“நாம் தமிழர்” ஆவணம் - தேசிய அறிக்கையன்று; பாசிச அறிக்கை! – பகுதி 3 

சென்ற பகுதியில் விவரித்திருந்த வரையறுப்பினடியாக நோக்கும்போது ஆவணத்தின் அடிநாதமாக இருப்பது பாசிசக் கருத்தியலே என்பது உறுதியாகிறது. 

பாசிசத்தின் வரையறுப்பில் முதல் அம்சமான தேசப்புத்துயிர்ப்பு (palingenesis):

‘நாம் தமிழர்’ ஆவணம் முழுவதும் ‘தேச உரிமை மீட்சி’ என்ற தொடர் பரவியிருப்பதை வாசிப்பவர்கள் கவனிக்கலாம். ‘திராவிடக்’ கருத்தியலின் ஆதிக்கத்தாலும், பிற மொழியாளர்களின் சுரண்டலாலும் தமிழ்ச் சமூகம் சிதைவுபட்டிருக்கிறது என்பதைத் தொடர்ந்து குறிப்பிடும் ஆவணம், அதிலிருந்து ‘மீட்சி’ பெறுவதற்கான வழியாகத் தமிழ் நாட்டை தமிழர்களே ஆள வேண்டும் என்பதை வலியுறுத்துவதும் வெளிப்படை. ஆனால், இழந்த உரிமைகளை மீட்பது என்ற பொருளில், அடிமைத் தளைகளில் இருந்து விடுபடுவது என்ற பொருளோடு நின்றுவிடவில்லை. அவ்வாறு இருந்திருந்தால், அது தேசிய விடுதலை நோக்கு என்ற அளவில் இருந்திருக்கும்.

மாறாக, ‘மீட்சி’ என்பதை ஆவணம் முன்மொழிவது, பாசிசத்திற்கே உரிய ‘தேசப்புத்துயிர்ப்பு’ என்ற வகையில் அமைந்திருப்பதை ‘ஆவணத்தை விளக்கிடும் உரைவீச்சுத் தெறிப்புகள்’ என்ற பகுதியில் உள்ள ‘உரைவீச்சுத் தெறிப்பு’ ஒன்று தெள்ளத் தெளிவாக உணர்த்திவிடுகிறது.

பக்கம் 48 இல்:

“நாம் தமிழர் கட்சி

ஆட்சிக்காக மட்டுமல்ல!

தமிழின மீட்சிக்காக!”

என்று தாம் தமிழின மீட்சிக்கானவர்களே என்ற விளக்கத்தைத் தொடர்ந்து, அடுத்த பக்கத்திலேயே:

“கட்டடத்திற்கு

வெள்ளையடிக்க வந்தவர்கள் அல்லர்!

அந்தக் கட்டடத்தையே இடித்துவிட்டு

மறுகட்டடத்தைக்

கட்ட வந்த புரட்சியாளர்கள்!” (பக்கம்: 49)

என்று தெளிவுபடுத்துகிறார்கள்.

தமிழ் தேசத்திற்கு விடுதலை பெற்றுத்தருவது என்பதல்ல; ‘மறுகட்டடத்தை’ உருவாக்குவதே அவர்களது இலக்காம். ‘நாம் தமிழர்’ ஆவணத்தின் ‘தேசப்புத்துயிர்ப்பு’ நோக்கு, இக்குறிப்பிட்ட வகையிலானதாக – பழைய கட்டடத்தையே இடித்துவிட்டு புதிய கட்டடத்தைக் கட்டுவதாகும். (கொத்தனார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களோ, இன்ஜினியர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களோ தெரியவில்லை! ஆனால், கட்டடத்தை இடிக்கப் போவதாகச் சொல்வது கரசேவகர்களை நினைவுபடுத்தினால் அதற்கு அவர்களே பொறுப்பு!)

noam_chomsky_281இவ்விடத்தில் ஒரு ‘தொன்மக் கரு’வின் வெளிப்பாடே பாசிசம் என்று சென்ற பகுதியில் குறித்திருந்து விளக்காமல் விட்டிருந்ததைத் தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம். அத்தொன்மக் கரு வேறொன்றுமில்லை. ‘புத்துயிப்பு’ அல்லது ‘மறுபிறப்பு’ என்ற கருதுகோளே.

உலகின் அனைத்துப் பண்பாடுகளிலும் இந்தப் ‘புத்துயிர்ப்பு’ அல்லது ‘மறுபிறப்பு’ என்ற கருதுகோள் உறைந்திருப்பதைக் காணமுடியும். மனித ஆன்மாவிற்கு அழிவில்லை, என்ற கற்பனையில் ஊற்றெடுத்து, அந்த ஆன்மா இன்னொரு உடல் உருக்கொள்ளும் என்ற நம்பிக்கையாக உருமாறி, பின் நிறுவனமயப்பட்ட பல்வேறு மதங்களின் ஆதார சுருதியாக இப்புத்துயிர்ப்பு என்ற கருதுகோள் நிலைபெற்றதையும் காணமுடியும். மனித குலத்தின் ஆதியிலிருந்து அதனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற மரணத்தின் மீதான அச்சத்தில் இருந்து பிறப்பதே இத்தொன்மக் கரு. அதை சமூகத்தின் மீது, குறிப்பாக தேசத்தின் மீது சாற்றுவதே பாசிசத்தின் தனித்தன்மை.

பல்வேறு சமூகப் பண்பாட்டுச் சூழல்களின் குறிப்பான தன்மைகளுக்கே உரிய முறையில் இத்தொன்மக் கரு பல்வேறு வடிவம் கொள்கிறது. குறிப்பான, சமூகப் பண்பாட்டுச் சூழல்களின் தனித்தன்மைகளில் தோன்றும் பாசிச இயக்கங்கள், இத்தொன்மக் கருவை தமது ஆதாரச் சுருதியாகக் கொண்டு, தமது சமூக வரலாற்றுப் பின்புலத்திற்கே உரிய, அறிவியலுக்குப் புறம்பான மூடத்தனமான நம்பிக்கைகளோடு இணைத்து உருக்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, ஜெர்மானிய நாஜிக்கள், இத்தொன்மக் கருவோடு இணைத்தது, ‘தூய ஆரிய இனம்’ என்ற அறிவியலுக்கு முற்றிலும் எதிரான இனப்பெருமை சார்ந்த மூடத்தனம்.

நமது சூழலில் முளைவிட்டிருக்கும் பாசிஸ்டுகள், இப்புத்துயிர்ப்பு அல்லது மறுபிறப்பு (ஆவணம் கைக்கொண்டிருக்கும் மொழியில் ‘மறுக்கட்டடம்’) என்ற தொன்மக் கருவோடு இணைக்கும் அறிவியலுக்குப் புறம்பான அல்லது போலியான அறிவியல் மீது கட்டமைக்கப்பட்ட இரு மூடத்தனமான நம்பிக்கைகள், ‘உலகின் மொழிகளுக்கெல்லாம் ஆதி மொழியான தமிழ்’ மற்றும் ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி’.

ஆவணத்தின் முதல் பத்தியே போலியான அறிவியலின் மீது கட்டப்பட்ட இந்த இரு மூடநம்பிக்கைகளில் இருந்தே தொடங்குகிறது. உலகின் முதல் மொழி தமிழ், லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் என்பவற்றுக்கெல்லாம் எந்தவிதமான அறிவியில் பூர்வமான ஆதாரங்களும் இல்லை. இதை எத்தனை முறை கூறினாலும் விளங்கிக் கொள்ள மறுக்கிற மூட நம்பிக்கையாளர்களின் கருத்துக்களை முதல் பத்தியிலேயே தனது முற்கோளாகக் கொண்டு தொடங்கியிருக்கிறது ஆவணம்.

மேலும் ஒரு படி மேலே சென்று அதற்கான ‘அறிவியல் பூர்வமான ஆதாரமாக’ புகழ் பெற்ற மொழியியல் ஆய்வாளரான நோம் சோம்ஸ்கியின் கூற்றாக, அப்பட்டமான பொய் ஒன்றைக் கூறவும் தயங்கவில்லை.

அது என்ன பொய்?

இதுதான்: “அதனால்தான் புகழ் பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சோமிசிகி அவர்கள், ‘உலக மொழிகள் அனைத்தும் ஒரு மூலமொழியில் இருந்தே பிறந்திருக்க வேண்டும்; அம் மூலமொழி தமிழாக இருக்கலாம்’, என்று கருத்துரைத்துள்ளார்.”

முதலாவதாக, நோம் சோம்ஸ்கியின் ஆய்வுகள் மொழிகளின் வரலாற்றுத் தோற்றம் என்ற புலம் சார்ந்தவையே அல்ல. மொழியைக் கற்பதற்கான திறன், மனித மூளையின் அமைப்பில் உள்ளார்ந்து இருக்கிறது என்ற கருதுகோளையே அவர் தமது ஆய்வுகள் வழியாக முன்வைத்தார். அதன் அடிப்படையில் Transformative Generative Grammar என்பதாக இன்று பரவலாக அறியப்படுவதை முன்வைத்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பாக, அவரது மேற்குறிப்பிட்ட மொழியியல் அடிப்படையில் அமைந்த இலக்கண நோக்குகள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையைச் சேர்ந்த மொழியியல் துறையில், உசாத்துணை நூல்களாக பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

நோம் சோம்ஸ்கி, இத்தகைய மூடத்தனமான ஒரு கருத்தை எங்குமே கூறியிருக்கவில்லை. இத்தகைய அறிவியலுக்குப் புறம்பாக ஒரு கருத்தை அவரது கூற்றாக ஆவணம் தன் முதல் பத்தியிலேயே வைத்திருப்பது ஏதோ அறியாமல் செய்த பிழை என்று கருவும் இயலாது. தமது மூடத்தனமான கருத்துக்களுக்கு வலு சேர்க்க, அப்பட்டமான ஒரு பொய்யை கூசாமல் சொல்லத் துணிந்திருக்கிறது என்பது தெள்ளெனத் தெரிகிறது.

தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக, முதல் பத்திகளிலேயே அப்பட்டமாக பொய் சொல்லத் துணிந்த ஆவணம் என்ற பெருமையையும் ‘நாம் தமிழர்’ ஆவணம் பெற்று நிற்கிறது.

இருக்கும் கட்டடத்தை இடித்துவிட்டு (கரசேவகப் பணி) ‘மறுகட்டடத்தை’ கட்டுவோம் என்ற விளக்கத்தில் ‘நாம் தமிழர்’ கட்சி ஆவணம், தனக்கே உரித்தான ‘தேசப்புத்துயிர்ப்பு’ என்ற பாசிசத்தின் மையமான அம்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. இத் தொன்மக் கருவிற்கு வலுசேர்க்கும் விதமாக ‘ஆதிக் குடி’, ‘முதல் மொழி’ என்ற அறிவியல் பூர்வமற்ற மூடத்தனமான கற்பனைகளையும் அவற்றை நிறுவ ஒரு பெரும் அறிஞரின் கூற்றாக அப்பட்டமான பொய்யையும் சொல்லத் துணிந்திருக்கிறது.

அதே சமயம், இத்’தேசப்புத்துயிர்ப்பு’ வெகுவிரைவில் நிகழக்கூடிய சாத்தியமில்லை என்பதிலும் ஆவணம் தெளிந்தே இருக்கிறது. ‘தேசிய இனங்களின் சிறையாக’ அரை நூற்றாண்டுக்கும் மேலாக, வலுவாக தாக்குப் பிடித்து நிற்கும் இந்திய அரசை மீறி, அத்தனை சுலபத்தில் தமிழ் தேசப் புத்துயிர்ப்பை நிகழ்த்திவிட இயலாது என்ற தெளிவு இருப்பதாலேயே,

எம் இன எதிரிகளின் சட்டத்திற்குட்பட்ட

தேர்தல் பாதையை நாம் விரும்பி ஏற்கவில்லை.

வரலாறு நம்மீது வலிந்து திணித்துள்ளது. (பக்கம்: 53)

என்ற விளக்கத்தையும் அளிக்கிறது.

இந்திய வல்லாதிக்க அரசை மீறி தமிழ் தேச புத்துயிர்ப்பை உடனடி நிகழ்ச்சி நிரலில் வைப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்திருப்பதாலேயே, இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொண்டு, தேர்தலில் பங்கேற்று, ஒரு நீண்ட கால நோக்கில் ‘தேசப் புத்துயிர்ப்பை’ நிகழ்த்தும் நிகழ்ச்சி நிரலை மேற்கொள்கிறது.

தற்காலத்தைய நவ – பாசிஸ்டுகள், தமது நிகழ்ச்சி நிரல்களை ஒரு பல்தேசிய மட்டத்திற்கு நகர்த்தியிருப்பதற்கு ஒப்பானது இது. நவ – பாசிசக் கும்பல்களில் ஒன்றான சிவசேனை கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்பானது.

பாசிசத்தின் இரண்டாவது முக்கிய அம்சமான அதிதீவிர தேசியவாதத்திற்கு (ultra – nationalism) இனி நகர்வோம்.

தமிழ் தேசத்திற்கான வரையறுப்பாக ஸ்டாலினின் இலக்கணத்தை ஆவணம் பக்கம் 31 – 31 ல் குறிப்பிடுகிறது. ஸ்டாலினின் வரையறுப்பை ஆவணம் எங்ஙனம் திரித்திருக்கிறது என்பதைக் காண்பதற்கு முன்பாக, அவரது வரையறுப்பை தெளிவுபடுத்திக் கொள்வது நலம்.

ஸ்டாலின் தமது தேசம் (nation) குறித்த வரையறுப்பில் இனம் (race) என்ற வகையினத்தை மிகக் கவனமாகக் குறிப்பிட்டு விலக்கினார். ‘மார்க்சியமும் தேசியப் பிரச்சினையும்’ என்ற அவரது புகழ் பெற்ற சிறு நூலின் முதல் கட்டுரையின் ஆரம்ப வரிகளிலேயே இதை தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறார்:

“ஒரு தேசம் என்பது என்ன?

தேசம் என்பது முதன்மையாக ஒரு சமூகக் குழுமம். ஒரு மக்கள் தொகுதியின் உறுதியாக நிலைபெற்ற சமூகக் குழுமம்.

இச்சமூகக் குழுமம், இன ரீதியாகவோ, பழங்குடியினர் அடிப்படையிலானதோ அன்று. நவீன இத்தாலிய தேசம் ரோமர், டியூட்டானியர், எட்ருஸ்கியர், கிரேக்கர், அராபியர் இன்னும் இதுபோன்ற பல இனங்களால் உருவானது. ஃப்ரெஞ்சு தேசம் கௌல், ரோமர், பிரித்தானியர், டியூட்டானியர் இன்னும் பலரால் உருவானது. பிரிட்டிஷ், ஜெர்மன் இன்னும் இது போன்ற மற்ற தேசங்களும் இவ்வாறு பல்வேறு இனத்தினர், பழங்குடியினரின் கலப்பினால் உருவானவை என்றே சொல்ல முடியும்.

ஆக, ஒரு தேசம் என்பது, வரலாற்று ரீதியாக உருவாகி அமைந்த ஒரு மக்கள் தொகுதியின் சமூகக் குழுமமே தவிர, இன ரீதியாகவோ பழங்குடியினர் அடிப்படையிலோ அமைந்ததன்று.”

(குறிப்பு: மொழியாக்கம் எனது. Community என்பதை சமூகக் குழுமம் என்பதாகவே தொடர்ந்து மொழியாக்கம் செய்து வருகிறேன். அதை social group என்று திருப்பி மொழியாக்கம் செய்து புரிந்து கொள்ள வேண்டாம் என்று கோருகிறேன்)

[What is a nation?

A nation is primarily a community, a definite community of people.

This community is not racial, nor is it tribal. The modern Italian nation was formed from Romans, Teutons, Etruscans, Greeks, Arabs, and so forth. The French nation was formed from Gauls, Romans, Britons, Teutons, and so on. The same must be said of the British, the Germans and others, who were formed into nations from people of diverse races and tribes.

Thus, a nation is not a racial or tribal, but a historically constituted community of people.

http://marxists.org/reference/archive/stalin/works/1913/03a.htm#s1]

இந்த முன்நிபந்தனையை வரையறுத்த பின்னரே ஸ்டாலின், அக்கட்டுரையின் பிற்பாதியில் தேசிய இனத்திற்கான தமது வரையறுப்பைத் தந்திருப்பார்.

அவ்வரையறுப்பு பின்வருமாறு:

“ஒரு பொதுமொழி, நிலப்பரப்பு, பொருளாதார வாழ்வு, ஒரு பொதுப்பண்பாட்டின் ஊடாக வெளிப்படும் பொதுவான உளவியல் நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, வரலாற்று ரீதியாக உருவாகி நிலைபெற்ற ஒரு மக்கள் தொகுதியின் சமூகக் குழுமமே ஒரு தேசமாகும்.”

[A nation is a historically constituted, stable community of people, formed on the basis of a common language, territory, economic life, and psychological make-up manifested in a common culture. http://marxists.org/reference/archive/stalin/works/1913/03a.htm#s1]

ஆவணம் இவ்வரையறுப்பை மிகச் சரியாக, பிசகேதும் இன்றித் தருகிறது:

தமிழர்கள் ஒரு தேசிய இனம் எனும் தகுதியுடைய இனம். இவ்வினத்திற்கான பொதுமொழி, தொடர்ச்சியான நிலப்பரப்புடைய பொதுவான வாழும் பகுதி, பொதுப் பொருளாதார வாழ்வு, ஓரினமென்ற மன இயல்பு ஆகிய கூறுகளுடன் வரலாற்று அடிப்படையில் உருவான நிலையான மக்களினம், தமிழ் குமுகாயமாகும். தனக்கென அரசியல் பண்பாட்டு வாழ்வியல் உரிமைகளோடும், இறையாண்மையோடும் இருந்த, இருக்க வேண்டிய ஒரு இனம், தமிழினம் ஆகும்.” (பக்கம் 31 – 32) (அழுத்தம் எனது. அழுத்தம் தராப்படாத பகுதி ஸ்டாலினின் வரையறுப்பு)

stalin_630

ஆனால், முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் சேர்த்திருக்கும் வரிகளிலும், வரையறுப்பின் முதல் சொல்லாக்கத்திலும், மிக வெளிப்படையாக, இனம் என்பதற்கே அழுத்தம் தருகிறது. ஸ்டாலினின் வரையறுப்பைச் சரியாகத் தரும் அதே போதில், அவர் விலக்கி வைத்த இனம் என்ற வகையினத்தின் அடிப்படையிலே தமிழ் தேசத்தை வரையறை செய்கிறது.

தேசத்தின் மையக்கூறாக, தூய இனம் என்ற வகையினத்தைக் கொள்வதாலேயே ஆவணம் முழுக்க இனவாதம் தலைவிரித்து ஆடுவதாக இருக்கிறது.

ஆவணம் விவரித்துச் செல்லும் சமூக வரலாற்றின்படி, இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே (பாகிஸ்தான் உட்பட) தமிழர் என்ற இனத்தால் ஆளப்பட்டது. ஆரிய இனப் படையெடுப்பிற்குப் பின் நிகழ்ந்த இனத்திரிபால் உருவானதே திராவிடம் என்ற இனம். தமிழ் மொழி திரிந்ததால் உருவானவையே இந்தியத் துணைக்கண்டம் முழுதும் பரவியிருக்கும் பிற மொழிகள்.

இத்தகைய இனத்திரிபில் இருந்து, தமிழ் இனத்தையும் தமிழ் மொழியையும் அதன் தூய நிலைக்கு மீட்பதே ஆவணம் முன்மொழியும் அரசியல். இது தேசிய வாதமன்று. தூய இனவாதம்.

இவ்வாறு, இனத்திரிபு என்று நோக்குவதாலேயே, திராவிடத்தை வேரறுக்கக் கோருகிறது ஆவணம். மொழித் திரிபு என்று நோக்குவதாலேயே தமிழ் நாட்டில் வாழும் பிற மொழியினரைத் தம் தாய் மொழி தமிழே என்று உணர்ந்து ஏற்றுக் கொள்ளுமாறு மென்மையாக மிரட்டவும் செய்கிறது:  

“உங்களைப் பிறமொழியாளர் என்று சொல்லி,

உங்களைப் பிறராகப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை.

உங்கள் மூலத் தாய்மொழியாம் தமிழுக்குத் திரும்பிட

உங்களுக்கு உள்ள முழு உரிமையை நாங்கள் ஏற்கிறோம்.” (பக்கம்: 50)

ஒரு தேசத்தில் சிறுபான்மையினராக வாழும் பிற மொழி பேசுவோர், தமது தாய்மொழியைக் கைக்கொள்வதற்கான முழு உரிமையை ஏற்பதுவே ஒரு ஜனநாயக அணுகுமுறையாக இருக்க முடியும். அவர்களது மூல மொழி, பெரும்பான்மையினரின் மொழியே என்று கற்பித்து அதற்குத் திரும்பிட உரிமை தருகிறோம் என்பது – இதில் முழு உரிமை வேறாம் – என்பது மிரட்டல் அல்லாமல் வேறு என்ன? இனவாத வெறியில் இருந்தல்லாமல் வேறு எதில் இருந்து இத்தகைய மிரட்டல் எழ முடியும்!

இதன் அடுத்த வரிகளிலேயே மீண்டும்:

தனி இனமாக நீங்கள் வாழ வாழ்த்துகிறோம்; ஆனால் ஒன்று;

தமிழர் தேசத்தில் தமிழர் ஆட்சியை நீங்கள் வாழ்த்துங்கள்!

எனக்கு அடங்கி, என்னை வாழ்த்தினால் நீ இங்கு வாழலாம் என்ற பெரிய அண்ணாத்தையின் (big brother attitude) மென்மையான மிரட்டல் அல்லாமல் இது வேறு என்ன!

ஸ்டாலினின் வரையறுப்பைத் தரும் ஆவணம், அவரது கருத்தில் பல்வேறு இனங்களின் கலப்பினூடாக வரலாற்று ரீதியாக நிலைபெற்ற ஒரு மக்கள் தொகுதியினரே ஒரு தேசமாக உருப்பெறுகின்றனர் என்பதைக் கவனமாகத் தவிர்க்கிறது. (ஸ்டாலினின் இவ்வரையறுப்பைக் காட்டிலும் செறிவான நோக்குகளை இங்கு விரிவஞ்சித் தவிர்க்கிறேன்). பல இனத்தவர், பல மொழி பேசுபவர் கலந்து, நெடுங்கால வரலாற்று தொடர்ச்சியில் ஊடாடி, உருப்பெற இருப்பதே நவீனத் தமிழ் தேசம் என்பதை உணராது, தூய இனவாதச் சகதியில் வீழ்ந்தமையால், இனவெறி விஷத்தைக் கக்குவதாக இருக்கிறது.

எந்தவொரு தேசமும் தூய இனக்குழுவால் நிலைபெற்றவை அல்ல. தூய இனவாதம் தேசியவாதமும் அல்ல. தூய இனவாதம், பாசிசத்தின் முக்கிய அம்சமான ultra – nationalism - அதிதீவிர தேசியவாதமே.

பாசிசத்தின் மூன்றாவது முக்கிய அம்சமான அரசியல் மதம் (political religion) ‘நாம் தமிழர்’ ஆவணத்தில் எங்ஙனம் உருக்கொண்டிருக்கிறது என்பதோடு இப்பகுதியை முடித்துக் கொள்கிறேன்.

செயற்பாட்டுக் கொள்கைகள் பகுதியில், “நாளைய தமிழர் ஆட்சியில், அரசு சமயம் சாராது. ஆனால், யாருடைய தனிப்பட்ட சமய நம்பிக்கையிலும் அரசு தலையிடாது.” (பக்கம்: 60) “நாம் தமிழர்” ஆட்சி சமயச் சார்பற்றதாக இருக்கும் என்று அறிவிக்கிறது ஆவணம்.

நல்லது. ஆட்சிக் கனவோடு, நல்ல ஆட்சியை நல்குவதாகக் கனவு காண்பது மிக நல்லது.

ஆனால், முரண்பாடுகள் பகுதியில், மூன்றாம் முரண்பாடாக “தமிழியத்திற்கும் முகமதியத்திற்கும், தமிழியத்திற்கும் கிறித்துவத்திற்குமிடையே முரண்பாடு” (பக்கம்: 37) என்று வரையறுக்கிறது ஆவணம்.

இதை விளக்குமிடத்தில் கீழ்வருமாறு விரித்துரைக்கிறது:

“3 ஆம் முரண்பாடுகளான முகமதியமும் கிறுத்தவமும் தமிழ்த் தேசியத்தை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை; சட்டப்பாதுகாப்பும், சொத்துடைமை வலுவும், பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு, மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை; முகம்மதியத் தமிழரும், கிறித்தவத் தமிழரும் தங்களுடைய முதன்மை அடையாளம், தமிழ்த் தேசிய அடையாளமே என்று உணர்ந்தறிந்து வருவாராயின், நட்பு முரண் வகையிலும், அல்வழிப் பகைமுரண் வகையிலும் இடம்பெறுவர்; இவர்கள் எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளப்பட வேண்டிய தரப்பினர்.” (பக்கம்: 39)

சமயச்சார்பற்ற அரசமைக்கப் போவதாகக் கனவு காணும் ஒரு கொள்கை ஆவணம், எல்லாச் சமயத்தினரையும் சமமாக அணுகியிருக்க வேண்டும். குறைந்தது “எச்சரிக்கையாக அணுகப்பட வேண்டியவர்கள்” என்று பட்டியலிட்டால், அதில் அனைத்து மதத்தினரையுமாவது சேர்த்திருக்க வேண்டும். ‘நாம் தமிழர்’ ஆவணமோ இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் ‘சந்தேகப் பட்டியலில்’ சேர்த்துவிட்டு, இந்துக்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு அளித்திருக்கிறது. ஆர். எஸ். எஸ். பி. ஜே. பி. சிவசேனா ஆகிய இந்துத்துவ சக்திகளின் ‘கொள்கைகளுக்கும்’ இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை வாசிப்பவர்களின் கற்பனைக்கு விட்டுவிடலாம்.

என்றாலும், தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன் முதலாக, இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் ‘சந்தேகப் பட்டியலில்’ சேர்த்த கொள்கையை அறிவித்த முதல் ஆவணம் என்ற பெருமையையும் ‘நாம் தமிழர்’ ஆவணமே தட்டிச் செல்கிறது என்பதைக் குறிப்பிடாமல் விடுவது வரலாற்றுக்கு துரோகம் செய்வதாகிவிடும்.

இத்தகைய நுட்பமான இந்துத்துவச் சார்புக் கொள்கையை அறிவித்தாலும், ஆவணம் எந்த ஒரு மதத்தையும் தனது உத்தியோகப்பூர்வமான மதமாக ஒப்புக்கொண்டுவிடவில்லை. மாறாக, பாசிசத்தின் கூறான, அரசியல் மதம் (political religion) ஒன்றையே தனது கொள்கையாக தெளிவாக அறிவிக்கிறது.

கலைச்சொல் விளக்கம் பகுதியில் ‘தமிழியம்’ என்பதாக ஆவணம் கீழ்க்கண்டவாறு வரையறை தருகிறது:

தமிழியம்: ஐந்திணை மரபுசார்ந்த இயற்கை நெறி, எண்ணியம் சார்ந்த அறிவியநெறி, பொதுமை சார்ந்த உலகியநெறி, உயிரிநேயம் சார்ந்த அருள்நெறி ஆகியவற்றை உ:ள்ளடக்கிய அறம், பொருள், இன்பம் போற்றும் விழுமிய வாழ்வியம் (வாழ்வியல் நெறி). (பக்கம்: 117)

இது ஒரு மதம் சாராத வரையறுப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த வரையறுப்பின்படி வாழ்ந்தாலே ஒருவர் தமிழர் என்ற வரையறைக்குள் வருவர் என்று நிபந்தனையையும் விதிக்கிறது ஆவணம்: “தமிழியத்தை வாழ்வியல் நெறியாகவும், தமிழர் நலனை நடைமுறையாகவும் கடைப்பிடிப்பவர் வாழும் தமிழர் ஆவார்.” (பக்கம்: 116)

இந்த வரையறுப்பின்படி இன்று வாழும் தமிழரில் ஒருவரைக்கூடத் தமிழராகச் சொல்லமுடியாது (‘நாம் தமிழர்’ இயக்கத்தவரின் தலைவர் கூட இதன்படித் தமிழர் இல்லை என்றாகும்) என்பது ஒருபுறம் இருக்க, பாசிசத்தின் மூன்றாவது வரையறுக்கும் அம்சமான அரசியல் மதத்தை ‘நாம் தமிழர்’ ஆவணம் தமிழ் மக்கள் மீது திணிக்கிறது என்பதுவே இங்கு கவனத்திற்குரியது.

மதம் தொடர்பான தனது நிலைப்பாடாக ஹிட்லர் கூறியதோடு, இந்த வரையறுப்பை ஒப்பிட்டுப் பார்ப்பது நலம்:

“தேசிய சோஷலிசம், சற்று நீண்ட காலம் ஆளுகையில் இருந்துவிட்டால், நாம் வாழ்ந்து கொண்டிருப்பதிலிருந்து மாறுபட்ட ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதுகூட சாத்திமற்றுப் போகும்.

நீண்ட கால நோக்கில், தேசிய சோஷலிசமும் மதமும் ஒத்திசைந்து இருப்பது சாத்தியப்படாத ஒன்று.

இந்த முரண்பாட்டை மதத்திற்கு எதிரான போராக அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா என்று சி. எஸ். எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் முகமாக ஃப்யூரர் மேற்கொண்டு கூறியதாவது:

இல்லை. இதன் பொருள் மதத்திற்கு எதிராக நாம் போர் தொடுக்கப் போகிறோம் என்பதில்லை. சிறந்த தீர்வு என்பது, எந்தவிதமான களையெடுப்புகளும் செய்யாமலேயே, இம்மதங்கள் தம்மைத் தாமே அழித்துக்கொள்ளும்படி விட்டுவிடுவதாகவே இருக்கும்.

[When National Socialism has ruled long enough, it will no longer be possible to conceive of a form of life different from ours.
In the long run, National Socialism and religion will no longer be able to exist together.
On a question from C. S., whether this antagonism might mean a
war, the Fuehrer continued:
No, it does not mean a war. The ideal solution would be to
leave the religions to devour themselves, without persecutions. 

HITLER'S TABLE TALK 1941-1944: His Private Conversations. Translated byNorman Cameron and R.H. Stevens Introduced and with a new Preface by H.R. Trevor-Roper] 

ஹிட்லர், ஆட்சியைப் பிடிக்கும் முன்பாகவும் சரி, கைக்கொண்ட பிறகும் சரி, எந்த மதத்தினர் மீதும் தாக்குதல் தொடுக்கவில்லை (யூதர்கள் மீதான தாக்குதல் இனவெறி அடிப்படையிலே இருந்தது). ஜெர்மனியில் ப்ரொட்டஸ்டண்ட் கிறித்தவர்களின் பலம் உணர்ந்து அவர்களைப் பகைத்துக் கொள்ளாமல், கண்டும் காணாமல் இருக்கும் நிலையையே எடுத்தான். சில வேளைகளில் ஊக்குவிக்கவும் செய்தான்.

தமிழகத்தில் முளைவிட்டிருக்கும் பாசிஸ்ட்டுகள், இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் ‘சந்தேகப் பட்டியலில்’ சேர்த்துவிட்டு, ‘இந்து’ மதத்தினர்பால் கண்டும் காணாத நிலையெடுத்திருப்பது அதற்கு ஒப்பானதே. ஹிட்லரைப் போலவே, நாஜிக் கொள்கைக்கு நிகரான, அரசியல் மதமாக ‘தமிழியம்’ என்ற அரசியல் மதத்தையும் முன்மொழிந்திருப்பதுவும் அப்பட்டமான பாசிசமே!

(தொடரும்)

- வளர்மதி

Comments

25 comments

25
ஷாலி
இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும், “இவர்கள் எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளப்பட வேண்டிய தரப்பினர்”.-பக்-39 ல் திரு.சீமானின் ஆவணம் கூறுகிறது.

இதன் மூலம் இனி குஜராத் நரமோடிக்கு சாட்சாத் சீமான் சரியான போட்டியாளராக மாறிவிட்டார்.மேலும் ஆர் எஸ் எஸ் இற்கு தலைவராகும் முழு தகுதியையும் பெற்றுவிட்டார்.

“நுணலும் தன் வாயால் கெடும்” ‘நண்டு கொழுத்தால் வலையில் தங்காது” என்பது பழமொழி. திரு.சீமான் அவர்கள் தன் திரைப்பட கதையை ஆவணமாக்கி கோவணமின்றி அம்பலப்பட்டுவிட்டார்.

தமிழர்கள் என்றும் பார்ப்பனர்களுக்கு “வெட்டிவேலை”பார்த்தே பழக்கப்பட்டவர்கள்.வெட்டிவேலை என்றால் என்ன தெரியுமா?

சம்பளமில்லாமல் பாப்பானையும் சேர்த்து சாமி பல்லக்கு தூக்குவதும்,பந்தம் பிடிப்பது,இந்த வேட்டிவேலையை சீமான் கூட்டம் இன்று சப்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறது.

இதற்க்கு உடந்தையாக, “தன் மகனுக்கு சார்லஸ் என்று கிருஸ்தவ பெயர் சூட்டிய பெருந்தன்மை பெருமகன் திரு.பிரபாகரனை இழுத்துக்கொள்வது சீமானின் சின்னத்தனம்
viyasan
ஈழத்தில் முகம்மதியர்களுக்கும் தமிழர்களுக்கும் மிகுந்த முரண்பாடுண்டு என்ற உண்மை தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் உணர்த்தியது, தமிழ் பேசும் முகம்மதியர்கள், ஈழத்தமிழர்களை அழித்தொழிக்க எப்படியெல்லாம் சிங்களவர்களுக்கு உதவினார்கள் என்றதை உணர்ந்த சீமான், ஒரு வீரத்தமிழனாக, பேசாப் பொருளை நாம் தமிழர் ஆவணத்தில் பேசத் துணிந்ததை எந்த உண்மையான தமிழனும் பாராட்டத் தயங்க மாட்டான். பிரபாகரன் எதற்காக தனது மகனுக்கு சார்ள்ஸ் என்ற பெயர் வைத்தார் என்பது கூடத் தெரியாமல் உளறும் சாலி, கீழ்ப்பாக்கத்திலிருந்து தப்பி வந்தவராக இருப்பாரோ என்று யாரோ சந்தேகம் தெரிவித்தது உண்மையாக இருக்கும் போல் தான் தெரிகிறது. :-)))
ஷாலி
நான் உண்மையை எழுதிவிட்டதாகவே நினைக்கிறேன்.இல்லையேல் திரு.வியாசன் இந்தளவு கோபப்பட்டு தனி நபர் தாக்குதலில் தரம்தாழ்ந்து பைத்தியக்காரன் பட்டம் கொடுத்திருக்கமாட்டார்.

“தொண்டு செய்து பழுத்த கிழத்தின்” மீதே சேறு வாரி இறைப்பவர்களிடம் இருந்து வேறு எதிபார்க்க முடியாதுதான்.வாதம் தோல்வி அடையும்பொழுது அபவாதம் எழுவது இயல்புதான்.பொருளுக்கு வருவோம்....

யோ.திருவள்ளுவர் ஐயா, கட்டுரைக்கு கமண்ட்ஸ் போட்ட திரு.வியாசன் அவர்கள்,எழுதுகிறார்,”நாம் தமிழர் ஆவணத்தை
இலங்கையோடு ஒப்பிடுவது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது.”
என்று அங்கு எழுதிவிட்டு,
இங்கு எழுதுகிறார்.
“தமிழ் பேசும் முகமதியர்கள்,ஈழத்தமிழர்களை அழித்தொழிக்க எப்படியெல்லாம் சிங்களவர்களுக்கு உதவினார்கள் என்றதை உணர்ந்த சீமான் ஒரு வீரத்தமிழனாய் பேசாப்பொருளை பேசத்துணிந்தார்” அதாவது.இலங்கையில் நடந்ததை தமிழகத்தோடு ஒப்பிடக்கூடாது.ஆனால் சீமான் சிறுபிள்ளைத்தனமாக ஆவணத்தில் ஒப்பிட்டு எழுதிவிட்டார்.
,வியாசன் அவர்களே! நன்றி! ஐயா.
Karunyan, Palladam
சகோதரி வளர்மதி நீஙகள் சீமான் அவர்களின் கருத்துக்களை ஒரு பொருட்டாக நினைக்கக்கூடாது. ஏனென்றால் தனது ஈழத்து அம்மாவுக்காக விடுதலைப்புலிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தியவர். இன்று அம்மா ஆட்சிக்கு வந்ததும் இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாய் இருக்கிறார்கள். இனி அரசியல் பண்ணவும் நானும் இருக்கிறேன் என்பதைக் காட்டிக்கொள்ளவும் என்ன செய்வது? எப்படியாவது வாழ வேண்டுமே. பிழைக்க வேண்டுமே. இப்படித்தான் இன்று நிறைய கருத்து விபச்சாரிகள் தமிழ்னாட்டில். இதில் ஒரு கொடுமை என்னவென்றால் இவர்கள் பின்னால் ஒரு இளைஞர் கூட்டம் வேறு. வாழ்க ஜனனாயகம்!
viyasan
இதைத் தான் "மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்" என்று ஈழத்தில் சொல்வார்கள். கருத்தை விளங்கித் திரிக்கிறாரோ, அல்லது விளங்காமல் குழப்பமடைந்து திரிக்கிறாரோ, என்னமோ தெரியாது ஆனால் கருத்துக்களைத் திரிப்பதில் சாலி காக்கா ஒரு விண்ணர் போல் தெரிகிறது. :-))

நாம் தமிழர் ஆவணத்தில், தமிழ்நாட்டிலுள்ள மொழிச் சிறுபான்மையினர்களைப் பற்றிய குறிப்பை ஈழத்தமிழர்களிடம் ஒப்பிட்டமை தவறு, என்பதற்கு விளக்கமளிப்பதற்காக.....அதாவது தமிழ்நாட்டில் வாழும் மொழிவழிச் சிறுபான்மையினர்களாகிய - மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் அனைவரும்- தமது மொழியையும், நலன்களையும் பாதுகாக்கவும் வளர்க்கவும், தனியாக மொழிவழி மாநிலங்களைக் கொண்ட இந்தியாவையும் - ஒற்றையாட்சியின் கீழ், சிங்களப் பெரும்பான்மையினத்தின் மொழி, கலாச்சார, பெளத்தமத விரிவாக்கத்தின் கீழ் ஒடுக்கப்படும் ஈழத்தமிழர்களின் நிலையையும் ஒப்பிடுவது, சிறுபிள்ளைத்தனமாகுமெனும் எனது கருத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல், புலம்பும் சாலிக்காக்காவைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.

சீமானும், நாம் தமிழர் இயக்கமும் தாய்த்தமிழகத்து மக்களின் நலன்களில் மட்டுமல்ல உலகமெலாம் பரந்து வாழும் தமிழர்களின் நலன்களிலும் அக்கறையுள்ள இயக்கம், அதை விட தமிழீழ விடுதலைக்கு உதவுவதைக் குறிக்கோளாகக் கொண்ட கட்சி, அத்தகைய கட்சியின் தலைவராகிய சீமான் - ஈழத்தமிழர்களையும், தமிழைப் பேசிக் கொண்டே அவர்களின் முதுகில் குத்திய முகம்மதியர்களின் முரண்பாடுகளையும் பேசாமால், வேறு யார் பேசுவார்கள்?

இனிமேலாவது, சாலி காக்கா அவர்கள் பதிலை வாசித்து விளங்கிக் கொண்டு அல்லது இன்னும் ஒரு சிலரிடம் விளக்கம் கேட்ட பின்னால், பதில் எழுதுவாரேயானால், தன்னுடைய நேரத்தை மட்டுமல்ல, மற்றவர்களின் நேரத்தையும் பதிலெழுதுவதில் வீணாக்கும் தேவை எழாது.
qwerty
நாம் தமிழர் ஆவணத்தை விளக்கிய வளர்மதி மற்றும் கீற்றுக்கு மிக்க நன்றி
தமிழீழநாதன்
மிகப்பெரிய வரலாறுகள் எழுதப்படுவது ஒரு சிரிய தொடக்கத்தில் இருந்தே.. அந்த சிரிய தொடக்கம் தொடங்கப்படும் போது நிகழ்வுகளில் நிற்பவர்கள் இதுவே நாளைய மிகப்பெரிய வரலாறு என்பதை அறியாதவர்களாய் தனது பணிகளை அர்ப்பணிப்போடு செய்வார்கள். அப்படித்தான் தொடங்கியது அந்த மாபெரும் புரட்சியாளனின் வாழ்க்கையும். மிகப்பரிய செல்வந்தன். அரசியல் தளத்திலே தனக்கென்று அதிகாரம் கொண்டவன் அத்தனையையும் துறக்கிறான் அந்த சேகுவேரா. அதிசிறந்த படிப்பான மருத்துவத்தை கற்று இருந்தபோதிலும் தன் இதயம் சுமந்த விடுதலை உணர்வால் அத்தனையும் துறந்து புரட்சியாளனாகிறான். இந்த பூமி பந்தில் எத்தனையோ புரட்சியாளர்கள் தோன்றி மறைந்து இருந்த போதிலும் இந்த யுகத்தின் புரட்சியின் மனித வடிவமாய் திகழ்பவன் சேகுவேரா. இந்த மாபெரும் தியாகி புரட்சியின் உலக எழுச்சியின் சின்னமாக மாறுவதை அவனுடைய தியாகத்தை பார்க்காத கண்களால் எப்போதுமே காணமுடியாது.

தனது இலட்சியத்திற்காக தனது பெற்றோர்களை விட்டு பிரியும் அந்த மோடியில் சேகுவேரா எழுதுகிறான் "எனது பலவீனமான கால்களையும், களைத்துப்போன நுரையீரலையும் எனது இதயம் சுமக்கும் விடுதலை உணர்வு சுமந்து செல்லும்" என்றான். தனது பூர்வீகமான அர்ஜண்டீனாவை விட்டு கியூபாவின் சாண்டாகிளாரா நகரை நோக்கி நடந்த அந்த கால்களுக்கோ... விடுதலை உணர்வை மட்டுமே சுவாசித்த சேகுவேராவின் இதயத்திற்க்கோ தெரியாது இந்த சேகுவேராவே நாளைய நூற்றாண்டின் புரட்சியின் சின்னம் என்பது.
மிகவும் நேர்மையோடு அவனது விடுதலை உணர்வை மதிக்க தவறியது அமெரிக்க ஏகாதிபத்தியமும் பொலிவீய அரசாங்கமும். போலிவீயாவில் இருந்த லாகுவேரா எனும் பள்ளி. அந்த மாபெரும் புரட்சியாளனை பள்ளியில்வைத்தே அமெரிக்க ஏகாதிபத்தியமும் பொலீவிய ஏவலும் கொன்றது. சேகுவேரா செய்த தவறு என்ன ? அடிமையான தேசத்தின் விடுதலை ? அடிமையின் விடுதலை பாவம் என்றால் உலகின் சுதந்திரம் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன ?. சேகுவேராவின் செயல்களை பாசிசமாக பார்த்தது ஏகாதிபத்திய வல்லரசுகள். ஆனால் அதே சேகுவேராவை பாசத்தின் அடையாளமாய் பார்த்தது அடிமைகளும் அவர்கள் வாழ்ந்த அடிமை தேசங்களும்.
தமிழீழநாதன்
ஒரு மனிதனின் சேவையை பாசமாகவும் பாசிசமாகவும் பார்த்த பார்வைகள் இந்த உலகத்தில் ஒன்றும் புதிது அல்ல... உலக எழுச்சியின் வடிவம் சேகுவேரா தொடக்கி.... தமிழர் தேசத்தின் எழுச்சியின் வடிவம் மேதகு வே பிரபாகரன் வரை அர்ப்பணிப்பு விடுதலை உணர்வை பாசமாக பார்த்தது அடிமை தேசம். அதையே பாசிசமாக பார்த்தது அடிமைபடுத்திய தேசம்.
அதே பார்வைதான் இன்று நிகழ்த்தபடுகிறது இன்று நாம் தமிழர் கட்சியின் ஆவணத்தின் மீதும். ஆண்டாண்டுகாலமாய் அடிமையாய் இருந்த இந்த தேசம் ஆங்கிலேயனிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெற்றவுடன் திராவிடம் இந்த தமிழனை அடிமை படுத்தியது. அந்த அடிமை விலங்கை உடைத்து தமிழனுக்கு என்று ஒரு அரசியல் கட்டுமானத்தை நிறுவ நினைக்கும் போது ஆதிக்க சக்திகள் பாசிசவாதிகளாக பார்த்து நிற்கின்றது. பாசத்தின் பிறப்பிடமாம் சேகுவேரா கூட பாசிசவாதிதான். யாருக்கு ? ஏகாதிபத்தியவாதிகளுக்கு என்பதை இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.
எனவே அதிகாரவர்கத்தின் ஏவலாளர்கள், தனது ஆதிக்க சக்தியின் பாசிச போக்கை மறைத்துக்கொள்ள விருப்புகிறவர்கள் ஒரு புரட்சியாளனை பாசிசவாதியாக சித்தரிக்கின்றனர். புரட்சியாலனையே ஏற்று கொள்ளாதவர்கள் அவனது கொள்கை விளக்க எட்டினை எப்படி ஏற்றுகொள்வார்கள் ?.
நாம்தமிழர் கட்சியின் ஆவணத்தின் மீது எத்தனையோ விமர்சனங்கள் இதுவரை வந்து இருக்கின்றது. அவை அனைத்தையும் இரண்டு முக்கிய வைகைகளாக பிரிக்கலாம். ஒன்று பெரியார் அவமதிப்பு மற்ற ஒன்று பாசிச போக்கு. பெரியார் அவமதிப்பு என்ற விமர்சனத்திற்கு அனேகமாக அனைவரும் ஏற்று கொள்ள கூடிய ஒரு விளக்கத்தை சீமான் அவர்களே ஜூனியர் விகடனின் தந்தாகிவிட்டது. இரண்டாவது வகையிலான ஒரு விமர்சனம் பாசிசபோக்கு. எழுத்தாளர் வளர்மதி அவர்களே இந்த பார்வைக்கு சொந்தக்காரர்.

நாம்தமிழர் இயக்கத்தினரையே பாசிச வாதிகளாக பார்த்தவர்கள் மத்தியில் ஆவணத்தின் புரட்சிய வரிகளை காட்டி பாசிசபோக்கை பகுதி பதியாக விளக்குகிறார் இவர். இதுவரை மூன்று பகுதி வந்தாகிவிட்டது. இனியும் பலபகுதி வரும்.
தமிழீழநாதன்
கட்டுரையின் பகுதி 1
ஒரு வரலாற்று ஆசிரியராய் தொடங்குகிறது இந்த கட்டுரை. "வரலாறு எழுதுதல் என்றுமே பொருள்கோடல் (இன்டெர்ப்ரெடடிஒன்) முயற்சிகளாகவே இருந்திருக்கின்றன" என்ற மிகப்பெரிய ஆய்வில் கிடைத்த ஒரு முடிவினை போல தொடங்குகிறது இந்த பகுதி. இந்த பகுதியிலேய இந்த கட்டுரை ஆசிரியரின் பார்வையை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

அன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவலாளர்கள் அந்த மாசற்ற மாவீரனை துளைத்து சேகுவேராவின் உயிர்குடித்த அந்த நொடியில் இரண்டு வரலாறு எழுத பட்டிருக்கின்றது. ஒன்று "எங்களது பொருள்கோடல் வேட்க்கையில் இடையூறாக இருந்த சேகுவேராவை சுட்டு வீழ்த்திவிட்டோம்" என்ற பெருமையை அமெரிக்கா எழுதியது.
இந்த வரலாறை பொறுத்தவரை சேகுவேரா ஒரு பாசிசவாதி. இதற்க்கு முக்கிய காரணம் வரலாற்றை பொருள்கோடல் நோக்கில் பார்த்த அமெரிக்காவின் சுயநல பார்வை.

சேகுவேராவின் இறப்பின் அடுத்த நொடியில் எழுதப்பட்ட இன்னும் ஒரு வரலாறு "எங்கெல்லாம் அநியாங்கள் நிகழ்கின்றதோ அங்கெல்லாம் அவதரிபான் சேகுவேரா என்பதை மெய்யாக்கியவன்" என்று. இந்த வரலாறு ஒரு பொருள்கோடல் பார்வையல்ல. சேகுவேரா என்ற புரட்சியாளன் செய்த தியாகத்தின் பார்வை. எனவே ஒரு வரலாற்றை எழுதுபவனின் பார்வையாளனின் பார்வையை பொறுத்தே வரலாற்றின் வடிவங்கள் மாறுபடும் என்பதை உணரவேண்டும்.
தமிழீழநாதன்
மேலும் இந்த கட்டுரையாளர் தனது முதல் பகுதியின் இறுதியின்
கடந்த 80 வருடங்களாக, தமிழ் நாட்டில் ஆதிக்கத்தில் (யார் மீது ஆதிக்கத்தில் இருந்தது இந்த திராவிடம்) இருக்கும் திராவிடக் கருத்தியலை – அது சமூகத்தில் முற்போக்கான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது, பார்ப்பனியத்திற்கு அணைபோட்டிருக்கிறது என்று நிலவும் ஒருமுகமான கருத்தொருமிப்பை வீழ்த்தி, தலைகீழாகப் புரட்டிப் போட்டு, பார்ப்பனியத்தைக் காட்டிலும் மோசமான சமூகச் சீரழிவை உருவாக்கியது திராவிடக் கருத்தியலே; என்று கொட்டி தீர்க்கின்றார்.
யாரை வீழ்த்தியது இந்த திராவிடம் ? என்ற கேள்விக்கு எந்தவித சாதகமான பதிலையும் சொல்லாமல் நீள்கிறது இவரது வரலாற்று பார்வை. ஆரியத்தை வீழ்த்த வந்தது திராவிடம் என்று மார்தட்டிகொள்ளும் மனோபாவம் திராவிடத்திற்கு உண்டு என்றால் இன்று அரியணையில் இருப்பது திராவிடமா ? ஆரியமா ?. இல்லை திராவிட முகமூடியில் ஆரியமா ? நேற்று ஈழத்தில் ஒன்றேமுக்கால் லட்ச உயிர்கள் கொன்றொழிக்க படும் போது அரியணையில் இருந்தது திராவிடரா ? தெலுங்கரா ? இல்லை திராவிட முகமூடியில் தெலுங்கரா ?
வரலாற்று பார்வையை இந்த கேள்விகளுக்கு பதில்தேடும் விதமாக அமைந்து இருந்தால் நாம்தமிழர் கட்சியின் அவசியம் அந்த ஆவணத்தின் முக்கியத்துவம் வெளிப்பட்டு இருக்கும்.
தமிழீழநாதன்
இதே பகுதியின் இன்னும் ஒரு இடத்தில் அவர் கூறுகின்றார் "பார்ப்பனியமும் திராவிடக் கருத்தியலும் எதிரெதிரானவை என்ற கருத்தியலைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு, 'இரண்டும் எதிரெதிரானவை அன்று, உடனொட்டிப் பிறந்தவையே' என்று ஒரு தலைகீழ் கருத்துப் புரட்சியைச் செய்வதே “நாம் தமிழர்” கட்சி ஆற்றவிருக்கும் கருத்துப் புரட்சி என்று ஆவணம் மிகத் தெளிவாகவே விளக்கியிருக்கிறது."
இந்த இடத்தில் நாம் வரலாற்றை கொஞ்சம் பின்னோக்கி பார்க்கவேண்டும். தமிழரின் ஆதிகுடி எங்கு இருந்து வந்தது என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். வரலாற்று பார்வையாளர்கள் சிலர் இந்த தமிழினம் சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்து வந்தவர்கள் என கூறுகின்றனர். அதாவது இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தான் வழியாக பாய்கின்ற சிந்து நதியின் நதிக்கரையில் தோற்றிய நாகரீகம். சிந்து வெளிப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பது பற்றி உறுதியாக அறிந்து கொள்வதற்கான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனாலும், ஆய்வாளர்கள் பல்வேறு ஒன்றுக்கொன்று முரண்படுகின்ற கருத்துக்களை முன் வைத்து வாதிட்டு வருகின்றனர். சிந்து வெளி பண்பாட்டுக்கு உரியவர்கள் திராவிட இனத்தவர்களே என ஒரு சாராரும், இல்லை ஆரியரே என இன்னொரு பகுதியினரும் கூற வேறு பலர் பலவிதமான கலப்பினக் கொள்கைகளையும் முன் வைத்துள்ளனர்.
தமிழீழநாதன்
ஆதி தமிழர்களின் நூல்களில் சிந்து சமவெளி பற்றியோ, திராவிடம் என்ற சொல்லாடல் பற்றியோ எந்த ஒரு குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதித்தமிழனும் அவனது நாகரீகமும் தோன்றிய முதல் இடம் லெமூரியா கண்டமே என்று இன்னும் ஒரு வரலாறும் உண்டு. லெமூரியா அல்லது லெமுரியா .. சுற்றிலும் கடலால் சூழப்பட்டு இருந்தாலும் நடுவே இன்று நம்மிடையே இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை போல் ”மேரு” என்ற மலைத்தொடரைத் தன் நடுவே கொண்டு இருந்தது. அதில் தேன் போன்ற சுவையை உடைய ஆறுகள் உற்பத்தியாகி ஓடின. அவைகள் கிழக்கேயும், மேற்கேயும் பெருகி ஓடி கடல்களில் கலந்தன. மலைத் தொடரிலும், அந்த ஆறுகள் ஓடிய பகுதிகளிலும் பசுமைத் தாய் தனது கரங்களை நீட்டி அந்த லெமுரியா கண்டத்தையே பசுமையாக்கி வைத்து இருந்தாள்.
இக்கண்டத்தின் ஒரு கிழக்கு முனை ஆஸ்திரேலியா கண்டத்துடனும், மேற்கு முனை ஆப்ரிக்காக் கண்டத்தை ஒட்டிய மடகாஸ்கர் வரையும் பரந்து விரிந்து கிடந்தது. மிக வலிமை பொருந்திய ஒரு கூட்டம் மெல்ல மெல்ல லெமுரியக் கண்டத்தின் பல பகுதிகளையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. நாளடைவில் இவர்கள் இருந்த நிலப்பரப்பின் பெயராலேயே அழைக்கப்பட்டனர். பின்னர் அது “பாண்டியன்” என்று மறுகியது. இந்த கண்டத்தில் உள்ளவர்கள் நாக மொழி பேசியவர்கள் எனவும் இந்த தீவை நாவளம் தீவு எனவும் அழைத்ததாக வரலாற்று பதிவு இருக்கின்றது. இவையெல்லாவற்றையும் விட பண்டைய தமிழ் நூலில் இந்த கண்டத்தில் ஓடிய பகுருளி ஆறு பற்றிய சொல்லாடல் இருப்பது இந்த கண்டத்தில் இருந்து தொன்றியவற்கே தமிழர்கள் என நினைக்க தூண்டுகிறது.
எனவே சிந்து சமவெளி பகுதியில் இருந்து வந்தவர்கள் ஆரியர்கள் ஆனாலும் அவர்கள் திராவிடர்கள் ஆனாலும் அவர்கள் தமிழர்கள் இல்லை என்ற உண்மையை இந்த கட்டுரை ஆசிரியர் மறைத்து இருகின்றார். சிந்து சமவெளி பெற்றெடுத்த ஆரியர்களும் திராவிடர்களும் ஒன்னு என்பதும் அவர்களை வீழ்த்தும் தமிழ் தேசிய அரசியலே நாம்தமிழர் கட்சியின் அரசியல் என்று ஆவணம் சொல்கிறது. ஒரு அடிமையின் புரட்சி என்பது அவனுடைய சுயௌரிமை... பசிசமல்ல..
தமிழீழநாதன்
கட்டுரையின் பகுதி 2
இந்த பகுதியின் முழுக்கவும் கட்டுரையாளர் யூதர்களை கொன்றொழித்த கிட்லரின் களுக்கு இலச்சினையோடு (அடையாளம் ) தொடங்குகிறது இந்த கட்டுரை. அவர் பாசிச தோற்றத்தின் மூன்று வித அடிப்படை கூறுகளை பதிவு செய்கின்றார்.
1. அதிதீவிர தேசியவாதம் (உல்ட்ர – நடிஒனலிச்ம்), 2. தேசப்புத்துயிர்ப்பு (பலிஙெனெசிச்), 3. வெகுமக்கள் தன்மை கொண்டிருத்தல் (பொபுலிச்ம்)
தேசத்தை எந்தக் கலப்படமும் அற்ற தூய்மையான ஒரு இனக்குழுவாக முழுச் சுய உணர்வோடு வரையறுக்கும்போது மட்டுமே அது அதிதீவிர தேசியவாதமாக, பாசிசத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாக அமைந்திருக்கும் என்று வலியுறுத்துகிறார்.
தமிழீழநாதன்
இவர் முன்மொழிகின்ற இந்த வரையறையில் இவர் பார்க்க மறந்த பார்வைகளே இந்த ஆவணத்தை பாசிச போக்குடையது என்று வர்ணிக்க வழிவகுத்திருக்கும் என்று நான் நினைகின்றேன். ஒரு இனத்தில் கலப்பிடம் இருக்க வேண்டுமா ? இல்லையா ? என்பது அந்த இனத்தின் உரிமை. அந்த இனம் கலப்பிடத்தை விரும்பாத போது தன்னை தானே சுத்திகரிக்க நினைத்து கொள்வது இயல்பு. தமிழன் தொன்று தொட்டு அடிமைகளாக இருக்க கூடாது என்று நினைத்து தமிழனுக்கு என்று ஒரு அரசியலை அவன் நிறுவ நினைப்பது அவனுடைய சுய உரிமை. இதில் என்ன பாசிசம் இருக்கின்றது ?. மாறாக தமிழன் தனது அதிகார பலத்தை அருகில் உள்ள மலையாளி மீதோ, கன்னடன் மீதோ அல்லது தெலுங்கன் மீதோ பிரயோகித்தால்தான் அது பாசிசம். இந்த உண்மையை உணர மறுப்பவர்களே ஆவணத்தை பாசிசமாக பார்கின்றார்கள்
“தேசப்புத்துயிர்ப்பு என்பது பழைய பொற்காலம் ஒன்றை மீட்டெடுக்கும் நோக்கில் அமைந்த கருத்தமைவு அன்று. தேசத்தின் மாறாத பழைய கூறு என்பதாகக் கருதப்படும் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு, தேசத்தைப் புதிதாகப் பிறக்க வைத்தல் என்ற பொருளிலேயே இதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்.
தமிழீழநாதன்
ஏற்க்கனவே இருந்த தேசத்தையே கட்டியெழுப்ப நினைத்தே இந்த ஆவணம் எழுதப்பட்டது. ஆம். மேதகு வே பிராபகரன் கட்டியமைத்த உலகில் எங்குமே காணமுடியாத ஈழ தேசத்தை போன்றதொரு அற்ப்புதமான தேசத்தை இந்த தாயக தமிழகத்தில் நிறுவுவதே இந்த ஆவணத்தின் நோக்கம். இதற்க்கு அமைப்பு மாற்றம் பயன் தராது…. அடிப்படை மாற்றமே பயன் தரும்….
//அத்தகைய ‘உறக்க நிலை’யில் இருந்து அவர்களை விழித்தெழச் செய்து, தேசத்தைப் புதிதாகப் பிறக்கச் செய்யும் தமது நிகழ்ச்சி நிரலில் முழு வேகத்தோடும் உற்சாகத்தோடும் பங்கேற்கச் செய்வதே அத்தகைய அதிதீவிர தேசியவாதம் வெகுஜனத் தன்மை கொண்டிருப்பதன் பொருள். //
உறக்கத்தில் இருக்கும் தமிழனை மீட்கவே... அவனுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை போக்கவே இந்த அரசியல் புரட்சி. இது வெகுஜன தன்மை கொண்டே வென்று நிற்கும்.
தமிழீழநாதன்
கட்டுரையின் பகுதி 3.
இந்த கட்டுரையின் ஆசிரியர் ஒரு ஒருங்கிணைந்த தேசம் என்பதற்கான ஒரு சுயாதின விளக்கத்தை கொடுத்து அதன் பிறகு பாபர் மசூதியை இடித்த கரசேவர்கள் போல் நாம் தமிழர் கட்சியினர் ஏற்க்கனவே கட்டியிருக்கும் ஆரியர்கள் - அன்னியர்கள் ஆட்சி செய்ய ஒரு முகமூடியைபோல் பயன்படுத்தும் திராவிடம் என்ற கோட்டையை இடித்து தமிழ் தேசிய அரசியல் கோட்டையை கட்ட நினைக்கின்றார்கள் எனவே இந்த ஆவணம் பாசிசபோக்கு உடையது என்கின்றார்.
ஒரு குடியானவன் தனது சொந்த இடத்தில் ஏற்க்கனவே இருக்கும் பாப்பின் புற்றினை நீக்கி தனக்கான வாழ்விடத்தை கட்ட நினைப்பது பாசிசமா ?. இடத்தை அந்நியர்களுக்கு விட்டுகொடுத்துவிட்டு அடிமையாய் தமிழர்கள் கிடந்தால் தமிழர்கள் தேசியவாதிகள். அவர்கள் சுயுரிமையான தமிழ் தேசியம் பற்றி சிந்தித்தால் பாசிசவாதிகளா ? பாம்புபுற்றை நீக்கி தனக்கென்று ஒரு வீட்டை கட்டுவது பாசிசம் என்றால் நீங்கள் என்ன கொடியவிசம் உடைய பாம்பா ?. நீங்கள் தமிழர் நலம் கொல்லும் பாம்பு என்றால் நாம் தமிழர் கட்சி ஆவணம் அதை கொல்லும் பாசிசமே.
தமிழீழநாதன்
மீட்டும் தொடக்கத்தில் இருந்து... சேகுவேரா போலீவியாவிர்க்கு செல்வதற்கு முன்பு கியூபா மக்களுக்கு ஒரு கடிதம் எழுதினான். " என்னருமை உறவுகளே நான் உலகில் எங்கு இருந்தாலும் கியூபாவின் பிள்ளை, எனது சேவை உங்களிடம் முடிவடைந்து விட்டது. எனவே எனது சேவை தேவைப்படும் இடம்நோக்கி செல்கிறேன்" என்றான். எனவே கியூபாவினர் அந்த பிரட்சியாளனின் உடலையாவது மீட்கவேண்டும் என்ற முனைப்பில் இருந்தனர். உலகிற்கு கொல்லப்பட்ட பிறகு அந்த புரட்சியாளனின் உடல் எங்கே புதைக்க பட்டது என்று எவருக்கும் தெரியாது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் உருண்டோடியது. அந்த புரட்சியாளனை புதைத்த அதிகாரி இடத்தை சொல்ல சேகுவேராவின் எலும்புத்துண்டுகள் கியூபாவிற்கு கொண்டுவரப்பட்டது. அன்று கியூபா தேசமே தனது பிள்ளையை இழந்ததுபோல் துக்கம் கொண்டாடியது.
செகுவேராவில் உடலை பார்த்த பிடல்காஸ்ட்ரோ கதறி அழுது சொன்னார் " இவன் நமது தேசத்தின் பிள்ளை" என்று. எனவே இந்த சேகுவேராவின் வரலாறு இரண்டு விதமாக எழுதப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்திய பிரியர்கள் ஒரு புரட்சியாளனை பாசிசவாதியாக வரலாற்றை பதிந்தனர். கியூபாவின் மக்கள் சேகுவேராவை உலக எழுச்சியின் வடிவமாக பார்த்தனர். கதை ஒன்றே காட்சிகள் இரண்டு.
தமிழீழநாதன்
மாபெரும் தலைவன் பிரபாகரன் தமிழின மக்கள் அவதிபடுவதை பொறுத்துக்கொள்ள முடியாத கட்டாயத்தின் பேரிலேயே தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பை நிறுவினான். சிங்களனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினான். ஒரு சிங்கள அப்பாவிகளை கூட பிரபாகரன் கொல்லவில்லை... சிங்களவர்கள் பிரபாகரனை பாசிச வாதியாகத்தான் பார்த்தனர். ஒரு பவுத்தவ விகாரை கூட இடிக்கவில்லை... ஆனாலும் பாபர்மசூதியை இடித்த கரசேவர்களாக பார்த்தனர். ஆனால் உலகம் முழுமைக்கும் உள்ள பன்னிரண்டு கோடி தமிழினமும் பிரபாகரனை ஒரு பாசமுள்ள தாயாக பார்த்தது.
இப்படித்தான் நாம்தமிழர் கட்சியின் ஆவணத்தை பாசிச அறிக்கையாக ஒரு சிலர் பர்கின்றர்கள். ஆனால் எட்டுகோடி தமிழினம் அந்த ஆவணத்தை ஒரு தமிழ்தேசிய புரட்சிக்கான அழைப்பிதழாக பார்க்கின்றது. இந்த அறிக்கையை படித்துவிட்டு பாசிசத்தின் பாட்டன் அடோல்ப் கிட்லரை அவனுடைய சுயவரலாற்றை இந்த அறிக்கையோடு ஒப்பிட்ட கட்டுரையாளர்கள் உலக புரட்சியாளர்களின் ஒன்றை குறியீடு சேகுவேராவின் வரலாற்றையோ அல்லது உலக தமிழினத்தின் எழுச்சியின் வடிவம் பிரபாகரனையோ ஒப்பிட மறந்து போனது காலக்கொடுமை. இங்கே இவர்களின் சுயலாப கணக்கின் சுயரூபம் வெளிப்படையாகிறது.
அடிமைதேசத்து மக்கள் மீது அளவற்ற பாசம் கொண்ட சேகுவேராவின் தியாகமிக்க வீரம்..... கொடுமையின் கொட்டடியில் அன்றாடும் அவதியுறும் தமிழீழ மக்கள் மீது நேசம் கொண்ட பிராபகரனின் தீரம் மிக்க தியாகம்..... இவைகளை பாசிசமாக பார்க்கும் ஆதிக்க வெறியர்களுக்கு இந்த ஆவணமும் பாசிசமாகவே தோன்றும்.
தமிழீழநாதன்
உண்மையில் தமிழ் மக்கள் மீது கொண்டு இருக்கும் ஈடு இணையற்ற பாசமே இந்த ஆவணம்.... பாசிசமல்ல...
அடையாளங்கள் பற்றிய கேள்விகளை எழுப்புகின்ற காலம் தமிழினம் முன்னே எழுந்து நிற்கிறது. எனவே தமிழினம் தனக்கான அடையாளங்களை தனித்துவ படுத்திக்கொள்ள துணிந்து விட்டது. தமிழனை கலப்பினத்திற்கு உள்ளாக்கும் திராவிட அரசியலுக்கும், வந்தேறி வாழ்விகளுக்கும் தமிழ் பிள்ளைகள் பாசிசவாதிகளே.
ஒரு கொடிய மிருகத்தின் கையில் சிக்கிய தனது தமிழ் குழந்தையை காக்க கொடிய மிருகத்தை கொல்லுகிறான் புரட்சியாளன். இதற்க்கு முக்கிய காரணம் புரட்சியாளனின் பாசிசம் அல்ல... தமிழ் பிள்ளைகள் மீது கொண்ட பாசம். அத்தகைய புரட்சியாளன் கையில் ஏந்தும் புத்தகமே நாம்தமிழர் கட்சியின் ஆவணம்.
Periyasamy
தமிழீழநாதன்!

சங்க இலக்கியத்தில் காணப்படும் குமரிக்கண்டம் என்னும் நிலப்பரப்பு லெமூரியா கண்டத்தை குறிப்பதாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கூட்டம் பிதற்றி திரிகிறது. லெமூரியா கண்டம் என்பது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில புவியியல் அறிஞர்கள் முன்வைத்த கோட்பாடு. இந்தியாவானது ஆப்பிரிக்காவுக்கு அருகில் இருக்கும் மடகாஸ்கர் போன்ற தீவுகளை உள்ளடக்கி ஆஸ்திரேலியா வரை நீண்ட நிலப்பரப்பாக இருந்தது என இந்த அறிஞர்கள் நம்பினார்கள். ஆனால் “tectonic plate” மற்றும் “continental drift” ஆகிய கோட்பாடுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவுடன் இந்த லெமூரியா கண்டம் கோட்பாடு கழித்துக்கட்டப்பட்டது (பூமி தட்டையானது என்னும் ஆரம்ப கால அறிஞர்களின் கோட்பாட்டை பிற்பாடு வந்த அறிஞர்கள் பூமி உருண்டையானது என்னும் ஆதாரப்பூர்வமான கோட்பாட்டால் முறியடித்ததை போல்). ஆனால் தமிழ் அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கூட்டம் இன்னமும் லெமுரியா கண்டம் என்னும் கப்ஸாவை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறது. செம்மொழி தமிழ் மாநாடு கூத்தின் போது இந்த லெமூரியா கண்டத்தை அகழாய்வு செய்ய நிதி வேறு ஒதுக்கப்பட்டது (!). மக்கள் பணம் எப்படியெல்லாம் பாழாகிறது பாருங்கள். அப்படியே லெமுரியா கண்டம் இருந்ததாக ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும் அது இருந்ததாக சொல்லப்பட்ட காலம் முப்பது லட்சம் ஆண்டுகளுக்கும் முன். ஆனால் மனித இனம் தோன்றி வெறும் ஒரு லட்சம் ஆண்டுகள் தான் ஆகிறது. அதிலும் நாடு, நகரம் ஆகிய அமைப்புக்களை ஏற்படுத்தி மனிதன் நாகரீகத்தோடு வாழத்தலைப்பட்டது கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் தான். இங்கே லெமூரியா கண்டம் எங்கே வந்தது?. கல் தோன்றா மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி என்னும் இன்னொரு கப்ஸாவை எடுத்து விடவேண்டியது தான். தமிழ் பேசும் மக்கள் உலகம் பூராவும் ஏன் அடி தின்ன மாட்டார்கள்?. ஜப்பானிய தமிழறிஞர் பேராசிரியர் கரஷிமா அவர்கள் “Tamil Nadu is suffering from intellectual vacuum” என்று சும்மாவா சொன்னார்?.
Periyasamy
சிந்துசமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று சொல்வது இன்னொரு பேத்தல். அது திராவிடர் நாகரிகமாக இருக்கலாம் என்று ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆதாரங்கள் சரியாக கிடைக்கவில்லை. அவ்வளவு தான். நீ நம் ஊர் தமிழறிஞர்களை அடியொற்றி எதையும் எழுதாதே. நம் ஊர் தமிழறிஞர்களில் மிகப்பலருக்கு ஒரு இழவும் தெரியாது. இவர்களுக்கு அறிவியல் பூர்வமாக மொழியை அணுகும் முறை தெரியாது. மற்ற மொழிகள் குறித்தோ கலாச்சாரங்கள் குறித்தோ கொஞ்சமும் புலமை கிடையாது. வெற்றிலையை குதப்பிக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்து அடுக்கு மொழி அலங்கார வசனம் பேசி ‘கப்ஸா’ விடும் ரகம் இவர்கள் எல்லாம். இந்த தமிழறிஞர்கள் அனைவரும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் கும்பல். ஆந்திர மாநிலத்திலே ஒரு பழமொழி சொல்வார்கள். “தெலுங்கு தேட்ட (தேன்), கன்னட கஸ்தூரி, அரவமு (அதாவது தமிழ்) அர்தவானமு (வெறும் ஓட்டை!)”. இந்த பழமொழிக்கு தமிழறிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கும்பல் என்ன பதில் சொல்லப்போகிறதோ தெரியவில்லை. மட்டுமல்லாமல் தமிழகத்தில் பேச்சு வழக்கில் இருக்கும் தமிழை ”dabbaa language” என்று வெளியாட்கள் குறிப்பிடுவார்கள். ஈழத்தமிழ் வழக்கு கொஞ்சம் இனிமையானது என கேள்விப்பட்டிருக்கிறேன். கொஞ்ச காலத்துக்கு முன்னர் தன் குடும்ப வளர்ச்சி அரசியலுக்காக ஒரு அரசியல்வாதி ‘தமிழ் மாநாடு’ என்னும் பெயரில் பெரும் செலவு செய்து ஒரு கூத்தை கோவையில் பல நாட்கள் அரங்கேற்றினார். அந்த கூத்து தொடங்குவதற்கு முதல் நாள் அவர் தொலைக்காட்சியில் தோன்றி “தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாய்” என்று ஒரு அபத்தத்தை பேசினார். இந்த அபத்தம் ’டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் அப்படியே செய்தியாக வெளியாகி பின்னூட்டங்கள் வழியே சந்தி சிரித்தது. உண்மையை சொன்னால் தமிழ் திராவிட மொழிகளுக்கே (கன்னடம் மற்றும் தெலுங்கை பொறுத்த மட்டில்) தாய் கிடையாது. பண்டொரு காலத்தில் இந்தியா முழுவதும் ஒரு திராவிட மொழியை மக்கள் பேசினார்கள் என்று கூறுவார்கள். (சிந்துசமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமாக இருக்கலாம் என்பது இன்று வரை ஒரு சந்தேகம் மட்டுமே) அந்த பழைய திராவிட மொழியானது காலப்போக்கில் வட, நடு மற்றும் தென் பிரிவுகளாக பிரிந்தது. அப்படி பிரிந்த நடு திராவிட மொழியில் இருந்து தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் உருவாயின. தென் திராவிட மொழியில் இருந்து தமிழ், கன்னடம், துளு ஆகிய மொழிகள் உருவாகி பிரிந்ததாக கூறுவார்கள். இங்கே உலக மொழிகளுக்கெல்லாம் தாயாக தமிழ் எங்கே வந்தது? சிந்து சமவெளி நாகரிகம் எப்படி தமிழ் நாகரிகமாக ஆனது?. தமிழுக்கு இருக்கும் பெருமையெல்லாம் மூன்று. ஒன்று, தமிழ் மொழியானது தான் இருந்து பிரிந்து வந்த தென் திராவிட மொழியை இயல்பில் ஒத்தது (ஒரு தாய்க்கு பல பிள்ளைகள் இருந்தாலும் ஒரே ஒரு பிள்ளை மட்டும் அசப்பிலும் இயல்பிலும் தாயைப்போல இருந்தால் எப்படி இருக்கும்?). இரண்டு, தமிழுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட முறையான மற்றும் தொடர்ச்சியான இலக்கண, இலக்கிய மரபு உண்டு. உலகத்தில் வெகு சில மொழிகளுக்கு மட்டுமே இந்த பெருமை உண்டு. மூன்று, முடிந்த வரை வட மொழி தாக்கத்தை தவிர்த்து தன் தனித்தன்மையையும் திராவிடத்தன்மையையும் முடிந்த வரை காப்பாற்றிக்கொண்ட மொழி தமிழ். கன்னடம், தெலுங்கு ஆகியவற்றுக்கு இந்த யோக்கியதை கிடையாது. அவ்வளவு தான் விஷயம். இங்கே சிந்து சமவெளி நாகரிகம் எப்படி தமிழ் நாகரிகமாக ஆனது?. உன் போன்ற ஆட்கள் பல தமிழ் அமைப்புக்களிலும் அரசியல் கட்சிகளிலும் நிறைந்திருப்பது அல்லாமல் தலைமைத்துவம் வேறு கொடுப்பதால் தமிழன் முட்டாளாக இருந்து பக்கத்து மாநிலங்களில் தொடங்கி உலகம் பூராவும் அடி தின்கிறான். கல்வியில் சிறந்த மலையாளிகள் தமிழர்களை தாழ்வாக நினைப்பதை குறை சொல்ல முடியாது.
Periyasamy
தமிழ் நாடு என்பது ஏனைய மாநிலங்களை போல் மொழிவாரி அடிப்படையில் அமைந்த மாநிலம். இதில் தமிழ்ப்பின்னணி கொண்ட மக்கள் தங்கள் நலன், மொழி, கலாச்சார அடையாளம் மற்றும் வரலாறு ஆகியவற்றை காப்பாற்ற முழு உரிமை உள்ளவர்கள். இது அவர்கள் கடமையும் கூட. இதில் குறுக்கிட மற்றவர்களுக்கு உரிமை கிடையாது. திராவிட அரசியல் என்பது தமிழ் மக்களின் மீதான ஒரு பெரும் அடாவடித்தனம் (ஓனத்துக்கு தமிழகத்தில் பொது விடுமுறை அளிப்பது மாதிரியான செயல்பாடுகள்). இலங்கை என்பது பல்லின மக்களுக்கும் உரிமையுள்ள தீவு. அத்தீவின் வடகிழக்கு பகுதி பாரம்பரியமாக தமிழர் வாழும் பகுதி (எண்ணூறு ஆண்டுகளுக்கும் மேல்). அந்த வடகிழக்கு பகுதியை பிரித்து விடாத வரை ஒட்டுமொத்த இலங்கையை சிங்களர் அல்லது பவுத்தர்களின் தீவாக மட்டும் ஏற்க முடியாது. மேலும் கர்நாடகத்தில் ஊருக்கு ஊர் கன்னட கொடி பறக்கும் போது தமிழகத்தில் தமிழர்களுக்காக கட்சி நடத்தக்கூடாதா? இங்கே பாசிசம் எங்கே வந்தது?
THAMIZHARUVI.
Why should we botherd about past history?. The present situations are enough for us to decide our future.The Indian Constitution itself clearly stated that 'India-union of states'.But since idepndence, Thamiz Naadu was neglected and sidelined as an unwanted child. Itis an apt time to think ,What is to be done?.
rahul dravid
/இத்தகைய இனத்திரிபில் இருந்து, தமிழ் இனத்தையும் தமிழ் மொழியையும் அதன் தூய நிலைக்கு மீட்பதே ஆவணம் முன்மொழியும் அரசியல். இது தேசிய வாதமன்று. தூய இனவாதம்./

ஆவணம் வந்தவுடன் இனவாதம் என்ற புலம்பல்..
muthukumar
வளர்மதி,

ஒப்புநோக்கல்களும், உதாரணங்களும் மிகத் துல்லியமாக பொருந்துவதாகவே அமைகிறது. அடுத்ததாக இவர்களது மதச்சார்பின்மை ஆசீவகமே சிறந்த மதம் அணுவியமே உயர்ந்த தத்துவம் என்பதாக ஒரு பிலசாபிகல் பாசிசத்தை நோக்கிச் செல்லும் என்று கூறலாம். நோம் சாம்ஸ்கி, ஸ்டாலின் வரிசையில் டெமாக்ரிடஸ், இந்திய அணுவியம் ஆகியவற்றையும் ஒற்றை அணுவியமாகக் குறுக்கி மதச்சார்பின்மையை இன்னும் 'தெளிவாக' வரையறுக்கலாம். ஆனால் இவர்களது உண்மையான அஜெண்டா இன்று பல்வேறு வடகிழக்கு மாநிலங்களிலிருந்து இங்கு வந்து அடிமைச் சேவகம் செய்யும் உதிரி அடித்தள மக்களுக்கு எதிரானதாக இருக்க வாய்ப்புள்ளது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.