நீண்ட நாட்களாக மனதில் புரண்டு கொண்டிருந்த ஆவலை கடந்த சனி, ஞாயிறுகளில் தீர்த்துக் கொண்டேன். நண்பர்கள் இருவருடன் கூடங்குளம், இடிந்தகரை சென்றிருந்தேன். கூடங்குளம் பகுதியில் இருக்கிற ஒரு பொறியியல் கல்லூரியில்தான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் கணிப்பொறியியல் படித்தேன். அதனால் அந்தப் பகுதியின் நிலவமைப்பு எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒன்றுதான். மிகவும் வறண்ட பூமி. அரிதாகத் தென்படும் மரங்கள், உரத்து வீசும் காற்று, 150 மீட்டர் உயர வெள்ளைக் கொக்குகளாக நிற்கும் காற்றாலைகள், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் ஆண்கள் - இவை இந்தப் பகுதியின் பொதுவான அடையாளங்கள். படித்தவர்கள் என்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மிகவும் பிற்போக்கான பகுதி. சாதி வெறியும், மதவெறியும் ஒப்பீட்டளவில் இங்கு அதிகம்.

உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் இடிந்தகரைப் பெண்கள்

நான்கு ஆண்டுகள் அந்தப் பகுதியில் படித்த அனுபவத்திலிருந்து யோசிக்கும்போது, தற்போது நடைபெறும் போராட்டத்தில் சிறுவர் முதல் முதியவர் வரை ஆண், பெண் பேதமின்றி கலந்து கொள்கிறார்கள் என்பது மிகவும் வியப்பான செய்திதான். ஆறுமாதமாக போராட்டம் நடைபெறுகிறது என்றால் வருமானத்திற்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வி மனதிற்குள் இருந்தது. அங்கு போனபோதுதான் அந்தப் போராட்டத்தின் திட்டமிட்ட செயல்பாடுகள் பெரிய ஆச்சரியமாக விரிந்தது. ஆண்கள் வழக்கம்போல் வேலைக்குச் செல்கிறார்கள். பெண்கள்தான் உண்ணாநிலை இருக்கிறார்கள். கைக்குழந்தைகளை முன்னால் படுக்க வைத்து, கையில் பீடி சுற்றியவாறு காலையிலிருந்து மாலை வரை உண்ணாநிலை மேற்கொள்கிறார்கள். ஆண்களில் பெரும்பாலும் முதியவர்கள்தான் அங்கு இருக்கிறார்கள். முற்றுகைப் போராட்டம், பேரணி போன்ற நாட்களில் மட்டும் - போராட்டக் குழு எடுக்கும் முடிவின்படி - ஆண்கள் வேலைக்குச் செல்லாமல் முற்றுகையில் கலந்து கொள்கிறார்கள்.

அந்த மக்களிடம் சொல்வதற்கு நமக்கு ஒன்றுமில்லை... கற்றுக் கொள்வதற்குத்தான் ஏராளம் இருக்கிறது. மக்களுக்காக உழைப்பது என்பது நமது வாழ்க்கையின் ஒரு பகுதி என்றால், நாம் நிச்சயம் போய் கற்றுக் கொள்ள வேண்டிய இடம் கூடங்குளம்.

காவல் துறை போட்ட வட்டத்திற்குள்ளேயே போராட்டம் நடத்தி பழக்கப்பட்ட நமக்கு, 'மக்களின் அனுமதி இல்லாமல் எஸ்.பி. கூட இடிந்தகரை போராட்ட இடத்திற்குள் நுழைய முடியாது' என்ற உண்மை அதிர வைத்தது.

உளவுத் துறையினர் உள்ளே நுழைந்தால் சிறிது நேரத்தில் சுற்றி வளைத்துப் பிடித்து விடுவார்களாம். பின்பு அவர்கள் கெஞ்சிக் கேட்டு, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுவார்களாம். போராட்டக்குழு ஆதரவாளர்கள் என்றால், வாஞ்சையுடன் அரவணைத்துக் கொள்கிறார்கள். அவர்களின் மனவுறுதி, போர்க்குணத்திற்கு முன் நாராயணசாமியும், மன்மோகன் சிங்கும் நடுநடுங்கிக் கிடப்பதில் ஆச்சரியமில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் இருக்கிற கிராமங்களில் உண்மையிலேயே மக்களின் ஆட்சி நடக்கிறது. அந்தப் பகுதி முழுவதும் எளிய, அதே நேரத்தில் போர்க்குணம் மிக்க‌ மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

koodankulam_dmk

ஈழப் பிரச்சினை, மூவர் உயிர் காப்பு அனைத்திலும் தேர்தல் கட்சித் தலைவர்களின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, தொண்டர்கள் தங்களது உணர்வுகளை அடக்கிக் கொள்வதை சென்னையில் பார்த்திருக்கிறோம். ஆனால், அங்கு நிலைமை அப்படியல்ல.. போராட்டத்திற்கு எதிராக கருணாநிதி பேசியதும், அத்தனை திமுக தொண்டர்களும் தங்களது கரை வேட்டியை எரித்திருக்கிறார்கள். நாங்கள் போயிருந்தபோது திமுக கொடி, அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. இத்தனைக்கும் பெரும்பாலோனோர் காலம்காலமாக திமுக தொண்டர்களாக இருந்தவர்கள்.

மறைந்த சுற்றுச்சூழல் போராளி அசுரன் மூலமாக தோழர் உதயகுமார் அமெரிக்காவில் இருந்தபோதே கீற்று இணையத்தை வாசித்திருக்கிறார். அதை அவர் பகிர்ந்துகொண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது.

போராட்டக் களமாக மாறியிருக்கும் இடிந்தகரை தேவாலயம்

மதியம் முழுவதும் இடிந்தகரையில் இருந்துவிட்டு, மாலையில் கூடங்குளம் அணு உலை பக்கமாகச் சென்றோம். தூரத்தில் 40, 50 போலீஸ்.. நமது கையில் காமிரா, வாய்ஸ் ரெக்கார்டர் எல்லாம் இருந்ததால் கொஞ்சம் நடுக்கமாக இருந்தது. பக்கத்தில் போனால் அத்தனை போலிசுக்கும் முன்னால் நாலைந்து போராட்டக்குழுவினர் (பெரும்பாலோனோர்க்கு 50 வயது) கைலி கட்டிக்கொண்டு, கால் மேல் கால் போட்டுக்கொண்டு ரவுசு விட்டுக் கொண்டிருந்தார்கள். போனால் போகிறது என்று போலிசுக்காரங்களை இந்த இடத்திலே விட்டிருக்கிறோம் என்பதுபோல் இருந்தது அவர்களது தோரணை. அசந்துவிட்டோம். கூடங்குளம் அணுமின் நிலைய வாயிலில் இரண்டு செக்போஸ்ட்கள். ஒன்று போலீஸ் செக்போஸ்ட். மற்றொன்று கூடங்குளம் மக்களின் செக்போஸ்ட். மக்களின் செக்போஸ்ட்டைத் தாண்டி, அணுமின் நிலையத்திற்குள் வேலை பார்க்க யாரும் போய்விட முடியாது. முன்பு பத்தாயிரம் வேலை பார்த்த இடத்தில், இப்போது பராமரிப்பு பணிகளுக்காக 90 பேரை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள் மக்கள்.

இத்தனை போலிசு இருக்காங்களே பயமில்லையா என்று கேட்டபோது ஒரு பெருசு பதில் சொன்னார்: "இவங்க எத்தனை பேரைச் சுடுவாங்க... அதுவுமில்லாம அணு உலை திறந்தா எப்படியும் கொஞ்சம் கொஞ்சமா சாகப்போகிறோம். அதுக்கு துப்பாக்கி குண்டுலே ஒரே தடவையா நிம்மதியா போயிருலாம்"

koodankulam_police

வெறும் உயிருக்குப் பயந்து மட்டும் அவர்கள் போராடவில்லை. "யுரேனியத்திலிருந்து மின்சாரம் எடுத்தபின்பு, புளுடோனியம் கிடைக்கும். அதை வச்சி அணு குண்டு தயாரிப்பாங்க.. எங்கோ ஒரு நாட்டுலே அதைப் போடப் போறாங்க.. அங்கேயும் மக்கள்தான் சாகப் போறாங்க.. அதற்கு எங்க ஊரைப் பயன்படுத்துறதை எப்படி அனுமதிக்கிறது?" என்று அவர்கள் கேட்டபோது அவர்களது மனிதநேயம் நெகிழவைத்தது. மாற்று எரிபொருள், மின்பகிர்மானம், பன்னாட்டு நிறுவனங்கள், வல்லரசு நாடுகள், காங்கிரஸ் அரசின் யோக்கியதை, ஈழத் தமிழர்களை காங்கிரஸ் கொன்றது என அவர்கள் அரசியல் அறிவும், தகவல் அறிவும் நிரம்பியவர்களாக இருக்கிறார்கள்.

'எங்க மக்களிடம் பேசுங்கள்' என்று மத்திய அரசின் குழுவையும், மாநில அரசுக் குழுவையும் உதயகுமார் கேட்பதற்கு காரணமில்லாமல் இல்லை. போராடும் மக்களின் பிரதிநிதிகளாகத்தான் உதயகுமார், புஷ்பராயன், மனோ தங்கராஜ் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள். அனைத்து முடிவுகளும் மக்களிடம் கலந்தாலோசித்தே எடுக்கப்படுகிறது. பிரதிநிதிகளை சமாதானப்படுத்தி காரியத்தை சாதித்துவிடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. அந்த மக்கள் கேட்கும் கேள்விகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும்.

போராட்டத்தின் தளகர்த்தர்களாக பெண்கள் இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை என்றால் அரசு, வன்முறையைக் கட்டவிழ்க்கத் தயங்காது என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். பெண்கள் சொல்கிறார்கள்.. "ஆம்பளைங்க பின்னாடி இருக்கட்டும்.. அவங்க செத்து, சோத்துக்கு வழியில்லாம நாங்க தவிக்கிறதை விட, நாங்களும், பிள்ளைகளும் குண்டடிபட்டு சாகிறோம்.. அடுத்து அவங்க போராடட்டும்.. கை, கால் ஊனமா பேரப் புள்ளைங்க பிறக்கிறதைப் பார்க்கறதைவிட, மொத்தமாக போராடி சாகலாம்" என்று தீர்க்கமாக சொல்கிறார்கள்.

அந்த எளிய மனிதர்களின் சொல்லாடல்களில் நாராயணசாமி, மன்மோகன் சிங், அப்துல் கலாம், கருணாநிதி, சு.சுவாமி எல்லாம் அடிக்கடி வந்துபோகிறார்கள். அற்பப் புழுக்கள் என்பதைத் தாண்டி அவர்களுக்கு ஒரு மரியாதையும் இல்லை..

போராட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்று ஆளும் வர்க்கமும், ஆளும் வர்க்கத்தை நக்கிப் பிழைப்பவர்களும் கூறிக்கொண்டிருக்க, உண்மை வேறுவிதமாக அப்பட்டமாக காட்சி அளிக்கிறது. வெளிநாடுகளில் இருந்து பணம் திரட்டும் அளவிற்கு அங்கு செலவு ஏதும் பெரிதாக இல்லை. ஒரு மீனவர் சொன்னார்: "சொன்னா நம்ப மாட்டீங்க... ஒரு நாளைக்கு போராட்டத்திற்கு ஆகுற செலவு என்ன தெரியுமா? 25 லிட்டர் வாட்டர் கேன் 2, 3 தான். நாங்க போராட்டம் நடத்துற சர்ச் எங்க கட்டடம். போட்டிருக்கிற கொட்டகை எங்க கொட்டகை. அதனாலே ஒரு நாளைக்கு 100 ரூபாய் செலவு ஆகிறதே அதிகம்தான். போராட்டக்குழு வெளியூர் போகும்போதுதான் கொஞ்சம் செலவு ஆகும். நாங்க சம்பாதிக்கிறதுலே பத்திலே ஒரு பங்கை போராட்டத்திற்குக் கொடுத்திட்டு வர்றோம். எங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து காசு வருதுன்னு சொல்றவன் தைரியமிருந்தா எங்க மக்கள் முன்னாடி வந்து சொல்லட்டும்"

மீனவ மக்கள் தற்சாற்புடைய மக்கள். யாருடைய கையையும் நம்பி வாழ்கிறவர்கள் அல்ல. அதனால் யாருக்கும் அஞ்சுபவர்கள் அல்ல. அடித்தால், திருப்பி அடிக்கும் குணம் உடையவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்தகரை மீனவர்களுக்கு குடைச்சல் கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை நையப்புடைத்திருக்கிறார்கள். பிறிதொரு முறை போலீஸ் ஒருவரின் துப்பாக்கியைப் பிடுங்கி, அவர் நெஞ்சிலேயே வைத்து, 'ரொம்ப வாலாட்டுனே.. ஊரைத் தாண்டிப் போயிற முடியாது' என்று மிரட்டியிருக்கிறார்கள். அப்படி இருந்த மக்கள்தான் இன்று உதயகுமாரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, அமைதி வழியில் போராடி வருகிறார்கள். ஈ, காக்கை கூட அவர்களின் அனுமதியில்லாமல், போராட்ட இடத்திற்குள் நுழைந்துவிட முடியாது. அந்த மக்களை மீறி உதயகுமாரை யாரும் நெருங்கிவிட முடியாது.

அணு உலை வாயிலுக்கு முன்பாக கூடங்குளம் மக்களின் 'செக்போஸ்ட்'

எலியும் பூனையுமாக பகையுடன் இருந்த ஊர்கள்தான் இடிந்தகரையும், கூடங்குளமும். சாதியால் பிளந்திருந்த மக்களின் மனதை உதயகுமார் தனது தன்னலமற்ற தொண்டால் இணைத்திருக்கிறார். எங்க ஊர் காமராசர் என்கிறார்கள் மக்கள்.

இங்கே சில‌ர் கீறல் விழுந்த‌ ரெக்கார்ட்டைப் போல‌ திரும்ப‌த் திரும்ப‌ ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கிறார்க‌ள், 'ம‌க்க‌ளின் அச்சத்தைப் போக்கிவிட்டு, அணு உலையைத் திற‌க்க வேண்டும்' என்று. ஏதோ அந்த‌ ம‌க்க‌ளிட‌ம் குழ‌ப்ப‌மும், தேவையில்லாத‌ ப‌ய‌மும் இருப்ப‌தாக‌க் க‌ருதிக் கொண்டு சொல்கிறார்க‌ள்.  அவ‌ர்க‌ள் அத்த‌னை விப‌ர‌ங்க‌ளையும் முழுக்க‌ அறிந்திருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் அச்ச‌மில்லை. மிக‌வும் தீர்க்க‌மாக‌க் கூறுகிறார்க‌ள் 'அணு உலையை மூட‌ வேண்டும்'. அவ‌ர்க‌ளிட‌ம் பிர‌ச‌ங்க‌ம் ந‌ட‌த்தி ஏமாற்றி விட‌லாம் என்ற பேச்சுக்கே இட‌மில்லை. 'அணு உலையை எடுத்திட்டு, அதே க‌ட்ட‌ட‌த்தில் மாற்று வ‌ழியில் மின்சார‌ம் த‌யாரிக்க‌ட்டும். நாங்களே அவர்களுக்கு முழு உதவியையும் செய்கிறோம்' என்கிறார் கூட‌ங்குளப் பெரிய‌வ‌ர் ஒருவ‌ர்.

காவல் துறை சொல்கிற இடத்தில், சொல்கிற நேரத்திற்குள்ளாக ஆர்ப்பாட்டம் செய்து, எந்தத் தீர்வையும் எட்டாமலேயே போராட்டங்கள் முடிந்து விடுவதைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போயிருக்கும் நமக்கு கூடங்குளம் போராட்டம் மிகப் பெரிய மலையாக உயர்ந்து நிற்கிறது. மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைத்துக் கட்சியினரும், இயக்கத்தவர்களும் கூடங்குளம் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. வெறுமனே அங்கு போய் ஆதரவு கொடுப்பது என்பதோடு மட்டுமல்லாமல், எப்படி மக்களைத் திரட்டுவது, எப்படி மக்களுக்குக் கற்பிப்பது, எப்படி போராடுவது என்பதையெல்லாம் கற்றுக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும். நம் சமகாலத்தில் தமிழகத்தில் இப்படி ஒரு போராட்டத்தை யாரும் பார்த்ததில்லை என்பதுபோல் கூடங்குளம் போராட்டம் உள்ளது. இந்தப் போராட்டத்தின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் ஆவணமாக்க வேண்டிய அவசியம் நம் எல்லோருக்கும் உள்ளது. அது, அடுத்து போராட வரும் தலைமுறையினருக்கான வேதநூலாக இருக்கும்.

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

28 comments

28
Raja
வாழத்துக்கள் நந்தன் .
jegan
very good & unenviable pepole best of luck
கி.பிரபா
கூடங்குளம்! ஊரிலிருந்து ஏன் இவ்வுலகிலிருந்தே ஒதுக்கப்பட்ட ஓர் ஊர்! ஆம்! அவர்களின் உருவமும் உள்ளமும் கடலலை போல் பேரறவம் கொண்டது.காரணம் ஓர் இருபத்துஐந்து ஆண்டுகளுக்க்கு முன் அவர்களில் பெரும்பான்மையினர்[ கல்வியில்] அறியாமை நிலை கொண்டவர்கள். குறையில்லை; காரணம் அவர்களை முறையாக வழிநடத்த எவருமில்லை.ஆனால் இன்று போராட்டம். அதுவும் அறவழிப் போராட்டம் எப்படி? 'உதயகுமார்' எல்லோர் உள்ளங்களிலும் உறுதியுடன் இடம் பிடித்தவர்.பொருளாதாரமேதையாம் மன்மோகன்சிங்கு,நடுவண் அமைச்சர்நாராயணசாமி, ஊழல்வழியே வெளிவந்த சிதம்பரம்,அச்சப்படும் வாசன், இன்னும் பலர் எவர் வரினும் நேரில் வந்து உழைக்கும் மக்களின் உள்ளக்கிடக்கையறிந்து அதன் பின் அணு உலை மின் திட்டம் பற்றிப் பேச வாருங்கள் என முறையோடு அழைத்தும் வெலவெலத்துப் போகும் ஆட்சியாளர்களை 'வந்து பார்!'என அறைகூவல் விடுக்கும் மக்களை எண்ணி எண்ணி வியக்கிறேன்.
bala
From local issues to eelam protests, govts trickily doesnt allowed people to be in structured unity. After seeing kudankulam people stubborn protests & integrity, i am feeling proud of them.
hameedhamsha
கூடங்குளம் அணுமின் நிலையம் வெறும் கூடங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மட்டும் ஆபத்து இல்லை ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் ,அன்டை மாநிலம் கேரளாவிற்க்கும் ஆபத்துதான் என்பதை எல்லோரும் அறிவது அவசியம்....
durai ilamurugu
கூடங்குளம் மட்டும் தமிழ் நாடு ஆகிவிடாது. கண்ணால் காண்பது மட்டும் உண்மை ஆகிவிடாது. கூஅங்குளம் மக்கள் எல்லாம் அறிந்தவர்கள் ஆகிவிட மாட்டார்கள் . அறிவியலை ஒருகுழுபோராட்டத்தின் மூலம் தடுத்தவிட முடியும் என்ற நிலை எற்படுவது நல்லது இல்லை. பிறகுஇதுபல செய்திகளுக்கும் பரவும் கூடங்குளம் போரட்டம் அறிவியலுக்கு எதிரான போராட்டம் என்றே நான் உணர்கிறேன் அதனால் அதை நான் எதிர்க்கிறென். இப்பொழுதே நெய்வேலி அனல் மின் நிலையத்திற்கு எதிராககுரலகள் கடலூரில்கேட்கின்றன. இதன் பிண்ணணியில் இருப்பது மதவாதம் அல்லது அதற்கு இணையான இயற்கை வாதம். இயற்கையோடு இணந்த வாழ்க்கை என்பது மரணத்திற்கு சமம் மனிதன் தன்னுடைய வரலாறு முழுவதும் இயற்கையை எதிர்த்துப்,போராடி அதை தன் வயப்படுதியே முன்னேறி இருக்கிறான் அத்தகைய முன்னேற்றத்திற்கு சவால் விடக்கூடிய ஒரு போராட்டம்கூடங்குளத்தில் நடந்துவருகிறது
இரா.தமிழ்மாறன்
தமிழகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் வாக்கு பொறுக்கிக்கட்சிகளின் எடுபிடிகளாய், ஆள்பிடிக்கும் அடிவருடிகளாய் அல்லது மானம் கெட்ட, மரியாதை கெட்ட நக்கிப்பிழைக்கும் நயவஞ்சகக் கூட்டமாய்த்தான் இருக்கின்றார்கள் என்பதே உண்மையாயினும், அநாகரிகமான அரசியல் நடத்தும் கீழ்த்தரமான தலைவர்களின் அரசியல் நாடகத்திற்கு ஆட்படாமல் தன்னெழுச்சியாய் திரண்டு வந்து மனிதகுலத்துக்கு எதிரான அணுமின் உலையை தீரமுடன் எதிர்த்துப் போராடுவது உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கின்றது. மெல்ல மெல்லவாவது தமிழர்கள் தங்களை உணர தலைப்பட்டிருப்பது நல்ல மாற்றத்திற்கான அறிகுறியே.
Minathullah
துரை இளமுருகு அவர்களே.. அணுக்கதிர் பாதிப்பு பற்றி தெரியாமல் பேசாதீர்கள். முகம் கோணி கை கால் கோணி பிற‌க்கும் குழந்தைகளைப் பாருங்கள். பிற‌கு கருத்து சொல்லுங்கள். உங்கல் மகன் பேரன் அப்படி பிற‌ந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
கி.பிரபா
வாழும் காலத்தில் உண்மை அறியாதவர்கள் பலர். அவர்களில் ஒரு நண்பரே இளமுருகு. மேதகு அப்துல்கலாம் முதலாக அரசியலில் குளித்து சுகம்கண்டவர்களுக்கு எல்லாமும் தெரியும்.என்றாலும் அடித்தட்டு மக்களைப் பற்றிச்சிந்திக்க மனமில்லை.தூங்குபவர்களை எழுப்பி செய்தி சொல்லமுடியும்; தூங்குவதைப்போல் நடிப்பவர்களிடம் எப்படி விளக்க முடியும்?
அன்புமணி
உண்மையான போராட்ட அரசியலுக்கும் , மக்களின் பங்கேற்ப்போடு, மக்களால் வழிநடத்தப்படும் தலைவர்களுக்கும்,மக்களின் எண்ணங்களை மொழியும் தலைவர்களுக்கும், நிகழ்கால எடுத்துக்காட்டு இடிந்தகரை மக்களின் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் ஆகும்.அம்மக்களின் போராட்டம் வெற்றி பெறுகிறதோ தோல்வி அடைகிறதோ நமக்குத் தெரியாது. ஆனால் மக்கள் போராட்டத்தின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ளவும், அப்போராட்டத்திற்கு தலைமை ஏற்று இருக்கும் தலைவர்களின் தலைமைப் பண்பை புரிந்துகொள்ளவும் அரசியல் ஆர்வம் உடையவர்கள் முயலவேண்டும்.இடிந்தகரை மக்களின் மனிதநேயமிக்க இந்த போராட்டம் வெல்லட்டும்.
ram
கீற்று இணையதள ஆசிரியர், விடலைப்பிள்ளைகளுக்கே உரிய கிறுகிறுப்பு மனநிலையில் எழுதியிருக்கும் இந்த கட்டுரைக்கு இளமுருகு அளித்திருக்கும் அறிவார்ந்த விமர்சனத்திற்கு கீ|ற்று ஆசிரியரிடமோ அவரது தொண்டரடிப்பொடிகளிடமோ பதில் இல்லை. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அரசியல் வாதிகள் சொன்னால் அது தப்பு. அதையே கீற்று நந்தன் தனக்கு வசதிப்படும் இடத்தில் வசதிப்படும் நேரத்தில் சொன்னால் அது சரி. இந்த அரைவேக்காட்டுத்தனமான அறிவியலுக்கு பொருந்தாத வாதங்களுக்கு இளமுருகுவின் கேள்விகள் பதில்களாகா. காரணம் இவர்கள் அறிவியல் என்பதன் அடிப்படையை ஏற்கமறுக்கிறார்கள். இந்த மக்களும் இவர்களுக்கு தலைமை தாங்கும் உதயகுமாருக்கும் இரண்டு கேள்விகள். நீங்களெல்லாம் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தும் மின்சாரம் இயற்கைக்கு பாதகமில்லாமல் தான் பெறப்படுகிறதா? இல்லை என்பதே உண்மை. அப்படியானால் இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மின்சாரம் கிடைக்கும் வரை நாங்களெல்லாம் மின்சாரமே பயன்படுத்தமாட்டோம் என்று நீங்கள் இந்த நிமிடம் முதல் உறுதி ஏற்கத்தயாரா? மற்றவர்களைவிட போராடும் கிராமத்தவர்களும் அவர்களுக்கு தலைமை தாங்கும் இயற்கை பாதுகாவலர்களுமாவது இயற்கையை பாதிக்காத மின்சாரம் கிடைக்கும்வரை எங்களுகு மின்சார்மே வேண்டாம் என்று சொல்ல தயாரா? இதற்கு உண்மையான பதில் தராதவரை இவர்கள் செய்வது பித்த்லாட்டமே தவிர இயற்கை பாதுகாப்பல்ல
durai ilamurugu
முகம் கோணி ----- இது போன்ற குழந்தைகள் எப்போதும் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன அணுவைப்,பிளக்க முடியும் என்பதைக் கண்டு பிடிக்கும் முன்பே இக்குழந்தைகள் பிறந்து கொண்டுதான் இருந்தன பழைய கோவில் சிறபங்களில் இது தெரியும் கலித்தொகை கூனனையும் குறளனையும் பற்றிப்,பாடுகிறது!இக்குழந்தைகளை வளர்ப்பதற்கென்றே தமது வாழக்கையை அர்ப்பணித்தவர்களும் உண்டு நன்றாகப்,பிறந்த குழந்தையைக் கொல்லுபவர்களும் உண்டு என்னைப்பற்றிக் கவலைப்படதீர்கள் அ அப்படி ஒரு குழந்தைப்பிறந்தால் என்ன செய்வீர்கள் என்று நீங்கள் சொல்லவேண்டாம் அது தானாகவே தெரிகிறது
Nuke Em
தமிழக அரசு அணு உலையை இயக்குவதற்கு விதித்திருக்கும் தடையை நீக்கிய பிறகு, போலீஸுக்கு முழு அதிகாரம் கொடுத்த பின்பு கீற்று நந்தன் ஒரு நடை கூடங்குளம் போய், அணு உலை எப்படி இயங்குகின்றதென ஒரு கட்டுரை எழுத்ததான் போகிறார், நாம் படிக்கத்தான் போகிறோம்.
சி.மதிவாணன்
திரு ராம் அவர்களுக்கு,
மனிதர்களின் கண்டுபிடிப்புகள் மகத்தானவை. அவற்றால் பாதிப்புகளும் கூட ஏற்படும்.. ஏன்? ஒரு உயிர் வாழ்வதே சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், உயிர்ச்சூழல் உயிர் வாழும் சூழலாகவே நீடிப்பது மனிதனுக்கும் அவசியம்.
மனிதனின் செயல்பாட்டால் உயிர்ச்சூழலுக்குப் பாதிப்பு வரும் என்றால், அதனைச் சரிசெய்துகொள்ள வேண்டும். மனித இனம் தொடர அது அவசியம்.
சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் மின்சாரம் உற்பத்தி செய்ய எண்ணற்ற வழிகள் இருக்கின்றன. சில கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். ஏன் ஒரு இடத்தில் மின்சாரம் உற்பத்தி செய்து அதனை நாடு முழுவதும் அனுப்ப வேண்டும்? காற்று, சூரிய சக்தி, இயற்கை கரிமப்பொருட்கள் (மரம்), நீர் போன்றவற்றைப் பயப்டுத்தி ஏன் தாலுகா அளவில் மின்னுற்பத்தி செய்துகொள்ள முடியாது? அது இயற்கையின் மீது அணு போல, நிலக்கரி போல கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாதே? ஏன் அவ்வாறு யோசிக்க மறுக்கிறார்கள்?
அணு மின் சக்தியின் விலை என்னவென்பதை,மூலதனம், இயக்கச் செலவுகள், கழிவுகளை (சில பத்தாயிரம் ஆண்டுகளுக்கு) பராமரிக்கும் செலவு என்பதையெல்லாம் கூட்டி கணக்குப் பார்க்க வேண்டும். அப்போது 1 யூனிட் மின்சாரத்தின் விலை குறைந்தது சில 100 நூறு ரூபாய்களை விட அதிகமாக இருக்கும்.
அப்புறம் எப்படி அணு மின்சாரம் மலிவு என்று சொல்கிறார்கள்?
அணு மின் உலை தொழிலில் உள்ள உலக முதலாளிகளின் எச்சில் காசுக்கு அலைகிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள். அவ்வளவுதான். இந்த உண்மை உங்களுக்குக் கசக்கலாம். கலாம் போன்றவர்களுக்குக் கசக்கத்தான் செய்யும்.
ஆனால், உயிர்களை நேசிப்பவர்கள், வாழ்க்கையை நேசிப்பவர்கள், நாளை வரும் சந்ததியருக்கு இந்த உலகத்தை விட்டுவைத்துச் செல்ல வேண்டும் என்று யோசிப்பவர்கள் சற்று கூட தயக்கமின்றி மன்மோகன் தேசத் துரோகி என்று சொல்வார்கள்.
கூடங்குளம் மக்கள் படிப்பறிவற்றவர்கள். ஆனால், இயற்கையைப் பற்றி அவர்கள் அறிவார்கள். வாழ்க்கையை அறிவார்கள். திருடர்களையும் அவர்கள் அறிவார்கள்.
அணு உலையை ஆதரிக்கும் அறிவாளிகளுக்கு இரண்டு பிரச்சனை. 1. அறிவில்லை. 2. அறிவில்லை என்ற விவரமும் தெரியாது.
இவர்களைத்தான் தந்தை பெரியார் படித்த முட்டாள்கள் என்று விவரித்தார்.
இராம், யோசித்துப் பாருங்களேன், மனித இனமாக… அதன் எதிர்காலம் குறித்த கவலையோடு..
அன்புடன்,
சி.மதிவாணன்
ram
மதிப்புக்குரிய மதிவாணன் அவர்களுக்கு, எனக்கு அறிவில்லை என்பதை கண்டுபிடித்துச்சொன்னதற்கு முதற்கண் நன்றி. ஆனால் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல் விட்டது தான் வருத்தமாக இருக்கிறது. இயற்கையை எந்த விதத்திலும் பாதிக்காத மின்சாரம் தயாரிக்கும் வரை இடிந்தகரை கிராம மக்களோ அவர்களின் புதிய மேய்ப்பராக வந்திருக்கும் உதயகுமார் உள்ளிட்ட இயற்கை பாதுகாவலர்களோ தற்போது கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தமாட்டோம் என்று முன்னுதாரணமாக இருகத்தயாரா? சரி. அதற்கு முடியாவிட்டால், இந்த கிராமங்களுக்கு தேவைப்படும் மின்சாரத்தை மட்டுமாவது நீங்கள் குறிப்பிடும் வழிகளில் தயாரித்து இவர்களை மின்சார ரீதியில் தன்னிறைவை அடையச்செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டலாமே. அதற்கு நீங்களோ, உதயகுமாரோ தயாரா? அதை செய்யாமல் வெறுமனே மன்மோகன் சிங் தேசத்துரோகி, அணுமின் சாரத்தை ஆதரிப்பவர்களுக்கு அறிவில்லை என்று முத்திர் குத்துவது, அறிவு நாணயத்துக்கு பொருந்தாத வேலை.

கடைசியாக ஒரு முக்கிய வேண்டுகோள். அணுமின்சாரம் தொடர்பான இந்த விவாதத்தில் பெரியாரை சாட்சிக்கு அழைக்காதீர்கள். உங்களின் சிகப்புச்சட்டைக்கும் அவருடைய கருப்புச்சட்டைக்கும் ரொம்ப தூரம். அவரை விட்டுவிடுங்கள்.

இப்படிக்கு

மனிதனாக மனித இனமாக வாழ முயற்சி செய்யும் ஒரு அறிவிலி
gerald
I am feeling proud to be tamilian for being united at least united in this
issue,i wish the same to be united in all the issues apart from caste community & partys .
புவிமைந்தன்
வர்க்கங்களாப் பிளவுபட்டுள்ள ஒரு சமூகத்தில் அறிவியலும்,தொழில்நுட்பங்களும் ஆளும் வர்க்க நலன்களுக்காகவே பயன்படுத்தப்படும்.அவை மக்களைச் சுரண்டவும், அடக்கி ஒடுக்கவும், ஆளும் வர்க்கத்தின் இலாபத்தைப் பெருக்கவுமே பயன்படுத்தப்படும்.இந்த அடிப்படையிலேயே அணு உலைப் பயன்பாட்டையும் நாம் பார்க்கவேண்டும்.இதில் அடங்கியுள்ளது இந்திய ஆளும் வர்க்கம் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் நலன்கள்தானே தவிர நமது மக்களின் நலன்கள் அல்ல.இதற்கு வக்காலத்து வாங்கும் இங்குள்ள அறிவியல் அறிஞர்கள் மனச் சாட்சியை அடகு வைத்தவர்கள். இவர்கள் உண்மையில் அறிவியல் அறிஞர்கள் இல்லை. இவர்கள் தொழில்நுட்ப அதிகாரிகள். ஆளும் வர்க்கத்திற்காக கூலிக்கு மாரடிப்பவர்கள். 'அமைதிக்காக அணு சக்தி' என்று கூறிக்கொண்டுதான் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது அணு ஆயுத வல்லமையைப் பெருக்கிக் கொண்டு இன்று உலக அமைதிக்கே பெரும் எதிரியாக விளங்கி வருகிறது.உண்மையில் மக்களின் நலன்களுக்காக நிற்பவர்கள் இது பற்றி அக்கறையுடன் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
Nuke Em
//சில கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். ஏன் ஒரு இடத்தில் மின்சாரம் உற்பத்தி செய்து அதனை நாடு முழுவதும் அனுப்ப வேண்டும்? காற்று, சூரிய சக்தி, இயற்கை கரிமப்பொருட்கள் (மரம்), நீர் போன்றவற்றைப் பயப்டுத்தி ஏன் தாலுகா அளவில் மின்னுற்பத்தி செய்துகொள்ள முடியாது? அது இயற்கையின் மீது அணு போல, நிலக்கரி போல கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாதே? ஏன் அவ்வாறு யோசிக்க மறுக்கிறார்கள்?//

மதிவாணன் அவர்களுக்கு,

தாலுகா அளவில் ஏன் மின்னுற்பத்தி செய்து கொள்ள வேண்டும்? உங்கள் வீட்டு மொட்டை மாடியிலேயே சோலார், காற்றாலை ரெண்டையும் வச்சுடுங்களேன்? ரெண்டு மாடு வளர்த்து கோபர்காஸ் அடுப்பு வெச்சுடுங்களேன்? குண்டு பல்ப், சிறு குழல் விளக்குகளுக்கு பதில் காடா விளக்கு, அரிக்கன் விளக்கு வெச்சுக்கலாமே? மின்விசிறிக்கு பதில் பங்கா கட்டிக்கலாமே?

இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை விரும்புபவர்கள், அறிவியல் முன்னேற்றங்களான மின்சாரம், கணினி ஆகியவற்றை வேண்டாமென தவிக்கலாமே? எனவே நன்பர் துரை இளமுருகு கேட்பது போல் இயற்கையை பாதிக்காத மின்சாரம் கிடைக்கும்வரை எங்களுக்கு மின்சாரமே வேண்டாம் என்று சொல்ல தயாரா?
Nuke Em
//அணு மின் சக்தியின் விலை என்னவென்பதை,மூலதனம், இயக்கச் செலவுகள், கழிவுகளை (சில பத்தாயிரம் ஆண்டுகளுக்கு) பராமரிக்கும் செலவு என்பதையெல்லாம் கூட்டி கணக்குப் பார்க்க வேண்டும். அப்போது 1 யூனிட் மின்சாரத்தின் விலை குறைந்தது சில 100 நூறு ரூபாய்களை விட அதிகமாக இருக்கும். அப்புறம் எப்படி அணு மின்சாரம் மலிவு என்று சொல்கிறார்கள்?//

2005 ஆண்டு EPW பத்திரிகையில் வெளியான அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கும் எம்.வி. ரமணா என்ற அணு விஞ்ஞானி அவர்களின் கணக்குப்படி , கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள கைகா அணுமின் நிலையத்தில் இருந்து பெறப்படும் மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 2.10 ஆகும் என்று தெரிவித்துள்ளார். 2012 ல் விலைவாசி ஏற்றத்தையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட கூடங்குளம் அணு மின் திட்டத்திலிருந்து பெறப்படும் மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு ரூ. 4 ஆகலாம். யூனிட் ஒன்றுக்கு ரூ. 100 எப்படி என்று அணு விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் தெரியாத கணக்கை தெரிந்து வைத்திருக்கும் மதிவாணன் அவர்களே, அந்த கணக்கை கொஞ்சம் விளக்கமாக தரமுடியுமா?

http://princeton.academia.edu/MVRamana/Papers/462181/Economics_of_Nuclear_Power_from_Heavy_Water_Reactors
சி.மதிவாணன்
இதனை எழுத வாய்ப்பளித்தமைக்கு நன்றி நண்பரே.
நீங்கள் குறிப்பிட்ட எம் வி இரமனாவின் கட்டுரையைப் படித்த பின்புதான் அணு மின்சாரத்தின் விலை பற்றி எழுதினேன். ரமணா அணுக் கழிவுகள் பராமரிப்பு செலவையும் தனது கணக்குச் சூத்திரத்தில் எடுத்துக்கொண்டதாகக் கட்டுரை சொல்கிறது.
ஆனால், உண்மையை ஓரளவுக்குச் சொல்வது, உண்மையை விரும்பியபடி தொணிக்கும் வகையில் சொல்வதென்று பலவிதமான முறையில் உண்மையைச் சொல்லலாம். அஸ்வத்தாமன் (உரக்க) என்ற யானையை (மெல்லிய குரலில்) கொன்றுவிட்டோம் (மறுபடியும் உரக்க) என்று கூட தர்மமாக நடந்துகொள்வது பற்றி மகாபாரதம் பேசுகிறது.
சரி இரமணா என்ன சொல்கிறார்?
The other component in the case of nuclear power is that of decommissioning the reactor. Though this is an expensive process, because it is done only in many years in the future, its discounted cost will be small…
இது கட்டுரையின் முன் பாதியில் ரமணா சொல்வது. இதிலேயே ஒரு கேள்வி எழுகிறது. செலவு பிடிப்பதாக இருந்தாலும், எதிர்காலத்திய பல வருடங்களில் நிகழ்வதால் செலவு குறைவானதாக (DISCOUNTED என்றாலும்) எப்படியிருக்கும்? ஒவ்வொரு ஆண்டும் குறைவானதாக ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் என்பதைல் கூட்டுத் தொகை பெரியதாக இருக்கும் என்று எடுத்துக்கொள்வதா?
அல்லது பெரிய தொகையாக, ஆனால் பல பத்தாயிரம் ஆண்டுகளால் வகுக்கப்படும்போது ஆண்டுச் செலவு குறைவானதாக இருக்கும் என்று எடுத்துக்கொள்வதா?
உருவாக்குதல் இயக்குதல், பராமரித்தல், கழிவு நிர்வாகம் என்பது எத்தனை ஆண்டுகள் நடந்தாலும் அதற்கு என்ன செலவாகுமோ அதனை வைத்துத்தானே கணக்குப் போட வேண்டும். எத்தனை ஆண்டுகளுக்கு (பல்லாயிரம் ஆண்டுகளுக்கு) செலவானாலும் அதனை உற்பத்தியான மின் யூனிட்டுகளின் மதிப்பில்தானே ஏற்ற வேண்டும்?
அப்புறம் கட்டுரையின் கடைசியில் ரமணா மற்றொன்று சொல்கிறார்.
The problem of dealing with radioactive nuclear wastes has been one of the contentious aspects of nuclear power programmes around the world.(NEA 1996 and Berkhout 1991). Since some of the these wastes are extremely long lived, the generations who do not utilize electricity produced in these nuclear reactors but may have to undertake measures to ensure that these radioactive materials do not enter their food chain, water resources and so on. Any attempt at quantifying these costs involved is bound to have ENORMOUS UNCERTAINTIES.
(அடிக்கோடும் பெரிய எழுத்தும் என் கைங்கரியம்) இவ்வளவு உண்மைகளையும் சொல்லிவிட்டு கழிவுகளை ஒரு டப்பாவுக்குள் போட்டு மூடிவைத்துவிடுவது என்ற முறை பல விவாதங்களுக்கு உட்பட்டது என்றாலும், டப்பாவில் போட்டு மூடிவைக்கும் செலவை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டதாக ரமணா சொல்கிறார்.
எங்களைப் போன்றவர்கள் எதிர்கால சந்ததியினர் தாங்கள் பயன்படுத்தாத மின்சாரத்திற்குச் செய்யப் போகும் செலவையும் கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறோம்.
எப்படியானாலும், தான் சொல்லும் கணக்கில்தான் மின்சாரத்தின் விலை அடங்கும் என்ற ரமணாவே சொல்லத் துணியாது, எதிர்கால சந்ததியினர் செய்யப்போகும் செலவு பற்றிய கவலையுடன் பேசும்போது, அணு தொழில்காரர்கள் சொல்லும் விவகாரங்கள் விவாதத்துக்குரியவை என்று ஒப்புக்கொள்ளும்போது உங்களைப் போன்றவர்கள் எந்த துணிச்சலில் அணு மின்சாரத்தை ஆதரித்துபேச முடிகிறது?
சு.உலோகேசுவரன்
நீங்கள் கேட்டது சரியான கேள்வி. இயற்கைக்கு பாதகமாகத மின்சார உற்பத்தி தான் அம்மக்கள் வேண்டுவதும். ஆனால், அந்த கேள்வியை அவர்களிடம் மட்டும் முன் வைப்பது நியாயமாகாது. அது ஒரு பொதுவான கேள்வி. இக்கேள்விக்கு எனது கருத்து: மாற்று மின்சார உற்பத்தி வழிமுறைகளை அரசு அவ்வாறு வழிநடத்த முன்வந்தால், மக்கள் பின்பற்றத் தயாராகவே இருப்பார்கள். அந்த அணுவுலையால் அப்படி ஒரு பாதகம் நேரும்போது முதலில் பாதிக்கப்படுவது அவர்கள்தான். ஆதலால், அவர்கள் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அவர்கள் விரும்புவது ஒரு நல்ல சாவு. அந்த அணுவுலையால் அது அவர்களுக்கு நிச்சயம் கிடைக்காது என்று தீர்க்கமாக நம்புகிறார்கள்.
Ram
உலோகேச்வரன் அவர்களுக்கு,

போராடுபவர்கள் சுற்றும் பீடிகளால் மக்களின் ஆரோக்கியம் மேம்படும் என்று நம்பலாம். அவர்களின் கணவன்மார்கள்பயன்படுத்தும் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி போன்ற வலைகளால் கடல் மடியிலிருக்கும் ஆழ்கடல் வளங்கள் மேம்பட்டதன் விளைவு தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய எல்லை தாண்டி இலங்கைக்கு சென்று மீன்பீடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இப்படியே உசுப்பேத்திக்கொண்டே இருங்தமிழ்நாட்டு உருப்பட்டுவிடும்.
durai ilamurugu
பூனைக்குட்டி வெளீயே வந்து விட்டது எங்கப்ப ந் குதிருக்குள் இல்லை என்பது போல கத்தொலிக்க கிறித்துவ மத ஆயர்களின் த்லைவர் வெளிப்படையாக மத்திய அரசைக் குற்றம் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார் . பனம் வரும் வழியை இறுக்கினால் பாவம் அவர்கள்தான் என்ன செய்வார்கள்? அமெரிக்காவில் கிறித்துவமதம் (கத்தொலிக்க பிரிவு வலிமை வாய்ந்த்தது என்பதற்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று நாம் நம்ப முடியுமா> அத்துடன் அவர் விடவில்லை நாங்கள் எப்போதும் இயற்கையின் நண்ன்பர்கள் என்று வேறு கூறி இருக்கிறார் உண்மை !அதனால்தான் இயற்கையில் காணப்படும் சாதிகளை அப்படியே கல்லறை வரை பின்பற்றுகிறாரகள் தலித்கள்,சாதி இந்துகள் என தனித்தனி கல்லறை வைத்திருக்குமிவர்கள் பெரும் புரட்சிக்காரர்களாம். அத்துடன் அமெரிக்காவில் கிறித்த்துவமதம் (கத்தொலிக்க பிரிவு ஏற்கனவே டார்வின் தியரியை மறுத்தது, தற்பொது கருத்தடையும் கருகலைப்பையும் எதிர்த்து வருகிறது ஆனால் அணு உலை எதிர்ப்பை அங்கு முன் வைக்கவில்லை!! மதவாதம் அணூ உலை எதிர்ப்பு என்ற முகமூடி அணிந்து வருகிறது இதை அறிந்தே வெ ஆனைமுத்தும் குளத்துர் மணியும் அதை ஆதரிக்கிறார்கள் என்று நம்பவேண்டி உள்ளது இந்து பத்திரிக்கை படிக்க இயன்றவர்கள் கூடங்குளம் பற்றீ வந்துள்ள நான்கு கட்டுரைகளையும் படிக்கும்படி வேண்டு கிறேன்11/3/2012
samaran
மார்ச் 15 , தினமணி செய்தியின் படி ஆண்டு ஒன்றூக்கு ருபாய் 10000 கோடி , இந்தியாவில் இருக்கும் தொண்டு நிருவனங்கள் அமெரிக்கா,ப்ரிட்டன், ஜெர்மனி ,ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்த்து பெறுகின்றன. 2010 இல் மட்டும் தமிழ் நாட்டு தொண்டு நிறுவனங்கள் பெற்ற நிதி 1600 கோடிக்கும் மேல். உண்மையாகவே உதயகுமார் அணு உலைகளை எதிர்ப்பவராக இருந்தால் , இந்தியா அமெரிக்காவுடன் 123 ஒப்பந்தம் செய்த போது , எங்கே போயிருந்தார்? 123 ஒப்பந்த படி , இந்தியாவின் அணு உலைகள் அமெரிக்கவினால் கண்காணிக்கப்படும். அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளுக்கு இந்தியா ஒத்து போகவில்லை என்றால் , யூரேனியம் சப்ளை செய்வது நிறுத்தப்படும் . சி.டி.பி.டி. ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இந்தளவுக்கு நாட்டின் இறையாண்மை அடகு வைக்கப்பட்ட போது போனார் , **** **** மக்கள் தலைவர் உதயகுமார் ? வேறு ஒரு நாட்டின் மீது வீச பயன்படும் அணுகுண்டை செய்வதற்கான அணு உலைகளை அனுமதிக்கமாட்டோம் என்று கூறுபவர்கள் , அமெரிக்கா குவித்து வைத்திருக்கும் அணுகுண்டுகளை அழிக்க சொல்லி போராடட்டும்! ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக சொல்லி அந்த நாட்டை ஆக்ரமித்து, சுரண்டியது . இன்று ஈரான் மீது பாய நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறது , ஆனால் ஈரான் அணுகுண்டு வைத்திருக்கும் என்ற பயத்தில் தான் அந்த நாட்டை இன்னும் விட்டு வைத்திருக்கிறது . சென்ற வருடம் ஈரான் அணு விஞ்ஞானி , இஸ்ரேல் மற்றும் அமெரிக்க உளவு துறைகளால் கார் குண்டு வைத்து கொல்லப் பட்டதை நினைவில் கொள்ளுங்கள் . கூடங்குளத்தை அனுமதித்தால் , இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தில் ரசியா ஆதிக்கம் செலுத்தும் என்று கண்டு பிடித்த , மாமேதை தேசபக்தர் உதயகுமாருக்கு கடந்த 20 ஆனண்டுகளாக இந்த நாட்டின் அரசியல் பொருளாதார கொள்கைகள் மட்டுமல்லாமல் , அமைச்சர்களும் , பிரதமரும் அமெரிக்காவினால் தான் தீர்மானிக்கபடுகிறார்கள் என்பது எப்படி தெரியாமல் போனது ? கோமாவில் இருந்தாரா ? எப்படி அன்னா ஹசாரே கும்பலை அமெரிக்கா இயக்கியது என்று இப்போது புரிகிறதோ, அது போல் உதயகுமாரின் முக திரையும் , கூடங்குளத்திற்கு பின்னால் இருக்கும் சர்வதேச அரசியலின் சதி வலையும் கிழியத்தான் போகிறது. ... . .
samaran
மார்ச் 15 அல்ல.மார்ச் 12 தினமணி ....மேலும் புதிய தலைமுறை வார இதழ் செய்தியின் படி , உதய குமார் நடத்தும் " சாக்கர் " என்ற பள்ளியும் ஒரு என்.ஜி.ஓ. என்று செய்தி வந்துள்ளது. ஒரு வேளை கிறித்துவ நிறுவனங்கள் மற்றும் பாதிரிகளும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு போனால் , நாளையே ஜக்கி வாசுதேவும் , பூஜ்ய ஸ்ரீ ரவிஷங்கர் ஜியும் அணு உலையை எதிர்த்து பேசலாம்... இப்படி தான் ஜெகத் கஸ்பர் எனும் தேவகுமாரன் ஈழ விடயத்தில் அம்பலப்பட்ட போது , பூஜ்ய ஸ்ரீ யும் , சுவாமி அக்னிவேசும் களபணி ஆற்றினார்கள்.
சிவில் சமூகம் , பின் நவீனத்துவம் , மார்க்சியத்தை செழுமைபடுத்துவது(!?) , கட்டுடைத்தல், மீள் ஆய்வு , பெருங்கதையாடல் , விளிம்பு நிலை மக்கள் என்று தத்துவ ரீதியாக லட்சக்கணக்கான இளைஞர்களை காயடித்ததும் இவர்கள் தான் . மனித உரிமைகள், சுற்று சூழல் , ஊழல் , சாதி பிரச்சினை , எய்ட்ஸ் , பெண் விடுதலை , ஆணுறை , குழந்தை தொழிலாளர் என என்.ஜி.ஓ க்கள் இல்லாத விடயம் எதுவுமில்லை.இப்போது மீண்டும் ஒரு முறை ஜான் பெர்கின்ஸின் " ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் " படித்து பாருங்கள்...ஜான் பெர்கின்ஸ் குறிப்பிடும் குள்ள நரிகள் யாரெனப் புரியும் ...
Suresh, Chennai
என்னிடம் ஒரே ஒரு கேள்வி, நெடுனாட்களாய் என் மனம் கேட்கிரது. ஏன் இந்த போரட்டகுழு இந்த திட்டம் ஆரம்பிக்கும்பொழுது அமைதியா இருந்தார்கள்???????????
சி.மதிவாணன்
போராட்டக்குழுவினர் போராட்டம் நடத்தவில்லை. மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். போராட்டக்குழுவினர் தலைமைதாங்குகின்றனர்.
மேலும், திட்டம் துவங்கப்பட்ட நாள் முதல் அது அந்தப் பகுதி மக்களாலும் சிபிஐ எமெல் உள்ளிட்ட கட்சிகளாலும் எதிர்ப்புக்கு ஆளாகிவந்துள்ளது. அந்த எதிர்ப்பினை அரசு கண்டுகொள்ளாத சூழலில் ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை வெடிப்புப் பின்னணியில் கூடங்குளம் உலை இயங்கும் என்ற உடனடி அபாயத்தின் காரணமாக இப்போது இறுதிக்கட்ட போராட்டம் நடந்துவருகிறது.
கவனியுங்கள், உதயகுமார் போன்றவர்கள் மக்களைப் போரடத் தூண்டி போராட்டம் நடக்கவில்லை. மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற அங்கே வேறு அரசியல் கட்சிகள்/ அமைப்புகள் இல்லை என்பதால் இதுபோன்ற நிலையைக் காண்கிறீர்கள். போராட்ட குழுவை கொச்சைப்படுத்தும் முயற்சிகளால், போராடும் மக்கள் பின்வாங்கிவிடப்போவதில்லை. போராட்டம் சிலரின் தூண்டுதல் இதுநாள் வரை எதிர்ப்புப் போராட்டமேயில்லை என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் வலைமனையில் தேடுங்கள். போராட்டங்கள் பற்றிய நிறைய தகவல்கள் கிடைக்கும்.
ஆறுமுகம்
திரு.ராம், இந்த கட்டுரையை வாசிக்க:

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=18989

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.