அண்மையில் இலக்கிய நண்பர் ஒருவரிடமிருந்து எனக்கு ஒரு கைப்பேசி அழைப்பு வந்தது. ‘தலித் இலக்கியம் முடிவுக்கு வந்துவிட்டது' என்றார் அவர். பிடிக்காத ஒருவரின் கதையை முடித்த மன நிறைவு, அவரின் குரலில் தெரிந்தது. யார் முடிவுக்கு கொண்டு வந்தது என்று அவரிடம் கேட்டேன். அதுவாகவே வந்து விட்டது என்றார் அவர். ஒரு வேளை நேரிலே இருந்திருந்தால் இனிப்பையோ, தேநீரையோ கூட, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் அவர் வாங்கி தந்திருப்பார். அத்தகைய ஓர் அரிய வாய்ப்பு பறிபோனதில் எனக்கு சற்றே வருத்தம்தான்!
தொடர்ந்த பேச்சினூடே அவர் இமையத்தின் கட்டுரையைக் குறிப்பிட்டார். அக்கட்டுரை தலித் அறிவு ஜீவிகள் மற்றும் விகாஸ் அத்யாயன் கேந்திரா ஆகியோரால், பிப்ரவரி மாதம் 8 அன்று தொடங்கி மூன்று நாட்கள் சென்னையில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது. ‘குமுதம் தீராநதி' யில் சூன் மாதம் வெளியான சோ. தர்மனின் நேர்காணலையும், ‘புதிய புத்தகம் பேசுது' சூன் மாத இதழில் வெளியான சா. கந்தசாமியின் நேர்காணலையும் அவர் மேலும் குறிப்பிட்டுச் சொன்னார். இவை மூன்றையும் சேர்த்து வாசித்துக் கொண்டிருந்த போது ‘உங்கள் நூலகம்' ஏப்ரல்-மே இதழில் வெளிவந்த கவிஞர் சுகுமாரனின் நேர்காணலையும் அவற்றோடு இணைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது.
கவிஞர் சுகுமாரனின் தலித் இலக்கியம் குறித்த கருத்து தன்னிலை விவரிப்பாகவும், தத்துவார்த்த தளத்துடனும் இருக்கிறது. தலித் இலக்கியம் பொது இலக்கியத் தளத்திலோ, தனி மரபாகவோ உருவாக வேண்டும் என்பது அவரின் விருப்பமாகத் தெரிகிறது. ஆனால் இமையத்தின் கட்டுரையோ, சா. கந்தசாமி, சோ. தர்மன் ஆகியோரின் நேர்காணல் கருத்துக்களோ அப்படியாக இல்லை. அவர்களின் கருத்துக்கள் தலித் இலக்கியத்தை வேறொரு புள்ளியிலிருந்து அணுகுகின்றன.
மேற்கண்டவற்றைப் படித்து முடித்தவுடன் தமிழ், தலித் இலக்கியவாதி என்று அறியப்படுகின்ற வகையில் எனக்கான சில கருத்துக்களைப் பதிவு செய்யலாம் என்ற விருப்பம் உண்டானது. உடனே என் இலக்கிய நண்பருக்குப் பேசி கட்டுரை எழுதுவதாகச் சொன்னேன். அவர், பார்த்து செய்யுங்கள் என்றார்.
குழந்தைகள் சேர்ந்து விளையாடும்போது கவனித்திருக்கலாம். விளையாட்டு மும்முரமாக போய்க்கொண்டிருக்கும். ஒரு பக்கம் தொடர்ந்து வெற்றிகள் குவியும்; அல்லது அடுத்தடுத்து வெற்றிகளோ, வெற்றிபெறும் நிலையோ உருவாகும். உடனே கூச்சல்கள் தொடங்கிவிடும். இதுவரை ஆடிய விளையாட்டைக் கலைத்து விடலாம். முதலில் இருந்து தொடங்கலாம் என்று சில குழந்தைகள் சொல்வார்கள். இப்படியாக அந்தக் களேபரம் தொடர்ந்து கொண்டிருக்கும்.
தமிழ் இலக்கியத்திலும் இப்போது அப்படித்தான் சில குரல்கள் ஒலிக்கின்றன. உரையாடலை முதலில் இருந்து தொடங்கலாம் என்கிறார்கள். மீண்டும் மீண்டும் ஒன்றைப் பேசுவதைப் போன்றதொரு சலிப்பு வேறொன்றுமில்லை. வெற்றி பெற்ற திரைப்படங்களை அடியொற்றி ‘மம்மி' திரும்புகிறது, ‘டைட்டானிக்' திரும்புகிறது என்று ஹாலிவுட் திரைப்படக்காரர்கள் படங்களை எடுத்து அனுப்புவதைப் போல, சிலர் இங்கே கேள்விகளோடே திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
தலித் இலக்கியம் குறித்து அவநம்பிக்கையுடன் இன்று எழுப்பப்படும் வினாக்கள் அத்தனையும் தொடக்கத்திலேயே எழுப்பப்பட்டவைதான். ஒவ்வாமையும் வெறுப்பும் அப்போது உச்சத்தில் இருந்தன என்பதை அப்போது வெளியான கட்டுரைகள், நேருரைகள் அனைத்திலும் பார்க்க முடியும். இந்த வெறுப்பும் ஒவ்வாமையும் ஒரு திசையிலிருந்து மட்டுமே அன்று வரவில்லை. ஏறக்குறைய அனைத்து திசைகளிலிருந்தும் வந்தன. அனைத்து முகாம்களில் இருந்தும் வந்தன. ஆனால், ஒரு நம்பிக்கை இருந்ததை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. எல்லா வினாக்களுக்கும் ஒரு விடை, மூர்க்கமாகவோ, அமைதியுடனோ அன்று விழுந்தன. ஆனால் இன்று அப்படியான எந்த விடைகளுமே இவ்வினாக்களுக்கு இல்லை. யாராலும் அவை வழங்கப்படுவதில்லை. யாரும் அதற்கு தயாராக இல்லை என்பதே உண்மை.
பாபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப்பிறகு இங்கு 90 களில் ஏற்பட்ட எழுச்சிதான், அன்று இவ்வினாக்களுக்கான விடைகளை வைத்திருந்தன. அரசியல், கலை, இலக்கியம், என எல்லா தளங்களிலும் அன்று எழுச்சி இருந்தது. தலித் அரசியல், தலித் இலக்கியம், தலித் கலை, தலித் பண்பாடு என அனைத்துத் தளங்களிலும் வினாக்களும், எதிர் வினாக்களுக்கான விடைகளும் எழுந்தன. இன்று நிலைமை வேறாக இருக்கிறது.
தொடக்க காலத்தில் தலித் இலக்கியம், அரசியல், தத்துவம் குறித்து எழுதப் புகுந்தவர்களில் யாரும் இன்று அவைகளுக்காக எழுதுவதில்லை. அரசியலில் தலித் உரிமை பேசுவது இன்று பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. தலித் உரிமை என்பது வெகுசன அதிகார அரசியலில், இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தையே பெறுகின்ற ஒன்றாக இருக்கிறது. தேவையெனில் அந்த அடையாளம் தூக்கி எறியப்படவும் கூடும். விரிந்த பொதுத்தளத்திலிருந்து அடையாள அரசியலை நோக்கி திரும்ப வேண்டிய கட்டாயம் தலித் மக்களுக்கு இருந்தது. இன்றும்கூட அந்தக் கட்டாயம் அற்றுப் போய் விடவில்லை. அடையாள அரசியல் வந்தது. அது நிலைபெறும் முன்னரே பொதுத்தள அரசியலின் பக்கம் தலித் அமைப்புகள் செல்லத் தொடங்கிவிட்டன.
தமிழ் நாட்டுக்கே உரிய திராவிட அடையாளமோ, தமிழ் அடையாளமோ இன்று தலித் அமைப்புகளுக்கும் தேவைப்படுவதாகக் கருதப்படுகின்றது. அதன் விளைவாகத்தான் தலித் அரசியல் அமைப்புகளில் தம்மையும் கடைசியாக இணைத்துக் கொண்டிருக்கும் அருந்ததியர் அமைப்புகளில் ஒன்று ‘ஆதித்தமிழர்' என்ற பெயரை தன் அமைப்புப் பெயருடன்இணைத்துக் கொண்டுள்ளது. தலித் கலைகள் இன்று நாட்டுப்புறக் கலைகளாக மீண்டும் அடையாளப்படுத்தப்படுகின்றன.
அரசின் ஆதரவுடன் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பொது அடையாளத்துடனேயே தலித் கலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னமும் ஒரு படி மேலே போய் தமிழக அரசு, ‘தலித்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது இழிவானது, தவறு என்று ஆணை வெளியிட்டிருக்கிறது. தலித் இலக்கியம் தேவையில்லை; அது சாதி ஒழிப்பு இலக்கியம் அல்ல என்று இலக்கிய உலகில் இன்று பழைய விவாதங்கள் சூடுபடுத்தப்படுகின்றன. ஆக, தலித் என்ற அடையாளம் கைவிடப்பட்டிருக்கிறது; அல்லது கைவிடப்படும்படி புறச்சூழலும், அகச்சூழலும் நெருக்கடியை உருவாக்கி விட்டிருக்கின்றன.
சாதி ஒழிப்பு, ஒடுக்கப்பட்ட சாதிகளிடையேயான ஒற்றுமை ஆகிய கருத்துகளில் இருந்து தான் ‘தலித்' என்ற சொல் உருவாக்கம் கொண்டது. ஆனால் அச்சொல் இங்கு ஏற்றுக் கொள்ளப்படவும், புரிந்து கொள்ளப்படவும் இல்லை. அதற்குள்ளாகவே அது நிராகரிக்கப்பட்டது. தலித்தை கைவிடுதல் என்ற நிலை சாதி ஒழிப்பை எட்டியதின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவா? அப்படி ஒரு நிலை வந்தால் அச்சொல் தானாகவே வழக்கொழிந்து விடும். ஆனால் இன்றும் நிலைமை வேறாகத்தானே இருக்கிறது.
உத்தப்புரம் சாதிச்சுவர் போன்ற எண்ணற்ற தீண்டாமை வடிவங்கள் பலம் பொருந்தியவையாக உயிர்ப்புடன் இருக்கின்றன. இந்தியாவின் பல்வேறு தளங்களிலும் தேசிய நீரோட்டமாக சாதி இருந்தபடியே இருக்கிறது. இப்படியானதோர் நிலையிலே கைவிடப்படும் தலித்நிலை தற்கொலைக்கும், புறமுதுகிடுவதற்கும் ஒப்பானதாகவே இருக்கும். அரசியலின் அதிகார ஈர்ப்பு யாருக்கும் உவப்பானதுதான். அதிலும் குறிப்பாக அதிகாரத்தை அனுபவத்திராத தலித்துகளுக்கு அது மேலும் உவப்பானதாகவே இருக்கும். அதிகாரத்தைக் கைப்பற்றுவது, அம்பேத்கரியலின் ஓர் அடிப்படைக்கூறு. ஆனால் அவற்றுடன் இணைந்த வேறு சில முக்கியக் கூறுகளும் இருக்கின்றன.
அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் வகுப்புகளின் பேராய மாநாட்டில், நாகபுரியில் அம்பேத்கர் 1930 ஆகஸ்டு 8 அன்று உரை நிகழ்த்துகையில், இதைக் குறித்து மிக விரிவாகப் பேசியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் இழிநிலைக்கு அரசியல் அதிகாரம் மட்டுமே தீர்வாகிவிடாது. விடுதலை என்பது சமூக மேம்பாட்டில் உள்ளது. இழிவழக்குகளை ஒழித்தல், வாழ்க்கை மாற்றம், கல்வி பெறுதல், சமமான மனித உரிமைகள் ஆகியவற்றைப் பெறும் போதுதான் விடுதலை சாத்தியம் அடையும் என்கிறார் (தொகுதி 37, பக். 75). அதிகாரத்தை நோக்கிய நமது செயல்திட்டம்,மேற்கண்டவைகளை உள்ளடக்கியது ஆகும்.
ஆனால் கெடுவாய்ப்பாக, நாம் இத்திட்டங்களில் பின்னடைவையே பெற்றிருக்கிறோம். பொதுத் தளங்களில் நுழைவதற்கான தலித் எனும் அடையாள கடவுச் சீட்டு முடக்கப்படுவதற்கான நெருக்கடியில், நாம் அதை இழப்பதற்கு துணிந்துவிட்டோமா?
இழி வழக்குகள் தொடர்கின்றன. மலம் சுமக்கவும், பிணம் தூக்கவும் இன்னும் ஒரு தலித்தே தேவைப்படுகிறான். பொருளாதார அளவுகோலின் முதல் அய்ந்து சென்டி மீட்டரில் கூட தலித் இன்னும் வரவில்லை. கல்வி பெறுவதிலும் நிலைமை ஓரளவே மாற்றம் கண்டிருக்கிறது. உயர் கல்வியையும், தொழில் நுட்பக் கல்வியையும் பெறுவதில், தலித் மிகுந்த பின்னடைவு நிலையில் இருக்கிறான். அவனுக்கு சமமான மனித உரிமைகள் இன்னமும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
தலித் அடையாளம் இன்னும் முழு வெற்றி பெறவில்லை. பொது அடையாளத்தின் போர்வையில் தனி அடையாளங்களை சிதைப்பது, தலித் அடையாளக் கோரலால் தடுக்கப்பட்டது. மிகத் தந்திரமாக பல்வேறு அரசியல் மற்றும் பொது சொல்லாடல்களின் வழியே, பொது அடையாளத்தினரால் இடையூராகக் கருதப்படும் தலித் அடையாளம் கைவிடப்படும்படி நெருக்கப்படுகிறது.
இந்த முனைக்கும் அந்த முனைக்குமாக, ஒடுக்கப்பட்டோரை விரட்டிக்கொண்டே இருப்பதற்கானதொரு உத்திதான் இது. தலித் அடையாளம் கைவிடப்படுவதின் விளைவாக இன்று உட்சாதி அரசியல் கூர்மைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தாக்கம் உட்சாதி முரண், உள் இட ஒதுக்கீடு ஆகிய தளங்களிலே எதிரொலிக்கிறது. தலித் அடையாளத்தை கேள்விக்கு உட்படுத்துதல், கைவிடுதல் என்ற நிலை, தமிழ் இலக்கியத்தில் தீவிரமடைந்த தருணத்தை எட்டியிருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. பிற தளங்களில் இல்லாத தலித் அடையாளம், எழுத்தில் மட்டுமே இடையாறாது இன்று வரை பேணப்பட்டு வருகிறது என்பதே உண்மை. ஆனால், இந்த அடையாளம் இன்று மீண்டும் மிகப்பழைய வினாக்களால் எதிர்கொள்ளப்படுகின்றன. துரு பிடித்த வினாக்கள் அவை.
தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்வதிலேயே இன்னும் சிக்கல்கள் நீடிக்கின்றன. இமையம் தன் கட்டுரையை, ‘தலித் இலக்கியம் சாதி எதிர்ப்பு இலக்கியம் அல்ல' என்ற பிரகடனத்துடனேயே தொடங்குகிறார். அவரின் கட்டுரை இரண்டு பகுதிகளை கொண்டிருக்கிறது. தலித் எழுத்துக்களை பொது அடையாளத்துடன் அணுக வேண்டும் என்பது முதல் பகுதி. தலித் எழுத்தாளர்களுக்கு எந்த கருத்தியல் சார்பும் இருக்கக்கூடாது என்பது இரண்டாம் பகுதி. மார்க்சியமோ, பெண்ணியமோ, தலித்தியமோ எல்லாமே தடைகள் தான் என்பது அவர் கருத்து. அனுமானங்களையும், யூகங்களையும் கடந்து சமூகத்தைப் பார்க்க வேண்டும் என்று புத்தி சொல்கிறார் அவர்.
அப்படிப் பார்த்தால், சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியாது. தலித் இலக்கியம் சாதி எதிர்ப்பு இலக்கியம் தான் என்பதை அந்த எழுத்துக்களின் உள்ளடக்கம் மற்றும் தன்மையினைக் கொண்டே புரிந்து கொள்ள முடியும். சாதி எதிர்ப்பின் அடிப்படையிலேயே தலித் எழுத்துக்கள் உருவாயின. சாதி எதிர்ப்பு என்ற அடிப்படை இன்றி தலித் எழுத்துக்கள் இல்லை; அதற்கான தேவையும் இல்லை. இலக்கியம் சுத்தச் சுயம்புவானது. அது கலப்படமற்றது. அது புனிதமானது என்பதைப் போன்ற கருத்துக்கள் அனைத்துமே போலியானவை; உள் நோக்கம் கொண்டவை. எழுதத் தொடங்கும் வரையிலும் அதற்குப் பிறகும் கூட ஒரு படைப்பாளி சாதி சூழலில் தானே இயங்குகிறான். அந்தத் தடைகளை உடைத்து வெளியே வருகிறவர்கள் எத்தனைப் பேர் இருந்துவிட முடியும்? படைப்பாளிக்கான அரசியல் என்று எதுவுமே இல்லையா என்ன?
ஒரு படைப்பாளியின் மிகச்சரியான கருத்து நிலையே அவனின் படைப்புகளை மேன்மையுறச் செய்கிறது. சாதிய விடுதலை, பெண் விடுதலை, பொதுவுடைமை போன்ற கருத்துக்களை அவன் தன் எழுத்தில் கொள்ளாமல் வேறெதைக் கொண்டால் அவன் படைப்பு சிறப்படையும்? இலக்கிய விமர்சகர்கள் வைக்கும் அளவுகோல்களுக்கு படைப்பாளி ஆட முடியாது. எழுத்தில் இது வேண்டாம், அது வேண்டாம் என்று அவர்கள் சொல்வதற்கு, எழுத்தாளன் உடன்படத் தேவையில்லை. சர்க்கஸ் சிங்கமாகவோ, யானையாகவோ படைப்பாளி ஒருபோதும் இருக்க முடியாது. தங்க கூண்டுக் கிளிகளுக்கு வானம் தெரியாது.
"தலித் இலக்கியத்தை ஒப்புக்கொண்டால் பிராமண இலக்கியமும் உண்டு, முதலியார் இலக்கியமும் உண்டு, தேவர் இலக்கியமும் உண்டு'' என்கிறார் சா. கந்தசாமி, தன் நேர்காணலில். ‘இலக்கியத்தில் முற்போக்கு பிற்போக்கு என்று இல்லை. தலித் இலக்கியம் மராட்டியத்தில் பிராமணர்களால் தொடங்கப்பட்டது' என்பதும் அவர் கருத்து. தலித் இலக்கியம் எதிர்ப்பு இலக்கியம். அது உலகளாவிய புரட்சிகர இலக்கியங்களுடன் உறவு கொள்ளும் தன்மையுடையது. மானுட விடுதலை, சமூக விடுதலை என்பது அதன் அடிப்படை. பார்ப்பன இலக்கியத்திற்கும், முதலியார் இலக்கியத்திற்கும், தேவர் இலக்கியத்திற்கும் இப்படியான அடிப்படையாக என்ன இருக்க முடியும்? இலக்கிய வகையைப் புரிந்து கொள்ளாமல், அதை சிறுமைப் படுத்துவதைப் போன்ற வேறொரு அறியாமை இருக்க முடியுமா?
இலக்கியத்தில் மட்டுமின்றி சமூக, அரசியல் மற்றும் தத்துவ நிலைகளிலும் எப்போதுமே இருந்து வரும் எதிர்ப்புக் குரலை அங்கீகரிக்காத போக்கு, என்றென்றும் நிலவுகின்ற ஒன்றாக இருக்கிறது. தலித் இலக்கியம் பார்ப்பனர்களால் தொடங்கப்பட்டது என்று சொல்வதும் கூட அப்படித்தான். ‘தலித் இலக்கியம்' என்னும் தமது நூலில் அர்ஜுன் டாங்ளே, தலித் இலக்கிய வரலாற்றை தெளிவாக சித்தரிக்கிறார். இவ்வகை இலக்கியம் புத்தர் காலத்திலேயே தொடங்கியது. சொக்கமேளா (கி.பி. 14ஆம் நூற்றாண்டு), ஜோதிராவ் புலே (1828 - 90) எஸ்.எம். மாதே, பாபாசாகேப் அம்பேத்கர் என்று அது தொடர்ந்து வந்தது என்கிறார் டாங்களே. அவரின் கருத்துக்கு துணை செய்யும் வகையில் ஜோதிராவ் புலேவின் எழுத்துக்கள் உள்ளன. 1885 மே 24 அன்று நடைபெற்ற மராத்தி எழுத்தாளர் மாநாட்டுக்கு அவர் அழைக்கப்பட்டபோது அதை மறுத்து, அம்மாநாட்டுக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தார்:
"மனித உரிமைகள் பற்றி பொதுவாக நினைக்காதவர்களின் புத்தகங்கள் மற்றும் மாநாடுகள், அதைப் பிறருக்கு அளிக்காதவர்கள், தங்களது நடவடிக்கைகள் மூலம் எதிர்காலத்தில் பிறருக்கு அளிக்காதவர்கள், நமக்கு நல்லஅர்த்தத்தை வழங்க முடியாது. நமது புத்தகங்களில் நாம் சொல்ல முயலுகின்றவற்றோடு அவர்கள் ஒத்துப் போக முடியாது'' (புலேயின் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்). அன்று தொடங்கி இன்று வரை ஏதோ ஒரு வகையில் எதிர்க் குரல்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. தமிழிலும் பண்டிதர் அயோத்திதாசர் தொடங்கி ஒரு மரபு உண்டு. எல்லா மொழிகளிலும் இப்படி இருக்க முடியும் என்று சொல்லலாம். அதை உள்வாங்காமல் தலித் இலக்கியம் ஆதிக்கசாதியினரால் தொடங்கப்பட்டது என்று சொல்வது அநியாயமானது.
தயாபவார், நாராயணன் சர்வே, ராபா ஆதவ், கோதாவரி பருலேகர் போன்ற ஆதிக்க சாதி மற்றும் பார்ப்பன எழுத்தாளர்கள் சிலர் மராத்தியில் தலித் ஆதரவு எழுத்தாளர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்களின் சாதிய அடையாளத்தைக் கண்டு கொள்வதிலிருந்தே இக்கருத்துக்கள் தந்திரமாகக் கிளம்புகின்றன. இங்கு குறிப்பிடப்படும் சமகால எழுத்தாளர்களுக்கு முன்பே பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் அவர் கல்லூரி மாணவர் குழாம் ஆகியோரிடமிருந்து தொடங்கியதுதான் அங்கே தலித் இலக்கியமாகக் கருதப்படுகிறது.
தலித் இலக்கியம் குறித்த அடிப்படைப் புரிதல் இன்மை பெரிய எழுத்தாளர்களிடம் நீடித்திருக்கிறது என்பதற்கு இவ்வகை கருத்துக்களே ஆதாரம். "ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் பற்றியோ அல்லது இந்த இலக்கியத்தின் பங்கு பற்றியோ ஓர் இலக்கிய அல்லது கல்விக் கோட்பாட்டுப் பார்வையிலிருந்து மட்டுமே ஆய்வு செய்யும் போது, அதை மதிப்பிடுவதில் ஒரு முற்றான கருத்துருவாக்கத்தை முன்வைப்பதில் தவறிவிடுவோம். ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் சமூக ஆய்வியல் கோட்பாடுகளிலிருந்து மதிப்பிடப்பட வேண்டும்'' என்கிறார்
அர்ஜுன் டாங்ளே, தனது ‘தலித் இலக்கியம்' எனும் நூலில். கருப்பு இலக்கியமும், புலம் பெயர்ந்தோர் இலக்கிமும், மார்க்சிய இலக்கியமும் உலக அளவிலே இந்த அளவுகோலின் படிதானே மதிப்பிடப்படுகின்றன. பிறகு ஏன் தலித் இலக்கியம் மட்டும் தொடர்ந்து சாதிய ஆய்வியல் கோட்பாடுகளிலிருந்து மதிப்பிடப்படுகிறது? கலைக்கோட்பாடு கருத்துச் செல்வாக்கிலிருந்து மீளாமல், தலித் இலக்கிய அடிப்படை பற்றிய வரலாற்றுப் புரிதல் இல்லாமல், வெறுப்பையும், தவறான தகவல்களையும் உதறித்தள்ளாமல் இருக்கும் வரை இப்படியான கருத்துக்கள் தொடர்ந்து வரும் என்றே தோன்றுகிறது.
சோ. தர்மன் கூட தன் நேர்காணலில் இப்படித்தான் பேசியிருக்கிறார். தமிழின் மேன்மை தங்கிய எழுத்தாளர்களாகக் கருதும்படி சொல்லப்படுகின்ற சிலரின் படைப்புகளில் தென்படும் ஒருசில வரிகளை தூக்கி வைத்துக் கொண்டு, புளங்காகிதப்பட்டு கலை, கலை என்று சொல்கிறார் தர்மன்.அப்படி வரிகளால் மதிப்பிடப் புகுந்தால், புறக்கணிக்கப்பட்ட படைப்பாளிகளின் ஆக்கங்களில் ஆயிரம் தேறும். ‘தலித் கதைகளில் தலித் எண்ணெய் தேய்க்காமல் பரட்டைத் தலையுடன் இருப்பான், கோபப்படுவான், சண்டை போடுவான், தலித் பெண் சோரம் போவாள் என்று தான் இருக்கின்றன' என்கிறார் அவர்.
முழுக்க படித்து விட்டுதான் சொல்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது; அல்லது அவருக்குப் பிடித்த மேன்மை தங்கிய படைப்பாளிகளின் தலித் சித்தரிப்புகளைத் தான் குழம்பிப் போய் மாற்றிச் சொல்லிவிட்டாரோ என்னவோ தெரியவில்லை. வாசிக்காமல் சொல்கிற கருத்துகளுக்கு என்றுமே மதிப்பில்லை. தலித் இலக்கியம் பற்றிப் பேசுகிற பலரும் இப்படித்தான் சொல்கிறார்கள், ஒன்றும் இல்லை என்று. சரி போகட்டும், எதையாவது சொல்லித்தானே ஆக வேண்டும். நாணயமாக ஜெயகாந்தன் சொன்னதைப் போல, ‘நான் புதிதாக எழுதுகிறவர்களின் எழுத்துக்களைப் படிப்பதில்லை' என்றாவது இவர்கள் சொல்லி விடலாம். கலை என்பதை சாக்கிட்டு கதைகள் அவற்றின் வரிகளுக்காக, நேர்த்தியாக மட்டுமே மதிப்பிடப்படும் என்றால், இலக்கியத்தின் அடிப்படை செத்துவிடும். அதையே சோ. தர்மன் செய்திருக்கிறார்.
மொழிபெயர்ப்பு வாய்ப்புகள், பட்டங்கள், விருதுகள், உதவித் தொகைகள், அங்கீகாரங்கள் எல்லாமும் இங்கு கவனத்துக்கு வராத தலித் எழுத்தாளர்களுக்கு கிடைப்பதேயில்லை. தலித் அடையாளத்தை விமர்சிப்பவர்களுக்கும், மறுப்பவர்களுக்கும் தான் அவை போய் சேர்ந்த வண்ணம் இருக்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட ‘தலித் எழுத்தாளர்கள்' அவர்கள்! எதிர்க் கருத்துகளுக்கான மதிப்பு, விலைவாசியைப் போல ஏறிக்கொண்டே செல்லும் போல் தோன்றுகிறது. தலித் இலக்கியம் ஏன் பின்னடைவு கொண்டுள்ளது என்பதையும், இந்த நெருக்கடிகளை உருவாக்கும் குழுக்கள் எவை என்பதையும் தான் இன்று மெய்யாகவே ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
தலித் மக்கள் மனிதர்களாகக் கருதப்படாமல் தான் வரலாறு நெடுகிலும் இருந்தனர். முகமற்றவர்களாக, குரலற்றவர்களாக, அடையாளமற்றவர்களாகக் கருதப்பட்டனர். இதற்கு நேரெதிராக பொது அடையாளம், ஆதிக்க சாதியினுடையதாக இருந்தது. இன்றளவும் அதுவே நீடிக்கிறது. பொது என்ற போர்வையில் தலித்துகளின் அடையாளம் உள்ளடக்கப்பட்டு சிதைக்கப்பட்டது; இழிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்தே இங்கு தலித் என்ற தனி அடையாளம் முன் வைக்கப்பட்டது. கருப்பினம் அடிமைப் படுத்தப்பட்டபோது, கருப்பே விடுதலையின் கருவியாக ஆக்கப்பட்டதைப் போலத்தான் தலித் என்ற சொல்லே இங்கு சமூகத்தின் சாதிய விடுதலைக்கான முழக்கமாக்கப்பட்டது. அம்முழக்கமே ஒடுக்கப்பட்டவர்களுக்கு சுயமரியாதையை, தன்னம்பிக்கையை, துணிச்சலை, உரிமையை பெற்றுத் தரும் கருவியானது.
இந்த அடையாளத்தை விரும்பாத பொது (சாதி) சமூகத்தினர் இதை எதிர்த்தே வந்தனர். இன்று அவர்கள் தனி அடையாளம் எதற்கு, பொதுவுக்கு வாருங்கள் என்கின்றனர். பொதுவில் நமக்கான சம இடம் இருந்தால் போய்விடலாம். ஆனால், அப்படி ஏதும் இல்லை என்பதுதான் எதார்த்தம். அரசியலிலோ, இலக்கியத்திலோ, பண்பாட்டுத் தளத்திலோ, கல்விப் புலத்திலோ, அரசு நிர்வாகத்திலோ, அடையாள அரசியலை முன்னெடுத்த பின்புதான் தலித்துகளுக்கு இப்போது இருக்கும் சொற்ப இடமே கூட கிடைத்திருக்கிறது என்பது, வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.
இந்தச் சூழலில் தலித்துகள் பொது சமூகத்தினரோடு ஊடாடுவதன் மூலம், அவர்களிடம் இருக்கும் சாதிய கருத்துகளைத் தகர்க்க வேண்டியுள்ளது. தலித்துகளின் அரசியலை ,உரிமைக் கோரலை பொது சமூகம் புரிந்து கொள்வதற்கு இன்று வரை தயாராக இல்லை. இலக்கியத்திலும் தலித் படைப்புகள் சாதிய இலக்கியமாகவே கொச்சைத்தனமாக வகைப்படுத்திப் பார்க்கப்படுகின்றன. இப்பார்வைகளும், கருத்துகளும் முற்றிலுமாக மாறும் வரை, தலித்துகள் தமது அடையாளத்தை எறிந்து விடுவது தற்கொலைக்கு சமமானதாகவே இருக்கும்.
பொது சமூகம் தலித்துகளோடு இணைய வேண்டும் என்பதே நீண்ட நெடுங்காலமாக தலித்துகளின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், அவர்களோ நீங்கள் எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்றுதான் இன்று வரையிலும் அழைப்பு விடுக்கின்றனர். பார்ப்பனிய ஆதிக்கக் கருத்தியலின் உள்வாங்கி செறிக்கும் உத்தியின் அடிப்படையிலேயே அவர்களின் அழைப்பு இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாத தலித்துகள் உயர்வு நவிற்சி உணர்வோடு, அவர்களின் அழைப்புக்கு செவிசாய்த்து விடுகின்றனர். இது பரவலாக எல்லா தளங்களிலும் நடந்து வருகிறது. தனித்த அடையாளங்களுடன் நாம் இணைவது தான் சரியான இணைவாக இருக்கும். நமக்கான இடத்தோடு பொது அரங்கம் கட்டப்பட வேண்டும்.
இலக்கியத்தில் தலித் படைப்புகள் தமிழ் இலக்கியத்தின் தனித்ததொரு மரபாக ஏற்கப்பட்டு, பொது இலக்கியத் தளத்தோடு இணைக்கப் படவேண்டும். அதுவரை தலித் மக்கள் எல்லா தளங்களிலும் தமது அடையாளத்தை இழக்கத் தேவையில்லை.