ஊழலுக்கு எதிரான லோக்பால் என்ற அமைப்பை உருவாக்குவதற்கான சட்டத்தை உடனடியாகக் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த மாதம் 5-ந் தேதி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தனது இறக்கும் வரையிலான பட்டினிப் போராட்டத்தைத் துவக்கினார் அன்னா ஹசாரே. உடனே இந்தப் போராட்டம் ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்தது. இணையதளம் மூலமும், கைப்பேசிகள் மூலமும் நாடெங்கும் செய்தி பரவியது. என்.டி.ட்டி.வி., டைம்ஸ் நவ் ஆகியவை இருபத்து நான்கு மணி நேரமும் நேரடிக் காட்சியாக அந்தப் போராட்டத்தைக் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தன. சில நூறு பேர்களுடன் தொடங்கிய போராட்டம் விரைவில் பல்லாயிரம் பேர் கொண்ட போராட்டமாக மாறத்தொடங்கியது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பங்கு கொண்டதைக் காணமுடிந்தது. பல தொண்டு நிறுவனங்களும், பாபா ராம் தேவ், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்ற கார்பரேட் சாமியார்களும், பாலிவுட்டைச் சேர்ந்த நடிகர், நடிகைகளும், ஓய்வு பெற்ற பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.அதிகாரிகளும் ஆதரவு கொடுத்தனர். நாடெங்கும் போராட்டத்துக்கு ஆதரவாக அடையாளப் போராட்டங்கள் நடைபெற்றன.

ஆனால் இந்தப் போராட்டத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள தொலைக்காட்சிகள் அதிக முக்கியத்துவம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பண வலை வீசி வாக்காளர்களைப் பிடிக்கும் சட்டமன்றத் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருந்த தமிழ்நாட்டுக் கட்சிகளின் கொள்கைகளுக்கு அப்போராட்டம் எதிராக இருந்தது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். மேலும் போராட்டத்தை நேரடிக் காட்சியாகக் காண்பித்த ஆங்கிலத் தொலைக்காட்சிகள் இடையிடையே ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ் ஆ.ராசாவைக் காட்டியதும் காரணமாக இருந்திருக்கலாம்.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க நேரில் வந்த உமா பாரதி, சவுதாலா போன்றவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். போராட்டத்தை தொடக்கத்தில் அவதூறு செய்ய முனைந்த ஆளுங்கட்சியினர் பெருகி வந்த மக்கள் ஆதரவைக் கண்டு பணிந்து போயினர்.

இறுதியில் ஆளும் கட்சி லோக்பால் சட்ட முன்வரைவைத் தயார் செய்வதற்கான குழுவை அமைக்க ஒப்புக் கொண்டது. பத்து பேர் கொண்ட குழுவில் ஐந்து சமூக ஆர்வலர்களை உறுப்பினர்களாக நியமிக்க ஒப்ப்புக்கொண்டது. அன்னா ஹசாரேவும் அதில் அடங்குவார். நாற்பத்து மூன்று ஆண்டுகளாகத் தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த முன்வரைவு வரும் மழைக்காலப் பாராளுமன்றத் தொடரில் சட்டமாக்கப்படும் என அரசு அறிவித்தது.

ஏப்ரல் ஒன்பதாம் தேதி போராட்டம் வெற்றிகரமாக முடிவுற்றது. ’ஊழலுக்கு எதிரான புரட்சி வெற்றி பெற்று விட்டது. ஊழலை ஒழிப்பதற்கான அமைப்பு உருவாக்கப்பட்டுவிடும்.சோனியாவும்,மன்மோகன் சிங்கும் ஊழலை ஒழிப்பதில் உறுதியாக இருப்போம் என வாக்குறுதி அளித்து விட்டார்கள். இந்தியாவில் இனி ஊழலுக்கு இடமிருக்காது’ என யாராவது கருதினால் அவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்பவர்களாகத்தான் இருப்பார்கள்.

அரசு உண்மையில் பணிந்து விடவில்லை. பணிந்து போனதாகக் கட்டிக்கொண்டுள்ளது.அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

முதலாவது காரணம், கடந்த அறுபது ஆண்டுகளாகப் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. ஆனாலும் ஊழலின் மடங்கு பன்மடங்கு பெருகியுள்ளது.ரூபாய் மதிப்பில் லட்சங்களில் இருந்த ஊழல் இன்று லட்சம், கோடியாக உயர்ந்து விட்டது. அண்மையில் அம்பலமான ஸ்பெக்ட்ரம் ஊழலும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலும், ஆதர்ஸ் குடியிருப்பு ஊழலும் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஊழலில் ஈடுபட்ட எந்த அரசியல்வாதியும், உயர்மட்ட அதிகாரியும் இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை. அதனால் அரசியல்வாதிகள் மீதும், அதிகாரிகள் மீதும் மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர்.

இரண்டாவது காரணம், அண்மையில் துனிசியாவிலும், எகிப்திலும் ஆளும் வர்க்கத்தினருக்கு எதிராக ஏற்பட்ட மக்கள் எழுச்சிகளும், லிபியாவிலும், ஏமானிலும் நடைபெற்று வரும் மக்கள் எழுச்சிகளும் இங்கு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக, இங்கு மக்கள் மத்தியில் ஏற்கனவே நிலவிவரும் ஆளும் வர்க்கத்தினருக்கு எதிரான கடும் வெறுப்பு ஒரு மக்கள் எழுச்சியாக வெடித்துவிடுமோ என்ற அச்சம் ஆளும் வர்க்கத்தினருக்கு உள்ளது. எனவே பணிந்து போவதாகக் காட்டிக்கொண்டதன் மூலம் மக்களின் கோபத்திற்கு ஒரு வடிகால் ஏற்படுத்தி மக்கள் எழுச்சி உருவாகாமல் புத்திசாலித்தனமாகத் தடுக்கப்பட்டு விட்டது.

மூன்றாவது காரணம், லோக்பால் சட்ட முன்வரைவைத் தயாரிப்பதற்கான குழுவை அமைத்து விட்டதாலேயே லோக்பால் சட்டம் வந்துவிடப்போவதில்லை. அவ்வாறே நிறைவேற்றப்பட்டாலும் அது அன்னா ஹசாரே விரும்பிய வடிவத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை. பார்ப்பனிய சூழ்ச்சிகளும், குள்ளநரித் தந்திரமும் கொண்ட ஆளும் வர்க்கம் எக்காரணம் கொண்டும் அந்தச் சட்டத்தை சமூக ஆர்வலர்கள் விரும்பிய வடிவத்தில் நிறைவேற்ற அனுமதிக்காது. அதன் தொடக்க வெளிப்பாடுகள்தான் அக்குழுவின் உறுப்பினர்களான அன்னா ஹசாரே, சாந்தி பூஷன், பிரசாந்திபூசன், சந்தோஷ் ஹெக்டே ஆகியோர் மீது இப்பொழுது பரப்பப்பட்டு வரும் அவதூறுகள். இவற்றை எல்லாம் மீறி சட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அது நிறைவேற அங்குள்ள ஊழல் பெருச்சாளிகள் அனுமதிக்கமாட்டார்கள் அதற்கு ஏற்பவே அன்னா ஹசாரேவும் பாராளுமன்றத்தின் முடிவை ஏற்றுக்கொள்வேன் என அறிவித்துள்ளார்.

ஒரு வேளை அன்னா ஹசாரே விரும்பிய வடிவத்திலேயே லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டு விட்டால் இந்நாட்டில் ஊழலை ஒழித்து விடமுடியுமா? உறுதியாக அது முடியாது. ஊழல் என்பது தனிமனித ஒழுக்கம் மற்றும் அறநெறி சார்ந்த ஒரு விடயம் அல்ல. அது சமூகத்தில் நிலவுகிற அரசியல் மற்றும் பொருளாதார அமைப்போடு இணைந்த ஒன்று. இங்கு நிலவுகிற அரசியல் அதிகார அமைப்பும், பொருளாதார அமைப்பும் ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கின்றன.

லோக்பால் சட்ட முன்வரைவுக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள புகழ் பெற்ற உச்சநீதிமன்ற வழக்குரைஞர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன் பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கின்றார், ‘இங்குள்ள கொள்கைகள் ஊழலுக்கு ஊக்கமளிப்பதாக இருப்பதால்தான் ஊழல் அச்சுறுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற பெயரில் இயற்கை வளங்களும் பொதுச்சொத்துக்களும் (கனிமங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, நிலம், அலைக்கற்றை அனைத்தும்) தனியார்மயமாக்கப்படுகின்றன. கனிம வளங்கள் நிறைந்த நிலங்களும், வனங்களும், நீரும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. கனிமங்களைத் தோண்டுவதற்குச் சுரங்கங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ள நிறுவனங்கள் அக்கனிமங்களின் உண்மையான மதிப்பில் 1%க்கும் குறைவான தொகையையே உரிமைத்தொகையாக (royalty) அரசுக்கு வழங்குகின்றன. கர்நாடகத்தில் உள்ள சுரங்கங்கள் பற்றிய ஓர் அறிக்கை அத்தொழிலில் 90% இலாபம் இருப்பதாகக் கூறுகிறது. ஆ.ராசா 2G அலைக்கற்றையை அதன் சந்தை மதிப்பில் 10%க்கும் குறைவான விலையில் விற்றுள்ளார். விமான நிலையங்கள், நான்கு வழிச்சாலைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அவற்றின் உண்மையான மதிப்பில் 10%க்கும் குறைவான மதிப்பில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. இவையனைத்தும் வெளிப்படையாக இல்லாமல், ரகசியமாக நடைபெறுகின்றன. இவை கோடிக்கணக்கான ரூபாய் அளவில் ஊழல்கள் நடைபெற இடமளிக்கின்றன. இந்தக் கொள்கையினால் பூதாகரமாக வளர்ந்துள்ள தனியார் நிறுவனங்கள் அனைத்து அரசு நிறுவனங்கள் மீதும் மாபெரும் செல்வாக்கு செலுத்துகின்றன." (The Hindu,ஏப்ரல் 15, 2011)

பூதாகரமாக வளர்ந்துள்ள இந்நாட்டு ஏகபோக முதலாளிய நிறுவனங்களும், பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களும் அமைச்சர்களையும் அதிகாரவர்க்கத்தினரையும் விலைக்கு வாங்கித் தம்முடைய ஏவலாட்களாக மாற்றி உள்ளன. இங்கு அரசியலுக்கும் தொழிலுக்கும் இடையில் உள்ள எல்லைக்கோடு மறைந்து விட்டது. அரசியல் தொழிலாகவும், தொழில் அரசியலாகவும் மாறிவிட்டது. முதலாளிகள் அரசியல்வாதிகளாகவும், அரசியல்வாதிகள் முதலாளிகளாகவும் மாறி உள்ளனர்.

அரசியல் அதிகாரமும் பொருளாதார அதிகாரமும் ஓரிடத்தில் குவியும்போது அங்கு ஜனநாயகத்திற்கு சாவு மணி அடிக்கப்படுகிறது.. ஒரு சிலரின் இலாபமே கொள்கையாக மாறுகிறது. மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மக்களின் நலன்கள் நசுக்கப்படுகின்றன.

இந்தக் கொள்கை முடிவுகளின் காரணமாக கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் பிரம்மாண்டமான கட்டிடங்களும், உயர்ரகச் சாலைகளும், ஆடம்பரமான விமான நிலையங்களும், ஆடம்பரக் கார்களும் பெருகி உள்ளன. 2008ல் உலகப் பெரும்பணக்காரர்களில் முதல் எட்டுப்பேர்களில் நால்வர் இந்தியர். அவர்கள் ஒவ்வொருவரின் சொத்து மதிப்பும் ரூபாய் 1,50,000 கோடிக்கும் மேல்.

அதே சமயத்தில் பெரும்பான்மையான மக்களுக்குத் தேவையான தொடக்கக்கல்வி, மருதுவவசதிகள், குடிநீர் வசதிகள், உணவுத் தேவை ஆகியவை புறக்கணிக்கப்பட்டு உள்ளன. அர்ஜுன் சென்குப்தா ஆணையத்தின் மதிப்பீட்டின்படி 2007ல் இந்திய மக்கள் தொகையில் 77% மக்கள் தினசரி 20 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர்.

கனிமங்களைத் தோண்டுவதற்காக வனங்களிலிருந்து பழங்குடியினர் விரட்டப்படுகின்றனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும், பெரும்சாலைகள் சாலைகள் போடுவதற்காகவும் விவசாயிகளிடமிருந்து நிலங்கள் பறிக்கப்படுகின்றன. இவர்களுடைய கொள்கையின் விளைவாக விவசாயிகள் ஓட்டாண்டிகளாக்கப்பட்டு, கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இரண்டு இலட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஏடறியாத வரலாறு காலம் தொட்டு கடலில் மீன் பிடித்து வந்த நமது மீனவர்களின் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. கடற்கரையை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் நமது நாட்டின் கடற்கரைகள் உல்லாசவாசிகளுக்காக ஆடம்பர மாளிகைகள் கட்டுவதற்காக முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றன.

அணுமின் தயாரிப்பு என்ற பெயரில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நாட்டின் பல பகுதிகளிலும் அணுமின் உலைகள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. செர்னோபில் அணுமின் உலை விபத்து, அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உண்டான புக்குசிமா அணுமின் உலை விபத்து, அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவற்றை அறிந்திருந்தும் அத்திட்டத்தை நிறைவேற்றுவதில் இந்த அரசாங்கம் விடாப்பிடியாக உள்ளது. திட்டமிடப்பட்டுள்ள அனைத்து அணுமின் உலைகளும் நிறுவப்பட்டாலும் அவற்றால் உற்பத்தி செயப்படும் மின்சாரத்தின் அளவு நமது நாட்டின் மின் தேவையில் 7% மட்டுமே நிறைவு செய்யும். ஆனால் அதற்காகச் செலவிடப்படும் தொகையோ பல லட்சம் கோடி ரூபாய்கள். அதனால் பயனடைபவர்கள் பன்னாட்டு அணுமின் உலைக்கான சாதனங்கள் தயாரிக்கும் பன்னாட்டு முதலாளிய நிறுவனங்களும், இந்நாட்டு அரசியல்வாதிகளுமே. இவர்களுடைய இலாபங்களுக்காக நமது கோடானுகோடி மக்களின் இன்னுயிர்கள் பணயம் வைக்கப்படுகின்றன.

 நமது அரசியல் அமைப்புச் சட்டம் சோசலிசத்தையும், ஜனநாயகத்தையும் வழிகாட்டும் நெறிகளாகக் கொண்டுள்ளது. ஆனால் இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொள்கைகளோ ஊழலுக்கு வழிவகுக்கின்றன.பெரும்பான்மை மக்களை ஓட்டாண்டிகளாக்கி வருகின்றன. மக்களுடைய வாழ்வுரிமையைப் பறித்து வருகின்றன. அரசியல் அமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாக இருக்கவேண்டிய உச்சநீதிமன்றமோ அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடமாட்டோம் என்கிறது. அதன் மூலம் ஊழலுக்கும், அநீதிக்கும் துணை போகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காக்கவேண்டிய தனது கடமையிலிருந்து தவறுகிறது.

அன்னா ஹசாரேயின் பட்டினிப் போராட்டம் ஊழலுக்கு எதிரான யுத்தம் என ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் ஊழலைக் குறிக்கும் வார்த்தையான corruption என்பதற்குப் பொருள் இலஞ்சமாகப் பணம் பெறுவதை மட்டும் குறிக்கவில்லை. அது களங்கம், அழுகல், நேர்மை தவறுதல், ஒழுக்கச் சீர்கேடு ஆகியவற்றையும் குறிக்கிறது. இங்கு சட்டமியற்றும் அமைப்புகள், நிர்வாக அமைப்பு, நீதி வழங்கும் அமைப்பு அனைத்தும் நேர்மை தவறி, ஒழுக்கம் கெட்டு, களங்கப்பட்டு, அடி முதல் நுனி வரை புரையோடி அழுகிக் கிடக்கின்றன. இவற்றை லோக்பால் என்ற ஓர் அமைப்பு மூலம் சரி செய்து விடலாம் எனக் கருதுவது சாக்கடையை ஒழிக்காமல் கொசுக்களை ஒழித்து விடலாம் எனக் கருதுவது போன்றது.

இலாபத்தையே தனது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் முதலாளிய நலன்களின் அடிப்படையில் வகுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த அரசின் கொள்கைகளை மாற்றியமைக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது. லோக்பால் அமைப்பால் இந்த அரசின் கொள்கைகளை மாற்றி அமைக்க முடியாது. கொள்கை முடிவுகள் எடுக்கக்கூடிய அதிகாரத்தில் மக்கள் உண்மையாகவே பங்கு பெறும்போதுதான், உண்மையான ஜனநாயகத்தையும், அதிகாரத்தையும் பரந்துபட்ட மக்கள் பெறும்போதுதான் இத்தகைய கொள்கைகளை மாற்றியமைக்க முடியும். அத்தகைய சமூக, அரசியல், பொருளாதார அமைப்பு பற்றிச் சிந்திப்பதும், அதை நோக்கி முன்னேறுவதுமே இன்று நம் மக்கள் முன் உள்ள கடமையாக உள்ளது.

Pin It