வர்க்கம்

மனித சமூகத்தின் வளர்ச்சி மூன்று முக்கிய காலகட்டங்களை அடைந்துள்ளது. அவைகள்:

1. வர்க்கம் தோன்றா சமூகம்.

2. வர்க்க சமூகம்.

3. வர்க்கமற்ற சமூகம் என அடையாளம் காணும் அளவிற்கு முன்னேறியுள்ளது. இந்த மூன்று கட்டங்களும் அதனதன் உற்பத்தி முறையில் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்ட முன்னேற்றங்களுடன் ஒத்திருக்கின்றன. இதில் வர்க்கம் தோன்றாத சமூகத்தில் உற்பத்திச் சக்திகள் அல்லும் பகலும் பாடுபட்டு உயிர்வாழ்வதற்கான உற்பத்தியை மட்டுமே செய்யமுடிந்தது. உபரி உற்பத்தி கிடையாது. தனி மனிதனின் அசாதாரண திறமையால் கிடைக்கக்கூடிய பெருமையைத் தவிர வேறு எந்த சமூக ஏற்றத்தாழ்வுகளும் தோன்றவில்லை. இப்படி பல்லாயிரம் ஆண்டுகளாக இருத்தலுக்கான தொடர் போராட்டத்தின் விளைவாக உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

slave_350வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இரும்பின் கண்டுபிடிப்பு தொல்கால மனித வரலாற்றில் மாபெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது. இரும்பினால் செய்யப்பட்ட கருவிகளைக் கொண்டு பரவலாக காடுகளை அழித்து விளைநிலங்களாக்கப்பட்டன.  அந்நிலங்களை உழுவதற்கு ஏர்முனை, கோடாரி, மண்வெட்டி, மாவரைக்கும் திரிகை, குயவனின் சக்கரம் முதலான கருவிகளும், எண்ணெய் தயாரித்தல், மது தயாரித்தல் மற்றும் உலோகத்தயாரிப்புகளும் ஒரு கலையாக வளந்தது. உற்பத்தி கருவிகளால் பெருகிய உற்பத்திக்கேற்ப மக்கள் தொகையும் வேகமாக அதிகரித்தது. உற்பத்தி முறையில் தொழில்நுட்பம் போதுமான அளவு முன்னேறியதால் உபரி உற்பத்தி சாத்தியமாயிற்று. அதைத் தொடர்ந்து வேலைப்பிரிவினை தோன்றியது. இதன்விளைவாக உற்பத்தியில் உழைப்பை செலுத்துபவர்கள், உற்பத்தியை திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி நடத்திச் செல்பவர்கள் என இரு முக்கிய பிரிவுகள் தோற்றமெடுத்தன.

பழங்குடித் தலைவர்கள், பூசாரிகள், வானியல், கணிதம் கற்றறிந்த அறிஞர்கள் ஆகியோர் உற்பத்தியைத் திட்டமிட்டு, ஒழுங்குபடுத்தி நடத்திச் செல்பவர்களாக விளங்கினர். அவர்களுடைய வேலையின் சிறப்புத்தன்மையாலும் மேலாண்மையாலும் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தி உரிமையைப் பெற்றனர். அதன் தொடர்ச்சியாக அவர்கள் உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்களாக உருப்பெற்றனர். அப்படி உற்பத்திச் சாதனங்களின் சொந்தக்காரர்கள் ஆளும் வர்க்கம் என்றும் உழைப்பை செலுத்துபவர்கள் தொழிலாளி வர்க்கம் என்றும் இருவர்க்கங்கள் தோன்றி பிற்காலத்தில் ஆண்டான் அடிமை சமூகத்திற்கு வழிவகுத்தது.

இந்த காலகட்டத்தில் மேம்படுத்தப்பட்ட இரும்புக்கருவிகள், பாரவண்டிகள், யுத்தரதங்கள், மரப்பலகை, மரச்சட்டங்களைக் கொண்டு கப்பல் கட்டுதல், சிற்பக்கலையின் வளர்ச்சி மற்றும் ஸ்தூபிகளும் கொத்தளங்களும் அமைந்த அரண் சூழ்ந்த நகரங்கள் உருவாயின. மக்களில் பலரை வீட்டு வேலைக்காரர்களாகவும், தொழிலாளர்களாகவும், பண்ணையாட்களாகவும், சுரங்கத் தொழிலாளர்களாகவும் ஆக்கிய அடிமைமுறை நாகரிகத்தில் பெரும்பங்கு வகித்த கிரேக்கர்களும், ரோமாபுரி நிறுவப்படுவதற்கு சற்று முன்னிருந்த இத்தாலியர்களும், டாசிட்டஸ் காலத்திய ஜெர்மானியர்களும், வைக்கிங்குகள் காலத்திய ஜெர்மானியர்களும், சங்ககாலத் தமிழர்களும் இக்காலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய வர்க்கச் சமூகத்தைத் தொடர்ந்து கிரீஸ், மேற்கு ஆசியா ஆகிய பழைய அடிமை சமூகத்தில் நிலவிய அரசுகளும் கால் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் உள்ள பின்தங்கிய சமூகங்களும் ரோம் பேரரசின் கீழ் ஒரே பேரரசு நாடாக ஒன்றிணைக்கப்பட்டன. அப்பேரரசு அடிமை சமூகப் பொருளாதாரத்தை உள்ளடக்கியதாய் அமைந்திருந்தது. இப்பேரரசுகளுக்கு ஆளும்வர்க்கப் பிரதிநிதியாக அதிகாரம் செலுத்தும் உரிமை பெற்றிருந்தவர்களாக‌‌ பூசாரிகள் (மடாதிபதிகள்) இருந்தனர்.

அச்சமூகத்தில் கழுதை, குதிரை, ஆடு, மாடைப்போல எஜமானனுக்கு அடிமையும் ஓர் உடைமை. அந்தத் தொழிலாளிக்கு அடிமை என்ற அந்தஸ்தைத்தவிர வேறெந்த உரிமையும் கிடையாது. குடியுரிமையும், மனித உரிமையும் அற்ற உயிருள்ள ஒரு கருவியாக மட்டுமே வாழ வைக்கப்பட்டனர். அவர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவைவிட அதிகமாகக் கிடைக்கும் உபரி உற்பத்தி முழுவதும் அவர்களின் எஜமானர்களுக்கு சொந்தமாயின. சுதந்திர உழைப்பாளியைவிட அடிமை உழைப்பாளியால் அதிக இலாபம் கிடைத்தது.

அடிமை உழைப்பின் மூலம் பெறப்பட்ட இலாபம் மீண்டும் உற்பத்தியில் முதலீடு செய்யவேண்டிய அவசியம் இல்லாமையால், எஜமானர்களால் வீண்செலவுகள் செய்யப்பட்டன. இதனால் வெறுப்புற்ற அடிமைகள் தங்களின் சொந்த விடுதலைக்காக மட்டுமே அடிக்கடி கிளர்ந்தெழுந்தனரே தவிர புரட்சிகர வர்க்கமாக உருவாகவில்லை. அடிமைகள் உற்பத்தி முறை வளர்ச்சியின் உயர்ந்த கட்டத்தின் பிர‌திநிதிகளாக இல்லை என்பதால் இப்படியாக கிளர்ந்தெழ உந்தப்பட்டனர்.

இவ்வாறாக வர்க்கச் சமூகமான ஆண்டான் அடிமைச் சமூகம், நிலவுடைமைச் சமூகம் இரண்டிலும் அடிமைகளின் பொருளாதாரம் நீடித்துக் கொண்டிருந்தன. அத்தகைய பொருளாதாரமே அச்சமூகத்தின் மாபெரும் வளர்ச்சிக்கான தீர்மானகரமான சக்திகளில் ஒன்றாகவும் விளங்கியது. ஜனநாயகத்தின் பிறப்பிடம் எனக் கருதப்படும் ஏதென்ஸில் 21,000 சுதந்திர மனிதர்களும், 4,00,000 அடிமைகளும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வர்க்கச் சமூகத்தில் மூன்றாவது புதிய சமூகமாக முதலாளிய சமூகம் உருப்பெறத் தொடங்கியது. இங்கிலாந்தில் முதலாளிய சமூக உறவுகளின் அதிவேகமான வளர்ச்சியால் நிலவுடைமை அமைப்பின் அடித்தளம் ஆட்டங் க‌ண்ட‌து.

மூலதனம்

16ஆம் நூற்றாண்டில் “வேலியடைப்பு“ திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான உழவர்கள் அவர்களுடைய நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களின் நிலங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு கம்பளித் தொழிலுக்குத் தேவையான மேய்ச்சலுக்கு விடப்பட்டன. இப்படியாக பண்ணைகளை சிறுகச்சிறுக ஒழித்து நிலவுடைமைக்கு ஆதாரமான அடிமை முறைகளை ஒழிக்கத் தொடங்கியதிலிருந்து முதலாளிய சமூகம் துவங்கியது. இந்நடவடிக்கையினால் நிலத்தையிழந்த உழவர்கள், உழவைச் சார்ந்த வணிகர்களும் மிகக்குறைந்த கூலிக்கு தொழிற்சாலைக்கு தொழிலாள‌ர்களாக கிடைத்தனர்.

தொகுத்துச் சொல்வதானால் 16ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இங்கிலாந்தின் மிகப்பெரிய நிலவுடைமையாளர் குடும்பங்களுள் ஒன்றான டியூட்டர்கள் தொடக்ககால முதலாளிய வர்க்கத்தின் ஆதரவோடு அடிமைகளைச் சார்ந்த உற்பத்திமுறை சமூகத்தின் தலைமை பொறுப்பை வகித்த மடாதிபதிகளை எதிர்த்து போரிடக்கூடிய வலிமையைப் பெற்றனர். அதோடு எல்லா அதிகாரங்களையும் தனதாக்கிக்கொண்டு முடியாட்சி நிறுவுவதில் வெற்றி கண்டனர். சமய மடாலயங்களைக் கலைத்தனர். திருச்சபையின் நிலங்களைப் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட நிலங்களை தனக்குப் போக எஞ்சியவற்றை முதலாளிய வர்க்கத்தினருக்கு விற்றனர். இப்படியாக இங்கிலாந்து அரசர் மேற்கொண்ட சமய சீர்திருத்தம், நிலச் சீர்திருத்தம் முதலாளிய வளர்ச்சிக்கு ஒரு மிகமுக்கியமான பங்களிப்பாக அமைந்தது.

முதலாளியத்தின் வளர்ச்சியால் நிலங்களிலிருந்து அரசனுக்கு கிடைக்கவேண்டிய வருவாய் குறையத்தொடங்கியது. இதை சரிகட்ட முதலாளிய வர்க்கத்தின் மீது புதிய வரிகளைத் திணித்தனர். இதை எதிர்த்து முதலாளிய வர்க்கம் அரசர்களின் அதிகாரங்களை ஒழிக்கவேண்டும், வணிகத்தில் அரசர்கள் தலையிடுவதை நிறுத்தவேண்டும் என்று அரசனுடன் உள்நாட்டுப் போர் நடத்தினர். போரின் முடிவில் அரசன் முதலாம் ஜேம்ஸ் 'பிஷப்புகள் (மடாதிபதிகள்) இல்லையேல் அரசனும் இல்லை' என்று சமய சீர்திருத்தங்கள் செய்தமைக்காக வருந்தினான். திருச்சபைகளும் நிலவுடைமையாளர்களின் நிலங்களும் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. நிலவுடைமை தகர்த்தெறியப்பட்டு முதலாளியம் அரியணை ஏறியது.

மீண்டும் 1660இல் எஞ்சியிருந்த மடாதிபதிகளின் நிலவுடைமையாளர்களின் ஆதரவைப் பெற்று முடியாட்சியை அரசர்கள் நிறுவினர். இம்முறை பழைய மாதிரி அல்லாமல் நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை ஏற்று ஆள்வதாக உறுதியளித்த டச்சுக்காரனுக்கு மணிமுடி சூட்டினர். நாடாளுமன்றத்திற்குப் பனிந்து இரண்டாம் சார்லஸ் ஆட்சிபுரிந்தான். நாடாளுமன்றத்தில் செல்வாக்கு பெற்றிருந்த முதலாளிகள், பெருமுதலாளிகள் நிலவுடைமையாளர்களின் மீதிருந்த அச்சத்திலிருந்து கட்டுப்பாட்டிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டனர். முதலாளிய மூலதனத்தை பெருக்க அனைத்து உரிமைகளையும் அதிகாரங்களையும் நாடாளுமன்றத்தின் மூலம் பெறத்தொடங்கினர்.

அடிமைகள்

பொதுவாக, எந்த ஒரு மக்களின் மீதும் வறுமையை ஏற்படுத்தும் பொருளாதாரத்தைத் திணித்து, அம்மக்களிடமிருந்து பெறப்படும் உழைப்பால் விளையும் உற்பத்தியை கொள்ளையடித்துதான் மூலதனம் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த சூட்சமத்தை உள்ளடக்கியதுதான் உலகப் பொருளாதாரக் கொள்கை. இக்கொள்கையால் உலகின் பெரும்பான்மையான மக்களுக்கு நுகர்வு மறுக்கப்படுகிறது. ஏனெனில் நுகர்வு மறுப்பே வறுமையின் தோற்றுவாய். வறுமைதான் செல்வத்தின் செழிப்பான வளத்தை வழங்கும் காரணி. வறுமையும் இல்லாமையும் உலகெங்கும் பெருக, செல்வம் அதன் அதீதமான வளத்தைப் பெறுகிறது. இது எதிர்மறை அம்சமாகவே வளர்ச்சியுறுகின்றது.

slave_business_600

இதன் விளைவாக உலகமே ஏழை நாடுகள், பணக்கார நாடுகள் என்று பிரிக்கப்பட்டு, இருநாடுகளிலும் ஏழை பணக்காரன் என்ற பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டன. இது இயற்கையான, இயல்பான ஒன்றாக புனையப்பட்டது. அதோடு கடந்தகாலத்தின் அடிமைகளைக்கொண்ட கூலியற்ற உற்பத்தி பணக்காரர்களை பெரும் செல்வந்தர்களாக்கியதையும் அனுபவத் திரட்சியாக முதலாளியம் உள்ளடக்கியதால் அடிமை வியாபாரம் இலாபகரமாக இருந்தது.

உழைப்புதான் செல்வம் என்பதால் உழைப்பு பிழியப்பட்டது. இன்னும் செல்வம் செழிக்க புதிய உழைப்பை சுரண்டுவது அவசியமாகிறது என்ற அடிப்படையில் புதிய அடிமைகளின் தேவையும் அதிகரித்தது. முதலாளிய சமூகத்திலும் யாரெல்லாம் அடிமைகளை வைத்திருந்தார்களோ அவர்களின் சொத்துக்கள் பன்மடங்கு அதிகரித்தது. அடிமைகளின் முக்கியத்துவத்தை கருதி சட்டங்களாகவும், அந்நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவமாகவும் எங்கும் எல்லா இடத்திலும் பொது விதியாகி நியாயத்தன்மையை பெற்றது. மூலதனத்தின் இத்தேவையை நிறைவு செய்யும் வகையில் மிகப்பெரிய அடிமைகளை கோரும் சர்வதேச ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

1700இல் இருந்து 1743வரை ஆண்டுக்கு 4800 நீக்ரோக்களை ஸ்பானிஷ், அமெரிக்காவுக்கு அனுப்பும் உரிமையை இங்கிலாந்து பெற்றது. இன்றைய வர்த்தக புரிந்துண‌ர்வு ஒப்பந்தங்களைப் போலவே, நாகரீக ஒப்பந்தங்களாகவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அடிமைகளின் உழைப்பில் உண்டான செல்வச் செழிப்பு அடிமைகளையே சர்வதேச வர்த்தகப் பண்டமாக்கியது. அன்று அடிமைகள் ஏற்றுமதியில் ஈடுபட்ட கப்பல் நிறுவனங்களில் ஒன்றான லிவர்பூல் 1730இல் 15 கப்பல்களில் தொடங்கப்பட்டு 1751இல் 53 கப்பல்களாகவும், 1760இல் 74 கப்பல்களாகவும், 1770இல் 96 கப்பல்களாகவும், 1792இல் 132 கப்பல்களாகவும் இதன் பயன்பாடுகள் அதிகரிக்கும் அளவு அடிமை வியாபாரம் கொழுத்த இலாபம் தரும் சர்வதேசத் தொழிலானது. இதில் இங்கிலாந்து அதிக இலாபம் சம்பாதித்தது. 1790இல் அமெரிக்காவில் சுமார் 6 இலட்சம் கறுப்பின அடிமைகள் இருந்தனர். 1861இல் 40 இலட்சமாக பெருகியது என்பது குறிப்பிடத்தக்கது.

slave_ship_37016ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஆசியாவுடனான வணிகத்தில் தனியுரிமை கொண்டிருந்த போர்ச்சுக்கல் (போர்ச்சிக்கீசியர்) நாட்டுக்குப் போட்டியாக இங்கிலாந்தும் (பிரிட்டீஷ்), நெதர்லாந்தும் (டச்சு) புறப்பட்டன. குறிப்பாக போர்ச்சுக்கீசியரை நெதர்லாந்தினர் தோற்கடித்து சந்தையை விரிவுபடுத்திக் கொண்டிருந்த வேளையில், இந்தியாவில் பிரிட்டீஷாருக்கு பல வெற்றிகள் கிடைத்தது. அந்த செல்வாக்குடன் இங்கிலாந்து நெதர்லாந்தை வீழ்த்தியது. 17ஆம் நூற்றாண்டில் பிரிட்டீஷ் பேரரசு உருப்பெறத் தொடங்கி வட அமெரிக்காவிலும், ஐரோப்பிய கண்டத்தின் கரீபியன் தீவுகளிலும் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டன. ஆசிய நாடுகளுடன் வணிகம் செய்வதற்காக “ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி” எனும் தனியார் நிறுவனமும் தொடங்கப்பட்டது.

இப்படியாக முதலாளிய சமூகத்தின் சட்டங்கள், ஒப்பந்தங்கள், ஒழுக்கங்கள், பண்பாடுகள் அனைத்தும் அடிமை வியாபாரத்தை ஒட்டியதாக அதற்கு உட்பட்டதாக மாறியது. கருத்தியல் தளத்தில் மதம் இதற்கு இசைந்துகொடுத்து முதலாளியத்தின் ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்தியது. நாளடைவில் இதுவே ராஜதந்திரமாகவும், சமகால அரசியலாகவும் மாறியது.

இந்தியாவில் பஞ்சம்

பிரிட்டீஷ் வணிகம் ஆசியாவிலும் செல்வாக்கு பெறத்தொடங்கியதால், ஆப்ரிக்க நீக்ரோக்களைத் தொடர்ந்து, சோதனை முயற்சியாக சீனாவிலிருந்து 12 கப்பல்களில் அடிமைகளை அழைத்துக்கொண்டு போய் கரீபியன் தீவுகளில் விட்டது. சீனர்களில் 90 சதவிகிதம் பேர் வேலைப்பளுவின் காரணமாக தாக்குப்பிடிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டனர். அதன்பிறகு இந்தியர்களைக் குறிவைத்தனர்.

இந்தியாவில் அடிமைகளைப் பிடிப்பதற்கு ஆப்பிரிக்க நாடுகளைப் போல் வேட்டையாடவில்லை. மாறாக கிராமங்களில் பஞ்சத்தை உருவாக்கினர். கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் அனைத்திலும் தொடக்கம் முதலே பஞ்சங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக தமிழகத்தில் 1646 தொடங்கி 1907 வரை அதாவது மெட்ராஸ் மாகாண‌த்தை உருவாக்கியபின் இதன் வரலாறு நெடுக பஞ்சங்களைக் காண‌முடியும். கிட்டத்தட்ட 17க்கும் மேற்பட்ட உணவுப் பஞ்சம் மெட்ராஸ் மாகாண‌த்தைத் தாக்கி லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பலிவாங்கியது. தப்பிப் பிழைத்தவர்கள் பஞ்சம் பிழைக்க நகரங்களை நோக்கி புலம்பெயர்ந்தபோது, வேலை தருவதாய்ச் சொல்லி கொத்தடிமைகளாக்கப்பட்டது, பக்கிங்ஹாம் கால்வாய் வெட்டப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. இத்தகைய உழைப்பையே சாலைகள், கோட்டை, கொத்தளங்கள் என்று நகரின் துரித வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டன. இப்படி இவர்கள் பஞ்சங்களை ஏற்படுத்துவதின் நோக்கம் மனித உழைப்பு மதிப்பீடுகளின் வீழ்ச்சியை முன்னிருத்தித்தான் என்பது புலப்படுகிறது.

பஹாரியா பஞ்சம், ஹால்பா பஞ்சம், துவாதசப் பஞ்சம், தாதுப் பஞ்சம், குண்டூர் பஞ்சம், ஒரிசாப் பஞ்சம் என ஆவணங்களில் பதிவு செய்யப்படாத எத்த‌னையோ பஞ்சங்களை ஏற்படுத்தினர். இப்பஞ்சத்தில் இறந்தவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. பருவமழை தவறியதையடுத்து ஏற்பட்ட வறட்சிகளையும் பயன்படுத்திக் கொண்டனர்.

hunger_people_444

1774இல் சத்தீஸ்கர் பகுதி தண்டகாரண்யாவில் அமைந்துள்ள பஸ்தாரில் மிகக் குறைந்த விளை நிலங்களே கொண்டிருந்த மக்கள் கடுமையான நீண்டகால பஞ்சத்தை எதிர்கொண்டனர். அம்மக்கள் பூர்வீக நிலங்களை விட்டு அடிமை வாழ்விற்கு ஆயத்தமாகாததால் ஆத்திரமுற்ற பிரிட்டிஷ் அரசு மராத்தியர்களின் ஆதரவோடு போர் தொடுத்தது. அதையும் எதிர்கொண்ட மக்கள் சுமார் ஐந்து ஆண்டுகள் (1774 - 1779) போர் புரிந்து தோல்வியுற்றனர். அதைத் தொடர்ந்து ஹால்பா பழங்குடி மக்கள் மீது பிரிட்டிஷ் அரசு படுகொலைகள் நடத்தியது.

1792இல் பாஞ்சாலங்குறிச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான உணவுப்பஞ்சத்தை ஏற்படுத்தினர். மக்கள் உணவு கிடைக்காமல் அலைமோதும் அவலநிலை தோன்றியது. இதனை அறிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் தனது தானாபதி சிவசுப்பிரமணியப் பிள்ளை தலைமையில் போர் வீரர்களைக் அனுப்பி திருவைகுண்டத்தில் இருந்த கம்பெனிக்கு சொந்தமான நெற்களஞ்சியத்தை திறந்துவிட்டார். அங்கிருந்த நெல் முழுவதையும் அந்த மக்களுக்கு பகிர்ந்தளித்தார். இதனால் ஆத்திரமுற்ற கம்பெனி நிர்வாகம் மேஜர் பானர்மேன் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பி பாஞ்சாலங்குறிச்சி மீது பீரங்கி தாக்குதல் நடத்தி போர் புரிந்தது. தானாபதிப்பிள்ளையை கைதுசெய்து நாகலாபுரத்தில் நடுத்தெருவில் தூக்கிலிட்டு கொன்று, அவர் தலையைத் துண்டித்து ஒரு வேல் கம்பில் செருகி, பாஞ்சாலங்குறிச்சியில் பொது மக்களின் பார்வைக்கு வைத்தது. பின்னர் வீரபாண்டிய கட்டபொம்மனையும் தூக்கிலிட்டு கொன்றது. இது பஞ்சத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பவர்களை அச்சுறுத்தியது.

1857இல் இன்றைய சத்தீஸ்கரில் சோனாகான் என்ற பகுதியில் வெள்ளை அரசு பஞ்சத்தை ஏற்படுத்தியது. அதே பகுதியைச் சேர்ந்த இரக்க மனப்பான்மை உள்ள ஜமீன்தாரான வீரநாராயண்சிங் (சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்) என்பவர் வணிகர்களின் களஞ்சியங்களிலிருந்து தானியங்களைப் பறிமுதல் செய்து மக்களுக்கு விநியோகித்த குற்றத்திற்காக மேஜர் ஸ்மித் என்பவன் தலைமையிலான பிரிட்டிஷ் ராணுவப் படையால் கைது செய்யப்பட்டு அதே ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் தூக்கிலிட்டு கொல்லப்பட்டான்.

1876 - 78 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் பலபகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கியது. குறிப்பாக இன்றைய தமிழகப் பகுதிகளான சேலம், வடாற்காடு, கோவை, மதுரை, ராமனாதபுரம், நெல்லை மாவட்ட நிலமற்ற வறிய விவசாயிகளின் இருத்தல்களையும் வாழ்வாதாரங்களையும் சிதைத்ததைப் பயன்படுத்திக்கொண்டு சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட‌வர்களின் எண்ணிக்கை 3.30 இலட்சத்திற்கும் அதிகம்.

பஞ்சத்தின் விளைவால் நுகர்வுப் பண்டங்களின் விலை பன்மடங்கு பெருகியபோதும், சிலரால் பொருட்கள் பதுக்கப்படும்போதும், பதுக்கிய பொருட்களைக் கொண்டு கொள்ளை இலாபமீட்டிய போதும் அரசு கண்டுகொள்ளவில்லை. மாறாக “பஞ்சத்திற்கான காரண‌ம் உள்ளூர் வியாபாரிகளே" என்று உள்ளூர் வியாபாரிகளின் மீது பழிசுமத்தியது. அதன்விளைவாக கல்லிடைக்குறிச்சியின் முக்கிய சந்தையில் சுமார் 500 பேர் கொண்ட கூட்டம் அரிசி, நெல் மற்றும் தானியங்களை சூறையாடியது. இதைத்தொடர்ந்து எல்லா கடைத்தெருக்களிலும் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இப்பஞ்சத்திற்கான காரண‌ம் உள்ளூர் வியாபாரிகளின் இலாபவெறிதான் என்றிருந்த மக்களின் உணர்ச்சிகள் ஆங்காங்கே கலவரமாக வெடித்தது. இக்கலவரங்களில் பெண்கள், நகரத் தொழிலாளர்கள், கூலி, ஏழை விவசாயிகள், இரயில்வே தொழிலாளர்கள் போன்றோர் அதிக அளவில் ஈடுபட்டனர். அரசு இத்தகைய நடவடிக்கைகளை எதிர்பார்த்து கொண்டிருந்ததைப்போல இக்கலவரங்களைப் பயன்படுத்தி கடுமையான நடவடிக்கைகள் மூலம் உயிராதாரங்களைப் (நுகர்வு பொருட்களை) பெறுவதை தடுத்து நிறுத்தியது. மக்கள் இத்தகைய அச்சுறுத்தலால் மேற்பட்ட நடவடிக்கைகளை கைவிட்டனர். மாறாக‌ பெண்கள் தங்கள் குழந்தைகளை விற்கத்தொடங்கினர். சென்னை மாகாணத்தின் பெல்லாரியைச் சேர்ந்த ஒரு பெண் தன் குழந்தையை அதிகபட்ச விலையாக 12 அணாவுக்கு விற்றிருக்கிறார் என்றும், கிருஷ்ணாவைச் சேர்ந்த ஒரு தொழிலாளி தன் மூன்று பெண்களையும் தேவதாசி சமூகத்தினரிடம் விற்றிருக்கிறார் என்றும் சில வழக்குகள் பதிவாகியுள்ளன.

poor_people_230இன்றைய பீகாரில் உள்ள சந்தால் பர்கானா மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த பழங்குடியினர் சவுரியா பஹாரியர்கள் கூட்டம் பஞ்சம் பிழைக்க தங்கள் இருப்பிடங்களை விட்டு பெருமள‌வில் வெளியேறினர். (பஞ்ச பஹாரியர்கள் என்ற குறியீட்டுச் சொல்தான் பஞ்சப் பராரிகள் என்ற வழக்குச் சொல்லாக அமைந்தது). பலர் பயணங்களின் ஊடாக இற‌க்கத் தொடங்கி பிழைத்திருந்தவர்கள் நகரங்களில் வெள்ளையர்களால் அமைத்திருந்த நிவாரண முகாம்களைத் தேடி வந்தனர். அப்படி வந்தவர்களில் பலரை அந்த முகாம்கள் அடிமைகளாக கப்பலில் ஏற்றும் நடவடிக்கையில் இறங்கியது. பஞ்சம் பிழைக்க இந்தியர்கள் பலர் தங்களை அடிமைகளாக விற்றுக்கொண்டனர்.

இந்தியாவில் முதல் அடிமைகளின் கப்பல் “விட்பை“. அக்கப்பலின் அதிகாரிகள் சிலர் வங்காள மாகாண‌ (ஜார்கண்ட்) பகுதியைச் சேர்ந்த சாந்தால் பழங்குடியினரை சிறைப்படுத்தி பின்னர் அடிமைகளாக கடத்திச் சென்றனர். பிரெஞ்சு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளுக்கு அதாவது டிரினிடாட், ஜமைக்கா, சுரினாம், பிரிட்டிஷ் கயானா, கொத்லூப், மார்டினிக் என பல தீவுகளுக்கு கடத்தப்பட்டனர். அப்படி கொண்டு செல்லப்பட்டவர்கள் யாரும் தாய்மண்னை மறுபடியும் தொடமுடியாத தூரத்திற்குப் போகிறோம் என்று தெரியாமலே வெள்ளையர் வலையில் சிக்கினர். அவர்களுள் சீனர்களைப்போல தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. தமிழகத்தைப் பொருத்தமட்டில் தமிழர்கள் அறிந்த ஒரே தூரப்பிரதேசம் அந்தமானாகத்தான் இருந்தது. ஏனெனில் “அந்தமானில் கரும்பு வெட்டும் வேலை. இரண்டு நாள் கப்பல் பயணம். ஒருவருட வேலை. கைநிறைய சம்பளம்" என்று வெள்ளையர்களின் ஏஜென்ட்டுகள் வலைவிரித்தனர். சிலர் எங்கேயாவது போய் பஞ்சம் பிழைத்தால் போதும் என்ற முடிவில் கப்பலில் ஏறினர்.

அந்தப்பயணம் மிகக் கொடூரமான பயணமாக இருந்திருக்கிறது. அளவு நீர், உணவு, காற்று புகாத சுகாதாரமற்ற அடித்தளத்தில் இருந்த அறைகள் எல்லாமே அளவுப்படி இருந்தது. நோய்வாய்ப்பட்டு தொடர் இறப்புகள் ஏராள‌மாய் நடைபெறலாயின. எஞ்சியுள்ளவர்கள் தப்பிப்பிழைத்ததும் ஏதோ ஒரு வாழ்க்கை காத்திருப்பதாக நினைத்திருந்தனர். ஆனால் காலவரையற்ற ஓயாத உழைப்பும் கடுமையான சட்டங்களும் வறுமையும் அவர்களுக்குக் காத்திருந்தது. விழித்திருக்கும் ஒவ்வொரு வினாடியும் உழைப்பிலேயே கழிக்க வேண்டிய நிலை இருந்தது. அறுவடைக் காலத்தின் போது 18 மணி நேரமும், கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவிக்கும் கடைசி நாள் வரையும் வேலை கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது. பத்து ஆண்டுகள் அடிமை ஒப்பந்தத்தில் ஏமாற்றி கையொப்பம் பெறப்பட்டன. வேலை செய்யும் இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டருக்கு மேல் செல்வது, இரண்டு மாத சிறைத் தண்டனைக்‌ குற்றமாகும். வெள்ளைக்காரனை அடித்த அடிமையின் முகத்திலும், முதுகிலும் பழுக்கக்காய்ச்சிய இரும்பால் முத்திரையிட்டனர். இக்கொடுமைகளைப் பொறுக்கமுடியாத அடிமைச் சமூகத்தில் தற்கொலைகள் அதிகரித்தது. இத்தகைய இழப்புகளை ஈடுசெய்ய, இவர்கள் மேலும் அதிக அளவில் அடிமைகளை காலனி நாடுகளிலிருந்து கொண்டுவந்தனர்.

குடும்பங்களுடன் (பெண் அடிமை) வந்தவர்களுக்கு பண்ணையின் மேலாளர்களாலும், அடிமை வாழ்வைத் தொடரும் கருப்பர்களாலும், இவர்களோடு சகபயணியாக வந்த இந்தியர்களாலும் பாலியல் வண்முறைகளும், அத்துமீற‌ல்களும் நடைபெற்றன‌. இதைத்தொடர்ந்து அடிமைகளுக்குள் அடிதடிகளும் கொடூரக்கொலைகளும் சாதாரண நிகழ்வான‌து. இதனால் ஏற்படும் இழப்பை தவிர்க்க அடிமைகள் இறக்குமதியில் 'நூறு அடிமைகளுக்கு நாற்பது பெண்கள் இருக்க வேண்டும்' என பிரிட்டிஷ் அரசு ஏஜென்ட்டுகளை கட்டாயப்படுத்தியது. அதனால் விபசார விடுதிகளிலுள்ள பெண்கள், கிராமங்களில் இளம் விதவைகள், கோயில்களுக்கு நேர்ந்து விடப்பட்ட பெண்களை வலுக்கட்டாயமாக கப்பல்களில் ஏற்றினர். பிரிட்டன், பிரான்ஸ், ஹாலந்து என மூன்று நாடுகள் இப்படி இந்தியாவில் நீண்டகாலமாக அடிமை ஏற்றுமதி செய்து தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளுக்குக் கொண்டு சென்றனர்.

1646இல் சென்னையில் சாந்தோமிலும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சௌல்ட்ரி கேட் பகுதியிலும் அடிமைகள் மலிவு விலையில் பதிவு செய்யப்பட்டு விற்கப்பட்டனர். அடிமை வர்த்தகர்கள் அவர்களை கப்பலில் ஏற்றிக்கொண்டு போர்ச்சுக்சீசிய, டச்சு மற்றும் பிரிட்டீஷ் காலனிகளுக்கு அனுப்பினர். 1838 முதல் 1917 வரை கரீபியன் தீவுகளுக்கு மட்டும் கடத்தப்பட்டவர்கள் ஐந்து லட்சத்திற்கும் மேல் என்றும் அதில் அதிகம் பேர் தமிழர்கள் என்றும் வெள்ளையர்களின் குறிப்புகள் சொல்கின்றன.

1653இல் கிழக்கிந்திய கம்பெனிக்கு மிகவும் நெருங்கிய வர்த்தகன் வெங்கட்டி என்பவனின் தம்பி கண்ணப்பா என்பவன் அடிமை வர்த்தகர்களிடம் பல குழந்தைகளையும், பெண்களையும் கடத்தி விற்பதில் ஈடுபட்டுவந்தான். 1866 ஒரிஸா மாநிலத்தில் மட்டும் பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பஞ்சத்தால் இறந்தனர். நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 400 அடிமைகள் பசியால் குற்றுயிரும் குலையுயிருமான நிலையில் போர்ச்சுக்கீசிய கப்பல் ஒன்றில் பயணம் செய்ததிற்கான குறிப்புகள் என அடிமை வர்த்தகம் தொடர்பாக கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிரிட்டீஷ் ஆவணங்களில் (பிரிட்டன் அருங்காட்சியக கையெழுத்துப்படிகளில்) இருந்து கிடைக்கும் தகவல்கள், இப்படி தொகுக்கப்படாத தகவல்கள் இன்னும் ஏராள‌ம் இருக்கக்கூடும். இந்த அடிமைகள் வர்த்தகத்தில் முக்கியமாக ஈடுபட்ட இடைத்தரகர்கள் இந்தியர்களாக இருந்தனர். இயல்பானதாக எந்த எதிர்ப்புமின்றி இந்த வியாபாரம் பல ஆண்டுகள் நடத்தப்பட்டன.

madras_peope_1877

இதையே தோழர் காரல் மர்க்ஸ் ஆதாரத்துடன் எடுத்துரைத்தார். புரட்டெஸ்டென்ட் மதத்தின் கண்ணியமிக்க காவலர்களான புதிய இங்கிலாந்தின் புனிதர்கள், செய்ததெல்லாம் சூறையாடல்களும் சொந்தநாட்டு மக்களை பட்டினி போட்டு ஈவிரக்கமின்றி கொள்ளையடித்ததும்தான். ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரையில் இப்படி அழிக்கப்பட்ட மக்கள் ஏராள‌ம்.

அந்நாட்டின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் அழித்து இலாபமீட்ட முனைந்தபோது எதிர்ப்பு தெரிவித்து சுரண்டலுக்கு இண‌ங்க மறுத்த பூர்வகுடிகளை ஈவிரக்கமின்றி வேட்டையாடிக் கொன்றனர். அந்த நாட்டின் மண்ணின் வளத்தை சுரண்ட அடிமைகளையும் கொத்தடிமைகளையும் மற்ற நாடுகளிடமிருந்து கடத்திவந்து அவர்களின் உழைப்பின் மூலம் செல்வத்தைப் பெருக்கினர். அந்த நாட்டின் பூர்வகுடிகளைக் கொல்வது கூட வருமானம் தரும் தொழிலாகியது. இப்படியாக கொன்று வாழும் வல்லாதிக்கக் கும்பல், தமது வேட்டைக்காக துப்பாக்கியையும், கொலைக்கருவிகளையும் சட்டப்பூர்வமானதாக்கிக்கொண்டு திரிந்தனர். அமெரிக்காவில் தப்பியோடிய கறுப்பின அடிமைகளைப் பிடித்துக் கொடுக்கும் நிறுவனங்களும் சவுக்கடி கொடுக்கும் நிறுவனங்களும் நிலையான வருமானம் தரும் தனியார் நிறுவனங்களாக இருந்திருக்கிறது.

அடிமைகளின் உழைப்பிலும், காலனி ஆதிக்கத்தாலும் திரட்டிய செல்வங்களைக் கொண்டு மேற்கத்திய நாகரீகங்கள் மேன்மை பெற்றன. இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

மேலும் ஜாவாவில் பாஞ்ஜீவாங் மாநிலத்தில் 1750இல் 80,000 மக்கள் வாழ்ந்தனர் 1811இல் 8,000 மக்கள் மட்டுமே வாழ்ந்திருக்கின்றனர்.

மனித வேட்டை, மனித வர்த்தகம், மனித உழைப்பு மூலம், இனிமையான நாகரீகமான வாழ்வு ஒரு சிறு பகுதி மக்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட‌து. இந்த வர்த்தகர்கள் உருவாக்கிய மூலதன திரட்சிதான் இன்றைய சுதந்திரம், ஜனநாயகம்.

மூலதனத்திற்கு அடிமைகள், சொந்த மக்கள் என்ற வேறுபாடு கிடையாது. உழைக்கும் சக்திகள் அனைத்தும் ஓர் நிறை. மனித உழைப்பை சிலர் தமதாக்கிக்கொண்டதால் மூலதனம் தோன்றியது. இத்தகைய உழைப்பே சிலரை சொத்துடையவர்களாக்கியது. சொத்துக்களை பெருக்க, மனித உழைப்பை சுரண்டும் அநாகரீகநிலையை நாகரீக மனித விழுமியங்களாக்கி கவுரவமாக சுரண்டிப் பிழைக்கத்தான் இன்றைய ஜனநாயகம், சுதந்திரம் பற்றிய கோட்பாடுகளை முதலாளி வர்க்கம் உருவாக்கியது.

மூலதனம் அடிமைகளைத் தவிர்த்து எதையும் சிந்திப்பது கிடையாது. பல மதங்களும், அரசர்களும், சான்றோர்களும் அடிமைகளை நல்ல முறையில் நடத்தக் கோரினாலும், 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்துதான், அடிமைமுறையை மொத்தமாக ஒழித்துக் கட்டுவதற்கான பலத்த குரல்கள் எழுந்தன. இவை முதலில் இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பரப்புரைகள் செய்யப்பட்டன. இவர் 1787ல் ஆரம்பிக்கப்பட்ட ‘அடிமை ஒழிப்பு குழுவின்' முதல் தலைவர். இது பல நாடுகளுக்குப் பரவியது. பிரிட்டனில் தோழர் ஜான் ஸ்கோபில் தலைமையில் அடிமைகளுக்கெதிரான கொடுமைகளை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அடிமைகளைப் பொறுத்தவரையில் அநேகர் பலசாலிகளாகக் காணப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு ஒன்றுசேரக் கூடிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர்களின் சிந்தனை உரிமையும், கருத்து வெளியீட்டு உரிமையும் பறிக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட பின்னணியில் சிறுகச் சிறுக ஏற்பட்ட மறைமுக எழுச்சியின் ஒரு விளைவாக 1791 ஆகஸ்ட் 22ம் தேதி இரவு Island of Saint Domingue (தற்போதைய ஹெய்த்தி) இல் அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சி, அடிமை வியாபாரத்தின் பின்ன‌டைவுக்கு வித்தாகியது.

ஹெய்த்தியில் ஏற்பட்ட கிளர்ச்சியினையடுத்து பல உலக நாடுகள் படிப்படியாக அடிமை வியாபாரத்தை தடைசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. உதாரணத்திற்கு சில நாடுகளை குறிப்பிடுவோமாயின் சிலி 1823இலும், ஸ்பெயின் 1837இலும், டொமினிகன் ரிபப்ளிக் 1844இலும், ஈகுவடார் 1854இலும், பிரேசில் 1888இலும் அடிமைமுறையைத் தடை செய்தன. இதன் விளைவால் உலகத்தின் பெரும்பாலான கப்பல் படைகள் ஆப்பிரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கு இடையே நடந்துவந்த அடிமை வியாபாரத்தை நிறுத்திக்கொண்டன.

இதைத் தொடர்ந்து முதலாளிய பிரெஞ்சுப் புரட்சியின் போது ‘முதல் குடியரசு' பிரகடனம் செய்யப்பட்டபின், அடிமைமுறை தடை செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் நிலவுடைமையாளர்கள் கைப்பற்றி நெப்போலியன் தலைமை ஏற்றவுடன், அடிமைத்தனத்தின் பல தடைகள் நீக்கப்பட்டன. 19ம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறையை தடை செய்து ஒழித்தன. அதாவது அடிமைகளை வைப்பதும், பிடிப்பதும், விற்பதும், வாங்குவதும், கடத்துவதும் தடை செய்யப்பட்டன. அடிமை ஒழிப்பு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெரிய அரசியல் பிரச்சினையாகி, அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு வித்திட்டது.

அதன்பிறகு அடிமைகளை நடத்தும் முறையில் வெள்ளை அரசுகள் சில மாற்றங்களைக் கொண்டுவந்தன. அவற்றில் அடிமைகள் தங்கள் நாட்டிற்கு திருப்பியனுப்பும் முடிவு முதன்மை பெற்றிருந்தது. இதன் விளைவால் அடிமைகள் தங்கள் நாடுகளுக்கு திரும்ப நினைத்தபோது, அடிமைகளை இழக்க மனமில்லாத அவ்வரசுகள் இலவசங்களை அறிவித்தது. பத்து ஆண்டுகள் முடிந்த அடிமைகளுக்கு தலா ஐந்து ஏக்கர் நிலம் இலவசம் என்றும் தங்கள் சொந்த நிலத்தைப் பராமரித்துக் கொண்டே பண்ணைகளில் வேலை பார்க்கலாம் என்றும் சலுகை அறிவித்தது.

அடிமைகளை வைத்து சொந்த நாட்டில் சுரண்டுவது அந்த நாடுகளில் தடை செய்யப்பட்டபோது, மூலதனம் அமைதியாக குந்தியிருக்கவில்லை. அதிகம் சுரண்டக்கூடிய இடங்களை நோக்கி முதலாளியம் - மூலதனம் - ஒடிச் சென்றது. மூலதனத்துடன் கொள்ளையடிப்போரும் கூடிச் சென்றனர். இந்த வல்லாதிக்க சுரண்டல்கள் அடிமைகள் பொருளாதாரத்தை தவிர்த்து எதையும் சிந்திப்பது கிடையாது. அடிமைகளால் ஏற்பட்ட சொந்த சமூக சிதைவினால், அடிமைமுறைக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளினால், அடிமை வியாபாரத்தையும் அடிமை முறையையும் கைவிட வேண்டியளவுக்கு உள்நாட்டில் நிலைமைகள் உருவானது.

இதில் இருந்து மூலதனம் தப்பிப்பிழைக்க மனிதர்களை கடத்தாமல், அந்நாடுகளை அடிமையாக்கினர். காலனியாதிக்கத்தின் தோற்றம் இப்படித்தான் உருவானது. இதன்மூலம் வல்லாதிக்கம் அந்த காலனி மக்களை சுரண்டவும், அந்த நாட்டின் வளத்தை கைப்பற்றவும் வழிவகுத்துக்கொண்டது. கப்பல் அடிமைகளை ஏற்றுவதற்குப் பதில், அந்த நாட்டு மக்களின் உழைப்பினால் உருவான செல்வங்களையும், இயற்கை வளங்களையும் ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. உழைப்பையும் அதனால் விளைந்த செல்வங்களையும் பெறுவதற்கான முறைகளை மாற்றியதே தவிர உழைப்பு சுரண்டப்படுவதும், வளங்கள் சூறையாடப்படுவதும் நின்றுவிடவில்லை. அது புதிய வடிவில் தொடர்ந்தது.

அன்று அடிமை மனிதர்களின் மேன்மைக்காக எந்தச்சட்டமும், உலக மனிதாபிமான கண்ணோட்டமும் இல்லாதிருந்தது. அது அக்காலத்தைய உலக ஒழுங்குகளில் ஒன்றாக இருந்தது. அதைப்போலவே இக்கால ஒழுக்கமாக ஒப்பந்தத் தொழிலாளர்களை உருவாக்கி சட்டபடியான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளனர். அடிமையைக் கொண்டு அவன் உழைப்பை இலவசமாகப் பறித்தவர்கள், இன்று அதையே நாகரீகமாக்கி நாகரீகமாகவே உழைப்புச் செல்வங்களைப் பறிக்கின்றனர்.

அன்று முதல் இன்று வரை மனித உழைப்பை சுரண்டுவதே வல்லாதிக்கத்தின் அல்லது முதலாளியத்தின் பொதுவான தன்மையாகவும், ஒழுக்கமாகவும் இருந்து வருகிறது. முதலாளியத்தின் அனைத்து சட்டங்களும், சமூக ஒழுக்கங்களும், ஜனநாயகமும், சுதந்திரமும் மனித உழைப்பை சுரண்டுவதற்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எப்படியெனில் அன்று சுதந்திரமான (அடிமையற்ற) தனிமனிதன் தனக்காக உழைத்து வாழ்ந்து விடமுடியும் என்ற அளவில், உழைப்பின் அடிப்படைகளையும் உழைப்பின் வளத்தையும் கொண்டிருந்தான். இன்று அப்படியல்ல, சிறப்பு பொருளியல் மண்டலங்கள், புரிந்துண‌ர்வு ஒப்பந்தங்கள் மூலமாக பர‌ந்த விளைநிலங்கள், இயற்கை வளங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு மூலதனங்களுக்குள் முடங்கி அவனுக்கு முன்னால் சுதந்திரமற்றுக் கிடக்கிறது. பன்னாட்டுக் கம்பெனிகளின் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கு வெறும் நிலங்கள் மட்டுமே தேவைப்படுவதில்லை. பெருத்த அளவில் தொழிலாளர்களும் தேவை என்பதால் விளை நிலங்களின் மீது மட்டுமே ஒப்பந்தம் செய்கிறார்கள்.

இப்படி அடிமைமுறை வடிவத்தால் மாறியபோதும், உள்ளடக்கத்தால் உழைப்பை, அதனால் விளையும் செல்வங்களை இன்றும் அவர்கள் சொந்தமாக்கிக் கொன்டிருக்கின்றனர். அன்று அடிமைகளை (கூலியற்ற, உத்திரவாதமற்ற, காலவரையற்ற உழைப்பு) உருவாக்கியவர்கள், இன்று ஒப்பந்தத் தொழிலாள‌ர்களை (குறைந்த கூலி, உத்திரவாதமற்ற, காலவரையற்ற உழைப்பு) உருவாக்குகின்றனர். அதாவது, நவீன சுதந்திர அடிமைகளை உருவாக்குகிறார்கள். அதோடு நுகர்வு வெறியையும், ஆடம்பரத்தையும் சமூக உணர்வாக்கியுள்ளனர். இதன்விளைவாக அவற்றை அடைவதற்காக கடின உழைப்பையும், தொடர் உழைப்பையும் செலுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அடிப்படை மக்களுக்கு ஜனரஞ்ச‌கமான கவர்ச்சித் திட்டங்கள், தரகு முதலாளிய - நிலவுடைமை சக்திகளுக்கு அரசியல், பொருளாதார சலுகைகள், வல்லாதிக்க சுரண்டல்களை எதிர்க்கும் சனநாயக - தேசப்பற்று சக்திகள் மீது அடக்குமுறைகள் என்ற அடிப்படையில் மூலதனத்தின் துவக்கத்திலிருந்து நீண்டகாலமாக கடைபிடித்து வரும் இக்கொள்கையின் தொடர்ச்சியாக இன்று மனித நேயத்துடன் கூடிய உலகமயமாத‌ல் என்று முன்மொழிகின்றனர்.

நவீனயுகத்தில் உலகமயம், தாராள‌மயம், தனியார்மயம் என்பதெல்லாம், உழைப்பவனுக்கு அவனின் உழைப்பு சார்ந்த நுகர்வு மறுக்கப்பட்டு (நுகர்வுப் பண்பாடு, விலைவாசி, பற்றாக்குறை) அதனால் உருவாகும் வறுமையைப் பயன்படுத்தி மனிதனின் உழைப்பு மதிப்பீட்டின் வீழ்ச்சியை ஏற்படுத்தி லாபமீட்டுவதை அடிப்படையாகக் கொண்ட ஏற்றுமதி பொருளாதாரமாகும். இப்படி காலனிய மக்களின் மரணத்திலும், வறுமையிலும் முதலாளியம் கொழுத்ததோடு, அவைகள் வல்லாதிக்க (செல்வம் உள்ள) நாடுகளாகவும் மாறுகிறது. உலகில் பெரும்பான்மை மக்களுக்கு நுகர்வு மறுக்கப்படுகின்ற நிலையில், சிறுபான்மையினரோ அதீதசெல்வங்களை ஈட்டி வக்கிரமாகவும் இழிவாகவும் நுகர்கின்றனர். இதுவே இன்றைய உலகமயமாதலின் பொருளாதாரமாகும்.

- இரா.பாலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It