இதுகாறும் திரைமறைவிலிருந்து ஒப்பாரி வைத்த திரு. வி.கலியாணசுந்தர முதலியாரவர்கள் இப்பொழுது வெட்ட வெளிச்சத்தில் வந்துவிட்டார்கள். சென்னைக்கடற்கரையில் சமீபத்தில் கூடிய ஒரு கூட்டத்தில் வகுப்புவாரிப் பிரதிதிதித்துவத்துக்கு எதிர்ப்பிரசாரம் செய்யப்போவதாக விளம்பரம் செய்துவிட்டார். முதலியாரவர்களின் இவ்வுறுதி நிலையை மிகப்பாராட்டுகின்றோம். நெருக்கடியான சமயங்களில் ‘வழ வழ’ பாடுவதே திரு. முதலியாரவர்கள் இயல்பு. அந்நிலைமாறி தன் அபிப்பிராயத்தை முதலியாரவர்கள் ஒரு வழிப்படுத்தியது போற்றத்தக்கதே. ஆனால் இந்நிலையைக் காஞ்சி மகாநாட்டின் போது கொண்டிருக்கலாகாதா?
உண்மையாகவே வகுப்புவாரிப்பிரதிநிதித்துவத்தில் முதலியாரவர்களுக்கு நம்பிக்கையில்லாதிருந்திருந்தால், திரு நாயக்கரவர்களின் தீர்மானத்தை மகாநாட்டில் பிரேரேபனை செய்ய அனுமதி கொடுத்து, தன் முழுபலத்தோடு அதை எதிர்த்திருக்கலாம். ‘ வீரம் வீரம்’ என்னும் மொழிகளை, தன் அக்கிராசனப் பிரசங்கம் முழுதும் அடுக்கி வைத்த திரு.முதலியாரவர்களுக்கு அவ்“வீரம் இல்லாதுபோயிற்று! குறுக்குவழியிலிறங்கி தன் குலத்துக்கு வினை தேடி, தமிழுலகத்தில் தான் பெற்றிருந்த மதிப்பையும் ஹோமஞ் செய்து விட்டார்கள். இப்பொழுது முதலியாரவர்கள்கூடப் பக்கமேளம் போடும் பார்ப்பனக்கூட்டத்தார் எதிர்பார்த்ததும் இதுவே. டாக்டர் நாயுடு, திரு.முதலியார் திரு நாயக்கர் ஆகிய மூவருக்கும் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் மதிப்பைக் குறைக்க அன்னோர் வெகுநாளாக முயற்சி செய்து வருவதை தமிழுலகம் அறியாதா?
அவர்கள் விரும்பியவண்ணமே திரு.முதலியாரவர்கள் காஞ்சியில் பலியானார்கள். பாக்கியிருவரையும் படுகுழியில் வீழ்த்த அவர்கள் தருணம் நோக்கியிருக்கிறார்கள்; திண்ணைப் பிரசாரமும் செய்கிறார்கள். அவ்விருவர் விதியும் எப்படியோ? ஈசனே அறிவன்;
பிராமணரல்லாதார் பலர் நீங்கி நிற்கும்போது “ ஜஸ்டிஸ்” இயக்கம் எவ்வாறு பிராமணரல்லாதார் இயக்கம் ஆகும் என்கிறார் நமது அண்ணா முதலியார். தற்கால காங்கிரஸ் தலைவர்கள் சிறு தேருருட்டி விளையாடிய காலத்திலேயே காங்கிரஸ் வீரர்களாய் விளங்கிய திரு. விபின சந்திரபாலர், சுரேந்திரநாத் பார்னர்ஜி ஆகிய தாராளக் கட்சியாரும், திரு. கெல்கர், ஜெயகர், ஆகிய சுயேச்சைக் கட்சியாரும், ஜஸ்டிஸ் கட்சியாரும் சேராத காங்கிரஸ் எவ்வாறு “ நாஷணல் காங்கிரஸ், ஆகுமென்பதை முதலியாரவர்கள் ஏனோ சிந்திக்கவில்லை. ஸ்ரீமான்கள். ஸ்ரீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி , அரங்கசாமி ஐயங்கார் மூவரிலும் இந்தியா லயித்து விட்டதா ? ஸ்ரீனிவாசய்யங்கார் கோஷ்டியாரும் திரு. முதலியாரவர்கள் போன்ற விபீஷ்ணர்களும் சேர்ந்திருப்பதினால் மட்டும் காங்கிரஸ் நாஷணல் காங்கிரஸ் ஆய்விடும் போலும்.
(குடி அரசு - கட்டுரை - 07.02.1926)

Pin It