தொடர்புடைய படைப்புகள்

மும்பை கடந்த பத்து நாட்கள் கொண்டாடிய கணபதி உற்சவம், பெருகி வரும் கணபதி சிலைகள், சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி, எங்குப் பார்த்தாலும் மின்விளக்குகள், அதில் 99 விழுக்காடு மின்விளக்குகள் தெரிந்தே எல்லோரும் அறிய பொது மின்கம்பத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கும் (திருடப்பட்டிருக்கும்) மின்சாரம், இதை ஒட்டி ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள், எங்கு பார்த்தாலும் கூட்டம், கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட இந்தப் பத்து நாட்களும் மக்கள் எவரும் அதைப் பற்றி வெளிப்படையாக குறைப்பட்டுக் கொள்ளவில்லை. கண்பதியைக் குற்றம் குறைகள் சொல்லும் தைரியம் இப்போது இங்கே யாருக்குத் தான் இருக்கிறது? சகித்துக் கொள்ள மக்கள் பழகிவிட்டார்கள். இதனால் மிக அதிகமாகப் பாதிக்கப்படும் காவல்துறையும் இதைப் பற்றி மூச்சுவிடுவதில்லை.

ganesh_festival_mumbai_350மதம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு நிகழ்ச்சியையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள நம் சமூகம் பழகிவிட்டது. பத்திரிகைகளுக்கு பக்கத்திற்குப் பக்கம் விளம்பரம், தொலைக்காட்சிகளுக்கு இன்றைக்கு இன்னார் இந்த கணபதி மண்டலுக்கு வந்தார், இந்த நடிகர் பூஜை செய்தார், இந்த நடிகை கணபதியைக் கும்பிட்டார், இந்த அரசியல் தலைவர் வந்தார், இந்த அமைச்சர் தன் மனைவியுடன் சாமி கும்பிட்டார், மாநில கவர்னர் மனைவியுடன் வந்திருந்து கணபதி மண்டல மலர் வெளியிட்டார்... இப்படியாக செய்திகளுக்குப் பஞ்சமில்லாமல் நன்றாகவே வண்ணமயமாக கழிந்து விடுகிறது இந்தப் பத்து நாட்களும்..!

நாளுக்கு நாள் பெருகிவரும் இந்த கணபதி உற்சவம் மும்பையில் மட்டுமல்ல இன்று இந்தியாவின் பெருநகரங்கள் எங்கும் வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. கணபதி உற்சவத்தை ஏன் கொண்டாடினோம்? எதற்காக 10 நாட்கள்? இதை ஆரம்பித்து வைத்தவர் யார்? இப்படியான அனைத்து கேள்விகளுக்கும் பதிலாக நமக்குக் காட்டப்பட்டிருக்கும் சித்திரம் "லோக்மான்ய திலக்"

ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய மக்களை ஒன்றுதிரட்டவும் 10 நாட்கள் கண்பதி உற்சவத்தைக் கொண்டாடுவதன் மூலம் தேசிய விடுதலை தாகத்தை சமுதாயத்தில் உருவாக்கிட முடியும் என்றும் எண்ணி ஆரம்பித்தாராம். அதுவும் மத சம்பந்த காரியங்களில் ஆங்கிலேய அரசு தலையிடாது என்பதால் விநாயகர் சதுர்த்தியை தன் அரசியல் போராட்டத்திற்கு ஏதுவாக கையில் எடுத்துக் கொண்டாராம்..! சரி அப்படியானால் விடுதலை அடைந்தவுடன் 10 நாள் கொண்டாட்டத்தை நிறுத்தி இருக்கலாம் தானே? ஏன் செய்யவில்லை? விடுதலை, இந்திய சுதந்திரப் போராட்டம் இதெல்லாம் சரித்திரப் பாடம் இந்துத்துவ இந்தியாவுக்கு பூசியிருக்கும் தங்கமுலாம். அவ்வளவுதான்.

கணபதி உற்சவத்தை திலகர் ஆரம்பித்ததன் ஆரம்பகால நோக்கம் இந்திய விடுதலைப் போராட்டம் அல்ல, கண்பதி உற்சவ கொண்டாட்டங்களை பொதுமக்களின் வீதிக்கு கொண்டுவந்ததன் நோக்கமும் இந்திய சுதந்திர தாகம் என்று நம் பாடப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதெல்லாம் உண்மையும் அல்ல.

18ஆம் நூற்றாண்டில் மராட்டிய மண்ணை ஆண்ட பேஷ்வாக்களின் ஆட்சியில் அவர்களின் அரண்மனையில் கணபதி ரங் மஹாலில் கணபதி உற்சவம் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் அலங்காரமும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அரசர் கலைஞர்களுக்கு சன்மானம் கொடுத்து மகிழ்வித்தார். ஓர் அரசவை நிகழ்வாக மத வழிபாட்டின் அடையாளமாக இருந்த கணபதி உற்சவம் 1818ல் ஆங்கிலேயர் பேஷ்வாக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்ததுடன் முடிந்து போனது.

thilak_320இக்காலக்கட்டத்தில் மராட்டிய மண்ணில் பார்ப்பனர் அல்லாதோர் இயக்கத்தின் தலைவராகவும் வழிகாட்டியாகவும் இருந்தார் மகாத்மா புலே மற்றும் அவருக்குப் பின் சாகுமகராஜ். SATYA SODHAK MOVEMENT என்ற புலே ஆரம்பித்த இயக்கத்தின் தாக்கம் சமூகத்தில் இளைஞர்களிடம் ஓர் எழுச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்து மதம் பார்ப்பனர் அல்லாதோரை இரண்டாம்தர மூன்றாம்தர சூத்திரர்களாகவே வைத்திருப்பதை அவர்கள் கேள்விக்குட்படுத்தினார்கள். வேத நம்பிக்கை, வேத காலத்து இந்தியா இந்துக்களின் இந்தியாவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தவர் திலக். எனவே கணபதி விழா சர்வஜன கணபதி விழாவாக உருமாற்றியதன் மூலம் பார்ப்பனர் அல்லாதோரை எக்காலத்தும் இந்துத்துவ சாம்ராஜ்யத்தில் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும் பத்திரமாகப் பூட்டி வைத்துக் கொள்ளும் அற்புதமான பூட்டும் சாவியுமாக கிடைத்தது கணபதி உற்சவம். இசுலாமியர்களின் மொகரம் விழாவில் அக்காலத்தில் இந்து மதப் பாடகர்களும் கலைஞர்களும் கலந்து கொள்வது இயல்பாக நடந்துவந்தது.

இந்துத்துவ இந்தியாவைக் கனவு கண்ட திலக்கிற்கு மொகரம் பண்டிகைக்கு எதிராக இந்துக்களின் பண்டிகையாக கணபதி உற்சவத்தை மொகரம் போலவே வீதியில் ஊர்வலமாக எடுத்துச் செல்வதும் ஆட்டமும் பாட்டமும் அலங்காரமுமாக கொண்டாடுவதும் தேவைப்பட்டது. இவ்வாறாக சமூகநீதியை முன்வைத்த புலேவின் இயக்கத்திற்கு மாற்றாகவும் இசுலாமியர்களின் மொகரத்திற்கு எதிராகவும் லோக்மான்ய திலகரால் கணபதி உற்சவம் இந்துத்துவ ஆயுதமாக கையாளப்பட்டது எனலாம்.

1910ல் அன்றைய பம்பாய் நகரத்தின் போலீஸ் கமிஷனராக இருந்த எஸ்.எம்.எட்வர்ட் 'திலகர் முஸ்லீம்களுக்கு எதிராக ஆரம்பித்த கணபதி ஊர்வலம் காலப்போக்கில் அன்றைய ஆட்சியாளருக்கு எதிராக மாற்றம் பெற்றது என்கிறார்.

1894ல் கொண்டாடப்பட்ட கணபதி விழாக்களில் ஊர்வலங்களில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துடைய பாடல்கள் பாடப்பட்டதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக புபேந்திர யாதவ் எழுதிய கீழ்கண்ட பாடலை 1894ல் கணபதி ஊர்வலத்தில் பாடினார்கள்.

பாடல் வரிகள்:

ஏன் விலக்கி வைத்தாய்
இந்து மதத்தை?
மறந்தாயோ கண்பதியை, சிவாவை, மாருதியை?
என்ன பலன் உன் வழிபாட்டில்?
என்ன வரம் கொடுத்தார் அந்த அல்லா உனக்கு?
ஏன் மாறினாய் முஸ்லீமாய்?
அந்நியன் மதத்துடன் ஏனிந்த ஸ்நேகிதம்?
உன் மதத்தை மறக்காதே
மனிதா நீ சரிந்துவிழாதே
கோமாதா நம் தெய்வம்
அவளை என்றும் மறக்காதே

திலகருக்கு அரசியல் அதிகாரத்தை ஆங்கிலேயரிமிருந்து எப்பாடு பட்டாகிலும் வாங்கி இந்து தலைமை சமூகமாக அவர் நினைத்த பார்ப்பனர்களின் கையில் கொடுக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. அவர் விரும்பியது அரசியல் விடுதலையைத் தானே ஒழிய சமூக நீதியை அல்ல.

கணபதி உற்சவத்திற்கு ஈடாக அவர் கொண்டாடியது சிவாஜி ஜெயந்தியை. சிவாஜியை இந்து மதத்தை நிறுவ வந்த தலைவராக இந்திய சமூகத்திற்கு அவர் அடையாளம் காட்டுகிறார். அவரால் இந்து மதத்தின் காவலாராக போற்றப்பட்ட மராட்டிய மன்னன் சிவாஜி முஸ்லீமாக மாறிய இந்துவை மீண்டும் இந்து மதத்தில் சேர்த்துக் கொள்ள துணிந்தார். ஆனால் நடைமுறை வாழ்வில் திலகரால் சிவாஜி செய்த இச்செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு முறை கஜன்ராவ் வைத்யா அவர்கள் இந்து மதத்திலிருந்து கிறித்துவ மதத்திற்கு மதம் மாறிய பார்ப்பனர் ஒருவர் மீண்டும் இந்து மதத்திற்கு வந்தபின் அவருடன் சேர்ந்தமர்ந்து (சமபோஜனம்) உணவு உண்ண திலகரை அழைக்கிறார். திலகர் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

ganesh_festival_mumbai_640

1918, மார்ச் 19ல் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் திலகர் பேசியதும் செயல்பட்டதும் அவருடைய இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியது. அவர் தன் மேடைப் பேச்சில் "பார்ப்பனர்களுக்கு ஒத்த உரிமை மற்ற மூவர்ணதாருக்கும் உண்டு. கடவுள் தீண்டாமையைக் காட்டினார் என்றால் நான் அவரைக் கடவுளாகவே ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என்று முழக்கமிட்டார். அவருடைய மேடைப்பேச்சில் மயங்கிய 250 பேர் "இனி வாழ்க்கையில் எப்போதும் எவ்விடத்தும் எச்சூழ்நிலையிலும் தீண்டாமையைக் கடைப்பிடிக்கப் போவதில்லை" என்று எழுதி உறுதிமொழியாக கை எழுத்திட்டு திலகரையும் கையெழுத்திட கேட்டுக் கொண்டார்கள். திலகர் அதில் கையெழுத்திட மறுத்துவிட்டார்! அப்படியானால் அவர் ஏன் அப்படி பேசினார் என்றால் அம்மாநாட்டில் கலந்து கொண்டு அதன் பின் அவர் இங்கிலாந்து செல்ல இருப்பதால் தான் இங்கிலாந்தில் அவர் தன்னை "லோக்மான்ய திலகராக" ---- உலக நாயகனாக அடையாளம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தால் மட்டுமே.

1918ல் கலப்பு திருமணத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர். பார்ப்பனன் சூத்திரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவனுடைய பார்ப்பனத்தன்மையை இழந்தவன் ஆவான் என்று எழுதினார். பார்ப்பனன் மட்டுமே கல்வி கற்கும் தகுதி உள்ளவன் என்றும் பார்ப்பனர் அல்லாதோர் கல்வி கற்க கூடாது என்றும் வெளிப்படையாகவே பேசியும் எழுதியும் செயல்பட்டவர் தான் திலகர்.

ஒருமுறை "மெக்ஸ்முல்லர் போன்ற இந்து அல்லாத விதேசி வேதம் படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நீங்கள் பார்ப்பனர் அல்லாத இந்தியனுக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவித்தீர்கள்? " என்று கேட்டார் ராவேபகதூர் போலே. அக்கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்த திலகர் "அக்கட்டுரை கேசரி இதழில் நான் இல்லாத போது எழுதப்பட்டது" என்று சொல்லி சமாளித்தார். ஆனால் திலகரின் சுயசரிதத்தை எழுதிய கெல்கர், திலகர் சொன்ன இதை மறுக்கும் விதத்தில் அக்கட்டுரையைத் திலகர் எழுதிய கட்டுரைகளில் ஒன்றாகவே பதிவு செய்திருக்கிறார்.

kareena_kapoor_640

திலகர் புனே மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சர்வஜன கணபதி மண்டல்களை உருவாக்கி கணபதி உற்சவத்தை ஒவ்வொரு பகுதியனரும் கொண்டாட ஏற்பாடுகள் செய்தார். இக்கணபதி மண்டல்கள் சமூக நீதியை முன் எடுத்துச் செல்பவை அல்ல. 1924, செப்டம்பர் 5ல் தாதரில் நடந்த கணபதி மண்டலுக்கு காந்தி வருகை தந்தார். சற்றொப்ப 500 பேர் கூடியிருந்த அக்கூட்டத்தில் காந்தி "நீங்கள் அனைவரும் கதர் இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அத்துடன் இந்து முஸ்லீம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு என்ற நோக்கங்களையும் முன்வைத்து தன் கருத்துக்கு ஆதரவு காட்டுவதன் அடையாளமாக கூட்டத்தினர் கை உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தபோது அக்கணபதி மண்டலில் காந்தியின் நோக்கத்திற்கு ஆதரவாக கை உயர்த்தியவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சமூகநீதியைப் புறந்தள்ளிய இக்கணபதி உற்சவத்தை மும்பையில் ஒடுக்கப்பட்ட மக்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பே கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள் என்கிற சம்பவத்தில் இருக்கும் முரண் நம்மை அதிகம் யோசிக்க வைக்கிறது. தென்னிந்திய ஆதிதிராவிடர் மகாஜன சங்கம், தாராவியில் இந்த ஆண்டு 2012ல் கணபதி உற்சவம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது.

அக்காலத்தில் தமிழர்கள் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிந்து சமூக தளத்தில் செயல்பட்டார்கள். ஒரு சாரார் தந்தை பெரியாரின் பகுத்தறிவு பாதையில் பயணிக்க, இன்னொரு சாரார் தேசிய நீராடையில், காந்தியின் விடுதலை இயக்கத்தில், இந்துத்துவ மார்க்கத்தில் பயணித்தனர். கடவுள் இல்லை என்ற பெரியாரின் கருத்தை எந்த வகையிலும் உள்வாங்கிக் கொள்ள பயந்தவர்கள், மறுத்தவர்களுக்கு தாராவியைச் சுற்றி தாதர் பகுதி வரை திலகர் ஆரம்பித்த கணபதி மண்டல்கள் ஓர் உத்வேகத்தைக் கொடுத்தன. இந்துமதத்தில் பஞ்சமர்களாய் ஒதுக்கப்பட்ட தலித்துகளுக்கு கணபதி விழா எடுக்க கொடுக்கப்பட்ட உரிமை அளவிட முடியாத மகிழ்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும். இசுலாமிய தமிழர்களும் இதற்கு உதவியாக இருந்தார்கள் என்கிற செய்தியை அறிய வருகிற போது திலகரின் நோக்கங்கள் எதையும் இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது. அதிலும் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பிழைப்புக்காக பம்பாய் வந்த ஒடுக்கப்பட்ட மக்கள் இந்த விழாவை அவர்கள் கிராமத்தின் சிறுதெய்வ வழிபாட்டு கொடைத்திருவிழா போலவே கொண்டாடினார்கள். ஊரிலிருந்து கரகாட்டம், கும்பாட்டாம் , கொட்டு, மேளம், நாதஸ்வரம் என்று தாங்கள் இழந்து போன கிராமத்து வழிபாட்டை கணபதி விழாவாக்கி நிறைவு கண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கணபதி ஊர்வலத்தில் அலங்காரத் தேரில் கணபதிக்கு அருகில் உட்கார்ந்து தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி பூசாரியாக இவர்களில் ஒருவரே இருந்தது இன்று மாறிப்போய்விட்டது. இவர்கள் கை கட்டி பூணூல் அணிந்த அர்ச்சகரின் பூஜைத் தட்டில் காந்திப் படம் போட்ட பெரிய நோட்டுகளை தட்சணையாக கொடுக்க கொடுக்க, பார்ப்பனர் மந்திரம் சொல்லி நன்றாகவே அவர்களைக் 'கவனித்துக்' கொள்கிறார். விழா மேடையில், பந்தலில், பதாகையில் இவர்களுடன் சேர்ந்து இவர்கள் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கும் பாபாசாகிப் அம்பேத்கரும் இருக்கிறார்.

அம்பேத்கரின் கருத்துகளை இவர்கள் எம்மாதிரி உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற வருத்தம் ஒருபக்கம், பதாகையில் அம்பேத்கர் இருப்பது எவ்வகையிலும் அவருக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்காது என்பதையாவது இவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே என்ற ஆதங்கம் ஏற்படுகிறது.

ganesh_festival_mumbai_3802012, இந்த ஆண்டு கடைசி நாளான ஆனந்த சதுர்த்தியின் போது மட்டும் மும்பை கிர்காவ், சிவாஜி பார்க், வெர்சோவா, ஜூகு உள்ளிட்ட முக்கியமான கடற்கரை பகுதிகளில் 37 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அதில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். இதுதவிர முக்கிய சந்திப்புகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன், கலவர தடுப்புப் படை, மாநில ரிசர்வ் படை, எல்லை பாதுகாப்புப் படை என்று பக்தர்களுக்கும் கணபதிக்கும் பாதுகாப்பு கொடுக்க கணக்கிலடங்கா துப்பாக்கி ஏந்திய வீரர்கள் ....

21500 போலீசார், 1500 போலீஸ் அதிகாரிகள், 2500 போக்குவரத்து போலீசார் என்று ஒரு பட்டியல் நீள்கிறது. ஒரு நாள் இரண்டு நாட்கள் மட்டுமல்ல, சற்றொப்ப 10 நாட்கள், முதல் நாள் கணபதி சிலைகள் கொண்டுவரப்படும் விநாயகர் சதுர்த்தி, அதற்கு அடுத்த நாளிலிருந்து கணபதியை கரைக்க எடுத்துச் செல்லும் ஊர்வலங்கள், 3வதுநாள், 5 வது நாள், 7வது நாள், 10வது, 11 வது நாட்கள் என்று அமர்களப்படுத்தப்படுகிறது. 37 சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. 10 சாலைகளில் சரக்கு வண்டிகள் செல்லத் தடை. 22 இடங்களில் செயற்கை குளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 72 இடங்களில் கடற்கரை பகுதிகளில் கணபதி சிலைகளைக் கரைக்க கிரேன்களின் உதவியுடன் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. சிலைகளை கனரக வாகனங்களில் எடுத்துச் செல்லும் போது அந்த வண்டிகள் கடற்கரை மணலில் புதைந்துவிடாமலிருக்க முக்கியமான கடற்கரை பகுதிகளில் இரும்புத் தகடுகள் பதிக்கப்பட்டிருந்தன.

ஒன்றரை நாளில் கரைக்கப்பட்ட சிலைகள் 64,895. 3வது நாளில் 77,516. 7வது நாளில் 15000.  கடைசி நாளில் ராட்சத கிரேன்களின் உதவியுடன் கரைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பிரமாண்டமான கணபதி சிலைகள்... விளைவு ....? கடைசி நாளான ஆனந்த சதுர்த்தியின் போது மட்டும் கடற்கரையில் குவிந்த கழிவுகளின் அளவு 500 மெட்ரிக்டன். இது கடந்த ஆண்டு அகற்றப்பட்ட 430 மெட்ரிக்டன் கழிவுகளை விட அதிகம் என்கிறார் மும்பை மாநகராட்சி குப்பை, கழிவுகள் அகற்றும் மேலாண்மை பிரிவின் தலைமை பொறியாளர் பி.பாட்டீல்.

இக்கணபதி விழாக்களில் கரைக்கப்படும் ஆயிரக்கணக்கான கணபதி -சிலைகளால் நீர்நிலைகள் மாசுபடுவதை சுற்றுப்புற ஆர்வலர்கள் தொடர்ந்து இடைவிடாது செய்து வரும் பிரச்சாரங்கள் காரணமாக அண்மைக்காலங்களில் ஒரு சிலர் கணபதி சிலைகளை நீரில் கரைக்காமல் அடுத்த ஆண்டு வழிபாட்டுக்கென்று எடுத்துச் செல்கிறார்கள். நீரில் கரைக்க வேண்டும் என்ற ஐதீகத்திற்காக கணபதி வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட மலர்களையும் கனிகளையும் கரைத்துவிட்டு செல்கிறார்கள். அவர்கள் கணபதி அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்!

இந்து மதத்தின் இக்குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும்போது தற்போது சிலர் "இக்கருத்தை எல்லாம் இசுலாமியர்களிடமோ கிறித்தவர்களிடமோ சொல்லிப்பார், நீ உயிருடன் வெளியில் நடமாட முடியாது" என்று வெளிப்படையாகவே பின்னூட்டம் எழுதி என்னைக் கொஞ்சம் பயமுறுத்தி விட்டதாக நினைக்கிறார்கள். எந்த மதமாக இருந்தாலும் அவர்களின் வழிபாட்டு- முறைகள் தொடர்ந்து அடுத்தவர்களுக்கு இடையூறாகவோ, இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பதாகவோ இருக்க கூடாது என்று சொல்ல இந்தியாவில் எல்லோருக்கும் அதிகாரமும் உரிமையும் இருக்கிறது. இக்கருத்தை- வெளியில் சொல்ல பக்திமான்களான உங்களுக்கு அச்சம் இருப்பதாலும் இதை ஒத்துக்கொள்ள காவல்துறைக்கும் அரசுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் திராணி இல்லாததாலும் இக்கருத்தை வெளியிட அச்சு ஊடகங்கள் முதுகெலும்பின்றி இருப்பதாலும் இதைப் பற்றி எழுதவோ பேசவோ தலையில் ஒளிவட்டம் சுற்றும் அறிவுஜீவிகளும் எழுத்தாளப் பெருந்தகைகளும் முன் வராததாலும் மேற்சொன்ன எவ்விதமான பின்புலங்களில்லாத நான், என் தமிழ்ச்சமூகத்தின் வாசலில் ஒரு புள்ளி வைத்திருக்கிறேன். இந்தப் புள்ளி கோலமாகுமோ? காலம் மிதிபட்டு காணாமல் போகுமோ?

- புதிய மாதவி, மும்பை

Comments

23 comments

23
t.sengadir
அருமை. 4632
Suba. Veerapandian
மிகத் தெளிவாகவும், சமுக நீதிக் கண்ணோட்டத்துடனும் எழுதப்பட்டுள்ள இக் கட்டுரை மிகுந்த பாராட்டிரற்குரியது.
gopal
நல்ல கருத்து.
viyasan
//என் தமிழ்ச்சமூகத்தின் வாசலில் ஒரு புள்ளி வைத்திருக்கிறேன். இந்தப் புள்ளி கோலமாகுமோ? காலம் மிதிபட்டு காணாமல் போகுமோ?//

ச‌கோத‌ரி, பிள்ளையார் பிடிக்க‌ குர‌ங்காகிப்போன‌ க‌தை போல‌ என்று த‌மிழில் ப‌ழ‌மொழி உண்டு ஆனால் உங்க‌ளின் க‌ட்டுரை குர‌ங்கைப் பிடிச்சு வைச்சுக்கொண்டு பிள்ளையார் என்று வாதாடுவ‌து போன்றது, அத‌ற்கிடையில் புள்ளி வைத்திருக்கிறேன், அது கோல‌மாகுமா அல்ல‌து காலமாகுமா என்று பெருமூச்சு விடும் உங்க‌ளைப் பார்த்து அழுவ‌தா சிரிப்ப‌தா என்று என‌க்குத் தெரிய‌வில்லை.

இப்ப‌டியான‌ க‌ட்டுரைக‌ளைப் பார்க்கும் போது, இந்தியா முழுவ‌தும் மிக‌ப் பெரும்பான்மையினராக‌ இருந்தும் கூட‌ பொறுமையுட‌னும், ச‌கிப்புத்த‌ன்மையுட‌னும் உங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ளின் க‌ருத்துச் சுத‌ந்திர‌த்தையும் ம‌தித்து, த‌மது ம‌த‌வுண‌ர்வுக‌ள் தாக்க‌ப்ப‌டும் போது கூட‌ அமைதிகாக்கும் இந்திய‌ இந்துக்க‌ள் உண்மையில் பாராட்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ளே. முஸ்லீம்க‌ளால் கொண்டாட‌ப்ப‌டும் இர‌த்த‌க்குரூர‌ விழாவாகிய‌ முகார‌த்தைக் கூட‌ இடையூறாக‌ இருப்பதாக‌க் கூறி இந்தியாவின் இந்துக்க‌ள் எவ‌ராவ‌து இப்ப‌டியொரு க‌ட்டுரையை எழுதியிருப்பாரா என்ப‌து ச‌ந்தேக‌மே.

மகாராட்டிர‌த்தின் பெரும்பான்மையான‌ இந்துக்க‌ள் ஆண்டில் ப‌த்துநாட்க‌ள் தாம் வண‌ங்கும் இந்துக்க‌ட‌வுளுக்கு விழா எடுப்ப‌து உங்க‌ளுக்கு இடையூறாகவும், போக்குவ‌ர‌த்துக்கு நெருக்க‌டியாக‌ இருப்ப‌தாக‌வும் முறையிடுவ‌தைப் பார்க்கும் போது, மேலை நாட்க‌ளில் கிறிஸ்ம‌சுக்காக‌ குறைந்த‌து 60 நாட்க‌ளுக்கு முன்பாக‌வே ந‌க‌ர‌ங்க‌ள் எல்லாம் அல‌ங்க‌ரிக்க‌ப்ப‌ட்டு, வீதிக‌ளை அடைத்து, வீதியியோர‌த்திலுள்ள‌ ப‌ற்றைக‌ளைக் கூட‌ மின்விள‌க்கால் அல‌ங்க‌ரித்து, முச்ச‌ந்தியில் முப்ப‌து அடியை விட‌ உய‌ர‌மான‌ ம‌ர‌த்தை வைத்து அதற்கும் இல்லாத‌ சோட‌னைக‌ளை எல்லாம் செய்து கிறிஸ்ம‌ஸ் விழாவைக் கொண்டாடும் பெரும்பான்மையான‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளின், பார‌ம்ப‌ரிய‌ ம‌த‌விழா எங்க‌ளின் போக்குவ‌ர‌த்துக்கு இடையூறாக‌ இருப்ப‌தாக‌, எங்க‌ளின் இய‌ல்பு வாழ்க்கையைப் பாதிப்ப‌தாக‌ கிறிஸ்த‌வ‌ர‌ல்லாத‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளும், இந்திய‌ர்க‌ளும் முறையிட்டால் எப்படியிருக்கும் என்ப‌தை எண்ணிப்பார்த்தேன், என்னைய‌றியாம‌லே சிரிப்பு வ‌ந்து விட்ட‌து. அதைப் போன்ற‌ முட்டாள்த‌ன‌ம் இருக்க‌வே முடியாது. யார் இப்ப‌டியான‌ ஆட‌ம்ப‌ர‌மான‌ கிறிஸ்ம‌ஸ் விழாக்க‌ளை தொட‌ங்கினார் அல்ல‌து எத‌ற்காக‌த் தொட‌ங்கினார் என்ப‌து முக்கிய‌ம‌ல்ல. இன்று கிறிஸ்ம‌ஸ் விழா மேலைநாடுக‌ளில் பெரும்பான்மையின‌ரான‌ கிறித்த‌வ‌ர்க‌ளால் பெருமையுடன் கொண்டாட‌ப்ப‌டும் விழா, அதற்கு அவ‌ர்க‌ளுக்கு உரிமையுண்டு, அது அவ‌ர்க‌ளுடைய கிறித்த‌வ‌ பார‌ம்ப‌ரிய‌த்தைக் கொண்ட‌ நாடு. அது போன்ற‌து தான் ப‌ம்பாயில் ம‌ட்டும‌ல்ல‌, இந்தியா முழுவ‌தும் ந‌டைபெறும் க‌ண‌ப‌தி உற்ச‌வ‌மும்.

தில‌க‌ர் க‌ண‌ப‌தி உற்ச‌வ‌த்தை எதற்காக‌த் தொட‌ங்கினார் அல்ல‌து எப்ப‌டித் தொட‌ங்கினார், என்ன‌ நோக்க‌த்தில் தொட‌ங்கினார் என்ப‌து முக்கிய‌ம‌ல்ல‌, சுத‌ந்திர‌ இந்தியாவில் க‌ண‌ப‌தி உற்ச‌வ‌த்தைக் கொண்டாடுப‌வ‌ர்க‌ளை, யாரும் வ‌ற்புறுத்தியோ அல்ல‌து ப‌ய‌முறுத்தியோ கொண்டாடுமாறு கேட்க‌வில்லை, அவ‌ர்க‌ள் தாமாக‌த் தான் 10 நாட்க‌ளும் கொண்டாடுகிறார்க‌ள், இந்திய‌ர்க‌ள் என்ற‌ முறையில் அது அவ‌ர்க‌ளுக்கு இந்திய‌ அர‌சிய‌ல‌மைப்பில் உறுதி செய்ய‌ப்ப‌ட்ட‌ ம‌த‌ச்சுத‌ந்திரமாகும்.

இன்றைக்கு இந்துக்க‌ளின் ப‌த்து நாள் ப‌ண்டிகை ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் இய‌ல்புவாழ்க்கையைப் பாதிப்ப‌தாக‌ முறையிட்டால் நாளைக்கு ஒவ்வொருநாளும் அதிகாலையில் தொட‌ங்கி நாள் முழுவ‌தும் பள்ளிவாச‌லில் இருந்து ஒலிபெருக்கியால் வ‌ரும் ச‌த்த‌த்தைத் தாங்க‌ முடிய‌வில்லை என‌ முஸ்லீம்க‌ள் அல்லாதார் முறையிடுவ‌ர். இந்த‌ ப‌த்து நாள் க‌ண‌ப‌தி உற்ச‌வ‌த்தைத் தாங்க‌ முடியாம‌ல் முறைப்பாடு செய்ப‌வ‌ர்க‌ள் எப்ப‌டி த‌ம‌து ப‌ண்டிகைக‌ளை, அவ‌ர்க‌ள‌து கூச்ச‌லிடும் சுவிசேச‌க் கூட்ட‌ங்க‌ளை, கிறிஸ்ம‌ஸ் நெரிச‌ல்க‌ளை, ஜ‌னாப். ஜெய்னுலாப்தீன் போன்ற‌வ‌ர்க‌ளின் பிர‌ச்சார‌க் கூட்ட‌ங்க‌ளை, மதம்மாற்றிய‌ இந்துக்க‌ளை மேடை போட்டுச் சவால் விடும் ஜ‌மாஅத்து மாநாடுகளைப் பெரும்பான்மை இந்துக்க‌ள் தாங்கிக் கொள்ள‌ வேண்டுமென‌ எதிர்பார்க்க‌ முடியும். இந்துக்க‌ளல்லாதாரின் இந்துக்க‌ளுக்கெதிரான இப்ப‌டியான‌ நிலைப்பாடு தான் வ‌ன்முறைய‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌ இந்துக்க‌ளை திருப்பித் தாக்கும‌ள‌வுக்கு தூண்டிய‌து என்கிறார் இந்தியாவின் த‌லைசிற‌ந்த‌ தீர்க்க‌த‌ரிசி அண்ண‌ல் அம்பேத்கார் PAKISTAN OR THE PARTITION OF INDIA (By Dr. B.R. Ambedkar) என்ற‌ நூலில்.

"The third thing that is noticeable is the adoption by the Muslims of the gangster's method in politics. The riots are a sufficient indication that gangsterism has become a settled part of their strategy in politics. They seem to be consciously and deliberately imitating the Sudeten Germans in the means employed by them against the Czechs. So long as the MUSLIMS WERE THE AGGRESSORS, THE HINDUS WERE PASSIVE, and in the conflict they suffered more than the Muslims did. But this is no longer true. The Hindus have learned to retaliate and no longer feel any compunction in knifing a Musalman. This spirit of retaliation bids fair to produce the ugly spectacle of GANGSTERISM AGAINST GANGSTERISM."
நீரோடை
. "எந்த மதமாக இருந்தாலும் அவர்களின் வழிபாட்டு- முறைகள் தொடர்ந்து அடுத்தவர்களுக்கு இடையூறாகவோ, இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பதாகவோ இருக்க கூடாது என்று சொல்ல இந்தியாவில் எல்லோருக்கும் அதிகாரமும் உரிமையும் இருக்கிறது." வழிபாட்டு முறைகள் என்றாலே அதீத ஒலி வைத்து காதைக் கிழிப்பது, நடுவீதியில் வேட்டைப் போட்டு வண்டியில் போவோர் வருவோரை நடுங்க வைப்பது, பெண்களை கேலி செய்வது என்பதுதான் நடைமுறை. ஆதாரங்களோடு , இந்துத்துவாவை, திலகரை அம்பலப்படுத்தும் கட்டுரை, வாழ்த்துக்கள் கவிஞர் புதிய மாதவிக்கு...
pugazhendhi
Thilak has reportedly objected destruction of rats by the Plaque squad of the British Govt saying that rat is the Vahanam of Ganesh.Later two such officials were killed.
Rajendran
இக்கட்டுரைக்கு தொடர்பான படைப்புகளில் சிந்தனையாளன் ஆகஸ்ட் 2012 இல் வெளி வந்த பிளேக் கொள்ளை நோய் விட்டுப் போய் இருக்கிறதே?
இராமியா
//"இக்கருத்தை எல்லாம் இசுலாமியர்களிடமோ கிறித்தவர்களிடமோ சொல்லிப்பார், நீ உயிருடன் வெளியில் நடமாட முடியாது"// இது பயமுறுத்தல் அல்ல; திசை திருப்பல். இப்படிக் கூறுபவர்களின் உள் நோக்கம் ஒடுக்கப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த இந்துக்களை மற்ற மதத்தினருடன் மோத விடுவதன் மூலம் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வை மறக்கடிப்பதும் மழுங்கடிப்பதும் தான். பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்த மறு விநாடியே (மக்கள் தொகையில் குறைவாகவும் அதிகார வட்டத்தில் பிரதிநிதித்துவம் இல்லாதவர்களுமான) இஸ்லாமியர்களையும் கிருஸ்தவர்களையும் கடுமையாக எதிர்க்கத் தயார்; முதலில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட ஒத்துழைக்கிறீர்களா என்று கேட்டுப் பாருங்கள். மாயமாய் மறைந்து விடுவார்கள்.
Robin
திலகரின் மறுபக்கத்தை அறிந்துகொண்டேன். நன்றி!
இரா. உமா
//தில‌க‌ர் க‌ண‌ப‌தி உற்ச‌வ‌த்தை எதற்காக‌த் தொட‌ங்கினார் அல்ல‌து எப்ப‌டித் தொட‌ங்கினார், என்ன‌ நோக்க‌த்தில் தொட‌ங்கினார் என்ப‌து முக்கிய‌ம‌ல்ல‌, சுத‌ந்திர‌ இந்தியாவில் க‌ண‌ப‌தி உற்ச‌வ‌த்தைக் கொண்டாடுப‌வ‌ர்க‌ளை, யாரும் வ‌ற்புறுத்தியோ அல்ல‌து ப‌ய‌முறுத்தியோ கொண்டாடுமாறு கேட்க‌வில்லை, அவ‌ர்க‌ள் தாமாக‌த் தான் 10 நாட்க‌ளும் கொண்டாடுகிறார்க‌ள்,// பார்ப்பனீயம் எப்போதும் நேருக்கு நேர் நின்று மோதாது. உறவாடிக் கெடுப்பது அல்லது உண்டு செரிப்பது இதுதான் அதனுடைய குணம். நம்முடைய குரலில் தன்னுடைய சிந்தனையை பேச வைத்துவிடும் பார்ப்பனியத்தின் சூழ்ச்சிக்கு பலியான பார்பனர் அல்லாதோரே அதன் பலம். இதற்க்கு ஒரு உதாரணம் நீங்கள்.
கவிஞர் புதிய மாதவி கணபதியின் பிரம்மாண்டத்தின் பின்னுள்ள பார்பனிய இந்துத்துவ சூழ்ச்சியை அருமையாக வெளிப்படுத்தீருக்கிறார்.
சி றீ தர் தமிழன்
அக்கா வணக்கம், கட்டுரை மிகவும் அருமை.

அம்பேத்கரின் கருத்துகளை இவர்கள் (கணபதி விழாவை கொண்டபவர்கள்) எம்மாதிரி உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற வருத்தம் ஒருபக்கம், பதாகையில் அம்பேத்கர் இருப்பது எவ்வகையிலும் அவருக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்காது என்பதையாவது இவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே என்ற ஆதங்கம் எங்களுக்கு ஏற்படுகிறது. அதை நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகிறோம். இந்த ஆண்டு அது சற்று குறைக்கப்பட்டு இருக்கிறது.
srithar tamizhan
சமூக அக்கறையுடன் எழுதபட்டுள்ள கட்டுரை...

18ஆம் நூற்றாண்டில் மராட்டிய மண்ணை ஆண்ட பேஷ்வாக்களின் ஆட்சியில் அவர்களின் அரண்மனையில் கணபதி ரங் மஹாலில் கணபதி உற்சவம் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் அலங்காரமும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அரசர் கலைஞர்களுக்கு சன்மானம் கொடுத்து மகிழ்வித்தார். ஓர் அரசவை நிகழ்வாக மத வழிபாட்டின் அடையாளமாக இருந்த கணபதி உற்சவம் 1818ல் ஆங்கிலேயர் பேஷ்வாக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்ததுடன் முடிந்து போனது.//
இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பேச்வாக்களின் முடிவுக்கு கொண்டு வந்தவர்கள் ஆங்கிலேயர் மட்டும் அல்ல ..1.1.1818. அன்று 500 பேர் மட்டுமே கொண்ட தலித் போர் வீரர்கள்(மகர் ரெஜிமென்ட் ) எண்ணிக்கையில் பலம் கொண்டு 30,000 போர் வீர்கள் அடங்கிய பேச்வா ராணுவத்தினரை முறியடித்தனர். பேச்வா ஆட்சியாளர்கள் மிக கொடூரமான ஆட்சியை நடத்தி வந்தனர் . இவர்களை எதிர்த்து மகர் ரெஜிமென்ட் வீர்கள் ஒரு நாளில் பேச்வா ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர் . இந்த போர் மனுஸ்மிருதியின் மேலாதிக்கத்திற்கு எதிரானது . இப்போர் கோறேகோனில் உள்ள பீமா ஆற்றங்கரையின் ஓரத்தில் நடைபெற்றது. 1851 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இப்போரில் மடிந்த 22 மகர் வீரர்களின் நினைவாக எழுப்பிய தூண் இது . பாபா சாஹேப் அண்ணல் அம்பேத்கர் ஒவ்வொரு ஆண்டு கோறேகோனுக்கு சென்று இந்நினைவுத் தூணுக்கு வீரவணக்கம் செலுத்துவார்.. இந்த தகவலையும் குறிப்பிட்டு இருக்கலாம்....
ஷாலி
செந்தமிழ் சீமானின் ஆவணத்தால் சான்றிதழ் அளிக்கப்பட்ட “ சான்றோன்” திலகரின் தில்லுமுல்லு அம்பலப்ப்படும்போது, நாம் தமிழர் குடுமிகள் கொந்தளிப்பது இயல்புதான்.

புதிய மாதவி வைத்த புள்ளி எனும் கொள்ளியை தலையில் சொரிந்தால் சுடத்தான் செய்யும்.
viyasan
//நம்முடைய குரலில் தன்னுடைய சிந்தனையை பேச வைத்துவிடும் பார்ப்பனியத்தின் சூழ்ச்சிக்கு பலியான பார்பனர் அல்லாதோரே அதன் பலம். இதற்க்கு ஒரு உதாரணம் நீங்கள்.//

அர‌ண்ட‌வ‌ன் கண்ணுக்கு இருண்ட‌தெல்லாம் பேய் என்ப‌து போல் எங்கும் எதிலும் பார்ப்ப‌ன‌ர்க‌ளைப் பார்ப்பவ‌ர்க‌ளுக்கு தான் த‌ங்க‌ளின் க‌ருத்துக்கு உட‌ன்ப‌டாத‌வ‌ர்க‌ள் எல்லோரையும் பார்ப்ப‌னீயத்தின் சூழ்ச்சிக்குப் பலியானோராக‌ப் பார்க்கும் ப‌ரிதாப‌மான‌ நோய் ப‌ற்றியிருக்கிற‌து. த‌மிழ் த‌லித்துக்க‌ளும் கூட‌த் தான் பிள்ளையார் சிலையை ஊர்வ‌ல‌மாக‌க் கொண்டு போகிறார்க‌ள், அவ‌ர்க‌ள் எல்லோரும் கூட‌ பார்ப்பன‌ர் சொல்லியா செய்கிறார்க‌ள். த‌மிழ‌ர்க‌ளின் சிவ‌னிய‌/மாலிய‌ நெறிக‌ளிலிருந்து பார்ப்ப‌னீய‌மும், சாதிப்பாகுபாடுக‌ளும் நீக்க‌ப்ப‌ட‌வேண்டும், அதில் த‌மிழின‌த்தின் ஓற்றுமையிலும், ந‌ல‌ன்க‌ளிலும் அக்க‌றையுள்ள‌ எந்த‌ உண்மையான‌ த‌மிழ‌னுக்கும் மாற்றுக் க‌ருத்து இருக்க‌ முடியாது. பெரியாரும், திராவிடவாதிக‌ளும் த‌மிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ ம‌த‌வுண‌ர்வை ஒழிப்ப‌தில் வெற்றி க‌ண்டார்க‌ளா என்றால் இல்லையென்ப‌தே ச‌ரியான‌ ப‌திலாகும். மாறாக‌ திராவிட‌த் த‌லைவ‌ர்க‌ளே ம‌த‌ ந‌ம்பிக்கையிலும், கிர‌க‌ங்க‌ளின் நிலையின் ப‌டியும் வ‌ண்ண‌த்துப்பூச்சி போல் த‌ம‌து ச‌ட்டையின் நிற‌ங்க‌ளை மாற்றிக் கொண்டிருக்கிறார்க‌ள். த‌மிழ்நாட்டில் எந்த‌ த‌லித் குடியிருப்புக்கு போனாலும் அங்கு மூலைக்கொரு அம்ம‌ன் கோயிலும், முருக‌ன் கோயிலும் க‌ம்பீர‌மாக‌ எங்க‌ளை வ‌ர‌வேற்கின்ற‌ன‌. இதிலிருந்து என்ன‌ தெரிகிற‌து, த‌மிழ‌ர்க‌ளிட‌மிருந்து அவ‌ர்க‌ள‌து பார‌ம்ப‌ரிய‌ ம‌த‌ந‌ம்பிக்கையை அகற்ற‌ முடியாது, ஆனானப்ப‌ட்ட‌ அம்பேத்காராலேயே த‌மிழ்த் த‌லித்துக்க‌ள‌னைவ‌ரையும் புத்த‌ரை நோக்கி ஓட‌ச்செய்ய‌ முடியவில்லையென்றால், இக்கால‌ திராவிட‌ மேடைப்பேச்சாள‌ர்க‌ளால் முடியுமா? அத‌னால் த‌மிழ‌ர்க‌ளின் ஓற்றுமையை வேண்டி நிற்கும் த‌மிழ‌ர்க‌ளாகிய‌ நாம், எம‌து முன்னோர்க‌ள் க‌ட்டிக் காத்த‌ நெறியை விட்டு ஓடாமல் அதை ந‌வீன‌ப்ப‌டுத்த‌ வேண்டும், பார்ப்பன‌ ஆதிக்க‌த்தையும்,சாதீய‌த்தையும் அதிலிருந்து ஒழிக்க‌ப் பாடுப‌ட‌ வேண்டுமே த‌விர‌, எம‌து முன்னோர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ ம‌த‌வுண‌ர்வு த‌மிழ‌ர்க‌ளிட‌ம் எந்த‌ள‌வுக்குப் பிரிக்க‌முடியாத‌ள‌வுக்கு இணைந்துள்ள‌தென்ப‌தை உண‌ராம‌ல், சும்மா பார்ப்ப‌ன‌ர்க‌ளைக் குற்றம் கூறிக் கொண்டு, எம‌து முன்னோர்க‌ள் க‌ட்டிய‌ கோயில்க‌ளையே உதாசீன‌ம் செய்து அவ‌ர்க‌ளின் ஆதிக்க‌த்தில் விட்டு, வெளியில் நின்று கொண்டு, பார்ப்ப‌ன‌ர்க‌ளின் சூழ்ச்சி, பார்ப்ப‌ன‌ர்க‌ளின் சூழ்ச்சி என்று வெறும் கூச்ச‌ல் போடுவ‌தால் எந்த‌ப் பிர‌யோசன‌மும் இல்லை. முத‌லில் த‌மிழ்நாட்டுக் கோயில்க‌ள் அனைத்தும் த‌மிழாக்க‌ப் ப‌ட‌வேண்டும், பார்ப்பன‌ர்க‌ளின் ஆதிக்க‌ம் த‌மிழ‌ர்க‌ளின் கோயில்க‌ளிலிருந்து அக‌ற்ற‌ப்ப‌ட‌ வேண்டும். சாதிப்பாகுபாடு எங்கு முத‌லில் ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தோ அங்கிருந்து தான் அதை அக‌ற்றுவ‌தும் தொட‌ங்க‌ வேண்டும்.

ச‌கோத‌ரி மாத‌வியின் க‌ட்டுரையில் பெரும்பான்மை இந்துக்க‌ளால் ஆண்டில் ஒருமுறை 10 நாட்க‌ள் ம‌ட்டும் ந‌ட‌த்தப்ப‌டும் பிள்ளையார் விழாவினால் போக்குவ‌ர‌த்துக்கும், இய‌ல்புவாழ்க்கைக்கும் இடையூறு ஏற்ப‌டுகின்ற‌தாக‌ முறையிடுவ‌திலுள்ள‌ முர‌ண்பாடுக‌ளைத் தான் நான் சுட்டிக் காட்டினேன். உதார‌ண‌த்துக்கு ஒவ்வொரு வ‌ருட‌மும் கோடையில் பிரான்சின் த‌லைந‌க‌ரான‌ பாரிசில், அந்த‌ மாநக‌ர‌த்தின் மிக‌முக்கியமான‌, ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ பிரெஞ்சு ம‌க்க‌ளும், உல‌க‌ம் முழுவ‌திலுமிருந்து பாரிசுக்கு வ‌ருப‌வ‌ர்க‌ளும் குவியும் ந‌க‌ர‌ மைய‌த்தில் இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ள் பிள்ளையாரை தேரில் வைத்து இழுக்கிறார்க‌ள். ஆனால் பாரிசில் வாழும் ப‌ல்லின‌ம‌க்க‌ளும், கிறித்தவ‌ர்க‌ளாகிய‌ பிரெஞ்சுக்கார‌ரும் கூட‌, அதனால் அவ‌ர்க‌ள‌து இய‌ல்பு வாழ்க்கையும், போக்குவ‌ர‌த்தும் பாதிக்க‌ப்ப‌டுவதாக முறையிடுவ‌தில்லை, மாறாக‌ அவ‌ர்கள் அதில் தாங்க‌ளும் இணைந்து கொள்கிறார்க‌ள். இதே நிலை தான் புலம்பெயர்ந்த‌ நாடுக‌ள் அனைத்திலும். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் எம‌து த‌மிழ் அடையாள‌த்தைக் க‌லாச்சார‌த்தை, எம‌து முன்னோர்க‌ள் க‌டைப்பிடித்த‌ ச‌ம‌ய‌நெறிகளை நாங்க‌ள் எங்கு போனாலும் வெளிப்ப‌டுத்த‌ வெட்க‌ப்ப‌டுவ‌துமில்லை, த‌ய‌ங்குவ‌தில்லை. அதனால் தான் க‌ன‌டாவிலும் ஐரோப்பாவிலும் எங்கு போனாலும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளால் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ கோயில்க‌ள் உண்டு.அத‌ற்கும் பார்ப்பனீய‌த்துக்கும் ப‌ங்கிருப்ப‌தாக‌ என‌க்குத் தெரிய‌வில்லை. அப்படியிருக்க‌ இந்தியாவில் பெரும்பான்மையான‌ இந்துக்க‌ள் வாழும் நாட்டில், இந்துக்க‌ள் ஆண்டில் 10 நாட்கள், தாம் வ‌ண‌ங்கும் க‌ட‌வுளின் சிலையை வைத்து விழா ந‌ட‌த்துவ‌தால் இய‌ல்பு வாழ்க்கை பாதிக்க‌ப்ப‌டுவ‌தாக‌ ஒருவ‌ர் எழுதுகிறார் அதைப் பாராட்டி ம‌ற்ற‌வ‌ர்க‌ள் சுற்றி நின்று கைத‌ட்டிப் பாராட்டுகிறார்க‌ள் என்றால் எந்த‌ள‌வுக்கு பெரும்பான்மை இந்துக்க‌ள் மீது ம‌ற்ற‌வ‌ர்க‌ள் காழ்ப்புண‌ர்வு கொண்டுள்ள‌ன‌ர் என்ப‌து தெளிவாகிற‌து. இந்த நிலையில் இந்தியாவில் எப்ப‌டி ஒருமைப்பாடும் ம‌த‌ந‌ல்லிண‌க்க‌மும் ஏற்ப‌டமுடியும்.
மனோகரன்
அருமையான கட்டுரை. இதை போன்று தீபாவளி பண்டிகை பற்றியும் எழுதினால் நன்றாக இருக்கும்.
pugazhendhi
Mr Manoharan,Not only for Deepavali even about Ayudha Pooja,details are available in Viduthalai
puthiyamaadhavi
திரு வியாசன்
>சாதிப்பாகுபாடு எங்கு முத‌லில் ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தோ அங்கிருந்து தான் அதை அக‌ற்றுவ‌தும் தொட‌ங்க‌ வேண்டும்
என்கிறார்.>
அவர் கருத்துடன் எனக்கு மாறுபாடு இல்லை. இக்கட்டுரை அந்தச் சாதியை கணபதி உற்சவம் எப்படி இன்றுவரை தக்க வைத்துக்கோண்டிருக்கிறது என்பதை
அடையாளபடுத்த முனைகிறது. கடவுளை வழிபட மறுக்கப்பட்ட மக்கள் கணபதியை தொட்டு பூஜை
செய்யலாம் என்று கொடுக்கப்பட்ட
உரிமை அவர்களை ஏமாற்றி கடைசி வரை சூத்திர பஞ்சமராக வைக்கும் மாய வித்தை.
போக்குவரத்து இடைய்ய்று என்பதை உஙளால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வந்துவிட்ட நிலயில் நான்கு தலைமுறையாக மும்பையில் வசிக்கும்
நான் உணர்கிறேன். இதை போன்ற ஒரு சமய விழாவை வேறு எந்த நாட்டில் மத விழாக்களுடனும் தொடர்பு படுத்தி பார்க்க முடியாது.
பாரீசிலும் அமெரிக்காலும் நடக்கும் மத விழாக்களை நானும் அறிவேன்.

இக்கட்டுரை வாசகனை இதன் அடுத்த தளத்திற்கு நகர்த்த வேண்டும் என்பது என் நம்பிக்கை/எதிர்பார்ப்பு.
அப்போது தான் இக்கணபதி விழாவில் பெருகும் கணபதி எண்ணிக்கை, பல கோடிகள் உண்டியல் வருமானம்,
குட்டி குட்டி தாதாக்களை உருவாக்கும் பட்டறை, புரளும் கறுப்பு பணம், 300 கோடிக்கு ஏன் கடவுள் சிலை
இன்சூர் செய்ய என்ன காரணம் ? எந்த மததின் பெயரால் இவை நடந்தாலும் அதைப் பற்றி யோசிக்க வேன்டும்
என்பதே என் வேண்டுகோள். இந்திய சட்டப்படி நான் இந்துவாக இருப்பதால் இதைப்பறி எழுத முதல் உரிமை.
அம்பேத்கரின் பவுத்தம் குறித்த உங்கள் கருத்து எனக்கு உடன்பாடில்லை. அம்பேத்கரின் எழுத்துகள்
பரவலாக வாசிக்க கிடைக்கின்றன.

பின்னூட்டம் எழுதியவர்கள், எழுதப்போகிறவர்கள் அனைவருக்கும் என் நன்றியும் வாழ்த்துகளும்.

-புதியமாதவி
[email protected]
//Manoharan,Not only for Deepavali even about Ayudha Pooja,details are available in Viduthalai//

நன்றி தோழர்.
சுவனப்பிரியன்
திலகரின் உண்மை முகத்தையும் பிள்ளையார் சதுர்த்தியின் பரிணாமத்தையும் மிக அழகாக இடுகையாக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
viyasan
//கடவுளை வழிபட மறுக்கப்பட்ட மக்கள் கணபதியை தொட்டு பூஜை செய்யலாம் என்று கொடுக்கப்பட்ட உரிமை அவர்களை ஏமாற்றி கடைசி வரை சூத்திர பஞ்சமராக வைக்கும் மாய வித்தை.//
ச‌கோத‌ரி மாத‌வி,

ஏனோ என‌க்கு ம‌ட்டும் உங்க‌ளின் க‌ட்டுரையை வாசிக்கும்போதெல்லாம் ப‌தில்க‌ளை விட‌ கேள்விக‌ள் தான் அதிக‌மாக‌த் தோன்றுகின்ற‌ன‌. இந்து ஆக‌ம‌விதிக‌ளின் ப‌டி புனித‌மான‌ க‌ட‌வுளின் விக்கிர‌க‌த்தை ஆச்சார‌ங்க‌ளுக்கு உட்ப‌ட்ட‌ பிராம‌ண‌ர்க‌ள் அல்ல‌து சிவ‌ தீட்சை பெற்றவ‌ர்க‌ள் ம‌ட்டும் தான் தொட்டுப் பூசிக்க‌ முடியும். ஆனால் க‌ண‌ப‌தி விழாவை சாதி வேறுபாடின்றி எல்லோரும் கொண்டாடுகிறார்க‌ள். பார்ப்பான் தொட‌க்க‌ம் ப‌ஞ்ச‌ம‌ர் வ‌ரை பிள்ளையார் சிலையைச் செய்கிறார்க‌ள், தொட்டு அல‌ங்க‌ரிக்கிறார்க‌ள், த‌ம‌து வீடுக‌ளில், தெருக்க‌ளில் வைத்துக் கொள்கிறார்க‌ள் அது ம‌ட்டும‌ல்ல‌, அதைத் தாங்க‌ளாக‌வே தொட்டுச் சும‌ந்து கொண்டு போய்க் க‌டைசியில் தம‌து கர‌ங்க‌ளாலேயே க‌டலில் க‌ரைத்தும் விடுகிறார்க‌ள்.அப்படியான சாதிப்பாகுப்ப‌ட‌ற்ற ச‌ம‌த்துவ‌த்தை ந‌டைமுறையில் செய‌ற்ப‌டுத்திக் காட்டும் க‌ண‌ப‌தி உற்ச‌வ‌த்தை " பார்ப்ப‌ன‌ர் அல்லாதோரை எக்காலத்தும் இந்துத்துவ சாம்ராஜ்யத்தில் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும் பத்திரமாகப் பூட்டி வைத்துக் கொள்ளும்" விழா என்று நீங்க‌ள் கூறுவ‌தைப் பார்த்து அழுவ‌தா சிரிப்பதா என்று தெரிய‌வில்லை. உண்மையில் நீங்க‌ள் உங்க‌ளுடைய‌ பார்ப்ப‌ன‌, இந்து எதிர்ப்புக் க‌ண்ணாடியைக் க‌ழ‌ற்றி விட்டுப்பார்த்தால் இந்த‌ க‌ணப‌தி உற்ச‌வ‌ம் தான் இந்தியாவில் பார்ப்பன‌ர்க‌ளுக்கும் சூத்திர‌ர்க‌ளுக்கும் ப‌ஞ்ச‌ம‌ர்க‌ளுக்கும் ச‌மவுரிமையைக் கொடுக்கும், ச‌ம‌த்துவ‌த்துக்கு அடையாள‌மாக‌த் திகழும் விழாவாகும் என்ப‌து புல‌னாகும். இதை இந்து ம‌த‌த்தில் சாதியொழிப்பின் முத‌ல்ப‌டியாக‌க் கூட‌க் கொள்ள‌லாம்.
உண்மையில் க‌ண‌ப‌தி உற்ச‌வ‌ம் இந்து ம‌த‌த்திலுள்ள‌ சாதிப்பாகுபாட்டை எதிர்த்து, ஆக‌ம‌விதிக‌ளை ம‌றுத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்ட‌ம் ந‌ட‌த்துவ‌து போன்ற‌து. கணபதி உற்ச‌வ‌த்தை விட‌ சாதிச்சம‌த்துவ‌த்தை ப‌ர‌ந்த‌ள‌வில் ந‌டைமுறைப்ப‌டுத்தும் ஒரு விழா இந்தியாவில் இல்லை என்றால் அது மிகையாது. சாதி பேத‌மின்றி பார்ப்பானும் ப‌ஞ்ச‌ம‌ர்க‌ளும் ம‌ட்டும‌ன்றி மொழி, இன‌ பேத‌மின்றி மராத்திய‌னும், ம‌லையாளியும், தெலுங்க‌னும் த‌மிழ‌னும், ஹிந்திய‌ரும் சிந்திய‌ரும், வ‌ட‌வ‌ரும், தென்ன‌வ‌ரும் ஒன்றிணைந்து கொண்டாடும் க‌ண‌ப‌தி உற்ச‌வ‌த்துக்கு பார்ப்ப‌ன‌ச்சாய‌ம் பூச‌முனைவ‌து, இந்த‌ விழாவைக் கொண்டாடும் ப‌ல‌ இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ இந்துக்க‌ளின், அதாவ‌து இந்திய‌ர்க‌ளின் ம‌த‌ந‌ம்பிக்கையைக் கொச்சைப்ப‌டுத்துவ‌து ம‌ட்டும‌ன்றி அவ‌ர்க‌ளை வெறும் ஏமாளிக‌ளாக‌, சிந்திக்கத் தெரியாத‌வ‌ர்க‌ளாக‌க் காட்டி அவ‌ம‌திக்கும் செய‌லாகும், இது க‌ண்மூடித்த‌ன‌மான‌ பார்ப்ப‌ன‌, இந்து எதிர்ப்பால் வ‌ந்த‌ விளைவு.
viyasan
//பிள்ளையார் சதுர்த்தியின் பரிணாமத்தையும் மிக அழகாக இடுகையாக்கியிருக்கிறீர்கள்.//
பிள்ளையார் ச‌துர்த்தியின் ப‌ரிமாண‌ம் தில‌க‌ருக்கும் முன்பே அதாவ‌து புராண‌கால‌த்திலேயே தொட‌ங்கிய‌து. பிள்ளையார் ச‌துர்த்தி ம‌த்திய‌ கிழ‌க்கில் தோன்றிய‌ அன்னிய‌ ம‌த‌ங்க‌ள் இந்தியாவை அடைய‌ முன்பே பார‌த‌நாட்டில் கொண்டாட‌ப்ப‌ட்ட‌ விழா, அத‌னால் பிள்ளையார் ச‌துர்த்தியின் ப‌ரிமாண‌த்தை வெறும் க‌ட்டுரைக‌ளால் விளக்க‌ முடியாது.
puthiyamaadhavi
கணபதி விழாக்கள் சாதி சமத்துவத்தை நடைமுறை படுத்துவதாக நினைக்கும் உங்கள் பார்வைக்கு என் பாராட்டுதல்கள்:. என்ன பண்ணுவது அப்படி நினைக்கத்தான் எனக்கும் ஆசை, ஆனால் பாருங்கள் இந்த சித்தி விநாயக் மந்திரில் இப்படி எல்லாம் எல்லோரும் தொட்டு பூஜை செய்துவிட முடியாது. அது வேறு விநாயகர், இது வேறு விநாயகர் என்று என்னை ஏமாற்றிக்கொள்ளவும் எனக்குத் தெரியவில்லை. எனக்கும் இப்படி எல்லாம் கேள்விகள் எழுகின்றன. அப்புறம் பாருங்கள் நடைமுறையில் இதில் எந்த பக்கதி வெள்ளமும் ஓடவில்லை. அ து தவிர வேற் என்னவெல்லாமோ நடந்து தொலைகிறது. இதை எல்லாம் உங்களைப் போன்ற பிள்ளையார் சதுர்த்தியின் பரிமாணத்தை நன்குப் புரிந்தவர்கள் முன்வந்து செய்திருக்க வேண்டாமோ,
சித்தி விநாயக்ர் கோவில் விவகாரம் மும்பை கோர்ட் வாசல் வரை வந்ததெல்லாம் தெரியும்தானே! நாங்கள் நடைமுறை பிரச்சனைகளை எழுதினால் அது என்னவோ எங்களுக்கு ஏதாவது கண்ணாடி போட்டுவிடுவதில் கவனமாக இருக்கின்றிர்கள்,.
எங்களுக்கு இப்போதெல்லாம் கண் நன்றாகவே தெரிகிறது. எவ்வளவு காலங்கள் தான் நாங்கள் அடுத்தவர் கண்ணாடிகளைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருப்போம் என்று நினைக்கின்றீர்கள்? அந்தக் காலம் மாறிவிட்டது நண்பரே. இது எங்கள் பார்வை. நாங்கள் பார்த்ததை உணர்ந்ததை மட்டுமே ஆதாரங்களுடன் எழுதுகிறோம்.
ஷாலி
இந்து மதத்தின் மேல் பற்றுக்கொண்டிருப்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
ஆனால் மதப்புற்று பிடித்தவர்களிடம் என்ன விளக்கங்கள் கொடுத்தாலும் எடுபடாது. எதற்கெடுத்தாலும் மத்திய கிழக்கு அந்நிய மதங்களோடு மல்லுக்கட்டியே மாரடிப்பார்கள்.
தங்க ஊசியால் குத்துப்பட்ட கருத்துக்குருடர்களை, புதிய மாதவிகள் கண்டுகொள்ள தேவையில்லை.வாழ்த்துக்கள்!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.