ஈழத்தமிழர்கள் தொடர்ந்து இந்தியாவை விட்டு வெளியேறி வருகின்றனர். இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்காக குரல் கொடுக்கும் நாம், தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழர்களின் உரிமையை உத்திரவாதம் செய்ய வேண்டாமா?.. அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி காண வேண்டாமா? நமது அரசு, தப்பிச் செல்லும் அகதிகளை தொடர்ந்து கைது செய்து வருகின்றது.

சென்னை, நாகப்பட்டிணம், ராமேஸ்வரம் பகுதிகளில் அடிக்கடி ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்போது திருச்சி, சென்னை, சிதம்ப்ரம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட முகாம்களில் இருந்த அகதிகள் ஆள்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பனியிலும், குளிரிலும், வெயிலிலும், மழையிலும் உயிருக்கு உத்திரவாதமின்றி கடல் பயணம் மேற்கொள்கின்றனர். சில வேளைகளில் உணவு, தண்ணீர் இன்றி நடுக்கடலில் தவிக்கின்றனர். தப்பிச் செல்லும் சிலர் கடல் பரப்பில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழக்கின்றனர்.

கனடாவிலும், ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பாக வாழ முடியும் என்று நம்புகின்ற தமிழர்களுக்கு இந்தியாவிலும், தமிழகத்திலும் சுதந்திரமாக வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது.

தமிழர்களின் உரிமைகளுக்காக தீர்மானம் போடும் அ.தி.மு.க. அரசும், டெசோ மாநாடு நடத்தும் தி.மு.க.வும், தமிழர்களின் உரிமைக்காக உரக்க குரல் கொடுக்கும் அரசியல் இயக்கங்களும், தமிழகத்தின் அகதிகள் முகாம்களில் வாழும் ஈழத்தமிழர்களுடைய உரிமையை உத்திரவாதப்படுத்த வேண்டும்.

கொலை வெறியன் ராஜபக்சேவுக்கு கோரிக்கை வைக்கும் நம்மால் ஜெயலலிதாவிற்கும், மன்மோகனுக்கும் அழுத்தம் கொடுக்க முடியாதா?

ஒரு நாள், இரு நாள் மட்டும் அகதிகள் முகாமை சுற்றிப் பார்த்து வருவது அரசியலுக்கு சரியாக இருக்கலாம். நிரந்தர தீர்வை, நிலையான தீர்வை, முகாமிலுள்ள தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வை நாம் எட்டுவதுதானே சரியாக இருக்கும்.

போரினால் உறவுகளையும், உடமைகளையும் இழந்து வாழ்விற்காக நாடோடிகளாக அலையும் அவல நிலையில் உள்ள நம் சொந்தங்களுக்கு நாம் வாழ்வியல் உத்திரவாதத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும். குழந்தைகளையும், பெணகளையும் வைத்துக் கொண்டு, சேர்த்து வைத்த மிச்சம் மீதி சொத்துக்களையும் இழந்து, உயிரைப் பணயம் வைத்து கடல் பரப்பில் பயணிக்கத் தயாராகும் தமிழர்களுக்கு ”தமிழ்” மண்ணில் உரிமையை நிலை நாட்டுவோம்.

ஜெ.பிரபாகர்

Comments

2 comments

2
இராமியா
ஈழத் தந்தை செல்வாவிடம் “நாமே இங்கு பார்ப்பன டெல்லி அரசுக்கு அ‌டிமையாக இருக்கிறோம். ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?“ என்று பெரியார் கேட்டதை ஒவ்வொரு தமிழரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். முதலில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட முன் வாருங்கள். அதன் பின் ஈழத் தமிழர்களுக்கு உதவும் வலிமை கிடைக்கும். பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டாமல் செய்யும் எந்த முயற்சியும் வீண்.
nadikan
இந்த கட்டுரைய எழுதியவருக்கு ஈழத்தமிழர்களின் உண்மையான தேவைகள் என்ன என்று சரியான புரிதல் இல்லை என்றே தோன்றுகிறது. அவர்கள் யாரும் இந்தியாவில் இருக்க விரும்பவில்லை. அவர்களின் இலக்கு வளர்ச்சியடைந்த நாடுகளில் போய் அகதி தஞ்சம் கோரி நிரந்தரமாக குடியேறுவது மட்டுமே.இந்தியா என்பது அந்த நாடுகளுக்கு செல்வதற்கான இடைத்தங்கல் மட்டுமே.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.