madras high courtஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை போல் தோன்றும் இரு அண்மைச் செய்திகள் தமிழகத்தின் உளச்சான்றை உலுக்கியுள்ளன. ஒன்று: உடுமலை சங்கர் சாதி ஆணவப் படுகொலை மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள மோசமான தீர்ப்பு! இரண்டு: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற தந்தை மகனாகிய இரு வணிகர்களைக் காவல் துறையினர் அடித்துக் கொன்ற இரட்டைக் கொலை!

உடுமலைப்பேட்டை சங்கர்-கௌசல்யா காதலையும் சாதிமறுப்புத் திருமணத்தையும் சகித்துக் கொள்ள முடியாத சாதி வெறியர்களே சங்கரைக் கொலை செய்தனர். 2016 மார்ச் 13 பட்டப் பகலில் நட்டநடுச் சாலையில் பலர் முன்னிலையில் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு எதிரில் சங்கரையும் கௌசல்யாவையும் கூலிக் கொலைகாரர்கள் வெட்டிச் சாய்த்தனர். சங்கர் துடிதுடித்து உயிரிழந்தார். மிகத் தீவிரமான சிகிச்சைக்குப் பிறகே கௌசல்யா உயிர் பிழைத்தார்.

இந்த சாதி ஆணவப் படுகொலையை சதித் திட்டம் தீட்டி நிறைவேற்றியவர்கள் கௌசல்யாவின் பெற்றோரே என்பது அனைவர்க்கும் தெரிந்திருந்தது. தன் பெற்றோரே முதல் குற்றவாளிகள் என்பதில் கௌசல்யாவும் தெளிவாக இருந்தார். அவ்வாறே உசாவல் நீதிமன்றத்தில் சான்றியமும் அளித்தார்.

இவ்வழக்கில் 2017 திசம்பர் 12ஆம் நாள் திருப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட ஆறு குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது. ஆனால் கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய 3 பேர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப் பட்டனர்.

ஒருபுறம் குற்றவாளிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்தும், மறுபுறம் அரசுத் தரப்பினர் மூவர் விடுதலையை எதிர்த்தும் மேல்முறையீடுகள் செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கில்தான் சென்னை உயர்நீதிமன்றம் இப்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசின் மேல்முறையீடு மறுதலிக்கப்பட்டு மூவர் விடுதலை உறுதி செய்யப் பட்டுள்ளது. ஆனால் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்ற அறுவரில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி விடுதலை செய்யப் பட்டிருக்கிறார். மற்ற ஐந்து குற்றவாளிகளுக்கும் தூக்குத் தண்டனை 25 ஆண்டுகளுக்குக் குறையாத வாழ்நாள் சிறைத் தண்டனையாகக் குறைக்கப் பட்டுள்ளது.

அமர்வு நீதிமன்றம் கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமியையும் மாமன் பாண்டித்துரையையும் விடுவித்த பின் இப்போது உயர்நீதிமன்றம் தந்தை சின்னச்சாமியையும் விடுதலை செய்திருப்பது இந்த வழக்கின் ஆணிவேரையே பிடுங்கி எறிவதாக உள்ளது. கௌசல்யாவின் பெற்றோரும் மாமாவும் இந்தக் கொலைக்குக் காரணமில்லை என்றால் கூலிக் கொலைக்காரர்களை யார் எதற்காக ஏவியிருக்கக் கூடும்? என்ற கேள்வி எழுகிறது.

நாம் வாழும் இந்த சாதிச் சமூகம் காதலையே கொடுங்குற்றமாகக் கருதி வெறுத்து ஒதுக்குவதையும் அதற்குத் தண்டனையாகக் கொலையும் செய்யத் தயங்குவதில்லை என்பதையும் எத்தனையோ நேர்வுகளில் பார்த்து விட்டோம்.

சாதிமறுப்புத் திருமணம், அதுவும் தலித்துடன் என்றால் சாதி வெறியர்கள் வேட்டை விலங்குகளாகவே மாறிப் போவதைக் காண்கிறோம். பெற்றோரே பிள்ளையைக் கொன்று போடும் அளவுக்கு சாதி ஆணவம் தலைக்கேறி விடுகிறது. இந்தச் சாதி ஆணவம் கொலைகாரனின் வீச்சரிவாளில் வெட்டுமுனை ஆவது மட்டுமல்ல, காவல்துறை அதிகாரியின் தடியில் பித்தளைப் பூணாவது மட்டுமல்ல, நீதிபதியின் தூவலிலும் பச்சை மையாகி விடுகிறது.

இறுதி நோக்கில் சாதி ஆணவப் படுகொலைக்குச் சட்டநீதி முத்திரை வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒளிர் மாடங்களிலிருந்து கிளம்பி சாத்தான்குளத்தின் இருண்ட காவல் கொட்டடிக்குச் சென்று பார்த்தால், இந்தியா என்னும் அடக்குமுறை அமைப்பின் இன்னொரு கோர முகம் காணக் கிடைக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் துறையினரால் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இருவரும் வணிகர்கள். கொரோனா முடக்க ஆணையை மீறிக் கூடுதல் நேரம் கடை திறந்து வைத்திருந்ததுதான் அவர்கள் செய்த குற்றம்!

கொரோனாத் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக மக்கள் - ஊரடங்கு என்று தொடங்கி முழு முடக்கம் ஆட்சி செய்யத் தொடங்கியது முதலே காவல் துறையின் காட்டாட்சி தொடங்கி விட்டது. நடந்தோ இருசக்கர ஊர்தியிலோ வருவோரை மறித்து எதுவும் கேட்காமல் தடியால் அடிக்கும் காணொலிகள் ஏராளமாக வந்தன. கோயில், மசூதி போன்ற வழிபாட்டுத் தலங்களைக் கூட விட்டு வைக்காமல் தடித்தாண்டவம் ஆடியது காக்கி. இப்படிச் செய்வது சட்டப் புறம்பானது, ஊரடங்கு நெறிகளை மீறினால் வழக்குப் பதிவு செய்யலாம், தளைப்படுத்தவும் கூட செய்யலாம், அடிக்கும் அதிகாரம் காவல் துறைக்கு இல்லை என்று சுட்டிக் காட்டிய வழக்கறிஞர்கள் வெளிப்படையாகக் கண்டிக்கப் பட்டனர். இருசக்கர ஊர்தியில் வந்த ஒருவரை சீருடை அணியாத காவலர் ஒருவர் தடியால் விளாசுகிறார், தான் மருத்துவர் என்று அவர் சொன்னவுடன் இதை முன்பே சொல்லக் கூடாதா என்று அந்தக் காவலர் கேட்கிறார். அவர் மருத்துவர் இல்லையென்றால் தொடர்ந்து அடிக்கலாமா? அப்படி அடிப்பதற்கு அதிகாரம் அளித்தது யார்? எந்தச் சட்டப்படி?

ஓரிடத்தில் காவல் துறையின் அதிகாரத்தையும் முதலமைச்சரின் அதிகாரத்தையும் கேள்விக்கு உள்ளாக்கிய துடுக்குத்தனமான இளைஞர் ஒருவரைக் காவல் நிலையத்தில் வைத்து அடிஅடியென்று அடித்து அவர் அலறுகிற காட்சியைப் படமெடுத்து வெளியிட்டு மகிழ்ந்தது காவல் துறை. இப்படிச் செய்த காவல் அதிகாரிகளின் நடவடிக்கை சட்டப் புறம்பானது மட்டுமன்று; அருவருக்கத் தக்கது, வதையின்ப மனங்களின் வக்கிர வெளிப்பாடு. இச்செயல் குறித்துப் பெயரளவுக்குக் கூட அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எல்லாவற்றையும் நீதித் துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தது. அப்போதே இதுபோன்ற காக்கிக் காலித்தனத்தைக் கண்டித்திருந்தால் சாத்தான்குளம் இரட்டைக் கொலை போன்ற கொடுமைகள் தவிர்க்கப் பட்டிருக்கக் கூடும்.

தந்தை – மகன் இருவரையும் சட்டப் புறம்பாகக் கடத்திச் சென்று அடித்து நொறுக்கிக் கொலை செய்திருக்கிறது காவல்துறை. நீதி கேட்டுப் பொதுமக்கள் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்திய பிறகுதான் குற்றம் புரிந்த இரு காவல் அதிகாரிகளை மேலதிகாரி மெதுவாகப் பணியிடைநீக்கம் செய்துள்ளார்.

நடந்தது என்ன? கடந்த சூன் 19ஆம் நாள் தேதி கடை மூடுவது தொடர்பாக ஜெயராஜிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார் காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ். இதற்காக மறுநாள் ஜெயராஜைக் கைது செய்து அழைத்துச் சென்றது காவல்துறை.

எவரை எதற்காகத் தளைப்படுத்தினாலும் அதற்கான காரணத்தை அவருக்குத் தெரிவிக்க வேண்டும், அவருக்கு நெருக்கமானவரிடம் தளைக் குறிப்பாணை (arrest memo) எழுதித் தர வேண்டும். இது உச்ச நீதிமன்ற ஆணை. ஆனால் இப்படி எந்த நடைமுறையையும் கடைப்பிடிக்காமல் ஜெயராஜை இழுத்துச் சென்றது காவல் துறை. இதனையொட்டி, ஜெயராஜை சந்திக்க அவர் மகன் பென்னிக்ஸ் காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு 60 வயதான ஜெயராஜை பென்னிக்சின் கண் முன்னேயே உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோரும் மற்றக் காவலர்களும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனை பென்னிக்ஸ் தட்டிக் கேட்டுள்ளார்.

அவர்களது கோட்டைக்குள் நுழைந்து அவர்களது அதிகாரத்தையே கேள்விக்குள்ளாக்கினால் எப்படிப் பொறுப்பார்கள்? வெறிகொண்டு பென்னிக்சைப் பாய்ந்து குதறி விட்டார்கள். பல மணி நேரம் கட்டி வைத்து விளாசியதோடு, அவரது ஆசனவாயிலும் லத்தியால் குத்தி, இரத்தம் சொட்டச் சொட்ட அடித்தார்கள்.

பிறகு ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவர் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்து, அதனடிப்படையில் இருவரையும் ’அரெஸ்ட்’ காண்பித்து முதல் தகவல் அறிக்கை மற்றுமுள்ள ஆவணமெல்லாம் ‘ரெடி’ செய்து ‘ரிமாண்டு’க்கு அனுப்பினார்கள். சட்டங்காக்கும் சாத்தான்(குளம்) நீதிமன்ற நடுவர் கண்ணையும் காதையும் பொத்திக் கொண்டு நேராக அவ்விருவரையும் சிறையிலடைக்க அனுப்பி வைத்தார். 21 ஆம் நாள் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சாத்தான்குளம் நீதிமன்றத்திற்கு அருகில் திருவைகுண்டம், திருச்செந்தூர் கிளைச் சிறைச்சாலைகளும், பேரூரணி மாவட்டச் சிறைச்சாலையும் இருந்த போதிலும் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டி கிளைச் சிறையில் அவர்கள் இருவரையும் கொண்டு போய் அடைத்தார்கள். காரணம் என்னவோ? சிறையதிகாரிகள் அவர்களுக்கிருந்த காயங்கள் பற்றிக் கேட்கவும் இல்லை, அவர்களை உடனே மருத்துவமனைக்கு அனுப்பவும் இல்லை.

சிறையில் பென்னிக்சை நண்பர்கள் சந்தித்த போது காவல்துறை லத்தியால் குத்தியதைத் தொடர்ந்து ஆசனவாயில் தொடர்ந்து இரத்தம் வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். 22 இரவு 7:30 மணியளவில் நெஞ்சு வலியால் பென்னிக்ஸ் மயங்கி விழுந்தார் என்று கூறி அவரைக் கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் பென்னிக்ஸ் ஏற்கெனவே இறந்து விட்டதாகச் சொல்லி விட்டனர்,

அதே சமயத்தில் பென்னிக்சின் தந்தை ஜெயராஜுக்கு காய்ச்சல் என்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரும் அதே நாளில் சில மணிநேர இடைவெளியில் இறந்து போனார். இந்நிலையில் தந்தை மகன் கொல்லப்பட்டதைக் கண்டித்து சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் பொதுமக்கள் கிளர்ச்சி செய்தனர். வணிகர் சங்கமும், பல்வேறு அரசியல் கட்சிகளும் சமுதாயச் சங்கங்களும் வழக்கறிஞர்களும் திரண்டு குரல் கொடுத்தனர்.

இருவரின் சாவுக்கும் காரணமான காவல் அதிகாரிகளைக் கொலை வழக்கில் தளைப்படுத்திச் சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. நாடெங்கும் வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா முடக்கத்தை மீறி மக்கள் பெருந்திரளாகத் தெருவில் இறங்கி விட்டனர். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.

இத்தனைக்குப் பிறகு காவல் அதிகார பீடம் கொலைகாரக் காவலதிகாரிகள் இருவரையும் ஆய்தக் காவல் பிரிவுக்கு மாற்றியது. அடித்துக் களைத்த விலங்குகள் அங்கு போய் ஓய்வாக இருக்கலாம் அல்லவா? மக்கள் போராட்டம் ஓயவில்லை என்ற நிலையில் அந்த இரு கொலைகாரர்களையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார் எஸ்.பி அருண்பால கோபாலன்.

"நாங்கள் கடையை மூடச் சொன்னோம், அப்பனும் மகனும் தரையில் படுத்து உருண்டார்கள், காயங்களுக்கு அதுவே காரணம்” என்று கொலைகாரக் காவல் அதிகாரிகள் தந்துள்ள அங்கப் பிரதட்சண விளக்கம் காக்கி உடையில் பொங்கி வழியும் கொழுப்பின் அடையாளம்!

ஜெயராஜும் பென்னிக்சும் அந்த இரு காவல் அதிகாரிகளையும் தற்காப்பின் பொருட்டுக் கொலை செய்திருந்தால் இதே ஊர்மாற்றம் அல்லது பணியிடை நீக்கம்தான் தண்டனையா? காவல் துறையினர் பொதுமக்களைக் கொலை செய்தாலும் பொதுமக்கள் காவல் துறையினரைக் கொலை செய்தாலும் இரண்டும் கொலைக் குற்றம் என்பதுதானே சட்டம்? இரண்டுக்கும் தண்டனை ஒன்றுதானே?

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சிறைக்கனுப்பிய குற்றவியல் நீதியர் அவர்களிடம் காயங்கள் குறித்துக் கேட்டறிந்து, சிறைக்கனுப்பாமல் மருத்துமனைக்கு அனுப்பியிருக்க முடியும். என்ன குற்றச்சாட்டு என்ற செய்தி குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதா என்று வினவவும் இல்லை. காவல் துறையினர் நீட்டிய இடத்தில் ஒப்பமிட கறுப்புக் குப்பாயத்தில் ஒரு நீதிதேவன் தேவையா?

இந்த இரட்டைக் கொலையில் காவல் துறைக்கு நீதித் துறையும், சிறைத் துறையும் உடந்தையாக இருந்துள்ளன என்பது தெளிவாகிறது. ஊரடங்கை மீறி மக்கள் திரண்டு வந்து போராடியதால் மட்டுமே இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன.

உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தானாகவே (suo motu) இந்த வழக்கை ஆய்விற்கெடுத்துக் கொண்டது வரவேற்கத்தக்கது. ஆனால் அரசுக்கும் காவல் துறைக்கும் அறிவுறுத்தல், மென்மையாகக் கண்டனம் தெரிவித்தல், எதிர்காலத்தில் பார்த்து நடக்கச் சொல்லுதல் என்பதைத் தாண்டி உயர் நீதிமன்ற நீதியரால் வேறொன்றும் செய்ய இயலாது என்றால், குறிப்பாக இந்த வழக்கில் கொலைக் குற்றவாளிகளைத் தளைப்படுத்திச் சிறையிலடைத்துக் கொலை வழக்குப் போட ஆணையிட முடியாது என்றால், அவர்கள் தீயணைப்பு வேலை செய்யாமல் வாளாவிருப்பதே நன்று.

உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதித் துறையே சாதி ஆணவப் படுகொலைக்குத் துணை போவதையும், சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டைக் கொலையில் காவல் துறையே குற்றவாளியாக நிற்பதையும் தற்செயல் நிகழ்வுகளாகவோ, ஒரு சில தனிமனிதர்களின் பிறழ்வுகளாகவோ புரிந்து கொள்ளப் பட்டறிவு உதவாது.

ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட மாந்தர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில் உயர்நீதிமன்றம் குற்றவாளிகளைப் பாதுகாப்பது இது முதல் முறையன்று. இதே உயர்நீதிமன்றம்தான் 44 தலித்துகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கீழவெண்மணி வழக்கில் பெருநிலக்கிழார்களை பெருநிலக்கிழார்கள் என்பதற்காகவே விடுவித்தது என்பதை மறப்போமா?

2009 பிப்ரவரி 19ஆம் நாள் உயர்நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே நுழைந்து மணிக்கணக்கில் தடியடி செய்து ஒரு நீதியர் உட்பட வழக்கறிஞர்களை அடித்து மண்டை பிளந்த காவல்துறை வல்லூறுகளின் ஒரே ஒரு இறகைக் கூட இந்த மாண்புமிகு நீதியரசர்களால் பிடுங்க முடியவில்லை. இவர்களா மக்களைக் காக்கி விலங்குகளிடமிருந்து காப்பாற்றப் போகின்றார்கள்?

உலகம் மாறிக் கொண்டிருக்கிறது, அடக்குமுறையாளர்களே! உங்கள் காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது! மே 25ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மின்னியபோலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தவரை முழங்காலால் கழுத்து நெரித்துக் கொன்ற டெரெக் சொவின் என்ற வெள்ளைக் காவலரும் அவருக்குத் துணையாக இருந்த மூன்று காவலர்களும் சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் மீது வேண்டுமென்றே கொலை (intentional murder) செய்த குற்றம் சாட்டி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஜார்ஜ் பிளாய்டுக்காக அமெரிக்க தேசம் கொதித்தது போல் ஜெயராஜ், பெனிக்சுக்காக நம் தமிழ்த் தேசம் கொதிக்க வேண்டும். டெரெக் சொவினை அவர் மனைவியே தள்ளி வைத்தது போல் கொலைகாரக் காவல் அதிகாரிகளை அவர்களின் சொந்தங்களே தள்ளி வைக்க வேண்டும். ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கில் நான்கு காவல் அதிகாரிகளைக் கொலைக் குற்றச்சாட்டில் தளைப்படுத்திச் சிறையிலடைத்தது போல் ஜெயராஜ் பென்னிக்ஸ் இரட்டைக் கொலை வழக்கில் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் துறையினரை ஆள் கடத்தல், கொலைக் குற்றச்சாட்டுகளில் தளைப்படுத்திச் சிறையிலடைக்க வேண்டும்.

மின்னசோட்டா காவல்துறை கலைக்கப்பட்டது போல் தமிழகக் காவல் துறையையும் கலைத்து விடலாம். அது எப்போதோ ஈரல் கெட்டுப் போனதுதானே? 

உடுமலை சங்கர் வழக்கில் தமிழக அரசு தன் கடமை முடிந்தது என்று ஒதுங்கிக் கொள்ளாமல், உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்து சின்னச்சாமி, அன்னலட்சுமி உள்ளிட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் கடுந்தண்டனை பெற்றுத் தர முனைதல் வேண்டும். சங்கர் பெயரால் சாதியாணவக் குற்றங்களுக்கு எதிரான சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் தோழர் கௌசல்யாவின் குரலோடு எமது குரலையும் இணைத்துக் கொள்கிறோம்.

இந்தியக் குடியரசு என்பதே சாதிகளின் குடியரசுதான் என்பார் ஆனந்த் டெல்டும்ப்டே. இந்திய, தமிழகச் சமூகத்தின் ஒவ்வோர் உயிரணுவிலும் சாதியம் மறைந்தும் மறையாமலும் கோலோச்சுவது உண்மை, பேருண்மை! இதை மறைத்துப் பேசுவதே சாதியத்துக்கு ஆற்றும் பெருந்தொண்டு!

உடுமலைக்குப் பிறகும் தமிழ்நாட்டில் பல சாதி ஆணவக் கொலைகளும் கொடுங்குற்றங்களும் நிகழ்ந்துள்ளன. இந்த கொரோனா முடக்கக் காலத்தில் மட்டுமே இவ்வாறான நான்கு கொலைகள் நிகழ்ந்துள்ளன என்று செய்தி. இவ்வாறான கொலைகளைத் தடுப்பதில் மட்டுமல்லாமல், சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி வைத்து இல்லறம் ஏற்ற இணையரைக் காப்பதிலும் முற்போக்கு இயக்கங்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். காதல் அரண் போன்ற முயற்சிகள் மேலும் வீச்சுப் பெற வேண்டும்.

உயர் நீதிமன்றத்தின் இந்த மோசமான தீர்ப்பை சாதிவெறி ஆற்றல்கள் கொண்டாடுவது நமக்கு ஓர் எச்சரிக்கை. காதலையும் காதலர்களையும் காக்கக் காவல் நிலையங்களையும் நீதிமன்றங்களையும் மட்டுமே நம்பியிருக்க மாட்டோம் என்பது நாம் அவர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையே எதிர்மறை உந்தலாய்க் கொண்டு சாதி ஆணவக் குற்றங்களுக்கும் கொலைகளுக்கும் எதிரான மக்கள் எழுச்சியைத் தோற்றுவிக்க உழைப்போம்!

ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட போது நீதிக்காக நடைபெற்ற போராட்டத்தின் பதாகைகள் “கறுப்பு உயிர்கள் பொருட்டாகும்” (BLACK LIVES MATTER) என முழங்கின. கறுப்பு உயிர்கள் பொருட்டாகும் இயக்கம் பிறந்ததே ஒரு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத்தான் என்பதை நினைவிற்கொள்வோம்.

2012 பிப்ரவரியில் பதின்ம அகவையர் ட்ரவ்யோன் மார்ட்டின் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் அதாவது கறுப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வெள்ளையினக் காவல் அதிகாரி ஜார்ஜ் சிம்மர்மன் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு எதிராகத்தான் BLACK_LIVES_MATTER என்ற முழக்கம் சுட்டுரையாக சமூக ஊடகங்களில் பரவலாயிற்று. இந்த முழக்கம்தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் கறுப்பின இளைஞர்கள் படுகொலைக்கு எதிரான நாடு தழுவிய இயக்கமாயிற்று. ஜார்ஜ் பிளாய்டு படுகொலைக்குப் பின் இது புயல் வேகம் கொண்டு அட்லாண்டிக் பசிஃபிக் கரைகளைக் கடந்து உலகெங்கும் பரவியுள்ளது.

சங்கர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இருதரப்பினரும் மேல்முறையீடு செய்யலாம். முடிவு என்னவாக இருக்கும் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் தலித் உயிர்கள் பொருட்டாகும் என்ற இயக்கத் தீயைப் பரவச் செய்ய இந்தத் தீர்ப்பிலிருந்தே நெருப்பு எடுக்க முடிந்தால் சங்கர் உயிருக்கு விலை பெற்றதாக இருக்கும்.

கறுப்பு உயிர்கள் பொருட்டாகும்! சங்கர் உயிர் பொருட்டாகும்! ஜெயராஜ் உயிரும் பென்னிக்ஸ் உயிரும் பொருட்டாகும்! சாதிய வன்கொடுமைக்கும் காவல்துறை வன்கொடுமைக்கும் எதிராக ஓங்கி ஒலிக்கட்டும் இந்த முழக்கம்!

- தியாகு

Pin It