ஒவ்வொரு நாளும் காலையில் வரும் குறுந்தகவல்களில் சில துயரச் செய்திகளை சுமந்தே வருகின்றன. பேப்பரை பிரித்தால் துன்ப நிகழ்வுகளும் அவதூறுச் செய்திகளும் வந்து கொட்ட, குறுந்தகவல்களும் இந்த வரிசையில் சேர்ந்துவிட்டன. நல்லவேளையாக எங்கள் வீட்டில் டிவி இல்லை. இருந்திருந்தால், அது காட்சிரீதியிலான வன்முறையை மிகப் பெரிய அளவில் செலுத்திக் கொண்டிருக்கும். நேற்று காலையில் வந்த ஒரு குறுந்தகவல் வழக்கத்துக்கு மாறான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “தமிழத்தின் பிரபல சமையல் கலை நிபுணர்களில் ஒருவரான செஃப் ஜேக்கப் இறந்துவிட்டார். இதை உறுதி செய்ய முடியுமா?” என்று என் பத்திரிகையாள நண்பன் ஒருவனிடம் இருந்து அது வந்திருந்தது. நாளிதழ்களில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டிருந்த அந்த செய்தியை நானும் அவனும் பார்த்திருக்கவில்லை.

chef_jacobஎன்னால் அதை நம்ப முடியவில்லை. செஃப் ஜேக்கப் என்று அறியப்படும் ஜேக்கப் சகாயகுமார் அருணியை, சில கட்டுரைகளை எழுதுவதற்காக சந்தித்து இருக்கிறேன். நமது உணவு, பண்பாடு பற்றிய ஆர்வத்தை வெளிப்படுத்திய ஒரு சில சமையல்கலை நிபுணர்களில் அவரும் ஒருவர். அவரது உதவியுடன் “தமிழ் பாரம்பரிய உணவு” குறித்து இந்தியா டுடே இதழிலும், பிறகு ஊர் சிறப்பு உணவு வகைகள் தொடர்பாக ஃபெமினா இதழிலும் எழுத வாய்ப்பு கிடைத்தது. வெறுமனே சுவை, செய்முறை, ஆங்காங்கே ஊட்டச்சத்து தகவல்களை தெளித்துத் தருவதிலேயே பெரும்பாலான சமையல்கலை நிபுணர்கள் கவனம் செலுத்தி வந்த நிலையில், ஓர் உணவு, அதன் பின்னணி, வரலாறு, பண்பாட்டுடன் அதற்கிருந்த பிணைப்பு போன்றவற்றை வெகுமக்களை கருத்தில் கொண்டு முன்வைத்தவர்களில் ஒருவர் ஜேக்கப். பெரும் வணிக உணவகங்கள் வெளிநாட்டு உணவுத் திருவிழாக்களை நடத்தி வந்த நிலையில் சங்ககால உணவு, உள்ளூர் உணவு போன்றவற்றில் கவனம் செலுத்தியவர். இதற்கெல்லாம் மேலாக ஒவ்வொரு ஊருக்கும் உள்ள சிறப்பு உணவு வகைகளை பிரபலப்படுத்தியவர். அவற்றுக்கான பெயர் காரணங்களை விளக்கி, சில நேரம் குறிப்பிட்ட ஊரில் அதை சிறப்பாகச் செய்யும் நபரின் பெயரிலேயே உணவு வகைகளை அடையாளப்படுத்தியவர்.

உத்தமபாளையத்தில் பிறந்து மதுரையில் வளர்ந்த அவர், தனது அம்மா அளித்த ஊக்கம் காரணமாகவே சமையல்கலை நிபுணராக மாறியதாக முன்பு கூறியிருக்கிறார். ரசம் என்றிருந்து, பிறகு ரசா என்று பெயர் மாற்றப்பட்ட உணவகத்தை நிர்வகித்து வந்த அவர், சில மாதங்களுக்கு முன்னால்தான் சொந்தமாக ஜேக்கப்ஸ் கிச்சன் என்ற உணவகத்தை ஆரம்பித்தார். அதற்குப் பிறகு கூடுதலாக பரபரப்பாகிவிட்ட அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பொதுவாக, பெரிய உணவகங்கள், பிரபல சமையல்கலை நிபுணர்களைப் போல பிகு செய்யும் பண்பை அவரிடம் நான் பார்த்ததில்லை. கட்டுரைகள் எழுதுவதற்காக அணுகியபோதும், உணவு தொடர்பான பிற சந்தேகங்களைக் கேட்டபோதும், நட்புணர்வுடன் பதில் சொல்வார். நமது உணவு, பண்பாட்டுடன் அது கொண்டுள்ள உறவு குறித்து தமிழ் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்திருந்தபோதும் (வீ.அரசு, பொ.வேல்சாமி, நாஞ்சில் நாடன் போன்றோர் இதற்கு உதவியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்), அதை வெகுமக்களிடம் கொண்டு சென்றதில் ஜேக்கப் போன்றவர்களது பங்கு குறிப்பிடத்தக்கது என்று நினைக்கிறேன். மேலும், ஒரு சில ஊர்களின் அடையாள (சிக்னேச்சர்) உணவு வகைகளே பிரபலமாக இருந்த நிலையில், தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் புகழ்பெற்றிருந்த உணவு வகைகளை பிரபலப்படுத்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

செட்டிநாட்டு சைவ, அசைவ உணவு வகைகள்தான் தமிழகத்திலும் வெளியிலும் பிரபலமானவையாக இருந்து வந்தது. உண்மையில் நம்முடைய ஒவ்வொரு பகுதிக்கும் தனிப்பட்ட உணவுக் கலை உண்டு. அவற்றை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு உணவு வகைகளை தேடிச் செல்ல வேண்டும் என்று கூறுவார்.

ஒரு பிரபலமாக, அவர் நடத்திய டிவி சமையல்கலை நிகழ்ச்சிகளை நான் பார்த்ததில்லை. நண்பர்கள் கூறி கேள்விப்பட்டது, செய்திகளில் பதிவானதை படித்ததுடன் சரி. அதிலிருந்து வித்தியாசமாக சமையல்கலை நிகழ்ச்சியை நடத்தினார் என்று தெரிய வந்தது. அவரது கின்னஸ் சாதனை போன்றவற்றிலும் எனக்குப் பெரிய ஆர்வமில்லை. (கீழ்க்கண்ட விஷயங்களுக்கும் திரு. ஜேக்கப்புக்கும் நேரடி சம்பந்தமில்லை. ஆனால், அவருடைய மரணத்துடன் சேர்த்து பேச வேண்டியவை இவை.) 

துர்மரணம்

இந்த துர்மரணத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் ஜேக்கபின் வயது, வெறும் 37 என்பதுதான். சமீபகாலமாக எனக்குத் தெரிந்த வட்டத்தில் 35-45 வயதுக்குள் மாரடைப்பு, புற்றுநோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை கட்டுமீறிப் பெருகிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் இந்த மரணங்களுக்கான ஒட்டுமொத்தக் காரணம் அறுதியிடப்படவில்லை என்றாலும், இந்த மரணங்கள் அடிக்கோடிடும் செய்தி நமது உணவுப் பழக்கம், ஆரோக்கியத்தை பராமரிக்கும் முறையில் உள்ள பெரும் இடைவெளிகளையே சுட்டிக்காட்டுகிறது.

நமது உணவுப் பழக்கம் ஆரோக்கியமாக இல்லை என்பது திட்டவட்டம். மற்றொன்று, உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு நம்மிடம் சுத்தமாக குறைந்துவிட்டது என்பதுதான் (இந்த வரியை எழுதும் நானும் இதற்கு எந்த வகையிலும் விதிவிலக்கல்ல). நம்மிடையே உள்ள உடல்உழைப்பு, உடற்பயிற்சி சார்ந்த மனோபாவமும் சோம்பலும்தான் உடல்நலனுக்கு மிகப் பெரிய எதிரிகள். உழைப்பை மதிக்காத மனோபாவம், நமது சமூகத்தின் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள், சிக்கல்களுக்கு தோற்றுவாயாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில் உடல்நலனை முற்றிலும் பாதிக்கிறது.

மற்றொரு பக்கம், சமூக மாற்றம் உட்பட இன்னபிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், நமது பணிகள் அனைத்துக்கும் மூலதனமாக இருக்கும் உடலுக்கு என்று சிறிதளவு நேரத்தைக்கூட ஒதுக்குவதில்லை. ஒரு யோகக்கலை நிபுணரை சந்தித்தபோது, “வாக்கிங் செல்வது என்பது நேரத்தை வீணடிப்பது என்ற மனோபாவத்தை முதலில் கைவிடுங்கள். உங்கள் உடல்நலனுக்காகத்தான் அந்த நேரத்தைச் செலவிடுகிறீர்கள்” என்றார். என்னுடைய சித்த மருத்துவ நண்பரும், விகடனில் நமது உணவுப் பாரம்பரியத்தின் மகத்துவம் குறித்து “ஆறாம் திணை” என்ற பெயரில் எழுதி வருபவருமான சிவராமன், 35 வயதுக்கு முன்னதாக உடற்பயிற்சி நடைமுறைகளை கட்டாயமாக கடைப்பிடித்தாக வேண்டும் என்கிறார். முடி கொட்டுவது முதல், மாரடைப்பு வரை பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் நமது இதயம் சீராக இயங்க முடியாமல் போவதுதான். உடலின் ஒவ்வொரு நுண்ணிய பாகமும் ஒழுங்காகச் செயல்பட வேண்டுமானால், அதற்கு அந்த இடங்களுக்கெல்லாம் ஆரோக்கியமான ரத்தம் பாய வேண்டும். அதற்கு உடலை நாம் நன்றாக இயக்க வேண்டும்.

எதையோ நினைத்து, எதையோ தேடி கண்ணை மூடிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். எப்போது நின்று திரும்பிப் பார்க்கப் போகிறோம்?

- ஆதி வள்ளியப்பன்

Comments

9 comments

9
viswanathan
I have seen many of his TV Programme. I really could not believe the sudden death of Jacob. Your write up is very much touching
Viswanathan
pugazhendhi
Youngsters especially in IT sector should realise the importance of physical exercises.Most of them do not go out in the sun at all.They go to their offices in the early mornings and return late at nights.Recently,one such young lady known to me fractured her leg while getting down from a taxi.At the age of about 25,her bone was so fragile that she got it broken just while getting out of the taxi.It was only due to Vitamin D deficiency.And every one knows that you can get the D vitamin by exposing atleast one hour in evening or morning sunlight.
mahalingam
//எதையோ நினைத்து, எதையோ தேடி கண்ணை மூடிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். எப்போது நின்று திரும்பிப் பார்க்கப் போகிறோம்// சரியான வார்த்தைகள்... நிஜமானா வார்த்தைகள்.. சென்னை பெருநகர வாழ்க்கை இன்னும் மோசமாக இருக்கிறது..
mathivanan
சோறு என்பதே ஓர் சமூக வரலாற்றுடன், இருத்தலுடன் தொடர்புடையது என்று யோசித்த ஜேக்கப்பின் மரணம் அதிர்ச்சியளித்தது.
உண்மையைத் தேடுவேர் உன்னதம் என்று ஆளுவோர் சொல்லும் செய்திகளை மறுத்தளிக்கிறார்கள் என்பதற்கான ஓர் உதாரணம் ஜேக்கப்.
வணக்கம் செய்கிறேன்.
Ravi Kumar
The Soft Speech, kindly body lanuage, vibrant eyes, and afterall merly 37, the last episode of one of his programme in Sun TV, at October 29, 2012, was Ipasi, pournami anna abishekkam, in all siva Temple. He made a good connection to Lord siva, and the Programme, which a meaning siva was Diety, diet is a food, Annam (White Cooked Rice ) bridge and his profession We lost a wonderfull man....... I pray for his soul be rest.....
PCKRAINA
எனது ஆழ்ந்த இரங்கல்
Aashik
மரணதிற்க்கு யாரும் விதிவிலக்கல்ல. ஆனால் முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் மகிழ்சி தரும். செஃப் ஜேக்கப்பிற்க்காக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
சம்பூகன்
உடற்பயிற்சியே உயிரைக்காக்கும்;இன்றைய வாழ்க்கைச் சூழலில் உணவு முறையில் சரியான முறையைக் கடைப்பிடிக்க முடியாமல் போனாலும் உடற்பயிற்சி எப்படியும் உடலைக்காக்கும்.மூச்சுப்பயிற்சியும் உடற்பயிற்சியும் நம்மிடம் இல்லை;நமது அடுத்த தலைமுறைக்காவது சொல்லித்தருவோம்.நாமும் கடைப்பிடிக்க முயலுவோம்.குறிப்பாக வீட்டில் துணைவியாரையும் இதற்கு உடன்படச் செய்யவேண்டும்.அவர்களும் வர வர டி.வி.சீரியல்களில் மூழ்கி உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்கிறார்கள்.
jasmine
அவரவர் உடலை நேசிஙல் உடல் உருபபுக்கு மரியாதை கொடுஙல் வாழ்க்கை நம் கையில்

இனி ஒரு ஜகாப் .....இவவாரு செய்தி கெடக வேன்டாம்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.