தொடர்புடைய படைப்புகள்

“நெல்லை மாவட்டம் கழுகுமலைக்கு அருகே உள்ள அந்த ஊரில் வசிக்கின்ற நானூறு ரெட்டியார் குடும்பத்தினர் கதறி அழுகின்றனர். தாழ்த்தப்பட்டோர் எங்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று காப்பாற்றும்படிக் கதறி அழுகிறார்கள்”

vanniarasu_velayuthapuram_6

நாதஸ்வர வித்வான் எம்.எஸ்.முத்தையாவுடன்...

கடந்த 25-4-2013 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சாதிச் சங்கக் கூட்டத்தில் கூடியிருந்த இலட்சக்கணக்கானோர் மத்தியில் நூற்றுக் கணக்கான உளவுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இந்த அதிர்ச்சித் தகவலை மருத்துவர் இராமதாசு வெளிப்படுத்தினார். அந்த ஊர் எது என்று ஊடகவியலாளர்களும் உளவுத்துறையும் ஆராய ஆரம்பித்தனர்.

8-5-2013 அன்று நாமும் அந்த ஊரைத் தேடி பயணப்பட்டோம். அந்த ஊரின் பெயர் டி.வேலாயுதபுரம். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையிலிருந்து 3வது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த டி.வேலாயுதபுரம் (மருத்துவர் இராமதாசு சொல்வதைப்போல் நெல்லை மாவட்டத்தில் இல்லை.)

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர் இராசா, ஆதித் தமிழர் பேரவையின் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், கவுதமன் ஆகியோருடன் நாமும் அந்த ஊருக்குச் சென்றோம். புளியம்பழங்களைச் சுமந்துகிடக்கும் மரங்களும், மஞ்சநெத்திப் பூக்களின் மணம் மரப்பும் மரங்களும் வழிநெடுக எங்களை வரவேற்றன. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த 47 குடும்பங்களும், ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்களும், 4 வண்ணார் குடும்பத்தினரும் அடங்கியதுதான் இந்த வேலாயுதபுரம்.

வேலாயுதபுரத்திற்குள் விடுதலைச் சிறுத்தைகள் கொடி பறக்கும் காரில் நுழைந்தவுடனேயே அந்த ஊர் மக்கள் கும்பல் கும்பலாகக் கூட ஆரம்பித்தனர். ஊர் மந்தைக்கு அருகே இரண்டு போலிசார் காவலுக்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் வேலாயுதபுரம் சேரிக்குச் செல்லும் பாதையைக் கேட்டுச் சென்றோம். எலந்தப் பழங்களை சின்னஞ்சிறு பிள்ளைகள் முள் படாமல் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். ஊருக்கும் சேரிக்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் இடைவெளி உள்ளது. சேரிக்குள் நுழைந்தோம்.

இந்தியாவிலுள்ள எல்லா ஊர்களும் சேரியை எப்படி நடத்துகின்றனவோ அப்படித்தான் வேலாயுதபுரமும் சேரியை நடத்துகிறது. ஊருக்கே செருப்புத் தைத்துக் கொடுத்தாலும் அருந்ததிய மக்கள் செருப்புப் போட்டுக்கொண்டு ரெட்டியார் தெருவுக்குள் நடக்க முடியாது. சைக்கிள் வாங்கலாம். ஆனால் உருட்டிக்கொண்டுதான் போக வேண்டும்; ஏறிச் செல்ல முடியாது. அங்குள்ள நடுநிலைப் பள்ளிக்குச் செல்லும் அருந்ததியர் குழந்தைகளுக்கு தனியேதான் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 5ஆம் வகுப்புக்கு மேல் யாரும் படிக்கக் கூடாது.

இங்குள்ள அருந்ததியர்களுக்குச் சொந்தமாக நிலங்கள் எதுவும் இல்லை. கூலி வேலைக்குத்தான் செல்லவேண்டும். பெண்கள் அங்குள்ள தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்குச் சென்று தீக்குச்சிகளை அடுக்க வேண்டும். ஆண்கள் சீமைக் கருவேல மரங்களை வெட்டி கரிக்கட்டைகளாக்கி திருநெல்வேலி, தூத்துக்குடி, கழுமலை, சங்கரன்கோவில் போன்ற ஊர்களுக்குச் சென்று விற்றுப் பிழைப்பு நடத்த வேண்டும். இதுதான் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்நிலை.

vanniarasu_velayuthapuram_7

சுபா குடும்பத்தாருடன்..

கடந்த 10-8-2006 அன்று தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலைசெய்யும் சுபா என்கிற 16 வயது பெண், “இந்த ஊரின் கொடுமையிலிருந்து எங்கள் மக்கள் விடுதலை பெற வேண்டும்” என்று எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார்.

ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் சுபாவை தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வந்துள்ளனர். சாதிப் பெயரைச் சொல்லி கேலியும் செய்து வந்துள்ளனர். சுபா மட்டுமல்லாது சேரியிலிருந்து வருகிற எல்லா பெண்களிடமும் ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கேலியும் கிண்டலும் செய்து கடுமையாக நடந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த சுபா தற்கொலை செய்துகொள்கிறார். காவல்துறையோ, வழக்கம்போல் சிலரைக் கைது செய்துவிட்டு பின்பு அவர்களை விட்டுவிடுகிறார்கள். சுபாவின் தற்கொலையை அடுத்து, போலிஸ், கோர்ட் என்று அதே சேரியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் அலைய ஆரம்பிக்கிறார். “போலிசுக்கெல்லாம் போக வேண்டாம்!” என்ற ரெட்டியார்களின் கட்டளையை மீறி கருப்பசாமி களப்பணியாற்ற ஆரம்பித்தார்.

இந்நிலையில், கடந்த 12-4-2013 அன்று ஆடு மேய்த்துக்கொண்டிருந்த கருப்பசாமி வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கு தொடர்பாக ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த 13 இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

“இந்த ஊர்ல ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டியிருக்கு தம்பி. எங்க தெருவுக்குள்ள ரேசன் கடை இல்லை. அவுங்க தெருவுக்குள்ள இருக்கிற ரேசன் கடைக்குத்தான் போக வேண்டும். யாரும் இல்லாத நேரமாப் பாத்து ஜன்னலுக்கு வெளியே நின்னுதான் வாங்க வேண்டும்” என்றார் சேரித்தெரு நாட்டாமை சுப்பிரமணி.

சுப்பிரமணியின் மகன் முத்துகிருஷ்ணனுக்கு ஊரில் அஞ்சல் அலுவலக உதவியாளராகப் பணி கிடைத்தது. “சக்கிலியப் பய தொட்ட லட்டர நாங்க வாங்கணுமா? ஒழுங்கு மரியாதையா வேலை வேணாம்னு எழுதிக் கொடுக்கச் சொல்லு” என்று தினமும் ரெட்டியார் சமூகத்தினர் சுப்பிரமணியை மிரட்ட ஆரம்பித்தனர். மிரட்டலுக்குப் பயந்து முத்துகிருஷ்ணன் வேலை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்னைக்குச் செல்கிறார். இது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆனால், முத்துகிருஷ்ணனோ சென்னைக்குப் போய் அடுத்தடுத்த போட்டித் தேர்வுகளை எழுதி இப்போது தலைமைச் செயலகத்தில் கமாண்டோவாக துப்பாக்கியும் கையுமாகப் பணிபுரிகிறார்.

நாதஸ்வர வித்வானாக அம்மாவட்டங்களில் புகழ்பெற்றவராக மதிக்கப்படும் எம்.எஸ்.முத்தையா, “இப்பகுதியில் திருவிழாக் காலங்களில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிக்கும் நாங்கள் போகக் கூடாது. ஊரில் உள்ள நிகழ்ச்சியில்தான் நாதஸ்வரம் வாசிக்க வேண்டும். அதுவும் இலவசமாகத்தான் வாசிக்க வேண்டும். உறவினர்களின் வீடுகளுக்கு நாங்கள் போக வேண்டுமென்றாலும், உறவினர்கள் எங்கள் வீடுகளுக்கு வரவேண்டுமென்றாலும் ஊர் மந்தையில் காலில் விழுந்து கேட்டுவிட்டுத்தான் போக வேண்டும், வரவேண்டும்” என்றார். சிறந்த நாதஸ்வர வித்வானான எம்.எஸ்.முத்தையாவுக்கு கடந்த ஆண்டுதான் அரசு கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்தது. ஆனால் வேலாயுதபுரமோ...?

vanniarasu_velayuthapuram_8

கருப்பசாமி குடும்பத்தாருடன்..

அடிமைத்தனத்திற்கு எதிராக 2006ஆம் ஆண்டு உயிர்நீத்த சுபாவின் மறைவுக்குப் பிறகு அருந்ததியர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பேச ஆரம்பித்தார்கள். மந்தையில் துணிச்சலாகக் கேள்வியெழுப்ப ஆரம்பித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அரிபால் ரெட்டியார், அருந்ததியர் பலரை மந்தையில் வைத்தே அடித்துள்ளார். இவர் வேலாயுதபுரத்திலிருந்து வெளியேறி துபாயில் சென்று பணிபுரிந்து வந்தவர். “நான் போகும்போது ஊரு இப்படியில்லையே. இவனுகளுக்கு யார் துணிச்சலத் தந்தது? இவனுகள ஆரம்பத்துலயே அடக்கி வைக்கணும்” என்று அரிபால் ரெட்டியார் கொதித்துப்போனதன் விளைவு சேரியைச் சுற்றி முள் வேலி அமைக்கும் பணி தொடங்கியது. 47 குடும்பங்கள் வசிக்கும் அருந்ததியர் குடியிருப்பைச் சுற்றி இரும்பு முள்வேலி அமைத்தனர். அருந்ததியர்கள் இந்த முள்வேலிக்குள்தான் வாழ வேண்டும். ரெட்டியார்களின் காடு கரைகளில் கால் வைக்கக் கூடாது. கால் வைத்தால் தீட்டுப் பட்டுவிடுமாம்.

இந்தத் தீண்டாமை முள்வேலி அமைக்கும்போது பஞ்சாயத்து தலைவர் இராதாகிருஷ்ணன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இவர் ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். “என்னையும் சக்கிலியர்களோடு ஒதுக்கி வைத்துவிடுங்கள். இதற்கு நான் உடன்படமாட்டேன்” என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். விளைவு 2011 பஞ்சாயத்துத் தேர்தலில் தோழர் இராதாகிருஷ்ணன் தோற்கடிக்கப்பட்டு அமராவதி என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மதிமுகவைச் சேர்ந்தவர். இவரது கணவர் பழனிச்சாமி ரெட்டியார்தான் இப்போது அருந்ததியர்களை ஒடுக்குவதில் மும்முரமாக இருக்கிறார். இவரோடு போஸ், அரிபால், சுப்புராஜ் (அதிமுக), இராஜேந்திரன், மணிகண்டன், நாராயண ரெட்டியாரின் மகன் பால்ராஜ், தவிட்டு ரெட்டியாரின் மகன் ரமேஷ், நாராயணன், பெத்து ரெட்டியார், சீனிச்சாமி ரெட்டியார் ஆகியோர்தான் தீண்டாமை முள்வேலி உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளைச் செய்வதில் முன்னணியில் நிற்பவர்கள். 

கடந்த 12-4-2013 அன்று கருப்பசாமி படுகொலை செய்யப்பட்டதை அடுத்துதான் இந்தத் தீண்டாமை முள்வேலி உலகுக்கே தெரிய வந்துள்ளது. 13-4-2013 அன்று அந்த ஊருக்கு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. இராஜேந்திரன் அவர்கள் தீண்டாமை முள்வேலியைப் பார்த்துக் கொதித்துப் போய்விட்டார். அவரே முன்னின்று முள்வேலியைப் பிரித்து எறியும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆனாலும், கழுகுமலை காவல்நிலைய அதிகாரிகளோ உள்ளூர்ப் பகை வேண்டாம் என்று ரெட்டிகளோடு ஒட்டி உறவாடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

இத்தகைய சேரியைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் நமக்கு வந்தது.

ஆதித்தமிழர் பேரவையின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் தோழர்கள் சிலர் எங்களைப் பார்ப்பதற்காக சேரிக்குள் வர முயன்றனர். அப்போது ஊர் மந்தையில் பெண்கள் வழிமறித்து, “ஏண்டா சக்கிலியப் பயலுகளா, எங்கடா வந்தீங்க? இந்த நாய்களுக்கு நீங்கதான் சப்போர்ட்டா? கார்ல உள்ள போன அந்த சக்கிலிய நாயிகள நாங்க வெளியே விடப்போறதில்ல...” என்று வாய்க்கு வந்தபடி கூச்சலிட்டு அவர்களை அடிக்காத குறையாக விரட்டியடித்துள்ளனர். காவலுக்கு நின்ற போலிசோ வேடிக்கை பார்த்ததைத் தவிர ஒன்றும் செய்யவில்லை. இதையறியாமல், நாங்களோ அந்தத் தீண்டாமை முள்வேலியையும் ஊர் மக்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரே ஒரு போலிஸ்காரர் எங்களிடம் வந்து, “சார் கொஞ்சம் இருங்க. அவங்க கும்பலா கூடி கோபத்தோட இருக்காங்க. போலிஸ் ஃபோர்ஸ் வந்ததுக்குப் பிறகு நீங்கள் போகலாம்” என்றார்.

vanniarasu_velayuthapuram_9

காவல் துறையினருடன்...

மாலை 5 மணிக்கு சேரிக்குள் போன நாங்கள் இரவு 7 மணியளவில் வெளியேற முயன்றோம். போக முடியவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் இரு காவலர்களுடன் வந்து, “சார் எங்க பின்னாலயே வாங்க” என்றபடி நடந்து சென்றார்கள். நாங்கள் காரில் பின்தொடர்ந்தோம். ஊர் தெருவை நெருங்கும்போதே அந்தக் குரல் கேட்டது.

“அந்தச் சக்கிலியப் பயலுகள இறக்கிவிடுங்க. இவனுங்களுக்கெல்லாம் கார் ஒரு கேடா?” என்று கத்த ஆரம்பித்தனர். கைகளில் அரிவாள், வேல்கம்பு, ஈட்டி மற்றும் கற்கள். நிலைமையை அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு எங்களிடம் மிக அமைதியாகச் சொன்னார், “சார் போகலாம் சார். பேசிட்டேன். போற வழியில மந்தையில போய் இனிமே வரமாட்டோம்னு சொல்லிட்டுப் போயிருங்க” என்றார்.

அதிர்ந்துபோன நாங்கள், “அவர்களிடம் போய் சொல்ல வேண்டுமா? இல்லை காலில் விழுந்து செல்ல வேண்டுமா? என்ன நடக்கிறது இங்கே” என்று கோபத்துடன் கேட்டோம். சப்-இன்ஸ்பெக்டர் மீண்டும் அந்த ஊர் மக்களிடமே சென்றுவிட்டார். உயர் அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு பேசிய பிறகு டி.எஸ்.பி. தலைமையில் காவல்துறையினர் வந்தனர். இரவு 8 மணிக்கு மேல்தான் சேரியைக் கடந்து ஊரையும் கடந்து வெளியேறினோம். நடந்ததை கழுகுமலைக் காவல் நிலையத்தில் புகாராக எழுதிக் கொடுத்துவிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரி வற்புறுத்தி வந்தோம்.

டி.வேலாயுதபுரம் சேரியைப் பார்வையிடச் சென்ற நமக்கே இந்த நிலை என்றால் காலங்காலமாய் அங்கேயே குடியிருக்கும் அப்பாவி அருந்ததிய மக்களின் நிலையை எண்ணிப் பாருங்கள். இலங்கையில் முள்வேலி முகாம்களை அகற்றக் கோரி தமிழர்களெல்லாம் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிற சூழலில்தான், சொந்த மண்ணிலேயே முள்வேலிக்குள் மண்ணின் மைந்தர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்.

இவ்வளவு கொடுமைகளையும் செய்துவிட்டு தலித்துகள்தான் கொடுமை செய்கிறார்கள் என்று மருத்துவர் இராமதாசு பேசுவது நியாயம்தானா? அவர் பொது மேடையில் நாகரிகமாகப் பேசுவதில்லை. பேசும் பேச்சிலும் உண்மை இல்லை. ஆனால் தொடர்ந்து எங்களிடம் ஆதாரம் இருக்கிறது என்று சவால் விட்டுக்கொண்டேயிருக்கிறார். 'விடுதலைச் சிறுத்தைகள் பெண்களைக் கடத்துகிறார்கள், அதை வைத்துப் பேரம் பேசுகிறார்கள்' என்று வாய்க்கு வந்தபடி பேசி ஆதாரம் இருப்பதாகச் சொல்கிறார். ஆனால் இதுவரை எந்த ஆதாரத்தையும் காட்டியதில்லை. இல்லாததை எப்படிக் காட்ட முடியும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இராமதாசு பேசுவதெல்லாம் பொய்யும் புரட்டும்தான் என்பதை இந்த வேலாயுதபுரம் சேரி உலகுக்குக் காட்டுகிறது. வேலாயுதபுரம் சேரிமக்களிடம் நாங்கள் வந்த நோக்கம் குறித்துப் பேசும்போது, “நீங்கதான் ரெட்டியார்களைக் கொடுமைப்படுத்துறதா டாக்டர் இராமதாசு சொன்னாரு. உண்மையான்னு பார்க்க வந்தோம்” என்று சொன்னபோது, ஒரு கிழவி கோபத்தோடு, “அந்த பிராடுகாரப் பயல இங்கக் கூட்டியா, அவனும் எங்கத் தாலிய அறுத்துட்டுப் போகட்டும்” என்றார்.

மருத்துவர் அவர்களே உங்கள் குடும்ப சுயநலத்திற்காக ஏன் இப்படி சேரிமக்களின் உயிரை எடுக்கிறீர்கள்?

- வன்னிஅரசு

Comments

24 comments

24
Guest
நெஞ்சு குமுறுகிறது....
வே. பாண்டி, தூத்துக்குடி
இது போன்ற கொடிய நிலை பல கிராமங்களில் நடந்து வருவது மிகவும் வேதனைக்குரியது. அரசு எவ்வளவு கடுமையான சட்டங்களைப் போட்டாலும் மக்களின் மன நிலையில் மாற்றம் தேவை. அந்தக்கால அரசியல் தலைவர்கள் மக்களின் மன நிலையை மாற்றித் தம் பக்கம் திருப்புவதில் முனைப்பு காட்டி அதில் வெற்றியும் பெற்றனர். ஆனால் தற்போதைய அரசியல் தலைவர்கள் வாக்கு வங்கி அரசியல் நடத்தி ஆட்டு மந்தைகளோடு தாங்களும் மக்களின் சாதி வெறிக்கு ஆளாக்கி இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டனர். இதில் எந்த அரசியுல் கட்சியும் விதி விலக்கல்ல. போதாக்குறைக்கு மரம் வெட்டியார் போன்ற தலைவர்களின் இழிசெயல் வேறு. மிகவும் கவலை அளிக்கக் கூடிய நிலை..
Saravanan
நாங்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று கூறி சலுகைகள் பெறுகிறவர்கள், தனக்கும் கீழே ஒரு சமூகத்தை நசுக்கி வைக்க நினைக்கிறது. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. ராமதாசை போன்றவர்களிடமிருந்து இளைங்ர்களை காக்காவிட்டால் தமிழகம் 500 வருடம் பின்னோக்கி போய்விடும்.
த.முத்துகிருஷ்ணன்
வன்னி அரசின் ஜாதி மோதலை தூண்டும் அபாண்டமான பொய் பரப்புரை செய்திக்கு மறுப்பு அறிக்கை http://velayuthapuram.blogspot.in/2013/05/13-may-2013.html
குமார்
இதயும் ஒருக்கா படிங்க http://velayuthapuram.blogspot.in/2013/05/13-may-2013.html
அருள்செள்வன்
மூன்று புகைப்படங்கள் மட்டும் நீங்கள் சொல்வதை உண்மையாக்கிவிடாது.... நல்ல ஒரு புனைவு... தலித் மக்களை உங்களை விட யாரும் அதிகமாக கொள்ளை அடித்தது இல்லை...
viki
சரி..எந்த ஒரு பிரச்சனையானாலும் இரு பக்கமும் கருத்துக்களை அறிந்து அதன்படி நியாயத்தை நோக்குவதுதானே முறை.

வன்னி அரசின் குற்றச்சாட்டுகளுக்கு வேலாயுதபுரம் மக்கள் எழுதிய விளக்கத்தையும் படித்துப் பாருங்கள்.. வன்னி அரசின் கட்டுரை உண்மையை திரித்து நூறு சதவீதம் பொய் கலந்து எழுதப்பட்டது புரியும்..

http://velayuthapuram.blogspot.in/2013/05/13-may-2013.html
வேலாயுதபுரம்
காலங்காலமாக விவசாயத் தொழில் ஒன்றை மட்டும் நம்பி வாழ்ந்து வரும் வேலாயுதபுரம் ரெட்டியார் சமுதாய மக்களின் விளை நிலங்களுக்குள் , வேண்டுமென்றே ஆடு மாடுகளை மேயவிட்டு விவசாய பெருமக்களின் வயிற்றில் அடிப்பது சரியா?

இதன் பிறகு , தங்கள் சொந்த செலவில் தங்களது விவசாய நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை பாதுகாப்பதற்காக , அந்த விவசாயப் பெருமக்கள் தங்கள் நிலத்தில் முள்வேலி அமைத்து கொண்டார்கள் . ஒரு சில சமூக விரோதிகளால் தவறாக இச்செய்தி தீண்டாமை வேலி என்று பரப்பப் பட்டது. இதை தீண்டாமை வேலியாக கருத முடியுமானால் , அவரவர் வீடுகளை சுற்றி பராமரிப்புக்காக போடப்படும் வேலிகள் தீண்டாமை வேலிகளா ? மேலும் அலுவலகங்கள் , பள்ளிகள் , கல்லூரிகள் அருகில் தலித் சமுதாயத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்து வந்தால், பாதுகாப்பிற்காக இருக்கும் முள்வேளிகளை தீண்டாமை வேலிகளாக கருதலாமா...?

தீண்டாமை வேலி என்று தவறாகப் பரப்பப் படும் செய்திகளனைத்தும் பொய்யான தகவல்கள் என்பதை தகுந்த ஆதாரத்தோடு குறிப்பிடுகிறோம்.

1. திரு கதிர்வேல் சுந்தரம் அவர்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தின் பட்டா எண் 1069 ந் புல எண் 102 / 8.

2. ஜெயராம் ரெட்டியார் மற்றும் கந்தசாமி ரெட்டியார் . இந்த சகோதரர்களுக்கு சொந்தமான நிலத்தின் பட்டா எண் 758 ந் புல எண் 84 / 1ப் .

3. ராமலிங்க ரெட்டியார் அவர்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தின் பட்டா எண் 936 ந் புல எண் 102 / 9.

4. ராமலிங்க ரெட்டியார் அவர்களின் மனைவி லட்சுமியம்மாள் அவர்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தின் பட்டா எண் 671 ந் புல எண் 84 / 2ஆ.

இந்த நிலத்தின் விவரங்களை கொண்டு ,இது தீண்டாமை வேலியா அல்லது பாதுகாப்பு வேலியா என்பதை அறிந்து கொள்ளவும் .

இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் நில உரிமையாளர்களால் வழக்கு தொடரப்பட்டுள்ளது..
Nallasivam
அவர்களை குறை கூறி ஒன்ட்றும் பயனில்லை. நம் மக்களுக்கு விழிப்புணர்சி தேவை. சினிமா , இலவசம், போதை, மது, மாது , இட ஒதுக்கீடு என்று நம் சுய மரியாதையை இழந்து வருகிறோம். நமக்கு சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் தேவை. காசுக்கு ஓட்டுப்போட்டு கேடு கெட்டவர்களை பதவியில் அமர்த்தினோம். நீதியை எப்படி எதிர்பார்ப்பது. ஜாதிய வெறியர்களை தூக்கிலிட சட்டம் கோருவோம்..
ஷாலி
தமிழ்நாட்டில் சேரி என்பது பன்றித் தொழுவத்தை விட கேவலமாக அசிங்கமாக பார்க்கப்படுகிறது.ஆனால் உண்மையான பன்றிகள் சுதந்திரமாக உயர்சாதி தெருக்களில் உலவுகின்றன. வேலாயுதபுரத்தில் சக்கிலியர்கள் இன்னும் மனிதர்களாகவே மதிக்கப்படுவதில்லை என்பதை நினைத்தாலே குமட்டுகிறது.
சா”தீ”க்குள் புகுந்த தமிழன் இனி ஒன்றுபடுவது கானல் நீரே!
இராமன் தன் மனைவியை அக்கினியில் இறக்கி சுத்தப்படுத்தியதுபோல்,இராமதாசும் சேரிகளை அக்கினியில் குளிப்பாட்டி சுத்தப்படுத்துகிறார்.”குடிதாங்கி” மீது இடி விழுகட்டும்.
Guest
வன்னிய சமுதாய இளைஞர்கள் இச்செய்தியை எப்படி பார்ப்பார்கள்
வன்னிய சமுதாய மீட்பரா மருத்துவரை என்னும் அவர்களுக்கு இச்செய்தியை எப்படி கொண்டுபோய் சேர்ப்பது
matru karuthu
அப்படின்னா, பறயர் பள்ளர் சகிலியர் ஒரே கட்ச்சி வைத்து நடத்த யரும் தடை போடவில்லை பின் ஏன் சாதிக்கு ஒருகட்ச்சி வைத்து நடத்துகின்றீர்? அப்படி என்றாள் நேன்களும் சாதியாய் தனே திரலுகின்ட்றீர்கள்.
த.முத்துகிருஷ்ணன்
வன்னி அரசின் ஜாதி மோதலை தூண்டும் அபாண்டமான பொய் பரப்புரை செய்திக்கு மறுப்பு அறிக்கை

13 மய் 2013
க.வேலாயுதபுரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசின் அபாண்டமான பொய் பரப்புரை செய்திக்கு க.வேலாயுதபுரம் கிராம ரெட்டியார் சமுதாய மக்கள் சார்பாக மறுப்பு அறிக்கை..
கடந்த 8௫௨013 அன்று எங்கள் கிராமத்திர்க்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னி அரசு அறிக்கையில் உள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளிக்க விரும்புகிறோம்.. இணைய தள செய்தி தளங்களில் இந்த குற்றச்சாட்டு வெளியிடப்பட்டிருக்கிறது..

குற்றச்சாட்டு 1:
அருந்ததிய இனப்பெண் சுபா-வை ரெட்டியார் இளைஞர்கள் கேலியும் கிண்டலும் செய்ததால் தற்கொலை செய்துகொண்டார் என வன்னி அரசு தெரிவித்துள்ளார்..

விளக்கம் :
உண்மையில் அந்தப்பெண் குடும்ப பிரச்னையின் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.. அப்போது சமூக நல்லிணத்தை சீர்குழைக்க நினைக்கும் சிலரின் தூண்டுதலால் புகார் அளிக்கப்பட்டது.. கிராமத்தை சேர்ந்த ரெட்டியார் பெண்கள் ஜாதியை சொல்லி திட்டியதால் தற்கொலை செய்துகொண்டார் என புகார் அளிக்கப்பட்டது.. சில ரெட்டியார் பெண்களை வன்கொடுமை சட்டத்தில் கைதும் செய்தார்கள்.. அரசாங்கத்திடம் நிவாரணமும் வாங்கிக்கொண்டர்கள் அருந்ததியினர்... இது நடந்து 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.. அந்த புகார் பொய் என நீதிமன்றத்தில் வழக்கு முடிக்கப்பட்டுவிட்டது.. 5 வருடங்களுக்கு பின் திடீரென வன்னி அரசு, ரெட்டியார் இளைஞர்கள் கேலி செய்ததால் தற்கொலை செய்துகொண்டார் என பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார்..

குற்றச்சாட்டு 2:
சுபா தற்கொலை வழக்குக்காக கருப்பசாமி என்பவர் போலிஸ், கோர்ட் என சென்றதால் கொலை செய்யப்பட்டதாக கூறுகிறார்..

விளக்கம் :
சுபா தற்கொலை வழக்கு என்று கோர்ட்டில் முடிவுக்கு வந்துவிட்டது.. அந்த வழக்கே பொய் என்று ஆனபின் கருப்பசாமி மரணத்தில் ரெட்டியார்களை பழிசொல்லி வழக்கில் அவர்களை கோர்த்து விட நினைக்கிறார் வன்னி அரசு.. கருப்பசாமி மரணம் சம்பந்தமாக காவல்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கப்பட்டுவருகிறது.. காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது.. அருந்ததியினர் கொடுத்த பட்டியலில் இருந்தவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருக்கின்றனர்..

குற்றச்சாட்டு 3:
முத்துகிருஷ்ணன் என்பவருக்கு கிடைத்த அஞ்சலக அலுவலக பணியாளர் பணியை ஜாதியை சொல்லி ரெட்டியார்கள் தடுத்ததாக சொல்லி இருக்கிறார்..

விளக்கம் :
6 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரின் கிராம அஞ்சல் அலுவலகத்தில் பகுதி நேர ஊதியராக பணியாற்றியவர் எங்கள் சமூகத்தைச் சார்ந்த மாற்றுத் திறனாளி முத்துலட்சுமி என்ற பெண். அவர் முதுநிலை பட்டம் பெற்றவர். அவரின் தந்தை முன்னால் இராணுவவீரர்.. இந்த வேலையை நிரந்தரமாக்க கோரிய சமயத்தில், அவரிடம் அஞ்சல் துறையில் பணியாற்றிய வெறொரு ஊரை சேர்ந்த தலித் இனத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் சம்பந்தமில்லாத ஒரு படிவத்தை கொண்டுவந்து உங்கள் வேலையை நிரந்தரமாக்க வேண்டுமென்றால் இப்பொழுதிருக்கும் தற்காலிக பணியை ராஜினாமா செய்ய வேண்டும் என நயவஞ்சமாக பேசி கையெழுத்தை பெற்று சென்று அவருக்கு வேண்டப்பட்ட வேறொரு ஊரை சேர்ந்த தலித் நபரை (இவர் அருந்ததியினத்தை சேர்ந்தவர் அல்ல) அப்பணியில் அமர்த்த திட்டமிட்டார். இதனை சில நாட்கள் கழித்து அறிந்த எம் மக்கள் அஞ்சலக அதிகாரிகளிடம் பேசி அப்பெண்ணையே மீண்டும் பணியிலமர்த்த முயற்சி செய்தனர்.இதனை அறிந்த அந்த தலித் சமுதாய ஊழியர் எங்கள் ஊரில் பிரிவினையை உண்டாக்கும் நோக்கத்தோடு, சுப்பிரமணி என்பவரின் மகன் முத்துகிருஷ்ணனை அப்பணியில் சேர்த்து விடுவதாக கூறி அவரையும் ஏமாற்றி , தலித் சமூக அஞ்சலக ஊழியர் அவரின் உறவினரை பணியில் அமர்த்தும் நோக்கத்தோடும் நயவஞ்சமாக திட்டமிட்டு அதனை செயல்படுத்தி காட்டி இரு சமூக மக்களிடையே பிரிவினையை உண்டாக்கினார். இதனை அறியாத அருந்ததிய இன மக்கள் ரெட்டியார்கள் தான் முத்து கிருஷ்ணனை அப்பணியில் சேரவிடாமல் தடுத்ததாக ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டார்.

குற்றச்சாட்டு 4:
ரேசன் கடை ரெட்டியார்கள் தெருவிர்க்குள் உள்ளது.. ஆகையால் அருந்ததியினர் பிரச்னையை சந்தித்துவருகிறார்கள்.. 5-ம் வகுப்புக்கு மேல் அருந்ததியினர் படிக்கமுடியாது..

விளக்கம் :
கழுகுமலை டொ கயத்தார் செல்லும் சாலையின் இடதுபுரம் ஊருக்குள் உள்ளே நுழையும் சாலையின் ஓரத்திலேயே ரேசன்கடை உள்ளது.. ரெட்டியார் தெருவுக்குள் இல்லை.. வன்னி அரசின் அறிக்கையிலேயே முத்துகிருஷ்ணன் என்பவர் படித்தவர் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.. அருந்ததியினர் மேற்படிப்பு படித்து இருக்கின்றனர், இப்போதும் படிக்கின்றனர்... உள்ளங்கை நெல்லிக்கனி..

குற்றச்சாட்டு 5:
நாதஸ்வரவித்வான் முத்தையா-வை இழிவு படுத்தியதாக சொல்லி இருக்கிறார்..

விளக்கம் :
ஏறக்குறைய 6 வருடங்களாக அருந்ததியின மக்களோடு தொடர்பில் இல்லாமல் இருந்துவரும் ரெட்டியார் மக்கள் மீது தவறான குற்றச்சாட்டை சொல்லுகிறார்.. சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வின்போது கூட அடிப்படை வசதிகள் மட்டுமே குடிநீர் போன்ற சில குறைகள் இருப்பதாக மட்டுமே அருந்ததியின மக்கள் சொல்லி இருக்கிறார்கள்.. அது உள்ளாட்சி அமைப்பால் தீர்க்கப்பட்டுவிட்டது..

குற்றச்சாட்டு 6:
அருந்ததியின குடியிருப்பை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டது..

விளக்கம் :
அருந்ததியின குடியிருப்பை சுற்றி இருக்கக்கூடிய விளை நிலங்களில் பயிர்களை ஆடு, மாடுகளை விட்டு தொடர்ந்து சேதப்படுத்தியதால் அந்த விவசாய நில உரிமையாளர்கள் அவர்கள் இடத்தில் வேலிகளை அமைத்திருந்தார்கள்.. இந்த வேலிகளை அகற்ற முழுமூச்சாக அருந்ததியின மக்கள் அதிகாரிகளுக்கும், ஆணையங்களுக்கும் நெருக்கடி கொடுத்தார்கள்.. நிலத்தின் பாதுகாப்புக்காக போடப்பட்ட வேலிகளை தீண்டாமை வேலிகள் என பொய்யாக பரப்புரை செய்ததால் நெருக்கடிக்கு ஆளான அதிகாரிகள் வேலியை சில வாரங்களுக்கு முன்பு அகற்றியுள்ளார்கள்..
காலங்காலமாக விவசாயத் தொழில் ஒன்றை மட்டும் நம்பி வாழ்ந்து வரும் வேலாயுதபுரம் ரெட்டியார் சமுதாய மக்களின் விளை நிலங்களுக்குள் , வேண்டுமென்றே ஆடு மாடுகளை மேயவிட்டு விவசாய மக்களின் வயிற்றில் அடிப்பது சரியா?
இதன் பிறகு , தங்கள் சொந்த செலவில் தங்களது விவசாய நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை பாதுகாப்பதற்காக , அந்த சிறு விவசாய மக்கள் தங்கள் நிலத்தில் முள்வேலி அமைத்து கொண்டார்கள் . ஒரு சில சமூக விரோதிகளால் தவறாக இச்செய்தி தீண்டாமை வேலி என்று பரப்பப் பட்டது. இதை தீண்டாமை வேலியாக கருத முடியுமானால் , அவரவர் வீடுகளை சுற்றி பராமரிப்புக்காக போடப்படும் வேலிகள் தீண்டாமை வேலிகளா ? மேலும் அலுவலகங்கள் , பள்ளிகள் , கல்லூரிகள் அருகில் தலித் சமுதாயத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்து வந்தால், பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டு இருக்கும் வேலிகளை தீண்டாமை வேலிகளாக கருதலாமா...?
தீண்டாமை வேலி என்று தவறாகப் பரப்பப் படும் செய்திகளனைத்தும் பொய்யான தகவல்கள் என்பதை தகுந்த ஆதாரத்தோடு குறிப்பிடுகிறோம்.

1. திரு கதிர்வேல்சுந்தரம் அவர்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தின் பட்டாஎண் 1069ன் புலஎண் 102/8

2. ஜெயராம் ரெட்டியார் மற்றும் கந்தசாமி ரெட்டியார் . இந்த சகோதரர்களுக்கு சொந்தமான நிலத்தின் பட்டா எண் 758 ந் புல எண் 84 / 1ப் .

3. ராமலிங்க ரெட்டியார் அவர்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தின் பட்டாஎண் 936 ந் புல எண் 102/9.

4. ராமலிங்க ரெட்டியார் அவர்களின் மனைவி லட்சுமியம்மாள் அவர்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தின் பட்டா எண் 671 ந் புல எண் 84 / 2ஆ.
இந்த நிலத்தின் விவரங்களை கொண்டு ,இது தீண்டாமை வேலியா அல்லது விளை நில பாதுகாப்பு வேலியா என்பதை அறிந்து கொள்ளவும். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் நில உரிமையாளர்களால் வழக்கு தொடரப்பட்டுள்ளது..

குற்றச்சாட்டு 7:
முள்வேலி அமைக்க கிராமத்தை சேர்ந்த இந்திய கம்யூனிஷ்ட் கட்சிக்காரர் இராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார் என வன்னி அரசு சொல்லி இருக்கிறார்..
விளக்கம் :
ஒருமுறை இராதாகிருஷ்ணன் பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.. அதுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.. அதன் பின் இராதாகிருஷ்ணன் தேர்தலிலேயே போட்டியிடவில்லை.. பெண்களுக்கான பஞ்சாயத்து உள்ளாட்சி ஒதுக்கீடாக மாற்றப்பட்டுவிட்டதால் போட்டியிடவில்லை.. முன்பு சொன்ன, சுபா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் இராதாகிருஷ்ணனின் மனைவி-யையும் குற்றவாளியாக சேர்த்து புகார் அளித்து இருந்தனர் அருந்ததியின மக்கள்... பொய்யான வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட ரெட்டியார் சமுதாய பெண்களில் அவரும் ஒருவர்.. அந்த வழக்கு பொய்வழக்கு என்பது கோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டது என்பதை முதல் குற்றச்சாட்டு விளக்கத்தில் சொல்லி இருக்கிறோம்.. தேர்தலில் போட்டியிடாமலேயே தோல்வியடைய செய்யப்பட்டார் என கூறுவது எந்த விதத்தில் சரி..

குற்றச்சாட்டு 8 :
ரெட்டியார் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலரின் பெயரை குறிப்பிட்டு இருக்கிறார்.. இவர்கள் தான் தீண்டாமையை செய்கின்றனர் என்று சொல்லி இருக்கிறார்..
விளக்கம் : சில மாதங்களுக்கு முன் ரெட்டியார் சமுதாய மாணவிகள் பள்ளி செல்லும் வ்ழியில் வழிமறித்த அருந்ததியின இளைஞர்கள் அவர்களை வழிமறித்து எங்கே படித்துவிட்டு வருகிறீர்களா.. எங்களோடு வாருங்கள் நாங்கள் உங்களுக்கு வேறு பாடம் சொல்லித்தருகிறோம் என சொல்லி தவறாக நடக்க முயற்சித்துள்ளார்கள்.. இது சம்பந்தமாக கழுகுமலை காவல்நிலையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. அப்போது இனிமேல் நாங்கள் இப்படி நடந்துகொள்ளமாட்டோம் என்று அருந்ததியின இளைஞர்கள் கழுகுமலை காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்துள்ளார்கள். அப்போது காவல்நிலயத்துக்கு மாணவிகளோடு புகார் அளிக்க சென்றவர்களில் பலர் பெயரைத்தான் வன்னி அரசு குறிப்பிட்டு இருக்கிறார்.. பள்ளி மாணவிகளை தொந்தரவு செய்த வழக்குக்கு காவல்நிலையத்துக்கு புகார் அளிக்க சென்ற போஸ், சுப்புராஜ், அரிபாலன் ஆகியோரின் கிணற்றில் இருந்த மோட்டார்களை அதன் பின் அருந்ததியின இளைஞர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அது சம்பந்தமாக காவல்துறையில் வழக்குபதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் அருந்ததியினர் கைது செய்யப்பட்டனர்.. 6 வருடங்களுக்கு முன்பு நடந்த அருந்ததியின கோவில் திருவிழா-வின் போது ரெட்டியார் இனப்பெண்கள் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி அருவருப்பாக பேசியுள்ளனர். ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள் என கேட்ட ரெட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மீது பொய்யான வன்கொடுமை வழக்கை அப்போதே பதிவு செய்தனர்..

குற்றச்சாட்டு 9:
வன்னி அரசு உடன் வந்தவர்களை ஜாதிப்பெயர் சொல்லி திட்டியதாக-வும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு தாக்க முற்பட்டதாகவும் மாலை 5 மணிக்கு ஊருக்குள் உள்ளே சென்றவர்களால் 8 மணிக்கு மேல்தான் வெளியேற முடிந்ததாகவும் சொல்லி இருக்கிறார்..
விளக்கம் :
அன்றைக்கு வேலாயுதபுரம் ஊருக்கு வந்த வன்னி அரசு மற்றும் உடன் வந்தவர்கள் அங்கே இருந்த பெண்களிடம் ஆபாசமாக பேசி, ஆபாச செய்கைகளை காட்டி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும்விதமாக ஆயுதங்களை காட்டி மிரட்டி, சென்றிருக்கின்றனர்.. இன்றைக்கு இவ்வளவு பேர் என்று நினைக்கிறீர்களா..? இனி 200 வாகனங்களில் வருவோம் உங்கள் ஆண்களை வெட்டிக்கொன்றுவிட்டு உங்களை மானபங்கப்படுத்தாமல் விடமாட்டோம் என்று சொல்லிவிட்டு அருந்ததியின மக்கள் பகுதிக்கு சென்றுவிட்டனர்... எழுத முடியாத ஆபாசவார்த்தைகளை சொல்லி இருக்கிறார்கள்.. இதனால் பதட்டம் அடைந்த பெண்கள் ஒன்றுகூடி ஒரு இடத்தில் பாதுகாப்பாக இருந்திருக்கிறார்கள்.. ஊரின் எல்லையில் இருந்த காவலர்கள், உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்து அவர்கள் வந்தனர்.. அதன்பின் கழுகுமலை காவல்நிலையத்தில் வன்னி அரசு உள்ளிட்ட அவரோடு வந்த பலரின் மீது பெண்கள் மீது ஆபாசமாக பேசி தவறாக நடந்துகொள்ள முயற்சித்தல், மிரட்டுதல் போன்ற புகார்கள் அளிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது..

வேலாயுதபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள், மாணவிகள் மற்றும் ஆண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னி அரசு மற்றும் அவரோடு வந்த பலர் மீது உரியநடவடிக்கைகள் மேற்க்கொண்டு தென்மாவட்டங்களை ஜாதிய மோதல்களால் துண்டாட நினைக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்..

பலமுறை நாங்கள்பாதிக்கப்பட்டிருந்தாலும் மனிதாபிமானம் கருதி காவல்நிலையத்துக்கு செல்லவில்லை.. அதை எல்லாம் இங்கு எழுதினால் 100 பக்கங்களுக்கு மேல் ஆகும்.. எங்களுக்கு விவசாயம்தான் முக்கிய தொழில்.. நாங்கள் விவசாயம் தொடர்ந்து செய்வதும், நிலங்களை தரிசாகப்போட்டு வேறு வேலைக்கு செல்வ்தும் ஜாதிய மோதல்களை தூண்டிவிடுபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை பொறுத்தே.. கடந்த வருடம் மழை சரியாக இல்லாததால் மிகப்பெரிய நட்டத்தை அடைந்திருக்கிறோம்.. இயற்கையும் வஞ்சிக்கிறது, விளையும் பயிர்களும் சேதப்படுத்தப்பட்டால் நாங்கள் என்ன செய்வது..

மனசாட்சியுள்ள நடுநிலையாளர்களை ரெட்டியார் சமுதாய மக்கள் சார்பாக கேட்கிறோம், பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதும், விவசாயத்தை வாழ்வாக கொண்ட மக்களின் வாழ்வை அழிக்கும்விதமாக நடந்துகொள்வதும் அதை ஏன் என்று கேட்டால் வன் கொடுமை சட்டத்தால் பொய் வழக்கு பதிந்து போலிசுக்கும், கோர்ட்டுக்கும் எங்களை அழையவிடுவதும் எந்த வகையில் நியாயம்.. வன்கொடுமைகள் ஒழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. அதை ஆயுதமாக பயன்படுத்தி பொய்யான வழக்குகளை பதிந்து எங்கள் வாழ்வை சிதைப்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா..? வளமான தமிழகத்தை ஒன்றுபட்டு கட்டமைக்க வேண்டிய தருணத்தில் ஜாதிய மோதல்கள் ஏற்படுவது நம் வளர்ச்சியை தடுக்காதா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டிக்கொள்கிறோம்...

நன்றி,
இப்படிக்கு
க.வேலாயுதபுரம் ரெட்டியார் சமுதாய மக்கள்
இரா.ஜவஹர்
திரு த.முத்துக்கிருஷ்ணன் சொல்வதிலும் உண்மை இருக்கலாமே என்றுதான் படித்துக் கொண்டே வந்தேன்.

ஆனால் “ அன்றைக்கு வேலாயுதபுரம் ஊருக்கு வந்த வன்னி அரசு மற்றும் உடன் வந்தவர்கள் அங்கே இருந்த பெண்களிடம் ஆபாசமாக பேசி, ஆபாச செய்கைகளை காட்டி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும்விதமாக ஆயுதங்களை காட்டி மிரட்டி, சென்றிருக்கின்றனர்.. இன்றைக்கு இவ்வளவு பேர் என்று நினைக்கிறீர்களா..? இனி 200 வாகனங்களில் வருவோம் உங்கள் ஆண்களை வெட்டிக்கொன்றுவிட்டு உங்களை மானபங்கப்படுத்தாமல் விடமாட்டோம் என்று சொல்லிவிட்டு அருந்ததியின மக்கள் பகுதிக்கு சென்றுவிட்டனர்... எழுத முடியாத ஆபாசவார்த்தைகளை சொல்லி இருக்கிறார்கள். “ என்ற பகுதியைப் படித்ததும் இவருடைய மறுப்பு நம்பகத்தன்மை இல்லாதது என்பது தெரிந்துவிட்டது .
த.முத்துகிருஷ்ணன்
பெண்கள் மீதான வன்முறைக்கு எல்லா இடத்திலும் நடக்கிறது, ஆனால் மீதான பாலியல் சீண்டல்களுக்கு அந்தந்த இடங்களில் பெரியவர்கள் கண்டித்து அடக்குவார்கள். அங்கு பெண்கள் மீதான வன்முறையாகத்தான் பார்க்கப்படும். ஆனால் சில இடங்களில் அதேபோல் சில இளைஞர்கள் அதுபோல நடக்கும்போது அது அவர்கள் பின்னால் இருக்ககும் கட்சியை வைத்துக்கொண்டு பாலியல் சீண்டல்களை சாதிக் கலவரமாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர்களும் அதுபோல பெண்களுக்கு எதிராக நடந்துகொண்டு காவல்துறையிடம் தங்கள் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு இனி இதுபோல் நடக்க மாட்டோம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்துள்ளார்கள். இதுபோன்ற பிரச்சனைகளை ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதாக சொல்லிக் கொள்ளும் கட்சியினர் தூண்டிவிடுவதோடு மேலும் கலவரத்தை உருவாக்குவதுபோல் நடந்து கொள்கிறார்கள். சம்பந்தப்பட்ட இந்தக் கிராமத்தில் மதிமகவினர் சொற்பம்தான், ஆனால் வன்னியரசு அவர்கள் அங்கு இருக்கும் திமுகவினர் பற்றி அந்தக் கட்சி பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவே இல்லையே அது ஏந் வன்னி அரசுவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் அரசியல் ஆதாயத்திற்காக சாதிய வன்முறையை தூண்டிவிடுவது தவறான ஒன்றாகும். தலித்களின் வாழ்வாதாரங்களுக்கும், நல்ல கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் போராடுவதன் மூலம் தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை முன்னேற்ற முடியும். அதற்கு மாறாக இதுபோன்று இளைஞர்களை தவறான வன்முறைப் பாதைக்கு அழைத்துச் செல்வதன்மூலம் பின்னோக்கித்தான் இழுத்துசெல்ல வழிவகுக்கும்.
த.முத்துகிருஷ்ணன்
கடந்த காலங்களின் பரிணாம வளர்ச்சி நிலைகளை பட்டியலிட்டால்,தலித் மக்களின் வாழ்வுக்கும் அவர்களின் உரிமைக்கும் அவர்களின் பெயரில் கட்சி நடத்துபவர்கள் எதுவுமே செய்யவில்லை என்பது தெளிவாக தெரியும்.பிற சமூகத்தவரிடையே மோதல் போக்கை வளர்ப்பதும், பார்ப்பனியத்தை எதிர்ப்பதும்,வருடா வருடம் அம்பெத்கார் பிறந்த நாள் கொண்டாடுவதும் மட்டுமே தலித் மற்றும் ஆதிதிராவிட மக்களின் செயலாகவே அவர்கள் வழி நடத்தப்பட்டிருக்கின்றார்கள் என்பது தான் உண்மை.தலித் மக்களின் கல்வி,பொருளாதாரம்,வாழ்வுரிமை,சமத்துவ வாழ்வுக்கான உத்ரவாதம் ,மேலும் அம்மக்களின் அடுத்த தலைமுறைகளுக்கான வாழ்வியல் நெறிமுறைகள் இது எதுவுமே அவர்களின் அரசியல் வாதிகளால்(!!??) அவர்களுக்கு பெற்று தரப்படவில்லை,மாறாக தலித் மக்கள் வெறும் ஓட்டு வங்கிகளாகவும்,பிரச்சார ஊழியர்களாகவும், மட்டுமே இவர்கள் பயன்படுத்தினார்கள்.இதில் மாற்றம் நிகழ்ந்து அனைத்து மக்களின் சமூக சீர்த்திருத்ததுடன் அவர்களும் வாழ சாதி அரசியல் ஒழிந்தால் மட்டுமே சாத்தியம்.
- - Musthaqeem Raja
Joshua Isaac
பாதிக்கப்பட்டுள்ள எங்கள் சேரிக்கு ஏன் கீற்று போன்ற 'நடுநிலையாளர்கள்' குழுவாக சென்று ஆய்வு நடத்தக் கூடாது ? அப்போதாவது 'உண்மை' வெளிவரட்டும்.
Santhakumar
அரசாங்கம் என்ன பன்னுது.....
Kalai
முத்துக்கிருஷ்ணன் நான் ஒரு வழி சொல்றேன். ரெட்டியார் பசங்க சக்கிலியப்பெண்களையும் சக்கிலையப்பசங்க ரெட்டிப்பெண்களையும் கண்ணாலம் கட்டி ஒரு புது சமூகத்தை உருவாக்கி விட்டால் எல்லாரும் ஒத்துமையா வாழலாமே? எது தடுக்கிறது?
rajan
வன்னி அரசு உங்கள் எழுத்து பொலி
PERUMAL
நன்பா,மிக சிறப்பாக உண்ணமையை பதிவு செயிது உள்ளர்
PERUMAL
மிக சரியான கருத்து
rajan
உன்மையை எழுதுவதாக நினைத்து உங்களின் பொலி முகத்தை காட்டுகின்ரீர் வன்னரசு! கட்டாயம் அன்னியபடுதலை மட்டுமே விளைவிக்கும் .
gopi
திரு.முத்துக்கிருஷ்ணண் அவர்களுக்கு,
நீங்கள் காட்டிய ஆதாரங்கள் விளக்கங்களை பார்த்தேன் இருந்தாலும் உண்மை கள நிலவரம் அறிய நேரில் வந்து விசாரித்தால் தான் தெரியும். உங்களுடைய வார்த்தைகளை நம்பி நேரில் வந்து ஆய்வு செய்து அவர்கள் மீது குற்றம் இருக்குமாயின் பகீரங்கமாக காலில் விழுந்து மன்னிப்புக்கேட்கிறேன். தனியாக வர நான் தயார் ஆனால் வன்னி அரசு அவர்கள் சொன்னதுபோல் ஒரு சம்பவம் நடந்தால் தீண்டாமை தென்பட்டால் எனது உயிருக்கு என்ன உத்திவாதம். அப்படி நடந்தால் நீங்கள் பகிரங்கமாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தயாரா இல்லை மன்னிப்பு தான் கேட்டு விடுவீர்களா?
முடியாதல்லவா.அப்படியானால் வாயை மூடிக்கொண்டு போங்கள். எங்களுக்கு பொய் பரப்புரை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.