''டே ஆறுமுகம் அப்படியே டெரரா மூஞ்சிய வச்சுக்க. அப்பதான் இவனுகள்ளாம் பயப்படுவானுங்க. கண்ண உருட்டி இன்னும் விறைப்பா மூஞ்சிய வைடா'' வெடிகுண்டு முருகேசன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவிடம் காமெடி செய்வார் கதாநாயகன் பசுபதி. அதுபோல காமெடி செய்கிறார்கள் நக்சல்பாரிகள் என்று தங்களுக்குத் தாங்களே பிதற்றிக் கொள்ளும் ம.க.இ.க. குழுவினர். 'டெரரா' எப்படி மூஞ்சிய வடிவேலு காட்டுகிறாரோ அதைப் போல புரட்சி, நக்சல்பாரி என்று மூஞ்சியக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ம.க.இ.க. கும்பல்.

நக்சல்பாரி புரட்சியாளர்கள் என்று குறுந்தகட்டிலே பேசுவது, சுவர்களில் எழுதித் தள்ளுவது, புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களில் விளம்பரங்கள் செய்ததைத் தவிர வேறு எங்கு புரட்சியை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நிலவுடைமையாளர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி உழைக்கும் தலித் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் நிலங்களை ஒப்படைத்து அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்து வருவதாக ஆந்திர நக்சல்பாரிகள் பற்றி அறிய முடிகிறது. இதே போல் பீகார், சட்டீஸ்கர், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் மாவோயிஸ்ட்டுகள் ஆதிகுடிகளுக்கு, அதாவது அந்த மண்ணின் மைந்தர்களுக்காகப் படை கட்டி ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள். உழைக்கும் வர்க்கமான தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களும் அந்த நக்சல்பாரிப் போராளிகளோடு ஆயுதம் ஏந்தி களத்தில் நிற்பதைத் தொடர்ந்து கவனிக்க முடிகிறது. அரச பயங்கரவாதத்திற்கு எதிராகக் களமாடும் அப்போராளிகளுக்கு வழக்குகளும், சிறைகளுமே பரிசாகக் கிடைக்கின்றன. உச்சக்கட்டமாக மரணங்களையும் தின்று செரிக்கிறார்கள்.

பீகாரில் மாட்டுத் தோலை உரித்ததற்காக 4 தலித்துகளை தோலை உரித்துக் கொன்றனர் இந்துத்துவ நிலவுடமைப் பண்ணையாளர்கள். இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் இருவர் 6 மாதங்களுக்குப் பிறகு கொல்லப்படுகின்றனர்.

இப்படி புரட்சிகரக் குழுக்கள் உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் களமாடுவதை நினைக்கையில் அப்போராளிகள் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. பெருமையாகவும் அதே நேரத்தில் தலைநிமிர்வையும் உருவாக்குகிறது.

தமிழகத்தில் 1957ஆம் ஆண்டில் மாவீரன் இமானுவேல் சேகரன் கொல்லப்பட்டதிலிருந்து தருமபுரி நத்தம் சேரியைக் கொள்ளையடித்து தீக்கிரையாக்கிய சம்பவம் வரை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

குறிஞ்சான்குளத்தில் நாயுடு சாதி வெறியர்களால் அன்பு, சுப்பையா உள்ளிட்ட 4 தலித்துகள் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டனர். இவர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம் தலித்துகளின் குலதெய்வமான காந்தாரி அம்மன் சிலை நிறுவ முயற்சி செய்ததுதான். இதே போல மேலூர் - சென்னகரம்பட்டியில் கோவில் சொத்துக்களில் ஏலம் கேட்டதற்காக அம்மாசி, வேலு என்கிற இரு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மேலவளவில் தேர்தலில் பங்கெடுத்ததற்காக முருகேசன், பூபதி, மூக்கன் ராஜா உள்ளிட்ட 7 தலித்துகள் பேருந்தில் பயணிக்கும்போது வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் புளியங்குடியில் கள்ளச்சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட காந்தி, வெள்ளையன், மதியழகன் ஆகிய மூன்று தலித்துகள் தூங்கும் போது கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இப்படி தலித்துகள் மீதான படுகொலைகள் ஏராளம்.

1995ஆம் ஆண்டு கொடியங்குளமாகட்டும், 1998ஆம் ஆண்டில் நடைபெற்ற குண்டுப்பட்டியாகட்டும், ஒகலூர் சேரியாகட்டும், கடலூர் - புலியூர் சேரியாகட்டும், 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற சங்கரலிங்காபுரம் சேரியாகட்டும், கோவை காளப்பட்டி சேரியாகட்டும், பரணி புதுச்சேரியாகட்டும் அனைத்துச் சேரிகளுமே நத்தம் சேரியைப் போலவே சாதி வெறியர்களால் சூறையாடப்பட்டன. வழக்கம்போல் பின்னணியில் காவல்துறை இருந்துதான் இவ்வளவும் நடைபெற்றன. அரச வன்முறையும் சாதிய வன்முறையும் சேர்ந்துதான் தலித்துகளுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறது. நக்சல்பாரி புரட்சியாளர்கள் என்று சொல்லித் திரியும் ம.க.இ.க.வினர் தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தகைய வன்முறைகளுக்கெதிராக பீகார், ஆந்திரா போராளிகள் போல களமாட முடிந்ததா? கண்டித்து சுவரொட்டி ஒட்டுவது என்பது இவர்கள் சொல்வது போலவே சாதாரண ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் செய்கிற வேலைதான்.

அதே வேலையைச் செய்யும் ம.க.இ.க. ‘புரட்சி’யாளர்களை என்னவென்று அழைப்பது? இவர்கள் என்ன புரட்சியைச் செய்து விட்டார்கள்? வழிகாட்டும் பீகார், ஆந்திரத்தைப் போல தமிழகத்தில் ஒரே ஒரு புரட்சியை நடத்திக் காட்டியிருக்கிறார்களா? பிறகு எப்படி இவர்கள் மீது நம்பிக்கை வரும்? குறைந்தபட்சம் மதிப்பாவது வர வேண்டுமே. மாறாக வெறுப்புதான் வருகிறது. போஸ்டர் ஒட்டுவது அல்லது ரயில் நிலையங்களில், பேருந்து நிலையங்களில் புதிய கலாச்சாரம் புத்தகங்களைக் கூவிக்கூவி விற்பதுதான் புரட்சி என்று அப்பாவி இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார்கள் போல.

தமிழகத்தில் ம.க.இ.க. அமைப்போ அல்லது புரட்சிகர அமைப்புகள் என்று சொல்லிக் கொள்ளும் அமைப்புகளோ ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு பாதுகாப்பாக, நம்பிக்கையை ஊட்டும்விதமாகக் களத்தில் நின்றிருந்தால் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் தோன்றியிருக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது.

எத்தனையோ தத்துவங்களும் புரட்சியாளர்களும் தோன்றிய பிறகும் தருமபுரி போன்ற வெறியாட்டங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்றால், அதற்காக இந்த புரட்சிகரக் குழுக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டுமே தவிர, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றும் இயக்கத்தை பிழைப்புவாதக் கட்சி என்றும், ஓட்டுப் பொறுக்கிக் கட்சி என்றும் சொல்வது அறிவுடைமையாகாது.

இவ்வளவு காலம் ஓட்டுப் போடவும், போஸ்டர் ஒட்டவும் பயன்படுத்தப்பட்ட பெரும் மக்கள் திரளை அமைப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

அரசியல் அதிகாரத்தின் பக்கமே தீண்டப்படாத மக்களாக விரட்டியடிக்கப்பட்ட இந்த மண்ணின் மைந்தர்களை ''அதிகாரமும் ஒரு சொத்துதான். அந்த சொத்தில் நமக்குரிய பங்கைக் கைப்பற்ற வேண்டும்'' என்று முழங்குகிற தலைவர் திருமாவளவன் அவர்களின் இந்த முழக்கத்தால் ஆதிக்கக் கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுவது நியாயம். ஓட்டுப் பொறுக்காத புரட்சிகரக் குழுக்களுக்கு ஏன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது?

ஆயுதம் ஏந்தி போராடி தமக்கான அதிகாரத்தை வென்றெடுப்பது அல்லது சனநாயகரீதியாக தமக்கான அதிகாரத்தை வென்றெடுப்பது - இந்த இரு வழிகள்தான் உழைக்கும் மக்களுக்கான விடுதலை வழிமுறைகள்.

தமிழகத்தில் ஆயுதம் ஏந்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையை பெருமளவில் வென்றெடுத்தது போலவும், விடுதலைச் சிறுத்தைகள் அதனைத் தடுப்பதுபோலவும் பொய்யான பிம்பத்தை உருவாக்கி, விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராகத் திட்டமிட்டே பரப்புரை செய்து வருகிறார்கள்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் புறக்கணிப்பில் களமாடிய இயக்கம்தான் விடுதலைச் சிறுத்தைகள். முதலில் உதிரியான, சிதறடிக்கப்பட்ட தலித்துகளை அமைப்பாக்க வேண்டுமானால், 'தேர்தல் புறக்கணிப்பு' அமைப்பையே புறக்கணித்து விடும் என்பதால்தான் தேர்தலில் பங்கெடுத்தது விடுதலைச் சிறுத்தைகள்.

தேர்தல் புறக்கணிப்பின் போது இந்த புரட்சிகரப் புடுங்கிகள் தலைவர் திருமாவளவன் அவர்களைச் சந்தித்து ஆயுதப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து, அவரது தலைமையை ஏற்றார்களா? அப்போதும் 'ஏகாதிபத்திய எடுபிடிகள்', 'பிழைப்புவாத தலித்துகள்' என்று தலித்துகளை கொச்சைப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார்களே தவிர, தேர்தல் புறக்கணிப்பின்போது எந்த புரட்சிகரக் குழுக்கள் சிறுத்தைகளைத் தேடி வந்து விவாதித்தது?

அரசியல் அதிகாரத்தைத் தலித்துகள் கைப்பற்றவே கூடாது என்பதுதான் ஆதிக்கச் சாதிகளின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாடுடன் இந்தப் புரட்சிகரக் குழுக்கள் செயல்படுவது சரியா? ஆதிக்கச் சாதியினர் ஓட்டுக் கட்சிகளாக மாறியதற்கும், ஒடுக்கப்பட்ட தலித்துகள் ஓட்டுக் கட்சிகளாக மாறியதற்கும் வித்தியாசம் இல்லையா?

முதலில் அரசியலில் பங்கெடுக்கும் உரிமையே தலித்துகளுக்கு மறுக்கப்படும் சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்களைக் கொச்சைப்படுத்துவது மறைமுகமாக உரிமைகளை மறுக்கும் சதியல்லாமல் வேறென்ன? சாதி ஒழிப்பும் தமிழ்த் தேசியமும் உயிர்க் கொள்கைகளாகக் கொண்டு செயல்படும் விடுதலைச் சிறுத்தைகளைப் போன்று வேறு ஏதேனும் ஒரு இயக்கம் தமிழ்நாட்டில் உண்டா?

உள்ளூர் பண்ணை எடுபிடிகளாக நடத்தப்பட்ட தலித்துகளை தற்போது, ஏகாதிபத்திய எடுபிடிகள் என்று அழைப்பதன் நோக்கம் என்ன? யாருக்காவது எடுபிடிகளாகவே இருக்க வேண்டும் என்கிற நயவஞ்சகமா?

முதலில் உழைக்கும் மக்களிடத்தில் ஆக்கப்பூர்வமான நம்பிக்கையை, பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். அதை விடுத்து நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் என்று விளம்பரம் செய்வது எந்தப் பயனையும் தராது.

குறைந்தபட்சம் தோழர் தமிழரசன் அவர்களின் சாதி ஒழிப்புக் களத்திலாவது நேர்மையாகச் செயல்படுங்கள்.

இப்போது முக்கிய பிரச்சனைக்கு வருவோம். தருமபுரி வன்முறை வெறியாட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, ம.தி.மு.க இவர்களோடு சேர்ந்து ம.க.இ.க-வைச் சேர்ந்தவர்களும் பங்கெடுத்தார்கள் என்று எழுதியிருப்பது அந்த இயக்கத்தை அவதூறு கிளப்புவதாக எதிர்வினையாற்றுகிறார்கள்.

அ.தி.மு.க., தி.மு.க வரிசையில் ம.க.இ.க.வைச் சேர்த்ததுதான் இந்த கோபத்திற்கு காரணமா? அல்லது குட்டு உடைந்து விட்டதே என்ற அதிர்ச்சி காரணமா?

கடந்த நவம்பர் 4ஆம் நாள் வன்னியர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து பஞ்சாயத்து ஒன்றை நாயக்கன்கொட்டாயில் கூட்டுகின்றனர். இந்தப் பஞ்சாயத்திற்குக் கட்டுப்பட தலித்துகள் நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றனர்.

இது குறித்து நத்தம் சேரியைச் சேர்ந்த பொடா பழனிச்சாமி என்கிற தோழர் மற்ற தோழர்களுடன் அப்பகுதியில் செயல்பட்டு வரும் புரட்சிகர இயக்கமான ம.ஜ.இ.க. மாநிலச் செயலாளர் தமிழ்வாணன் அவர்களைச் சந்தித்து முறையிடுகிறார்கள். அவரோ தாக்குதல் நடத்துவது குறித்து எச்சரிக்கையும் செய்து விட்டு, ''விவசாயப் பிரச்சினை குறித்து அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் போய் தோழர் சித்தானந்தம் அவர்களைப் பாருங்கள்'' என்று நழுவிக் கொள்கிறார். ம.ஜ.இ.க.விலிருந்து (மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) பிரிந்து ம.ஜ.இ.அ (மக்கள் ஜனநாயக இளைஞர் அமைப்பு) என்கிற புதிய புரட்சி அமைப்பை நடத்தி வருகிறார் தோழர் சித்தானந்தம். இதே போல் மக்கள் யுத்தக் கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் பச்சியப்பன் அவர்களிடமும் முறையிடுகின்றனர். அவரும் சாக்குப் போக்குச் சொல்லி கழன்று கொள்கிறார். நத்தம் சேரி தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய பா.ம.க.வைச் சேர்ந்த வி.பி.மதியழகனின் உறவினர்கள்தான் இந்த சித்தானந்தமும் பச்சியப்பனும். இத்தாக்குதலுக்கு பின்னிருந்து அனைத்து எடுபிடி வேலைகளையும் செய்தவர் தோழர் கிருஷ்ணன். இவர் அண்ணாநகர் பகுதியைச் சார்ந்த வன்னியர், ம.க.இ.க.வைச் சேர்ந்தவர்.

இப்படியாக புரட்சிகரக் குழுக்கள் நத்தம் சேரித் தாக்குதலுக்குத் துணை போயிருப்பதைத்தான் 'பாமகவின் சாதிவெறியும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்புவாதமும்' கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். மற்றபடி அப்புரட்சிகரக் குழுக்கள் எங்காவது ஆயுதப் போராட்டம் நடத்தி அழித்தொழிப்பு வேலைகள் செய்ததை நான் தடுக்கவும் இல்லை, கொச்சைப்படுத்தவில்லை. இதனால், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் புரட்சியைத் தடுத்துவிடவும் இல்லை.

ஆனால், ஒரு சந்தேகம் நெடு நாட்கள் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கிறது. நக்சல்பாரிப் புரட்சியாளர்கள்... நக்சல்பாரிப் புரட்சியாளர்கள்... என்று சொல்லிக்கொள்கிறீர்களே, இன்னுமா இந்த உலகம் உங்களை நம்புகிறது?

- வன்னிஅரசு, செய்தித்தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Comments

16 comments

16
சரித்திரன்
நானும் பல புரட்சியாளர்களைச் சந்தித்து இருக்கிறேன். தோழர் இரண்டு நிமிசம் பேசலாமா என ஆரம்பித்து அமெரிக்காவை முதலில் பிளப்பாங்க. அப்புறம் முதலாளித்துவத்தைப் பிரிப்பாங்க. வர்க்கம், ஜனநாயகம், போலி கம்யூனிசம் என பல மணி நேரம் வகுப்பெடுப்பாங்க. கடைசியே புதிய கலாச்சாரம் தொடர்ந்து படிங்க. எங்க அரசியல் உங்களுக்கு இலகுவாகப் புரியும் என்பார்கள்.
அவர்கள் என்னை நிறுத்திப் பேசுவது மதுரை பெரியார் பேருந்து நிலையப்பகுதியில் தான். அதன் அருகில் சேரியாக இருக்கும் மேலவாசல் பகுதியில் இருந்து தலித் மக்களை வெளியேற்ற முயன்ற போது இந்த புரட்சியாளரிடம் இதைத் தட்டிக் கேட்கக் கூடாதா என்று கேட்டதற்கு, இது தான் முதலாளித்துவம் என்று எனக்கு இரண்டு மணி நேர வகுப்பெடுத்து விட்டு நடையைக் கட்டிவிட்டார்கள். இவர்களுக்குப் போய் வன்னி அரசு மெனக்கெட்டு எதற்கு கட்டுரை எழுத வேண்டும்?
அவர்களின் வேலை சுவரிடம் புரட்சி பேசுவது தான். விடுங்க பாஸ்.
- சரித்திரன்
deva.dhurai
அன்புடன்,
அய்யா வன்னிஅரசு தர்மபுரி வரலாறு கட்டைபஞ்சாயத்து வரலாறு கிடையாது. ரத்தத்தாலும் தியாகத்தாலும் ஆன வரலாறு. 1970களின் இறுதியில் மக்கள் திரள் போராட்டங்கள் தருமபுரியில் கூட்டக்குழு என்னும் நக்சல்பாரி கட்சியால் நடத்தபட்டது.இதுவே 1980 ஏப்பிரலில் மக்கள்யுத்த கட்சியாக மாறியது.இதன் தலைமையிலேயே சாதி எதிர்ப்பு உட்பட அனைத்து போரட்டங்களூம் நடைபெற்றன.
இப்போரட்டங்களில் ஆதிக்கச் சாதி உழைக்கும் மக்களூம் தலித் மக்களும் இணைந்தே செயல்பட்டனர்.இது 85வரை நீடித்தது.
இதன் பின்னர், கடும் அடக்குமுறை மற்றும் கட்சிபிளவின் காரணமாக மக்களியக்கம் பின்னடைவை சந்தித்தது.
1987லில் மீண்டும் மக்கள்யுத்தக்கட்சி மக்கள் போரட்டங்களை[சாதி எதிப்பு உட்பட] தொடங்கியது. ஆனால், ஆதிக்க சாதி ஆளூம்வர்க்கங்களை முழுமையாக கட்டுபடுத்த 10ஆண்டுகள் ஆனது. 1996லிருந்து 2002வரை முழுமையாக கட்டுபடுத்தபட்டனர்.
இந்த இணக்கமான சூழ் நிலையில்தான் தலித் பொருதார வள்ர்ச்சி நடைபெற்றது.
இந்த நீண்ட வரலாற்று போக்கில் 80ல் தோழர் பாலன் தியாகி ஆனார். 2000துவக்கத்தில் கெரில்லாகுழு தளபதிகளான தோழர்கள் ரவீந்தரன்,சிவா என்ற பார்த்திபன் காவல்துறையுடனான மோதலில் வீரமரணமடைந்தனர்.
பல முன்னணி தோழ்ர்கள் தேசியபாதுகாப்பு சட்டம்,தடா,பொடா போன்ற சட்டங்களால் தொடர்ந்து சிறை பட்டனர். நீங்கள் சொல்லும் பொடா பழனிசாமியும் இந்த போரட்டபின்னனியில்தான் பொடா பட்டத்தைச் சுமந்துள்ளார். உங்களது கட்டபஞ்சாயத்து அரசியலில் அல்ல.
இதுமட்டுமல்ல இப்பகுதி மக்களில் நூற்றுகணக்கானோர் பலமுறை சிறை சென்றோர் ஆவர்.இதில் அனைத்து சாதிகளின் உழைக்கும் மக்களும் உள்ளடக்கம்.
இப்படி தொடர்ந்த தியாகத்தில் உருவானதுதான் நத்தம் போன்ற தலித் கிராமங்களின் வரலாறு.
2002 ஊத்தங்கரை காவல்துறையுடன் நடந்த மோதலில் 30க்கு மேற்பட்ட தோழர்கள் கைதுசெய்யப்பட்டபின் மீண்டும் இயக்கம் பின்னடைந்தது.
இதன் பிறகு மக்கள்யுத்தகட்சியால் எப்பணியும் தொடரமுடியவில்லை.இது பின்னர் 2004ல் மாவோயிஸ்ட் கட்சியாக மாறியது. சிறையிலிருந்து வந்த நாங்களும் எப்ப்ணியையும் அப்பகுதியில் தொடங்கவில்லை.
இதனால், கடந்த 10 ஆண்டுகளில் ஆதிக்கசக்திகளின் போட்டி உச்சகட்டத்தை அடைந்துள்ளது.இதில் வி.சியின் கட்டபஞ்சாயத்தின் வளர்ச்சி முக்கியமானது. கோடிஸ்வரன் கோவேந்தேன் போன்றவர்களுக்காக நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி மக்கள் பலியாகி உள்ளனர் என பார்க்க தோன்றுகிறது.
இனி உங்களீன் கருத்துகளூக்கு வருவோம்.
1,கடந்த பத்தாண்டுகளில் நீங்கள் அப்பகுதிகளீல் தலித் மக்களை காப்பற்ற என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.?
2,இச் சம்பவம் நடப்பது பற்றி உங்களுக்கு நத்தம் தோழர்கள் தெரிவிக்கவில்லையா? அம்மக்களை காக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?
3,மக்கள்யுத்தகட்சி என்பதே இப்பொழுது கிடையாது.அதே போல், பச்சையப்பன் கட்சி விட்டு தனி வாழ்ககைக்கு சென்று 15 ஆண்டுகளூக்கு மேல் ஆகிவிட்டது. அவர் இப்பொழுதுமத்தியகுழு உறுப்பினர் என்று சொல்வதின் நோக்கமென்ன?
4,தருமபுரியின் நக்சல்பாரி வரலாற்றை மறைத்து பொத்த்ம்பொதுவாக அவதூறு கிள்ப்புவதின் உள் நோக்கமென்ன?
நாம் தர்க்கத்தில் ஈடுபடும்பொழுது திட்டவட்டமான விமர்சனங்களை, பொதுவாக இல்லாமல் குறிப்பிடவேண்டும்.
அப்படி இல்லாதபட்சத்தில் உள் நோக்கம் கொண்டதாகவே கருதவேண்டியுள்ளது.
நடராசன்
தோழர் திருமா அவர்கள்.."பெரியாரிய, மார்க்சிய, லெனினிய, தமிழ் தேசிய , சனநாயக சக்திகள் இந்த பிரச்சனையில் என்ன செய்ய போகிறீர்கள் "என்று உரிமையுடன் கேட்கிறார்.... அண்ணன் வன்னிய அரசு "நக்சல்பாரிகள் எல்லாரையும் ...பிழைப்புவாதிகள் விட்டு.. தள்ளுங்க" வென்கிறார்.. ஏனிந்த வேறுபாடு.....

பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..ய கட்சியான தி.மு.க , காங்கிரஸ் கூட்டணியிடம் 'அதிகாரத்தை' பங்கு போடும் பொழுது ...பிழைப்பு வாதி கருணாநிதியே, ஸ்டாலினே.. தலித் வீடுகள் பற்றி எரியும் பொழுது நீங்கள் என்ன
செய்து கொண்டு இருங்கிறீர்கள் என்று வன்னிய அரசு கேட்பாரா?
Suthir Marx
கட்டுரையாளர் நோக்கம் என்னவோ ஒடுக்கப்பட்ட மக்கள் முழு‍விடு‍தலை பெற வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அவர் செய்யும் வாதம் என்பது‍ குறிப்பிட்ட இயக்கத்தை தாக்குவதாக இருக்கிறது.. சரி அதை விடுங்கள் அந்த இயககத்தின் வரலாற்றை சொல்ல வேண்டுமானால் ஒரு‍ 48 ஆண்டு‍ காலத்தின் அவர்களது‍ செயல்பாட்டை பார்க்க வேண்டும்.. உங்களுக்கு‍ ஒன்றே ஒன்று‍ மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன், சாதியம் என்பதை எவ்வாறு‍ உலக முதலாளியமு‍ம், இந்திய முதலாளித்துவமும், உள்ளூர் ஆதிக்க சக்திகளும் பயன்படுத்திக் கொள்கிறது‍ என்பதை நீங்கள் புரிந்து‍ கொள்ளாத வரை நீங்கள் சார்ந்த இயக்கமும் உங்கள் இலட்சிம் (என்னுடைய இலட்சியமும் அதுவே) நிச்சயம் நிறைவேறப் போவதில்லை......
பகத்
மிகவும் கீழ்த்தரமாக எழுதியிருக்கிறார் வன்னி அரசு. அரசியல் அறிவற்ற நாலாந்தர **** போல் எழுதியிருக்கிறார். வன்னி அரசு நவம்பர் 16 அன்று கீற்றுவில் பா.ம.க வைத் தாக்கி எழுதுகிறார். நவம்பர் 18 அன்று புரட்சிப் புயல் திருமாவளவன் பெரியார் தளத்தில் பா.ம.க வுக்கு இணைந்து செயல் பட கோரிக்கை விடுக்கிறார்.

http://www.periyarthalam.com/2012/11/18/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/

இது அயோக்கியத்தனம் இல்லையா? இந்த ஓட்டுப் பொறுக்கிகளுக்கு, மக்கள் நம்மை முன் போல் நம்ப மறுக்கிறார்களே என்ற வயிற்றெரிச்சல். ம.க.இ.க வின் சமரசமற்ற போராட்டத்தால் மக்கள் கவரப்படுகிறார்கள் என்ற உண்மை கசக்கிறது. நம் எதிர்கால ஓட்டுப் பொறுக்கி அரசியல் என்னாகுமோ என்ற பயம். தலித் மக்களின் உண்மையான நண்பனாக, தலித் மக்கள் விடுதலையின் விடி வெள்ளியாக ம.க.இ.க போன்ற புரட்சிகர இயக்கங்கள் இருக்கின்றன என்ற உண்மை தான் இது போன்ற கட்டுரைகளை எழுத வைக்கிறது.
Blue
நக்சல் பாரிகளின் வேலைக்கு பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களின் கடந்த வார பேட்டியும், அரசியல் பிழைப்பு வாதத்தை புரிந்து கொள்ள உங்கள் தலைவரின் பேட்டியுமே சாட்சி...சாதி ஒழிப்புக்கும், உழைக்கும் மக்களின் விடுதலைக்கும் உங்களிடம் வழி இல்லை எனபது ஊர் அறிந்த உண்மை...
பகத்
முதலில் இவர்கள் இயக்கத்தில் ஒருமித்த கருத்து இருக்கிறதா?

பெரியார் தளத்தில் திருமாவின் கட்டுரை:

// தருமபுரி அருகே நடந்துள்ள வன்முறை வெறியாட்டங்களுக்கு பா.ம.க-வும் வ
cheran
வன்னியரசு வி.சி.யின் தலைவர் திருமாவளவன் பேசியதை அதாவது அப்பு பாலன் கொள்கைகள்தான் எங்கள் கொள்கை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சாதி ஒழிப்பு என்பது அனைத்து சாதியிலும் உள்ள உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணந்தால் தான் சாதிதீண்டாமயை ஒழிக்கமுடிஉம் என்பதை உணரவேண்டும்.அவர்கள் சொல்லும் நிலபிரபுத்துவ,த்ரகுமுத்லாளித்துவ அரசில் ஆதிகாரத்துக்கு வந்த மாயாவதி ஆட்சி சாதிதீண்டாமைக்க்கு முடிவுகட்டியதா என்பதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.உயர்சாதி ஆதிக்க சக்திகள் பெருமளவு சாதி கலவரத்துக்கு திட்டமிடும் இன்றைய சூழ்லில் புரட்சிகர ஜனநாயக சக்திகள் தாழ்த்தப்பட்ட மக்கள் என அனைத்து தரப்பையும் ஒன்றிணைக்கும் வேலையில் கவனம் செலுத்தும்படி வன்னியரசு உட்பட தலித் தலைவர்களை கேட்டுக்கொள்கிரோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் அனைவர்க்கும் தாழ்வுதான்.தரகுமுதலாளித்துவ நிலபிரத்துவ ஆட்சியை தூக்கியெறிந்து புதியஜனநாயக ஆட்சி அமைக்காமல் வன்னியரசே முதல்வரானாலும்(எந்தசாதி சங்கத்தலைவரும் ஆகமுடியாது என்பதே உண்மை) ஏன் பெரியாரும் அம்பெத்க்ரும் மேண்டும் பிறந்து வந்து பிரதமரேயானாலும் இந்த அமைப்புக்குள் சாதி தீண்டாஐயை ஒழிக்கமுடியாது என்பதையும் புரிந்துகொள்லாவிட்டால் சாதி வெறியர்கள் எதிர்மறையாக பாடம் புகட்டுவார்கள்.எனவே பொது எடிரிகளுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான சாதிய வன்முரைக்கு எதிராகவும்,சாதி தீண்டாமைக்கு எதிராகவும் அணிதிரள்வோம்.
cheran
மஜ இக மாநில செயலாளர் தமிழ் வாணன் என்பது தவறான தகவல் இதனை கீற்று இணையம் சரி செய்ய வேண்டும் .ம ஜ இ க மாநில அமைப்பாளர் தோழர் ஞானம் .அதை போல் நச்சல் பாரி இயக்கம் தோழர் பாலன் தலைமையல் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறது .அந்த வரலாறு எல்லாம் வன்னி அரசுக்கு தெரியாத ?
பிரகாஷ்
பிழைப்புவாதியான வன்னி அரசு பிழைப்புவாதி என்ற சொல்லால் மிகுந்த காயமுற்றிருக்கிறார். அவர் சார்ந்த கட்சியே ஒவ்வொரு தேர்தலிலும் தனது பிழைப்புத்தனத்தை வெளிப்படுத்தி பல்லிளித்துக் கொண்டுதான் இருக்கிறது. நீர் பிழைப்புவாதி இல்லையென்றால் தேர்தலில் தனியாக நின்று காட்டேன் பார்ப்போம்.

பி.கு. தானைத் தலைவர் திருமா. அவர்கள் மாவட்டம் தோறும் அள்ளி எடுத்த தங்கக் காசு மாலைகளிலிருந்து பாதிக்கப்பட்ட தருமபுரி மக்களுக்கு உதவுவாரா?
பகத்
வன்னி அரசு: பொய் மேல் பொய்!

http://www.vinavu.com/2012/11/28/vanni-arasu-lies-2/

வன்னி அரசுவின் பிழைப்புவாத, அயோக்கியத்தனமான அவதூறுகள் இக்கட்டுரையில் திரை கிழிக்கப்பட்டுள்ளன.
பகத்
இக்கட்டுரைக்கு மறுப்பாக வந்த வினவின் கட்டுரை:

நவம்பர் 7 நாயக்கன் கொட்டாய் சாதிவெறித் தாக்குதல் குறித்து விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, கீற்று தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், தலித்துக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ம.க.இ.கவைச் சேர்ந்த வன்னியர்களும் உண்டு என்றொரு அவதூறை எழுதியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் முகமாக “வன்னி அரசு வகையறாக்களின் வன்னிய சேவை “ என்றொரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அதில் ” அறிவு நாணயம் என்ற சொல்லை அவர் குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்பாரேயானால், தாக்குதலில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டும் மகைக காரர்கள் யார் என்பதை சொல்லட்டும். அல்லது அவரது கட்டுரையை பெருமகிழ்ச்சியோடு பிரசுரித்திருக்கும் கீற்று, பெரியார் தளம் வலைத்தளங்களுக்கு கொஞ்சமாவது நேர்மை இருக்குமானால் வன்னி அரசுவை விளக்கமளிக்குமாறு கோரட்டும். ” என்று குறிப்பிட்டிருந்தோம். நிறைய வாசகர்களும் கீற்று தளத்தில் இதையே கோரியிருந்தனர்.

தனது பொய் குறித்து பதிலளிக்காமல் இருக்க முடியாது என்ற நிலை உருவான காரணத்தினால், மீண்டும் கீற்று தளத்தில் முழுப்பிதற்றலாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் “இத்தாக்குதலுக்கு பின்னிருந்து அனைத்து எடுபிடி வேலைகளையும் செய்தவர் தோழர் கிருஷ்ணன். இவர் அண்ணாநகர் பகுதியைச் சார்ந்த வன்னியர், ம.க.இ.க.வைச் சேர்ந்தவர்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வன்னி அரசு குறிப்பிட்டிருக்கும் அண்ணாநகர் என்பது முழுக்க முழுக்க தலித்துக்கள் மட்டும் வாழும் கிராமம். அந்த ஊரில் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்களே கிடையாது. மேலும் அக்கிராமத்தில் ம.க.இ.கவோ அதன் தோழமை அமைப்புகளோ கிடையாது. எமது முந்தைய கட்டுரையிலேயே நாயக்கன் கொட்டாய் வட்டாரத்தில் எமக்கு அமைப்பு கிளைகள் இல்லை என்பதால் பென்னாகரம் பகுதி தோழர்கள் சென்று உதவியிருக்கின்றனர் என்று தெளிவாகவே குறிப்பிட்டிருந்தோம்.

இருப்பினும் தான் சொன்ன அபாண்டமான அவதூறை நியாயப்படுத்துவதற்காக இன்னொரு பச்சைப்பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் வன்னி அரசு. அரசியல் ரீதியான விமரிசனங்களை விடுத்து பொய்களையும், அவதூறுகளையும் வெளியிடுவதில் கீற்று தளத்திற்கு என்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை.

வன்னி அரசுவின் இந்தக் கட்டுரையில் அவர் தெரிவித்திருக்கும் ‘ஆதாரத்தின்’ யோக்கியதையை மட்டுமே இங்கே அம்பலப்படுத்தியிருக்கிறோம். ம.க.இ.க குறித்து அவருடைய கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் மற்ற உளறல்கள் பதிலளிக்கத்தக்கவை அல்ல. கட்டப்பஞ்சாயத்தில் வயிறு வளர்த்து, ஓரிரு நாற்காலிகளுக்காக தலித் மக்களின் வாக்குகளை ஆண்டைக் கட்சிகளிடம் விலை பேசும் தரகர்கள், புரட்சி எப்படி செய்வது என்று விளக்குகிறார்களாம்.

வன்னி அரசுவின் கட்டுரைகளை கீற்று தளம் தொடர்ந்து வெளியிடுவதில் நமக்கு ஆட்சேபமில்லை. அவற்றை சிரிப்பூ என்ற தலைப்பின் கீழ் வெளியிடுவது பொருத்தமாக இருக்குமென்பது எம் பரிந்துரை.
lenin
//தோழர் கிருஷ்ணன். இவர் அண்ணாநகர் பகுதியைச் சார்ந்த வன்னியர், ம.க.இ.க.வைச் சேர்ந்தவர்.” என்று குறிப்பிட்டிருக்கிறார். வன்னி அரசு குறிப்பிட்டிருக்கும் அண்ணாநகர் என்பது முழுக்க முழுக்க தலித்துக்கள் மட்டும் வாழும் கிராமம். அந்த ஊரில் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்களே கிடையாது. மேலும் அக்கிராமத்தில் ம.க.இ.கவோ அதன் தோழமை அமைப்புகளோ கிடையாது//

எங்கேயாவது சொந்த பெயரில் இயங்கினால் தான் தெரியும் யாரென்று
அம்பேத்
வன்னியரசுக்கு விவசாயிகள் விடுதலை முன்னனியின் தோழர் ஆம்பள்ளி.முனிராஜ் சவால்!

http://www.vinavu.com/2012/11/30/vanni-arasu-exposed-by-aamballi-munirasu/
மாணவன்
வன்னி அரசுவின் கோவணம் இக்கட்டுரையில் கிழிந்து தொங்குகிறது..

வன்னி அரசுவின் (விடுதலை சிறுத்தைகள்) பித்தலாட்டங்களை தோலுரிக்கும்
விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் ஆம்பள்ளி. முனிராஜ்.

அன்பிற்குரியவர்களே,

நவம்பர் 7-ம் தேதி மாலை 4.30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் அருகிலுள்ள நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டியிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் மீது பா.ம.க. சாதிவெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஊடகங்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரச்சாரத்தின் மூலம் நாடே இதை அறிந்தது.

பா.ம.க தான் இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தியது. இதை மக்கள் மத்தியிலிருந்து ஆய்வு செய்து, அம்பலப்படுத்தி சுவரொட்டி ஒட்டியும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் வெளிக்கொண்டு வந்துள்ளோம். நான் இந்த பகுதியில் தங்கி நீண்டகாலமாக செயல்பட்டவன் என்கிற முறையில் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், வன்னிய மக்களை பற்றியும் இன்னபிற சாதியினர் பற்றியும் நன்றாக அறிவேன்.

1980-ல் தோழர் பாலன் இங்கு அரசியல் வேலை செய்துகொண்டிருந்த போதும், பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டு தியாகியாகி அவருக்கும் தோழர் அப்புவுக்கும் நாயக்கன்கொட்டாயில் சிலை வைத்த போதும், அதன்பிறகு 1989 வரை அப்பகுதியில் தங்கி அரசியல் வேலைகளை செய்திருக்கிறேன். தோழர்கள் அப்பு, பாலன் சிலை நிறுவும் கமிட்டிக்கு தலைமை பொறுப்பேற்றுள்ளேன். அங்கிருந்த முன்னணி புரட்சியாளர்கள் மற்றும் அனைத்து சாதி உழைக்கும் மக்களுடனும் ஐக்கியப்பட்டு இணைந்து தான் அந்த சிலைகள் நிறுவப்பட்டன. நக்சல்பாரி வரலாறு இம்மாவட்டத்தில் நீண்ட நெடிய துயரம் நிறைந்த பயணம் கொண்டது. இதனை சாதிக் கண்கொண்டு பார்க்கும் வன்னியரசு போன்ற பிழைப்புவாதிகள் தெரிந்திருக்க நியாயமில்லை.

அங்கு சிலைகள் நிறுவப்பட்டதானாலும், இரட்டை குவளை முறையை எதிர்த்த போராட்டமானாலும், கந்துவட்டி கொடுமைகளை எதிர்த்த போராட்டமானாலும் இது போன்ற பல நூறு பிரச்சினைகள் புரட்சிகர அமைப்புகளின் முன்னிலையில் தீர்க்கப்பட்டிருக்கிறது என்றால் அதை எப்போதும் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், வன்னியர்கள், இன்னபிற சாதி உழைக்கும் மக்கள் என அனைவரும் சேர்ந்தே செய்துள்ளனர். சிலை அமைப்பதில் உழைப்பு, உணவு, தண்ணீர்,பொருளாதாரம் அனைத்தும் அனைத்து சாதி மக்களின் உணர்வும், உழைப்பும் தான். அனைத்து சாதி மக்களும் ’தோழர்’ ’தோழர்’ என்கிற ஒரே உணர்வில் தான் செயல்பட்டு வந்தனர்.

உதாரணத்திற்கு, மாரவாடி என்கிற ஊரில் ஒரு தாழ்த்தப்பட்ட உழைப்பாளரின் மனைவியை கந்துவட்டிக்காரன் அடித்து உதைத்த போது அந்த பெண்ணுக்கு கருவே கலைந்து போனது. இந்த கந்துவட்டி கொடுமைக்காரன் தருமபுரியிலுள்ள ரவுடி ரங்கன் என்பவனின் தந்தை. கந்துவட்டிக்காரனின் சைக்கிளை பிடுங்கிக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நட்ட ஈடு கொடுத்துவிட்டு சைக்கிளை வாங்கிக்கொள் என்று தோழர் பாலன் தலைமையில் முடிவு செய்து அறிவித்த போது, அதை ஏற்று அவனை மீட்டுக்கொண்டு போனவர் தான் இன்ஸ்பெக்டர் சிவகுரு. இந்த சம்பவத்தில் வன்னியரான அந்த கந்துவட்டிக்காரனை அடித்ததில் முன்னணியில் நின்றவர்கள் வன்னிய மக்கள் தான்.

அத்தகையவர்கள் இன்று தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை தாக்குகிறார்கள் என்றால் இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பா.ம.க சாதிவெறியர்களால் தூண்டப்பட்டு வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதே முதன்மையான காரணம். அதே போல தாழ்த்தப்பட்ட மக்களை வி.சி அமைப்பும் தவறாக வழிகாட்டி இழுத்துச்செல்ல முயற்சிக்கிறது. இப்படி தவறாக வழிகாட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு வன்னியரசின் இந்த பித்தலாட்டங்களே போதுமானது.

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய்க்கு அருகிலுள்ள அண்ணா நகரில் வன்னியர்கள் இருப்பதாகவும், அதில் கிருஷ்ணன் என்கிற வன்னியர் இருப்பதாகவும், அவர் தான் இந்த சாதிவெறி தாக்குதலை பின் நின்று நடத்தியதாகவும் அவர் ம.க.இ.க வைச் சேர்ந்தவர் என்றும் வன்னியரசு கூறியுள்ளார்.

அண்ணா நகரில் வன்னியர்கள் இருப்பதாக கூறுவது முதல் பொய். அங்கு தாழ்த்தப்பட்ட மக்களை தவிர வேறு எந்த சாதியினரும் இல்லை. இரண்டாவதாக தருமபுரி மாவட்டத்தில் ம.க.இ.க அமைப்பே இல்லை. வி.வி.மு என்கிற அதன் தோழமை அமைப்புதான் செயல்படுகிறது.

அண்னா நகரில் வி.வி.மு உறுப்பினரோ, ஆதரவாளரோ கூட இல்லை. எனவே இல்லாத ஒரு நபரை இருப்பதாகவும், இல்லாத ஒரு சாதியை இருப்பதாகவும், இல்லாத ஒரு அமைப்பை இருப்பதாகவும் பச்சை பொய்யை கூறுகின்றார் வன்னியரசு. இப்படி அந்த பகுதி பற்றி தெரியாத, நேரடி பரிச்சயம் இல்லாத, மாநிலத்தின் பிற மாவட்ட மக்களுக்கு தவறான தகவலை கொடுத்து பொய் பிரச்சாரம் செய்கிறார்.

இந்த அமைப்பின் தலைமை பொறுப்பில் இத்தகையவர்களும் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. உண்மையில் வன்னியரசுக்கு கொஞ்சமாவது நேர்மை, நாணயம் இருக்கிறது என்றால் இதே அண்ணா நகருக்கு வந்து அவர் கூறும் ம.க.இ.க கிருஷ்ணனை காட்டட்டும் பார்க்கலாம். எப்போது வருகிறார் என்று தகவல் கூறினால் நானும் வருகிறேன். சவாலை ஏற்கத் தயாரா ?

இப்படிக்கு

ஆம்பள்ளி.முனிராஜ்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
அ.சிம்பு
ஒட்டு பொறுக்கபோன பிரகும் வி.சிய தலித்மக்கள் நம்புரங்க?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.