சோவியத் ஒன்றியமும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் வீழ்ந்து விட்டன. சீனா சோஷலிசப் பாதையில் இருந்து மெதுவாக விலகத் தொடங்கி, இப்பொழுது முழுவதுமாக முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பி விட்டது. சோஷலிசப் பாதையை மறுத்து முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பிய பின், பொருளாதார வளர்ச்சியில் சீனா மிகப் பெரும் சக்தியாக உருவெடுத்து இருக்கிறது. சோஷலிசப் பாதையைத் தக்க வைத்துக் கொள்ள, கியூபா, வடகொரியா, வியட்னாம் போன்ற நாடுகள் போராடிக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் மார்க்சியம் தேவை தானா என்று முதலாளித்துவ அறிஞர்கள் வினாவை எழுப்புகின்றனர். அது மட்டுமல்லாமல் இனி மார்க்சியம் வெற்றி பெறாது என்றும், மார்க்சியத்தை நம்புசிறவர்கள் கானல் நீரை நம்புவதைப் போல் ஏமாற்றம் அடைவார்கள் என்றும் ஆருடம் கூறுகிறார்கள்.
 
marx_engels_340  இவர்கள் கூறுவது சரி தானா? சோவியத் ஒன்றியம் உலகிலேயே வலிமையான நாடாக அன்று இருந்தது. சோவியத் குடிமக்கள் என்றாலே மற்ற நாடுகளின் மக்கள் ஒருவித மரியாதையுடன் தான் நோக்கினார்கள். தன் தேவையை நிறைவு செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல், வளரும் நாடுகளுக்கு உயர்தொழில் நுட்பங்களை அளிக்கவும் செய்தது. இந்தியாவில் இருந்து வெள்ளையர்கள் வெளியேறிய பின் இரும்புத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று துடியாய்த் துடித்துக் கொண்டு இருந்த பொழுது, அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகள் இரும்புத் தொழில் நுட்பத்தை, பணம் பெற்றுக் கொண்டு அளிப்பதற்கும் மறுத்தன. ஆனால் சோவியத் ஒன்றியம் அதே தொழில் நுட்பத்தை இலவசமாக அளித்து, இந்தியாவில் இரும்புத் தொழிற் சாலைகள் அமைய உதவியது.
 
  இப்பொழுது சோவியத் ஒன்றியம் சிதைந்து, அதன் உறுப்பு நாடுகள் முதலாளித்துவப் பாதைக்குத் தள்ளப்பட்ட பின் ஏற்பட்டுள்ள நிலை என்ன?
 
  வேலை உத்தரவாதம் செய்யப்பட்ட அந்நாடுகளின் மக்கள், இப்பொழுது வேலை தேடி உலகெங்கும் அலைந்து கொண்டு இருக்கின்றனர். சோவியத் ஒன்றியத்தில் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு இருந்த முதியவர்கள் தங்கள் தேவைகளுக்குச் செலவு செய்தது போக மீதம் இருந்த பணத்தில் தங்கள் பேரக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்ந்து இருந்தனர். ஆனால் இன்று அவர்களுடைய ஓய்வூதியம் அவர்களுடைய அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வதற்கும் போதவில்லை. ஓய்வூதியக்காரர்களை விட்டு விடுங்கள்; பணியில் இருப்பவர்களுக்கே அவர்களுடைய ஊதியம் போதாமல் தவிக்க வேண்டியுள்ளது. தொழில் வளர்ச்சியில் முன்னணி நாடாகவும், மற்ற நாடுகளுக்கு உதவி புரியும் உயர்ந்த நிலையிலும் இருந்த நாடு, இன்று மூலப் பொருட்களை விற்றுப் பிழைப்பு நடத்த வேண்டிய கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது.
 
  சோவியத் ஒன்றிய உறுப்பு நாடுகளின் நிலைமை இவ்வாறு என்றால், முதலாளித்துவ அறிஞர்களால் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் பெற்றுள்ளது என்று புகழப்படும் சீனாவின் நிலைமை என்ன? முன்பெல்லாம் சீனாவின் அனைத்து மொழிகளும் சமமாக மதிக்கப்பட்டன. ஆனால் இன்று சீன நாட்டில் முதலீடு செய்பவர்களின் வசதியை முன்னிட்டு, மாண்டரின் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாத 50%க்கும் அதிகமான சீன மக்கள் அம்மொழியைப் பயில வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறார்கள். அன்று உழைக்கும் மக்கள் பெற்ற ஊதியம் அவர்களுடைய தேவையை நிறைவு செய்யப் போதுமானதாய் இருந்தது. இன்று அது போதவில்லை; அது மட்டுமல்ல, ஊதிய உயர்வு வேண்டும் என்று கேட்பவர்கள் முதலாளிகளின் அடியாட்களால் தாக்கப்படுகிறார்கள்; சில சமயங்களில் கொலையும் செய்யப்படுகிறார்கள். அப்படிக் கொலை செய்யப்பட்டவர்களின் தாய் / தந்தை / மகன் / மகள் / மனைவி / கணவன் யாராவது கவல் துறையில் புகார் செய்தால் அவர்களும் தாக்கப்படுகிறார்கள். பணம் கிடைக்கும் என்பதற்காகவும், இலாபம் சம்பாதிக்கம் வழி என்பதற்காகவும் விதிகளை மீறுவது சீனாவில் பெருகி வருகிறது.
 
  முதலாளித்துவ உற்பத்தி முறையில், மக்கள் செல்வர்களாக இருக்க முடிகிறது என்றும், சோஷலிச உற்பத்தி முறை மக்களை வறுமையில் வாட்டுகிறது என்றும் கூறி -இவற்றுக்கு - அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளையும், கியூபா, வடகொரியா, வியட்னாம் நாடுகளையும் எடுத்துக் காட்டாகக் காட்டுகின்றனர். ஆனால் சோஷலிச நாடுகளில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு விடக் கூடாது என்று சதித் திட்டம் போடுவதை மறைக்கின்றனர். இதைப் புரட்சி வீரர் ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு முறை எளிமையாக விளக்கினார். யாராவது கியூபாவில் ஒரு தொழிலை ஆரம்பிக்கலாம் என்று எண்ணினால், அவர்களுக்கு மிரட்டல் வரும் என்றும், அவ்வெண்ணத்தை அவர் கைவிடும் வரையில் அம்மிரட்டல் தொடரும் என்றும், இத்தகைய சூழலில் தான் சோஷலிச நாடுகள் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுகின்றன என்றும் அவர் கூறினார். ஆனால் அப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையிலும், 2005ஆம் ஆண்டில் கத்ரினா சூறாவளியின் பொழுது, கியூபா தங்கள் நாட்டு மக்களில் ஒருவரைக் கூட உயிரிழக்காமல் பாதுகாத்தது மட்டுமல்ல; ஒரு வளர்ப்புப் பிராணி கூட உயிரிழக்காமல் கியூபா பாதுகாத்தது. ஆனால் செல்வச் செழிப்பு மிகுந்த, அனைத்து அறிவியல் தொழில் நுட்ப வசதிகளையும் தன் வசம் கொண்ட அமெரிக்காவோ, அதே சூறாவளிக்கு ஆயிரக்கணக்கில் தன் மக்களைக் காவு கொடுத்தது.
 
  இவையெல்லாம் மக்கள் நலனுக்கு, சோஷலிச முறை தான் ஏற்றது என்றும், முதலாளித்துவ முறை மக்களின் நல்வாழவிற்கு ஏற்றதல்ல என்றும் தெளிவாகக் காட்டும் எடுத்துக்காட்டுகள்.
 
  இப்படி எல்லாம் எடுத்துக் காட்டுகளுடன் பேசும் பொழுது, சில முதலாளித்துவ அறிவு ஜீவிகள், கருத்தியல் ரீதியில் பேச வேண்டும் என்று கூறுகின்றனர். மார்க்சும் லெனினும், தங்கள் மூலதனம் (Capital), ஏகாதிபத்தியம் - முதலாளித்துவத்தின் இறுதிக் கட்டம் (Imperialism - Moribund Capitalism) ஆகிய நூல்களில் கருத்தியல் ரீதியில் தெளிவாக விளக்கி இருப்பதைப் பற்றிப் பேச மறுக்கின்றனர். இன்றைய கணினி, மற்றும் மின்னணு யுகத்தைப் பற்றி மார்க்சும் லெனினும் அறிய மாட்டார்கள் என்று விதண்டாவாதம் செய்கிறார்கள். முதலாளித்துவ உற்பத்தி முறை, அதாவது இலாபம் தரும் பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்வது என்ற அடிப்படை மாறாத வரையில் மார்க்சின், லெனினின் பகுப்பாய்வுகள் இன்றும் பொருந்தும் என்பதை வேண்டுமென்றே மறைக்கப் பார்க்கின்றனர்.
 
  ஆனால் உண்மை நிலை மார்க்சியத்தின் தேவையை இன்னும் வலுவாக வலியுறுத்திக் கொண்டுள்ளது. மார்க்சின் காலத்திலும், லெனினின் காலத்திலும் - ஏன் - மாவோவின் காலத்திலும் தெரியாத, இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் சுற்றுச்சூழல் கேடும், புவி வெப்ப உயர்வும், இவ்வுலகம் உய்வதற்கு மார்க்சியத்தைத் தவிர வேறு தீர்வே இல்லை என்று கடைக்கோடி அறிவிலிகளும் புரிந்து கொள்ளும் விதத்தில் உரக்கக் கூவிக் கொண்டு இருக்கின்றன.
 
  பொருள் உற்பத்தியின் போது பக்க விளைவாக திட, திரவ, வாயு மாசுக்கள் உமிழப்படுகின்றன. இந்த மாசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு மிகுந்த செலவினங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. திட்ட முதலீட்டுடன் மாசுக் கட்டுப்பாட்டுச் செலவினங்களையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது, இலாப விகிதம் குறைந்து விடுகிறது. சில சமயங்களில் இலாபமே இல்லாமல் போய் விடுகிறது. இலாபம் வராது எனில் அத்தொழிலில் முதலீடு செய்ய முடியுமா? இந்நிலையில் ஒரு முதலாளி மாசுக் கட்டுப்பாட்டிற்காகச் செய்ய வேண்டிய செலவினங்களைக் குறைக்கவோ தவிர்க்கவோ முயல்கிறார். முதலாளியின் இம்முயற்சிக்கு ஆதரவு கிடைக்காத பகுதிகளில் (அதாவது நாடுகளில் அல்லது மாநிலங்களில்) முதலீடு செய்ய அவர் முன்வருவதில்லை. அப்படி ஆதரவு கொடுக்காத அப்பகுதி ஆட்சியாளர்கள், மூலதனத்தை ஈர்க்கத் தெரியாத மடையர்கள் என்று ஊடகங்கள் பரப்புரை செய்கின்றன.
 
  சுற்றுச் சூழல் எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் என்று நினைத்து, மாசுக் கட்டுப்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாத பகுதிகளில் தொழில்கள் செழித்து வளர்கின்றன. அப்பகுதி ஆட்சியாளர்கள் மூலதனத்தை ஈர்க்கத் தெரிந்த அறிவாளிகள் என்று முதலாளித்துவ ஊடகங்களால் புகழப்படுகின்றனர். மொத்தத்தில் தொழில்கள் வளர்கின்றன என்றாலே சுற்றுச் சூழல் மாசு அடைவது என்பது தவிர்க்க முடியாதது என்று ஆகிவிடுகிறது. ஆகவே தான் வளர்ந்த நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பல தொழில்கள் வளரும் நாடுகளில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த முரண்பாடு முதலாளித்துவ உற்பத்தி முறையின் தவிர்க்க முடியாத உட்கூறு ஆகும். ஆனால் சோஷலிச உற்பத்தி முறையில் தனி மனிதனுக்கு இலாபம் என்பதைக் கணக்கில் கொள்ளாமல், அனைத்து உழைக்கும் மக்களின் பொது நலன்களே கணக்கில் கொள்ளப்படும் என்பதால் மாசுக்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவது என்பது எந்தத் திட்டத்திலும் தவிர்க்க முடியாத உட்கூறாக இருக்கும். அதாவது இப்புவியில் சுற்றுச் சூழல் கேடு அடையாமல் இருப்பதற்கு மார்க்சியம் தவிர்க்க முடியாத ஒன்றாகத் தேவைப்படுகிறது.
 
  இன்று புவி வாழ்வை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் இன்னொரு விஷயம், புவி வெப்ப உயர்வு ஆகும். மனிதர்கள் தாங்கள் வாழ்வதற்காக உற்பத்தி செய்யும் பொருட்களும், மற்றும் சேவைகளுக்காகப் பயன்படுத்தும் எரிபொருட்களும், இரசாயனப் பொருட்களும், கரியமில வாயு (carbon -di- oxide) பச்சை வீட்டு வாயுக்கள் (Green House Gases) மற்றும் பிற நச்சுக் கழிவுகளை உமிழ்கின்றன. இந்த நச்சுப் பொருட்கள் புவியின் வெப்பத்தை உயர்த்திக் கொண்டே போகின்றன. இப்படிப் புவியின் வெப்பம் உயர்வதால் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து நிலப் பரப்பு குறையும். நாளடைவில் நிலத்தில் வாழும் உயிரினங்கள் வாழ்வதற்குப் போதுமான நிலப் பரப்பு இல்லாமல போய்விடும். ஒருவேளை நிலப் பரப்பு சிறிதளவும் இல்லாமல் போகலாம். அப்போது மனித இனம் உட்பட நிலத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் அழிந்து போய்விடும். அது மட்டுமல்ல; இப்போது உமிழப்படும் நச்சுப் பொருட்கள் நீரில் கரைந்து நீரும் அமிலத் தன்மை பெற்றுவிடும். அந்நிலையில் நீர்வாழ் உயிரினங்களும் மடிந்து விடும். அதாவது இப்புவியில் உயிரினங்களின் சுவடே இல்லாமல் போய்விடும். இன்றைய நிலைமை இப்பேரழிவை நோக்கித் தான் வேகமாகப் போய்க் கொண்டு இருக்கிறது.
 
  இதைத் தடுத்து நிறுத்த முடியாதா? முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறை ஆட்சி செய்யும் போது இப்பேரழிவைத் தடுத்து நிறுத்த முடியவே முடியாது. ஏனெனில் முதலாளித்துவ முறை அதிக இலாபம் கிடைக்கும் தொழில்களில் தான் மூலதனத்தையும் இயற்கை மூலாதாரங்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்று வழிகாட்டுகிறது. வழி காட்டுவது மட்டுமல்ல; கட்டாயப்படுத்தவும் செய்கிறது. புவி வெப்பத்தை உயர்த்தும் கழிவுகளை உமிழும் ஆயுத உற்பத்தி, வாகன உற்பத்தி, வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் தொழில்களை வளர்த்தல், நகரமைப்புத் திட்டத்தையும் அதன் வழியிலேயே செயல்படுத்தல் ஆகியவற்றால் தான் சந்தையில் மூலதனத்திற்கு இலாபம் கிடைக்கிறது. ஆகவே முதலாளித்துவ முறை ஆட்சி செய்யும் வரையில் இத்தொழில்கள் மேலும் மேலும் செழித்து வளரும். அதன் விளைவாகப் புவி வெப்பம் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போகும். அழிவுப் பாதையில் உலகம் இன்னும் வேகமாகச் செல்லும்.
 
  ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கைவிட்டு விட்டு, சோஷலிச உற்பத்தி முறையை ஏற்றுக் கொண்டால், புவி வெப்ப உயர்வை அதிகரிக்கும் தொழில்களை வெகுவாகக் குறைத்து விட முடியும். சோஷலிச ஆட்சி முறையில் போர்கள் தேவையாய் இராது என்பதால் ஆயுத உற்பத்திக்கு அவசியமே இல்லாமல் போய்விடும்.
 
  உலகத்தை அழிவுப் பாதையில் இருந்து திருப்ப வேண்டிய அவசியத்தின் காரணமாக, அவசர அவசியத் தேவைகளுக்குத் தவிர மற்ற எல்லாப் பயணத் தேவைக்கும் பொதுப் போக்குவரத்து முறையையே பின்பற்ற வேண்டும் என்று ஏற்பாடு செய்து விட்டால், புவி வெப்ப உயர்வின் வேகத்தை நூற்றில் ஒரு பங்காகக் குறைத்து விட முடியும்,
 
  மேலும் மரம் வளர்த்தலையும் விவசாயத்தையும் அதிக அளவில் மேற்கொண்டால் கரியமில வாயுவை உறிஞ்சி உயிர் வளியை (oxygen) வெளியிடும் செயல்கள் நடக்கும். இது ஏற்கனவே உயர்ந்துள்ள புவி வெப்பத்தைப் படிப்படியாகக் குறைக்கும். இந்த மரம் வளர்த்தலையும் , விவசாயத்தையும் முதலாளித்துவ முறை ஆட்சி செய்யும் வரை ஊக்குவிக்க முடியாது என்பது மட்டுமல்ல; அவற்றில் நஷ்டம் வருவது உறுதி என்பதால் அச்செயல்கள் நடக்காமல் இருப்பது உறுதி செய்யப்படும். கருத்தியல் ரீதியாக மக்களை மயக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மரம் நடு விழா கொண்டாடப்படுமே ஒழிய உண்மையில் தேவையான அளவில் ஆயிரத்தில் ஒரு பங்கு மரங்கள் கூட வளர்க்கப்பட மாட்டாது.
 
  ஆனால் சோஷலிச ஆட்சி முறையில் மக்கள் நலனே அடிப்படை என்பதால் பட்டினி கிடக்கும் மக்களுக்காகவும், ஊட்டச் சத்து இல்லாத மக்களுக்காகவும், விவசாயமும் மரம் வளர்த்தலும் வெகுவாக ஊக்குவிக்கப்படும். அதன் பக்க விளைவாக வெகுவாகக் கரியமில வாயு உறிஞ்சப்பட்டு, உயிர் வளி வெளியிடப்பட்டு புவி வெப்பம் குறையத் தொடங்கும். இவ்வுலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டு இருக்கும் வேகம் குறைப்பது மட்டுமல்லாமல், எதிர்த் திசையிலும் பயணிக்க வைக்க முடியும். அதனால் இப்புவியில் உயிரின வாழ்வு தொடர்வதை உறுதி செய்ய முடியும்.
 
  இதுவரையிலும் உழைக்கும் மக்களின் சுதந்திரத்திற்காகவும் பொது மக்களின் நல்வாழ்விற்காகவும் மட்டுமே மார்க்சியம் தேவை என்ற நிலைமை இருந்தது. ஆனால் இப்பொழுதோ, இப்புவியில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதற்கே கூட மார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருக்கிறது.
 
- இராமியா

Comments

17 comments

17
rengasamy
இன்றைய சூழ்நிலைகளுக்கு தேவையான கட்டுரை. முதலாளித்துவம் மக்களை சுயநலவாதிகளாக மாற்றீயுள்ளது.மனிதாபிமாணத்தையும் கூட காசு பணமாக மாற்றி விட்டது. வல்லரசு நாடுகள் வளரும் நாடுகளை தங்கள் அடிமைகளாக இருக்க நிர்பந்திக்கின்ற நிலமை.வளரும் நாடுகளை வல்லரசு நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர என்னவெல்லாம் செய்யும் என்பதை பெர்கின்ஸ் எழுதிய "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்"என்ற தன்னுடைய நூலில் அருமையாக விளக்கியுள்ளார்.அணைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம் அது.சோசலிசத்தின் மகிமையையும் அது இந்த உலகிற்றிகு ஆற்றிய தன்னலமற்ற சேவையையும் அருமையாக பதிவு செய்கின்றது இந்த கட்டுரை.
அ.நெ.செழியன்
அருமையான கட்டுரை .சூழல் சிக்கல்களுக்கான தீர்வினை சோசியலிச கட்டமைப்பால் மட்டுமே சாத்தியப்படு த்தமுடியும்..மார்க்ஸ் மற்றும் ஏங்கல்சின் படைப்புகளை தீவிரமாக மறுவாசிப்பு செய்து நமது சூழலுக்கு அதை பொறுத்த முயற்சிக்கும் பணியினை தொடங்கவேண்டும். ..மேலும் தற்கால சுழல் நெருக்கடியின் அடிப்படை குறித்த மார்க்சின் முக்கிய திறனாய்வான வளர்சிதைமாற்றப்பிளவு கருத்தாக்கம் ,அவருக்கு பின்வந்த மார்க்சிய அறிஞர்களால் செழுமைப்படுதப்படாமல் போனதால் மார்க்சியம் சூழலியலில் அக்கறைகொள்ளவில்லை என்ற கருதுநிலை உருவாகியது . இதனால் ,முதலாளியத்தின் பகுப்பாய்வு மற்றும் சமூக புரட்சிக்கான அழைப்பு விடுத்தமை போன்றவற்றிற்காக பெரிதும் அறியப்பட்ட மார்க்சும் ஏங்கல்சும் ,சூழலிய சிந்தனைகளில் சிறிதே அறியப்பட்டனர் .ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் நம்பிக்கையளிக்கும்விதமாய் ,சூழல் குறித்த மார்க்சின் எழுத்துக்களை சில சோசியலிசவாதிகள் மறுவாசிப்பிற்கு உட்படுத்தினர் .மனிதனுக்கும் புவிக்கோளின் சூழலுக்குமான உறவே மார்க்சின் வராலற்று பொருள்முதல்வாத தத்துவ திறனாய்விற்கான அச்சாணியாக இருந்ததென அவர்கள் வாதிடுகிறார்கள் .மனித சமூகத்திற்கும் மனிதனல்லாத புற உலகிற்குமான இயங்கவியல் உறவை திறனாயும் மார்க்சின் சூழலிய அணுகள் , தற்போதைய நெருக்கடிக்கான தீர்வினையழிக்கும் என்று உறுதியாக நம்பினார்கள். முதலாளியத்தின் உழைக்கும் மக்கள் சுரண்டலையும் இயற்கை வளச்சுரண்டலையும் , ஒன்றோடொண்டு பிணைந்த மற்றும் ஒரு ஒத்த நிகழ்முறையின் அங்கம் என மார்க்சும் ஏங்கல்சும் சுட்டிக்காட்டினார்கள் . வரலாற்று சூழலுக்கு அழுத்தம் கொடுத்து ,இயற்கை மற்றும் மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியினை ஒத்திசைந்த முறையில் சுற்றுச்சூழலை மார்க்ஸ் அணுகுகிறார்.மார்க்சின் சூழலியல் நுண்ணறிவு இரு முக்கிய கூறுகளை கொண்டது .ஒன்று தொடர்ச்சியான உற்பத்தி மற்றொன்று வளர்சிதைமாற்றப்பிளவு .வரைமுறையற்ற விரிவாக்கதிற்கான முதலாளியத்தின் உத்வேகம்,லாபத்தை அதிகரிப்பதற்கான கருணையற்ற இயக்கம் ,இப்புவின் இயற்கைவள வரம்புகளை கண்டுகொள்ளாமை போன்றவற்றை தொடர்ச்சியான உற்பத்தியை குறிக்கிறது . இயற்கையில் உபயோகமற்றது என்று எதுவுமில்லை .அனைத்தும் மறுசுழற்சிக்குல்லாகும் வகையிலான ஒரு சுழல்வட்ட கட்டமைப்புடன் இயற்கை இயங்குகிறது .ஆனால் இதற்கு நேரெதிரான முதலாளியத்தின் நீள்வடிவ உற்பத்தி பொருளாதாரமானது இயற்கை கட்டமைப்பில், எப்பொழுதும் அதிகரித்தவண்ணம் இருக்கும் தனது கழிவு பொருட்களை மேன்மேலும் அளவுக்குமீறி திணிக்கிறது .ஆகாயத்தில் வெளித்தள்ளும் கரிப்ப்புகைகழிவு ,நீரில் கலக்கும் அசுத்த நீர்கழிவு ,மண்ணில் கலக்கும் வேதிய நச்சுக்கழிவென அனைத்துவிதத்திலும் தனது உபயோகமற்ற கழிவுகளை இயற்கை கட்டமைப்பிற்குள் தள்ளுகிறது. மனிதசமூகத்திற்க்கும் இயற்கைக்கும் இடையிலான சிக்கல்மிகுந்த இரு வழி வளர்சிதை வினை மாற்ற உறவிற்கு நடுவில் முதலாளியத்தின் லாப நோக்க உற்பத்திமுறை ஒரு கூர்மையான பிளவை உண்டுபண்ணியது என்று மார்க்ஸ் வளர்சிதைமாற்றப்பிளவு குறித்து பேசுகிறார். மனித சமூகத்திற்கும் இயற்கைக்குமிடையே நடைபெறும் மூலப்பொருள் மற்றும் ஆற்றல் பரிமாற்றத்தை, மனித உழைப்பாளர் மூலம் நிகழ்முறைப்படுத்தப்படுதுவதாக வளர்சிதைமாற்றம் பற்றின மார்க்சின் பொதுக்கருத்து உள்ளது. தொழில்மயமடைந்த வேளாண்துறையில் மண்ணின் வளங்கள் தொடர்ந்து சுரண்டப்படுவதை திறனாய்ந்து மார்க்ஸ் இந்தமுடிவிற்கு வந்தாலும் ,மேற்குலக நாடுகளின் முதலாளித்துவ வளர்ச்சிக்கு , காலனிய நாடுகளின் இயற்கை வளங்கள் வரம்புகளற்று சுரண்டப்படும் போக்கை வளர்சிதைமாற்றப்பிளவின் கோட்பாடாய் உலக அளவில் ஒட்டுமொத்தமாய் புரிந்துகொள்கிறார். "மனிதனுக்கும் இயற்கைக்குமான வளர்சிதைமாற்ற வினையை விவேகமான முறையில் ஆளுமைசெய்து கட்டுக்குள் வைத்திருப்பதற்கு மாறாய் கண்மூடித்தனமான அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் அது இருக்கக்கூடாது "என மார்க்ஸ் தனது மூலதனத்தில் குறிப்பிடுகிறார். http://marxismandecology.blogspot.com/
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
கம்யூனிஸ்ட்கள் மார்க்சிய அடிப்படையில் செயல் படுகிறார்களா? என்று வினவும் முன் மார்க்சியம் முழு அறிவியல் அடிப்படையில் செயல் படுகிறதா என்று முதலில் பார்க்கப்படவேண்டும். குழந்தை இளைஞன் பருவத்தை கடக்காமல் முதுமை அடைய முடியாது. சமூகம் முதலாளித்துவத்தை கடந்து அழுகிதான் மாறும். மார்க்ஸ் தன் ஆசையையும் அறிவியலையும் குறுக்கு வழியில் இணைக்கிறார். சமூக அறிவியல் விதிகளை தோரயமாக சொல்லி முடிவுகளை விரிவாக சொன்னதில் நடுவில் பல பக்கங்களை காணோம். மார்க்ஸ் அவரைப்போலவே மனித நேயம் அதிகமும் அறிவியல் குறைவாகவும் உள்ள ஒரு கூட்டத்தை உருவாக்கி அவர்களை குழப்பத்தில் இருத்திவிட்டார்.
இராமியா
//மார்க்சியம் முழு அறிவியல் அடிப்படையில் செயல் படுகிறதா என்று முதலில் பார்க்கப்படவேண்டும்.// இந்த ஐயம் எப்படி எழுகிறது என்று புரியவில்லை. மார்க்சியத்தில் அறிவியல் அடிப்படையல்லாத கூறுகளை எடுத்துக் காட்டினால் அதைப் புரிந்து கொள்ளவோ மறுத்துப் பதில் கூறவோ வழி இருக்கும். //குழந்தை இளைஞன் பருவத்தை கடக்காமல் முதுமை அடைய முடியாது. சமூகம் முதலாளித்துவத்தை கடந்து அழுகிதான் மாறும்.// இல்லை நண்பரே! கயவரகளிடம் சிக்கிய நல்லவர்கள் கயவர்களின் மனம் தீரும் மட்டும் கொடுமைகளை அனுபவித்த பின் தான் விடுதலை அடைய வேண்டும் என்பதில்லை. நல்லவர்கள் தங்கள் வலிமையை எப்பொழுது வேண்டுமானாலும் பெருக்கிக் கொண்டு கயவர்களை முறியடிக்கலாம். அப்படியே வாதத்திற்காகத் தங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டாலும் முதலாளித்துவத்தில் அழுகாத ‌பகுதி எங்கே உள்ளது? அது முழுவதும் அழுகலுக்கு மேல் அழுகி இருப்பதைத் தானே சூழ்நிலைக் கேடும் புவி வெப்ப உயர்வும் மெய்ப்பிக்கின்றன? தாங்கள் நினைப்பது போல் அல்லது விரும்புவது போல் முதலாளித்துவம் தானே முதிர்ந்து விழுந்து சோஷலிசம் வந்து விடாது. அதை உழைத்துத் தான் பெற முடியும். //மார்க்ஸ் தன் ஆசையையும் அறிவியலையும் குறுக்கு வழியில் இணைக்கிறார். சமூக அறிவியல் விதிகளை தோரயமாக சொல்லி முடிவுகளை விரிவாக சொன்னதில் நடுவில் பல பக்கங்களை காணோம். மார்க்ஸ் அவரைப்போலவே மனித நேயம் அதிகமும் அறிவியல் குறைவாகவும் உள்ள ஒரு கூட்டத்தை உருவாக்கி அவர்களை குழப்பத்தில் இருத்திவிட்டார்.// தவறான கற்பனைகளை விட்டு விடுங்கள். தங்களுக்கு எந்தப் புத்தகத்தில் எந்தப் பக்கங்கள் கிடைக்கவில்லை என்பதைத் தெரிவியுங்கள்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
முதலாளித்துவத்தின் ஆரோக்கிய பங்களிப்பும் தீமையும்: 24 மணிநேரமும் விவசாய நிலத்தில் ஆளுக்காரனாக, பண்ணை அடிமையாக இருந்த தலித்தை 8 மணி நேரம் தொழிலாளியாக மாற்றியது எது? சாதி பெயரைச்சொல்லி வயதிற்கு சம்மந்தமில்லாமல் ‘வாடா போடா' என்று அழைக்கப்பட்ட தலித்தை மரியாதையாக தொழிற்சாலையில் நடத்த வைத்தது எது? விவசாய நிலங்களில் கோவனம் மட்டுமே அணிய அனுமதித்த தலித்தை மேலாளர் போல சமமாக உடையணிய சுதந்திரம் அளித்தது எது? விருப்பம் இல்லாவிட்டால் வேறு வேலைக்கு செல்லலாம் என சுதந்திரம் அளித்த அமைப்பு எது? ஆலைக்கு வெளியே அவன் பிடித்த காரியத்தை செய்ய சுதந்திரம் அளித்த அமைப்பு எது? பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் திறமையின் அடிப்படையில் வேலை மற்றும் ஊதியம் என வழங்கிய அமைப்பு எது? உயர் அதிகாரிக்கு முன்னால் கூட சமமாக அமர அனுமதியளித்த அமைப்பு எது? தலித்திற்கு ஒரே குவளையில் தண்ணீர் அருந்த வைத்த முதல் சமூக அமைப்பு எது? இவை எல்லாவற்றிற்கும் விடை “முதலாளித்துவ தொழில் வளர்ச்சி”. முதலாளித்துவ தொழில் வளர்ச்சிதான் ஆயிரம் ஆண்டு பண்ணைஅடிமையை நாகரீக தொழிலாளியாக மாற்றியது. அவனுக்கு முதலாளியாக முடியும் என்ற நம்பிக்கையாவது தந்தது. நான் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை அவனுக்குத் தந்தது. சுருக்கமாக சொல்வதென்றால் வெள்ளைக்காரன் வெளியேரிய தருணத்தில் அவன் விடுதலையடையவில்லை. நிலக்கிழமை விவசாய நிலத்திலிருந்து வெளியேறியதுதான் தலித்தை பொருத்தவரை விடுதலை. முதலாளித்துவ வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் புரட்சிகரமான சமூக வளர்ச்சிக்கும், முதலாளித்துவ ஜனநாயம் பெற காரணமாகவும் நிலக்கிழமையின் கொடூர பிடியில் இருந்து அதைவிட வசதியான நிலையிலுள்ள தொழிலாளியாக ஒரு பண்ணை அடிமையை மாற்றுகிறது. பின் அது திகட்டு நிலையை அடைந்தவுடன் அழுகத்தொடங்குகிறது. முதலாளித்துவம் எண்ணிக்கையில் சுருங்கி மூலதன அளவில் அதிகரிக்கிறது. மறுதலையாக தொழிலாளர் வர்க்கம் எண்ணிக்கையில் அதிகரித்து மூலதன அளவில் சுருங்குகிறது. இது ஒரு புறம் செல்வ குவிப்பையும், மறுபுறம் வறுமையையும் ஏற்படுத்துகிறது. இது சுரண்டலை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. சுரண்டலின் காரணமும் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது. இதுவே வர்க்கப் புரட்சிக்கு இட்டுச்செல்லும் என்கிறார் மார்க்ஸ். காய் கனிந்து பழமாகிறது. பழம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அழுகுதலை நோக்கி செல்கிறது. இதில் காய் கனியாவது நல்ல மாற்றம் கனி அழுகுதல் கெட்ட மாற்றம். இதுதான் முதலாளித்துவத்திற்கும் நடக்கும். முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை நன்மையும் ஒரு கட்டத்திற்கு பின் அதன் தீமையும் கண்டறிந்த மார்க்ஸ் அதில் அதன் தீய மாற்றத்தை மட்டும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் அவர் வளர்ந்த முதலாளித்துவ ஐரோப்பிய நாடுகளுக்காக போராட்டத்தை அற்பணிப்பு செய்து விடுகிறார். உலக முழுமைக்கும் பொருந்தும் இந்த சமூக வளர்ச்சி கண்டுபிடிப்பை அவர் கண்டுபிடித்துவிட்டு அதை ஐரோப்பாவிற்கு மட்டுமே பொருந்தும் முதலாளித்துவ எதிர்ப்பில் புதைத்து விடுகிறார். அவர் ஒரு அறிஞனாக உலக முழுமைக்கும் தத்துவ போராளியாக வளர்ந்த நாட்டு தொழிலாளருக்காக மட்டுமே செயல்பட்டார். “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” முதலாளித்துவ ஆரோக்கிய மாற்றம் தேவையான நாடுகளில் முதலாளித்துவம் ஆற்றும். ஆரோக்கிய மாற்றத்தை பெரிதும் மறைப்பதன் மூலம் கீழை நாட்டு நிலபிரபுத்துவ பண்ணையடிமைகளை கைவிட்டு விடுகிறது. ‘மார்க்சியம் தொழிலாளர் வர்க்கத்தின் தத்துவம்.' உலகின் ஒடுக்கப்பட்ட எல்லா மக்களுக்கான தத்துவமல்ல! மார்க்சியம், உலக முழுமைக்குமான ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலைக்காக பங்களிப்பை செய்திருந்தால் பெரியாரியமோ அம்பேத்காரியமோ இங்கே தேவைப்பட்டிருக்காது. முதலாளித்துவ சுரண்டலையும், கொடுமைகளையும் விட அது வளராத நாடுகளில் உள்ள இன மற்றும் தேசிய இன, பண்ணை அடிமைகளின் மீதான கொடுமைகள் கொடூரமானவை. இன்றைக்கும் இந்திய தொழிலாளர் நிலையை விட தமிழ் ஈழ தேசிய மக்களின் நிலை கொடுமையானது. தொழிலாளர்கள் விடுதலைப்பற்றி முழுமையாகவும் மற்ற ஒடுக்குமுறை பற்றி வெறும் பெயரளவிலும் பேசியதால் தான் நெல்சன்மண்டேலாவுக்கும், பிரபாகரனுக்கும் மார்க்சியம் தேவைப்படவில்லை. இதுதான் இன்றைக்கும் கம்யூனிஸ்ட்களில் சிலரை ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர் நலன் பேணபடவேண்டுமென பேச வைக்கின்றன. வர்க்கங்களாக வளராத , (தொழிலாளி, முதலாளி ) நிலபிரபுத்துவ பண்ணை அடிமை சமுதாயத்திலிருந்து முதலாளித்துவ சமூகமாக மாற்றி அமைக்கப்படாத சமூகத்தில் மார்க்சியம் தனது தற்போதைய எந்திரவடிவில் ஒரு செல்லாக்காசகவே உள்ளது. அது வளராத குழந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருந்தாத பெரிய சட்டை . (குழந்தை பெரியவனாக வளர்ந்தால் எதிர்காலத்தில் ஒருவேளை பயன்படுத்தலாம்) இதுதான் நிலக்கிழமையிலிருந்து தலித் விடுதலைக்கு உதவும் முதலாளித்துவம் மற்றும் தலித் இயக்க பாத்திரங்களை மறுக்க இவர்களுக்கு காரணமாய் அமைகிறது. மேலும் வர்க்க புரட்சி மட்டுமே சமூக மாற்றம் என இவர்கள் இன்னும் நம்புகிறார்கள். வர்க்கப்புரட்சி நடத்த தூய வர்க்கங்கள் தேவைப்படுகின்றன. இதனால் இங்குள்ள மார்க்சிய அறிவு ஜீவிகள் தங்கள் கற்பனைகளில் வர்க்கங்களை உருவாக்கி கொண்டு அல்லது எதார்த்தத்தை கற்பனை கோடுகளால் பிரித்துக்கொண்டு நிழல் யுத்தம் புரிய நெடுங்காலமாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு ஏகாதிபத்தியத்தை எதிர்க்க திராணியற்ற, முதுகெலும்பற்ற சாதிய தரகு முதலாளித்துவம் இருப்பதாய் ஏற்றுக்கொள்ளும் புரட்சிகர சக்திகள், ஏனோ புரட்சிகர பண்புகளற்ற சாதிய தொழிலாளர் வர்க்கம் இருப்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
இராமியா
நிலப் பிரபுத்துவ அமைப்பை விட முதலாளித்துவம் முற்போக்கானது என்பதில் ஐயமே இல்லை. அது நிலத்துடன் பிணைக்கப்பட்டு இருந்த பண்ணை அடிமைகளை விடுவித்தது என்பதிலும் ஐயம் இல்லை. ஆனால் இந்தியாவில் முதலாளித்துவம் முகிழ்த்ததால் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள் நிலத்திலிருந்து விடுதலை பெறவில்லை. அதற்கெனத் ‌தனியாகப் போராட்டங்கள் நடந்தன. இந்தியாவில் வர்க்க முரண்பாட்டை விட சாதிய முரண்பாடே முன்னணியில் இருக்கிறது. அகவே தான் அண்ணல் அம்பேத்கர் சாதியைச் சந்திக்காமல் புரட்சியைச் சந்திக்க முடியாது என்று கூறினார். உழைக்கும் மக்களின் சுதந்திரத்தை மட்டும் கணக்கில் கொள்ளும் போது வர்க்கப் போராட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கலாம். ஆனால் இப்பொழுது ஏற்பட்டு இருக்கும் ‌சுற்றுச் சூழல் கேட்டையும் புவி வெப்ப உயர்வையும் காணும் போது முதலாளித்துவ ‌அமைப்பை உடனே ஒழித்துக் கட்ட வேண்டிய அவசியம் உள்ளது. அப்படிக் கூறும் போது அம்பேத்கர் சொன்னபடி சாதியக் கொடுமைகளை ஒழிப்பதையும் உடனே செய்ய வேண்டும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
வர்க்க உருவாக்கத்திற்கு முன்பாகவே வர்க்கப் புரட்சி நடத்தி பின்பு சாதிய விடுதலைப்பெற நினைக்கிறார்கள். இது தனக்குப்பின் வர வேண்டிய தன் வாலையே தனது வழிகாட்டியாக தொடர்ந்து போய் சுற்றிக் கொண்டிருக்கும் பூனையை போல் தொடக்கப் புள்ளியிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் கம்யூனிஸ்ட்கள்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
வர்க்கப்புரட்சி மட்டுமே புரட்சி என்று நம்புகிறவர்கள் உண்மையில் சமூக வளர்ச்சியின் கடைசி படிக்கட்டை ஒரே தாவலில் ஏற முயற்சித்து, முயற்சித்து விழுபவர்கள். மாறாக இந்திய சமூகம் ஒவ்வொரு படிக்கட்டாய் ஏற ஆரம்பித்து இருக்கிறது. அதில் முதல் படி சாதி ஆதிக்க நிலக்கிழமை தகர்ப்பு. அதைத்தான் முதலாளித்துவமும், தலித் இயக்கங்களும் செய்கின்றன. இதில் எத்தனை படிகட்டுவரை தலித் இயக்கங்கள் தேவைப்படுவார்கள் என்பதை சமூக வளர்ச்சி விதிதான் தீர்மானிக்குமே அன்றி, புரட்சிகர இயக்கங்களின் விருப்பங்களோ கற்பனைகளோ அல்ல. ஆயுதம் தாங்கிய வர்க்கப்புரட்சி பற்றி பேசுவதும் மற்ற எல்லா மாற்றத்தையும் சீர்த்திருத்தமாகவே கேவலமாக பேசுவதும், உண்மையில் “ஹீரோயிச மார்க்சியமாக” புரட்சிகர இயக்கங்களால் உருவாக்கப்படுகிறது. மேலும் எல்லா சமூகத்தின் எந்தவொரு மாற்றத்தையும் வர்க்கப்புரட்சி மூலம் தான் செய்ய முடியும் என சொன்ன அந்த அறிவாளி யாரென அறிய விரும்புகிறேன். முதலாளித்துவ அமைப்பையே தகர்த்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அமைய வேண்டுமெனில் புரட்சி ஒன்றே வழி. சரி! எப்போது முதலாளித்துவத்தை தகர்க்க முடியும் தெரியுமா? முதலாளித்துவம் தனது திகட்டு நிலை அடைந்து அழுகல் காலக்கட்டத்தில்தான் அது சாத்தியம். இங்கு முதலாளித்துவம் நிலக்கிழமையின் பாதியைக்கூட அழிக்கவில்லை. ஏகாதிபத்தியம் உள்ளே வந்தாலும் பெரும்பான்மையாக முதலாளித்துவ உற்பத்திமுறை புகுத்தப்படும் வரை, அது சாத்தியமாகாது. அதுவரை சாதிய கொடுமையிலிருந்து இவன் பாதுகாப்பிற்கு யார் உத்திரவாதம் அளிப்பது? மார்க்ஸ், லெனின், மாவோ பயன்படுத்திய பதங்களிலிலேயே இந்திய சமூக வளர்ச்சியை விவரித்தார்கள் மற்றும் விளக்கினார்களே தவிர, இங்கே வேறெந்த புதிய காரணியும் இருக்க முடியாதென்று தீவிரமாக நம்பினார்கள். இதுதான் சாதியக் கொடுமை என்ற அரை ஆண்டான் அடிமை சிந்தனையின் உடலியல் ஒடுக்குமுறை காரணியின் ஒழிப்பில் தலித் இயக்க பாத்திரத்தை இவர்களின் பார்வையிலிருந்து மறைத்தது. புரட்சிகர சக்திகள், மார்க்சியத்தின் மீதான விமர்சனமோ மறு ஆய்வோ அவர்களின் வர்க்க விடுதலை என்ற இலட்சியத்திற்கு எதிரானதாகவும் துரோகமானதாகவும் எண்ணுகிறார்கள். வர்க்க விடுதலைக்காக மார்க்ஸ்- ஏங்கெல்ஸ்- லெனினும்- மாவோவும் போராடிவிட்டதாலேயே அவர்களின் எல்லா சிந்தனைகளும் மறு பரிசீலனையின்றி, மறு ஆய்வின்றி ஏற்கப்படுகின்றன. உலகம் முழுமைக்கும் பொருந்துமென சாதிக்கப்படுகின்றன. இந்த பார்வைதான் முதலாளித்துவம் ஒரு கட்டம் வரை புரட்சிகர பங்காற்றும். பின் அழுகி போகும் என்ற இயங்கியல் கோட்பாட்டின் சாரத்தை மறுக்க வைத்தது. மார்க்சிய - லெனினிய , மாவோ சிந்தனையை விமர்சிக்கும் எவரும் CIA ஏஜென்டாகவோ, NGOஅமைப்பாகவோ, பின் நவீனத்துவவாதியாகவோ, புது இடது சிந்தனையாளராகவோ , ஏகாதிபத்திய கைகூலியாகவோத்தான் இருக்க முடியும் என தன் அமைப்புகளுக்கு பரப்புரை செய்வதன் மூலம் புரட்சிகர இயக்கங்கள் சேனைக்கட்டிய குதிரை சிந்தனைகளையும் , யதார்த்த சமூக நிலையில் இருந்து வரும் புதிய சிந்தனைகளின் புறக்கணிப்பையும் உருவாக்குகின்றன. இது சமூக அறிவியலை அறிவியல் படுத்தாமல் ஒரு மதமாக்கும் முயற்சியேயன்றி வேறன்ன? “எதையும் சந்தேகி” என்ற மார்க்சின் மார்க்சியத்தை மறு ஆய்வு செய்யும் மகா பாவத்தை மட்டும் இவர்கள் செய்ய முன்வருவதில்லை. புனித கம்யூனிச மதத்தின் இறைத்தூதர் மார்க்ஸ் வழங்கிய புனித வேதமல்ல மார்க்சியம். மார்க்சின் அறிவியல் படுத்தும் முயற்சி அது. அதற்கும் வளர்ச்சி உண்டு. இதில் மார்சியத்தை முழுமையாக ஏற்றும் கொள்ளும் சிலர் அதன் எந்திரத்தனத்தை மட்டும் எதிர்த்து இந்திய சமூகத்திற்கு ஏற்றவாறு மீண்டும் பொருத்த முயற்சி செய்கிறார்கள். இவர்களும் ‘எதையும் சந்தேகி' என்ற மார்க்சின் மார்க்சியத்தை மறு ஆய்வு செய்யும் பாவக்காரியத்தை செய்ய முன் வருவதில்லை. மார்க்சின் அறிவியல் கண்டுபிடிப்புகளையும், அவரின் நம்பிக்கைகளையும், ஆசைகளையும் பிரித்துப்பார்க்க நம்மால் முடியும் என்று கற்பனைக்கூட செய்ய துணிவில்லாதவர்கள் இப்படி பேசுகிறார்கள். நவீன அறிவியலின் வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் மார்க்சியம் தனது தோராய கோட்பாட்டளவில் பச்சிளம் குழந்தையாகவே உள்ளது. இப்படி செல்லுவது அதனை சிறுமைப்படுத்தும் நோக்கத்தில் அல்ல. இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சி மிக பிரமாண்டமாக வளர்ந்துள்ளது என்பதையும் அதன் அளவுக்கு சமூக அறிவியல் வளர்க்கப்பட வேண்டும் என்பதுமே இதன் நோக்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் புரட்சி செய்து வெட்டி முறிக்கும் வரையிலும், மேலும் ஒரு 40 ஆண்டுகள் முன்னணிகளை வென்றெடுக்க உட்கார்ந்து இருக்கும் வரையிலும், தலித்தானவன் சாதியக் கொடுமையிலேயே சிக்கித்தவிக்க வேண்டுமா? இதுதான் தலித் இயக்க எழுச்சிக்கு காரணம். ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை மட்டும் தான் சிறந்தது என்பதை யார் தீர்மானப்பது? எது தீர்மானிக்கிறது? நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும். வாய் நாடி வாய்ப்பச் செயல்- என்றான் வள்ளூவன். சமூகத்திற்கும் இது பொருந்தும். சமூக வாழ்நிலை, சமூக ஒடுக்குமுறை, சமூக வளர்ச்சியில் ஆளுமை செய்யும் காரணிகள் அக்காரணிகளின் தோற்றம், அழிவு குறித்த தெளிவான அறிவு பொருந்தும் தன்மை, இவைகள் தான் புரட்சியா? அல்லது மற்ற நடவடிக்கைகளா? என்பதை தீர்மானிக்குமேயன்றி, புத்தகத்தில் ஏற்கனவே எங்கோ எதற்கோ எழுதப்பட்ட வரிகளல்ல . வர்க்க புரட்சிக்கு சீர்த்திருத்த வாதத்தை யாரும் பரிந்துரை செய்யவில்லை. வர்க்க உருவாக்கத்திற்கும் புரட்சிதான் தேவையா? என்பதுதான் எமது கேள்வி. சமூகத்தில் தேவைக்கேற்ற கோட்பாட்டை(அறிவியல் அடிப்படையில்) உருவாக்காமல், தயாரிக்கப்பட்ட கோட்பாட்டை சுமந்து கொண்டு சமூகத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள் கம்யூனிஸ்டுகள். வர்க்கங்களாக வளர்ந்த சமூகத்தில் தேவைப்படும் தத்துவத்திற்கும் ஒரு சமூகத்தில் வர்க்கத்தை வளர்க்க தேவையான தத்துவத்திற்கும் இடையே தலைகீழ் முரண்பாடுகள் உள்ளன என்று சொல்லுவது இங்குள்ள புரட்சிகர சக்திகளுக்கு திரிபுவாதமாகப்படுகிறது.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
கீற்றால் வெளியிட மறுக்கப்பட்ட எனது முழு கட்டுரையை காண http://www.arive-ayutham.blogspot.in/
இராமியா
நண்பர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அவர்களே! உங்கள் ஆதங்கம் அனைத்தும் நூற்றுக்கு நூறு சரி. இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகள் யாருமே இந்தியாவில் சோஷலிச சமூகத்தை அமைக்கும் நோக்கம் இம்மியும் இல்லாமல் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அது மட்டுமல்ல; இந்நினைப்பு உள்ளவர்கள் தலையெடுத்து விடக் கூடாது என்பதிலும் மிக மிக .... மிகக் கவனமாக இருக்கிறார்கள். ஆகவே தான் இந்திய கம்யூனிஸ்டுகள் இந்திய முதலாளிகளின் சரியான ஏவல் நாய்கள் என்று மாவோ கூறினார். நீங்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளைப் பற்றி விவரித்து இருக்கிறீர்கள். அவையும் நூற்றுக்கு நூறு சரி. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒடுக்கப்படத் தான் செய்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களின் விடுதலை தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையோடு தான் பின்னிப் பிணைந்து உள்ளது என்பதை உணராத பிற்படுத்தப்பட்ட மக்களின் அறியாமை சமூக இருளின் திண்மையை மேலும் அதிகரிக்கிறது. அண்ணல் அம்பேத்கர் சொன்னபடி சாதியப் பிரச்சி‌னைகளைத் தீர்க்காமல் வர்க்கப் புரட்சியை நினைத்துப் பார்க்கவும் முடியாது. முதலாளித்துவம் திகட்டு நிலை அடைந்த பிறகு தான் சோஷலிச சமுதாயம் மலர முடியும் என்பது சரியல்ல. மக்கள் நினைத்தாலதற்கு முன்பே கூட அமைக்க முடியும். ஆனால் உண்மை என்னவென்றால் முதலாளித்துவம் திகட்டு நிலையை அல்ல அதை விட மோசமான நிலையை அடைந்து விட்டது என்பதைத்தான் சூழ்நிலைக் கேடும், புவி வெப்ப உயர்வும் உணர்த்திக் கொண்டு இருக்கின்றன. இவ்வுலகை அழிவில் இருந்து காப்பாற்ற உடனடியாக சோஷலிச அமைப்பை ஏற்றே ஆக வேண்டிய அவசரத் தேவை எழுந்து இருக்கின்றது. உலக மக்கள் அனைவரும் இதற்காகப் போராட ‌வேண்டும். அதே நேரத்தில் இந்தியாவில் சாதிக் கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவரகள், மத சிறுபான்மையினர், உயர்சாதியினர் ஆகிய அனைவருக்கும் அவரவர் மக்கட் தொகையின் விகிதத்தில் பங்கிட்டுக் கொடுப்பதே அதற்கான வழியாகும். சாதிக் கொடுமை ஒழிப்பு, சோஷலிச சமூக அமைப்பு இரண்டிற்காகவும் சமரசமின்றிப் போராட வேண்டும்.
அ.நெ.செழியன்
// நவீன அறிவியலின் வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் மார்க்சியம் தனது தோராய கோட்பாட்டளவில் பச்சிளம் குழந்தையாகவே உள்ளது//மிகத்தவறான அவதானிப்பு .எந்தவொரு தத்துவத்தை பகுப்பாய்வு செய்யும் முன் அக்காலகட்டத்தின் வரலாற்று சூழலோடு பொறுத்திப்பார்க்க வேண்டும்.அக்காலகட்டத்தில் மார்க்ஸ் லைபிக்கிடம் கொண்ட ஈடுபாடு மற்றும் பிற அறிவியலாலர்களோடு கொண்ட தொடர்பினை மிகச்சாதரணமாய் புறந்தள்ள முடியாது.இயற்கை அறிவியல் மற்றும் இயற்கையின் இயங்கியல் பற்றின ஏங்கல்சின் பகுப்பாய்வு முறை அன்றைய காலகட்டத்தின் அசாதாரணமான முயற்சி.மார்க்சியத்தை உள்வாங்கி ,மண்ணுக்கேற்ற கருத்தாக்கத்தை உருவாக்காத இந்திய மார்க்சியர்களை(Elite Marxist) மற்றும் வைத்துக்கொண்டு மார்க்சியத்தை முற்றாக விமர்சிப்பது தவிர்க்கவேண்டிய தர்கமாகும்.
அ.நெ.செழியன்
//மார்க்சியம் முழு அறிவியல் அடிப்படையில் செயல் படுகிறதா என்று முதலில் பார்க்கப்படவேண்டும்//அடிப்படை ஆய்வு முயற்சியற்ற கண்ணோட்டம் . // திறமையின் அடிப்படையில் வேலை மற்றும் ஊதியம் என வழங்கிய அமைப்பு எது?//எந்த நிறுவனத்திலாவது ஒடுக்கப்பட்ட மக்களை CEO வாகவோ அல்லது Chairman,M.D ,Manager ஆகவோ உங்களின் முதலாளித்துவ அமைப்பு வைத்துள்ளதா ? //‘மார்க்சியம் தொழிலாளர் வர்க்கத்தின் தத்துவம்.' உலகின் ஒடுக்கப்பட்ட எல்லா மக்களுக்கான தத்துவமல்ல!// மார்க்சியத்தை முழுமையாக உள்வாங்காத மேம்போக்கு ஆய்வாளர்களின் முன்முடிவுகளுடன் கூடிய ஜனரஞ்சக கருத்து... எந்தவொரு தத்துவத்தையும் /கோட்பாட்டையும் விமர்சிக்க தொடங்கும் முன் அத்தத்துவத்தின் சாரம்சத்தை முழுமையாக உள்வாங்கி எச்சார்பற்று பகுப்பாய்வு செய்யவேண்டும் ..ஆனால் இங்கு சூழல் நேர்மறையாக உள்ளது ...
அ.நெ.செழியன்
//மார்க்சியம் முழு அறிவியல் அடிப்படையில் செயல் படுகிறதா என்று முதலில் பார்க்கப்படவேண்டும்// மார்க்சியமும் அறிவியலும் பிரிக்க முடியாதது .இந்த கட்டுரையெல்லாம் வாசித்துவிட்டு வந்து விமர்சனம் எழுதுங்கள் .. Letters on Natural Science The Ethics Of Darwinism Human Biology and Politic Dialectical Materialism and Modern Science Physics and Technology The Problem of the Origin of the World's Agriculture in the Light of the Latest Investigations Marxism and Natural Sciences Marxism and the New Physics
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
நன்பர் திரு. அ.நொ.செழியன் அவர்களுக்கு மார்க்சியம் என்பது சமூகவியலை அறிவியல் படுத்தும் மார்க்சின் முயற்சி என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை. ஆனால் , அது முழுமையான அறிவியல் ஆக்கப்பட்டதா? என்பது தான் பிரச்சனை. இயக்கவியல் பொருள் முதல்வாதம், வரலாற்று பொருள் முதல் வாதம் ஆகியவற்றில் தோரயமான உண்மைகள் இருப்பதை நான் மறுக்கவில்லை . உயிர் தோற்றம் பற்றிய டார்வினின் கண்டுபிடிப்பு இன்று பல மாறுதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. டார்வினின் பரிணாமக்கோட்பாடு பல திருத்தல்களுக்கும் மறுப்புகளுக்கும் உட்பட்டே இன்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இன்னும் தெளிவாக சொல்வதெனில் ஒன்றிலிருந்து ஒன்று பரிணமித்து வந்தது என்பதை தவிர டார்வின் கோட்பாடுகளில் பல கோட்பாடுகள் மாற்றப்பட்டுள்ளன. மரபுப் பண்புகளை தீர்மாணிக்கும் ஜீன் என்ற காரணியை பற்றிய எந்த வித எண்ணமும் டார்வினுக்கு கிடையாது. இந்த புதிய ஜீன் பற்றிய கோட்பாடுகள் இன்று டார்வினின் கோட்பாட்டை முழுமையாக மாற்றியமைத்து மேம்படுத்தியுள்ளன. இதே நிலைமை தான் மார்க்சியத்திற்கும் . மார்க்சியம் பெயரளவுக்கு அறிவியல் என்று தன்னை மார்தட்டி அடையாளப்படுத்திக் கொண்டாலும் இன்று வரையில் மார்க்சியம் முழு அறிவியலாக ஆக்கப்படவில்லை . மார்க்சியத்தில் எந்த துல்லிய அறிவியல் விதிகளும் இல்லை. ஒரு சமூகவியல் அறிஞனாக மார்க்சின் கண்டுபிடிப்புகளை ஒரு தாளின் ஒரு பக்கத்தில் அடக்கிவிடலாம். இது அவரை சிறுமைப்படுத்தும் முயற்சியல்ல. அவரின் கண்டுபிடிப்புகள் 1. சமூகம் வளர்ச்சியடைந்து ஒரு நிலையில் இருந்து மற்ற நிலையாக மாறுகிறது. (புராதான பொதுவுடைமை சமுதாயம், ஆண்டான் அடிமை சமுதாயம், நிலபிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம், கம்யூனிஸ சமுதாயம்) 2. உற்பத்தி உறவுகள், உற்பத்தி கருவிகள், ஆகியவற்றின் தொடர்பு 3. உற்பத்தி முறை சமூக வளர்ச்சியல் கொண்டிருக்கும் பாத்திரம். 4. சமுதாயத்தின் இயங்கியல் போக்கு 5. சமூக வளர்ச்சியைப்பற்றிய வரலாற்றுப்பார்வை ( வரலாற்று பொருள் முதல்வாதம் ) 6. பொருளாதர மாற்ற முறைகள் மற்றும் உற்பத்தி முறை, உற்பத்தி உறவு ஆகியவற்றின் தொடர்பு இப்படி மார்க்சின் கண்டுபிடிப்புகளை வரிசைப்படுத்தலாம். அறிவியலே என்னவென்று தெரியாத சமுதாயத்தில் அல்லது அறிவியல் பூர்வமான கருத்துக்கள் அன்னியப்பட்ட நம் சமுதாயத்திற்கு மார்க்சியம் மிகப்பெரிய அறிவியலாக தோன்றலாம். உண்மையில் சமூக வளர்ச்சிப் பற்றிய அறிவியல் விதிகளின் துவக்கத்தை மட்டுமே மார்க்ஸ் செய்திருக்கிறார். ஒரு சமூகவியல் அறிஞனாக மார்க்ஸ் பார்க்கப்பட்டு அவர் கூறிய விதிகளில் கருணையற்ற விமர்ச்சனம் மற்றம் மறுஆய்வு செய்ய முடியும் என்ற கருத்தியல் ரீதியான நம்பிக்கையற்ற மனிதர்களின் அதீத நம்பிக்கையான வார்த்தையே மார்க்சியம் முழு அறிவியல் என்பது. சமூக விஞ்ஞானத்தில் இன்னும் 90ரூ அறிவியல் விதிகள் வளர்க்க வேண்டிய தேவை இருக்கின்றது. எல்லாவற்றையும் மார்க்ஸ் கண்டறிந்துவிட்டார் என்பது நமது கற்பனை அல்லது மூட நம்பிக்கை. மார்க்கியம் முழு அறிவியலா? என்ற விவாதத்திற்கு நான் தயார். நீங்கள் தயார் எனில் இணையதளத்திலோ அல்லது நேரிலோ விவாதிக்கத் தயார். கீற்று மூலம் அது நடந்தாலும் நன்று .
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
நவீன விஞ்ஞானம் துல்லியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நவீன புள்ளியல் விவர கணித கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய சமூக விஞ்ஞானம், துல்லியமற்ற வெறும் கோட்பாட்டளவில் எந்திரத்தனமாக புரட்சிகர சக்திகளால் பயன்படுத்தப்படுகிறது. இதுதான் சமூக வளர்ச்சியில் அவர்களை பார்வையாளர்களாக நிறுத்தி வைத்திருக்கிறது. மார்க்சின் உற்பத்திமுறை, உற்பத்தி உறவுகள் சார்ந்த கண்டுபிடிப்புகள், டார்வினின் பரிணாம கோட்டுபாட்டிற்கும், ஃபாரடேவின் மின்காந்த தூண்டல் கண்டுபிடிப்பிற்கும் , நியூட்டனின் புவி ஈர்ப்பு விசை கண்டுபிடிப்பிற்கும் ஒப்பீட்டளவில் கொஞ்சமும் குறைந்தது அல்ல. ஆனால் இவையெல்லாம் கோட்பாட்டு வடிவத்திலிருந்து நவீன விஞ்ஞானம் அதை செயல்முறையில் நிரூபிக்கும் அறிவியல் கணித கோட்பாடாக மாற்றிவிட்டது. தற்போது மார்சியம் மட்டுமே மாற்றப்படாமல் வெறும் கோட்பாட்டளவில் உள்ளது மட்டுமின்றி செயல் முறையில் சரிபார்க்க வழியின்றியும் , சமத்துவம் விரும்புவோரின் கைகளில் எல்லாம் எந்திரத்தனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. மார்க்சின் உற்பத்தி முறைகள், உற்பத்தி உறவுகள், சமூக வளர்ச்சிப்பற்றிய அறிவியல் கண்டுபிடிப்பிற்கும் மார்க்சிய கருத்து குவியல்களுக்கும், அவரது நம்பிக்கைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும், சிந்தனை முறைகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன. அவரது சமூக வளர்ச்சியை பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மட்டுமே அடிப்படையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். நவீன வகைக்கெழு கணித சமன்பாட்டின் அடிப்படையில் மார்க்சின் அறிவியல் கண்டுபிடிப்பு விவரங்கள் வளர்தெடுக்கப்பட்டு, அவை யதார்த்த சமுதாயத்தில் பொருத்தி சரிபார்க்க முடியும். ( மார்க்சும் , ஏங்கெல்சும் தங்களது வாழ்நாளின் கடைசி காலத்தில் வகைக்கெழு கணிதத்தின் அடிப்படைகளை கற்றுக்கொண்டிருந்தார்கள்). தோராயமான சமூக விஞ்ஞான மார்க்சிய கோட்பாடுகள் 16ம் நூற்றாண்டுகளுக்கு முந்திய அறிவியல் வடிவமான கோட்பாட்டு வடிவத்திலேயே உள்ளன. இன்றைய நவீன புள்ளியியல் விவர அடிப்படையில் வடிவமைக்கப்படும் கணித சமூக விஞ்ஞான கோட்பாடு மட்டுமே மார்க்சியத்திற்கு சொந்தம் கொண்டாடும் ஒரு கூட்டத்தின் தனிச் சொத்தாக்கப்பட்ட மார்க்சிய தத்துவத்தை முழுமையாக அறிவியல் படுத்தி , துல்லியப்படுத்தி உண்மையில் சமூக அறிவியல் கண்டுபிடிப்பை யார் திரிக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தும் வலிமை மிக்க அளவுகோலும், ஆயுதமும் ஆகும்.
இளமுருகு
"24 மணிநேரமும் விவசாய நிலத்தில் ஆளுக்காரனாக, பண்ணை அடிமையாக இருந்த தலித்தை 8 மணி நேரம் தொழிலாளியாக மாற்றியது எது? சாதி பெயரைச்சொல்லி வயதிற்கு சம்மந்தமில்லாமல ் ‘வாடா போடா' என்று அழைக்கப்பட்ட தலித்தை மரியாதையாக தொழிற்சாலையில் நடத்த வைத்தது எது? விவசாய நிலங்களில் கோவனம் மட்டுமே அணிய அனுமதித்த தலித்தை மேலாளர் போல சமமாக உடையணிய சுதந்திரம் அளித்தது எது? விருப்பம் இல்லாவிட்டால் வேறு வேலைக்கு செல்லலாம் என சுதந்திரம் அளித்த அமைப்பு எது? ஆலைக்கு வெளியே அவன் பிடித்த காரியத்தை செய்ய சுதந்திரம் அளித்த அமைப்பு எது? பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் திறமையின் அடிப்படையில் வேலை மற்றும் ஊதியம் என வழங்கிய அமைப்பு எது? உயர் அதிகாரிக்கு முன்னால் கூட சமமாக அமர அனுமதியளித்த அமைப்பு எது? தலித்திற்கு ஒரே குவளையில் தண்ணீர் அருந்த வைத்த முதல் சமூக அமைப்பு எது? இவை எல்லாவற்றிற்கும ் விடை “முதலாளித்துவ தொழில் வளர்ச்சி”." அருமையானகருத்து நண்பரே! ஆனால் ஒரு பத்து ரூ சம்ப்ளம்கூட்டிகேட்டல் அடித்து ஒடுக்குவது எது ? 8.33 % போனஸ் ஐ 10 % விழுக்காடு எனக்கேட்டால் மறுப்பது எது? வேலையில்லாப் பட்டாளாத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு ஆள் குறைப்பு , ஊதியமுடக்கம், லாபம் இல்லாவிட்டால் தொழில் கூடங்ககளை மூடுவது எது? லாபத்தை மட்டுமே ( இதைதான் உபரி உற்பத்தி என்கிறது மார்ஃஸிசியம்) குறியாகக் கொடு இயங்குவது எது? வாடா போடா என்று அழைக்காமல் அய்யா என்று அழைத்து வேலையை விட்டு தள்ளுவது எது? . இன்றயை மிக வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் கூடவேலையின்மை காணப்படுவது ஏன்? வங்கி ஊழல்களின் முடை நாற்றம் கரணமாக அமெரிக்கவின் பொருளாதரமே சீர்குலந்து போய் அரசின் தயவால் நின்று கொண்டிருப்பது ஏன்?/ க்ரேக்கத்தில் எற்ப்ட்ட சிக்கல் மார்க்சியத்தால் எற்பட்டதா? நில உடமையில் அடிமைக்கு கஞ்சி ஊற்றும் பொறுப்பையாவது நிலக்கிழான் ஏற்றுக் கொண்டு இருந்தான் முதலாளித்துவத்தில் அதுவும் உறுதி இல்லையே1 10,000கணக்கில் அய் .டி தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வது ஏன்? முதலாளித்துவதின் சுரண்டல் சற்று மறைமுகமாக இருப்பதால் இமய வரம்பங்களும் ஏமாந்து போகின்றனர் இதை மார்க்சு சரியாகவே கணித்து சொல்லியிருக்கிறார். லெனின் அதை செழுமைப்படுத்தி பெரிய அளவில் முதலாளித்துவ வளர்ச்சி அற்ற ரசியாவில் புரட்சியை க்கொண்டு வரவில்லையா/ சீனப்புரட்சிக் காலத்தில் அங்கு என்ன தொழில் வளர்ந்து இருந்தது?. . பின்னர் இந்த புரட்சிகள் வீழ்ந்து போனதற்கு காரணிகள் அதன் ஆட்சியாளார்களின் ஊழல் , வலது சாரி /இடத் சாரி திரிபு வாதங்களே அன்றி அது எப்படி மார்க்சியதின் குறையாக முடியும்?முதலாளிதுவம் நன்கு வளர்ந்து முடியட்டும் பிறகு பாட்டாளி வர்க்கப் புரட்சி யைப் பார்த்துக் கொள்ளலாம் என்று பொதுவுடமைக் கட்சிகளை மூடிவிடலாமா? இன்றையா இந்தியாவில் முதலாளித்துவம் நிலவுடமையை அழிக்கவைல்லை! அதனுடன் கைக் கோர்த்துக்கொண்டுள்ளது ஒன்றைத்தொட்டால் மற்றது சீறுகிறது இரண்டையும் ஒரே அடியில் வீழ்த்தல் வேண்டும் தலித்துகளின் விடுதலை முதலாளித்துவதில் இல்லை பொதுவுடமையில்தான் உள்ளது
krishnan. ganesan.
Articles are good and i liked it.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.