டெல்லியில் நடைபெற்ற பாலியல் கொடுமைக்கு எதிராக, டெல்லி மக்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்துகின்றனர். அது குறித்த செய்திகள் பல நாளிதழ்கள் உள்ளிட்ட ஊடகங்களில் தெளிவாகப் பகிரப்படுகின்றன. எனவே, அந்த செய்திகளுக்குள் நான் போகப்போவதில்லை.

ஆனால், அது குறித்த தமிழகத்தில் எழுந்த சில குறிப்பான கருத்துகளைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது.

“டெல்லி பெண்ணுக்குப் போராடுகிறார்கள்… ஆனால், தமிழகப் பெண்களைக் கண்டுகொள்ளவில்லை”

delhi_rape_protest_400இப்படியொரு கருத்தாக்கம் சீமான் போன்றவர்களால் முன் வைக்கப்படுகிறது. எதிலும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்ற புலம்பல் அரசியலை திராவிடக் கட்சிகள் விட்டுவிட்டதால், அதனைக் கையிலெடுத்துக்கொள்ளலாம் என்று சில அரசியல் சக்திகள் விரும்பலாம்.

அல்லது பாரதி சொன்னது போல வெறும் பெட்டைப் புலம்பல் என்று நான் சொல்லமுடியாது. அதனால், வெட்டிப் பேச்சு வீணர்கள் என்று உறுதியாகச் சொல்வேன். இந்த வீணர்களின் உளறல் ஆபத்தானது. அது உண்மையை அரசியல்- சமூக நிகழ்வுப்போக்கின் தீவிர தன்மையை காண மறுக்கிறது அல்லது மறைக்கிறது.

டெல்லியில் நடைபெற்ற பாலினத் தாக்குதல் டெல்லியில் நடைபெற்றதாலேயே அதிகக் கவனத்தை ஈர்த்தது. அதற்குக் காரணம் அங்கே இந்தி பேசுகிறார்கள், தமிழ் பேசவில்லை, அல்லது பாதிக்கப்பட்ட பெண் தமிழச்சியில்லை என்பதால் அல்ல.. அது நடந்தது இந்தியாவின் தலைநகரில் என்பதால்.

அனைத்து தொழில்நுட்ப உன்னதங்களுடன், அனைத்து அதிகாரத்துடன், அனைத்து ஆணவத்துடன் வல்லரசு நோக்கி பயணப்படுவதாக சொல்லப்படும் இந்தியாவின் தலைநகரில் பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால் எழுந்த இயல்பான கோபம் அது. அது இந்திய அரசின் மீதான, இந்திய அரசியல் முறை மீதான பரந்துபட்ட மக்களின் கோபம் என்பதாகக் காண வேண்டுமே தவிர, ‘எனக்கு அந்த மாதிரி மிட்டாய் கிடைக்கவில்லை’ என்ற சிறுபிள்ளை மனப்பான்மை அரசியலுக்கு ஆகாது.

மற்றொரு கவனிக்க வேண்டிய செய்தி, இளைஞர்களும், மாணவர்களும் அரசின் மீது கொண்ட கோபத்தை வலுவாக உணர்த்தியுள்ளார்கள். அரசியல் கட்சிகள் மீது கொண்ட கோபத்தையும் தெளிவுபடுத்தியுள்ளனர். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், மற்றும் அகில இந்திய மாணவர் சங்கத்தைத் தவிர வேறு எந்த அரசியல் அமைப்புகளையும் அவர்கள் கடைசி நாள் போராட்டங்களில் இணைத்துக் கொள்ளவில்லை. அரசுக்கெதிராக, ஆளும் கட்சிகளுக்கு எதிராக சேர்த்து வைக்கப்பட்ட கோபம் போராட்டமாக வெடித்துள்ளது.

இதன் விளைவு உடனடியாகச் சமூகத்தில் பிரதிபலிக்கிறது. அனேகமாக ஒவ்வொரு நாளும் பாலியல் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகின்றன. அப்படியானால், பாலியல் தாக்குதல் திடீரென அதிகரித்துவிட்டது என்றா கருதுகிறீர்கள்?

இல்லை.

மாறாக, பாலியல் குற்றங்களைப் வெளிப்படையாக்கும் பாதிக்கப்பட்டவர்களின் முயற்சி ஊக்கம் பெற்றுள்ளது. வழக்காகப் பதிவது, குரல் எழுப்புவது அதிகரித்துள்ளது. அந்த அளவு டெல்லி பாலியல் தாக்குதல் மீதான மக்களின் போராட்ட அலை, வீச்சு கொண்டதாக இருக்கிறது.

இந்த அம்சங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம். அவற்றை தமிழக அரசியலில் முன்னெடுப்பது அவசியம். மாறாக, ‘டெல்லிக்கு ஒரு நீதி’, அல்லது, ‘ஏன் எங்களைக் கண்டுகொள்ளவில்லை’ என்று புலம்பிக் கொண்டிருப்பது பயன்தராது.

தமிழ்நாட்டில் பெண்கள் மீதான வன்முறை தற்போது ‘அரசியல் ரீதியாக அமைப்பாக்கப்பட்ட வடிவம்’ எடுத்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். இராமதாசும் அவரின் இதர சாதிப் பேய் அமைப்பு நண்பர்களும் சேர்ந்து தலித் அல்லாத அரசியல் அணியொன்றை உருவாக்கும் அளவுக்கு தைரியம் கொண்டுள்ளனர். அதற்கு எதிரான கோபக்குரல் தமிழ்நாட்டின் குரலாகக் கட்டமைக்கப்படவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

பாலியல் வன்முறை என்பது வன்புணர்ச்சி மட்டுமல்ல. வன்முறை என்பது உடலைத் தாக்குவது மட்டுமல்ல, மனதைத் தாக்குவதும் வன்முறைதான்.

இராமதாசு போன்ற அரசியல்வாதிகள் யார் யாரைக் காதலிப்பது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டுள்ளனர்.

வரவிருக்கும் நடாளுமன்றத் தேர்தலில் நடப்பிலுள்ள உண்மையான அரசியல் பிரச்சனைகளைப் பேசி, மக்களின் பக்கம் நிலையெடுத்து ஜெயித்துவிட முடியாத/ அதனைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பற்ற இராமதாசு அனைத்து பசப்பு முற்போக்கையும், மார்க்ஸ் முதல் பெரியார் வரையிலான அனைத்து படங்களையும் கழற்றி எறிந்துவிட்டு, சாதி வெறியைத் தூண்டி வாக்குகளைப் பெறும் முடிவுக்கு வந்துவிட்டதையே அது காட்டுகிறது.

அவரின் நிலைபாடு காரணமாக பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் மற்றும் ஆண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்பதை செய்திகள் காட்டுகின்றன.

இராமதாசு போன்றோரை ஓரங்கட்டுவதற்கு பெண்களின் உரிமையை நிலைநாட்டுவது ஒரு வழியாகும். காதலிக்கும் உரிமையை நிலைநாட்டுவது முக்கியமானதாகும்.

செத்துப் போய் விழித்தெழுந்த சாதிப் பிணம் மீண்டும் எழாமல் எரித்து சாம்பலாக்க காதல் தீ பயனாகும்.

ஆணும் பெண்ணும் சமம் என்று நிறுவுவதற்கு இன்று எழுந்துள்ள பாலியல் தாக்குதலுக்கு எதிரான, ஆணாதிக்கத்தின் வடிவமான டெல்லி அரசியலுக்கு எதிரான போராட்டங்களை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். அந்தத் தீயை தமிழகத்திலும் மூட்டிவிட முயற்சிக்க வேண்டும்.

இல்லையென்றால், வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று ஆட்சியதிகாரத்தைப் பிடித்து, பின்னர் சாதியையும் ஒடுக்குமுறையும் நிலைநிறுத்த பாடுபட்ட திராவிட அரசியல் கட்சிகளின் மீட்சியை அல்லது புதிய போலித் தமிழர்களின் வருகையை நாம் ஆற்றலுடன் தடுக்க முடியாது.

- சி.மதிவாணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

5 comments

5
T.Indira
பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட அந்த பெண்ணின் உடல் நலனும் இந்த போரட்டத்தின் தீவிர தன்மைக்கு ஒரு காரணம் அதோடு போராடுபவர்கள் பள்ளி,கல்லூரி மாணவர்களே அவர்கள் எந்த கட்சியும் முன்னெடுத்து செல்லவில்லை. நமக்கு இது போல் ஒன்றும் நடக்கவில்லையே. நாம் நம் வலிமையை காட்ட என்று இங்குள்ள கட்சிகள் ஏங்குமானால் அதை விட அசிங்கம் வேறில்லை. இவர்கள் கண்டிப்பாக சாக்கடையில் இருக்கும் புழு எடுத்து சாப்பிடுவார்கள் பதவிக்காக என்பது நிதர்சனம் ஆகும்.அதோடு இங்கு இது போல் நடந்திருக்குமானால் ஆளும்கட்சி ஒரு நாள் எதிர்கட்சி ஒரு நாள் பந்த் என்று மக்களுக்கு லீவு கிடைத்திருக்கும். அறிக்கை விட்டு அறிக்கைவிட்டு இதை நீர்த்து போக செய்திருப்பார்கள். வாழ்க தமிழக ஜனநாயகம்
ஷாலி
தமிழர்களுக்கு தோல்,மரத்துப்போய் தடித்துப்போய் ரொம்ப நாளாகிவிட்டது.எந்த சம்பவமும் சலனப்படுத்தாது.” என்புதோல் போர்த்திய உடம்பு” இன்று எருமைத்தோல் போர்த்திய உடம்பாக மாறி விட்டது.சாராயம் போய் விழுந்தா...ஆராய புத்தி இல்லே..ஆகவே டாஸ்மாக்கில் பணம் கட்டி நோயை வாங்குவோம் , இலவசத்தில் இன்பம் காண்போம்.
“ தமிழ்நாடு ஆட்சிப் பெற்ற, தாயை கும்பிடடி பாப்பா..”
sathya
டெல்லியில் போராட்டங்கள் நடக்க என்ன காரணம் என்பதை அடிப்படையிலிருந்து ஆராய வேன்டும். அங்கே நடக்கும் போராட்டத்தினை தமிழர்கள் நடத்தவில்லை.
ஹிந்தி மாணவர்கள் தான் நடத்துகிறார்கள்.
எல்லா பொது பிரச்சனைகளையும் சொந்த பிரச்சனைகளாக பார்க்கும் பக்குவம் ஜே.என்.யு(ஜவஹர்லால் நேரு பல்கலை கழகம்) மாணவர்களுக்கு உள்ளது.
இங்கே அப்படியா.?
பக்கத்து வீட்டில் அசம்பாவிதம் நடந்தால் நம் வீட்டிற்கு இரண்டு பூட்டு வாங்கி பூட்டி கொல்கிறோம்.
இங்கேயும் போராடலாம்.நம் போரட்டத்திற்கு செவி சாய்க்கவிடில் செவி சாய்க்க வைக்கும் அளவு போரடலாம்.
அதற்கு யாரும் தயாரில்லை.
வெறும் கூச்சல் மூலம் பிரச்சினைகள் தீராது.
போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.
சம கால போராட்டத்திற்கு கூடங்குளம் நல்ல எடுத்துகாட்டு. இங்கே வாய் மட்டும் பேசிக்கொண்டிருப்பவர் மத்தியில் ஜே.என்.யு மாணவர்கள் கூடங்குளத்திற்கும் ஆதரவு போராட்டம் நடத்தினார்கள். அது தான் தேசிய உணர்வு.
தியாகு
சில போலி புரட்சிவாதிகள் சொல்வதை போல இதை ஒரு மத்தியத்ரவர்க்கத்து போராட்டமாக பார்பதை தவிர்க்க வேண்டும் உங்கள் கட்டுரை அருமை
anu
மறந்து போவதே மறத்தமிழனின் மாண்பாகி விட்டது.
மறந்து மறந்து மறத்தமிழன் மறத்தமிழனாகி விட்டான்.
.
.
என்ன பாஸ் நாளைக்கு இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்..
.
.
இன்னிக்கு ஒரு பொண்ணு செத்து போனதை மறந்துடுவீங்களே.....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.