தொடர்புடைய படைப்புகள்

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்த தடை, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்களின் எச்சரிக்கைக்கும், எதிர்ப்புக்கும் அஞ்சி இப்படி ஒரு கலைப் படைப்பை தடை செய்யும் அளவுக்கு அரசு செல்லலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழக அரசின் தடை என்பது, 'கருத்துரிமைக்கு விடப்பட்டிருக்கும் சவால்' என்ற கருத்தும் நிலவுகிறது.
 
சென்சார் போர்டு எனும் அரசின் தணிக்கைத் துறை சான்றளித்த ஒரு திரைப்படத்தை தடுத்து நிறுத்துவது என்பது தவறான முன்னுதாரணம் என்றும், இனி முஸ்லிம்களைப்  போலவே ஒவ்வொரு சாதி மத அமைப்புகளும் தங்களுக்குப் பிடிக்காத கலைப்படைப்புகளுக்கு எதிராக படைதிரட்டி கிளம்புவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
 
kamal_347ஒரு படம் வெளியான பிறகு, அதில் முரண்பாடான கருத்துக்கள் இருந்தால் எதிர்க்கவோ, மறுப்பு சொல்லவோ, மாற்றி அமைக்கவோ போராடலாமே தவிர, இப்படி அதை வரவே விடாமல் தடுப்பது வன்முறையாகும் என்ற வாதமும் வைக்கப்படுகிறது.
 
தங்கள் சமூகம் பற்றியோ, மார்க்கம் பற்றியோ முன்வைக்கப்படும் எந்தக் கருத்துக்களையும், காட்சிகளையும் சகித்துக் கொள்ள முடியாமல், முஸ்லிம்கள் மூர்க்கம் கொள்வதாக விமர்சிக்கப்படுகிறது.
 
முஸ்லிம்களின் இத்தகைய இறுக்கமான அணுகுமுறைகள், அவர்களை மேலும் தனிமைப்படுத்தவே வழிவகுக்கும் என்று எச்சரிக்கையும் செய்யப்படுகிறது.
 
விஸ்வரூபம் மீதான தடையைத் தொடர்ந்து எழுந்துள்ள இத்தகைய கருத்துகள், கேள்விகள், வாதங்கள், விமர்சனங்கள், எச்சரிக்கைகள் அனைத்தும் அர்த்தமற்றவையாகவும், அறமற்றவையாகவும், ஆபத்தானவையாகவும் உள்ளன.
 
ஏற்கெனவே மத்திய அரசின் பாடப்புத்தகத்தில் புரட்சியாளர் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்த கார்டூனை நீக்கச் சொல்லி தலித் மக்கள் வீதியிலிறங்கி போராடிய போதும், கருத்துரிமைக் காவலர்களிடமிருந்து இதே வகையான விமர்சனம் எழுந்தன. தலித்களுக்கு சகிப்புத் தன்மை இல்லை என்றும், ஒரு கார்டூனைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத இறுகிய மனமாக தலித்களின் மனம் உள்ளது என்றும் விமர்சிக்கப்பட்டது.
 
தலித்கள் அம்பேத்கர் கார்டூனை எதிர்த்தது ஏன்? முஸ்லிம்கள் விஸ்வரூபம் போன்ற படங்களை எதிர்ப்பது ஏன்? என்பதற்கான காரணத்தையும், பின்னணியையும், நியாயத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளாததனால் எழுகின்ற விமர்சனங்கள் இவை.
 
மோதிலால் நேரு போன்ற 'பாரட் லா' பட்டம் பெற்றவர்களால் கூட எழுத முடியாத இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, மூன்றே ஆண்டுகளில் எழுதி முடித்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். தமது அறிவாலும், ஆளுமையாலும் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை வடிவமைத்துத் தந்தவர். எட்டு மணிநேர வேலைத் திட்டத்தை சட்டமாக்கியவர். சர்வீஸ் கமிசன், எம்ளாய்மென்ட் எக்சேஞ் என்றெல்லாம் இன்று செயல்படும் பல்வேறு அரசுத் துறைகளின் முகவரி அவர். சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியாவை, ஒருங்கிணைந்த ஒரே நாடாக உருவாக்கியவர். காஷ்மீர் பிரச்னை தீரவேண்டுமெனில் அம்மக்களின் விருப்பப்படி முடிவு எடுக்க வேண்டும் என முன்னறிவித்தவர். உலகத்தின் மிகச்சிறந்த ஆறு படிப்பாளிகளில் முதல் மனிதராய் அடையாளப்பட்டவர்.
 
இத்தகைய சிறப்புக்குரிய ஒரு பெருந்தலைவரை, இந்த நாட்டின் முதல் சட்ட அமைச்சராக இருந்தவரை, இம்மண்ணின் கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடியலாய்த் திகழ்ந்தவரை, இந்தியாவின் பிரதமராக இருந்த நேருவே சாட்டையை சுழற்றி முதுகில் அடிப்பது போல சித்தரித்து, இழிவுபடுத்தி கார்டூன் போட்டால் யாரால்தான் அதை சகிக்க முடியும்? அந்தக் கார்டூனை பள்ளிப் பிள்ளைகளுக்கு பாடமாக்கினால் எவரால்தான் அதை ஏற்றுக்கொள்ள முடியும்?
 
எனவேதான், ஒரு வரலாற்று மோசடிக்கு எதிராக, திரிபு வாதத்துக்கு எதிராக வீதிக்கு வந்து போராடினர் தலித்துகள். உடனே அம்மக்கள் சகிப்புத்தன்மை அற்றவர்களாக சித்தரிக்கப்பட்டனர். இரண்டாயிரம் ஆண்டுகளாக அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும், சுரண்டலையும் சகித்துக்கொண்டு ஊருக்கு வெளியே சேரியில் ஒடுங்கி வாழும் மக்களை சகிப்புத்தன்மை அற்றவர்களாக சித்தரிப்பது என்பது மிகப்பெரும் கருத்தியல் வன்முறை ஆகும். அந்த வன்முறைதான் இப்போது முஸ்லிம்கள் மீதும் திரும்பியுள்ளது.
 
மணிரத்னம் எடுத்த பம்பாய் படத்தை, 'என்னிடம் போட்டுக் காட்டாமல் திரையிடக்கூடாது' என்று பால்தாக்கரே கட்டளையிட்ட போதும், 'தெய்வத் திருமகன்' என்ற பெயரை மாற்றியே ஆக வேண்டுமென அடம்பிடித்து விக்ரம் வீட்டை முக்குலத்தோர் அமைப்புகள் முற்றுகையிட்ட போதும், 'மாட்டுக்கறி சாப்பிடுகிறார் ஜெயலலிதா' என எழுதியதற்காக நக்கீரன் அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் தாக்கியபோதும், கருத்துரிமைக் காவலர்களின் குரல்கள் ஏனோ ஒலிக்கவில்லை. பால்தாக்கரேவும், முக்குலத்தோரும், ஜெயலலிதாவும் சகிப்புத்தன்மை அற்றவர்களாகச் சித்தரிக்கப்படவில்லை. ஆனால், தலித்களும் முஸ்லிம்களும் தம்மைப் பற்றிய அவதூறுகளுக்கு எதிராகப் போராடினால் மட்டும் அதை எவராலும் சகிக்க முடியவில்லை.
 
முஸ்லிம்களை இழிவுபடுத்தி திரைப்படம் எடுப்பது என்பது, தமிழ் சினிமாக்காரர்களுக்கோ, குறிப்பாக கமல் போன்றவர்களுக்கோ புதிய அனுபவம் அல்ல. முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் போக்கு 1992லிருந்து இன்றுவரை 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ரோஜாவில் தொடங்கிய பயணம் விஸ்வரூபம் வரை வந்திருக்கிறது. இந்த 20 ஆண்டுகளும் முஸ்லிம்கள் மிகப்பெரும் சகிப்புத்தன்மையுடனேயே இருந்து வந்தனர்.
 
ரோஜாவில் முஸ்லிம் வேடமிட்ட தீவிரவாதி ஒருவர் இந்திய தேசியக் கொடியை தீயிட்டுக் கொழுத்துவதுபோல காட்சியமைத்திருந்தார் மணிரத்னம். 1992களில் இந்தியாவில் எந்தக் குண்டுவெடிப்புகளும் நடைபெற்றதில்லை; எந்தவொரு முஸ்லிமும் வெடிகுண்டு வைத்ததாக கைது செய்யப்படவுமில்லை; தீவிரவாதிகளாக முஸ்லிம்கள் அடையாளப்படுத்தப் பட்டதுமில்லை. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் பங்காற்றிய சமூகமாகவே முஸ்லிம்கள் அறியப்பட்டிருந்தனர். அப்படியிருந்தும் ரோஜாவில் மோசமான சித்தரிப்பை செய்திருந்தார் மணிரத்னம். அதை முஸ்லிம்கள் சகித்துக் கொண்டார்கள்.
 
பம்பாய் படத்தில் அதே மணிரத்னம், மும்பை மாநகரில் பால்தாக்கரே நடத்திய பயங்கரவாதங்களையெல்லாம் முஸ்லிம்கள் நடத்தியதாக திரித்துக் காட்டியிருந்தார். இந்துத்துவ மதவெறிக்கு பல ஆயிரம் உயிர்களை பலிகொடுத்திருந்த போதும், பல கோடி உடைமைகளை பறிகொடுத்திருந்த போதும், வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட போதும் ஆத்திரம் அடையாமல் முஸ்லிம்கள் 'பம்பாய்' படத்தை சகித்துக் கொண்டார்கள்.
 
ஹேராமிலும், உன்னைப்போல் ஒருவனிலும் முஸ்லிம்களை கொச்சைப்படுத்தி காட்சியமைத்திருந்தார் கமல்ஹாசன். முற்போக்கு முகமூடி அணிந்துகொண்டு மிகவும் வன்மத்துடன் கூடிய  கருத்தாக்கங்களுடன் கமல் அவ்வாறு படமெடுத்த போதும் முஸ்லிம்கள் சகித்துக் கொண்டார்கள்.
 
ஒற்றன், வானம், பயணம் என எத்தனையோ படங்களை அவ்வாறு பட்டியலிட முடியும். விஜயாகாந்தின் பல படங்களை அந்தப் பட்டியலில் இணைக்க முடியும். அப்படி வந்த அனைத்துப் படங்களையும் முஸ்லிம்கள் சகித்துக் கொண்டார்கள்.
 
இத்தகைய நிலையில்தான் உலகம் தழுவிய அளவில் 'இன்னொசென்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ற படமும், தமிழகத்தில் 'துப்பாக்கி' என்ற படமும் புயலைக் கிளப்பின. அமெரிக்கர்களை எதிர்த்து உலகெங்கிலும் வெடித்த போராட்டங்கள் தமிழக வீதிகளிலும் எதிரொலித்தன. சென்னையில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்படும் அளவுக்கு நிலைமை சென்றது. அதன் தொடர்ச்சியாக வெளிவந்த 'துப்பாக்கி' திரைப்படம் முஸ்லிம்களின் கோபத்தை மேலும் கிளறியது. போராட்டங்கள் தீவிரம் பெற்றன. படக்குழுவின் அணுகுமுறையால் பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டது.
 
'துப்பாக்கி' படப் பிரச்சனை உச்சக்கட்டத்தில் இருக்கும்போதே, 'விஸ்வரூபம்' பற்றிய விவாதமும் தொடங்கி விட்டது. ஏற்கெனவே உன்னைப்போல் ஒருவன் தந்த அனுபவமும், விஸ்வரூபத்தின் வடிவமைப்பில் உள்ள இஸ்லாமிய அடையாளங்களும் அத்தகைய விவாதத்திற்கு வழிவகுத்தன. சர்ச்சைகளும் சந்தேகங்களும் வலுக்கவே, முஸ்லிம் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசிடம் முறையீடு செய்யப்பட்டது. அரசு கமல்ஹாசனுக்கு அறிவுறுத்தியதன் பேரில், முஸ்லிம் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி இறுதியில் படத்தையும் போட்டுக் காட்டினார் கமல். முரண்பட்ட காட்சிகள் இருப்பதால் படத்தை தடை செய்யச் சொல்லி அரசை வலியுறுத்தினர் முஸ்லிம் அமைப்பினர். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு விஸ்வரூபத்திற்கு தற்காலிக தடை விதித்தது தமிழக அரசு.
 
தம்மைப் பற்றிய அவதூறுகளையும், இழிவான சித்தரிப்புகளையும், மோசமான பரப்புரைகளையும் தொடர்ந்து சகித்துக் கொண்டிருந்த முஸ்லிம் சமூகம், சகிப்பின்மையின் எல்லைக்கே சென்ற பிறகுதான் இத்தகைய போராட்ட உத்தியைக் கையாளத் தொடங்கியிருக்கிறது. 1992 இலிருந்து இன்றுவரை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தீவிரவாதிகளாகவே சித்தரித்துவரும் சினிமாக்காரர்களின் முகத்தில் காறி உமிழ வேண்டியவர்கள், ஜனநாயக வழியில் தமது எதிர்ப்பைக் காட்டிவரும் முஸ்லிம்களை நோக்கிப் பாய்கின்றனர்.
 
இவ்வளவு நாளாக எதிர்க்காமல் இப்போது திடீரென எதிர்ப்பது ஏன்? என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இவ்வளவு காலமும் சகித்துக் கொண்டார்கள் என்றுதான் நாம் சொல்கிறோமே ஒழிய, ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்லவில்லை. சகிப்புத் தன்மைக்கு எப்போதுமே ஒரு எல்லை உண்டு. மனதளவில் கனன்று கொண்டிருக்கும் எதிர்ப்பு எண்ணம் என்றோ ஒருநாள் வெடித்துக் கிளம்பி விடும். அதற்கான சந்தர்ப்ப சூழல்கள் வாய்க்க வேண்டும்.
 
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தை இதோடு நாம் பொருத்திப் பார்க்க முடியும். 1988களில் அணுஉலைக்கு அடிக்கல் நாட்டும்போதே அங்கு எதிர்ப்பு கிளம்பியது. அதையும் மீறி அரசு அணுஉலை அமைக்கும் பணியைத் தொடர்ந்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கனன்று கொண்டிருந்த எதிர்ப்பு எண்ணம், ஃபுக்குசிமா விபத்துக்குப் பிறகு மக்கள் இயக்கமாக உருமாறியது. ஒட்டுமொத்த உலகின் கவனத்தையே ஈர்க்கும் அளவுக்கு போராட்டம் தீவிரம் பெற்றது. இந்த உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கும் பொதுப்புத்தி, ‘ஆரம்பத்திலேயே எதிர்க்காமல் இப்போது ஏன் எதிர்க்கின்றீர்கள்?’ என திரும்பத் திரும்ப கேள்வி எழுப்புகிறது. இடிந்தகரை மக்களை நோக்கி எழுப்பப்படும் இந்தக் கேள்விக்கும், இஸ்லாமியர்களை நோக்கி எழுப்பப்படும் கேள்விக்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது.
 
கமலின் படைப்புச் சுதந்திரம் பற்றி இங்கே பலரும் கவலைப்படுகிறார்கள். ஏற்கனவே அவர் ஹேராம் எடுத்தபோது அதில் காந்தியைப் பற்றி தவறான காட்சிகள் இருப்பதாகக் கருதி காங்கிரஸ்காரர்கள் எதிர்த்தார்கள் என்றும், அன்பே சிவம் படத்தை இந்துத்துவ சக்திகள் எதிர்த்தார்கள் என்றும், இப்போது விஸ்வரூபத்தை முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என்றும் ஒப்பீடு செய்யப்படுகிறது. முஸ்லிம்களுக்கு படத்தை போட்டுக்காட்டியது தவறான முன்னுதாரணம் என்றும், இனி ஒவ்வொரு சாதி, மத அமைப்புகளும் இதைப்போல படைகட்டி கிளம்புவார்கள் என்றும் கருத்து சொல்லப்படுகிறது.
 
காங்கிரஸ்காரர்களுடனும், இந்துத்துவ சக்திகளுடனும், ஏனைய சாதி, மத அமைப்புகளுடனும் முஸ்லிம்களை ஒப்பிடுவதே அடிப்படையில் தவறாகும். காங்கிரஸ்காரர்களுக்கும், இந்துத்துவ சக்திகளுக்கும், ஏனைய சாதி மத அமைப்புகளுக்கும் மிகப்பெரும் ஊடக வலிமை உள்ளது; அதிகாரப் பின்னணி உள்ளது; தாம் நினைப்பதை நினைக்கும் இடத்திலிருந்தே நிறைவேற்றிக் கொள்ளும் அரசியல் ’லாபி’ உள்ளது. ஆனால், இவற்றில் முஸ்லிம்களிடம் என்ன உள்ளது?
 
ஆதிக்க சக்திகள் தமக்கு எதிரான கருத்துக்களை அதே வடிவத்தில் எதிர்கொண்டு விடுவார்கள். தம் தரப்புக் கருத்துக்களை வலுவாக பதிவு செய்தும் விடுவார்கள். அவதூறோ, இழிவோ எதையும் எளிதில் துடைத்தெறியும் வல்லமை அவர்களிடம் உள்ளது. ஆனால், முஸ்லிம்கள் தமக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொள்ள என்ன செய்வார்கள்? எங்கே போய் நிற்பார்கள்? தம் தரப்பு நியாயத்தை எதில் சொல்வார்கள்? நாளிதலோ, வானொலியோ, தொலைக்காட்சியோ, சினிமாவோ எதுவுமே அவர்களின் கைகளில் இல்லை.
 
கமல்ஹாசன் உன்னைப்போல் ஒருவன் எடுத்தபோது அதை எந்த முஸ்லிமும் போராடித் தடுக்கவில்லை. படம் வந்தது; முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்ற கருத்தை விதைத்தது; குற்றச்செயல்களில் ஈடுபடும் முஸ்லிம்களுக்கு விசாரணைகள் அற்ற தண்டனைகள் வழங்க வேண்டும் என வாதிட்டது; என்கவுண்டரில் சுட்டுத்தள்ளி அதை செய்தும் காட்டியது. அப்படத்தின் வழியே முஸ்லிம்களுக்கு எதிராக கமல் செய்த கருத்துருவாக்கம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவியது. 2009 இல் வெளியான அப்படம் அன்றோடு சென்றுவிடவில்லை. இன்றைக்கும் விடுமுறை நாட்களில் சிறப்புத் திரைப்படமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது. கட்டற்ற அந்தக் கருத்துருவாக்கத்தை முஸ்லிம்களால் தடுக்கவும் முடியவில்லை; தகர்க்கவும் முடியவில்லை.
 
உன்னைப்போல் ஒருவன் ஏற்படுத்திய சமூக விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது? கமல் கல்லாக்கட்டியதோடு கடமை முடிந்தது என்று அடுத்தடுத்த படங்களை எடுக்கச் சென்றுவிட்டார். அவருக்காக குரலெழுப்பும் கலைத்துறையினரும், கருத்துரிமைக் காவலர்களும் அடுத்த வேலைக்குச் சென்று விட்டனர். ஆனால், முஸ்லிம்களால் மட்டுமே அடுத்த வேலையைப் பார்க்க முடியவில்லை. மாநகரங்களில் குடியிருக்க வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவர்கள் திண்டாட வேண்டியதாயிற்று. தகுதி இருந்தும், திறமை இருந்தும் முஸ்லிம் இளைஞர்கள் பெருநிறுவனங்களில் வேலை கிடைக்காமல் திணற வேண்டியதாயிற்று. ஒரு ரயில் பயணத்தைக் கூட நிம்மதியாக நிகழ்த்த முடியாமல் தவிக்க வேண்டியதாயிற்று. பாஸ்போர்ட் ஆபீஸ், போலீஸ் ஸ்டேசன், வில்லேஜ் ஆபீஸ் என எல்லா அரசு அலுவலகங்களிலும் சந்தேகப் பார்வைகளையும், சில பிரத்யேக கேள்விகளையும் சந்திக்க வேண்டியதாயிற்று.
 
சென்சார் போர்டு பற்றி இங்கே ஏராளமான குரல்கள் ஒலிக்கின்றன. சென்சார் செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட ஒரு படத்தை அநியாயமாக இந்த முஸ்லிம்கள் தடுத்து விட்டார்களே என்று பலரும் அங்கலாய்க்கின்றனர். அரசு, நீதிமன்றம், காவல்துறை, ராணுவம், ஊடகம் போன்ற ஜனநாயகத் தூண்களில் நடக்கும் திரைமறைவு அரசியலையும், அவற்றின் பின்னணியில் இருக்கும் சாதியவாத, மதவாத முகங்களையும் பற்றி அறிந்திருந்தால் இந்தக் கேள்விகள் எழ வாய்ப்பில்லை.
 
பாபர் மஸ்ஜித் இடிப்பையும், மும்பை கலவர பயங்கரங்களையும், குஜராத்தில் மோடி முன்னின்று நிகழ்த்திய இன அழிப்பையும், ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் நாடு முழுவதும் நடத்திய குண்டு வெடிப்புகளையும் அம்பலப்படுத்தி திரைப்படங்கள் எடுக்கப்பட்டால் அவற்றை இந்த சென்ஸார் போர்டு என்ன செய்யும் என்பதே நமது கேள்வி? இந்துத்துவ பயங்கரவாதத்தை தோலுரிக்கும் நேரடியான காட்சியமைப்புகள் இல்லாமல், போகிற போக்கில் ஏதேனும் வசனமோ, பாடலோ இருந்தால்கூட சென்ஸார் போர்டு அதை அனுமதிக்காது என்பதே நிதர்சனமான உண்மை. சென்ஸார் போர்டு போன்ற உயரதிகாரத் தளங்களில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகள், தமக்கு எதிரான சித்தரிப்புகளை வேர் மட்டத்திலேயே தடுத்து விடுகின்றனர். அதேநேரம் முஸ்லிம்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு எதிரான சித்திரங்களை தாராளமாக அனுமதிக்கின்றனர். இதன் அடிப்படையிலேயே துப்பாக்கிக்கும், விஸ்வரூபம் எனும் முஸ்லிம் விரோத பீரங்கிங்கும் நற்சான்றிதள் கிடைக்கிறது.
 
சென்ஸார் போர்டு உறுப்பினர்களாய் இருப்பவர்கள் சமூக ஆர்வலர்களாகவும், எளிய மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் படைப்பாளிகளாகவும், அடக்குமுறைகளையும், அநீதிகளையும் கண்டு கொந்தளிக்கும் மனிதஉரிமை செயற்பாட்டாளர்களாகவும் இருப்பார்களேயானால், அவர்களின் தணிக்கையையும், அவர்கள் அளிக்கும் சான்றிதளையும் ஏற்றுக்கொள்வதில் நமக்கு மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. ஆனால், கறைபடிந்த கரங்களுடையோரும், பாரபட்ச போக்குகளை கடைப்பிடிப்போரும், இந்துத்துவ சிந்தனையுடையோரும் நிறைந்திருக்கின்ற ஒரு அவையின் மதிப்பீடை எப்படி அப்படியே ஏற்றுக்கொள்வது? எனவே, சென்ஸார் போர்டை ஒரு அளவுகோலாகக் கொண்டு, முஸ்லிம்களின் பிரச்சனைகளை அணுக முடியாது.
 
‘படம் வந்தபிறகு அதில் நமக்குள்ள மாற்றுக்கருத்துக்களை எடுத்துக்கூறி, இழிவான சித்தரிப்புகளை நீக்கச் சொல்லலாமே?’ என்பதும் பலரின் வாதம். சினிமா குறித்த அடிப்படை புரிதலின்மையால் வரும் வாதம் இது. சினிமா என்பது ஒரு கட்டற்ற ஊடகம். சமூகத்தில் பல்வேறு பரிமாணங்களை ஒரே நேரத்தில் நிகழ்த்தும் ஆற்றல் சினிமாவுக்கு உண்டு. திரையரங்குகளோடு முடிந்து விடுகிற, முடங்கி விடுகிற மீடியம் அல்ல சினிமா. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், இணையதளம் என அனைத்து ஊடகங்களிலும் சினிமாவின் கரங்கள் நீள்கின்றன. சினிமா இல்லாமல் இவற்றில் எதுவுமே இயங்குவதில்லை. எனவே, ஒரே ஒருநாள் திரையில் ஒருபடம் ஓடினால்கூட, அது மற்ற ஊடகங்கள் அனைத்துக்கும் மறுநொடியே வந்து சேர்ந்து விடுகிறது. அப்படம் முன்வைக்கும் கருத்துகள் முழுவீச்சுடன் மக்களை சென்றடைகின்றன. திரையரங்கிற்கு சென்று பார்க்க முடியாதவர்களுக்கு, வீட்டு வரவேற்பறையிலேயே தொலைக்காட்சி அதை கொண்டுவந்து கொடுக்கிறது.

படம் வரும்போது பிறக்காதவர்கள்கூட பின்னாளில் ஏதோ ஒரு விடுமுறை நாளில் சிறப்புத் திரைப்படமாக தொலைக்காட்சியில் அதைக் காண வாய்ப்பிருக்கிறது. உலகத்தின் எந்த மூலையில் இருந்து கொண்டும் இணையத்தின் வழியாக அப்படத்தைப் பார்க்கவும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அதைப் பகிரவும் தொழில்நுட்பம் வழிவகுக்கிறது. எனவே, மிகமோசமான சித்தரிப்புகளுடன் உருவாகும் படங்களை கருவிலேயே அழிப்பதைத் தவிர, விளிம்புநிலை மக்களுக்கு வேறு வழி இல்லை.

- ஆளூர் ஷாநவாஸ்

Comments

34 comments

34
aandon
மட்டமான கட்டுரை.
ரூபன்
ஐயா,

நீங்களும் சரி, மற்றவர்களும் சரி. போராடுவதால் ஒன்றும் ஆகிவிட போவதில்லை. தமிழக அரசின் ஆதரவு இருக்கும் வரை தான் வெற்றி முஸ்லீம்கள் பக்கம். இல்லையெனில், வெற்றி அந்த பக்கம். தமிழக அரசின் ஆதரவு எப்படி பட்டது என்பது ஊருக்கே தெரியும்.

நான் எதுவும் சொல்வதற்கில்லை. ஏற்கெனவே நிறைய விவதித்தாயிற்று. ஆனால் ஒன்று மட்டும்,

இந்த கீற்று இணைய தளத்தின் கட்டுரைகளே ஒன்று ஆதரவாகவும் ஒன்று எதிர்த்தும் முஸ்லீம்களாலேயே எழுதப் படுவதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள். எங்கேயோ தப்பு நடக்கிறது என்று. குடும்பத்தில் உள்ள குழப்பத்தை சரி செய்யத் தெரியாதவன் ஊர் நாட்டாமை ஆக முடியாதுங்கோ..
KIYAS DEEN,PALLAPATTI
மாநகரங்களில் குடியிருக்க வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவர்கள் திண்டாட வேண்டியதாயிற்று. தகுதி இருந்தும், திறமை இருந்தும் முஸ்லிம் இளைஞர்கள் பெருநிறுவனங்களில் வேலை கிடைக்காமல் திணற வேண்டியதாயிற்று. ஒரு ரயில் பயணத்தைக் கூட நிம்மதியாக நிகழ்த்த முடியாமல் தவிக்க வேண்டியதாயிற்று. பாஸ்போர்ட் ஆபீஸ், போலீஸ் ஸ்டேசன், வில்லேஜ் ஆபீஸ் என எல்லா அரசு அலுவலகங்களிலும் சந்தேகப் பார்வைகளையும், சில பிரத்யேக கேள்விகளையும் சந்திக்க வேண்டியதாயிற்று.
"இதை இன்னும் விரிவு படுதிருக்கலாம்"
- அனைத்து கருத்துக்களும் அருமை-
MOULANA RIFAIDEEN HASANI
இஸ்லாமியர்களின் உளவியல் பிரச்சனைகளை படம் பிடித்துக் காட்டியுள்ளார்.கமலும்,திரையுலகமும் எங்கள் வேதனையை உணர்வார்களா???????
செ.சண்முகசுந்தரம்
படத்திற்கு தடை விதிக்கப்பட்டதற்கு ஆதரவு அளிப்பது மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும்.கமலின் அரசியல் பற்றியோ,தத்துவம் பற்றியோ இங்கு பேசவேண்டாம்.அவர் ஒரு தத்துவக் குழப்பவாதி.ஒரு படைப்பை நீங்கள் அலட்சியப்படுத்த உரிமை உண்டு.ஆனால் அதை மறுக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது.ஆண்டவனுக்கும் கிடையாது.உங்களைப் போன்ற மனநிலை அன்றைக்கு ஆளும் வர்க்கத்திற்கு இருந்திருந்தால் பெரியார் தனது கருத்துகளைப் பேசியிருக்கவே முடியாது.கருத்துகளை வெளியிடுவதற்கு தடையிடுவதை விட்டுவிட்டு கமலின் இதுபோன்ற படங்களை நிராகரியுங்கள்.ஒதுக்கித்தள்ளுங்கள்.அப்படத்தை மிகப்பெரும் வெற்றியாக்கிக் கொடுத்திருக்கிறீர்கள்.இப்படத்தைப் பார்த்தா ஒரு இந்து உங்களை வெறுக்கப்போகிறான்.இந்துக்களின் மீதான உங்களின் நம்பிக்கையும்,அபிப்ராயமும் அவ்வளவு கீழாகப் போய்விட்டதா என்ன?கமலின் கருத்து திரைப்படமாக வெளிவருகிறது.ஆளூர் நவாஸின் கருத்து எழுத்தாக வெளிவருகிறது.தளமும் வெவ்வேறாக இருக்கிறது.திரையரங்கம்,கீற்று.கருத்துகளை சகித்துக் கொள்ள சமூகத்தைப் பழக்குவோம்.மதமோ,சாதியோ,பண்பாடோ அவரவரது கருத்துகளை வெளிப்படுத்துவோம்.காலத்திற்கு ஒவ்வாத கருத்துகளை நீங்கள் மதம் என்னும் போர்வை போர்த்தியோ,சாதி என்னும் முகமூடி இட்டோ,கலாச்சாரம் என்று பசப்பியோ இம்மண்ணில் வேரூன்றச் செய்யமுடியாது.
shueib
ரூபன் அவர்களே,

கட்டுரையாளரின் கருத்து சரியா தவறா? அதை பற்றிய கருத்தை கூறுவதை விட்டுவிட்டு திசை திருப்புவது ஏன்?
ஷாலி
ஆளூர் ஷாநவாஸ்,பாயி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க...நீங்க என்ன வெளக்கம் குடுத்தாலும் அவுக இதுக்கெல்லாம் செரிப்பட்டு வர மாட்டாக! அவுக கருத்து சுதந்திரத்தை பத்துமாதம் சுமந்து கருத்தரித்துப் பெத்தவுக.
பெத்தவுகளுக்குத்தான் தெரியும்..எந்த கருவே சுமக்கணும்,எந்த கருவே கலைக்கனும்டு....

“மல...மல..மல....மருதமல...”.எனும் பாடலுக்கு ஆட்டம் போட்ட ஒரு குத்தாட்ட நடிகை பேரு மும்தாஜாம். மருத மல புனிதமே போச்சுனு நம்ம ராமகோபாலன் களத்தில் இறங்கினார்.
“வள்ளியே எப்படி புடுச்சே அரோகரா.....அதை என்கிட்டே சொல்லு தட்சணை தறேன் அரோகரா...” என்று கதாநாயகன் விஷாலு கோயில் முன்னாடியே முருகப்பெருமானே கிண்டலடிக்கும்போது கருத்து சுதந்திரம் பக்தியில் கலந்து அதுவும் ஆட்டம் போட்டது.

குடும்ப குத்து வெளக்கு, பூவும் பொட்டும் நிறைந்த குலமகள் ராதை குஷ்பூ வின் மாராப்பு முந்தானையில் கடவுளை கண்ட இந்து மக்கள் கட்சி கையெடுத்து சேவித்து கருத்து சுதந்திரத்தை காக்கவில்லை.அது ஏன்?
ஸ்ரீ இராமபக்த ஹனுமான் மார்பில் பார்த்த இராமபிரான் முன்னால் பொம்பளே முந்தானையில் பார்த்ததால்...எதிர்ப்பு.
கருத்தை சொல்வதற்கும், கருத்தை கொல்வதற்கும் உரிமைபெற்ற லைசென்ஸ்தார் அவுக மட்டும்தான். அதுக்குத்தான் சொன்னேன்,இந்த வெளக்கமெல்லாம் அவுகளுக்கு செரிப்பட்டு வராதுன்னு!
aandaval
நீதிமன்ரத்தை நாடாமல் அரசை நாடியது ஏன் ஆலும் கட்சி எமெல்யெ இருப்பத்தாலா
iஇறைகற்பனைஇலான்
முசுலீம்கள் தீவிரவாதியாக சித்தரிக்கப்படுவதைப் பார்த்து எதிர்ப்பது என்பது உரிமைதான் . அதற்காக ஓட்டுவங்கியைப் பயன்படுத்தி அரசை வலைத்து கூடி கூச்சல் போடுவது எதிர்விளைவுகளைத்தான் தரும். அத்துடன் அரசு பிற்ப்போக்குத்தனமாக மதவாதததை ஊக்கப்படுத்தி தன் சொந்த சிந்தனையை நிறைவேற்றிக்கொள்வதும் தவரு. இதில் பழைய ஆட்சியும் இப்படித்தான் செய்திருக்கும். இசுலாமியர்கள் ,இந்துக்கள், கிருத்துவர்கள், ஏன் சைனர்கள் கூட மத அடயாள்த்தை திமிராகவே வெளிக்காட்ட முனைகிறார்கள். எல்லாமே மக்களின் இனக்கவாழ்விற்கு இடையூரானதுதான். மதம் கட்டுக்குள் வரவேண்டும். மத அடயாளங்கள், பூநூலானும் சரி,சிலுவையானாலும் சரி, தாடி,தொப்பி-கைலியானாலும் சரி,குங்கும்மாலும் சரி எல்லாம் கட்டுப்படுத்தப்படவேண்டும். சற்று நடுநிலையோடு சிந்திக்கவேண்டும். ---- இர.ரசீத்கான்.
viyasan
இன்றைய செய்திக‌ளின் ப‌டி இல‌ங்கை அர‌சு ஒசாமா பின்லாட‌னின் அல்கொய்தாவையும், த‌லிபான்க‌ளையும் இல‌ங்கையில் அண்மையில் ச‌ட்ட‌பூர்வ‌மாக‌ த‌டைசெய்தமை இல‌ங்கை முஸ்லீம்க‌ளைப் பாதிக்குமாம். தலிபான் மற்றும் அல்கைதா அமைப்புக்களை தடை செய்வது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் தெரிவித்துள்ளது. இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. அந்தச் சந்திப்பிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டது. தீவிர‌வாத‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌ங்க‌ளாகிய‌ த‌லிபான்க‌ளையும், அல்கொய்தாவையும் த‌டைசெய்த‌து முஸ்லீம்க‌ளைப் பாதிக்கும் என்கிறார்க‌ள் இல‌ங்கை முஸ்லீம்க‌ள், த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ளோ ஆப்கானிஸ்தானில் த‌லிபான்க‌ள் செய்த‌ அட்டூழிய‌ங்க‌ளைத் திரைப்ப‌ட‌மெடுத்தால் அது த‌ம‌து வாழ்வாதார‌த்தை,ம‌ரியாதையைப் பாதிப்ப‌து ம‌ட்டும‌ல்ல‌, த‌ம‌து உண‌ர்வுக‌ளைப் புண்ப‌டுத்தும் செய‌லாகும் என்கிறார்க‌ள். எங்கேயோ உதைக்கிற‌தோ! வ‌காபியிச‌மும், அர‌பும‌யமாக்க‌மும் நிச்ச‌ய‌மாக‌த் த‌மிழ்நாட்டைப் ப‌டாத‌பாடு ப‌டுத்த‌ப்போகிற‌து என்ப‌து தெளிவாகிற‌து. இல‌ங்கையில் த‌மிழ‌ர்க‌ளுக்கு என்ன‌ ந‌ட‌ந்த‌து, இல‌ங்கையின் த‌மிழ்பேசும் முஸ்லீம்க‌ள் தாம் த‌மிழ‌ர்க‌ளல்ல என்று சிங்க‌ள‌வ‌ர்க‌ளிட‌மிருந்து உத‌விக‌ளைப் பெறும் பேராசை கார‌ண‌மாக‌வும், ம‌லே முஸ்லீம்க‌ள் த‌லைவ‌ர்க‌ளாக‌ இருந்த‌தாலும், வ‌ஹாபி, ஜிகாதிக‌ளின் உந்துத‌லாலும் அர‌பும‌யமாக்க‌ப்ப்ட்டு த‌ம்மைத் த‌மிழ‌ர்க‌ள‌ல்ல என‌ த‌னிமுஸ்லீம் அடையாள‌த்தை எடுத்த‌ பின்ன‌ர், த‌மிழ‌ர்க‌ளை எப்ப‌டியெல்லாம் க‌ழுத்த‌றுத்தார்க‌ள், இன்றும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து த‌மிழ‌ர்க‌ளை அவ‌ர்க‌ளின் சொந்த‌ மண்ணிலேயே சிறுபான்மையின‌ராக்க‌ உத‌வுகிறார்க‌ள் என்பதை த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் உண‌ர்ந்து இஸ்லாமிய‌ ம‌த‌ச்சார்பு அமைப்புக்களுக்கு ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌ ம‌தச்சார்பு அமைப்புக்க‌ளுக்கும் ஆத‌ர‌வ‌ளிக்க‌க் கூடாது. இப்ப‌டியான‌ ஆப்கானிஸ்தானிய‌ த‌லிபான்க‌ளைப் பற்றிப் ப‌ட‌மெடுத்தால் அது த‌மது ம‌ன‌தைப்புண்ப‌டுத்தும் செய‌ல் என்னும் ப‌ம்மாத்துக்க‌ளை முளையிலேயே கிள்ளி விட‌வேண்டும்.

http://www.viyaasan.blogspot.com
கோகுல்
//ரோஜாவில் முஸ்லிம் வேடமிட்ட தீவிரவாதி ஒருவர் இந்திய தேசியக் கொடியை தீயிட்டுக் கொழுத்துவதுபோல காட்சியமைத்திருந்தார் மணிரத்னம். 1992களில் இந்தியாவில் எந்தக் குண்டுவெடிப்புகளும் நடைபெற்றதில்லை; எந்தவொரு முஸ்லிமும் வெடிகுண்டு வைத்ததாக கைது செய்யப்படவுமில்லை; தீவிரவாதிகளாக முஸ்லிம்கள் அடையாளப்படுத்தப் பட்டதுமில்லை. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் பங்காற்றிய சமூகமாகவே முஸ்லிம்கள் அறியப்பட்டிருந்தனர். அப்படியிருந்தும் ரோஜாவில் மோசமான சித்தரிப்பை செய்திருந்தார் மணிரத்னம். அதை முஸ்லிம்கள் சகித்துக் கொண்டார்கள்.//

மணிரத்னம் பாகிஸ்தானியர்களை தானே அப்படி காட்டினார்? இது இன்னொரு கேள்வியையும் எழுப்புகிறது, நீங்கள் முஸ்லிமை இந்திய முஸ்லிம் / பாகிஸ்தானிய முஸ்லிம் என்று பிரித்து பார்க்கறீர்களா இல்லையா என்று தெரியவில்லை?
விஸ்வரூபம் படத்தில் எனக்கு வந்த குழப்பமும் அதுதான் 'இந்திய முஸ்லிம் / பாகிஸ்தானிய / ஆப்கானிஸ்தானிய முஸ்லிம் ' என்று பேதம் உண்மையில் இருக்கிறதா இல்லையா?

பாகிஸ்தான் இந்தியாவிற்கு பகை நாடு , இந்தியாவிற்கும் அதற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். பாகிஸ்தானில் அனைவரும் முஸ்லிம்கள், 'அந்நிய நாடு' குண்டு வைக்கிறது என்று சொல்லி படம் காட்டுவது மிகவும் எளிது , அதனால் அதை செய்கிறார்கள் , இதில் பிரச்சனையே இந்திய முஸ்லிம்களை / பாகிஸ்தான் முஸ்லிம்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுவதில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
hasangani
கட்டுரை மிக நன்று. நடுனிலை நோக்கில் இப்பொது யாரும் பார்பது இல்லை.அவ்ர்கள் எதிர்தல் அது கலாசார பாதுகாப்பு.
முச்லிம் எதிர்தால் அது கருதது சுதந்திரதுக்கு எதிர்பு.
Udhaya Kumar K
உங்கள் வலி எங்களுக்குப் புரிகிறது. விஸ்வரூபம் திரைப்படத்தில் உங்கள் வேதப் புத்தகமான குரானை படித்துவிட்டு ஒருவரை கொல்வது போன்ற காட்சி இடம்பெற்று இருப்பது உங்களை புண்படுத்துவது போல இருப்பதாய் சொல்லும் நீங்கள், அதை உண்மையில் செய்யும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடத்தி இருக்கிறீர்கள் என்பதையும் சொல்ல வேண்டும்...
m.k.murugan
முகமதிய நண்பர்கள் இஸ்லாத்தைத் துறங்கள் என சொல்லவில்லை! சவுதில கிடைக்கிற பெற்றோல, நீங்க முஸ்லிம்ங்கறதால உங்களுக்கு மட்டுமாவது, சல்லி விலையிலோ, இனாமாகவோ தருவதில்லை!
பெரியாரிய வழியில் இந்துக்களை விமர்சித்துத் தள்ளுபவர்கள், இஸ்லாத்தில் உள்ள விசயங்களை விமர்சிக்கத் தயங்குவது ஏனென்றுதான் புரியவில்லை! சமஸ்கிருதப் பூசையை எதிர்ப்போர், 'அல்லாஹூ அக்பர்' என்று பாங்கு சொல்வதைத் தமிழில் சொல்ல வலியுறுத்துவதில்லையே! ஏன்? என்னைப் பொருத்தவரை, இந்நாட்டில் வாழ்பவர்கள், இந்நாட்டு மக்களாய் உணரணும்! நான் பாரதத்தைப் பற்றிச் சொல்லவில்லை! தமிழ்நாட்டைச் சொல்கிறேன்!
கர்நாடகா, ஒப்பந்தத்தை மீறி விளை நிலங்களை அதிகரித்து, அணைகள் தளும்பினாலும், இங்கே வறண்டு போகச் செய்து விட்டார்கள்! உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பீலில்லை என்று குடிமையியலில் கற்றுத் தந்தார்கள்! ஆனால் அத்தீர்ப்பும் மதிக்க, அமல்படுத்தப்படவில்லை, எனில் என்ன செய்யணும்னு சொல்லலை! விஸ்வரூபத்துக்கு ஆவேசப்படும் இரு(ஆம்! இருதரப்புகளும்!-கமலின் ரசிகக் கண்மணிகளும் முகநூலில் கோவப்படத்தான் செய்கிறார்கள்) தரப்புகளும், காவிரி, முல்லைப்பெரியாறு, ஈழம், கூடங்குளம் போன்ற பிரச்சனைகளுக்கு இந்தளவு ஆவேசத்தையும்,ஒற்றுமயயும் காட்டி, மாநில, நடுவண் அரசுகளுக்கு நெருக்கடியேற்படுத்தி, தமிழர் நலனை உறுதிப்படுத்துங்களேன்! வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால்... என்று தமிழக அரசியல்வாதிகள்போல் நழுவாதீர்கள்!
n.varadarajan
என்னுடைய கருத்தைப்பதிவு செய்திருந்தேன். ஏன் வெளியகவில்லை? தகுதியற்றதாக கருதுகிறீர்களா?
அல்லது வெறுக்கத்தக்கதாக நினைக்கிறீர்களா?
இனியன்
சாதிமதம்பார்க்காதே
சாத்திரத்தைத் தூக்காதே
கொன்னாரே நம்ப அய்யா
அவர் சொன்னதெல்லாம் பொய்யா என்ற பாடல் வரியை நீக்கிய பிந்தான் படம் வெளியானது அந்த அளவுக்கு சென்சார் போர்டில் உள்ள வர்கள் தெளிவாக இருக்கிறார்கள் இந்துத்வா மனப்பான்மையை விதைக்க...
//போகிற போக்கில் ஏதேனும் வசனமோ, பாடலோ இருந்தால்கூட சென்ஸார் போர்டு அதை அனுமதிக்காது என்பதே நிதர்சனமான உண்மை. சென்ஸார் போர்டு போன்ற உயரதிகாரத் தளங்களில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகள், தமக்கு எதிரான சித்தரிப்புகளை வேர் மட்டத்திலேயே தடுத்து விடுகின்றனர்// என்ற வரிகள் மிகமிக உண்மை
n.varadarajan
கடவுளைக்கற்ப்பித்தவன் காட்டுமிராண்டி,கடவுளை நம்புபவன் அயோக்கியன்,(இந்து,முஸ்லிம்,கிறித்துவர்)
எல்லோருக்கும்)என்று சொல்லுமளவுக்கு கருத்து சுதந்திரம் அனுமதித்த நாடு இது. ராமனுக்கும்,வினாயகருக்கும் செருப்பு மாலை போட்டு பகுத்தறிவை பிரகடனப்படுத்திக்கொண்ட பெருமைக்குரிய தேசம் இது. யாரோ ஒரு தப்பு செய்யும்
மனிதனை அவனது பின்னணியுடன் காட்டினால் அவன் சார்ந்த ஒட்டு மொத்த சமூகத்தையே குற்றம் சாட்டுவதாகுமா? இப்படியெல்லாம் ஒவ்வொரு படைப்பையும் பார்த்தால் படைப்புகள் ஒன்று கூட வெளி வரமுடியாது போய்விடும்.அன்பே சிவம்,படத்தில் ஓம் நம்சிவாய என்று நாசர் செய்யும் அக்கிரமங்கள்
எல்லாமே இந்துக்கள் மீதான ஒட்டுமொத்த கருத்தாகுமா? எது எப்படியோ தமிழ்னாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டுவிட்டது. மக்கள் இனி நிம்மதியாக உறங்கலாம்.வாழ்க ஜன நாயகம்! வளர்க மதச்சார்பின்மை!
viyasan
//பெரியாரிய வழியில் இந்துக்களை விமர்சித்துத் தள்ளுபவர்கள், இஸ்லாத்தில் உள்ள விசயங்களை விமர்சிக்கத் தயங்குவது ஏனென்றுதான் புரியவில்லை!//
ந‌ல்ல‌ கேள்வி, இந்தும‌தத்தில் பேச்சு, க‌ருத்துச் சுத‌ந்திர‌முண்டு. அதிலும் இந்து த‌மிழ‌ர்க‌ள் ம‌தத்தையும் அர‌சிய‌லையும் க‌ல‌க்காத‌வ‌ர்க‌ள், அத‌னால் ஊருக்கு இளைத்த‌வ‌ன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ப‌து போல் யாரும் இந்துக்க‌ளை விம‌ர்சித்துத் த‌ள்ள‌லாம். இந்தும‌த‌த்தில் எத்த‌னை ஆயிர‌ம் குற்ற‌ங்க‌ளையும் குறைபாடுக‌ளையும் சும‌த்தினாலும் அது பொறுமையும் ச‌கிப்புத்த‌ன்மையுள்ள‌ ம‌த‌ம். விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ளுக்கெதிராக பாட்வா அறிவிப்ப‌தும், ம‌ர‌ண‌த‌ண்ட‌னை விதிப்பதும் இந்தும‌த‌த்தில் கிடையாது. அத‌னால் தான் பெரும்பான்மை இந்துக்க‌ளின் ம‌த்தியில் வாழ்ந்து கொண்டே பெரியார் போன்ற‌வ‌ர்க‌ளாலும் அவ‌ர‌து சீட‌ர்க‌ளாலும் இந்தும‌த‌த்தைச் இழிவுப‌டுத்தியும், சீண்டிப்பார்க்க‌வும், விம‌ர்சிக்க‌வும் முடிகிற‌து. இந்துக்க‌ளின் பொறுமைக்கும் ச‌கிப்புத்த‌ன்மைக்கும் அவ‌ர்க‌ள் இந்தும‌த‌த்துக்கு ந‌ன்றி கூற‌ வேண்டும். இதே முறையில் அவ‌ர்க‌ள் இஸ்லாத்தை விம‌ர்சித்தால் றிசானாவுக்கு என்ன‌ ந‌ட‌ந்த‌தோ அது த‌மிழ்நாட்டிலேயே அவ‌ர்க‌ளுக்கும் ந‌ட‌ந்திருக்கும். உயிரின் மேல் ஆசை யாருக்குத் தானில்லை அத‌னால் தான் பெரிஆரிய‌ர்க‌ள் இஸ்லாத்தை விம‌ர்சிக்க‌த் தய‌ங்குவ‌த‌ன் கார‌ண‌மே த‌விர‌ வேறொன்றுமில்லை.
அகத்தியன்
உலகின் பெரும்பாலான சமுதாய சீர்கேடுகளுக்கும் மதம் தான் காரணம் என்பதால் தான் "கடவுள் இல்லை" என்னும் புதிய கொள்கை பிறந்தது எனபதை மதவாதிகள் புரிந்துகொண்டால் நாத்திகம் தேவையற்றதாகி விடும்.

கடவுள் அன்புள்ளவராகவே இருக்கிறார்

அகத்தியன்
[email protected]
சம்பூகன்
வாதப் பிரதிவாதங்களெல்லாம் இருக்கட்டும்.சத்தமில்லாமல் மோடிக்கு வாக்கு சதவீதத்தை தமிழ்நாட்டில் உயர்த்திய பெருமை 24 இஸ்லாமிய அமைப்புகளையே சாரும். எதிலும் பொறுமை வேண்டும். ஒரு சிக்கலை எப்படி அணுகவேண்டும் என்பதை அறியவேண்டும். மத உணர்ச்சியால் உந்தப்பட்டு இப்படிக் கொந்தளித்தால் பதிப்பு என்னவோ அப்பாவி முஸ்லீம்களுக்குத்தான். ஒரு சினிமாவாகப் பார்க்க இருந்த இந்துக்களை இப்போது ஒரு அரசியல் பின்னணியுடன் பார்க்க வைத்துவிட்டீர்கள். இது மிக ஆபத்தானது. இதற்குப் பெயர்தான் சொந்தக் காசிலேயே சூனியம் வைத்துக்கொள்வது என்பது. போயும் போயும் ஜெ.வையா நம்பி களத்தில் இறங்குவது? அவர் எந்த நேரமும் மோடியோடு கைகோர்த்து களாமிறங்குவார். அப்பொழுது நீங்களெல்லாம் என்ன பேசப் போகிறீர்கள் என்பதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன்.
n.varadarajan
இதுபோன்ற பிரச்சனைகளுக்கு சுமுகமான தீர்வு இருக்கிறது. ஜெயகாந்தன் கூறியது போல் மசூதிகளில்
பகவத் கீதையும், கோவில்களில் குர் ஆனும் படிப்பதும்
மத நல்லினணக்கத்தை வளர்க்கும். ஆனால் அரசியல்வாதிகளும் வேடதாரி மதச்சார்பபின்மைவாதிகளும் இதை அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் பிழைப்பு நடத்தமுடியாது.
kulothungan
//இந்தும‌தத்தில் பேச்சு, க‌ருத்துச் சுத‌ந்திர‌முண்டு. அதிலும் இந்து த‌மிழ‌ர்க‌ள் ம‌தத்தையும் அர‌சிய‌லையும் க‌ல‌க்காத‌வ‌ர்க‌ள், // அதெல்லாம் ஒரு புடலைங்காயும் இல்லங்கண்ணே.. இந்து என்று சொல்லி பள்ளரையும், பறையறையும், சக்கிலியரையும் நாடாரும் வன்னியரும் தேவரும் ஒரே மதமுன்னு ஏத்துக்குறதில்ல.. 150 சாதி பிரிவுகள வச்சிகிட்டு ஒரே மதம் நாங்கன்னு எந்த சாதி இந்துவும் தாழ்த்தப்பட்டவனை இணைச்சுக்குறது இல்ல.. இஸ்லாம்லயும் பல பிரிவுகள் இருக்கு. ஆனால் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிய காமிச்சாக்கூட அது தன் மதத்துக்காரன்னு அவன் நினைக்கிறான். அதான் வித்தியாசம். இழிவுநீக்க இஸ்லாம் மருந்து என்ற தலைப்பில் பெரியார் எழுதிய தலையங்கத்தில் தெளிவாக குறிப்பிட்டிருப்பார், அந்த மார்க்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள் ஆனால் இங்கு உள்ள மரைக்காயர்களையும் இதர மதவாதிகளையும் உதாரணமாக கொள்ளாதீர்கள் என்று.. எந்த ஆரியனும் பெரியாரை ஏற்றுக்கொண்டதில்லை.. அவர் பெரியார்தான் வியாசாரியரே...
shaji
கடவுள்தான் எவ்வணைத்து சச்சரவுக்கும் காரணம் என்று நினைகிறேன் ..!
kulothugan
똬இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இது இந்து மதவாத நாடு. அது முஸ்லிம் மதவாத நாடு... அவ்வளவுதான். அங்கே எல்லையில் முஸ்லீம் மதவெறியன் 2 ராணுவ வீரர்களை தலையை துண்டித்து படுகொலை செய்தான். இங்கே இந்துமத வெறியர்கள் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களை இடித்து வெறியாட்டம் போட்டார்களே ஒழிய சாதி மதம் கடவுள் ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட எந்த பெரியாரியல்வாதிகளும் கோயிலை இடித்ததில்லை. மதத்தின் பெயரால் மனித உயிர்களை பறித்ததில்லை. மனிதனை மனிதன் இழிவுபடுத்த, பிரித்தாள எவையெல்லாம் காரணிகளாக இருக்கிறதோ, அது சாதியானாலும் சரி, மதமானாலும் சரி அவை அழித்தொழிக்கப்பட வேண்டியதே.. ஆனால் தீவிரவாதி என்றால் இஸ்லாமியர்தான் என்ற இந்துத்துவ கருத்துத் திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு மாற்றுக்கருத்தை தெரிவிப்பதோடு அந்த திரைப்படத்தை புறக்கணிப்பு செய்தால் போதுமானதாக இருந்திருக்கும். இப்போது அதற்கு செலவேயில்லாமல் போதுமான அளவு விளம்பரம் தேடிக்கொடுத்தாகிவிட்டது, அதற்கு மேல் சில பார்ப்பனிய சக்திகளுக்கு சிறுபான்மையினரான இஸ்லாமியரை அந்நியப்படுத்தும், தனிமைப்படுத்தும் முயற்சிக்கு சிறிது ஊக்கம் கொடுத்துவிட்டோம் என்பது என் தாழ்மையான கருத்து..
karl
சப்பைகட்டு கட்டுரை. உன்மையில் முஸ்லிம்களின் மதவெறி எதிப்பே இன்னும் அவர்கள் மேல் மரியாதையை குறைத்தது. மலாலா தாக்கப்பட்டதை எதிர்த்து எத்தனை முஸ்லிம்கள் - அல்லது அவர்கள் தலைவர்கள் / முல்லாக்கள் இப்படி போராட்டம் நடத்தினார்கள்? அது இதைவிட முக்கியமான செயல் இல்லையா?
ஊர்க்குருவி.
ஆப்கானின்,
மலைக் குகைகளுக்குள்
சத்தியாக்கிரகம் செய்த
தலிபான் தீவிரவாதிகளின்
சுயரூபத்தை,
ஒஸ்காரை, மனதில்க்கொண்டு,
கமலஹாசன்
விஸ்வரூபமாக சொன்னார்.

அமெரிக்கா
அக மகிழ்ந்தது.

ஒஸ்கார், கதவு
விரைவில் திறக்குமென
முதுமை காலத்தில்
தாமரை கலைஞன்
அக மகிழ்ந்தபோது,

அல்லாவின் பெயரால்
அடியாட்கள்,
"ஆப்பும்
வல்லீட்டு குத்தியும் தாங்கி"
அம்மாவின்
மனுநீதி மர நிழலில்
விசுவரூபம் எடுத்தனர்,

மனுநீதி சக்கரத்தை கையில் ஏந்தி?,
நீதி
நேர்மைக்கும் மதிப்பளித்த?!
தாயின் அரசு
பொறுமையிழந்து
பொங்கியெழுந்தது.
கண்கள் கட்டப்பட்ட
நீதி தேவதையின் தத்துவம்!!
அம்மாவின் முன்னெழுந்தபோது?
தமிழக கதவுகள் அடைக்கப்பட்டு
உள் நோக்கமில்லாமல்?
நீதியின் பெயரால்??
விஸ்வரூபம்
தடை செய்யப்பட்டது?.

அதிர்ச்சியடைந்த
"ஐயா"
அரசியல் செய்யவிரும்பவில்லை?

கண்ணீர் விட்டு கதறி அழுதார்!.

பழைய வரலாற்றின் பக்கத்திலிருந்த
கறள்'தான் காரணமோ என்று
காண்டம் வாசித்து
கவலை தெரிவித்தார்!!

தூண்டிவிட
அவர் துளியும் விரும்பவில்லை!!?

நீதிக்காக
நித்திரை துறந்தார்.

மத்திய சர்க்காருக்கு முறையிட்டு,
ஐநா'வுக்கு
மகஜர் அனுப்பமுன்
விஸ்வரூப சக்கரம்
தடம் மாறிய செய்தி வந்தது.

ஒருவேளை
நீதி கிடைக்கவில்லையென்றால்
நிச்சியம் ஒரு பொழுது
குடும்பத்துடன்
செத்து மடியும்வரை,
கடற்கரையில்
உண்ணா நோன்புக்கு தயாரானார்!!.

தமிழக தாயின்
சிறு பிள்ளைத்தனமான செயல் என்று
மக்கள் மன்றத்தில்
கருத்து உருவானது.

அதனால்
நீர்த்துப்போனது நிகழ்வுகள்!

சமூகத்தின் அசைவாக்கம்
தாமரை கலைஞனை
தப்பிக்க வைத்தது.

அது
நேற்று நடந்த நிகழ்வுகள்.

முந்தநாள் பொழுது.

இன்றைய உலகநாயகர்
காதல் இளவரசனாக,
புத்துணர்வுடன்
நட்சத்திர பட்டங்கட்டி
வானில் பறந்தவேளை…

காக்கையும், அன்னமும்
கிளியும், புறாக்களும்
விட்டில் பூச்சிகளும்
கூடி சத்தமிட்டு பறந்தன.
அனைத்தும் பேடுகள்.

சமூகம் மட்டும்
தனிமைப்பட்டு, குனிந்த நிலையில்
ஒரு புள்ளியாக
கீழ் வானத்து எல்லையில்
முகிலூடே மவுனமாக
மறைந்து போனது.

பேதம் தெரியவில்லை
கோழியும் புறாவும்
கோட்டானும் கிளிகளும்
கூட இருந்து கானம் பாடின,

புதிய ஞானம் பிறந்தது.

ஊணும் உறக்கமும்
விடுப்பெடுத்துக்கொண்டது.
பண்பாடு
இடம்பெயர்ந்து பயணித்த நேரம்.

அது,

தாமரை கலைஞனுக்கு
இளமை சிறகுகள்
வான் நோக்கி
சிறகடித்து பறந்த
வசந்த காலம்.

கட்டுப்படுத்தமுடியாத
கண்ணனின் பராயம்.
நெட்டவிழ்த்து
நரம்புகள் ரீங்காரமிட்டு
"நித்தியகல்யாணி" ராகம் இசைத்தன.

சிக்கெடுத்து
சீராக்கி
கால்க்கட்டு போட்டனர்
பெற்றோர்.

துணையோடு மனமுருகி
கலவி கொண்டு
நிறைவடைய
மனக்குரங்கு விடவில்லை.

சன்னதம் கொண்டது
சண்டாள லீலை.
சரித்திரம் படைத்திட துடித்தது
சிருங்கார போதை,

அது மனிதக்காதல் அல்ல!
அதனையும் தாண்டி……..
மந்தார இராகத்தில்
குயில் பாடிப்பறந்தது.

மத சம்பிரதாயப்படி
மந்திரம் முழங்க
பூட்டிய மாங்கல்யம்.
அட்டமத்து சனிகளின்
அகால சேர்க்கையால்
குட்டிச்சுவரானது.

குடும்பம் உடைந்து,
குற்றுயிராக பிரிந்துபோதும்.
எருமை மாட்டின் மழையென
திரும்பவும்
சேற்றுக்குளத்தில்
இளமை
தெம்பலடித்தது.

தாமரை கலைஞனின்
அசைவுகள் எல்லாம்
காவிய நடையென -தமிழ்
ஏடுகள் கொண்டாடின.

திரும்பொரு
பொங்கிய சிறந்தொரு பொழுது,

இன்னொரு பறவை
இணைந்திட வந்தது.

குழந்தைகள் பிறந்தும்,
குதர்க்கமாக
சமூக கட்டுப்பாட்டை
வெட்டை வெளியில்
விற்று விட்டாரென்று
மறு தாரம்
தாய் வீடு சென்றது.

நட்சத்திர கலைஞன்
என்பதால்?!
சமூகம்
அதுபற்றி மறுபரிசீலனை செய்ய
தயாராக இல்லை.

நட்சத்திரம் என்றால்
நரகலுக்கும்
நாற்றமெடுக்காது என்றனர்.

தனி மனிதனின் மலத்தை
கவிதையில் எழுதி
சேறடிப்பதாக
குற்றம் சுமத்தலாம்,

கலைஞன் என்பவன்
பொதுச்சொத்து,
கசப்பானாவற்றை
குத்திக்காட்டும் கடமை
பாரதி' கண்ணதாசனுக்கு மட்டுமல்ல
ஊர்க்குருவிக்குமுண்டு.

திரை நட்சத்திரங்கள்
வான நட்சத்திரங்களாக....
கடவுளுக்கு நிகராக,
கிரகநிலை மாறியிருக்கிறது.

கந்தசஷ்டி கவசத்துக்கு நிகராக
நட்சத்திர கவசம் இயற்றப்பட்டுவிட்டது.
சிலாகித்து பூங்காவனமாக
பொருள் எழுதவும்
மூத்தவர் தயாராக இருக்கிறார்.

விடிவெள்ளியை நம்பி
பயணம் புறப்பட்டவர்கள்
என் மூததையர்.

திரை
நட்சத்திரங்களை நம்பி
எனது குழந்தை
அடியெடுக்க தயாராகிறது.

எதையும்
தடுக்க எவரும் தயாராக இல்லை

குஷ்புவுக்கும்
ஜெயமாலினிக்கும்
ராஜகோபுரம் எழும்பியது
முன்னாள் இளவல்கள்.

பாவனாவுக்கும், தமன்னாவுக்கும்,
நமீதாவுக்கும்
கலைமாமணி பட்டம் கொடுத்தது
மு,தமிழக அரசு.

பெரியாரின் தொண்டனும்
அண்ணாவின் தம்பியும்
தலையை
நிலத்துள் புதைத்துக்கொண்டனர்.

நாடும், அரசியலும்
நட்சத்திரங்களிடம்
அடகு வைக்கப்பட்டிருக்கிறது.

நட்சத்திர அந்தஸ்தும்
கட்டிய வேடமும்
மூடு திரையாக முன்னின்று
தமிழகத்தின்
முகவரியாகியது.

திருமண பந்தம்
பத்தாம் பசலித்தனம் என்றார்,
தாமரை கலைஞன்.

எல்லாம் போலி
பொய் என்று நியாயப்படுத்தினார்,
அது
அவரது கிடக்கை.

கண்ணகி பிறந்த
தமிழ்நாடு
அவரை மட்டுமல்ல
எவரையும் கழுவில் ஏற்றவில்லை.

ஆடு மாடுகள் மட்டுமல்ல,
மனிதரும்
எவரும் எவரையும்
வைத்துக்கொள்ளலாம் என்றார்.

வாழ்ந்தும் காட்டினார்.

கலைஞானியின்
புதிய தத்துவ சித்தாந்தம் என
ரசிகன் அக மகிழ்ந்தான்,
தலைவர்கள்
மேடையேற்றி உச்சி முகர்ந்தனர்.

சமூகம்
அவரை தலை முழுகவில்லை.
தமிழ் சமூகம் தலையை
தண்ணீருக்குள் அமிழ்த்திக்கொண்டது.

குற்றமில்லை
எப்படியும் குலவ முடியும் என்றது
இன்னொரு நட்சத்திரம்
குஷ்பு என்ற விடிவெள்ளி.

எவருக்கும் எதுவும் புரியவில்லை.

சமூக கட்டுப்பாடுகளை
காலில் போட்டு மிதித்து,
சமூகத்தில்,
தனிப்பாதை அமைத்து
சுயரூபத்தை காட்டிய
உலக நாயகர்,
விஸ்வரூபம்
தடையென்று வந்தபோது,
சமூகத்தின் காலடியில் விழுந்து
காலையும் மாலையும்
சம்மணமிட்டு
தத்துவம் பேசி
இரங்கி யாசகம் கேட்டு கண்ணீர் விட்டார்.

பலன் கிடைத்ததாக
வெற்றியின் பின்
மனமுருகி நன்றி நவிர்ந்திருந்தார்.

என்ன விந்தை!!
எங்கே போனது புரட்சி
ஏன் கைவிட்டது
நட்சத்திர அந்தஸ்து
எப்போ கண்ணில் பட்டது சமூகம்?.

"தனிமைப்படுத்தப்பட்டுவிட்டேன்" என்றார்.
''ஓட்டாண்டியானேன்'' என்றார்.
''நாடற்ற அகதியானேன்'' என்றார்,

விதையாவேன்,
வித்துடலாவேன், என்று
வேகம் காட்டினார்.

தனக்கு தானே சொன்னாரா?
சமூகத்திடம்
பாவமன்னிப்பு கேட்டு
யாசகம் செய்தாரா?

முன்பு பிறக்காத ஞானம்
இன்று
எங்கிருந்து வந்துதித்தது?

உண்மையின் தத்துவம்
புரிந்து கொண்டால்
அவருக்கு
கோடி நன்றிகள்!!, கோடான கோடி நன்றிகள்!!!

இப்போ
உலக நாயகரின்,
(விசுவ) ரூபம் சுருங்கி விட்டிருக்கிறது.
சுயரூபம் மட்டும்
பதைபதைப்புடன்
முதுமையின் அரவணைப்புடன்
வெளியே தெரிகிறது.

வாழ்வு என்றால்
"சமூகம்" உண்டு.
சாவும் உண்டு

நடைமுறையில்
ஒரு தத்துவம் உண்டு.

குடும்பம் என்றால் கோவில் என்று
"வகுத்தல்" ஒன்று
மாயைகளை தாண்டி
வரையப்பட்டிருக்கிறது.

மனித ஒழுக்கம்
என்று ஒன்றுண்டு,

ஊரோடு ஒத்தோடு என்கிறது
ஒரு பழமொழி.
தனியோடுவதானால்
கேட்டு (விசாரித்து) ஓடு என்கிறது.

அரசியல் அம்மணங்கள்,
நட்சத்திர பறவைகள்,
எத்தனை விடுகதைகள் கூறி
சமூகத்தை வெறுப்பேத்தினாலும்,

செத்தபின் பிணம் என்பர்,
அப்போதுகூட
நான்குபேர்
நிச்சியம் தேவைப்படுகிறது.

கூடங்குளம் பகுதியில்
அணு மின்னிலையத்தை
சூழ்ந்து
மக்கள் நின்றிருந்தனர்.
அவர்களை சமூகம்
ஏற்றுக்கொண்டு பின்னே நின்றது.

விடுதலைப்புலிகள்
தமிழீழத்தில் போராடிக்கொண்டிருந்தனர்.
கடைசிவரை
உலக சமூகம்
அவர்கள் பின்னால் நின்றது.

கூடங்குளத்திலும், ஈழத்திலும்
காடப்பஞ்சாய்த்துக்கு பயந்து
ஒருபோதும்
யாசகம் கேட்கப்படவில்லை,
கோரிக்கைகளே வைக்கப்பட்டன.

-ஊர்க்குருவி-
abufaheem
குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்.. ’ விஸ்வரூபம் விமர்சனம் !!!

(வாசகர்கள் முழுவதும் படித்து விட்டு உங்களுடைய கருத்துகளை பதிவு செய்யுங்கள் )

இன்றைக்கு நாளிதழ்களில் வெளியாகி இருக்கிற ‘இன்றுமுதல்’ என்கிற விஸ்வரூப விளம்பரத்தில் எட்டி ஒருவரை உதைப்பதுபோல் படமும் ‘நெத்தியடி’ என்ற வாசகமும் இடம் பெற்றிருக்கிறது. யாருக்கு இந்த பதிலோ?

விஸ்வரூபம் ஒரு வழியா படத்தை பார்த்து தொலைச்சேன். ஆமாம், அத இப்படித்தான் சொல்லவேண்டியிருக்கு..

இந்த எரிச்சல் படத்தின் உள்ளடக்கத்தை சார்ந்து மட்டுமல்ல, வடிவதினாலும்தான்.

உள்ளடக்கம் கோபம் கொள்ள வைக்கிறது. வடிவம் எரிச்சலும் அலுப்பும் ஊட்டுகிறது. அப்படி ஒரு சுவாரஸ்யமற்ற திரைக்கதை.

மதிமாறன் என்கிற நான், நண்பர் அதிகாலை நவின், அவரின் தம்பி வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் மூவரும் 502௨013 அன்று ஆந்திர மாநிலம் சத்தியவேடுக்கு சென்று விஸ்வரூபத்தை பார்த்தோம்.

‘இஸ்லாமிய அமைப்புகள் நீக்க சொன்ன காட்சிகளை பார்த்தால், கமலின் யோக்கியதையை கூடுதலாக தெரிந்து கொள்ளலாம்’ என்பதற்காகவே அந்த நீண்ட பயணம்.

நீக்கச் சொன்ன காட்சிகளை தாண்டியும் ‘துடிப்போடு’ இருக்கிறது விஸ்வரூபம்.

இந்தப் படத்தின் பல காட்சிகளையும் வெட்டி எடுத்துவிட்டு, ஒரு அய்ந்து நிமிட நேர குறும்படமாக சுருக்கினாலும், அதற்குள்ளும் இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியும் அமெரிக்க விசுவாசமுமே ‘துடிப்போடு’ நிறைந்து வழியும்.

‘இந்தியனாக இரு, இந்திய பொருட்களை வாங்கு..’ என்று தேசபக்தியோடு நமக்கு அருளுரை செய்த பலர் அமெரிக்காவிற்கு சென்று குடியேறியதைப்போல்; தனது முந்தைய படங்களில் ‘இந்தியனாக’ இருந்து இந்திய தேசபக்தியை ஊட்டிய கமல்; இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அல்ல, ஒவ்வொரு ஷாட்டிலும் ‘அமெரிக்கனாக இரு, அமெரிக்கா நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் கமல் பயன்படுத்துகிற கார்கள்கூட அமெரிக்க தயாரிப்புகள் மட்டுமே.

விஸ்வரூபம் முதல் விளம்பரம் வந்தபோது, 6௬௨012 அன்று‘‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான்?’ என்று எழுதியிருந்தேன்.

என் எழுத்தை பொய்யாக்கவில்லை கமல். எவையெல்லாம், யாரெல்லாம் அமெரிக்காவிற்கு, அமெரிக்கர்களுக்கு பிடிக்கதோ அவைகளெல்லாம், அவர்களெல்லாம் படத்தில் வில்லன்கள். வில்லத்தனமான குறியீடுகள்.

ஆப்கான் நாட்டு இஸ்லாமிர்களை மட்டுமல்ல; பாகிஸ்தான், இந்தியா, நைஜீரியா என்று பல நாட்டு முஸ்லீம்களை ‘அல்கொய்தா’ தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று காட்டுகிறார்.

கமலே ‘காஷ்மீர் முஸ்லிம்’ என்று சொல்லிதான் ஆப்கானியர்களுக்குள் ஊடுறுவுகிறார். ‘காஷ்மீர் முஸ்லிம்’ என்று சொன்னவுடன், ஆப்கான் இஸ்லாமியர்கள் அவரை கொண்டாடுகிறா்கள்.

அமெரிக்கர்களுக்கு இஸ்லாமியர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சிபோலவே ஆப்பரிக்க கருப்பர்களின் மீதும் உண்டு. அதற்காகவே படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நைஜிரியாவைச் சேர்ந்த, கருப்பின முஸ்லிமே தீவிரவாதி.

‘பாபர் மசூதி இடிப்பு, குஜராத்தில் இஸ்லாமியர்கள் மேல் கொலைவெறி தாக்குதல், விஸ்வரூபத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு’ என்று இதுபோன்ற சம்பவங்கள் தீவிரமாக நடக்கும்போது, ஒரு பகுத்தறிவாளைனைப்போல் ‘இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம், சவுதி அரேபியாவில் மனித உரிமை மீறல்’ என்று தொடர்ந்து நீட்டி முழங்குகிற அல்லது அதுபோன்ற கட்டுரைகளை மட்டும் ‘ளிகெ’ செய்கிற இந்து, அறிவாளிகளைப்போல்,

இஸ்லாமிய நாடுகள்; பெண்கள் உட்பட தனி மனிதர்களுக்கு மிக மோசமான, கொடுமையான தண்டனைகளை தருவதை, கடுமையாக கண்டிக்கிற அமெரிக்கா;

இன்னொருபுறத்தில் ஒரு நாட்டின் மீது ஈவு இரக்கம் இல்லாமல் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களை விமானத்திலிருந்து குண்டு வீசி கொல்வதை எப்படி நியாப்படுத்துகிறதோ;

அதுபோல், இந்தப் படத்திலும் இஸ்லாமியர்கள் செய்கிற கொலைகளை, கொடுமையாகவும் பார்வையாளர்களுக்கு ‘ச்சீ..இவனுங்க எல்லாம் மனுசனா..?’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.

ஆனால், இதற்கு நேர் மாறாக, அமெரிக்க சார்பாக கமல்ஹாசனும், வெள்ளைக்காரர்களும் ஆப்கானியர்களை, இஸ்லாமியர்களை செய்கிற கொலைகள் நியாயமாகவும், ‘இவர்களை கொலை செய்வதுதான் தர்மம்’ என்கிற எண்ணத்தையும ஏற்படுத்துகிறது.

சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வேறு ஒருவருடன் உறவில் ஈடுபடும் பெண்ணை; அவளின் கணவர், கத்தியால் குத்தும்போது, சிறுவனாக இருக்கிற கமல், ‘குத்துங்க எஜமான்.. குத்துங்க.. இந்த பொம்பளைங்களே இப்படித்தான்..’ என்பாரே அதுப்போல்;

அமெரிக்கர்,அமெரிக்ககாவல்துறை, கமல் இவர்கள் சகட்டுமேனிக்கு இஸ்லாமியர்களை கொலை செய்யும்போது, பார்வையாளர்களுக்கு, ‘குத்துகங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

கமல்ஹாசன் ‘பாய்’ கூட வெள்ளைக்காரப் பெண் மருத்துவர் கொலை செய்யப்படும்போது, அமெரிக்கர்கள் கொலை செய்யப்படும்போது துக்கம் தாங்காமல் குமுறுகிறார்.

இதே உணர்வுதான் பார்வையாளர்களுக்கும் ஏற்படுகிறது.

தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் ‘விஸ்வரூபம் பிராமணர்களுக்கு எதிராக இருக்கிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அவர் கமல் ஆலோசனையின் பெயரில் செய்தாரோ என்று சந்தேகிக்கும் படியாக இருக்கிறது படத்தில வரும் காட்சி.

பார்ப்பன பெண், அமெரிக்கர்களை விட பெரிய அறிவாளியாக இருக்கிறார். ஒரு நகரத்தையே அழிக்க இருக்கிற ‘வெடிகுண்டை’ அமெரிக்காகாரன் செய்வதறியாது முழித்துக்கொண்டிருக்கும்போது, அவர்தான் தன் அறிவால் தடுத்து நிறுத்துகிறார்.

நன்றி
வே .மதி மாறன்
n.varadarajan
கமல்ஹாசனுக்கு அறிவுஜீவி அந்தஸ்தும் வேண்டும்,படமும் வியாபாரம் ஆகவேண்டும். இதனாலேயே புதிதாக ஏதாவது சொல்வதாக நினைத்துக்கொன்டு சொதப்புவது வாடிக்கை.
உதாரணம், ஆளவந்தான், குருதிப்புனல். சிலசமயம் அற்புதாமான படைப்புகளும் உன்டு. உதாரணம்,அன்பேசிவம்,மகானதி, அவ்வை சண்முகி,
அல்ட்சியப்படுத்த வேண்டிய படங்களை புறக்கணிப்பதை
விடுத்து இத்தனை விளம்பரம் கொடுத்திருக்க வேண்டியதில்லை இந்த படத்துக்கு.
adisaravanan m
திரு வரதராஜன் அவர்கள் கம்மன்ட் ரொம்ப சரி
thangapandina
நன்ட்று. வரம்பில்லா கருத்து சுதந்திரம் உலகில் என்கும் இல்லை.
சங்கர்
ஆப்கானிக்ஷ்தான் தீவிரவாதிகள் எல்லாம் அஹிம்ஷாவாதிகளா? கமல்தான் அவர்களை தீவிரவாதி ஆக்கினார்? இணையத்திலவும் யூடூபிலும் உலகம் பூராவும் உள்ள செய்திதொலைக்காட்சி யில் உங்கள் மதத்தோடபொழப்பு சிறிப்பா சிறிக்கிறதே அதைபற்றி யாரும் எழுதவோ பேசவோ வக்கில்லை இநதியாபூரா உள்ள முஸ்லீம் களுக்கு இல்லாத அக்கறை தமிழக முஸ்லீம் களுக்கு மட்டும் எங்கிருந்து வந்த தோ?
Inikho
விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ததற்கு ஜெயா கூறிய காரணம் 24 இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனவாம்.... நல்லது ஜெயாவிற்கு இஸ்லாமியர்களின் உணர்வுகளின் மீது எவ்வளவு அக்கறை.... "உச்ச நீதி மன்றத்தால் நிகழ்கால நீரோ மன்னன் என்று வர்ணிக்கப்பட்ட நரேந்திர மோடி ஜெயா பதவியேற்பு விழாவிற்கு தமிழகத்திற்கு வருகை தந்ததை 24 இஸ்லாமிய அமைப்புகளில் எத்தனை அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன என்பதை வெளியிட முடியுமா?
nilam
ருபன், சன்முகசுந்தரம் போன்ர தமிலர்கலெ, உஙலையும் இந்து மததையும் பட்ரி இப்படி எடுதாலும் இப்படி சஹிப்பு இருக்குமா வலிசெல்ஹல் ?
Guest
ஒரு வாரம் கூட ஒடாமல் பெட்டியில் சுருங்க வேண்டிய படத்தை பல கோடி லாபம் கிடைக்க ஏற்பாடு செய்ததுதான் முஸ்லிம் அமைப்புகளின் விளைவு. கமல் படங்கள் ப்ரச்னை மூலம் இலவச விளம்பரம் தெடுவது வழக்கம். இம்முறை முஸ்லிம் அமைப்புகலள் அதற்கு உதவி செய்துள்ளன. இதனால் கமலுக்கு பல மணி நேரம் இலவச விளம்பம் அரசுக்கு கெட்ட பெயர். பின் விளைவுகள் அதிகம். படம் ஓடி விட்டது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.