பிப்ரவரி 9 அன்று காலை 8 மணிக்கு அப்சல் குரு, அவர் குடும்பத்துக்குக் கூட தெரிவிக்கப்படாமல் மிகவும் ரகசியமாக தூக்கிலிடப்பட்டார். நரேந்திர மோடியை இந்தியாவின் பிரதமராக்கப் பார்க்கும் மதவெறி பாசிச சக்திகளை அமைதிப்படுத்த நீதி தூக்கிலிடப்பட்டதாகவே நீதியை நேசிக்கும் ஒவ்வொரு மனிதரும் இதைக் கருதுவார்.

அப்சல் ஒரு சரணடைந்த காஷ்மீரத் தீவிரவாதி என்பதும் 1993ல் எல்லைப் பாதுகாப்புப் படையில் இணைந்து, அப்போது முதல் காஷ்மீர் காவல்துறையின் சிறப்புப் படையின் மறைவில் செயல்பட்டு வந்தார் என்பதும் 2001 டிசம்பர் 13 அன்று நடந்த நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டார் என்பதும் நன்கு தெரிந்த விசயமே. அவருக்காக வாதாட வழக்கறிஞர் எவரும் இல்லாமல், எந்த நேரடி சாட்சியமும் இல்லாமல் விசாரணை நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியது.

உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் விசாரணை நடத்தப்பட்ட மோசமான விதத்தைப் பற்றி, காவல்துறையினர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் சந்தேகத்துக்குரிய தன்மை பற்றி கண்டனம் தெரிவித்தபோதும், சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்துவது என்ற பெயரில் உச்சநீதிமன்றம் அவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உயர்த்திப் பிடித்தது.

1984ல் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைக்காக இந்த நாட்டில் இதுவரையில் யாரும் தூக்கிலிடப்படவில்லை. 1992ல் மும்பையிலும் சூரத்திலும் நடந்த கொடூரமான தாக்குதல்கள், 2002ல் குஜராத்தில் நடந்த மனிதப் படுகொலைகள் உள்ளிட்ட இசுலாமியர் மீதான அனைத்து வன்முறைகளுக்காகவும் இந்த நாட்டில் இதுவரையில் யாரும் தூக்கிலிடப்படவில்லை.

தனியார் படைகளும் அரசும் தலித்துகளை, பழங்குடி மக்களை, பிற ஒடுக்கப்பட்ட பிரிவினரை படுகொலை செய்ததற்காக இந்த நாட்டில் இதுவரையில் யாரும் தூக்கிலிடப்படவில்லை. அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது இந்திய சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்துவதாக இல்லை; மாறாக, நீதியின் இரட்டைத் தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது.

ஒவ்வோர் அரங்கிலும் வெகுமக்கள் எதிர்ப்பையும் போராட்டங்களையும் சந்திக்கிற காங்கிரஸ் கட்சியும் அய்முகூ அரசாங்கமும் பாஜகவையும் மதவெறி பாசிச கும்பலையும் அமைதிப்படுத்த வெறித்தனமாக முயற்சி செய்கின்றன.

இந்த காங்கிரஸ் - பாஜக சதியை நாட்டில் உள்ள ஜனநாயக இயக்கம் நிராகரிக்கும். எதிர்க்கும். இந்தியாவின் சாதாரண மக்களின் நீதி மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கானப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும்.

- திபங்கர் பட்டாச்சார்யா, பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)

Pin It