தமிழ்நாட்டில் ‘இரட்டை தம்ளர்’ வடிவத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை உச்சநீதிமன்றம் கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ‘தீண்டாமை’ தொடர்பாக உச்சநீதி மன்றத்துக்கு வந்த வழக்கு ஒன்றில் தீண்டாமை சாதியமைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் மிகச் சிறப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
மதுரை அருகே ‘ஜல்லிக்கட்டு’ நடந்தபோது, இரு சமூகத்தினருக்கு இடையே நடந்த மோதலில் ஆறுமுகம் சேர்வை, அஜீத் குமார் என்ற இரண்டு பேரும், பன்னீர் செல்வம், மேகமணி ஆகிய தலித் சமுதாயத் தோழர்களை சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில், மதுரை மாவட்ட நீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதிப்படுத்தியது. குற்றம்சாட்டப்பட்ட ஆதிக்க சாதியினர் உச்சநீ மன்றத்துக்கு மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டய கட்ஜு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சாதியைக் கூறுவதே இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டது தான் என்று குறிப்பிட்டுள்ளனர்.
‘சமார்‘ என்ற சொல், வடநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்கும் சொல். அது இழிவுபடுத்தும் நோக்கத்துடனேயே கூறப்படுகிறது. அப்படிச் சொல்வதற்கு வரலாற்றுப் பின்புலம்தான் காரணம். இழிவுபடுத்துவது அல்ல என்ற விளக்கத்தை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இத்தகைய விளக்கங்களை ஏற்றுக் கொண்டால், அது தீணடாமை ஒழிப்புச் சட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைப்பதாகும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். (தமிழ்நாட்டில் ‘பறையன்’ என்று கூறிவிட்டு பிறகு, நீண்டகாலமாக பறை அடிக்கும் தொழிலைச் செய்ததால், அப்படிக் கூறியதாக விளக்கம் கூறினால், அதை ஏற்க முடியாது என்பதே உச்சநீதிமன்றம் தந்துள்ள விளக்கம். - ஆர்) வழக்கு தமிழ்நாடு தொடர்புடையது என்பதால், “உச்சநீதி மன்றம், தமிழ்நாட்டில் நிலவி வரும் தீண்டாமை பற்றி கீழ்க்கண்ட கருத்துகளை தீர்ப்பில் பதிவு செய்துள்ளது:
14. “தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இப்போதும் நடைமுறையில் இருக்கும் - மிகவும் கண்டிக்கத்தக்க இரட்டை தம்ளர் முறைபற்றியும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பல தேனீர்க் கடைகள் உணவு விடுதிகளில் இந்த முறை நீடிக்கிறது. பட்டியல் இனப் பிரிவினருக்கு (தாழ்த்தப்பட்டோர்) தனிக் குவளையிலும், பிற சாதியினருக்கு தனிக் குவளை யிலும் - தேனீரோ அல்லது குடிக்கும் பானங்களோ வழங்கப்படுகிறது. இந்த செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சட்டங்களுக்கு எதிரானது. இப்படி தீண்டாமையைப் பின்பற்றுவோர் மீது, கிரிமினல் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால், கடுமையாக தண்டிக்க வேண்டும். இதற்கான பொறுப்பு அனைத்து நிர்வாக அதிகாரி களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் உண்டு. இந்த அதிகாரிகளின் நிர்வாக வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில், இந்தக் குற்றங்கள் நடப்பது குறித்து தெரிந்திருந்தும், நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
(All administrative and Police officers will be accountable and departmentally proceeded against if, despite having knowledge of any such practice in the area under their Jurisdiction they do not launch criminal proceedings against the culprits.)
சாதி விட்டு சாதி நடைபெறும் சாதி மறுப்பு திருமணங்களை தடுப்பதும், மிரட்டுவதும் குற்றம் என்றும், இதே தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.
16. “சாதிக்கு வெளியே திருமணம் செய்து கொள்ளும் இளம் ஆண்களும் பெண்களும் அச்சுறுத்தப்படுவது; வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு வருவது தொடர்பான பல சம்பவங்கள் எங்கள் கவனத்துக்கு வருகின்றன. இது தொடர்பாக நாங்கள் சில கருத்துகளைப் பதிவு செய்வது தேவையானது என்று கருதுகிறோம். நமது தேசத்தின் வரலாற்றில் இது ஒரு முக்கிய காலகட்டம்; மாறுதலுக்கான முக்கிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்; எனவே சமூகத் தொடர்பான முக்கியமான பிரச்சினையில் இந்த நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
17. இந்த தேசத்தில் சாதி அமைப்பு ஒரு ‘சாபக் கேடு’; எவ்வளவு சீக்கிரத்தில் இது அழிந்து ஒழிகிறதோ, அதுவே தேசத்துக்கு நல்லது. சவால்களை எதிர்கொள்ள, நாம் இணைந்து நிற்க வேண்டிய தருணத்தில் இந்த சாதி அமைப்பு கூறு போடுகிறது. உண்மையில் தேசத்தின் நன்மைக்கு சாதி மறுப்புத் திருமணங்கள் தான் தேவை. அவற்றினால்தான், சாதி அமைப்பை ஒழிக்க முடியும். ஆனால், சாதிக்கு வெளியே திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்கள் அச்சுறுத்தப்படுவதும், வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதுமான கவலை தரும் செய்திகள் வருகின்றன. இந்த வன்முறைகளோ, அச்சுறுத்தல்களோ, அலைக்கழித்து தொல்லை கொடுப்பதோ முழுமையான சட்டவிரோத செயல் களாகும். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இது, சுதந்திரமான ஜனநாயக நாடு. வயதுக்கு வந்த எந்த ஒரு பிரிவினரும், தாங்கள் விரும்பியவரை திருமணம் செய்து கொள்ள உரிமை உண்டு. இதை ஏற்றுக் கொள்ள விரும்பாத பெற்றோர்கள், அதிகபட்சமாக, அவர்களுடன் தங்களுக்கான உறவை வேண்டுமானால் துண்டித்துக் கொள்ளலாம்.
அதற்காக, அவர்களை அச்சுறுத்தவோ, தாக்கவோ, அவமதிக்கவோ முடியாது. மதத்துக்கு வெளியே நடக்கும் திருமணங்களுக்கும் சேர்த்தே கூறுகிறோம். எனவே நாடு முழுதும் உள்ள நிர்வாக அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் நாங்கள், இதன் மூலம் உத்தரவாக கூற விரும்புகிறோம். வயதுக்கு வந்த இளம்பெண்கள் - இளம் ஆண்கள், சாதி மதத்துக்கு வெளியே திருமணம் செய்யும் போது, அவர்கள் மிரட்டலுக்கோ வன்முறைக்கோ உள்ளா கிறார்களா என்பதை கவனிக்கவேண்டியதும், அப்படி உள்ளாக்காமல் தடுக்க வேண்டியதும், அப்படி, சட்ட விரோதமாக செயல்படுவோர் மீது, கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதும் காவல்துறையின் பொறுப்பு; சட்டப்படி, கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.
We therefore, direct that the administration / police authorities throughout the country will see to it that if any boy or girl who is a major undergoes inter-caste or inter-religious marriage with a woman or man who is a major, the couple are not harassed by any one nor subjected to threats or acts of violence, and anyone who gives such threats or harasses or commits acts of violence either himself or at his instigation, is taken to task by instituting criminal proceedings by the police against such persons and further stern action is taken against such persons as provided by law.
16. இப்படி சாதி மதத்துக்கு வெளியே திருமணம் செய்தவர்களை பஞ்சாயத்துகூட்டி, மரண தண்டனை வழங்குவதாகவும், அதை ‘கவுரவக் கொலை’ என்று கூறுவதாகவும் கேள்விப்படுகிறோம். இவை ‘கவுரவக் கொலைகள்’ அல்ல. உண்மையில் கொடூரக்காரர் களால் நிலப்பிரவுத்துவ சிந்தனையாளர்களால் நடத்தப்படும் காட்டுமிராண்டித்தனமான அவமான கரமான படுகொலைகளேயாகும். இவர்கள், கடுமையான தண்டனைக்கு உரிய குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவதன் வழியாகத்தான், இந்தக் காட்டுமிராண்டி செயல்களை அறவே துடைத்தெறிய முடியும்.
17. அண்மைக் காலமாக தமிழ்நாட்டிலும் - இவை ‘கட்ட பஞ்சாயத்துகள்’ என்ற பெயரில் நடப்பதாக கேள்விப்படுகிறோம். சாதி - மதத்துக்கு வெளியே திருமணம் செய்வோரை, பஞ்சாயத்து அமைப்புகள் வழியாக தண்டிப்பது, அவர்களின் தனி வாழ்க்கையில் குறுக்கிடுவது மட்டுமல்ல; முழுமையான சட்ட விரோத நடவடிக்கை...
இந்த கொடூரமான நடவடிக்கைகளைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுக்க நிர்வாக அதிகாரி களும், காவல்துறை அதிகாரிகளும் முன்வரவேண்டும் என்று இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இந்த கடமையைச் செய்ய முன்வராத மாவட்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தொடர்புடைய அதிகாரிகள் மீது மாநில அரசு உடனடியாக, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, இதன் மூலம் ஆணையிடுகிறோம்” என்று நீதிபதிகள் தீர்ப்பில் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
தீண்டாமைக் கொடுமைகளை சுட்டிக்காட்டி, பெரியார் திராவிடர் கழகம் போராட்டக் களத்தில் நிற்கும்போது, தமிழக அரசு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கழகத்தின் முயற்சிகளை முடக்கத் துடிக்கும் நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தெளிவான வெளிச்சத்தைத் தந்துள்ளது. 19.4.2011 அன்று இத் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.