இந்தியத் தத்துவங்களையும், பாரம்பரியங்களையும் வேத நெறிஎன்றும் வேத மறுப்பு நெறிஎன்றும் இரு வகையாகப் பகுக்கலாம். இவற்றுள் வேதநெறி தொடர்பான கருத்துக்களும் சிந்தனைகளுமே இந்தியாவில் முதன்மை செலுத்தி வந்தன (வருகின்றன). ஆனாலும் வேதநெறி சாராத வேத மறுப்புச் சிந்தனைகள் அடங்கிய தத்துவங்களும் இந்தியாவில் தோன்றி வளர்ந்துள்ளன. அவ்வாறு உருவான சிந்தனைப் போக்குகளில் ஒன்றே தந்திரம் அல்லது தாந்திரீகம் ஆகும்.

நம்மைச் சுற்றியுள்ள புறஉலகை அறியும் முயற்சியில் நம் முன்னோர்கள் உருவாக்கிய வாழ்க்கை நெறிகளுள் ஒன்றாக தாந்திரீகம் அமைந்தது.  கற்பனையினை அடிப்படையாகக் கொள்ளாது, அன்றாட வாழ்க்கையினையும், பொருள்களின் இயக்கத்தையும் உற்று நோக்கியதன் அடிப்படையிலேயே தாந்திரீகம் உருவாகியுள்ளது. மேலும் வேத நெறிக்கு மாறான ஒரு நெறியாக தாந்திரீகத்தை உருவாக்க சாதி, தொழில் என்ற இருநிலைகளிலும் மேலாண்மை பெறாத சிந்தனை யாளர்கள் முயன்றுள்ளனர்.

அதே நேரத்தில் தாந்திரீகம் என்பது மது, மாது ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒழுக்கக் கேடான நெறி என்றும் சிலர் கூறுவர்.  இன்னும் சிலர் யோகம், எந்திரம், மந்திரம் ஆகியவற்றை அடிப் படையாகக் கொண்டதே தாந்திரீகம் என்றும் விளக்கமளிப்பர். இந்தியாவில் உருவான பல்வேறு பொருள் முதல் வாதக் கருத்துக்களைப் போன்றே தாந்திரீகம் அவதூறுக்கு ஆளாகி உள்ளது.

மேலும் இந்து - புத்த - சமண - சைவ - வைணவ சமயங்களிலும் தாந்திரீகத்தின் செல்வாக்கு குறிப் பிடத்தக்க அளவு இடம்பெற்றுள்ளது.  இந்து தாந்திரீகம்’, ‘புத்த தாந்திரீகம்என்றுகூட தாந்திரீகத்தைப் பாகுபாடு செய்துள்ளனர்.  பிற்காலத் தாந்திரீகர்கள் சிலர் தாந்திரீகத்தின் அடிப்படை நெறிக்கு மாறாக, அதனை வேதத்துடன் தொடர்பு படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாகத்தான் ஆண்ட்ரி பாடாவ் (Andre Padoux, 1987 : 272) என்பவர் தாந்திரீகம்என்ற தலைப்பில் அமைந்த தனது கட்டுரையில், “தாந்திரீகம் குறித்து, தொலை நோக்குடனும்

அறிவியல் முறையிலானதுமான ஒரு மதிப்பீட்டைச் செய்வதென்பது எளிதல்ல.  ஏனெனில் தாந்திரீக மானது கருத்துமாறுபாட்டிற்கும் குழப்பத்திற்கும் உரிய ஒன்றாகும்என்று குறிப்பிடுகிறார்.

மேற்கூறிய செய்திகள் அனைத்தையும் இச்சிறு கட்டுரையில் ஆராய்வது இயலாது என்பதால் தாந்திரீகம் குறித்த சுருக்கமான அறிமுகமாக மட்டுமே இக்கட்டுரை அமைந்துள்ளது.

மீமாம்சை மரபுப்படி தாந்திரீகம் ஒரு செயல் முறை - ஏதேனும் ஒன்றை உருவாக்கும் அல்லது செய்யும் வழி முறையாகும். மஹாபாஸ்யத்தின் அறிவுத் துறையைக் குறிக்கும் சொல்லாக தாந்திரீகம் இடம்பெற்றுள்ளது.

அதே நேரத்தில் ஆன்மிக அறிவின் குறியீடாக அமைந்த வேத நெறியுடன் இது மாறுபட்டு இருந்தது. புனிதமாகக் கருதப்பட்ட வேதம் உயர் வர்க்கத்தினரின் உடைமை ஆகும்.  உபநயனம் என்ற சடங்கு, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே உரியது என்ற நிலை ஏற்பட்ட பிறகு வேத நெறியினைப் பெறுவது குறித்து அடித்தள மக்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதிருந்தது. வேதத்தைக் கற்கும் சூத்திரன் மரண தண்டனைக்கு ஆளாகும் நிலை இருந்தது.

இத்தகைய வரலாற்றுச் சூழலில் வேத நெறிக்கு இணையான ஒரு நெறியாக உருவானதே தாந்திரீக நெறியாகும். எனவே வேத எதிர்ப்பு இயல்பாகவே தாந்திரீகத்தில் இடம்பெற்றது. வேத மரபானது ஆண்மைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. வருணாச்சிரம முறையினைப் பாதுகாப்பதை வேத நெறி வலியுறுத்த அதற்கு எதிரிடையான நிலையினைத் தாந்திரீகம் மேற் கொண்டிருந்தது.

இதன் காரணமாகவே வேதநெறி சார்ந்தவர்கள் தாந்திரீகத்தை இழித்தும், பழித்தும் கூறியுள்ளனர். வேதங்கள் தாந்திரீக நெறியை ஆதரிக்கவில்லை யென்றும், தாழ்ந்த சாதி மக்களிடையே தான் தாந்திரீகம் வழக்கத்திலுள்ளது என்றும், யாமுனாச் சாரியர் என்பவர் ஆகம் பிராமணியாஎன்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். வேத சடங்குகளில் இருந்து பிறழ்ந்தவர்களுக்கும், வேத நோன்புகளுக்கு அஞ்சுபவர்களுக்கும் உரியதுதான் தாந்திரீகமாகும் என்று சாம்ப புராணம்கூறுகிறது. தாந்திரீக நெறியைப் பின்பற்றுபவர்களைச் சமூகப் புறக் கணிப்புச் செய்ய வேண்டுமென்றும், அவர்களோடு சமூக உறவு கொண்டவர்கள் அதற்காகப் பிராயச் சித்தச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்றும் ஸ்மிருதிகள் சில குறிப்பிடுகின்றன.  (பட்டாச் சார்யா, 1982 : 3)

இவ்வாறு வேத நெறிக்கு மாறுபாடான நெறியாக அமைந்த தாந்திரீகம் சாதி நிலையில் கீழானவர்களாகக் கருதப்பட்டவர்களின் நெறி யாக அமைந்தது.  தாந்திரீக ஆசான்களில் பலர் தொழிலாலும், சாதியாலும் கீழ் நிலையானவர் களாகவே உள்ளனர்.  குதிரை இலாயத்தை சுத்தம் செய்பவர், தோல் வேலை செய்பவர், வண்ணார், மரம் வெட்டி, கொல்லர், பறவை பிடிப்பவர், தையற்காரர், செருப்பு தைப்பவர், மீன் பிடிப்பவர், வீட்டு வேலைக்காரர் எனப் பல்வேறு தொழில் களைச் செய்தோர் தாந்திரீக நூல்களின் ஆசிரியர் களாக உள்ளனர்.  தாந்திரீக ஆசிரியர்களுள் தலை சிறந்தவர்களாகப் போற்றப்படும் ஆதி சித்தர்கள் ஐவரும் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து வந்தவர் களே ஆவர்.

மேல் நிலையினருக்கு மட்டும் உரித்ததாயிருந்த வேத நெறிக்கு ஈடாக, தமக்கென ஒரு வாழ்க்கை நெறியை உருவாக்கும் முயற்சியில் தோன்றியதே தாந்திரீகம் என்பதை மேற்கூறிய செய்திகள் உணர்த்துகின்றன.  இனி தாந்திரீகத்தில் முக்கிய இடம்பெற்றுள்ள

1.     பிரகிருதி

2.     தேகத் தத்துவம்

3.     வாமாச்சாரம்

4.     பஞ்சமகரம்

ஆகியன குறித்துச் சுருக்கமாக ஆராய்வோம்.

பிரகிருதி (பெண்மைக் கோட்பாடு)

தாந்திரீகர்களின் கருத்துப்படி உலகப் படைப்பின் ஆதி மூலமாக அமைவது பிரகிருதிஎனப்படும் பெண்மைக் கோட்பாடாகும்.  சக்திஎன்றும் இதனை அழைப்பர்.  நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் என்ற சேர்க்கையால் உருவாக்கப்பட்டதே இவ்வுலகமாகும்.  இதன் குறியீடாகவே தாய்த் தெய்வமான சக்திஅமைகிறாள்.

உலகப் படைப்பிற்கு முன் பிரகிருதி மட்டுமே இருந்தது என்றும் இதிலிருந்தே உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் உற்பத்தியாயின என்றும் தாந்திரீகம் கூறும்.  இதன் அடிப்படையிலேயே தாந்திரீக வழிபாட்டிலும் சடங்குகளிலும் பெண் களுக்கு முக்கியத்துவம் உள்ளது.  பெண் குறியும், பூப்புக் குருதியும் தாந்திரீகச் சடங்குகளில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.

தேக தத்துவம்

மனித உடலை மெய்என்று அங்கீகரித்து ஆன்மிக மற்றும் சமய அனுபவங்களின் இருப்பிட மாக உடலைக் கருதுவதே தேக தத்துவமாகும்.

பிரபஞ்சம் என்ற பேரமைப்பின் ஒரு துகளே மனித உடலாகும்.  எனவே பிரபஞ்சமானது உடலில் உறைகின்றது.  ஆகையால் உடலை அறிவதன் மூலம் பிரபஞ்சத்தை அறிய முடியும்.  அதனை வயப் படுத்துவதன் வாயிலாக பிரபஞ்சத்தையும் கட்டுப் படுத்த முடியும்.  இதுவே மனித உடல் தொடர்பான தாந்திரீகர்களின் கருத்தாகும்.  இதன் காரணமாகவே உடலைப் பேணும் பல்வேறு யோக நெறிகளையும் தாந்திரீகம் வலியுறுத்துகிறது.

வாமாச்சாரம்

ஆன்மிகப் பேற்றினை அடையும் வழி முறை களாக ஆசாரங்கள் கூறப்படுகின்றன.  இவற்றை, ‘தட்சிணாச்சாரம்’, ‘வாமாச்சாரம்என இரு பெரும் பிரிவுகளாகப் பகுப்பர்.  இவ்வாமாச்சாரங் களின் இயல்புகள் குறித்தும், அவற்றை வகைப் படுத்துதல் குறித்தும் கருத்து வேறுபாடுகள் பல உண்டு.  இவை அனைத்தையும் இங்கு விவாதிக் காமல் தாந்திரீகத்தில் முக்கிய இடம்பெறும் வாமாச்சாரம் குறித்து மட்டும் ஆராய்வோம்.

வாமா + ஆச்சாரம் என்ற இரு சொற்களும் இணைந்து உருவானதே வாமாச்சாரம்ஆகும்.  வாமாஎன்பது பெண் அல்லது இணைவிழைச்சு வேட்கையைக் குறிக்கும்.  ஆச்சாரம்என்பது செய்முறையைக் (இங்கு சடங்கியல் செய்முறை) குறிக்கும்.  எனவே, வாமாச்சாரம் என்பது பெண் மற்றும் இணை விழைச்சு தொடர்பான சடங்கியல் செய்முறைகளைக் குறிப்பதாகும்.  (சட்டோபாத்தி யாயா, 1978 : 278).  இதன்படி குறிப்பிட்ட காலங்களில் வரை முறையற்ற பாலுறவில் தாந்திரீகர் ஈடுபடுவர்.

வாமாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் பெண் தெய்வங்களை, பாரம்பரியமான முறையில் பகற் பொழுதில் வழிபடுவர்.  இரவில் பஞ்சமகரங்களின் துணையுடன் தாந்திரீக முறையில் வழிபடுவர்.  வேதச் சடங்கு நெறிகளை அவர்கள் கைவிடுவதோடு, திருமாலின் பெயரை உச்சரிக்கவோ, துளசி இலையைத் தீண்டவோ கூடாது.  மேலும் பிராமணர்களைத் தவிர அனைத்துச் சாதியினருக்கும் வாமாச்சாரம் உரியதாகும்.  வேத நெறியினின்றும் பிறந்த - வெளிப் படையாக வேத நெறியைவிட்டு விலகிய பிரா மணர்கள் மட்டிலுமே வாமாச்சாரத்தைப் பின் பற்ற முடியும்.  தாழ்ந்த வருணத்திற்கான ஆச்சார மாகவே வாமாச்சாரம் விளங்கியது (பட்டாச் சார்யா : 1982, 343)

இனி வாமாச்சாரத்தின் உள்ளார்ந்த பொருள் என்ன என்பதனை ஆராய்வோம்.  வக்கிரமான பாலுணர்வு நோக்கில் வாமாச்சாரம் தோற்றமளித் தாலும் உண்மையில் வேளாண்மைச் சமுதாயத்தின் உற்பத்தித் திறமை அதிகரிக்கச் செய்யும் சடங்கியல் தன்மையே வாமாச்சாரத்தில் மேலோங்கியுள்ளதாக சட்டோபாத்தியாயா (1978 : 272 - 286) கருதுகிறார் : இச்சடங்கியல் தொடர்பான செய்திகளை ஆராய்ந் தால் தொல் அறிவியல் (ஞசடிவடி ளுஉநைnஉந) கூறுகள் பலவற்றை நாம் கண்டறிய முடியும்.

பஞ்சமகரங்கள்

தாந்திரீகர்களின் ஐந்து சடங்குகளே பஞ்ச மகரங்கள் எனப்படுகின்றன.  இவற்றைக் குறிக்கும் சொற்கள் என்ற எழுத்தில் தொடங்குவதால் இவ்வாறு பெயர் பெற்றுள்ளன.  மத்யா (மது), மாமிசம், மைதுனம் (உடலுறவு), மூத்ரா (வறுத்த தானியம்), மச்சம், (மீன்) என்ற ஐந்தும் பஞ்சமகரத்தில் இடம் பெறுகின்றன.

இவை ஐந்திற்கும் உள்ளார்ந்த விளக்கத்தை, தாந்திரீக நூல்கள் சில அளிக்கின்றன.  குலார்ணவ தந்திரம்என்ற நூலில் குலாகுண்டலினி சக்தியின் தலையிலுள்ள தாமரை மலரிலிருந்து வடியும் அமிர்தத்திற்கு ஈடாக மது குறிப்பிடப்பட்டுள்ளது.  அறிவு என்ற வாளால் தன்னகங்காரத்தை விரட்டுவதே மாமிசம் ஆகும்.  உடலுறவு உயர்ந்த சக்தியுடன் தான் இணைவதன் குறியீடாகும்.

தமிழ்நாட்டில் தாந்திரீகம்

தாந்திரிக நெறியானது தமிழ்நாட்டிலும் வழக்கில் இருந்துள்ளது.  தாந்திரிக மரபு வழி நின்றவர்களாகத் தமிழ்நாட்டுச் சித்தர்களைக் குறிப்பிடலாம்.  சாதி வேற்றுமைக்கு எதிரான குரல் - வேத மற்றும் பிராமணிய எதிர்ப்பு - போலி ஆசாரங்களைப் பகடி செய்தல் - உடலோம்பலை வலியுறுத்தல் - போன்ற தாந்திரிகக் கருத்துக்களின் செல்வாக்கை இவர்கள் பாடல்களில் பரக்கக் காணலாம்.  தாந்திரீக வழிபாட்டு நெறியுடன் தொடர்புடைய சிற்பங்களும் தமிழகக் கோவில்கள் சிலவற்றில் காணப்படுகின்றன.  மேலும் தமிழ் நாட்டின் கிராமப்புறங்களில் நடைபெறும் வேளாண்மைச் சடங்குகளிலும் தாந்திரீக மரபின் எச்சங்களைக் காணலாம்.

முடிவுரை

இதுவரை நாம் அறிந்துகொண்ட செய்தி களின் அடிப்படையில் தாந்திரீகம்தொடர்பான அடிப்படை உண்மைகளை இவ்வாறு தொகுத்து உரைக்கலாம்.

1. இந்தியாவின் பாரம்பரியமான, தத்துவ - வாழ்க்கை நெறிகளுள் தாந்திரீகம் ஒன்று.

2. பெண் தெய்வ வழிபாடு, மந்திரத்துடன் இணைந்த வேளாண்மைச் சடங்குகள் ஆகியவற்றுடன் தாந்திரீகம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.

3. இவ்வுலகமும் உடலும் உண்மை என்பதை ஏற்றுக் கொண்டது.  எனவே, வாழ்க்கை மறுப்பை வலியுறுத்தாது வாழ்க்கை உவப்பை வலியுறுத்தியது.

4. வேத நெறியுடன் முரண்பட்டும், சாதி மேலாண்மையை எதிர்த்தும் நின்றது.

5. இத்தன்மையினால் தாழ்ந்த சாதியரின் நெறியாக அமைந்தது.

6. தொல் அறிவியல் கூறுகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது. தாந்திரீகமானது அது தோன்றிய காலத்தில் முற்போக்கான கூறுகளைத் தன்னகத்தே கொண்டு இருந்தமையை மேற்கூறியனவற்றிலிருந்து உய்த்து உணரலாம்.  சார்வாகம், சாங்கியம், சூஃபியிசம் போன்ற பல்வேறு முற்போக்கான சிந்தனைகளின் உருவாக்கத்திலும் தாந்திரீகத்தின் பங்களிப்பு உண்டு.  காலப் போக்கில் பல்வேறு மதங்களின் பாதிப்பினால் தாந்திரீகமானது தன் வடிவங்களை மாற்றிக் கொண்டுள்ளது.  இது விரிவான ஆய்விற் குரியதாகும்.

துணைநூற்பட்டியல்

Andre Padoux(1987), Tantrism The Encyclopedia of Religion Ed.Mirco Eliade,Macmillam Publishing Co.

Bhattacharya Narendranath(1982), History of the Tantric Religion,Manohar Book Service, Delhi.

Chatto Padhaya, Debi Prasad (1978), Lokayata, People’s Publishing House, New Delhi.

Muthu Mohan(1990), A Discussion of the Idea of Social Justice in Tamil Siddha Literature. SOCIAL JUSTICE IN TAMILNADU,Ed.Veeramani, School of Historical Studies, M.K.University.Madurai-21