கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

எந்த விடுதலை இயக்கமும் மரணங்களை, தியாகங்களை, அர்ப்பணிப்புகளை, இழப்புகளை எதிர் கொள்ளாமல் தனது இலட்சியத்தை அடைய முடியாது. தமிழீழ விடுதலை இயக்கம் உலகில் உள்ள எந்த விடுதலை இயக்கத்திற்கு சளைத்ததல்ல என்று வரலாற்றில் நிரூபித்து இருந்தது. இருப்பினும் இன்று பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது.

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு, கடந்து போன மூன்றாண்டுகளை மீள்பார்வை செய்தால் சிற்சில அசைவுகளைத் தவிர பெரும் மாற்றங்கள் ஏதும் மூன்று ஆண்டுகளில் நடைபெற வில்லை என்பது கண் கூடாக‌த் தெரிகின்றது.

இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் அரசுகளின் உதவியுடன் சிங்கள பாசிச அரசு ஈழத்தின் மீது ஈவு இரக்கமற்ற போரை நடத்தி முடித்தது. விடுதலைப் புலிகளின் தலைமையையும், அவர்களின் இராணுவ, சமூக, அரசியல் கட்டமைப்புகளையும் சிதைத்து அழித்து, ஈழத்தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து, பல இலட்சம் மக்களை முள்வேலி முகாம்களில் சிறைபிடித்து சித்ரவதை செய்து இரத்த வெள்ளத்தில் ஈழம் மூழ்கடிக்கப்பட்டது.

இந்தப் போரில் உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களும், அனாதையாக்கப்பட்ட பல்லாயிரம் குழந்தைகளும், விதவையாக்கப்பட்ட ஒரு லட்சம் பெண்களும் தொடர்ந்து படும் அவலங்களும், துயர்களும் ஈரமுள்ளவர்களின் நெஞ்சு குலைகளைப் பதற வைப்பதாக இன்றும் உள்ளது.

சிறைப்பிடிக்கப்பட்டு, சித்ரவதை முகாமிகளில் உள்ள போர்க்கைதிகள் கதி என்ன ஆயிற்று? அவர்களில் எத்துணை பேர் காணாமல் போனவர்கள் பட்டியலுக்குள் கொண்டு சேர்க்கப்பட்டனர்? சர்வதேசச் சட்டங்களும், மனித உரிமைகளும் போர்க்கைதிகள் விசயத்தில் கடைபிடிக்கப்பட்டதா என்று எவரும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை.

சனநாக, கம்யூனிச மூகமுடிகள் அணிந்த இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா என அனைத்து அரசுகளும் தங்களுக்குள்ள முரண்பாடுகளை தள்ளி வைத்து விட்டு ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு, மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை முதலில் முறியடித்தன. சென்ற ஆண்டு, அமெரிக்கா- சீனா முரண்பாட்டினால் மீண்டும் ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஏற்கப்பட்டுள்ளது.

தற்பொழுது, ராசபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க எழுந்த தமிழக மக்களின் போராட்டங்கள் படிப்படியாக வடிந்து வருகின்றது.

மூவர் தூக்கு தண்டணை ரத்து செய்ய எழுந்த எழுச்சியும் தற்காலிக ஒத்திவைப்பிற்குப் பின் தணிந்து உள்ளது.

மூன்றாண்டுகள் முடிந்த பின்பும் எந்த சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் முள்ளிவாய்க்காலுக்குள் சென்று உண்மை நிலையை அறிய முடியவில்லை என்பது யதார்த்த உண்மை. முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்று முழுமையான தகவல்கள் இவ்வளவு தகவல் தொடர்பு வசதிகள் நிறைந்த உலகில் வெளிவராமல் ஆழமாய்ப் புதைக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பல காரணங்கள் இருப்பினும், அடிப்படையான முதன்மை காரணம் தமிழீழப் போராட்டத்தின் நட்பு சக்திகளுக்கு இடையிலான ஒற்றுமை இல்லாதது மட்டுமே!

தமிழீழ விடுதலை இயக்கம் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள், விடுதலைப்புலி எதிர்ப்பாளர்கள் என்று ஒற்றை அடையாளமாக சுருங்கி இணைய தளங்களிலும் நாளேடுகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஒருவரை ஒருவர் கடித்துக் குதறாத குறையாக‌ தடித்த வார்த்தைகளால் குதறிக் கொண்டு இருக்கிறார்கள். உலக முழுவதும் விடுதலைக்காகப் போராடும் எல்லா இயக்கங்களுக்கும் நட்பு சக்திகள் என்ற பரந்துபட்ட வளையம் இருந்தன; இருக்கின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மட்டும்தான் அத்தகைய பரந்துபட்ட நட்பு முகாம், வளையம் இல்லை என்பது யதார்த்தம். அப்படி இல்லாது போனதற்கான‌ புறநிலை, அகநிலைக் காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
 
பரந்துப்பட்ட பார்வையில் ஈழ விடுதலையில் இரண்டு முகாம்கள் உள்ளன. மனிதகுல விடுதலைக்கான சனநாயகத்திற்கான, மனித உரிமைகளுக்கான, சமத்துவத்திற்கான வரலாற்று சக்கரங்களை முன்னோக்கி உந்தித் தள்ளும் முகாம். இவற்றையெல்லாம் வெறுமனே வார்த்தை ஜாலங்களாக்கிக் கொண்டு நிலவுகின்ற ஒடுக்குமுறையைத் தக்க வைக்க அநீதியான போர்களை நடத்தும் எதிர் முகாம்.

*விடுதலைப் புலிகள்

*விடுதலைப் புலிகளை எந்த விமர்சனமுமின்றி முழுமையாக ஆதரிக்கும் சக்திகள், பல்வகைப்பட்ட தமிழ்த் தேசிய இயக்கங்கள், குழுக்கள், தனிநபர்கள்.

*குறைந்த அளவிற்கு புலிகளை விமர்சனம் செய்யும் சக்திகள், இயக்கங்கள், குழுக்கள், தனிநபர்கள்

*கடுமையான விமர்சனத்துடன் புலிகளை, ஈழவிடுதலையை ஆதரிக்கும் சக்திகள், குழுக்கள், தனிநபர்கள்

*புலிகளைப் புறந்தள்ளி விட்டு, ஈழவிடுதலையை ஆதரிக்கும், முன்னெடுக்கும் சக்திகள், குழுக்கள்

*மனித உரிமைகள், குடியுரிமை ஆர்வலர்கள், இயக்கங்கள்

இந்த சக்திகளின் பின்னுள்ள பரந்துபட்ட, பல்வகையான, பின்புலங்களை, அணிச்சேர்கைகளைக் கொண்ட மக்கள் திரள்கள்.

தமிழக, இந்திய, இலங்கை உலக அளவில் உள்ள இவைகளின் அணிச்சேர்க்கைதான் ஈழ விடுதலைக்கான நட்பு முகாம்.


*பாசிச சிங்கள அரசும், சிங்கள இனவெறி குழுக்கள்.

*இதன் பிரதான பங்காளியான இந்திய அரசும், ஆளும் கட்சிகளும்.

*சீன, பாக்கிஸ்தான், அமெரிக்க, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட உலகின் பல்வேறு வல்லரசுகளும், அதன் அடிவருடியான அரசுகளும்.,

*இவைகள் பின்னுள்ள ஆளும் கட்சிகள், அதிகார வர்க்கம், அதன் பின்னுள்ள மக்கள் கூட்டம்

*ஈழவிடுதலைக்கும் நட்பாய் இருப்பதாக நடித்துக்கொண்டு உண்மையில் துரோகம் செய்யும் அரசியல் கட்சிகள், சக்திகள்.

*தனிநபர் வன்முறையை ஊதிப்பெருக்கி அரசு பயங்கரவாதத்தை அதன் கீழாக தணிந்த குரலில் பேசும் மனித உரிமை ஆர்வலர்கள்.

இவைகள் தமிழக, இந்திய, உலக அளவில் உள்ள இவைகளின் அணிசேர்க்கைத்தான் ஈழவிடுதலைக்கான பகை முகாம்.

இன்றைய உலகமாயமாக்கப்பட்ட சர்வதேசிய அரசியல்- பொருளியல் சூழலில் பல்வகை வர்க்கங்களாக, குழுக்களாக மேலும் மேலும் பகுக்கப்பட்டு இருக்கும் மக்கள் திரள்களின் பிளவுகளை உள்வாங்கி புரிந்து கொண்டால்தான், அவைகள் இருந்தலுக்கான நியாயங்களை உணர்ந்தால்தான், ஈழவிடுதலையின் நட்பு, பகை முகாம்களின் புறவயப்பட்ட இருத்தல்களைப் புரிந்து கொள்ள முடியும். அப்படி புரிந்து கொண்டால்தான் நாம் அடுத்த நகர்விற்கு செல்ல முடியும்

இன்றும் ஈழவிடுதலைக்கான பகை முகாமைச் சேர்ந்தவர்கள் ஒன்றுபட்டுதான் காய்களை நகர்த்தி வருகின்றனர். ஆனால் நட்பு முகாமில் உள்ளவர்கள் பற்றி நாம் சொல்லத் தேவையில்லை.

தலைவர் வருகிறார்.. தலைவர் வருகிறார்.... என்ற அல்லோலியா பஜனை அல்ல!! துரோகி கருணாநிதி 'ஈழ ஆதரவு' என்ற முழக்கத்தில், மக்களின் மறதி ஆற்றில் படகு ஒட்டப் பார்ப்பதும் அல்ல!

விடுதலைப் புலிகளின், ஈழப்போராட்டத்தின் வளமான செழுமையான அனுபவங்களை விமர்சன- சுயவிமர்சன ரீதியாக உட்கிரகித்துக் கொண்ட புதிய பரந்துபட்ட மக்கள்திரளின் ஐக்கிய முன்னணியும், அதனை வழிநடத்தும் நேர்மையான, புதிய தலைமையும், அமைப்பும் தான் இன்றைய தேவை!