1. இந்தியாவில் எவ்வளவு பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன?

தேசிய குற்றப்பதிவு துறை ஆய்வின் படி முறையாக பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்முறைகள் 2011 ஆம் ஆண்டு மட்டும் 24,206 ஆகும். பதிவு செய்யப்படாத உண்மையான குற்ற அளவு இதனை விட பல மடங்காக இருக்கக்கூடும். மேலும் மகாராஷ்ட்ர மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வின் படி 9% பாலியல் குற்றங்கள் மட்டுமே நீதி மன்றங்களில் நிரூபிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநில‌த்தில் 2011ல் பதிவான 636 பாலியல் வன்முறைகளில் வெறும் 4 வழக்குகளில் மட்டும் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ள‌து. மீதம் 632 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2. ஏன் இவ்வளவு குற்றங்கள்?

தனிமனித ஒழுக்கம், சமூக சூழல் ஆகியவற்றைத் தவிர்த்து பார்க்கும்பொழுது அதிகரிக்கும் குற்ற நிகழ்வுகளுக்குக் காரணம், பெரும்பான்மையான பாலியல் குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாமல் போய்விடுவதேயாகும். எடுத்துக்கட்டாக 20% பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்படுவதாக கருதுவோமாயின், நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்படாததானால் 80% குற்றவாளிகள் விடுதலை செயயப்படுகின்றனர். இவர்கள் மீண்டும் அடுத்த குற்றங்களை செய்யும் தொடர் குற்றவாளியாக(Habitual offender) மாறிவிடுகின்றனர்.

3. தொடர் குற்றவாளிகள் என்றல் என்ன?
 
மேற்கண்ட சுழற்சி ஒரு மோசமான சுழற்சியாகும் (vicious cycle). இந்த மோசமான சுழற்சியினால் தொடர் குற்றவாளிகள் (Habitual offender) உருவாகின்றனர்.

4. ஏன் குற்றம் நிரூபிக்கப்படுவதில்லை?

ஏனெனில் பாதிக்கப்படும் பெண் பெரும்பாலும் கொல்லப்படுகின்றனர் அல்லது இறந்து விடுகின்றனர். மேலும் குழந்தைகள் பாதிக்கப்படும்பொழுது அவர்கள் குற்றநிகழ்வு குறித்த விழிப்புணர்வு அற்ற நிலையில் இருப்பர். ஒருவேளை உயிர் பிழைத்தாலும் சமூக பிரச்சனை (Social stigma) காரணமாக தண்டனை பெற்றுத்தரும் அளவிற்கு சாட்சி கூற இயலாத சூழல் உருவாகின்றது.

5. பாலியல் வன்முறை குறித்த சட்டப் பிரிவுகளை (375,376) மரண தண்டனை வழங்குமாறு திருத்துவதன் மூலம் குற்றங்களை குறைக்க இயலுமா?

முடியாது. ஏன் எனில் சட்டங்களை எவ்வளவு கடுமையாக்கினாலும் குற்றம் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாமல் போகும்பொழுது ஒரு தண்டனையும் கிடைக்காது. எனவே பாலியல் குற்றங்களை நீதிமன்றங்களில் நிரூபிப்பதற்கான அறிவியல் பூர்வ வழிமுறைகளை உருவாக்குவதே சரியான தீர்வாக இருக்கும்.

6. பாலியல் குற்றங்களை நீதிமன்றங்களில் நிரூபிப்பதில் என்ன சிக்கல்?

பாலியல் குற்றங்கள் CrPC 53இன் கீழ் உதவி ஆய்வாளர் (Sub Inspector) அல்லது அதற்கு மேல் உள்ள அதிகாரிகளால் விசாரணை செய்யப்படுகின்றன. இவ்வாறு காவல் துறையால் செய்யப்படும் விசாரணை அறிவியல் பூர்வமானதல்ல. காவல் துறையின் விசாரணை அதிகாரிகள், சட்ட மருத்துவம் (Forensic Medicine) குறித்த விழிப்புணர்வு அற்றவர்களாக உள்ளனர். காவல் துறை, அரசின் மற்றும் ஒரு படை பிரிவே(Force) அன்றி அறிவியல் சார்ந்த துறை(Scientific Investigators) அல்ல.

பாலியல் குற்றங்களை விசாரிக்கும் முழு பொறுப்பை காவல் துறையிடம் ஒப்படைப்பது சரியான வழி முறை அல்ல. பெரும்பாலும் காவல் துறையின் விசாரணை நேரில் கண்ட சாட்சியங்களைத் திரட்டுவது அல்லது சூழ்நிலை சாட்சியங்களைத் திரட்டுவதாகவே இருக்கும். பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பெண் இறந்துவிடுவதாலும் குழந்தையாக இருப்பதாலும் யாருமல்லாத இடங்களில் குற்றம் பெரும்பாலும் நிகழ்த்தப்படுவதாலும் குற்றம் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாமல் போகின்றது.

மேலும் அறிவியல் பூர்வமான சோதனைகளான பெண்ணுறுப்பின் எபிதிலியல் செல்களை ஆணுறுப்பில் கண்டுபிடிப்பது, நகங்களில் சிக்கிய தசைத் துணுக்குகளை ஆராய்வது, ஆடைகளில் உள்ள இரத்தம் மற்றும் விந்து மாதிரிகளைத் திரட்டுவது மற்றும் லோகர்ட் பரிமாற்ற விதியின்படி முடி மற்றும் மற்ற பொருட்களைத் திரட்டுவது போன்ற பல அறிவியல் பூர்வமான வழிமுறைகள் பெரும்பாலான வழக்குகளில் செய்யப்படுவதில்லை.

மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் முறையான வழிகாட்டுதல்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு இருப்பதில்லை. எனவே இவ்வகையான அறிவியல் பூர்வ ஆய்வுகள் (Forensic Investigations) உடனடியாக செய்யப்படாததினால் சாட்சியங்கள் திரட்ட இயலாமல் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காமல் போய்விடுகிறது.

7. மருத்துவக் கல்லுரி / அரசு மருத்துவமனைகளில் சட்ட மருத்துவத் துறையின் பங்கு என்ன?

நீதிமன்ற ஆணையின் கீழ் குற்றவாளி அல்லது பாதிக்கப்பட்ட பெண் சட்ட மருத்துவக்குழுவால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார். மேற்ககூறிய பல அறிவியல் பூர்வமான சாட்சியங்களைத் திரட்டும் வேலையை இத்துறை செய்கிறது. ஆனால் குறைபாடு என்னவெனில் சட்ட மருத்துவத் துறையால் விசாரணையை தன்னிச்சையாக துவங்கவோ, நீதிமன்றங்களினால் ஆணையிடப்படும் பரிசோதனைகளைத் தவிர வேறு வகையான குற்ற விசாரணைகளில் (Forensic investigation) ஈடுபடவோ முடியாது.

எடுத்துக்காட்டாக பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றத்தால் சட்ட மருத்துவத் துறைக்கு அனுப்பப்படும் சூழலில், சட்ட மருத்துவர் குற்றவாளியையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கருதினால் அதற்கான ஆணையை அவரால் பிறப்பிக்க இயலாது. இதனால் சட்ட மருத்துவத் துறை அவர்களுக்கு கொடுக்கப்படும் வேலையை மட்டும் செய்து மேற்கொண்டு தொடர இயலாமல் நின்று போகும் சூழல் உள்ளது.

8. தற்போதைய தேவை என்ன?

நீதிமன்றங்களில் பாலியல் குற்றங்களை நிரூபிக்கும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வழிமுறைகளை வகுக்காமல் குற்றங்களை குறைக்க இயலாது. எனவே பாலியல் குற்றங்களை தன்னிச்சையாக விசாரிக்கும் அதிகாரமுடைய, அறிவியல் பூர்வமான ஆதாரங்களைத் திரட்டும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஓர் இடை நிலை அமைப்பை அரசு உருவாக்க வேண்டும்.

 இக்குழுவில் இடம் பெறுவதற்கான இடைநிலை அதிகாரிகளாக‌ அறிவியல் மற்றும் மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான புதிய முதுநிலை படிப்பினை உருவாக்கி பயிற்சி அளிப்பதன் மூலமும், மேலும் வளர்ந்த நாடுகளின் குற்ற விசாரணை முறைகளை அவர்களை அறிந்து வரச் செய்வதன் மூலமும் இக்குழுவை சிறப்பான விசாரணை குழுவாக மாற்ற இயலும். மேலும் இக்குழுவினை சட்ட மருத்துவர், சட்ட வல்லுநர் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்ட விசாரணை அதிகாரி கொண்ட குழுவாக அமைக்க வேண்டும்.

இக்குழு ஏதேனும் ஒரு பாலியல் குற்றம் நடைபெறுமாயின் தன்னிச்சையாக விசாரணையைத் தொடங்கி, அறிவியல் பூர்வமான சாட்சியங்களைத் திரட்டுவதன் மூலம் நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்படும் எண்ணிக்கையை கூட்டலாம்.

- மருத்துவர் ஜானகிராமன் (கைப்பேசி: 9600296098; மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
- மருத்துவர் கபிலன் (கைப்பேசி: 9843508772; மின்னஞ்சல்:
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

14 comments

14
kani vinoth
alosanai seyya vendia sindhanai than.
Prabu Prasanna
மிக அருமையான கட்டுரை.. நடைமுரைக்கு வந்தால் சட்ட மருத்துவத்துரையில் ஒரு புரட்சியை உன்டாக்கும்..
dr. g.poonkuzhali
Good job...
Ramesh
In karnataka only two rapists are punished in 636 rape crimes.how can we expect policmen(BA,Bcom graduates) wil prove the crime without knowledge in forensic medicine & law.if v expect its our foolishness.the only solution is to form an investigating officer knowledged in forensic medicine,law & science.all struggles in india against rape without this demand wil be useless & waste.
manikandan
அதற்க்கு முன் ஜாதி ஒழிக்க பட வேண்டும் இல்லை என்றால் ஜாதி அபிமானத்தால் குற்றவாளிகள் காப்பாற்றப்பட கூடும்
divya
THANKYOU DOCTORS. its very useful to womens movement and party
dr.kck
great thinking...
amirtharaj.s
தகுந்த தருனத்தில் வெளியான் சிறந்த கட்டுரை. மேலும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் நபர் துணிந்து புகாரளிக்க முன்வரும் தைரியத்தை அளிக்க தேவையான விழிப்புண்ர்வை ஏற்படுத்தும் அமைப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. நமது விசாரணை முறையும் அதற்கு காரணமாக அமைவது வேதனைக்குரிய விஷயமாகிரது. கட்டுரையினை பரிசீலணை செய்ய அரசு முன்வருமாயின் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும். கட்டுரையாள்ர்களுக்கு பாராட்டுகள்
அன்புமணி
நமது நாட்டில் சட்ட மருத்துவத் துறை மிகவும் கீழான நிலையில் உள்ளதாக நான் கருதுகிறேன்.90 விழுக்காடு சட்டம் சார்ந்த மருத்துவ வழக்குகள் அந்தந்த பகுதியில் உள்ள வட்ட அரசு மருத்துவமனைகளில் தான் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அரசு மருத்துவ மனைகளில் சட்டம் சார்ந்த மருத்துவ வல்லுநர்கள் இல்லை என்பதே உண்மை.வல்லுநர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் மட்டுமே உள்ளனர்.அதுவும் போதுமான எண்ணிக்கையில் உள்ளார்களா என்றால் அய்யமே.வட்ட , மாவட்ட மருத்துவமனைகளில் வழக்கமான பணிப்பளுவிற்கு இடையில் இந்த வேலையையும் அரசு மருத்துவர்கள் செய்கிறார்கள்.அவர்கள் தங்களின் எம்பிபிஎஸ் பயிற்சிக்காலத்தில் படித்த அறிவைக்கொண்டே பிணக்கூறாய்வு, வன்புணர்ச்சி வழக்கு, குடிபோதை வழக்கு, வயது சான்று,மற்றும் பல மருத்துவம் சார்ந்த வழக்குகளை அணுகுகிறார்கள். இத்துறை தொடர்பான பணியிடைப்பயிற்சி எதுவும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.புதிதாக உருவாகியுள்ள அறிவியல் முறைகளை அறிந்து கொள்வதுஅவற்றை வழக்கு தொடர்பாக பயன் படுத்துவது என்பது பற்றி எல்லாம் யாருக்கும் கவலையில்லை.
எனவே , 90 விழுக்காடு மருத்துவம் சார்ந்த வழக்குகளை கையாளும் வட்ட மாவட்ட அரசு மருத்துவ மனை மருத்துவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிப்பது அவசர அவசியம் ஆகும். நவீன ஆய்வு முறைகளைப்பயன்படுத்துவது குற்றவாளிகளை தப்பவிடாமல் செய்யும்.அதே போல காவல் துறையில் ஆர்வம் உடையவர்களை அடையாளம் கண்டு இதற்கென சட்டம்சார் மருத்துவ வழக்குகளுக்கென தனி பிரிவை மாவட்டம் தோறும் அமைக்கவேண்டும்.அவர்களைக்கொண்டு இத்தகைய வழக்குகளை கையாள வேண்டும்.
kumaravel J
மிக அருமையான சட்ட வரையரை
Kabilan
கே:3 இல் விடுபட்ட "மேற்கண்ட சுழற்சி" (Vicious cycle)

பாலியல் குற்றம் < ----------------------------

↓ ↑
குற்றம் நீருபிக்க இயலாமை ↑

↓ ↑
விடுதலையாகும் குட்ட்ராவளி ↑

↓ ↑
மீண்டும் ------------------------------------------->
dinesh
இதை நடைமுரைக்கு கொன்டுவர என்ன செய்ய வேன்டும் என்பதை அனைவருக்கும் தெரியபடுதினால் நன்ரு.........
nethaji
மிக அருமையனா கட்டுரை
selvarani veerappasamy
இன்னும் பரவலாக மக்கள் தளத்தில் இக்கருத்துக்கள் கொண்டு செல்லப்படவேண்டும்.மக்கள் இயக்கங்கள் இது குறித்த புரிதல்களுடனும்,ஒருங்கிணைப்புடனும் இருந்து அரசின் கவனதிற்க்கு கொண்டு செல்லவேண்டும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.