை. வட இந்தியாவில் இருக்கும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் தான் இந்த இயக்கத்தின் மையம். இங்கிருந்து தான் ஹிந்து-ஹிந்தி-ஹிந்துஸ்தான் என்னும் ஹிந்துத்துவ-பிராமண-மனுதர்ம கோட்பாடு அகில இந்தியா எங்கும் (ஏன் அகில உலகம் எங்கிலும் கூட!) பரப்பப்படுகிறது. (‘தேசிய ஒருமைப்பாடு’ என்பதை காரணம் காட்டி இந்த கோட்பாட்டை ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவார அமைப்புக்கள் தூக்கிப்பிடித்து வருவது கவனிக்கத்தக்கது). இந்த ஹிந்தி வெறி இயக்கத்தின் கோரிக்கையை ஏற்ற அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் 1965க்கு பிறகு ஹிந்தி தான் இந்தியாவின் தேசிய ஆட்சி மொழியாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அன்னியர்களின் மொழியாகிய ஆங்கிலம் 1965க்கு முன் முற்றிலும் அகற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தன. ஆனால் அப்போது தென்னிந்தியாவில், குறிப்பாக சென்னை மாகாணத்தில், முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை தான் நிலவியது. பிராமணர்களின் பல நூற்றாண்டு கால தொடர்ந்த ஆதிக்கத்தினாலும் அராஜகத்தினாலும் பெரும் பாதிப்படைந்திருந்த பிராமணரல்லாதவர்கள் (குறிப்பாக அதிருப்தி கொண்ட அறிவுஜீவிகள்) நீதிக்கட்சியின் கீழும் பின்னர் திராவிடர் கழகத்தின் கீழும் அணிதிரண்டிருந்தார்கள். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் எழுந்தது. சென்னை மாகாணம் ஹிந்தி கட்டாயப்படுத்தப்பட்ட முதல் ஹிந்தி பேசாத மண்டலம் என்பதால் இந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் மிகவும் வலுவடைந்தது. ஆங்கிலம் அன்னிய மொழி என்றால் ஹிந்தி பேசாத மக்களுக்கு ஹிந்தியும் அன்னிய மொழி தான். இரண்டு மொழிகளையும் ஒப்பு நோக்கும் போது ஆங்கிலத்தை தேர்ந்தெடுப்பது தான் எங்களுக்கு பலனளிக்கும் என்று இந்த போராட்டக்காரர்கள் வாதாடினார்கள். பதினெட்டு இந்திய மொழிகளையும் தேசிய ஆட்சி மொழிகளாக்க வேண்டும். அது வரை ஆங்கிலம் தான் இந்தியாவின் ஒரே தேசிய ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பது கோரிக்கை. இந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் தீவிரத்தை கண்ட அப்போதைய பிரதமர் நேரு “ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் துணை தேசிய ஆட்சி மொழியாக நீடிக்கும்” என்னும் உறுதிமொழியை கொடுத்தார். இந்திய அரசியல் சட்ட புத்தகத்தில் ஏறாத இந்த வெறும் வாய் மொழி உத்தரவாதம் தான் இந்தியாவில் ஆங்கிலத்தின் இருப்பை இன்று வரை உறுதி செய்து வருகிறது. ஹிந்தியை அரக்கியாக சித்தரித்து கக்கூசுகளில் படம் வரைந்தது முதல் ரயில் நிலையங்களில் ஹிந்தி பெயர் பலகைகளில் தார் பூசி அழித்தது வரை தங்கள் கற்பனை சக்தியை காட்டிய திராவிட கட்சியினர் நேருவின் உறுதி மொழியின் அடிப்படையில் அரசியல் சட்டத்தை திருத்துவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. ஹிந்தி (வடவர்) ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் தாங்கள் தான் என்று கூறும் தி.மு.க கூட நாற்பது எம்.பிக்களையும் கொண்டு மத்திய ஆட்சியில் பங்கெடுத்த போது இதற்காக எதுவும் செய்யவில்லை. 2ஜி ஊழலில் தான் மாட்டினார்கள். பல இனத்தவரும் மொழிகளும் புழங்கும் ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் மொழியை மட்டும் தேசிய ஆட்சி மொழியாக அறிவித்து நடைமுறைப்படுத்தினால் மற்ற மொழிகளை பேசும் மக்கள் எப்படி எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு சோவியத் யூனியன், சீனா, கிழக்கு பாக்கிஸ்தான், இலங்கை ஆகியன சரியான சான்றுகள். சோவியத் யூனியன் ஒரு சமஷ்ட்டி அமைப்பாக இருந்ததால் ரஷ்ய ஆதிக்கத்தில் இருந்து மற்ற நாடுகள் பிரிந்து போக முடிந்தது. இந்தியா என்கிற அன்னிய சக்தியின் தலையீட்டினால் கிழக்கு பாக்கிஸ்தான் பங்களாதேசமாக விடுதலை அடைந்தது. சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் இது எதுவும் நடக்கவில்லை. சீனாவில் சீன-மாண்டரின் தான் தேசிய ஆட்சி மொழி. இந்த மொழியை பேசும் ஹான் இனத்தவர்கள் சீன மக்கள் தொகையில் தொண்ணூறு விழுக்காட்டினர். பத்து விழுக்காட்டினராக மட்டுமே இருக்கும் (திபெத்தியர்கள், உய்குர்கள் போன்ற) மற்ற இனத்தினர் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். அதுவும் சீன அரசமைப்பானது மத்தியில் அனைத்து அதிகாரங்களையும் குவித்து வைத்துள்ள கம்யூனிச அமைப்பு என்பதால் மேற்கண்ட சிறுபாண்மை இனத்தவர்களுக்கு கூடுதல் நெருக்கடி. மேலும் சீனாவில் ஆங்கிலம் பொது தொடர்பு மொழியாக கூட இல்லாததால் திபெத்தியர்களும் உய்குர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் ஆதிக்கத்தையும் இன அழிப்பையும் சீனாவுக்கு வெளியே சர்வதேச சமூகத்திடம் சரியான முறையில் வெளிப்படுத்த கூட முடியாதவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் சிறுபாண்மை தமிழர்கள் எதிர்கொள்ளும் நுணுக்கமான சிங்கள மொழித்திணிப்பை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இருந்தாலும் யாழ்ப்பாண பிரதேசத்து மேட்டுக்குடி தமிழர்கள் ஆங்கிலத்தில் நல்ல புலமை கொண்ட காரணத்தால் இனப்பிரச்சினையை உலகளவில் வெற்றிகரமாக கொண்டு செல்ல முடிந்தது. அரசியல் சட்டத்தின்படி இந்தியாவின் மத்திய அரசு சர்வ வல்லமையும் கொண்டது. பெரும்பாலான அதிகாரங்கள் இதனிடம் தான் குவிந்துள்ளன. இந்தியாவின் மாநில அரசுகளோ இன்றளவிலும் கவுரவம் மிக்க முன்சிபாலிட்டிகளாகத்தான் (Esteemed Municipalities) விளங்கி வருகின்றன. மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் மிகக்குறைவு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹிந்தி பேசாத மக்களின் வளர்ச்சி, வாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஆங்கிலம் தான் அரணாக இருக்க முடியும். தமிழ் போன்ற மாநில ஆட்சி மொழிகள் அல்ல. வலிமை மிக்க மத்திய அரசின் தேசிய ஆட்சி மொழியாக ஹிந்தி விளங்குவதோடு அதன் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒதுக்கப்படுகிறது. தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளுக்கு குறைந்த அதிகாரங்களை கொண்ட மாநில அரசுகளால் எவ்வளவு நிதியை ஒதுக்க முடியும்? அப்படியே ஒதுக்கினாலும் என்ன பயன் விளைந்து விடும்? இந்த கோணத்தில் இருந்து தான் உயர் கல்வியில் தமிழ் பயிற்று மொழி என்கிற விஷயத்தை அணுக வேண்டும். அந்தக்காலத்தில் இருந்த தமிழர்கள் கடாரம் வென்றார்கள். தமிழச்சிகள் புலியை முறத்தால் அடித்து விரட்டினார்கள். சோழ சாம்ராஜ்ஜியம் தென்கிழக்கு ஆசியா எங்கும் விரிந்திருந்தது என்றெல்லாம் தமிழ் பற்றாளர்கள் கூறக்கூடும். ஆனால் இன்றிருக்கும் தமிழர்களின் நிலை வேறு. இன்றைக்கு தமிழ்நாடு என்பது இந்தியா என்னும் மூன்றாம் உலக நாட்டின் மூன்றாம் நிலை மாநிலமாக உள்ளது. பெரும்பாலான தமிழ் மக்கள் வறுமை மற்றும் அறியாமையின் பிடியில் உள்ளார்கள். இந்த தமிழ் நாடு மாநிலத்துக்கும் இங்கு வாழும் தமிழ் மக்களுக்கும் உலக அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் கூட சொல்லிக்கொள்ளும்படியான செல்வாக்கு எதுவும் இல்லை. இந்தியாவில் தமிழ் என்னும் மொழி பேசும் மக்கள் வாழ்வது கூட வெளி உலகில் பலருக்கு தெரியாது. போதாக்குறைக்கு சுற்றியுள்ள மாநிலங்கள் மற்றும் நாடுகளில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழர்கள் துன்பத்துக்கு ஆளாகிறார்கள். ஆகையால் உயர்கல்வியை தமிழ் வழியில் மட்டும் படித்துவிட்டு தமிழகத்திற்கு வெளியே போய் பிழைப்பது இந்த மாதிரியான சூழ்நிலையில் மிகவும் கடினம். ஜெர்மானியரும் ஜப்பானியரும் அவரவர் மொழியில் உயர் கல்வியை மேற்கொள்கிறார்கள் என்றால் அது வேறு விஷயம். நவீன அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகளும் கல்வியும் ஆரம்ப காலத்தில் இருந்தே இம்மொழிகளில் மேற்கொள்ளப்பட்ட பாரம்பரியம் உண்டு. அங்கெல்லாம் பாடத்திட்டம் தயாரிக்கும் அறிஞர்கள் நோபெல் பரிசு வாங்கியவர்களாகவோ அல்லது அந்த அளவுக்கு தரம் கொண்டவர்களாகவோ இருப்பார்கள். மேலும் ஜெர்மானியருக்கும் ஜப்பானியருக்கும் தனித்தனி நாடுகள் உண்டு. அந்நாடுகளில் அவர்களின் மொழி தான் தேசிய ஆட்சி மொழியாக இருக்கிறது. உலகில் எங்குமே உயர் கல்வியை தேசிய ஆட்சி மொழியில் தான் வழங்குகிறார்கள். அது தான் சட்டப்பூர்வமானது. இந்தியாவின் தேசிய ஆட்சி மொழி தேவநாகரி லிபியில் எழுதப்பட்ட ஹிந்தியாகும். ஆங்கிலம் கூடுதல் தேசிய ஆட்சி மொழியாக (நெருவின் வாய்மொழி உத்தரவாதம் காரணமாக) இருப்பதால் தான் உயர் கல்வியை ஆங்கில வழி மூலமாக நாம் (குறிப்பாக தென்னிந்தியர்கள்) கற்கிறோம். இல்லாவிட்டால் ஹிந்தி மீடியம் மூலமாகத்தான் கற்க வேண்டி இருக்கும். பா.ஜ.க மத்தியில் ஆட்சி செய்த போது வட இந்தியாவில் நடந்த ஒரு மத்திய அரசு தேர்வில் ஹிந்தி மொழியில் மட்டும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்தியாவின் கூடுதல் தேசிய ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருப்பது குறித்து ஹிந்தி வெறியர்களுக்கும் ஹிந்துத்வவாதிகளுக்கும் எப்போதும் விசனம் உண்டு. தமிழ்நாடு என்பது இப்போதே தண்ணீருக்கு தவிக்கும் மாநிலம். எதிர்காலத்தில் இந்த தண்ணீர் பிரச்சினை உலகளவில் மோசமாகும் என்று கூறப்படுவதால் தமிழகத்தின் நிலை பற்றி சொல்லத்தேவையில்லை. மின்வெட்டு பிரச்சினையும் நம் மாநிலத்தை வாட்டுகிறது. விவசாயம் நாளுக்கு நாள் நசிந்து வருகிறது. பல சிறு மற்றும் குறு தொழில்களும் நசிந்து வருகின்றன. வேலை இல்லாத்திண்டாட்டம் பெருகுகிறது. ஆகையால் எதிர்காலத்தில் உலகின் ஏதாவது ஒரு மூலையில் வேலை தேடிக்கொள்வதற்கும் பிழைப்பதற்கும் வழிவகை செய்யும் கல்வி தான் தமிழர்களுக்கு தேவை. மாறிவரும் உலக சூழ்நிலையில் நாடு விட்டு நாடு பெயர்வது எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தவிர்க்கமுடியாததாக இருக்கும். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு பல லட்சம் மாணவர்கள் உயர் கல்வி முடிக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க தமிழ் நாடு மாநில அரசால் (எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும்) இயலாது. ஆகையால் வேலை வாய்ப்புக்காக பல தமிழ் மக்கள் எதிர்காலத்தில் சொந்த மாநிலத்தை விட்டு வெளியேறித்தான் ஆக வேண்டும். மேலும் மத்திய அரசு தேர்வுகள், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் தான் பெரும்பாலும் நடத்தப்படுகின்றன. எனவே ஆங்கில வழி உயர்கல்வி என்பது இன்றிமையாதது. பன்னாட்டு நிறுவனங்கள் உயர் கல்வியை ஆங்கில வழியில் முடித்தவர்களுக்கு தான் வேலையில் முன்னுரிமை கொடுக்கின்றன. ஏழை பின்னணி உள்ள எத்தனையோ தமிழக மாணவர்கள் திறமை இருந்தும் ஆங்கிலம் தெரியாத தாழ்வு மனப்பாண்மை காரணமாக சோபிக்க முடிவதில்லை. ஆகையால் தமிழகத்தில் உயர்கல்வியை ஆங்கிலத்தில் மட்டுமே வழங்க வேண்டும். கூடவே மோசமாக இருக்கும் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். இந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு உயர்கல்வி மன்றமும் தேர்ந்த கல்வியாளர்களும் தமிழக அரசுக்கு ஆங்கில வழி கல்விக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். இதில் குறை கண்டுபிடிப்பதற்கு என்ன இருக்கிறது?. மேலும் கலை அறிவியல் கல்லூரிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கில வழியில் தான் தேர்வு எழுத வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டது எந்த வகையில் தவறாகும்? மத்திய அரசின் கீழ் வரும் சி.பி.எஸ்.சி பள்ளிப்பாடத்திட்டம் தரமான பாடத்திட்டம். இந்த பாடத்திட்டதுக்கு உலகளவில் அங்கீகாரம் உண்டு. இந்த பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட என்.சி.இ.ஆர்.ற்றி பாடப்புத்தகங்கள் சர்வதேச தரம் கொண்டவை. தில்லியில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளிகளில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் தான் உள்ளது. ஆனால் ஹிந்தி மீடியத்தில். மத்திய அரசின் கீழ் வரும் பள்ளிக்கூடங்களுக்கு (குறிப்பாக கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளிகள், நவோதய வித்யாலயா ஆகியவை) ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு தரக்கட்டுப்பாடு மிகவும் கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ஆசிரியர்களின் தரமும் கற்பித்தலும் மோசம். தி.மு.க ஆட்சியின் போது வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தவர்களுக்கு ”மூப்பு அடிப்படையில்” என்ற பெயரில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. ”சமுதாய நலன்” ”சமூக நீதி” என்ற பெயரில் பல லட்சம் ஏழை மாணவர்களின் எதிர்காலம் இப்படி தான் பல வகைகளில் பாழாக்கப்படுகிறது. ஆட்சியாளர்களுக்கு ஏழை மாணவர்களின் நலன் மற்றும் அறிவு வளர்ச்சி ஆகியன சமுதாய நலனாகவும் சமூக நீதியாகவும் தெரியாமல் போனது விந்தை தான். திராவிட கட்சிகளின் தலைவர்களின் வழித்தோன்றல்கள் உயர்தர ஆங்கில மீடியம் பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். தமிழ் வழிக்கல்வி எல்லாம் ஊருக்கு தான் உபதேசம். ஒரு காலத்தில் கலைகளையும் அறிவியலையும் மருத்துவத்தையும் உள்ளடக்கிய சமஸ்கிருத மொழியை பிராமணர்கள் மட்டுமே படித்து பெரிய ஆட்களாக உலா வந்தார்கள். சமஸ்கிருதம் “தேவ பாஷை” என்று சொல்லி சாதாரண பொது மக்கள் அந்த மொழி கற்பதை தடுத்தார்கள். இதன் மூலம் அறிவு சார் துறைகள் மற்றும் அதிகாரத்தின் மீதான தங்கள் சாதி ஆதிக்கத்தை பாதுகாத்துக்கொண்டார்கள். இப்போது திராவிட அரசியல்வாதிகளும் தங்கள் குடும்பத்தவர்கள், சொந்தபந்தங்கள் ஆகியோரின் முறையற்ற ஆதிக்கத்தையும் நலன்களையும் தமிழகத்தில் பாதுகாப்பதற்காக ஆங்கில வழிக்கல்விக்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள். ஆனால் இந்த அரசியல்வாதிகளின் வழித்தோன்றல்கள் சர்வதேச தரம் கொண்ட உண்டு உறைவிட ஆங்கில பள்ளிகளில் தான் கற்கிறார்கள். அதுவும் மிகுந்த பணச்செலவில்!. ஆங்கிலம் சரியாக தெரியாததால் பெரும்பாலான தமிழக மக்கள் கிணற்று தவளைகளாக வெளியுலகம் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். தமிழக எல்லைக்கு அப்பால் உள்ள உலக நிலவரம் பற்றி பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவுமே தெரியாது. அரசியல்வாதிகள் தமிழ் நாட்டை எளிதாக சூறையாடுவதற்கு இது தோதான சூழ்நிலையாக இருந்து வருகிறது. இது மாற்றப்பட வேண்டும். அடித்தட்டு மக்களின் சமுதாய உயர்வுக்கு ஆங்கில வழி கல்வி மிகவும் இன்றிமையாதது. வட இந்தியாவில் இருக்கும் அடித்தட்டு சமூகங்களின் தலைவர்கள் தங்கள் மக்களின் சமுதாய உயர்வுக்கு ஹிந்தி வழி கல்வியை விட ஆங்கில வழி கல்வியையே அதிகம் வலியுறுத்துகிறார்கள். ஆகவே ஆங்கிலம் கொஞ்சம் கூட தெரியாமல் தமிழ் வழியில் மட்டும் படிப்பவர்களுக்கு எதிர்காலத்தில் திருவோடு கூட கிடைக்காத நிலை உருவாகலாம். இவர்கள் மடிப்பிச்சை தான் எடுக்க வேண்டி இருக்கும். இப்போது ஆங்கிலம் என்பது மொழி என்னும் வரையரையை தாண்டிவிட்டது. அது ஆங்கிலேயர்களின் கையில் இருந்து எப்போதோ நழுவி விட்டது. சில பத்தாண்டுகளுக்கு முன்னர் உயர் கல்வியை தாய்மொழியில் வழங்குவது தான் சிறப்பாக இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை. விவரம் தெரிந்தவர்கள் ஆங்கில வழி கல்வியையே வலியுறுத்துகிறார்கள். ஏனெனில் நிலைமை அப்படி. இப்போது ஒரு ஆண்டுக்கு பல லட்சம் அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகள் ஆங்கில மொழியிலேயே வெளியாகின்றன. ஆண்டுக்கு ஆண்டு இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இதனால் ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் பெரும் நெருக்கடிக்குள் உள்ளன. இந்த நாடுகள், உள்ளே எழும் எதிர்ப்பையும் மீறி, மெதுவாக ஆங்கில வழி உயர்கல்விக்கு மாறிவருகின்றன. நவீன அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் முன்னேறிய நாடுகளே ஆங்கில வழி உயர் கல்விக்கு மாறும்போது இந்தியா என்னும் மூன்றாம் உலக நாட்டின் தமிழகம் என்னும் மூன்றாம் நிலை மாநிலத்தை பற்றி சொல்லவேண்டியதில்லை. தாய் மொழி வழிக்கல்வி என்பது உயர்வானது தான். அது மாணவர்களின் உரிமையும் கூட. ஆனால் மேற்கண்ட அரசியல் மற்றும் சமுதாய காரணங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் தான் தமிழ் மக்களும் தமிழ்நாடும் முன்னேற முடியும். இதை அனைவரும் உணர வேண்டும். இப்போதைய நிலவரத்தில் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு முடிய அனைத்து பாடங்களையும் தமிழில் கற்பிக்கலாம். இதை அனைத்து வகை பள்ளிகளிலும் கண்டிப்பாக்க சட்டம் போட்டு செயல்படுத்தலாம். ஐந்தாம் வகுப்புக்கு மேலும் தமிழ் வழியில் தான் கற்க வேண்டும் என அனைவரையும் கட்டாயப்படுத்த கூடாது. உயர்கல்வியில் முடிந்தவரை ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். மத்தாய் என்னும் கல்வியாளர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பல பெரும் பதவிகளை வகித்தவர். இவர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த போது அப்போதைய கேரள அரசிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் உயர் கல்வியை மலையாள மொழியில் கற்பிப்பதற்கு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கும்படி கேட்கப்பட்டிருந்தது. உடனே அந்த கடிதம் குப்பைக்கூடைக்கு போனது. அந்த கடிதம் எங்கு போகவேண்டுமோ அங்கு போனதாக அவர் பின்னர் சொன்னதாக சொல்வார்கள். மலையாள மக்கள் எந்த வகையில் தமிழர்களை விட கல்வியில் குறைந்து போய்விட்டார்கள்?.
Anand
Good Article. The flow is good. Concepts are good. Objective is really good. Written in a good spirit.

Despite all the goods, practically speaking, English language is very much needed in our day to day life.

Reasons are

1. There are so many things that are happening around the world second by second. The primary source of information is immediately available in English only. Still, even today, we are not well connected with the world.

2. There are so many unwanted things happened in the recent past and no justice for us. One of the prime reasons is our poor communication to the outside world. e.g.: the eelam genocide, till now it is very handful people who is an expert on this. Guys who know English doesn't know the history. Guys who knows the history, doesn't know English.

3. Despite drastic improvements in other areas, still the social justice is like what it was in 10/20 years back. At least in Cities, the gap has reduced just a little bit, thanks to good opportunities provided by the MNCs for the economic improvement due to good communication in English.

With all the above points, IMHO, Tamil is our breath which keeps us alive and English is the need of the hour to survive.
paranthaman
இன்ரைய காலகட்டத்தில் அங்கிலம் என்பது அவசியமன ஒன்ரு தமிழ் நமது தாய் மொழி நமது கன்னை போன்ரது அது போல அங்கிலம் நமது மட்ருமொரு கன்னை போன்ரது உலகத்தோடு நம்மை தொடர்பு படுத்த தேவைபடுகிரது யதார்த நிலையை புரிந்து கொன்டு வாழ விடு அரசியல் செய்யாதிர் அங்கிலம் தெரியாமல் கஷ்ட படுரவங்கலுக்குதான் இது புரியும்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.